Sunday, February 17, 2013

முஸ்லீம் சாயங்களும் நடுநிலைமை முகமூடிகளும்





அன்புள்ள நண்பர்களே,


                    தீமைகளும் அவலங்களும் நிகழும்போது நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு சொல்லலொணாத் துன்பங்களும் இழப்புகளும் ஏற்படுவது இயல்பானது. ஆனால் காலவோட்டத்திலே அவற்றிலிருந்து விடுபட்டு நடந்தவற்றை மீட்டுப்பார்த்தால் அத்தகைய நிகழ்வுகளால் இழப்புகள் மட்டுமல்லாது சில நன்மைகளும் உண்டாகியிருப்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கலாம்.


உதாரணமாக, சிறியதோர் வீதி விபத்துக்கு நாம் உள்ளாகின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.  அதனால் உண்டாகும் காயம், வலி, மருத்துவச் செலவு காலவிரயம், என்பவை தவிர நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதிலே முன்னரைவிட அவதானமாகவும் நிதானமாகவும்  இருக்கவேண்டிய படிப்பினையையும் அந்த அனுபவம் நமக்கு வழங்கியிருக்கும் அல்லவா?


அதுபோலத்தான் வெகுஅண்மையிலே விஸ்வரூபம் எனும் தென்னிந்திய தமிழ் சினிமா உலகம் முழுவதும் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் இழுபறிகளையும் அதனால் விளைந்த விளைவுகளையும் காணவேண்டியுள்ளது. அந்தத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் சமூகத்தினருக்கு எதிரானதாக கருதப்பட்டு ஊடகங்களிலே குறிப்பாக இணையத்தளங்களிலே நிகழ்ந்துவந்த விவாதங்களினால் பல நன்மைகள் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.


இந்த விவகாரம் குறித்து  இணையத்தை தொழில்சார்ந்த துறையாக முழுநேரமாக பயன்படுத்துபவர்களிலிருந்து பொழுதுபோக்காக அவ்வப்போது எட்டிப் 'பார்த்துவிட்டு' செல்பவர்கள் வரை இந்த விடயத்தில் முழுமூச்சாக இறங்கியிருந்தனர்.


இவர்களிலே கணிசமானோருக்கு கணினியின் விசைப்பலகையைப் பயன்படுத்தி தாம் நினைக்கும் கருத்தை வார்த்தைகளாக உருவாக்கத் தெரியாமல் இருந்தது.  பலருக்கு ஆங்கிலத்தையே அடிநாதமாகக்கொண்ட கணினியில் தமது வார்த்தைகளை யுனிகோட் மாற்றியினைப் பயன்படுத்தி தமிழ்மொழியில் பொறிக்க முடியாதிருந்தது. இன்னும் சிலர் இணையத்தளம் போன்ற பொது ஊடகமொன்றிலே மாற்றுக் கருத்துக்களுக்குரிய  தமது பிரதிபலிப்புக்களை பண்பான வார்த்தைகளால் மட்டுமே வெளிப்படத்த வேண்டுமென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாமலிருந்தார்கள்.


இத்தனை குறைபாடுகள் தம்மிடமிருந்த போதிலும் பலர் தமது புனிதமான போற்றுதலுக்குரிய விடயங்கள் இணையத்தில் விரிலான அலசலுக்குள்ளாகுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாத காரணத்தால் சொந்தப் பெயர்களுடனும் புனைபெயர்களுடனும் தமது கையிருப்பிலிருந்த மொழி மற்றும் கணினி ஆற்றல்களுடன் கோதாவில் இறங்கினார்கள். இதனால் பலபேருடைய மூக்குகள் உடையவும் வண்டவாளங்கள் வெளியாகவும் ஆரம்பித்தன. இதிலே வாதப்பிரதிவாதங்களிலே ஈடுபட்டிருந்த தனிநபர்களது சாயங்கள் வெளுத்துப்போனது மட்டுமன்றி இத்தகைய விவாதங்களுக்கு இடமளித்த பல பிரபல்யமான தமிழ், முஸ்லீம் இணையத்தளங்களின் நடுநிலைமை முகமூடிகளும் கிழிந்து தொங்கிப்போயிருக்கின்றன.

இப்போது நான் எனது அனுபவத்தை கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இந்தவகையிலே சில முஸ்லீம் இணையத்தளங்கள் விவாதம் சூடுபிடிப்பதற்காக ஆரம்பத்தில் கருத்துக்கூறுவதற்கு இடம் வழங்கினார்கள். அவற்றின்போது இடம்பெற்ற சூடான விவாதங்களை கீழே தருகின்றேன்.

ஸர்மிளா செய்யத் என்பவர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய மதத்லைவர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புகள் குறித்து  எழுதியிருந்த  கட்டுரையொன்றை ஜஃப்னா முஸ்லீம்.கொம் இணையத்தளம் மீள்பிரசுரம் செய்திருந்தது.
Sharmila


அந்தக்கட்டுரையைப்படித்து முடித்த மறுகணம் அத்தகைய ஒரு கட்டுரையை எழுதும் துணிச்சலையும் அறவுணர்வையும் பாராட்டி நான் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தேன்.

அது பின்வருமாறு:


"ந்தியாவில் அண்மையில் மறைந்த இனவாதக் கோமாளியான பால்தாக்கரே தமிழ்நாட்டின் டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் பாணியில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் இறங்கியுள்ளனர் போலும். விஸ்வரூபத்தின் கதைபற்றியே யாருக்கும் எதுவுமே தெரியாதபோது எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் அறிந்தார்கள். அவர்களுக்கு மட்டும் கமல் விஷேட காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாரோ என்னவோ?

தனது விஸ்வரூபம் வெளியான பிறகு அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு விட்டோம் என்பதை ஒவ்வொரு எதிர்ப்பாளரும் உணர்ந்து மனதுக்குள் மறுகவேண்டியிருக்கும்என்று கமல் ஒரு பேட்டியிலே குறிப்பிட்டிருக்கின்றார். கமல் ஒரு சிறந்த கலைஞர். அதேவேளை நல்ல வியாபாரியும்கூட. ஆகவே தனது சந்தைப்பொருளை செல்லாக்காசாக்கும் கைங்கரியங்களைச் செய்திருப்பார் என்று நம்ப முடியாதிருக்கின்றது.

விஸ்வரூபம் இந்தியாவின் தீவிரவாத நெருக்கடிகள் பற்றிப்பேசும் ஒரு திரைப்படம் என்று இந்திய ஊடகங்களில் அரசல்புரசலாக வந்த செய்திகளையும் விளம்பரப் போஸ்டர்களிலே படத்தின் தலைப்பு உருது மொழி எழுத்துக்களைப்போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துவிட்டு ஒரு குத்துமதிப்பான யூகத்தில் இஸ்லாத்திற்கு எதிரானதாகத்தான் இருக்கவேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் உளவுப்பிரிவு கருதுகின்றதோ என்னமோ?

இன்றைய நவீன உலகில், சினிமாவை பயன்படுத்தி விளம்பரம் தேடும் எத்தனையோ நிறுவனங்களில் நமது தீவின் மத அமைப்புக்களும் இறங்கிவிட்டதால், இலங்கையில் செய்யவேண்டியிருந்த விளம்பரச் செலவும் மீதமாகும் மகிழ்ச்சியில் கமல் என்ற புத்திஜீவிச் சினிமா வியாபாரி துள்ளிக்குதிக்கப்போகிறார்."


(தொடரும்)
 
- Jesslya Jessly



 

No comments:

Post a Comment