Monday, February 18, 2013

100 கோடியில் ஒரு பாடம்







கொழும்பில் கொத்து ரொட்டி போட்டுக் கொண்டிருந்த ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதீத சத்தத்தினை உருவாக்கி சூழலை மாசுபடுத்தினார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
தொலைக்காட்சி பார்க்கும் போது, அதிகமாக சத்தம் வைத்துப் பார்ப்பதில் எனக்குப் பெரு விருப்பம். ஆனால், நமது தொலைக்காட்சியின் சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு செய்தால் – அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி விவாகரத்துக் கோரி நீதிமன்றம் வந்தார். விவாகரத்துக்கு வலுவான காரணம் வேண்டும். அந்தப் பெண் கூறிய காரணம் என்ன தெரியுமா? எனது கணவரின் குறட்டைச் சத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் ஆகி விட்டன. இந்த மனிதரிடமிருந்து எனக்கு விடுதலை பெற்றுத்தாருங்கள் என்றார். நீதிமன்றமும் விவாகரத்து வழங்கி விட்டது.
இதிலுள்ள நீதி என்ன என்று புரிகிறதா?

நாம் மேற்கொள்ளும் எந்தவொரு விடயமும் அடுத்த மனிதருக்கு தொந்தரவினையோ, பாதிப்பினையோ ஏற்படுத்தி விடக்கூடாது. அப்படியான விடயங்கள் அனைத்தும் குற்றமாகவே கருதப்படும்.
என்னுடைய வீட்டுக்குள் என்னுடைய தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக் கேட்கிறேன். மை கார் – மை பெற்றோல். அது என்னுடைய சுதந்திரம். யாருக்கென்ன வந்தது? என்று நாம் சட்டம் பேச முடியாது. சக மனிதனை பாதிக்காத வரைதான் அது நமக்கான சுதந்திரமாகும்!
விஸ்வரூபம் என்கிற திரைப்படம் குறித்து – மேற்சொன்ன புள்ளியில் இருந்து நான் பேச விரும்புகின்றேன். திரைப்படமொன்றை உருவாக்குவதற்கும், அதில் தனது கருத்துக்களைச் சொல்வதற்கும் இயக்குநர் ஒருவருக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அந்தச் சுதந்திரம் அடுத்தவரைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர். ஆனால், விஸ்வரூபம் ஒரு மோசமான திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் இஸ்லாமிய மார்க்கம் பிழையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் பற்றி தவறான கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான் – ஏராளமான இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டாகும்.
ஆனால், விஸ்வரூபம் திரைப்படத்திலுள்ள இஸ்லாமிய விரோதப் போக்கினை விடவும், அதிலுள்ள முஸ்லிம் விரோத அரசியல்தான் விமர்சனத்துக்குரியது. வெறுப்பேற்றும் வகையிலானது.
தலிபான் போராளிகளுக்கும் – அமெரிக்க ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் போர்க் களம்தான் படத்தின் அதிகமான பகுதியாகும். தலிபான்களை பிற்போக்குவாதிகளாகவும், யுத்த வெறி பிடித்தவர்களாகவும் கமல் – பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளார்.
கமல் சொல்வதில் ஏதோவொரு வீதம் உண்மை இல்லாமலுமில்லை. தலிபான்கள் ஒன்றும் புனிதர்கள் அல்லர். அவர்களின் அறியாமையினையும், வன்முறைகளையும் மதத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அது விமர்சனங்களுக்கு உரியதே!
ஆனால், அதே கதைக்களத்தில் நரபலி எடுத்துக் கொண்டு திரியும் போர் வெறி பிடித்த அமெரிக்கர்களை மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த குறியீடாக கமல் சித்தரித்திருப்பது – மிகக் கேவலமான முயற்சியாகும்.
இவை தவிரவும் விஸ்வரூபத்திலுள்ள பல காட்சிகள் முஸ்லிம்களை இழிவு படுத்துவற்கென்றே வலிந்து உருவாக்கப்பட்டவையாகும். படத்தின் கதையில் வரும் கமல்ஹாசனுக்கு அரேபிய ஆடையில் வருகின்ற முஸ்லிம் ஒருவர் ‘ஓப்பியம்’ என்கிற போதைப் பொருளை அன்பளிக்கும் காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மிகச் சாதாரண பார்வையாளன் கூட, இது திணிக்கப்பட்ட காட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சரி, இது என்ன கமல்ஹாசன் புதிதாகச் சொல்லும் கதையா? இதைப்போல, ஆயிரத்தெட்டு அமெரிக்கத் திரைப்படங்கள் வந்துள்ளதல்லவா? அவற்றுக்கெல்லாம் எழாத எதிர்க்குரல் விஸ்வரூபத்துக்கு எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? என்பது ஒருசாராரின் கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்கான பதில் மிக எளிமையானது. நமது எதிராளி நம்மைப் பற்றிப் பேசும் விடயங்கள் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நம்மை மோசமாகவும், தன்னைப் புனிதனாகவும் சித்தரிப்பதுதான் எதிராளியின் பிரதான செயற்பாடாக இருக்கும். உண்மையில், விஸ்வரூபம் என்கிற படத்தை ஓர் அமெரிக்க இயக்குநர் ஆங்கிலத்தில் உருவாக்கியிருந்தால் அதுபற்றி தமிழ்பேசும் முஸ்லிம்கள் எவரும் இந்தளவுக்கு அலட்டியிருக்க மாட்டார்கள்.
ஆனால், தென்னிந்தியாவில் வசிக்கும் தமிழ் பேசுகின்ற பிரபல்யமான நடிகர் ஒருவர், அதுவும் தன்னை முஸ்லிம்களின் நண்பன் எனக் கூறிக் கொண்டு, இவ்வாறானதொரு திரைப்படத்தினை உருவாக்கியமைதான் இத்தனை சர்ச்சைகளுக்கும் மூல காரணமாகும்.
திரைப்படம் என்பது ஒரு காலத்தில் பொழுது போக்குச் சாதனம் என்கிற


 Vishvaroopam - 03


தனித்த அடையாளத்துடன் இருந்தது. ஆனால், இப்போது அதற்கான பெறுமானம் அடர்த்தியாகி விட்டது. மாபெரும் ஊடகமாகவும் திரைப்படத்துறை தொழிற்படுகின்றது. எனவே, ஒரு திரைப்படம்தானே, விட்டு விட்டு வேறு அலுவல்களைப் பார்ப்போம் என்று இருந்து விட முடியாது. பின்னொரு காலத்தில் அந்தத் திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் மாறிவிடக்கூடும்.
விஸ்வரூபம் என்கிற திரைப்படம் இஸ்லாமியர்களையும், அவர்களின் மார்க்கத்தையும் இழிவுபடுத்துவதாகக் கூறி, முதலில் தென்னிந்திய இஸ்லாமிய அமைப்புக்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்தே தமிழ் நாட்டில் விஸ்வரூபம் தடைசெய்யப்பட்டது.
இந்த விடயத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் சட்டம் ஒழுங்குக்கு அமைவாகவே விஸ்வரூபத்துக்கான தமது எதிர்ப்பினை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. பக்கத்து வீட்டுக்காரனின் தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தம் என்னைத் தொந்தரவு செய்கிறது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று செய்யப்படும் முறைப்பாட்டுக்கு ஒப்பானதாகக் கூட இதைப் பார்க்கலாம்.
குறித்த முறைப்பாட்டினை அரசாங்கம் கருத்திற் கொண்டது. விஸ்வரூபம் திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்து அந்தத் திரைப்படத்துக்குத் தடை விதித்தது. பிறகு கமல்ஹாசன் அந்தத் தடைக்கெதிராக நீதிமன்றம் சென்றார். தடைநீக்கப்பட்டது. இதனையடுத்து, மறுநாள் – உயர் நீதிமன்றம் சென்ற அரச தரப்பு வக்கீல் மீண்டும் விஸ்வரூபத்துக்கு எதிராக இடைக்காலத் தலையுத்தரவினைப் பெற்றுக் கொண்டார். இவையெல்லாம் நீங்கள் அறிந்த செய்திகள்தான்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை, கமல்ஹாசன் எனும் ‘தமிழர்’ ஒருவருக்கு எதிரான செயற்பாடாக சிலர் சித்தரிக்க முயன்றமை கவலைக்குரிய விடயமாகும். இலங்கையிலும் கூட, விஸ்வரூபம் திரைப்படத்தினை முன்வைத்து பேஷ்புக், ர்விட்டர் போன்ற தளங்களில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு நச்சுக் கருத்துக்கள் விதைக்கப்பட்டிருந்தன. பதிலுக்கு சிலர் – தமிழர்களுக்கெதிரான கருத்துக்களைப் பதிவிட்டிருந்தமையினையும் காணக் கிடைத்தபோது கவலையே எஞ்சியது!
கமல்ஹாசனின் கருத்துச் சுதந்திரத்துக்காக குரல்கொடுக்கின்றேன் என்று களத்தில் குதித்த சிலர், ‘தமிழன்’ என்கிற உணர்ச்சி மேலீட்டினால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக, இலங்கையில் எக்கச்சக்கமானோர் இந்த ‘வியாதி’க்குள் சிக்கியிருந்தார்கள். ஆனால், இதில் கவலைதரும் விடயம் என்வென்றால், இலங்கைத் தழிழர் குறித்தோ – இலங்கைத் தமிழ் மக்களின் இன முரண்பாட்டுப் போராட்டம் குறித்தோ – இதுவரை கமல்ஹாசன் தனது திரைப்படங்கள் மூலமாக ‘மருந்துக்கும்’ பேசியதில்லை.
இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் – தனது நாட்டு நலனை மீறி இந்தியா ஒருபோதும் பங்களிக்காது என்பது எத்தனை பெரிய உண்மையோ, அதுபோலவே – தென்னிந்திய சினிமாக்காரர்களும் தமது ‘வியாபாரத்தைத் தாண்டி’ இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டதாக வரலாறுகள் இல்லை.
தென்னிந்திய சினிமாக்காரர்களின் இந்த வியாபார புத்திக்கும், அவர்கள் தமது வியாபாரத் தந்திரத்துக்காக எவ்வாறான முகமூடிகளையெல்லாம் அணிந்து கொள்கின்றார்கள் என்பதற்கும் எக்கச்சக்கமான உதாரணங்களை முன்வைக்கலாம்.
இயக்குநர் மணிரத்னம் குறித்து நீங்கள் அறிவீர்கள். சில காலங்களுக்கு முன்னர் ‘உயிரே’ என்று ஒரு திரைப்படத்தை அவர் உருவாக்கியிருந்தார். அது அஸாம் போராளிகளின் கதை. ‘அன்பு பெரிதா? அல்லது போராட்டம் பெரிதா?’ என்பது பற்றி அந்தத் திரைப்படம் பேசுகிறது. திரைப்படத்தின் கதாநாயகி அஸாம் போராட்டக் குழுவினைச் சேர்ந்த ஒரு தற்கொலையாளி. உடலில் குண்டு அணிந்து கொண்டு எதிரியைத் தேடி அலைகிறாள். ஆனால், இது தெரியாமல் அவள் மீது கதாநாயகன் காதல் கொள்கிறான். படம் முழுவதும் கதாநாயகனின் காதலை மறுத்து வரும் கதாநாயகி – கடைசியில் காதலாகிக் கசிந்துருகிக் கட்டியணைத்துக் கொள்கிறாள். ‘போராட்டத்தை விடவும் – அன்பும், காதலுமே மேலானது’ என்கிற சொல்லப்படாத செய்தியுடன் ‘உயிரே’ திரைப்படம் நிறைவடையும்.


Vishvaroopam - 05


இதன் பிறகு, இயக்குநர் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்றொரு படத்தினை எடுத்தார். அந்தத் திரைப்படமும் ”அன்பு பெரிதா? போராட்டம் பெரிதா?’ எனும் வகையிலான கதையைக் கொண்டது. படத்தின் கதாநாயகி ஓர் இலங்கைப் பெண். இந்தியாவுக்கு அகதியாகச் செல்லும் இவர் தனது கைக் குழந்தையினை அங்கு – விட்டு விட்டு, நாடு திரும்புகின்றார். பின்னர் அந்தப் பெண் – தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கமொன்றில் இணைந்து கொள்கின்றார்.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் குழந்தையினை ஒரு தம்பதியினர் எடுத்து வளர்க்கின்றனர். குழந்தைக்கு புத்தியறியும் வயதானபோது ‘நீ வளப்புக் குழந்தை’ என்று சொல்கிறார்கள். அப்போது, தனது சொந்தத் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு குழந்தை கூறுகிறது. வளர்ப்புப் பெற்றோர் குழந்தையுடன் இலங்கை வந்து – நிஜத்தாயை கண்டு பிடிக்கின்றார்கள். தாயோ பெண் போராளி. தனக்கு விடுதலைப் போராட்டமா? பிள்ளைப் பாசமா? முக்கியம் என்று யோசிக்கின்றார். கடைசியில் விடுதலைப் போராட்டத்துக்காக சொந்தக் குழந்தையை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விடுகிறார். இதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படக்கதை.
‘அன்பு பெரிதா? அல்லது போராட்டம் பெரிதா?’ என்கிற ஒரே கேள்விக்கு ‘உயிரே’ திரைப்படத்தில் அன்பு என்றும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் போராட்டம் என்றும் இரண்டு பதில்களை மணிரத்னம் சொல்லியிருப்பார். இதுதான் இந்தியச் சினிமாக்காரர்களின் வியாபார புத்தியாகும்.


அஸாம் போராட்டம் என்பது இந்திய அரசாங்கத்துக்கு எதிரானது. அப்படியான ஒரு கதையில், அஸாம் போராளிகள் ‘காதலை விடவும், தமது மண்ணுக்கான போராட்டத்தையே அதிகம் நேசிக்கின்றார்கள்’ என்கிற முடிவினை மணிரத்னம் கொடுத்திருந்தால் – அவருடைய திரைப்படம் மிக மோசமான பிரச்சினைகளை உள்நாட்டில் சந்தித்திருக்கும். இந்தியன் என்கிற தேசிய உணர்வு அதிகம் மிகுந்த மக்கள் அந்தத் திரைப்படத்துக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பது குறித்து மணிரத்னம் மிக நன்கு அறிவார். எனவே, எதைச் சொன்னால் இந்தியாவில் வியாபாரம் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு ‘உயிரே’ திரைப்படத்தின் கதையை முடித்திருந்தார்.
ஆனால், இதே முடிவினை இலங்கைப் போராட்டக் கதையில் முன்வைத்தால், இங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் மணிரத்னம் நன்கு அறிவார். எனவே, இலங்கையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தினை ஓட்ட வேண்டுமாயின் போராட்டத்தினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, ‘போராட்டம்தான் பெரிது’ என்கிற செய்தியுடன் அந்தத் திரைப்படத்தின் கதையை முடித்திருந்தார்.


இப்படி, தமது திரைப்படங்களுக்கான சந்தையினை எவ்வாறு பிடித்து வைத்துக் கொள்வது? அதனூடாக எவ்வாறு வருமானமீட்டுவது? என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் இந்திய சினிமாக்காரர்கள் தமது திரைப்படங்களை உருவாக்குகின்றார்கள்.
ஆனால், துரதிஷ்டவசமாக இந்தச் சினிமாக்காரர்களுக்காக நாம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுக் கொள்கிறோம், நமக்குள் முட்டி மோதிக் கொள்கின்றோம் என்பது வெட்கப்பட வைக்கும் செய்தியாகும்.
திரைப்படத்துறை சார்ந்தோருக்கு சர்வதேச ரீதியாக வழங்கப்படும் ‘ஒஸ்கார்’ விருதின் மீது நடிகர் கமல்ஹாசனுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தே வருகிறது. ஆனால், அவர் நடித்த படங்கள் அந்த விருதினைப் பெற்றுக் கொள்ள அவருக்குக் கைகொடுக்கவில்லை. அதனால், ‘ஹொலிவூட்’ திரைப்படங்களையொத்த பாணியில், அமெரிக்கர்கர்களைக் கவரும் கதையொன்றை வைத்து படமொன்றினை இயக்கினால் ‘ஒஸ்கார்’ விருதினைத் தட்டிக் கொள்ள முடியும் என்று அவர் நம்பியிருக்கலாம். அதன் விளைவுதான் விஸ்வரூபம் திரைப்படம்.
இந்தத் திரைப்படம் அமெரிக்கர்களைக் குளிர்விக்கும் திரைக்கதையினைக் கொண்டது. விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக அமெரிக்காவின் ‘குண்டி’யினை கமல்ஹாசன் மிக லாவகமாகக் கழுவி விட்டுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் தனது படத்தினை ஓட்டி காசு பார்க்கலாம் என்றும் அவர் கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

 Vishvaroopam - 07



ஆனால், எல்லாமே தலைகீழாகக் கவிழ்ந்து விட்டது.
விஸ்வரூபம் திரைப்படம் மீதான தடை சரியா? தவறா? என்கின்ற வாதம்

 இன்று சூடுபிடித்துள்ளது. அதற்கான விடையினைத் தேட வேண்டிய தேவையேயில்லை. அடுத்த சமூகத்தை இழிவு செய்யும் வகையில் திரைப்படங்களை உருவாக்கி, அதில் காசு பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு – விஸ்வரூபம் ஒரு பாடமாகும். இனி, தென்னிந்தியத் திரைப்படங்களில் அடுத்த சமூகத்தினை இழிவு செய்யும் காட்சிகளை வைக்க நினைப்பவர்களுக்கு விஸ்வரூபமும், கமல்ஹாசனின் அவஸ்தைகளும் நினைவுக்கு வரும்!
முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் இதற்கு முன்பும் ஏராளமான தமிழ்த் திரைப்படங்கள் வந்துள்ளன. நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் தீவிரவாதியாக ஒரு அஜ்மல்கான் அல்லது முனீர் கட்டாயம் வருவார். அவரிடமிருந்து விஜயகாந்த் இந்தியாவைக் காத்தருள்வார். ஆனாலும், இதைச் சமன் செய்யும் வகையில் – ஒரு நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம் நண்பனையோ அல்லது பொலிஸ்காரரையோ அதே படத்தில் விஜயகாந்த் வைத்திருப்பார். ஆனால், கமல்ஹாசன் – விஸ்வரூபத்தில் அந்தக் கோதாரியைக் கூடச் செய்யவில்லை.
விஸ்வரூபம் திரைப்படத்தின் கதை அமெரிக்காவிலும் நிகழ்கிறது. எனவே – அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தும் பொருட்டு கமல்ஹாசன் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அனுமதி கோரினார். குறித்த கோரிக்கை விண்ணப்பத்துடன் விஸ்வரூபம் திரைப்படத்தின் திரைக்கதையினையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு கமல்ஹாசன் அனுப்பியிருந்தார். அந்தத் திரைக்கதையைப் பார்த்து விட்டுத்தான் விஸ்வரூபம் படப்பிடிப்புக்கு – அமெரிக்கா தனது நாட்டில் அனுமதியளித்தது. இந்தக் கதையில், அமெரிக்காவை விமர்சித்திருந்தாலோ அல்லது ஆப்கான் போராளிகளை எந்த இடத்திலாவது போற்றிப் புகழ்ந்திருந்தாலோ – விஸ்பரூபத்துக்கான படப்பிடிப்பு அனுமதியினை அமெரிக்கா தனது நாட்டில் வழங்கியிருக்காது.
ஆக, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அமெரிக்க தூதரகம் அனுமதி வழங்கியதை வைத்தே, அது அமெரிக்க சார்பு அல்லது எதிர்போக்கற்ற திரைப்படம் என்பதை மிக இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்கச் சார்ப்புத் திரைப்படமொன்று முஸ்லிம் விரோத அரசியலைக் கொண்டிருப்பதொன்றும் ஆச்சரியப்படத்தக்க விடமேயல்ல.
இதேவேளை, இன்னுமொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனுமதியளித்த பிறகும் ஏன் இந்தத் தடை என்பதாகும். தணிக்கைக் குழுவில் முஸ்லிம் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்துக்கு சம்பந்தப்பட்ட முஸ்லிம் தணிக்கை அதிகாரி தனது எதிர்ப்பை வெளியிட்டதாகவும், ஆனால், ஏனைய தணிக்கை அதிகாரிகள் இந்தத் திரைப்படத்தை அனுமதித்தார்கள் எனவும் ஒரு கதை உள்ளது. இதேவேளை, விஸ்வரூபம் திரைப்படத்திலிருந்த 14 காட்சிகளை தாம் தணிக்கை செய்தாக தணிக்கைக் குழு கூறுகிறது.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சட்ட ரீதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய 24 இந்திய முஸ்லிம் அமைப்புக்களுடன் அரச அதிகாரியொருவரின் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அறிய முடிகிறது.
சிலவேளை, அந்த முஸ்லிம் அமைப்புக்கள் கூறுகின்ற காட்சிகளை விஸ்வரூபத்திலிருந்து கமல்ஹாசன் நீக்குவதற்கு முன்வரக் கூடும். காரணம், அவருக்கு எப்படியோ இந்தத் திரைப்படம் வெளியாகி காசு பார்க்க வேண்டும்.
உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக எங்களையும், எங்கள் மார்க்கத்தினையும் இழிவுபடுத்தி விட்டீர்கள் என்று கமல்ஹாசனைப் பார்த்து உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தபோது, கமல்ஹாசனோ எனது படத்தை தடைசெய்யாதீர்கள் அப்படித் தடைசெய்தால் இந்தப் படத்துக்காக நான் செலவு செய்த 100 கோடியும் நஷ்டமாகிவிடும், கடனுக்குக் காசு வாங்கியவன் எனது வீட்டை சொந்தமாக்கி விடுவான் என்று லாபநஷ்டக் கணக்கு குறித்தே பேசிக் கொண்டிருந்தார். எனவே, எப்படியும் கமல் இறங்கி வந்து விஸ்வரூபத்தினை வெளியிடுவதற்கு முயற்சிப்பார்.
ஆனால், இங்குள்ள மிகப் பெரும் கேள்வி என்னவென்றால் விஸ்வரூபத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தினையும் இழிவுபடுத்துவதாகச் சொல்லும்


  Vishvaroopam - 06



காட்சிகளை நீக்கி விட முடியும். ஆனால், இந்தத் திரைப்படத்தில் காட்சிப்படுத்தாமல் விட்டமையினூடாக புனையப்பட்ருக்கும் ‘முஸ்லிம் விரோத அரசியலை’ என்ன செய்வது? அதை எப்படி சமன் செய்யப் போகிறார்கள்? அப்படியென்றால், புதிதாக சில காட்சிகளைச் சேர்ப்பதனாலேயே அதைச் சாதிக்க முடியும். அதற்கு சாத்தியங்கள் இல்லை.


எனவே, விஸ்வரூபத்தில் எத்தனை காட்சிகளை நீக்கினாலும் அதிலுள்ள ‘முஸ்லிம் விரோத அரசியலை’ துடைத்தெறியவே முடியாது என்பதுதான் இங்குள்ள கவலை தரும் நகைச்சுவையாகும்!

1 comment:

  1. To Mafrook:

    இதுவரை இந்த சர்ச்சை குறித்து வந்த கட்டுரைகளிலே உங்களது கருத்துக்கள் ஓரளவு நியாயமானவையாகவும் மிகுந்த நாகரீகமாகவும் இருக்கின்றன என்பதை அவசியம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    இதுவரை படத்தை முழுமையாக பாத்திராத நிலையிலே, படத்தில் இருப்பதாக நீங்கள் கூறும் காட்சிகள் பற்றி விவாதிக்க முடியாதிருக்கின்றேன். ஆனால் அதுகுறித்த அரசியலை விவாதிக்க முடியும்.

    தலிபான்கள் மத அடிப்படையிலான வெறும் உணர்ச்சிமயமான போராளிகளேயன்றி அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய சதிகளையும் தந்திரோபாயங்களையும் புரிந்து போராடுபவர்களல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்கள்.

    அமெரிக்கா, கம்யூனிஸபடையெடுப்புக்கு எதிராக திட்டமிட்டு வளர்த்த ஒஸாமா எவ்வாறு சூழ்நிலையின் கைதியாகினார் என்பதையும் அவர் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லீம்களின் மானசீக கதாநாயகனாகி பின்பு இறுதியிலே என்னவானார் என்பதையும் சிறுகுழந்தைகூட அறியும்.

    தலிபான்கள் அமெரிக்காவையும் நேசநாடுகளின் தாக்குதல்களையும் எதிர்த்துப் போராடினாலும் அவர்கள் தமது நாட்டில் வாழும் சொந்தப் பிரஜைகளையே மனிதகுலம் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு காட்டுமிராண்டிச் சட்டங்களைப் பயன்படுத்தி சித்திரவதை, கொலை செய்வதையெல்லாம் உலகம் அறியும்.

    ஆனால் அமெரிக்காவின் விமான தாக்குதல்களுக்காகப் பொங்கியெழும் முஸ்லீம்களாகிய நாமோ தலீபான்களின் அட்டூழியங்களை தவறியும் கண்டிப்பதில்லை. அப்படியானால் மேற்கத்திய நாடுகளின் அரசுகளைப்போல ஊடகங்களைப்போல நாமும் பாரபட்சமானவர்கள்தானே?

    நாம் மௌனமாக இருப்பதற்காக மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

    திரைப்படத்தில் தலிபான்கள் புரிவதாக இதுவரை கூறப்பட்டு வரும் எந்தவொரு நடவடிக்கையும் அங்கு நிகழவில்லை என்று அடித்துக்கூற நம்மால் முடியுமா? அதையும் விட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தலிபான்களால் நிகழ்கின்றன. பாகிஸ்தானில் 15 வயதேயான பள்ளிச்சிறுமி மலாலாவை, அவள் பேஸ்புக்கில் பெண்களின் கல்வி முக்கியத்துவத்தைப்பற்றி கட்டுரைகள் எழுதினாள் என்ற அற்ப காரணத்துக்காக பாடசாலைப் பேருந்துக்குள் ஏறிச் சுட்டவர்கள்தான் தலிபான்கள்.

    இதற்காக குரல் கொடுக்காத நமக்கு அதையே திரைப்படங்களிலே காண்பித்தால் மட்டும் ஏன் கோபம் வரவேண்டும்?

    இதையே ஒரு ஹொலிவூட் இயக்குனர் எடுத்திருந்தால் பரவாயில்லை என்பது எல்லாம் நொண்டிச்சாக்கு! அப்படியானால் Innocence of Muslims எனும் படத்தை எடுத்தவர்கள் மட்டும் தமிழர்களா என்ன? அதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்து லிபியாவிலே அமெரிக்கத் தூதுவரையும் அவரது உள்நாட்டு காவலர்களையும் சேர்த்து (அவர்கள் லிபிய முஸ்லீம்கள் என்பதைக்கூட கவனிக்க நேரமில்லாமல்) படுகொலை கூடச்செய்தோமே... மறந்துபோனதா?

    ஆக மொத்தத்தில் முஸ்லீம்கள் நாம் நம்மை பாதிக்கப்பட்டவர்களாக உலகத்திற்கு காட்டிக் கொண்டு மற்றவர்களுக்கு நாம் இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

    இவ்வாறு சொல்வதால், முஸ்லீம்கள் மீது நிகழும் அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான். ஒடுக்குமுறைகள் யாருக்கு எதிராக எங்கு நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் எதுவிதமான தயவு தாட்சண்யமுமின்றிக் கண்டிக்கப்படவேண்டியதே.

    படைப்பாளியும் சினிமா வியாபாரியுமான கமல் விஸ்வரூபத்தை தேர்ந்து தயாரித்தமைக்கு நீங்கள் கூறும் காரணங்கள் இருப்பதற்கு நிறையச் சாத்தியமுண்டு. ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்களும் படத்தின் திரைக்கதையின் மையக்கருத்தும் நீங்கள் கூறுவதுபோல, உண்மையிலேயே இஸ்லாமிய விரோதம்தானா என்பதை படம் வெளிவந்து மக்கள் பரவாக பார்த்த பின்புதான் தீர்மானிக்க முடியும் என்பது எனது கருத்து.

    -Jesslya Jessly

    ReplyDelete