Thursday, October 31, 2013

இஸ்லாம் : சில புரிதல்களை நோக்கி





ஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 1989 அக்டோபரில் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ‘குர்ஆனை அணுகும் முறை’ குறித்து எழுதியுள்ள சில வாசகங்கள்: “சித்தாந்தங்களையும் கருத்தோட்டங்களையும் எடுத்துக் கூறும் ஒரு நூலல்ல இது. சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய வேதமல்ல இது. பொதுவாக மதத்தைப் பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படியுள்ள ஒரு மதநூலன்று இது . . . மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும் இது. ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூலாகும் இது.” மேலும் அது கூறுகிறது: “எல்லாவித அசத்தியங்களுக்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்புமாறு அவரைத் தூண்டிற்று.” (பக். 33-34) ‘அவர்’ என்று சுட்டப்படுவது ஒரு முஸ்லிமைத்தான்.

இறைபக்தி என்பது என்ன? குர்ஆனின் வழியில் சொல்வதென்றால் சமூகத்தின் பல அம்சங்களுடன் இணைந்திருக்கிற ஒரு கருத்தியல் அல்லது ஓர் ஆன்மீக நிலை. வெறுமனே இறைபக்தி என்றால் மனமுருகி நிற்கின்ற ஒருநிலை போதும். ஆனால் இங்கே ஒரு போர்க்குரல் தேவை என்ற நிலையில் அது இறை பக்திக்கு அப்பாலும் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் சமூகம் இன்று உலகளாவிய நெருக்கடிக்குள் வந்து நிற்கின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்ற கருத்தாடல் அமெரிக்காவின் அடுத்தக்கட்டப் பொருளாதார மேய்ச்சலுக்கு நன்றாக உதவியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இளைஞர்கள்தான் பலிகடாக்களாக வேண்டும். வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள், நாடகக்கதைகள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல; மிகத் தோதான முறையில் அப்போதைய வாஜ்பேயியின் பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்களும் தம் கொம்புகளைச் சீவிக்கொண்டு களத்திற்குள் நுழைய வேண்டியதானது.


சரியாகப் பத்தாண்டுகள் கடந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள், பெண்கள் முன்னணியில் நின்று எகிப்தின் தஹ்ரீர் திடலில் அஹிம்சை எனும் காந்தீய வழியில் இடைவிடாது போராடினார்கள். தகவல் தொடர்பில் ஏற்பட்ட நவீனப் புரட்சியைப் பயன்படுத்திக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர் களைப் பந்தாடத் தொடங்கினார்கள். (ஆனால் அதன் பலன்கள் யாரைப் போய்ச் சேருகின்றன என்பது வேறு விஷயம்.) சிரியாவில் இன்றுவரை அந்த அலை ஓயவில்லை.

அப்படியானால், இதோ ஓர் ‘இஸ்லாமிய ஜனநாயகப் புரட்சி’ என்று எவருமே அதனை மனம்குளிர அழைக்கவில்லையே, அது ஏன்? இஸ்லாமியப் பயங்கரவாதப் பீதிக்கு அது ஒரு மாற்றுச் சொல்லாடலாக இருந்திருக்கும். இஸ்லாமிய அறிவு ஜீவிகளும் இதழ்களும் இதில் கவனம் செலுத்தவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் உளவியலை ஆதிக்கசக்திகளே தீர்மானித்து வருகின்றன. அதன் காரணமாகச் சமூகத்தின் நெருக்கடிகள் குறையாமல் நீடிக்கின்றன. முஸ்லிம் சமூகம் இறுக்கமானது என்ற கருத்தும் நிலைபெற்றிருக்கின்றது. காலத்தால் வெகு பின்னராகத் தோன்றுகின்ற இஸ்லாம், விரிவான சமூகப் புரிதலோடுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமிய அணுகுமுறையை முஸ்லிம்களே புரிந்துகொள்ள முடியாத நிலையில் அதன் உளவியல் அமைந்துள்ளது.

குர்ஆன் என்பது எல்லோருக்கும் ஓரே பார்வையில், புரிதலில் இல்லை. எல்லாவற்றிலுமே உலக நடைமுறை அப்படியானதுதான். ஒருவரின் மனநிலை, அவருடைய கல்வியறிவு, அரசியல், பொருளாதாரம், சமூகப் பற்று, இனம், கலாச்சாரம் போன்ற பல்வேறு அடுக்குகளிலும் உள்ள அவருடைய சாய்மானத்தை வைத்துத்தான் எல்லாமே அவரால் புரிந்துகொள்ளப்படுகிறது. குர்ஆனுக்கும் அதுவே நிலை. சமயங்களில் முஸ்லிமல்லாத ஒருவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு ஒத்து வருகிறார். ஒரு முஸ்லிமானவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு வெளியேயும் போய் விடுகின்றார்.

ரயில் பயணத்தில் ஒரு கிறித்தவர் தூங்கியெழுந்த கையோடு பைபிளை வாசிக்கிறார். மாபெரும் பிரசங்கங்களில், சர்ச் பிரார்த்தனைகளில் பைபிள்கள் விரிக்கப்படுகின்றன. இன்று குர்ஆனை வாழ்வில் பலமுறை ஓதியவர்கள் சில இலட்சங்கள்தான் இருப்பார்கள். ஆனால் குர்ஆனை வாழ்வில் ஒருமுறையேனும் முழுதாய் வாசித்தறியாத முஸ்லிம்கள் பலகோடிப் பேர் தேறுவார்கள். குர்ஆனின் மீதான மரியாதைக்கும் அதனைத் தொட்டுத் திருப்புவதற்குமான இடைவெளி அளவிட முடியாதது. பலகோடி முஸ்லிம்களும் தங்கள் வேதநூலை அறிந்துகொண்டது, வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் நிகழ்த்தப்படுகின்ற “பயான்”களின் மூலமே. பயான் எனும் பிரச்சாரத்தை நிகழ்த்துகின்ற ஆலிம் (தொழுகையை முன்நின்று நடத்துபவர்) மேலே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள மனநிலை, கல்வியறிவு, சமூகப் பற்று, அரசியல் ரீதியிலான புரிதலின் அடிப்படையிலேயே தன் பிரசங்கத்தையும் நிகழ்த்துவார். துண்டு துண்டான குர்ஆன் வசனங்கள்; இதன் விளைவாய்ப் பகுதி பகுதியான இஸ்லாமியப் புரிதல்கள்: முழுமைபெறத் தவறிவிட்டது குர்ஆனிய வாசிப்பு.




இப்போது உலகெங்கும் நிகழ்த்தப்படும் பயான்கள் குர்ஆனை ஓர் ஆன்மீக எழுச்சியாக மாத்திரமே சித்திரிக்கின்றன. குர்ஆனியக் கருத்துக்கள் பேசப்படும் அதேநிலையில் இருந்தபடியேதான் நபிகள் நாயகத்தின் இறைபக்தி, நல்லொழுக்கங்கள் பேசப்பட்டு வருகின்றன. வட்டி வாங்குதல், புறம்பேசுதல், களவு புரிதல், குடிபோதை, காம உணர்ச்சிகள், இறை மறுப்பு என்பது மாதிரியான விசயங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, மிகக் குறைவான அம்சங்களோடு இஸ்லாம் வடிகட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகள், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் ‘இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மை’ என்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!

இஸ்லாம் இவ்விதமான ஆமை ஓட்டுத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. இன்று இஸ்லாமியப் புரிதல்களில் புதிய ஒளியும் விரிவுகளும் இல்லை; அனுபவச் செழுமைகள் ஏறவில்லை. இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கால்கள் இந்நேரம் சிறகுகளாக மாறியிருக்கவேண்டும். எண்ணெய்ச் செக்குகளைச் சுற்றிக்கொண்டே இருக்கும் நடைப் பயணத்தால், இஸ்லாத்தின் ஆன்மீகத் தன்மைக்கு அப்பாலும் நீண்டு செல்லும் சமூக வாழ்வுக்கான தேடல்களில் முஸ்லிம்கள் தேக்கநிலை பெற்றுள்ளனர். ஆனால் இறைமையும் நபித்துவமும் கலந்தெடுக்கப்பட்ட திரட்சியில் இஸ்லாமியச் சமூக ஒளி பல இருட்டுகளை உடைக்கின்றது.

நபிகள் நாயகம் தொழுகையை மட்டுமே முறைப்படுத்தித் தரவில்லை. நாயகம் ஒரு சமூகப் போராளியாகப் பரிணமித்தவர். நபித்துவ நிலையை அடைவதற்கு முன்பு முஹம்மது முஸ்தபாவாக அறியப்பட்ட அவர் ஹில்ஃபுல் ஃபுதூல் என்ற அமைப்பில் இடம் பெற்றிருந்தார். அரேபியப் பொருளாதாரம் நாடோடிப் பொருளாதாரத்தில் இருந்து வர்த்தகப் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருந்த நேரம். அதன் இயல்புக்கேற்றபடி ஒருபுறம் செல்வம் குவிந்தது, மறுபுறம் ஏழ்மை பெருகியது. சமூகத்தில் இதனால் அதிருப்தி அலைகள் உண்டாயின. நகரத்தில் வன்முறைகளும் ஏழைகளின் மீதான தாக்குதல்களும் நடந்துவந்தன. இதுபோன்ற சமயங்களில் ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவி அளிக்கவும் ஹில்ஃபுல் ஃபுதூல் அமைப்பிலிருந்த இளைஞர்கள் விரைந்தோடிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் முஹம்மது முஸ்தபா (பின்னாளில் அவரே நபிகள் நாயகம்)வும் முக்கியமானவர். அது ஒரு வீரர் குழாமாகவே அறியப்பட்டது. அப்படியானால் அது ஒரு சமூகச் சேவை அமைப்பாக மட்டுமே இருக்கமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நபிகள் நாயகமாக ஆன பின்னரும் அவருடைய மலரும் நினைவுகளில் அதன் உறுதி இருந்தது. “ஹில்ஃபுல் ஃபுதூல் தொடங்கப்பட்ட காலத்தில் நான் அதில் கலந்துகொண்டேன். இந்தப் பெருமையை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாகச் செந்நிற ஒட்டகங்களின் மந்தை ஒன்றைக் கொடுத்தால்கூட நான் இணங்க மாட்டேன். இன்றும்கூட யாரேனும் அந்தக் குழாமின் பெயரால் என்னை உதவிக்கு அழைத்தால் நான் ஓடோடிச் சென்று உதவுவேன்.” தமது இளம் வயதிலேயே மக்கா நகரச் சமூகத்தில் மண்டியிருந்த கேடுகளைப் போக்க நபிகள் நாயகம் ஏதாவது செய்ய விரும்பினார் என்று அஸ்கர் அலி என்ஜீனியர் குறிப்பிடுவது இதனால்தான். மக்கா நகர ஏகபோக வர்த்தகர்களின் அஹ்லாஃப் என்ற அமைப்பின் சவால்களை எதிர்த்து நின்றதன் மூலம், நபிகள் நாயகத்தின் சமூக அக்கறை என்றும் ஏழைகளுக்குரியதாகவே இருந்தது. பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், செல்வத்தால் அகம்பாவம் கொள்ளாதீர்கள் என்று நபிகள் நாயகம் முஸ்லிம் செல்வந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் எந்த அளவிற்குத் தொழுகையையும் இறைபக்தியையும் வலியுறுத்தினார்களோ, அதே அளவில் சமூகத்தில் ஏற்பட்டு வந்த செல்வக் குவிப்பு, அதனால் உண்டான வறுமை, அது மக்களிடையே அதிருப்தியாகப் பரவி பின் சமூகக் கொந்தளிப்பாக வீச்சு பெறப் போவதையெல்லாம் நுட்பமாகக் கவனித்தபடியே இருந்தார்கள்.
அந்த மாதிரியான சமயங்களில் அவர் தன் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் ஏழைகளின் பக்கமே தன் சாய்வு என்று வெளிப்படுத்தி வந்தார். இதற்கான மாற்று இறைபக்தியும் அதனோடு சேர்ந்த தொழுகையும்தான் என்று வாளாவிருந்து விடவில்லை. சமூகச் சேவைகளின்பால் ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுத்தபடியே இருக்கிறார். விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோரைப் போஷிக்கும்படி மக்காநகரச் செல்வந் தர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்குகிறார்.




இறை நம்பிக்கையாளர்களைச் சமூக நீதியின் பக்கம் நிறுத்துகிறது குர்ஆன். அவர் ஒரு முஜாஹித் (போராளி). “நம்பிக்கையாளர் என்பவர் இறைவனின் பூமியில் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு புதியவகை மானுடரே ஆவார்; எந்தச் சூழ்நிலைகளின் கீழும் எந்தவிதமான அநீதிக்கும் அவர் அடிபணிய மாட்டார். ஒரு நீதியான சமூகத்தை நிறுவுவதற்காக இறுதிவரை அவர் போராடுவார்.”

இஸ்லாத்தின் உன்னதங்களை தொழுகையின் வாயிலாக மட்டுமே எட்டுவது சாத்தியமில்லாதது. தொழுகை ஒரு நுழைவாயில்தான். ஆனால் இப்போதுள்ள நடைமுறைகளின்படியும் ஒருவர் சாதாரணமான அளவில் புரிந்துகொள்வதன்படியும் தொழுகைதான் இஸ்லாத்தின் உச்ச நிலை; அதைத் தொழுது முடித்துவிட்டால், ஒருவேளை வசதியிருந்து அதையே ஹஜ் பயணமாக நீட்டித்து மக்கா - மதீனாவிலும் தொழுதுவிட்டால், உயர்ந்த இறையச்சத்தைத் தான் கொண்டிருப்பதாகக் கருதிக்கொள்ளும் மனநிலையே ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றது. தொழுகை இறையச்சம் மிக்க உறுதியேற்பு நிகழ்வு. அந்த உறுதியேற்பின் வழியே அவர் ஜிஹாதி (புனிதப் போராளி) ஆகிறார்; அதாவது சமூக - அரசியல் - பொருளாதாரம், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றைச் சமூக நீதி அடிப்படையில் நிறைவேற்றித் தரவேண்டிய போராளியாக ஆகிறார். தொழுகைக்காக ஒரு முஸ்லிமைப் பள்ளிவாசலுக்கு அழைப்பதற்கான முழக்கத்தில் “தொழுகையின் பக்கம் வாருங்கள்; (மனித) நலத்தின் பக்கம் வாருங்கள்” என்கிற அறைகூவல் இருக்கின்றது. ஒருவரை மனிதகுல முன்னேற்றத்தின் செயல்பாடுகளுக்குச் சார்புநிலை இல்லாமல் அழைப்பதைவிட, ஆன்மீகத்தின் வழியே இறைவனைச் சுட்டிக்காட்டி அழைப்பது பயன்தரக்கூடும். நபிகள் நாயகம் பிறப்பிலேயே நபிகளாய்த் தோன்றவில்லை. 40ஆவது வயதில்தான் நபித்துவம் இறங்குகின்றது. அன்னாருடைய சமூகநோக்கங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றைத் தன் ஆன்மீகத் தேடலின் மூலமாக அவர் நிகழ்த்தி வந்ததனாலேயே நபித்துவம் அவருக்குச் சாதகப்பட்டது. நபிகளாரின் வாழ்வைப் புரிந்துகொள்வதில் இருக்கவேண்டியது இறைபக்தி மட்டுமல்ல; சமூகப் பற்றும் சமூகப் புரிதல் அவசியம். இதன்படி நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது (இஸ்லாமிய) சமூக வாழ்க்கையை அமைக்கும் முதல் அம்சமான அதன் பொருளாதாரம் பற்றியாகும்.




இஸ்லாமியப் பொருளாதாரம் எத்தகையது? இஸ்லாமிய இயக்கத்துக்கு முதன்மையான எதிர்ப்பு மக்காவைச் சேர்ந்த பணக்காரர்களிடம் இருந்தே எழுந்தது. குர்ஆனின் ஏராளமான வசனங்கள் செல்வக் குவிப்பைக் கண்டனம் செய்கின்றன. குர்ஆனின் வசனங்கள் மக்காவில் இறங்கியபோது அவை கடுமையான சொற்களாக இருந்தன. செல்வமே எல்லாவற்றுக்கும் தீர்வு என்று இஸ்லாம் நம்பவில்லை. அப்படி இருந்திருந்தால் செல்வர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமோ, ஹில்ஃபுல் ஃபுதூல் இயக்கத்தில் சேரவேண்டிய அவசியமோ நபி நாயகத்திற்கு இருந்திருக்காது. இஸ்லாமியச் செல்வம் சமூகத்திற்குள்ளே சுழன்றோடிய படியே இருக்கவேண்டும் (59:7). அதாவது, குவிப்பு அல்லது தேக்கம் கூடாது. அதனால்தான் பணத்தை ஈட்டும்போதே அதைச் செலவு செய்வதையும் உடனே பேசிவிடுகின்றது இஸ்லாம். “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள்தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதை இறைவழியிலும் அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான். அவனுக்கு நேர் மாறாக எவர் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுவதில்லையோ அவருடைய நிலை எத்தகையதெனில், எந்தக் காலத்திலும் முழுமையான மனநிறைவு அடையாத நிலையில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்ற மனிதனைப் போன்றதாகும்.” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். (அறிவிப்பு: அபூ ஸயீத் குத்ரி (ரலி). நூல்: புகாரி.)

பொதுவாகவே நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர், மக்காவிலுள்ள குறைஷி இனத்தார், நபிகளின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீது கோபப்பட்டுப் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர் என்று எழுதுவார்கள். குறைஷி இனத்தாரின் கையில்தான் மக்காவின் செல்வாதாரங்கள் குவிந்து கிடந்தன. நபிகள் நாயகத்தின் இஸ்லாமியப் பிரச்சாரம் தங்களின் செல்வாக்கையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும் என்பதுதான் அவர்களின் அச்சம். அப்படியானால் அந்த உண்மையைப் பொருளாதார அநீதியாகக் குறிப்பிடும் வகையில் மக்காவின் பணக்காரர்கள் என்று வெளிப்படையாக எழுதாமல், இனத்தின் மீதான தன்மையைக் காட்டும் வகையில் குறைஷி குலத்தார் என்றே குறிப்பிடுகிறார்கள். இதில் இனம் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் நாயகமும் குறைஷி இனத்தவர்தான். நாயகத்தை எதிர்த்தவர்கள் அவருடைய உறவினர்களும் ஆவர். எனவே அதை ஒரு பொருளாதாரப் போராட்டமாக வர்ணிப்பதில் முஸ்லிம் அறிவு ஜீவிகளுக்கு இருக்கின்ற மனச்சிக்கலை நாம் கண்டுகொள்ள வேண்டும். இஸ்லாமிய எழுச்சியையும் நபிகள் நாயகத்தின் அறப்போராட்டங்களையும் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளின் மீது நின்று எழுதினால், அது ஒருவகையான வர்க்கப் பிளவை அல்லது வர்க்கப்போரைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது; அதாவது அப்படிக் கருதிக் கொள்கிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்கள் கலாச்சார ரீதியான ஆதிக்கக் கூறுகளின் தன்மையோடு ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அப்படி எண்ணி வருகிறார்கள். இஸ்லாமியப் பொருளாதாரத்தை அடையாளம் காட்டும் ஒரே சின்னம் இஸ்லாமிய வங்கியியல்தான். இஸ்லாமிய வங்கியியலை முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்திவிட்டால் அங்கே இஸ்லாமிய ஆட்சி பரிபூரணமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இந்த இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்தன்மை வட்டி ஒழிப்பு. வட்டியை ஒழித்துவிட்டால் சுரண்டலின் ஒரு பகுதி மட்டுமே முடிவுபெறும்; மற்றைய சுரண்டல்களையும் ஒழித்துக்கட்டும் இஸ்லாமிய மந்திரத்தை இங்கே எவரும் பேசவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது இஸ்லாமிய வங்கியியலை ஊடுருவ விட்டால் இஸ்லாமியப் பொருளாதாரம் துளிர்த்துவிடும் என்று நம்புகிறார்கள்!

இப்போது உலகம் முழுவதும் முதலாளித்துவமே நிலவுகிறது. அதன் உக்கிரம் உலகமயமாக்கலாக நம் தலையில் விழுந்துள்ளது. முதலாளித்துவமோ அல்லது உலகமயமாக்கலோ இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்களிடம் கலந்துபேசி உருவாக்கப்பட்டதல்ல! முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் இஸ்லாமியக் கூறுகளுக்கு இடமளித்திருக்கவில்லை. ஏற்கெனவே உலகம் முழுமைக்கும் முதலாளித்துவம்தான் கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்தது. உலகமயமோ எல்லா நாடுகளின் - எல்லா இனங்களின் - எல்லா மதங்களின் கலாச்சாரங்களையும் ஒழித்துக்கட்டி ஏகமயமான ஒற்றைக் கலாச்சாரத்திற்கு வித்திட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் எப்போதுமே இந்தக் கலாச்சாரச் சீரழிவைக் கண்டனம் செய்து வருகிறது. ஆனால் உலகமயமாக்கலை இருகரம் நீட்டி வரவேற்கிறது. முஸ்லிம் அறிவுஜீவிகளில் பலர் இஸ்லாமியப் பொருளாதாரம் என்று சமூகத்தின் கண்களை முதலாளித்துவத்தையும் உலகமயமாக்கலையும் நோக்கியே திருப்புகிறார்கள்.




சில ஆண்டுகளுக்கு முன் மதுரையிலிருந்து வெளியாகும் ‘சிந்தனைச் சரம்’ இதழில் இஸ்லாமிய அறிஞர் அ. முஹம்மது கான் பாகவி, மன்மோகன்சிங்கின் வாக்கினை நம்பி ஒன்பது சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார். ‘முஸ்லிம் முரசு’ இதழில் எழுதிவரும் ரசூல் மைதீன் உலகமயம் நசுக்கியெறிந்த சென்னையின் நகர வீதிகளில் குப்பையாகக் கொட்டப்பட்டிருக்கிற கிராமத்து விவசாயிகளின் மீது சோம்பேறிகள், திருடர்கள் என்று வசைமாரி பொழிந்து அவர்களை சென்னையை விட்டே துரத்தியடியுங்கள் என்று உத்தரவும் போடுகிறார். கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் ஏழைகளின் அவலத்தையும் வேறுவேறாகப் பிரித்துப் பார்த்துச் சினமுறும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் திசையெங்கும் பரவித்தான் கிடக்கிறார்கள். இது நபிகள் நாயகத்தின் வாழ்வுக்கும் இஸ்லாமியத் தோற்றுவாய்க்கும் மாறான சிந்தனை. தங்களின் பரிசீலனைக்கு வருகின்ற எல்லா விஷயங்களின் மீதும் இஸ்லாமியக் கூறுகளைத் தோண்டித் துருவிப் பார்ப்பவர்கள், இன்றைய மனித வளங்களின் மீதும் இயற்கை வளங்களின் மீதும் நடத்தப்படும் உலகமயச் சூறையாடல்களை எப்படி மறுகேள்வி இல்லாமலே ஒப்புக் கொள்கிறார்கள்?

இன்றைய உலகப் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் இயற்கை வளங்களில் பெட்ரோலியம் முதன்மையானது. அந்தப் பெட்ரோலிய வளங்களைக் கவர்ந்து செல்லவே நடந்து முடிந்த இராக் மீதான போரும் நடக்கப் போவதாக அஞ்சப்படுகிற ஈரான் மீதான போரும் இருந்தது; இருக்கின்றது. மற்ற அரபுலக நாடுகள் அமெரிக்காவின் காலடியில் கிடப்பவை. அமெரிக்க யானைக்கு மிஞ்சியதுபோக, சிந்திப்போன கவளங்களில் அரபுலக மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஷேக்குகள் போன்றோர் தங்களின் ஆடம்பர வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழும் வாழ்வும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மன்னராட்சி முறைமையும் இஸ்லாத்திற்குப் புறம்பானவை; இந்த ஆட்சி முறைகளால் இஸ்லாமும் உலகளாவிய முஸ்லிம் சமூகமும் தீவிரமாகவே களங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் துயரங்களுக்கு இந்த அரபுலகே மூலகாரணமாய் உள்ளது.

அந்த அரபுலகத்தின் மூலமே உலகெங்கும் கொண்டு செல்லப்படும் இஸ்லாம் எப்படி சமூக நீதிக்கான - சமத்துவத்திற்கான - கோதரத்துவத்திற்கான தத்துவமாக இருக்கமுடியும்? அரபுலகின் மசூதிகளில், வெள்ளிக்கிழமை பிரசங்கங்களில், பெருநாள் தொழுகைகளில் நிகழ்த்தப்படும் உரைகளில் எப்படி இஸ்லாம் காணக் கிடைக்கும்? அந்த உரைகள் மன்னர்களின் தர்பார்களில் உருவாக்கப்படுபவை; அல்லது மன்னர்களின் கேளிக்கை மண்டபங்களின் அங்கீகாரம் பெற்றவை! சுயசிந்தனைக்கும் இஸ்லாமியத் தேடலுக்கும் வழியேயில்லாத உரைதான் ஓர் அரேபிய மௌலவியின் உரை. அமெரிக்க ஏகாதிபத்திய நுகத்தடிகளின் கீழே பூட்டப்பட்ட அரேபிய மன்னர்களின் சுயநலங்களை வர்ணம் பூசி மறைக்கின்ற இந்த இஸ்லாம் ஏழை எளியவர்களை எப்படி மீட்கும்? 1970 - 80களில் அணியணியாக அரபுலகம் சென்று தங்களின் பிழைப்புக்கான வழிதேடிய இலட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஒருவகையான தவ்ஹீத்வாதம் என்ற நச்சரவத்தால் தீண்டப்பட்டு அதில் மதிமயங்கிய நிலையில், தத்தம் நாடுகளுக்கும் சென்று அங்கேயும் தவ்ஹீத்வாதத்தைக் கொட்டிவிட்டார்கள். எப்போதுமே இளைஞர்களின் மனம் துறுதுறுப்பானது; புதிய புதிய மாற்றங்களை விரும்புவது. உலகநாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் “தூய்மையற்ற இஸ்லாத்தோடு” அரபுலகம் சென்ற அந்த இளைஞர்கட்கு அரபுலகின் பழங்குடிக் கலாச்சாரங்களும் பாலைவனத்து ஆடை மரபுகளும் புதிய இஸ்லாமாகத் தோற்றம் தந்தன. தர்காக்கள் தகர்க்கப்பட்ட நிலையே ஒரு மாபெரும் புரட்சியாக அவர்களின் சிந்தனைகளில் பதிந்தன. சுரண்டல் ஏற்பாடுகளுக்காய்த் தந்திரமாகச் சுருக்கப்பட்ட தொழுகை முறைகளின் நுட்பம் அறியாமலேயே அதன் கீழே வசப்பட்டனர். அதாவது அந்த மாபெரும் வேலையற்றோர் கூட்டத்துக்கு எதிரான கருத்துக்களை - செயல்பாடுகளை “தூய்மையான இஸ்லாம்” என்கின்ற அறியாமையின் பேரில் தங்கள் தலையிலேயே சுமந்து வந்தனர். இன்று தவ்ஹீத்வாதப் பள்ளிவாசல்களில் நிகழும் பிரசங்கங்கள் தங்களின் வாழ்வமைப்புக்கு எதிரானது என்பது புரியாமலேயே ஓர் ஏழை ஆலிம் செயல்படுகின்றார்! பிரசங்கம் புரிகின்றார்!

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் வரும்போது பிற சமயத்தார் எந்தக் காரணங்களை முன்வைத்துத் தங்கள் தரப்புகளை நியாயம் செய்வார்களோ, அதனையே முஸ்லிம் பொருளாதார ஆர்வலர்களும் பின்பற்றிப் பேசுவது மரபு. அந்தச் சமயத்தில் இஸ்லாத்தின் நோக்கை அப்பட்டமாகக் கைகழுவி விடுவார்கள். ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன, மேடு இருந்தால் பள்ளமும் உள்ளதல்லவா என்பன போன்ற காரணங்களை முன் வைக்கிறார்கள். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானில் முகாம் இட்டபோது தலிபான்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டார்கள். அன்று தலிபான்களுக்கு ஆயுத உதவி செய்தது அமெரிக்கா, தலிபான்களின் போராட்டத்தை நியாயப்படுத்தி அவர்களை வலுப் படுத்துவதற்காகக் களமிறங்கிய அமெரிக்கா தந்திரமாகப் புனைந்துரைத்த வாசகம் இவ்வாறு அமைந்தது, “இஸ்லாம் இயல்பாகவே பொதுவுடைமைக் கருத்துகளுக்கு எதிரி என்பதால் தலிபான்கள் சோவியத் யூனியனை எதிர்த்துப் போர் புரிகிறார்கள்.” பின்னர் இது பொது வழக்காகியது. முஸ்லிம் சமூகத்துப் பொருளாதார மேதைகளுக்கும் அமெரிக்கா இறக்குமதி செய்த இஸ்லாமியக் கருத்துக்களே கைவிளக்காயிற்று. ஆனால் அல்லாஹ்வை முஸ்லிம்கள் குறிப்பிடும்போதெல்லாம் ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ என்றே குறிப்பிடுவார்கள். ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மட்டும் எப்படி ‘இயற்கை’யாகவே இருக்க விட்டுவிடுவான்? அல்லாஹ்வின் வல்லமையையே கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்கிற எண்ணம் இந்நாள் வரையிலும் இஸ்லாமியப் பொருளாதார வாதிகளுக்குத் தோன்றாமல் இருக்கின்றது! இவ்வகைக் கருத்துக்கள், சொற்பிரயோகங்கள் அடிக்கடிப் பயன்படுத்தப் பட்டமையாலேயே இஸ்லாமிய அறக்கோட்பாடுகள் ஜீவனற்றுப் போய்க்கிடக்கின்றன. இதன் நீட்சியாகவே முஸ்லிம் சமூகம் காலவெள்ளத்தில் எதிர்நீச்சலைப் போட முடியாமல் கரையொதுங்கிக் கிடக்கின்றது.

உலக அரசியல் அரங்கில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு இடமில்லை. எதைப் பேசுவதாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் பழம் பெருமைகளையே பேசித் தீர்க்க வேண்டியதாக உள்ளது. முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் கல்வியாளர்கள், முஸ்லிம் மனித உரிமைப் போராளிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் ஊடகவாதிகள் - கலாச்சாரவாதிகள் என அடையாளம் சுட்டுவதற்கு ஆளுமைகள் கணிசமாக இல்லை. உலக அரங்குகளில் முஸ்லிம்களின் குரல்கள் போதிய அளவு ஓலிப்பதில்லை. ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் தங்கள் கைவசம் இருப்பதாகப் பூரித்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். உலகின் மக்கள் தொகையில் நால்வரில் ஒருவர் முஸ்லிம் என்று விகிதாச்சாரக் கணக்கைக் காட்டுகிறார்கள். சோவியத் யூனியன் உடைந்தபோது தங்கள் அணிக்கு மேலும் ஆறுநாடுகள் வந்து சேர்ந்ததாக இறும்பூதெய்தினார்கள்.

என்ன சொல்லி என்ன பயன்? மேலைநாடுகள் முஸ்லிம் நாடுகளிலேயே முகாம் அமைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தே விமானங்களை, ஏவுகணைகளை அனுப்பி முஸ்லிம்களையே அழித்தொழிக்க முடியும். உலக முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது எகிப்து, சவூதிஅரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள். மேலைநாட்டு முதலாளித்துவம் கூட தன் வளர்ச்சிக்கு மூலதனம் இடுகின்றது. ஆனால் அரபு மன்னர்கள் எவ்வித மூலதனமும் இல்லாமல் இயற்கையாய்க் கிடைத்த பெட்ரோலிய வளத்தை வாரிச்சுருட்டித் தமதுடைமையாக்கிக் கொண்டார்கள். எனவே கல்வி - விஞ்ஞான வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் இல்லை. இஸ்லாமியச் செல்வம் சுழலவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளுக்குள் அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்தச் செல்வம் அரபுலகத்திலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தால் கல்வியறிவின்றி வறுமையிலும் நோய்களிலும் வாடிவதங்குகிற அரேபியர்களும் ஆப்பிரிக்க
கறுப்பின மக்களும் வீறுகொண்டு எழுந்திருப்பார்கள். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மூல ஊற்று அடைபட் டிருக்கும். அந்தப் பெட்ரோ டாலரை ஏனைய நாடுகளில் முதலீடு செய்திருந்தாலும் அரபுகளும் ஏனைய நாட்டவரும் தோழமை பூண்டிருப்பார்கள். கலாச்சார உறவுகளை வளர்த்திருப்பார்கள்.

இன்று அரேபியக் கலாச்சாரம் கலை இலக்கியங்கள் இல்லாமல், வளர்ச்சி காணாமல் அந்த உலகத்தின் நிலவியலுக்கு ஏற்றபடி எல்லாமே பாழ்பட்டுக் கிடக்கின்றன. அரேபியர்களின் மனஎழுச்சியைத் தூண்டி அதனைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டிய கலை - இலக்கியம் - கல்வி - தொழில்நுட்பம் - விஞ்ஞானம் என எல்லாவற்றின் முடக்கத்திற்கும் இந்தச் செயல்படா மூலதனம் காரணமாகின்றது. வெளிப்படையாக மேலைய முதலாளித்துவ நாடுகள் அறிவிக்கவில்லையே தவிர, அவை அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் முஸ்லிம்களைப் பல்வேறு காரணங்களால் அப்படியே தங்கள் அடிமைகளாக முடக்கி வைக்கவுமே விரும்புகின்றன. இந்த நிலைக்கு ‘இஸ்லாமியச் செல்வம்’ அந்த மேலை நாடுகளிலேயே முடங்கிக்கிடப்பது இன்னும் அவர்களுக்குத் தோதாக ஆயிற்று. அத்துடன் அந்தப் பெட்ரோ டாலர்களையும் தங்களின் ‘நாடு பிடிக்கும் ஆசை’களுக்கும் வணிக முதலீட்டுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாம் வட்டியைத் தடை செய்திருப்பதால் கோடிக்கணக்கான பெட்ரோ டாலர் களுக்கான வட்டியைக்கூட அரபு நாடுகள் பெற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமியச் செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஆகாமல், அவர்களை அடக்கியாளத் துடிப்போரின் எதிர்ப்பு ஆயுதமாகவே ஆகிவிடுகின்றது. இதனால் அரபு நாடுகள் தங்கள் சுயமுன்னேற்றத்தை இழக்கின்றன. தங்களின் நுகர்பொருள் தேவைகளுக்கும் தங்கள் நாட்டுப் பாதுகாப்பான ஆயுதங்களுக்கும் ஏனைய தொழில் நுட்பங்களுக்கும் அவர்கள் மேலைநாடுகளை யாசிக்க வேண்டியிருக்கின்றது. அவர்களின் பெட்ரோ டாலர்களும் பெட்ரோ டாலர்களின் வட்டியுமே தங்களிடம் நுகர்பொருள்களாகவும் ஆயுதங்களாகவும் பரிமாணம் பெற்று மாறிவருகின்றன என்பதை அவர்கள் அறியவில்லை. ஒரு கல்லுக்கு இரண்டு மாங்காய்கள் என்றால் பெரிய ஆதாயம்தான். ஆனால் இங்கு ஒரு கல்லுக்கு ஒரு மரமே விழுந்து விடுகின்றது.

இது போன்ற அவலங்களையெல்லாம் உலக முஸ்லிம் சமுதாயத்தின் கண்களில் இருந்து மறைப்பதற்கு தவ்ஹீத்வாதம் அல்லது வஹாபியிசம் நல்லபடியாக அரபுநாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு உதவுகின்றது. சமூக நோக்கில்லாத, அர்ப்பணிப்பு உணர்வில்லாத வெறும் ஆன்மீகத்தை உணர்ச்சிமயமான முறையில் முன்வைத்து தம்முடைய ஆதாயங்களைப் பேணிக்கொள்கின்றது அரபுலகம். முஸ்லிம்களின் பொற்காலம் என்றால் அது நபிகள் நாயகத்தின் காலத்தில் துவங்கி அபூ பக்கர்(ரலி) காலம் வழியே நடந்து உமர்(ரலி) ஆட்சிக்காலம் வரைக்குமே! இவர்களின் காலங்களில்தான் செல்வப் பங்கீடும் செல்வச் சுழற்சியும் நடந்தன. அதிலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியோ ஒப்புவமை கூறமுடியாத மேன்மையான ஆட்சி. நபிகள் நாயகத்தின் மருமகனார் அலி, உமர் (ரலி)யின் உற்ற துணையாகவும் இருந்ததால் அவர்களிருவரும் ஏழைகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணம் செய்தார்கள். வரலாற்றில் முதன்முதலாகச் சாகுபடி நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டது உமர் ரலியின்
காலத்தில்தான். சாகுபடியின் பலன்களை அளிப்பதிலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என்ற பேதங்கள் இருக்க வில்லை. செல்வம் ஓரிடத்திலேயே குவிகின்ற நிலையைத் தடுக்க அவர் கடும் முயற்சிகளை எடுத்தார். அவருடைய ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நபிகளின் மருமகன் அலியுடன் இணைந்து ஏழைகளின் நல்வாழ்வுக்கான மேலும் சில நடவடிக்கைகளை அமுல் செய்தார். “நான் பிற்காலத்தில் செய்ததை முதலிலேயே செய்திருந்தால் பணக்காரர்களிடமிருந்து உபரிச் செல்வத்தை எடுத்து ஏழை எளியவர்களுக்குக் கொடுத்திருப்பேன்.” என்று உமர் (ரலி) சொன்னதாக ஒரு குறிப்பு இருப்பதை அஸ்கர் அலி எஞ்சீனியர் எடுத்துக் காட்டுகிறார். மூன்றாவது கலீஃபாவாக வந்த உஸ்மான் (ரலி) ஆட்சி, உமர் (ரலி) செய்த எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப்போட்டு ஓர் அபத்த நிலைக்குக் கொண்டு வந்தது. அந்த அபத்த நிலையே இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஆதாரநிலை அதன் சுழற்சிதான். ஒரு முஸ்லிம் எவ்வளவானாலும் சம்பாதிக்கலாம்; அதற்கு வரம்பு முறை கட்டவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் சம்பாதிக்கிற பொருள், அது அப்படியே உடனடியாக இஸ்லாமியச் சமூகத்துக்குரிய பொருளாகின்றது. நபிகள் நாயகம் கூறியதாக நபிகளாரின் தோழர் அபூஸயீத் குத்ரி (ரலி) அறிவித்ததாக புகாரி நூலில் காணக்கிடைக்கிற வாசகம் இது: “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள் தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதனை இறை வழியிலும் - அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான்.”

நபிகள் நாயகத்தின் வாழ்வைக் கூர்ந்து அவதானிக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் புலப்படுகின்றது. இறைத் தூதர்களாக அறியப்பட்டவர்கள் அல்லது ஞானத்தைத் தேடிச்செல்லும் ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் தங்களைத் துறவு நிலையில்தான் தக்கவைத்துள்ளார்கள். உலகின் மிகப்பெரிய மதங்களின் முன்னோடிகள் அல்லது அதன் நிறுவனர்களாய் அறியப்படுகிறவர்களின் வழியில்தான் இன்றைய எழுநூறுகோடி மக்களும் வழிநடக்கிறார்கள். மத வேறுபாடுகள் இல்லாமல் துறவு நிலையைப் பௌத்தம், கிறித்தவம், இந்துத்துவம் ஆகியன ஆதரிக்கின்றன. இதில் இஸ்லாம் மட்டுமே துறவறத்தைத் தடுக்கின்றது. சித்தார்த்தன் அரச வாழ்வைத் துறந்தே புத்தர் ஆகிறார். ஜீசஸ் அரசுக்கு எதிரான கலக மனப்பான்மையை உருவாக்குகிறார். ஆனால் முகம்மது நபியோ இவர்களுக்கு மாற்றமான முறையில் ஓர் அரசை அமைக்கிறார். இது ஒரு விசித்திரமான சூழல். வெறுமனே இறைபக்தி, ஞானம், தொழுகை, நல்லொழுக்கம் என்பனவற்றை முன்னெடுத்துச் செல்ல உலக வரலாற்றின் எந்த மூலையிலும் ஓர் அரசு அமைக்கப்பட்டதில்லை.

ஆன்மீகப் பரப்பலுக்கு வலிமையான பிரச்சாரங்களும் முன்னோடி யாய் இருப்பவரின் குணாம்சங்களும் நல்லொழுக்கங்களும் போதுமானவை. அவர் சமூகத்துடன் கொள்ளும் உறவு இன்னும் சிறப்பு. அப்படியானால் ஓர் அரசின் தேவைதான் என்ன? சமூகப் பரிணாம வளர்ச்சியில் ஓர் அரசு என்பது அரசியல் ரீதியான பொருளா தார இயக்கத்தின் அங்கமாகவே தோன்றியது. பொருளாதாரம் இல்லையேல் அரசு இல்லை. நபிகள் நாயகத்தின் அரசும் அந்தப் பொருளாதாரத் திட்டங்களையே கையில் எடுத்துக்கொண்டது. ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் அவர்கள் நல்லதொரு வாழ்வைக் கைவரப் பெறவும் தன்னுடைய அரசால் மட்டுமே முடியும் என நாயகம் நம்பிக்கை கொண்டிருந்தார். வெறும் போதனைகளாலும் இறை நம்பிக்கையாலும் சமூகத்தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை நபிகள் உணர்ந்ததால்தான், அரசின் நிர்வாகத்தைச் செழுமைப் படுத்தினார். அதன் மூலமாக ஆன்மிக மறுமலர்ச்சியைச் செம்மைப்படுத்த முடியும் என நம்பினார். மகான்களும் தீர்க்கதரிசிகளும் ஏழைகளின் பசியின் மீதாகத் தங்களின் சமூகக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து செலுத்தினார்கள். நபிகள் நாயகம் அதில் முதன்மையானவர்; மாறுபட்ட நடைமுறையாளர். இஸ்லாமியக் கொள்கைகளை வெறும் போதனை யாகவே செய்தால் அது காற்றில் கரைந்தோடிவிடும். அதனை ஆக்கப் பூர்வமான ஒரு செயல்திட்டமாக நிறைவேற்றினால்தான் இறைவ னுடைய லட்சியத்தை ஊன்றி நிலைபெறச் செய்ய முடியும் என்று கருதினார். அதனாலேயே ஓர் அரசின் நிறுவனர் ஆனார். ஆனால் இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்டே அரசை நிறுவியபோதும் அது ஓர் இஸ்லாமிய அரசு என்று எப்போதும் சொல்லப்படவில்லை; நாயகம் அந்த உச்சரிப்பைச் செய்தது மில்லை!

ஒரு முஸ்லிம் தன் சம்பாத்தியத்தின் மூலம் அடைந்த பொருள் அனைத்தையுமே இறைவனின் அருட்கொடையாகத்தான் பார்க்க முடியும். அந்தப் பார்வை இருந்தால்தான் தான் பெற்ற வளங்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமானதல்ல என்று ஒரு முஸ்லிம் உணரமுடியும். அந்த உணர்வு வந்துவிட்டால் போதும், அவருடைய செல்வம் சமூகத்தின் பயன்பாட்டுச் சுழற்சிக்கு வந்துவிடும். இந்த வகையில் நோக்க ஒருவனின் சொத்துக் குவிப்பு கண்டனத்திற்கு உரியதாகும். அளவுக்கு மிஞ்சிய செல்வக் குவிப்பும் அதன் வழியே கிடைக்கப் பெறுகிற அதிகாரமும் இறை நிராகரிப்பு வடிவங்களாகும். ஆனாலும் உலகளாவிய முறையில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அரேபிய அரசுகள், முஸ்லிம் நாடுகளின் அரசுகள் என்பன இஸ்லாத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. தம்முடைய வணக்க வழிபாடுகளின் மூலமாக மட்டுமே அவை இஸ்லாத்துடன் இணைவு கொண்டுள்ளன. ‘அரேபியா வசந்தம்’ ஏற்பட்டபோது துனீஸியாவின் அதிபர் பென்அலி தன்னிடமுள்ள பணத்தையெல்லாம் தூக்கிக் கொண்டுதான் ஓடினாரே தவிர, இறை நம்பிக்கை போதும் என்ற எண்ணத்தில் ஓடவில்லை.

இஸ்லாமியப் பொருளாதாரம் என்று தனியாக வரையறுக்கப்பட்ட பகுதியென ஒன்று இல்லை. குர்ஆனின் வசனங்களில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வாழ்வை விவரிக்கும் ஹதீஸ்களில் இருந்தும் பின்னர் கலீஃபாக்களின் முறைப்படி ஆளப்பட்ட அரச நடைமுறைகளில் இருந்துமே இஸ்லாமியப் பொருளாதாரக் கருத்துக்களைச் சேகரம் செய்யவேண்டும். கலீஃபாக்களின் ஆட்சி முறையைப் பரிசீல னைக்கு எடுக்கும்போதும் அதனை உமர்(ரலி) ஆட்சிக் காலத்தோடு நிறுத்திக்கொள்வதே சிறப்பு. உமர் (ரலி)க்குப் பின்வந்த உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக்காலம் இன்றைய ஆட்சி முறைகளின் மூலப்பதிப்பு. அவருடைய ஆட்சியை எதிர்த்து அப்போதே கிளர்ச்சிகள் தோன்றிவிட்டன. எனவே, அது இஸ்லாமிய மூலக்கூறுகளைக் கொண்டதல்ல. பொருளாதாரம் குறித்த பொது விவாதங்களில் சமூக நோக்கினை முன்னிறுத்துவதுதான் நல்லது. தங்கள் திறமையை, அறிவை வளர்த்துக்கொண்ட தனி மனிதர் களின் பங்களிப்பு ஒரு விஞ்ஞானியாக இருந்தால், ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு கலைஞராக இருந்தால் அது சமூகப் பொதுவில் தானாகவே வந்து சேர்ந்து விடுகின்றது. அது ஒரு தடையற்ற வெள்ளம் போன்றது. அது தவிர்த்த பெரும்பாலான துறைகளில் தனி நபர்களின் ஆளுமை அல்லது ஊக்கங்கள் வெறும் செல்வக் குவிப்பாகவே மாறுகின்றது. அது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

ஒரு கருத்து நம் புரிதலுக்கு வந்தபின் அதை மென்மேலும் செழுமை செய்து இன்னமும் அதிக விரிவும் வலுவும் உள்ளதாக்கிப் பேசுவதே மானுட மேன்மைக்கு உகந்ததாகும். வரலாறு பல அனுபவங்களை நமக்குத் தருகின்றது. மானுட இனம் அன்பும் கருணையும் மிக்க ஒளியுடன் இவ்வுலகை மலரச் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டுப் பழங்காலத்தில் இப்படித்தான் இருந்தது என்று குறுகிக்கொண்டு போவதில் சுயநலம்தான் இருக்கும்; அல்லது வறட்டுத்தனம் மேலோங்கும். என்னதான் வணக்க வழிபாடுகளும் வழிபாட்டு இடங்களும் மங்காமல் இருந்தாலும், மானுட நெறிகள் மாய்ந்து போய்க்கிடப்பது ஏன் என்கிற கேள்வியே இன்றையத் தேவை! ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் இந்தக் கேள்வியைத் தங்கள் மனத்தினில் எழுப்பி அதற்கான விடை என்னவென்று தேடிச் செல்லவேண்டும்.

-களந்தை பீர்முகம்மது
Thanks :  Kalachuvadu

No comments:

Post a Comment