Tuesday, October 29, 2013

சூது கவ்வும் : வரமா சாபமா?









டந்த மே மாதம் சூது கவ்வும் என்ற ஒரு திரைப்படம் வெளியாகியது. பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களோ தொழினுட்பக் கலைஞர்களோ இல்லாமல் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அப்படம் வெளியான தினத்திலிருந்து இன்று அதை எழுதிக்கொண்டிருக்கும் நாள் வரையில் ரசிகர்களை வெகுவான ஆதரவைப் பெற்று இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது அத்திரைப்படம்.

கதையில் புதுமை என்று ஒன்றும் பெரிதாக இல்லை. ஆட் கடத்தல் முயற்சிகளும் அவற்றிலே நிகழும் எதிர்பாராத திருப்பங்களால் ஏற்படும் குழப்பங்களும்தான். பாத்திரங்கள் ஸீரியஸாக இயங்க, பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் நகைச்சுவையாக உணரும் படம். முன்பு 2005 அளவில் கமல் இதே போன்று 'மும்பை எக்ஸ்பிரஸ்' எடுத்திருந்தார். அதுவரையிலே படு வில்லனாகப் பெயர் வாங்கியிருந்த பசுபதியை பார்த்து ரசிகர்கள் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்திருந்தார் கமல். இத்தனைக்கும் பசுபதி அதிலும் கூட கடத்தி வந்த சிறுவனைக் கொன்றுவிட நினைக்கும் வில்லத்தனமான கிரிமினல்தான். ரசிகர்கள் சிரிக்கக் காரணம் படத்தின் திரைக்கதையும் அது சொல்லப்பட்ட விதமும்.

அதுபோலத்தான் சூது கவ்வும் படத்திலும் ஆட்கடத்தல் புரியும் கும்பலின் ரகளையை புதுமையானதும் வித்தியாசமானதுமான விதத்தில் நகைச்சுவையாக தந்திருக்கின்றார்கள். வெறும் பொழுதுபோக்கு என்றவகையில் ரசித்து விட்டுப் போகலாம் என்றால் விடயம் அத்தோடு மட்டுமில்லை. இவ்வாறான படங்களின் தொனி இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கை பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது. அதாவது சத்தியத்தையும் நேர்மையையும் போற்றுவதை விட்டு அவற்றை நகைச்சுவையாக்கி கேலி செய்து மலினப்படுத்துகின்ற கைங்கரியத்தையும் செய்கின்றது.

இதன் கீழே இத்திரைப்படத்திற்கு வினவு,  காலச்சுவடு ஆகிய இணையத்தளங்கள் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தைப் படித்தால் மேலே கூறியதன் தாக்கம் நன்கு புரியும்.
 
- Jesslya Jessly
 
 
 
 
 
 

தையை விட கதை கூறும் முறையை அடிநாதமாகக் கொண்டிருக்கும் சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது ஆச்சரியமல்ல. அதே நேரம் ஆரோக்கியமும் அல்ல.


விஜய் சேதுபதியின் தலைமையில் மூன்று வேலையிழந்த இளைஞர்கள் சேர்ந்து சின்ன சின்ன ஆள் கடத்தல் செய்து இறுதியில் அமைச்சர் மகனை கடத்துகிறார்கள். அமைச்சர் சிபாரிசில் வரும் என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டரை சமாளித்து வாழ்க்கையில் செட்டிலாவதை ‘நகைச்சுவை’ கலந்த விறுவிறுப்புடன் காட்டும் படம், காய்ந்திருக்கும் ரசிகர்களை குளிர வைக்கிறது. ஆனால் இந்த செயற்கை குளிரூட்டல் உடலுக்கு நல்லதா?


இந்தப் படத்தில் கவர்ச்சி இருப்பதாக கூறினால் அண்ணன் உண்மைத்தமிழனே சண்டைக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நேற்றிருந்த ‘கவர்ச்சி’ குறித்த பார்வை இன்று மாறியிருக்கிறது. கொஞ்சம் லூசு போலத் தோற்றமளிக்கும் சேதுபதி கடவுளிடம் பேசும் இறைத்தூதர்கள் போல, இல்லாத காதலியுடன் எந்நேரமும் பேசுகிறார். அன்றைய கூத்தில், கதை மீதான எடுப்பு தொடுப்பு விமரிசனங்களை கட்டியங்காரன் செய்வதை இங்கு காதலி செய்கிறார். ரசிகர்கள் ஆடியோவில் சேதுபதியையும் விஷுவலில் காதலியையும் பின் தொடர்கிறார்கள். கட்டியங்காரன் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் கதையில் குறுக்கிடுகிறான் என்றால் இங்கு சஞ்சிதா ஷெட்டி எனும் கவர்ச்சி நடிகை ஆண் ரசிகர்களை வயப்படுத்துவதற்கு குறுக்கிடுகிறார்.
அரை லூசு தமிழ் மற்றும் அமெச்சூர் கிரிமினலுக்கு மும்பை மாடல் நடிகை காம்பினேஷனே தாங்க முடியவில்லை எனும் போது ஷெட்டி “மாமா” என்று விளிக்கும் போது சகிக்க முடியவில்லை. காதலியின் பின்பாட்டு வசனங்களை பார்க்கும் ரசிகர்கள் அத்தோடு நின்றுவிடக்கூடாது என்று எப்போதும் அரை நிக்கர் அல்லது அதற்கும் கம்மியான உடையுடன் காதலியை நடமாட விட்டிருக்கிறார் இயக்குநர். ரசிகர்களின் ஆசையை ஏமாற்ற விரும்பாத காதலியும் தீடீரென்று நீச்சல் உடையுடன் தோன்றுகிறார். கவர்ச்சியையே வித்தியாசமாக காட்டியிருக்கிறார் அல்லவா என்று வெரைட்டி பிராண்ட் ரசிகர்கள் வாதாடக்கூடும். பழைய சோறு எனும் அற்புதத்திற்கு பிசா ஊறுகாய்தான் தொட்டுக் கொள்வேன் என்று வெரைட்டியான காம்பினேஷன்களுக்கு அடம் பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும்?


படத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாழும் அமைச்சராக எம்.எஸ். பாஸ்கர் வருகிறார். கட்சிக்காக ஒரு வருடம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ய ஆணையிடும் தலைவரின் விருப்பத்திற்கு இணைங்க, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மகன் அப்பாவை டம்மி பீசாக்கிவிட்டு அமைச்சராகிறான். சூரியனை கிழக்கே காண்பித்து விட்டு நிழலை ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் காண்பிப்பதாக லாஜிக் மீறலை கண்டுபிடிக்கும் விற்பன்னர்களுக்கு இந்த அமைச்சர் பாத்திரமே ஒரு அபாண்டம் என்று தோன்றவில்லை. கட்சிப் பணம் 2 கோடியை சுருட்ட நினைக்கும் மகனை எதிர்த்து போராடும் அப்பா அமைச்சர் 300 கோடியை வசூலிக்கச் சொல்லும் முதலமைச்சரை எதிர்த்து ஒன்றும் பேசவில்லை என்றாலும் அத்தகைய சுருட்டல் கட்சியில் சேர்ந்து எப்படி குப்பை கொட்டுகிறார்?


அதனால்தான் அப்பா பாத்திரத்தை லூசில் விடும் இரசிகர்கள் பிறகு மகன் அமைச்சராகி தேர்தல் பிரச்சாரம், வசூல் என்று பட்டையைக் கிளப்பும் போது மனம் ஒன்றி கைதட்டுகிறார்கள். நேர்மை யதார்த்தமில்லை, ஊழல் யதார்த்தமானது என்பதால் இங்கே இயக்குநரும் இரசிகர்களும் ஒன்றுகிறார்கள். நீதியும் நேர்மையும் விலகிச் செல்கின்றது.


இவையெல்லாம் காமடிக்குத்தானே சொல்லப்பட்டிருக்கின்றன என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு செண்டிமெண்டாக ஒரு கேள்வி. உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா? இதற்கு சற்றும் குறையாத பாத்திரம்தான் படத்தில் வரும் சைக்கோ இன்ஸ்பெக்டர் என்கவுண்டர் பிரம்மா.


தமிழக போலீஸ் போலி மோதலில் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. இது அரசு எந்திரம் சட்டம், நீதிமன்றங்களை சட்டபூர்வமாக ஏமாற்றிவிட்டு பாசிசமாகி வருகிறது என்பதற்குச் சான்று. கிரிமினல்களோடு பங்காளிச் சண்டை வலுத்த போதும், சில குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு காட்டிக் கொள்வதற்காகவும் நடக்கும் என்கவுண்டர் இங்கே பாதிப்படம் முழுக்க சிரிப்பதற்காக இழுத்து வரப்படுகிறது.


வாய் பேசாமல் துப்பாக்கியுடன் மட்டும் கொடூரமாக பேசும் பிரம்மாவைக் கண்டு இரசிகர்கள் ஆரவாரத்துடன் சிரிக்கிறார்கள். இறுதிக் காட்சியில் ஓட்டைத் திருட்டுத் துப்பாக்கியை பின்புறம் சொருகும் போது தவறுதலாக அவர் சுட்டுக் கொள்கிறார். சேதுபதி கும்பல் என்கவுண்டரிலிருந்து தப்பிக்கிறது. ஒரு வேளை என்கவுண்டர் போலிஸை இப்படி ஒரு காமரா காமடி கவித்துவ நீதியில் காட்டியிருக்கிறார்கள் என்று பின் நவீனத்துவவாதிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் படம் பார்க்கும் இரசிகர்கள் ஏற்கனவே போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும் பாசிச மனோபாவத்தின் செல்வாக்கு கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த கிச்சு கிச்சு அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சம் குற்ற உணர்வையும் கொன்று விடுகிறது.


ஐ.டி துறையில் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும் இளைஞன் பின்னர் வேலை கிடைக்காமல் சேதுபதியிடம் சேருகிறான். இதற்கு காரணம் அவனை ஒரு தலையாக காதலிக்கும் ஒரு ஐ.டி பெண் நிர்வாகத்திடம் தவறாக போட்டுக் கொடுத்து வேலையை விட்டு நீக்க வைக்கிறாள். இது பெண்களை இழிவு படுத்தும் மலிவான ஆணாதிக்கம் என்பது போக சுயமரியாதை, பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்கம், இன்னபிற உரிமைகள் இல்லாத ஐ.டி துறை முதலாளிகளது ஆதிக்கத்தை மறைத்து விட்டு அங்கே ஒரு பெண்ணை வில்லனாக காட்டுகிறார் இயக்குநர். ஆண்டான் ஓரத்தில் மமதையுடன் ஒயின் பருக நடுவில் அடிமைகள் தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.


நயன்தாராவுக்கு கோவில் கட்டியவனும் சரி, ஜாகுவார் காரை ஓட்டி வேலையிழந்தவனும் சரி, இருவரும் நாள் முழுவதும் குடிப்பதும் சரி, எல்லாம் நகைச்சுவைக்காக சாகாவரம் பெறுகின்றன. இவற்றின் உட்கிடையான நுகர்வு கலாச்சாரம், சினிமா மோகம், ஆடம்பர வாழ்வு நாட்டம், பிறர் காசில் வாழும் ஒட்டுண்ணித்தனம், பொறுப்பற்ற தனம், விட்டேத்தித்தனம் அனைத்தும் நகைச்சுவையோடு என்றாலும் கடிந்துரைக்கப்பட வேண்டும். ஏனெனினல் சமூகத்தில் ஹாயாக உட்கார்ந்து டிவியோ, சினிமாவோ பார்க்கக்கூட நேரமற்று உழைத்தும் அதற்காக குடித்தும் தன்னை அழித்தும் வாழும் பாமரர்களை பார்த்து யாருக்கும் சிரிக்கத் தோன்றுமா? முடியுமெனில் அவர்கள் குடிக்காமலேயே தங்களை அழிக்கும் கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். இங்கே இயக்குநர் அதையே செய்கிறார்.


திருட்டையும் நகைச்சுவையையும் சேர்த்து புனையப்படும் ஒரு காட்சி ஒரு படத்தில், ஓரமாக வரும் வடிவேலு காமடியாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே முழுநேரக் கதையாக இருந்தால்? மிகுந்த பொறுப்புணர்வோடு கையாளப்படவேண்டியதை இங்கே இப்படத்தின் படைப்பாளிகள் மிகுந்த அலட்சியத்தோடு கையாண்டிருக்கிறார்கள்.


யாருக்கும் ஆபத்தில்லாத வகையில், ஆயுதம் இல்லாமல், துன்புறுத்தல் இல்லாமல் ஆட்களைக் கடத்தி சம்பாதிக்கலாம் என்று சேதுபதி மற்ற மூவருக்கும் எடுக்கும் வகுப்பே யதார்த்தத்தின் நினைவுகளோடு எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து செலவுக்கு வழியில்லாக கல்லூரி இளைஞர்கள் காமடியாக ஆள்கடத்திலில் ஈடுபட்டு பின்னர் உண்மையான குற்றவாளிகளாக காலந்தள்ள நிறையவே வாய்ப்பிருக்கின்றது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள்தான் முதலில் அமெச்சூர் திருடர்களாக ஆரம்பிக்கிறார்கள். பின்னர் ஈவு இரக்கமற்ற பக்கா கிரிமினல்களாக மாறுகிறார்கள். சமயத்தில் கொலையும் செய்கிறார்கள். சென்னையிலேயே மேட்டுக்குடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டி முதல் முறையாக ஆள்கடத்தல் செய்த பல மாணவர்கள், இளைஞர்கள் கொலையே செய்திருக்கிறார்கள். அது குறித்து வினவிலும் நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன.


இத்தகைய சமூக விகாரங்களின் மத்தியில் காமடித் திருடர்கள் என்பது எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விசயம் என்று இயக்குநருக்குத் தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ள விரும்பினால் நூறாண்டுகளுக்கு முந்தைய சார்லி சாப்ளினது படங்களை “பார்க்க” வேண்டும்.
இந்தப் படத்தில் வரும் சுய எள்ளல்கள் வெறுமனே சலிப்பூட்டும் சந்தானம் பாணியிலிருந்து கொஞ்சம் மேம்பட்ட வார்த்தை அலங்கார நகைச்சுவையாக மட்டும் இருக்கின்றன. உண்மையில் ஒரு சுய எள்ளல் என்பது ஒருவர் தன்னைக் குறித்த சுயவிமரிசனத்தின் நேர்மையில் நடக்கும் நகைச்சுவையாகும். அதனால் இங்கே நகைச்சுவை என்பது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு வருகிறது. படத்தில் அத்தகைய சுயமோ இல்லை சுய விமரிசனமோ இல்லை என்பதோடு இருக்குமளவு அந்தப் பாத்திரங்களும் மண்ணில் நடமாடவில்லை.
ஒரு திரில்லர் வகைப்படங்களின் ஆன்மாவை கூரிய சமூக பார்வையோடு புரிந்து கொண்டவர்கள் இயக்கினால் அது பல்வேறு கணக்குகளோடு சேர்ந்தும், பிரிந்தும், மறுத்தும், தொடுத்தும், தவிர்த்தும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப் பெருவெளியின் மர்மத்தை வியப்பூட்டும வகையில் இழுத்துக் கொண்டு வரும்.



ஸீக்ஃப்ரீட் லென்ஸ் எழுதிய “நிரபராதிகளின் காலம்” அத்தகையது. நாசிச ஜெர்மனியின் மக்கள் ஹிட்லரை கருத்து ரீதியாக ஆதரிக்கும் போக்கில் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதை ஒரு கற்பனைக் கதை மூலம் நிஜத்தின் விசாரணையோடு தம்மைத்தாமே மக்களை கேள்வி கேட்க வைக்கிறார் ஸீக்ஃப்ரீட். இதன் தமிழ் மொழிபெயர்ப்பை பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருந்தாலும் இந்த இலக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. யார் கொலை செய்தார்கள் என்ற கேள்வியுடன் அதை கண்டு பிடித்தோ இல்லாமலோ போவதற்கு எதை இழந்தோம் என்று பாத்திரங்களின் விசாரணையில் விறுவிறுப்புடன் செல்கிறது இந்த நாடகம். ஒரு நேர்த்தியான த்ரில்லர் என்ற வகையிலும் பரந்து விரிந்த மனித குலப் போராட்டத்தின் உந்து விசையை குறிபார்த்தும் எழுதப்பட்ட இத்தகைய இலக்கியங்களை நமது நாளைய இயக்குநர்கள் படித்தார்களா தெரியவில்லை. படித்திருந்தாலும் அதில் அவர்களை எது ஈர்த்திருக்கும் என்று யூகம் செய்தால் விரக்தியே மிஞ்சுகிறது.


ஏதோ ஒரு கதையை எடுத்துக் கொண்டு எள்ளலான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முடிச்சுக்கள், வித்தியாசமான பாத்திரச் சித்தரிப்புகள், காட்சிக்கொரு மர்மம் என்பன போன்ற சமாச்சாரங்கள்தான் ஒரு சினிமாவிற்கு போதுமானது என்று இந்த இயக்குநரும் இவரைப் போன்றவர்களும் இத்தகைய படங்களை ரசிப்பவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைப் பெருவெளியில் மையம் கொள்ளாத இந்த அலங்காரங்கள் தோன்றும் போது வேண்டுமானால் கவரலாம். விரைவிலேயே இவையும் சலித்துப் போய்விடும். கதையை விட கதையை கூறும் முறை நேர்த்தியாக பின்னப்படுவதால் கிச்சு கிச்சு வேண்டுமானால் மூட்டலாமே தவிர சிந்திக்க வைக்க முடியாது. சிந்தனையில் தங்காத படைப்புகளால் ஒரு சமூகத்தை கிஞ்சித்தும் பண்படுத்த முடியாது.


எல்லாக் கதைகளும் சரியாகவோ தவறாகவோ சமூகக் களத்தை பிரதிபலிப்பதிலிருந்தே உதிக்கின்றன. காமடிக்கும் கவர்ச்சிக்கும் பாத்திரச் சித்தரிப்புக்கும் வேகத்திற்கும் எளிய முரண் உரையாடல்களுக்கும் அளவு கடந்து மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அவை இயங்கிக் கொண்டிருக்கும் சமூகப்பாத்திரத்தை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இது நமது நாளைய இயக்குநர்கள் அறியாதது, அறிய வேண்டியது.


Thanks : Vinavu



 




மிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும்.


நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல்ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது.


பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச் சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பவரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும் படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்று சேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதி யிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும் போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.


பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத் தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின்மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப்பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை.





அருமைப்பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்ட ணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத் தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த் தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது. இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.


பெண்ணே இல்லாத திரைக் கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய மண்டையில் உறைக்காது.






சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல, ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சி களில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி
படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும்தான். அவர் உலகப் பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.


விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ். ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத் திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெரு கேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப்பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், 'மாமா பின்ற மாமா' எனச் சொல்ல வைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.


நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான்; ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான்; ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரை யாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா? ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது. ஆனால் பார்வை யாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன் படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர்.
இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, னீஸீமீஹ் பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும் போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

- Chellappa
 
 
Thanks : Kalachchuvadu


No comments:

Post a Comment