Monday, October 21, 2013

சிறுகதை: நீதானா.. நிஜம்தானா..?








திருகோணமலையிலிருந்து புறப்பட்டு கண்டிக்கு ரகுமான் வந்து சேர்ந்த போது இரவு 9.40 ஆகிவிட்டிருந்தது. பழைய சுப்பர்மார்கட் அருகிலே பஸ்ஸை விட்டு இறங்கியதும் பனிக்குளிர் காதுமடலைத் தாக்கியது. புகையிரத நிலையத்தைத்தாண்டி குட்செட் பஸ்தரிப்பு வரை நடந்துவந்து 'இதோ புறப்படப்போகின்றேன்' என்று உறுமிக்கொண்டிருந்த வட்டதெனிய பஸ்ஸினுள் ஏறி அமர்ந்தான்.

ரகுமான் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவன். கடந்த வாரம் மூத்த நானாவிடமிருந்து உடனடியாக வீட்டுக்கு வந்துசேரும்படி அவசரத் தந்தி ஒன்று வந்திருந்தது. ஆஸ்துமா நோயாளியான உம்மாவுக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டதோ என்று பதறியடித்து பஸ்ஸைப்பிடித்து வீட்டுக்குப் போய் இறங்கினால் உம்மா வாசலிலே சிரித்துக்கொண்டு நின்றா. அவசரத் தந்திக்குரிய காரணத்தை அறிந்ததும் அவனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. தனக்கு வந்திருந்த திருமணப்பேச்சுவார்த்தை ஒன்றைப்பேசி முடிப்பதற்காகத்தான் வரச்சொல்லியிருந்தார்களாம்.

ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு தான் வரும் வரையில் திருமணப் பேச்சையே எடுக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவைத்திருந்தும் அவனுடைய உம்மாவும் நானாவும் இப்படிப் படுத்துகின்றார்களே என்ற கோபத்தில் அடுத்த பஸ்ஸைப் பிடித்து கல்லூரி விடுதிக்குத் திரும்பி வந்துவிடத்தான் நினைத்தான். ஆனால், 'தம்பி நீ அந்தப் புள்ளைய வந்து ஒருதரம் பாரு. புடிச்சிருந்தா நீ சொல்ற மாதிரி படிப்பை எல்லாம் முடிச்ச பொறவு செய்யலாம்.. இல்லாட்டி வுடு' என்று நானா கேட்டுக்கொண்டதால் பெண் பார்க்கும் சடங்கிற்கு ஒப்புக்காக போய் வந்தான். அத்தோடு ஊரிலே வேறு சில முக்கியமான அலுவல்களும் இருந்த காரணத்தால் லீவை நான்கு நாட்கள் நீடித்து இன்று பிற்பகலில்தான் கல்லூரிக்கு புறப்பட்டான்.

'என்னடா இது? ரெண்டு நாளா நானும் பாக்கிறன்.. ஒண்ணுமே சொல்லாம ஒன்ட பாட்டுக்கு கண்டிக்குப் போக வெளிக்கிடுறா.. இப்ப நானும் பெரிய நானாவும் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது..?' என்று உம்மாதான் ஆரம்பித்தா.

'சரி, இப்ப சொல்றேன். எனக்குப் புடிக்கல.. போதுமா?'

'அப்ப அங்க வச்சு புடிச்சிருக்கான்டு நானா கேக்க தலையாட்டினியாமே.. என்ன வெளையாடுறியா நீ?'

'நா புடிக்கலண்டு சொன்னது நம்ம நானா செஞ்ச வேலையைத்தான் உம்மா. இன்னும் மூணுமாசத்தில கலியாணம் வைக்கலாமா என்று அவங்க கேட்ட உடனேயே இவரு தன்ட பாட்டுக்கு ஓமென்றாரு. அவ்வளவு அவசரமிருந்தா நானாவையே கட்டிக்கச் சொல்லுங்க எக்ஸ்ட்ராவா. இந்தாருக்க நம்ம பவ்சியா மதினிக்கிட்ட அடிவாங்கட்டும்.. ஹஹ்ஹா!' சொல்லும்போதே கோபத்திலும் சிரிப்பு வந்தது அவனுக்கு.

' ஓ! இதையெல்லாம் நானா வெளியே போக முந்தி அவருக்கிட்யே சொல்றதுதானே.. மச்சான்? நாஞ் சொல்றனே மாமி.. இவரு ஒங்கட கடைசி மகன் இருக்காரே.. அங்க கண்டியில யாரையோ விரும்பிக்கிட்டிருக்காரு போல..'


'அப்பிடி யாரும் இருந்தா பரவாயில்லை சொல்லண்டா.. அதையாவது கட்டித்தாறோம்.. வேற என்ன செய்யிறது பவ்சியா..? ஒங்க மாமாக்கிட்டய நானும் போய் கபுறடியில அடங்க முந்தி இவனுக்கு ஒரு..'


'சரி, ஆரம்பிச்சிட்டீங்களா? அப்ப நா ஒண்ணு செய்யிறன். ரெண்டு வருசம் கழிச்சு ட்ரெயினிங் முடிச்சிட்டு வாற நேரம் கண்டிலருந்து ஒண்டைக் கூட்டிக்கிட்டு வாறேன். கட்டித்தாங்க..! கட்டை கவுண் போடுற சிங்களப் பொட்டையென்டாலும் பரவாயில்லியாம்மா?'

'அடி செருப்பால!'





ந்த வழித்தடத்தில் செல்லும் கடைசி பஸ் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடைத்தொழிற்சாலை வேலை விட்டுத் திரும்பி வரும் அழகான இளம் பெண்கள் பலர் அவனது இருக்கைக்கு அருகிலே நின்றபடி தங்களுக்குள் கலகலவென சிங்களத்தில் சிரித்துப்பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ரகுமானுக்கு ஏனோ தனது கல்லூரித்தோழி இரோமியின் நினைவு வந்தது.

இரோமி ரகுமானின்  க்ரூப்-ஜே வகுப்பில் அவனோடு மிகவும் நேசமாகப் பழகும் சிங்களப் பெண். அவளையும் அவள் அவ்வப்போது பேசும் கொஞ்சு தமிழையும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியின் பெண்கள் விடுதியிலேதான் அவள் தங்கியிருக்கிறாள்.  1999/2000 கல்வியாண்டு பெண்களிலே பேரழகி யாரென்று கேட்டால் எல்லோரும் அவளைத்தான் காண்பிப்பார்கள். எவரையும் கொள்ளை கொள்ளும் அழகிய தோற்றமும் நிறமும் கனிவான குணமும் கொண்ட இரோமியை மனதுக்குள் ரசிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் அத்தனை அழகாய் அவளைப் படைத்த இறைவன் தன் அழகிலே அவளுக்கு கர்வம் எதுவும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தானோ என்னவோ சிறு குறை ஒன்றையும் கொடுத்துவிட்டான். ஆம், இரோமி பிறப்பிலேயே இடது பாதத்தில் சிறிது ஊனமுள்ளவள். அவள் நடக்கும்போது உற்றுக்கவனித்தால் மட்டும் லேசாக விந்தி நடப்பது தெரியும்.

ஆசிரியர் பயிற்சி முடியும் வரையில் திருமணம் வேண்டாம் என்று தன் வீட்டில் கூறியதற்கு இரோமியும் ஒரு முக்கியமான காரணம். இரோமியை கண்டதிலிருந்து வேறு எந்தப் பெண்களும் ரகுமானை பெரிதாக கவர்ந்ததே கிடையாது. அவளது அழகிலும் குணத்திலும் மயங்கி அவன் தனக்குள்ளேயே அவளை ஒருதலையாக காதலித்திருந்துக் கொண்டிருந்த ஒரு காலமும் இருந்தது. ஆனால் இரோமி இப்போது வேறு ஒருவனின் காதலி என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். அவர்களது காதலை ஒன்றுசேர்த்து வைத்தவனும் ரகுமான்தான் என்றால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

அவன் நினைத்திருந்தால் இரோமியை தனது காதலியாக்கிக் கொண்டிருக்கும் வாய்ப்பு நிறையவே இருந்தது. ஆனால் அவன் ஒரு முஸ்லீம் பையனாக இருந்த காரணத்தால் தன்னை அவள் ஏற்றுக்கொள்வாளா என்ற சந்தேகத்தில் தன் காதலை அவளிடம் தெரிவிக்காமலே இருந்துவிட்டான். ஆனால் இரோமி ஒரு பரந்த சிந்தனையுள்ள பெண் என்பதை பிற்பாடு அவளோடு ஒரு நண்பனாக நெருங்கிப் பழகிய காலத்தில்தான் ரகுமான் தெரிந்து கொண்டான். அப்போது கூட தனது காதலை அவளிடம் அவன் கூறியிருந்திருக்க முடியும். ஆயினும் அதற்கிடையில் இருவருக்குமிடையே இயல்பாக வளர்ந்திருந்த நட்பை மீண்டும் காதலாக அறிவிப்பதற்குரிய துணிச்சல் இல்லாமலே இருந்துவிட்டான்.

மலராமலே உதிர்ந்துவிடும் மொட்டுகளாய் ரகுமானின் காதலும் சமாதியானது. ஆனால் அந்தக் கதையெல்லாம் ரகுமானுக்கும் அவனுடைய அறைத்தோழன் ஹபீலுக்கும்தான் தெரியும். வருவது வரட்டும் என்று காதலை தயங்காமல் சொல்லிவிடும்படி ஹபீல் கூட எத்தனையோ தடவை ரகுமானை வற்புறுத்தியிருக்கின்றான். இருந்தும் நட்புக்கு துரோகமிழைப்பதாக இரோமி நினைத்து விடுவாளே என்று தயங்கித் தயங்கியே பேசாமல் இருந்து விட்டான். ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அல்லவா?

இரோமியை விமலசேன எனும் அவர்களுடைய சீனியர்களில் ஒருவனும்; ஒருதலையாக காதலித்தான். ஆனால் அவன் ரகுமானைப்போலன்றி தன் காதலை நேரடியாக அவளிடம் தெரிவித்து விட்டிருந்தான். ஆனால் இரோமி அவனுடைய காதலை முதலிலே ஏற்றுக்கொள்ளவில்லை. அழகுக்காக விரும்புபவர்கள் பின்பு திருமணம் என்று வரும்போது தனது கால் ஊனத்தை பெரிதுபடுத்தி பின்வாங்கி விடுவார்கள் என்று ஆண்கள் மீது அவளுக்கு ஒரு பொதுவான அவநம்பிக்கை இருந்ததுதான் அதற்குக் காரணமே. ஆனால் விமல், தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று நம்பவைப்பதற்காக அவள் பின்னால் விடாமல் அலைந்தான். அதற்காக பல தடவை அவளிடம் திட்டுக் கூட வாங்கிக்கட்டியிருக்கிறான். ஆனாலும் அவளை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தான்.

ஒருகட்டத்தில் இரோமிக்கு மிகவும் பிடித்தமான வகுப்புத்தோழன் ரகுமான்தான் என்பதை எப்படியோ அறிந்து அவனிடம் வந்து நின்றான் விமல். தனது உண்மையான காதலை இரோமி வீணாகச் சந்தேகப்படுகிறாள் என்று புலம்பியதோடு தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு இரோமியிடம் அவனை எடுத்துக்கூறும்படியும் வற்புறுத்தினான்.  யாரை அவன் காதலித்தானோ அவளிடமே என்னை தூதனுப்பும் விமல் மீது ரகுமானுக்கு சிறிது பொறாமை உண்டனாலும் கூட அவன் பழகுவதற்கு நல்லவனாகவும் என்னைவிட இரோமிக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவனாகவும் தோன்றியதால் அதுபற்றி அவளிடம் பேசுவதாக ஒப்புக்கொண்டான்.

ஆனால் ரகுமானின் உற்ற நண்பனாகிய ஹபீல் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தான். இதையெல்லாம் அவன் செய்வதற்கு காரணம் இரோமிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று ரகுமான் அவனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஹபீல் சமாதனமாகவேயில்லை. ரகுமான் செய்யப்போவதை அசட்டுத் தியாகம் - காதல் தற்கொலை என்று கூட வர்ணித்தான். ஒருகட்டத்தில் இனிமேல் இரோமியைப் பற்றித் தன்னிடம் எதுவும் பேசக்கூடாது என்றும் சொல்லிவிட்டான்.

இரோமியிடம் விமலை ஏற்றுக்கொள்வது பற்றி ரகுமான் பேசினான். அதுமட்டுமல்ல அவளுக்காக விமலின் ஊருக்குச்சென்று அவனுடைய குடும்ப பின்னணியைக்கூட அறிந்து வந்தான். விமல் நல்ல கௌரவமான வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதையும் அவனை நம்பலாம் எனும் தன்னுடைய கருத்தையும் இரோமிக்கு எடுத்துக்கூறினான். ஆனாலும் அவள் விமலின் காதலைப் பற்றி முடிவு செய்வதற்கு தனக்கு சிறிது காலம் தேவை என்று விட்டாள். பின்னர் காலப்போக்கில் விமலின் காதலுக்கு இரோமி பச்சைக்கொடி காட்டிவிட அத்தோடு அவர்களிருவரும் இணைபிரியாக் காதலர்களாகி விட்டனர்.

விமல்-இரோமி ஜோடியை சேர்த்து வைத்ததிலே ரகுமானுக்குப் பெரும்பங்கு இருந்ததால் அவன் அவர்களிருவருக்கும் விசேடமான நண்பனாகி விட்டான். கடந்த ஆறேழு மாதமாக அவர்களது காதல் ஊடலும் கூடலுமாய் நன்றாவே  போய்க்கொண்டிருந்தது. இதற்கிடையில் விமல் உட்பட சீனியர் மாணவர்கள் தங்களது பயிற்சிக்காலம் முடிவடைந்து அவரவர் ஊரிலுள்ள பாடசாலைக்கு திரும்பிச் செல்லும் காலம் வந்தது. ஊருக்குப்  போனதும் தனது பெற்றோரிடம் பேசி இரோமியை திருமணம் புரிவதாக உறுதியளித்துவிட்டு சென்றுவிட்டான் விமல். 

இரோமியை இழந்து விட்டாலும் ஒரு சிநேகிதனாக அவளுக்கு நல்லதொரு வசதியான குடும்பத்தில் வாழ்க்கை அமையவிருப்பதை நினைத்து சந்தோசமாகவே இருந்தான் ரகுமான். இரோமியை நேசிக்கும் வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும் அவனைப் போலவே மகிழ்சிச்சிதான்;. ஆனால் ரகுமானுடைய விடயம் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதால் ஹபீல் மட்டும் இன்னும் அவனை ஒரு முட்டாள் என்று திட்டிக்கொண்டேயிருக்கின்றான். இரோமியை ரகுமான் விட்டுக் கொடுத்ததிலே அவ்வளவு வருத்தம் அவனுக்கு.






'பெனிதெனிய ஹந்திய பகிண்ட!'

கண்டக்டரின் குரல்கேட்டு எழுந்து அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்கினான் ரகுமான்.  அவன் மட்டுமே ஒற்றை ஆளாக இறங்கியதால் பஸ் கடந்து சென்றதும் அந்த இடமே வெறிச்சோடிவிட்டது. சந்தியில் ஓரமாக பழைய பஸ்வண்டிகள் சில நிறுத்தப்பட்டிருந்தன. வீதியில் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை. கடைகள் எல்லாம் மூடியிருக்க தெருவிளக்குகள் அழுதுவடிந்து கொண்டிருந்தன. அந்தப் பிரதேசம் முழுவதையும்  புகைமூட்டம்போல பனிபடர்ந்திருந்தது.

இரவுநேரப் பயணிகள் ரயில்வண்டி ஒன்று நீளமாய் கூவியபடி கடந்து சென்றது. குளிருக்கு இதமாக சுருண்டு படுத்திருந்த தெருநாய்கள் கண்களைப் பாதி திறந்து ஒருதடவை லேசாக உறுமிவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தன. குளிரில் கைவிரல்கள் விறைப்பது போலிருக்கவே கைகளிரண்டையும் காற்சட்டைப் பைகளுக்குள் நுழைத்துக்கொண்டு நடந்தான். லக்கி ஐயாவின் சில்லறைக்கடையைத் தாண்டியதும் எங்கள் ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தின் பிரதான வாயில் காவற்கூட டியூப்லைட் வெளிச்சம் தெரிந்தது.

பிரதான வாயிலை அவன் அடைந்தபோது வீதிக்குக் குறுக்காக உயரத்தில் வெண்ணிறத் துணியாலான பேனர் ஒன்று புதிதாகக்கட்டப்பட்டு காற்றுக்கு படபடத்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டான். அதில் கறுப்பு மையால் சிங்கள மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. வாயில் கதவுகள் லேசாய்த் திறந்து கிடக்க காவற்கூடத்தினுள் இருந்த எங்கள் இரவுநேரக் காவலாளியான பெரேரா ஐயா கையில் டோர்ச் லைட்டுடன் குறட்டைவிட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய விழிப்புணர்வை நினைத்து லேசாய் சிரிப்பு வந்தாலும் நித்திரையைக் குழப்பாமல் பூனைபோல் அந்த இடத்தைத் தாண்டி உள்ளே வந்தான்.

அங்கிருந்து ஏறத்தாழ எண்பது மீற்றர் உயர குன்றின்மேல் இருக்கும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் ஆண்கள் விடுதிக்கு ஒன்றரை கிலோமீற்றர் தூரம் வரை ஆளரவமற்ற மரங்களடர்ந்த சரிவான வீதியில் ஏறிச்செல்ல வேண்டும். அதை நினைத்ததும் ரகுமானுக்கு சிறிது ஆயாசம் ஏற்பட்டது. யாராவது பேச்சுத் துணைக்கு கூட வந்திருந்தால் ஏறிச்செல்லும் களைப்புத் தெரிந்திருக்காது. விடுதியில் தங்கியிருக்கும் நாட்களில் ரகுமான் ஹபீல் மற்றும் விடுதி நண்பர்கள் பலரும் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது பெனிதெனிய சந்திக்கு வந்து செல்வதுண்டு. அப்போது அவர்கள் வெகு அநாயாசமாக இறங்கி ஏறும் தூரம்தான் இது. சக நண்பர்களுடன் சிரித்துப்பேசி அரட்டையடித்தபடி ஏறி இறங்கும்போது எதுவுமே பெரிதாகத் தோன்றுவதில்லை. இப்படி யாருமே இல்லாத நேரத்தில் தனியாக நடக்கும்போதுதான் தூரமே தெரிகின்றது.

வழியெல்லாம் ஒரே இருட்டாக இருந்தது. மேலே உயரத்தில் இருக்கும் வாசிகசாலையின் அருகேயிருந்த விளக்குக் கம்பத்தில் ஒரு மெர்க்கூரி விளக்கு மட்டும் போனால் போகிறது என்று சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. அதன் மெல்லிய வெளிச்சம் போதாது என்றாலும் மாதக்கணக்காய் பழகிய பாதை என்பதால் தடுமாற்றமின்றி நடந்தான். வழமையாக ஊரிலிருந்து வந்தால் எப்படியும் இரவு பத்து மணிக்கு முன்பே ரகுமான் விடுதிக்கு வந்து சேர்ந்து விடுவான். ஆனால் இன்று வழமையைவிட நிறையவே பிந்திவிட்டான் போலிருக்கின்றது. நேரத்தைப் பார்த்தான் பதினொன்று இருபது.

கல்லூரி வளாகத்தினுள் தெருவிளக்குகள் அன்று ஏன் எரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது. வழியெங்கும் பட்டர்ப்ரூட் பூக்களின் மெல்லிய வாசனை காற்றில் மிதந்துவர மேல்நோக்கிச் செல்லும் சரிவான பாதையில் மெதுவாக நடந்து தொலைக்கல்வி நிலையச்சுற்றுவட்டத்தை அடைந்தான். அதைத் தாண்டி பெண்கள் விடுதிப்பக்கமாக வளைந்து செல்லும் பாதையில் திரும்பியபோது பாதையோரத்திலே இருக்கும் மாமரத்தின் கீழ் சிமென்ட் பெஞ்சில் யாரோ தனியாக இருளில் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.
'யார் இந்த நேரத்தில்' என்று யோசித்தவாறு நின்று உற்றுப்பார்த்தான்.


மாமரத்தின் பின்னால் இருந்த விரிவுரைக் கட்டிடத்தினுள் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தினால் அந்த உருவத்தின் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆயினும் உடலின் வெளிச்ச விளிம்புகளின் வளைவுகளிலிருந்து அந்த உருவம் ஒரு பெண் என்பது மட்டும் தெரிந்தது. அவள் ஆசிரிய கலாசாலையின் சீருடையான வெண்ணிற சேலை அணிந்திருந்தாள்.




'ஹேய், ஹு ஈஸ் தட்?' என்றான் சற்று அதட்டலாக. ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. 'ஹு ஆர் யூ...?  வட் ஆர் யு டூயிங் ஹியர்..?'  என்று கேட்டவாறு தன்னுடைய பேக்கினுள் வைத்திருந்த டோர்ச் லைட்டை தேடினான். ஆனால் அது அவசரத்திற்கு கையில் அகப்படவில்லை. அதற்குள் அவள் சட்டென்று எழுந்து நின்றாள். ஒரு காலை லேசாய் விந்தியவாறு அவனை நோக்கி மெல்ல இரண்டடி நடந்து வந்தாள்.

'ஓ! அப்படியானால் இது.. இது இரோமி அல்லவா?'

'ஹேய் இரோமி, இஸ் தட் யூ..!?' என்று சந்தோசம் கலந்த ஆச்சரியத்தில் கூவினான் ரகு.

 'இரோமி வாட் எ ஸர்ப்பரைஸ்! வெயிட்.. வெயிட் ஐ'ல் கம் தெயா!' என்றவாறு அவளை நெருங்கினான். அவன் வருவது தெரிந்ததும் மீண்டும் சீமெந்து பெஞ்சில் போய் மௌனமாக அமர்ந்து விட்டாள் அவள். அவன் தன்னுடைய ஷோல்டர் பேக்கை கீழே இறக்கி வைத்துவிட்டு அவளருகே அமர்ந்தான்.


அவள் வழமையாக பயன்படுத்தும் மெல்லிய மல்லிகைப்பூ சென்ட் வாசனை கமழ்ந்தது. அவள் வழமைக்கு மாறாக எதுவுமே பேசாது தலையைக் குனிந்தபடி இருப்பது ஏதோ தப்பு என்று உள்ளுரத் தோன்றியது அவனுக்கு.

 'இரோமி ஆ யூ ஓல்ரைட்?'

அவள் பேசவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அவளிடமிருந்து மெல்லிதான விசும்பல் ஒலி எழுந்தது. உடனே அவன் அதிர்ந்து, 'ஏய், இரேமி வாட்ஸ் தட்.. வாட் ஹெப்பண்ட்?' என்று அவளின் தோளைத் தொட்டு லேசாய் உலுக்கினான். அவளின் உடல் ஐஸ்கட்டிபோல சில்லென்று இருந்தது.

'வாட்ஸ் ரோங் வித் யூ இரோமி?'

'நத்திங்.. ரகு!' என்று  சிறிது நிமிர்ந்தவளின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சட்டென அவன் எதிர்பாராத விதமாக அவனுடைய மடிமீது முகம் புதைத்து விம்மி விம்மி அழத்தொடங்கினாள். இப்படிக் குமுறி அழும் அளவுக்கு இரோமிக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். அதேவேளை இப்படித் தனியாக இருட்டிலே அவர்கள் இருவரும் இருப்பதை யாராவது பார்த்தால் என்னாகும் என்ற பயமும் வந்துவிட்டது அவனுக்கு.

விமலும் இரோமியும் சிறந்த காதல் ஜோடியாக உலாவினாலும் அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சிறிய ஊடல்கள் ஏற்படுவதுண்டு. காதலர்களுக்கிடையில் அதெல்லாம் சகஜம்தானே. விமல் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான். ஆனால் இரோமி அப்படியல்ல. தாமரை மலர் போன்ற அழகிய முகம் வாடிப்போய் இருப்பதை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அப்படியான வேளையில் அவளுடைய தோழிகளால் கூட அவளைச் சாந்தப்படுத்த முடிவதில்லை.

ஆம், அவ்வாறான வேளைகளிலே திடீரென ரகுமானினிடம் வந்து, 'ரகு, ஷேல் வீ கோ சம்வெயார் அவ்ட்டிங், கம்' என்று அவனை உரிமையோடு அழைப்பாள். இருவரும் பேராதனை ரயில் நிலையம் அல்லது பொறியியல்பீட பாலம் வரையில் நடந்து செல்வதுண்டு. போகும் வழியில் தன் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் இங்லீஷில் படபடவென்று உரிமையோடு கொட்டித் தீர்ப்பாள் இரோமி. திரும்பி வரும் வழியில் ரகுமான்; இரோமிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வருவான். அதன்பிறகு இரண்டொரு நாட்களில் காதலர்கள் இருவரும் மீண்டும் ராசியாகி விடுவார்கள். அப்போது இருவரையும் ரகுமான்; கேலி செய்து கலாய்ப்பான். இவையெல்லாம் வழமையாக நடைபெறும் காட்சிகள்தான்.

அப்படி ஒன்றுதான் இதுவும் என்றுதான் ரகுமான் முதலில் நினைத்தான்.  ஆனால் அவள் இப்படி நடுநிசியில் தனியே இருட்டில் வந்து இருந்ததையும் ஓவென்று குமுறி அழுவதையும் பார்த்தால் இது வெறும் ஊடல் மட்டுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது.  அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தான். விரல்களால் அவளது தலையை வாஞ்சையுடன் கோதிவிட்டான். அவளது உடலைப்போலவே தலையும் சில்லென்று இருந்தது. ஏன் இரோமி இப்படி ஐஸ்கட்டிபோல குளிர்ந்துபோய் இருக்கிறாள் என்பதுதான் அவனுக்கு புரியவில்லை. ஒருவேளை வெகுநேரம் இந்த பனிக்குளிரில் இருந்ததினால் இருக்குமா.. அதற்காக இப்படியா குளிர்வது?

'இரோமி! ப்ளீஸ் கொன்ட்ரோல் யுவர்ஸெல்ப்ஃயா!'


என்று அவளைத் தொட்டு உலுக்கி நிமிர்த்தினான். தனது கைக்குட்டையால் இரோமியின் கண்களைத் துடைத்து விட்டான் ரகுமான். அந்த நடுநிசி இருட்டிலும் பால்நிலவாய் ஜொலித்த அவளது அழகான முகம் அவனை ஒரு கணம் தடுமாறச் செய்தது. 'படுபாவி விமல். இப்படி ஒரு அழகு தேவதையை அழவிடுகிறானே.. ரசனையில்லாத மடையன்' என்று நினைத்துக் கொண்டான்.

'இரோமி..ப்ளீஸ் ஸ்டொப் க்றையிங்! லிசன் டூ மீ ஓகே! நவ் ப்ளீஸ் டெல் மீ.. வாட் மேட் யூ வீப்பிங் லைக் திஸ் மச்?'

' ரகு, டோண்ட் யூ நோ? தட் ராஸ்கல் மெறீட் ஹிஸ் கஸின் லாஸ்ட் வீக்.. என்ட் லெப்ஃட்  ஒஸ்ட்ரேலியா' என்று படபடவென்று சொல்லிவிட்டு அவனுடைய தோளிலே சாய்ந்து மறுபடியும் அழுதாள். ரகுமான் ஒருகணம் அதிர்ந்து போனான்.


'ஹு..? யுவர் விமல்?  ஐ டோன்ட் பிலீவ் திஸ்.. ஆ யூ ஷ்யுர்?'என்று கேட்டான் நம்ப முடியாமல்.

'யெஸ் ரகு! ஹீஸ் எ கவார்ட். ஹீ நீட்ஸ்; எ ப்யூட்டிஃபுல் கேள் சச் மீ ஒன்லி டு என்ஜோய் நொட் டூ மெரி..'

'அடப்பாவி விமல் உனக்கு எப்பிடிடா இப்படி ஒரு துரோகம் செய்ய மனம் வந்தது. இவளை ஏமாற்றிவிட்டு ஊருக்குப் போய் இன்னொருத்தியை கட்டுவதற்காகவா இத்தனை நாளும் சுற்றித் திரிந்தாய்? சே! இந்தப் பூ மாதிரிப் பெண்ணைப் போய் ஏமாற்ற உனக்கு எப்படிடா.. ராஸ்கல்.' அவனுக்கு அவனைத் தேடிப்போய் கொல்லும் கோபம் உண்டானது. முதலில் இவளை எப்படித் தேற்றுவது என்றே புரியவில்லை.

அவள் வெகுநேரம் அழுதபடியே இருந்தாள். சிறிதுநேரம் அழுவதும் பின்பு அப்படியே அவன் மார்பில் சாய்ந்து தூங்குவதுமாக இருந்தாள். பின்பு சட்டென நிமிர்ந்து, 'தட் ப்ளடி சீட் ஸ்பொய்ல் மை நேம் என்ட் ப்யூச்சர்! டெல் மீ ரகு, ஹியர் ஆப்டர் ஹு'ல் மெரி மீ..?' என்றாள். பின்பு திடீரென, 'வில் யூ மெரி மீ ரகு?' என்றெல்லாம் அசட்டுத்தனமாய் கேட்டு பித்துப்பிடித்தவள் போல அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போல தேம்பி அழுது கொண்டிருந்தாள் இரோமி.

அவளது நிலைமையை நினைத்து ரகுமானுக்கு பெரும் கவலையாக இருந்தது. ஏமாற்றத்தில் கலங்கிப் போயிருக்கும் அவளுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று அவளது நெருக்கத்தை அனுமதித்தான். ஆனால் அந்த அழகு தேவதையின் நெருக்கம் அவனை மீண்டும் திணறடித்தது. சோகத்தில் தன்னைக் கட்டியணைத்தபடி இருக்கும் அவளை மெல்ல விலக்கி லேடீஸ் ஹொஸ்டலுக்கு கூட்டிச்சென்று விடலாம் என்று நினைத்தாலும் தன்;னையறியாமலே அவனுடைய கைகள் அவளை மார்போடு ஆரத்தழுவிக்கொண்டன. அவனுடைய உடல் சுயகட்டுப்பாட்டை மீறி இயங்குவது போல உணர்ந்தான். நடப்பதெல்லாம் கனவு போலவும் நிஜம் போலவும் குழப்பமாக இருந்தது அவனுக்கு. கண்ணீர் வழிந்தோடிய அவளது கன்னங்களை தன் கன்னத்தோடு இழைத்துக் கொண்டான்.

'ரகு.. டோண்ட் லெற் மீ எலோன்..ப்ளீஸ்' என்று அவள் மயக்கத்தில் முணுமுணுத்தாள். 'டோண்ட் சீட் மீ ரகு.. ஐ கான்ற் பெயர் அப்.. ரகு ப்ளீஸ்..' என்று அவள் கண்களைத் திறக்காமலே கிசுகிசுத்தாள். அவளது இதழ்கள் அவன் முகத்தில் அழுந்தின. அதற்குமேல் ரகுமானால் தாள முடியவில்லை. அவளை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு சிமென்ட் பெஞ்சில் மல்லாந்து அவளது மெல்லிய அதரங்களில் முத்தமிட்டு...






'மல்லீ..! மல்லீ!'

என்று யாரோ கிணற்றுக்குரலில் ரகுமானைக் கூப்பிட்டார்கள். கண்விழித்துப் பார்த்தபோது வானம் லேசாய் வெளுத்து பறவைகளின் சங்கீதம் அந்த இடத்தையே நிறைத்திருக்க காவலாளி பெரேரா ஐயாவின் முகம் வெகுஅருகிலே தலைகீழாய்த் தெரிந்தது.

 'ரகுமான் மல்லி, எய் மெதன நிதாகன இன்னே.. ஹொஸ்டல்ட யன்னெத்த?'

முதலில் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பொழுது மெல்லப் புலர்ந்து கொண்டிருக்க தான் சிமெண்ட் பெஞ்சில் மல்லாந்து படுத்திருப்பது புரிந்தது. பிறகுதான் சட்டென ஞாபகம் வந்து எழுந்து உட்கார்ந்தான். பனிக்குளிரில் பற்கள் கிட்டியது.

'இரோமி எங்கே..?' என்று சுற்றிலும் தேடினான். அவளைக் காணவில்லை. அவளது மல்லிகைப்பூ சென்ட் வாசைன இன்னும் அவனில் மீதமிருந்தது. 'எப்போது நான் தூங்கினேன்.. இரோமி எப்போது ஹொஸ்டலுக்குப் போனாள்?' என்று யோசித்ததில் எல்லாமே ஒரே குழப்பமாகி தலையைச்சுற்றுவது போலிருக்கவே தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

'மெனாவாத மல்லி பலன்னே.. சனீப நெத்த? ஆங் மென்ன ஒயாகே பேக்.. கவத கமே இன்தலா ஆவே'


என்று கீழே விழுந்து கிடந்த அவனுடைய ட்ரவலிங் பேக்கை எடுத்து தூசுதட்டித் தந்தவர் பிரதான வாயிலில் வாகனமொன்று ஹோன் அடிக்கவே ரகுமானை ஒருமாதிரி பார்த்துவிட்டு இறங்கிப்போய் விட்டார். அவர் சென்றதும் மெல்ல எழுந்து நின்று கலைந்திருந்த உடைகளைச் சரி செய்து கொண்டான். இரோமியின் மல்லிகைப்பூ வாசமும் கூடவே வந்தது. இருள்பிரியாத மரங்களடர்ந்த சாலையில் விடுதியை நோக்கி தட்டுத்தடுமாறி நடக்கத் தொடங்கினேன். பசி உயிரை வாட்ட இரவு நடந்ததெல்லாம் ஒரு கனவுபோல தெளிவில்லாமல் மனதைக் குழப்பிக் கொண்டிருந்தது.

'இரோமி ஏன் என்னை எழுப்பவில்லை? ஓ! நான் களைத்துப்போய் தூங்கியதைப் பார்த்து எழுப்ப மனமின்றித்தான் சொல்லாமலே லேடீஸ் ஹொஸ்டலுக்குப் போயிருப்பாள் போல. நல்லவேளை, நைட்வோட்சர் பெரேரா ஐயா வர முதலே போய்விட்டாள்.. இல்லையென்றால் இரண்டுபேரும் அநியாயத்துக்கு மாட்டியிருப்போம்' என்று யோசித்தவாறு லேடீஸ் ஹொஸ்டலை தாண்டி நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்போது பின்னால் ஒரு முச்சக்கர வண்டியொன்று இரைந்து கொண்டு வந்து அவனருகிலே நின்றது. 'டேய் ரகுமான், என்னடா நீ போன கிழமை ஒருவருக்கிட்டயும் சொல்லாம திடீரென்டு ஊருக்குப் போயிட்ட? ஊர்லருந்து இப்பதான் வாறியா?' என்றவாறு இறங்கினான் ஹபீல்.

'அதுசரி, நீ எங்கருந்துடா விடியக்காலையில வாறா? இப்படி டைம்ல வரமாட்டியே'

'இல்ல மச்சான் ஊர்ல இருந்து நேத்து கொழும்புக்கு ஒரு வேலையா வந்தண்டா.. அதை முடிச்சிட்டு அப்பிடியே இஞ்ச ட்ரெயின்லேறி வந்தேன். அதுசரி, ஊருக்குப் போனா வழமையா சனிக்கிழமை இரவுதான வாறா நீ..? இதென்ன இண்டைக்கு இந்த நேரத்தில வாறாய்.. ஓ! நைட் பஸ்ல வந்தியா?'  என்று ஆட்டோவுக்கு காசைக்கொடுத்து அனுப்பியவாறு கேட்டான்.

 'ம்.. அதெல்லாம் இருக்கட்டும்டா ஹபீல், அது என்னடா அவன் ராஸ்கல் விமல் இப்பிடிச் செய்திட்டான். பைத்தியமா அவனுக்கு?'

'பாத்தியாடா..? நான் சொன்னதை கேட்காம பெரிசா விமலுக்கு தியாகம் பண்ணீயே.. இதுக்குத்தாண்டா நான் அப்பவே சொன்னேன்.. அவன் விமல் ஆள் சரியில்லடா? அவன் நம்ம இரோமிக்கு செய்த பாவம் அவனைச் சும்மா விடாதுடா..'

' ஓம்டா.. நாந்தான்டா பிழை செய்திட்டேன்.. பாவம் மச்சான் இரோமி. இனி என்னடா செய்வாள்? அதால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன்டா.. இன்டைக்கே இரோமிக்கிட்ட பேசி இனி நானே அவளை..' என்று  ரகுமான் கூறி முடிக்கவில்லை.

உடனே நெருப்பை மிதித்து போல சட்டென நின்று ரகுமானைத் திரும்பிப் பார்த்தான் ஹபீல்.

'டேய்! என்னடா பேசுறா.. ஒனக்கு இரோமிட விசயமே தெரியாதா?'

'என்னடா விசயம்?' என்றான் ரகுமான் புரியாமல்.

 'டேய், நம்ம இரோமி போன புதன் கிழமை நஞ்சு குடிச்சிட்டாள்றா..! நம்ம ட்ரெயினிங் கொலீஜே ஆஸ்பத்திரிலதாண்டா கிடந்திச்சு.. உனக்குத் தெரியாதா..?'

'என்னடா சொல்றா.. நீ?  என்றான் ரகுமான் பதறிப்போய்.

உடனே ஹபீல் சட்டென்று ரகுமானின் கையைப் பிடித்து அருகிலிருந்த லேடீஸ் ஹொஸ்டலை நோக்கி இழுத்துக்கொண்டு சென்றான்.

'எங்கடா கூட்டிப்போற..?'

'இதை வாசிச்சுப் பார்றா!' என்று அவன் காண்பித்த இடத்தில் இரவு அவன் பிரதான வாயிலில் பார்த்தது போன்ற ஒரு பேனர் கட்டப்பட்டு இருக்க அதிலே 'கடந்த வாரம் அகால மரணமடைந்த எங்கள் இனிய நண்பி இரோமி பிரியதர்ஷினிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்! - 1999/2000  கல்வியாண்டு மாணவ மாணவிகள்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.


- 'மூதூர்' மொகமட் ராபி


 

No comments:

Post a Comment