இன்று நூல் வெளியீடு செய்த பெண்மணி பிரான்சில் இருந்து குடும்பத்தோடு வந்திருந்தார், கணவன் மற்றும் குழ்ந்தைகள் சகிதமாக. லண்டனில் ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து விழாவை நடத்தினார்கள். சுமார் 30 பேர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருமே விழா நாயகிக்கு அல்லது அவரது கணவருக்கு தெரிந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரு கெட்-டூகதர் மாதிரித்தான் இருந்தது.
மேடையில் படைப்பாளி மற்றும் விழா தலைவர் தவிர வேறு இருவர் பேசினார்கள். ஒருவர் கவிதாயினியின் நற்பன்புகள் குறித்துப் பேசினார். இன்னொருவர் இளைய தலைமுறை பெண் கவிஞர்களின் பெயர்களை பட்டியல் போட்டுப் பேசினார். அவரது வரிசையில் 38 வரை எண்ணினேன். அதற்கு மேல் போரடித்து விட்டது. எனினும் டூரிஸ்ட் இலக்கியவாதி என சுப்பிரமணியபுர மகாகவிஞனால் விளிக்கப்பட்ட கவிதாயினின் பெயர் விடுபட்டதை, பெண் கவிஞர்களை பட்டியல் போடுவது கடல் நீரை கையில் அள்ளுவது போல இயலாத காரியம் என்ற உண்மையில் சாட்சியமாகவே கருதினேன்.
ஆயிரம் விசிட்டிங் கார்டு அடிக்க நானூறு ரூபாய் ஆகிறதாம். நானூறு பிரதிகள் கவிதைத் தொகுப்பு போட ஐயாயிரம். பிறகென்ன? நானும் சென்னைக்குப போனவுடனே ஒரு கவிதைத் தொகுப்பு போட முடிவு செய்திருக்கிறேன். சென்னையில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பி 60 பக்க கவிதைத் தொகுப்பு அறுபது ரூபாய் எனப் போட்டிருந்தார்கள்.
பேச்சாளர்கள் பேசி முடித்ததும் விழாத் தலைவர் பேசினார். இன்னார் வெளியிட இன்னார் பெற்றுக் கொள்வார் என அறிவித்தார்.
இன்னும் சில பெயர்களை அவர் அறிவித்தார். அவர்கள் எல்லாம் வந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துச் சென்றனர். கூடவே 5 பவுண்ட், 10 பவுண்ட் என பணமும் கொடுத்துப் போனார்கள். அறுபது ருபாய் புக்கை அறுநூறு கொடுத்து வாங்குமாறு வலியுறுத்தப்படுவது புதுமையாக இருந்தது. சற்று நேரம கழித்த பிறகுதான் உறைத்தது. நாளைக்கு இவர்கள் கவிதைத் தொகுப்பு வெளியிட்டால் இந்தக் கவிதாயினி வந்து பணம் கொடுப்பார். என் வீட்டுக் கல்யாணத்தில் நீ மொய் வைத்தால் உன் வீட்டுக் கல்யாணத்துக்கு நான் அதைத் திருப்பிச் செய்வேன்.
வெளியீட்டு நிகழ்வு முடிந்து சமோசாவும், சாண்ட்விச்சும், தேநீரும் தந்தார்கள். விழாவின் இந்தப் பகுதி எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இலக்கியக் கூட்டம் ஒன்று சர்ச்சை இல்லாமல் முடிவது பிடிக்கவில்லை. கூடவே புத்தகத்தை வெளியிடுகிறேன் என்று சொல்லி அதற்குக் காசு வாங்கும் லண்டன் பழக்கமும் பிடிக்கவில்லை. இரண்டாவது கப் தேநீர் முக்கால்வாசி முடித்தபோது 'கொண்டு போய் வாசியுங்கண்ணா ' என்று கவிதாயினி ஒரு பிரதியை சும்மா தந்தார். பிடிக்காததெல்லாம் இப்போது பிடித்தது.
ஒரு வழியாக கூட்டம் கலைய இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. சின்னதாக பஸ் பிடித்து விம்பிள்டன் போனால் போதும். அங்கிருந்து ஒரே ரயில். நல்ல வேளையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த கனவான் ஒருவர் தன்னுடைய காரில் என்னை விம்பிள்டனில் டிராப் செய்தார். நாளைக்கு இங்குதான் ரோஜர் ஃ பெடரரும், ஆண்டி முர்ரேயும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக மோதப் போகிறார்கள் என்பதற்கான சுவடுகள் அதிகமில்லை.
ஆறு நிமிடத்தில் கிளம்பிய அப்மினிஸ்டர் செல்லும் ரயில் காலியாகவே இருந்தது. நான்கைந்து ஸ்டேஷன்கள் கடக்கையில் சில பேர் சேர்ந்திருந்தார்கள். இரண்டு பேர் அமரும் இருக்கைகள் எதிரெதிரே இருந்தன. பட்னி ஃ பிரிட்ஜில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆங்கிலேயர் ஏறி எனக்கு எதிரே அமர்ந்து கொண்டார். அடுத்த ஸ்டேஷனில் ஒரு ஜோடி ஏறியது. எனக்கு அடுத்திருந்த இருக்கையில் ஆடவனும், எதிரே முதியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் அந்தப் பெண்ணும் அமர்ந்து கொண்டனர். பெட்டியின் இதர இருக்கைகள் மனிதர்களாலும், காற்று மது வாடையிலும் ஓரளவு நிரம்பியிருந்தது.
ரயில் சவுத்கேன்சிங்க்டனை அடைந்த போது நான் கவிதைத் தொகுப்பைத் திறந்து வைத்திருந்தேன். யெளவனம் கூடிய மயிலாடும் தோப்பில் காகம் ஒன்று சட்டையில் எச்சம் கழிவது தொடர்பான பின்நவீனத்துவ கவிதையை வாசிக்கையில் எனது தோளை யாரோ தொடுவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன், அவனருகில் அதே வயதுள்ள அவனை விடச் சற்று பருமனான பெண். இருவரிடமும் இருந்து மது நெடி வீசியது.
"வாட் ஆர் யு ரீடிங்?" என்றான்.
கிராமத்துப் பள்ளியிலிருந்து வந்த முதலாமாண்டு மாணவனை சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ராகிங் செய்வது போன்ற தொனியில் இருந்தது அவன் கேள்வி. அவனை சட்டை செய்யாமல் மறுபடியும் திரும்பி கவிதையில் லயிக்க முயன்றேன்.
மறுபடியும் தோளைப் பிடித்து உலுக்கி, "வாட் ஆர் யு ரீடிங் மேன்?" எனக் கேட்டான்.
கிட்டத்தட்ட 15 பேர் என்னையே கவனித்தார்கள். மயிராண்டி. மூஞ்சி மேலே குத்த வேண்டும் போலிருந்தது. ஆனாலும் கருமம் எதற்கு வம்பென்று கருதி, "இட்ஸ் எ ஸ்டோரி" என்று சொல்லி விட்டு மறுபடியும் வாசிக்கத் தொடர்ந்தேன்.
இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் கேள்வி கேட்டான், "ஹவ் டூ யு சே ஃபக் ஆப் இன் யுவர் லேங்குவேஜ்?". இப்போது தோளைத் தொடவில்லை.
கோபமும், அவமானமும், வெறுப்பும் ஒருசேர தலைக்கேறியது. திரும்பி ஒரு முறை முறைத்து விட்டுத் திரும்பவும் புத்தகத்தில் பார்வையைச் செலுத்தினேன். இப்போது கவிதை படிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் வேறு எதையும், யாரையும் நோக்கும் விருப்பம் இல்லை. மறுபடியும் பேசிக்கொண்டே வந்தான்.
"ஐ ஆஸ்கிடு ஹவ் டூ யு சே ஃபக் ஆஃப் இன் யுவர் லேங்குவேஜ்"
எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆடவன் மந்தகாசப் புன்னகை கொண்டிருந்தான். எதிரே இருந்த பெரியவர் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார்.
ஐம்புலன்களில், நேராகப் பார்த்திடாத கண்ணைத் தவிர ஏனைய பிற புலன்களைக் கூர்மையாக்கிக்கொண்டேன். பின்னாலிருந்து என்னைச் சீண்டுபவனின் காதலி அவனது காதலி எதோ முனுமுனுப்பது கேட்டது. 'ரைட்' என்ற வார்த்தை மட்டும் எனக்குக் கேட்டது.
"ஹே யு ரீட் ஃபுரம் ரைட் டு லெப்ட்?"
இப்போது எனக்குப் புரிந்து விட்டது, போதையில் இருப்பவனை அவள்தான் உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறாள் என்று. மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். இல்லையெனப் பதில் சொல்லி விட்டு அந்தக் கவிதாயினி கூட தனது நூலை வாசித்திராத அளவுக்கு அதை ஆராய்ந்து கொண்டிருந்தேன். எதிரே இருந்த பெரியவர் கவலை தோய்ந்த முகத்தோடு என்னை நோக்கினார்.
அவன் மீண்டும் என்னைக் கேட்டான். இப்போது வேறு கேள்வி.
"ஹவ் டு யு சே ஐ லவ் யு இன் யுவர் லேங்குவேஜ்?"
"உச்சரிக்கச் சிரமாயிருக்கும். பரவாயில்லையா?" என்றேன்.
"என் நாக்கு எப்படிச் சுழலும் என்று இவளைக் கேள். தெரியும்"
அவள் சிரித்துக்கொண்டாள்.
"டெல் மீ. ஹவ் டு யு சே ஐ லவ் யு இன் யுவர் லேங்குவேஜ்?"
"கண்டாரொலி முண்டை"
"தேங்க் யூ" என்று அவன் சொல்லவும் "நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் எம்பெங்க்மென்ட்" என அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் இறங்க ஆயத்தமாகையில் அவள் தனது கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தாள். அவன் குடித்திருந்த ஒட்காவின் வாசத்தையும், அவள் குடித்திருந்த ஒயின் வாசத்தையும் அவர்களது உதடுகள் மீண்டுமொரு முறை பரிமாறும் தருவாயில் இருந்தன.
"ஐ லவ் யூ" என்றபடி அவள் மூக்கோடு மூக்கு உரச, "கேண்டரொளி முண்டே" என யாருமே தன காதலியைக் கொஞ்சாத வண்ணம் கொஞ்சி முத்தமிட்டான் அவன்.
எம்பெங்க்மேண்டில் அவர்கள் இறங்கிய கணமே எனக்கு எதிரேயிருந்த பெரியவர் சீரியசான குரலோடு பேசினார்.
"நான் மன்னிப்க் கேட்கிறேன். இத்தனை காலித்தனத்தையும் பொறுத்துக்கொண்டு நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டீர்கள்"
"பரவாயில்லை" எனும் பொது எனது புன்னகையில் திருப்தி தவழ்ந்தது.
Thanks & by : Chellamuthu Kuppusamy
No comments:
Post a Comment