Monday, April 15, 2013

"சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன்"

இடமிருந்து வலமாக: சாவி சாரின் இளைய மாப்பிள்ளை ஆடிட்டர் ராமமூர்த்தி, ராணிமைந்தன், நான் (  ரவி பிரகாஷ் ), எழுத்தாளர் சுஜாதா, சாவி, எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியன். caption


ந்தப் போட்டோ எடுக்கப்பட்ட சூழ்நிலையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன்.
சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ ஒன்று அறிவித்திருந்தேன். அதற்கு ஆயிரத்துக்கும் மேல் சிறுகதைகள் வந்தன. நான் ஒருவனே அத்தனைக் கதைகளையும் படித்து, சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒன்றாக வெளியிட்டு வந்தேன். இப்படி மொத்தம் 65 கதைகளை வெளியிட்டேன்.இந்த 65 கதைகளிலிருந்து பரிசுக்குரிய ஆறு சிறுகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவில் இருந்தவர்கள்: எழுத்தாளர்கள் சுஜாதா, சிவசங்கரி, கவியரசு வைரமுத்து, டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர் சாவி.65 கதைகளையும் படிக்க இவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பதால், அவற்றிலிருந்து மிகச் சிறப்பான 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனக்கும் மற்ற நால்வருக்கும் ஜெராக்ஸ் பிரதிகள் கொடுக்கச் சொன்னார் சாவி. அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவர்கள் அனைவரையும் சாவி இல்லத்துக்கு அழைத்து, கலந்துரையாடி, பரிசுக்குரிய ஆறு கதைகளை ஏக மனதாகத் தேர்ந்தெடுப்பது என்பது திட்டம். அதன்படி, நானே பதினைந்து மிகச் சிறப்பான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அனைவருக்கும் அவற்றின் பிரதிகளை அனுப்பி, என்றைக்கு சாவி இல்லத்தில் நடுவர் குழு ஒன்று கூடிக் கலந்துரையாடுவது என்றும் பேசி, அனைவருக்கும் வசதிப்படும் ஒரு தேதியை நிச்சயித்தேன்.அந்த நாளும் வந்தது. கவியரசு வைரமுத்து தவிர, அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராகிவிட்டனர். வைரமுத்து அந்தச் சமயம் அமெரிக்கா சென்றிருந்த காரணத்தால், தனது தீர்ப்பை – எந்தக் கதைக்கு முதல் பரிசு, எது இரண்டாம் பரிசுக்குரியது என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் கொடுத்துத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டு, தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பியிருந்தார்.அவரைத் தவிர, மற்றவர்கள் ஒரு அறையில் குழுமினோம். கலந்துரையாடல் தொடங்கியது.


ஒவ்வொரு கதையையும் ஆழமாகப் படித்து வந்திருந்தார் சிவசங்கரி. மிக ஆழமாக அலசி ஆராய்ந்து, தன் கருத்தைத் தெரிவித்தார். டாக்டர் கி.வேங்கட சுப்பிரமணியனுக்கு ரொம்பத் தாராள மனசு. ஒவ்வொரு கதையையுமே சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மாரி, தேனில் தோய்த்த பலாச்சுளை, பாலில் ஊறிய பாதாம் பருப்பு, நெய் வார்த்த சர்க்கரைப் பொங்கல், ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன் என்றெல்லாம் ஏகபோகமாக வர்ணித்து, அனைத்துமே முதல் பரிசு பெறத் தகுதியுள்ளவை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.அடுத்து, சுஜாதாவின் முறை.அவரை அபிப்ராயம் சொல்லும்படி கேட்டார் சாவி. அப்போது சுஜாதா ஒரு பிரச்னையைக் கிளப்பினார்.


சாவி அதற்குத் தகுந்த விளக்கம் சொல்லிவிட்டு, பரிசுக்குரிய கதைகள் பற்றிய சுஜாதாவின் தீர்ப்பைச் சொல்லும்படி வற்புறுத்தினார்.ஆனால், சுஜாதா மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி, “… அதன் பின்புதான் நான் என் தீர்ப்பைச் சொல்ல முடியும்” என்று சொல்ல, சாவிக்குக் கோபம் வந்துவிட்டது.


அப்படி சுஜாதா என்ன பிரச்னையைக் கிளப்பினார்?பரிசுக்குரிய சிறுகதைகளை முடிவு செய்து, பத்திரிகையில் வெளியிட அன்றைக்குத்தான் கடைசி நாள். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய நடுவர் குழு கலந்துரையாடல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. சட்டுப் புட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்து, பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினார் ஆசிரியர் சாவி.அப்போது சுஜாதா கேட்டார்… “சார்! இந்தப் பதினைஞ்சு கதைகளையும் நான் படிச்சுட்டேன். இதிலிருந்துதான் நான் பரிசுக் கதைகளைத் தேர்வு செய்யணுமா?”


“ஆமாம்! ஏன்?” – சாவி சார் புரியாமல் கேட்டார்.


“இல்லை. நான் அந்த 65 கதைகளையும் படிக்க விரும்பறேன்!” என்றார் சுஜாதா.


“ரொம்பச் சந்தோஷம். தாராளமா படிங்க! பிரசுரமான அத்தனைக் கதைகளின் கட்டிங்குகளும் இருக்கு. கொடுக்கச் சொல்றேன். நாளைக்கு அல்லது மறு நாளைக்குள்ள உங்க வீட்டுக்குக் கொடுத்தனுப்பறேன்…”


“நல்லது! எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க. அத்தனைக் கதைகளையும் படிச்சுட்டு, அப்புறம் என் தீர்ப்பைச் சொல்றேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் சுஜாதா.


“சுஜாதா! என்ன சொல்றீங்க..! இன்னிக்கு இஷ்யூ முடிக்கணும். இதுல நாங்க ரிசல்ட்டை வெளியிடணும். அடுத்த வாரத்துக்கெல்லாம் ஒத்திப் போட முடியாது!”


“ஏன்… போடலாமே? பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. முடிவு அடுத்த இதழில்னு போட்டுடுங்களேன்!” என்றார் சுஜாதா.


“இப்ப நீங்க சொல்ற இதே வாக்கியத்தை நாங்க போன இதழ்லேயே போட்டாச்சு. அதனால, தள்ளிப் போட முடியாது. அதிருக்கட்டும்… இப்பவே உங்க தீர்ப்பைச் சொல்றதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” – சாவியின் குரலில் லேசாக சலிப்பும் எரிச்சலும் கலந்திருந்ததை நான் கவனித்தேன்.


“அத்தனைக் கதைகளையும் படிச்சாதான் எது பெஸ்ட்டுனு என்னால தீர்மானிக்க முடியும்!” என்றார் சுஜாதா.


“அதுக்கு இப்போ நேரமும் இல்லை; அவசியமும் இல்லையே?!”
“நேரம் இல்லைன்னா அது உங்க பிராப்ளம், சார். ஆனா, அவசியம் இருக்கு!”


“என்ன அவசியம்?”


“நீங்க என்ன அறிவிச்சிருக்கீங்க உங்க பத்திரிகையிலே? ‘போட்டிக்கு வந்த கதைகள்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகள் வீதம் தொடர்ந்து பிரசுரம் பண்ணி, மொத்தம் 65 கதைகள் வெளியிட்டிருக்கோம். இந்த 65 கதைகளையும் நடுவர் குழு படிச்சுப் பார்த்துப் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும்’னுதானே போட்டிருக்கீங்க? அப்போ, நியாயமா பார்த்தா அந்த 65 கதைகளையும் நாங்க படிக்கணுமா, வேணாமா?” என்று லாஜிக்கான ஒரு கேள்வியைக் கேட்டார் சுஜாதா.


“ரொம்ப நியாயம் சுஜாதா! நான் ஒப்புக்கறேன். உங்களுக்கு அந்த 65 கதைகளையும் தரேன். தாராளமா படிங்க. ஆனா, இப்போ இந்த 15 கதைகள்லேருந்து உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி.
“இல்லே சார், அது சரியா வராது…” என்று தயங்கினார் சுஜாதா.“நீங்க ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை சுஜாதா?” என்று சலித்துக்கொண்டார் சாவி. “இந்தக் கதைகள்ல எதுவுமே நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? அதான் உங்க அபிப்ராயம்னா, அதையாவது சொல்லுங்க. அப்படியே போட்டுடறேன்” என்றார் எரிச்சல் கலந்த குரலில்.


“அதில்லே சார்! வாசகர்கள் அந்த 65 கதைகளையும் படிச்சிருப்பாங்க. ஒருவேளை, இந்தப் பதினைந்து கதைகளைவிடவும் அருமையான கதை அதுல இருந்தா, ‘என்ன… சுஜாதா நடுவரா இருந்துக்கிட்டு, இந்த அருமையான கதையை செலக்ட் பண்ணாம, வேற எதையோ செலக்ட் பண்ணியிருக்காரே’ன்னு என்னையில்ல தப்பா நினைப்பாங்க?” என்றார் சுஜாதா.


“ப்பூ… இவ்வளவுதானா! இப்ப ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். இந்த 65 கதைகளையும் நான்கூடப் படிச்சதில்லை. நானும் உங்களைப்போல 15 கதைகளை மட்டும்தான் படிச்சேன். இதுலேர்ந்துதான் நானும் என் முடிவைச் சொல்லப் போறேன்.அதனால கவலையே படாம, தைரியமா உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி சார்.சுஜாதாவுக்கு அப்போதும் தயக்கம். “இல்லே சார்… அது சரியா வராது…” என்று இழுத்தார்.“இதோ பாருங்க சுஜாதா! இந்தப் பதினைந்து கதைகளைவிட அருமையான கதை, மீதி உள்ள கதைகள்ல இருந்துடப் போறதேங்கிறது உங்க கவலை. எனக்குப் புரியுது. ஆனா, போட்டிக்கு வந்த அத்தனைக் கதைகளையும் படிச்சு, செலக்ட் பண்ணிப் பிரசுரிச்சவன் ரவிபிரகாஷ்தான். வேறு யாரும் படிக்கவும் இல்லை; பரிசீலிக்கவும் இல்லை. அவனேதான் இந்த 65 கதைகள்லேருந்து மிகச் சிறந்ததா 15 கதைகளை செலக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான்.
அதனால, இதைத் தாண்டி வேறு சிறப்பான கதை மத்த செட்ல இருக்காதுங்கிறதுக்கு நான் கேரண்ட்டி! நீங்க தாராளமா இதுல எது பெஸ்ட்டுன்னு தேர்ந்தெடுக்கலாம்” என்றார் சாவி.சுஜாதா அப்போதும் சமாதானமாகவில்லை. “சரி சார்! எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டயம் கொடுங்க. இந்த 65 கதைகளோட சினாப்ஸிஸை டைப் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அதை நான் விறுவிறுன்னு படிச்சுட்டு, நாளைக்கு மத்தியானத்துக்குள்ள என் முடிவை உங்களுக்குச் சொல்லிடறேன்” என்றார்.


அவ்வளவுதான்… சாவி சார் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார்.விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.


“இல்லே சுஜாதா! இது சரியா வராது. விட்டுடுங்க. ரவி! இந்தா மத்த நாலு பேரோட தீர்ப்பு. இதும்படி ரிசல்ட்டைப் போட்டுடு. கூடவே, ‘சுஜாதா இந்தச் சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க விரும்பாததால் விலகிக்கொண்டுவிட்டார்’னு ஒரு குறிப்பையும் போட்டுடு. இல்லேன்னா, இந்தத் தீர்ப்புக்கு அவரும் உடந்தைன்னு பாவம், அவருக்கு வாசகர்கள்கிட்டே கெட்ட பேர் வந்துடும்!” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, விறுவிறென்று அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று, ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டுவிட்டார் சாவி சார்.


நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில விநாடிகள் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தோம். எங்களிடையே ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.


சுஜாதா மெள்ள எழுந்து சென்று, சாவி சார் பக்கத்தில் போய் அமர்ந்தார். தணிந்த குரலில் ஏதோ பேசினார். நாங்கள் அதுவரை அறையிலேயே அமர்ந்திருந்தோம்.

“சுஜாதா கேக்குறதும் நியாயம்; சாவி சாரோட ஆதங்கமும் கரெக்ட்தான். இதுல நாம யார் பக்கம் சரின்னு எப்படிச் சொல்றது?” என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.


சற்று நேரத்தில், சாவி சார் என்னை அழைக்கும் குரல் கேட்டது. போனேன். “இந்தா ரவி, சுஜாதாவோட ஜட்ஜ்மென்ட்! அஞ்சு பேரோட ரிசல்ட்டையும் கூட்டிக் கழிச்சுப் பார். எந்த அஞ்சு கதைகள் பரிசுக்குத் தகுதி பெறுதுன்னு உடனே எனக்கு ரிசல்ட்டைச் சொல்லு பார்க்கலாம்!” என்றார் சாவி.


ஏற்கெனவே மற்ற நால்வரும் ஏக மனதாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லை. சுஜாதாவின் தீர்ப்பைப் பார்த்தேன். மற்றவர்கள் முதல் பரிசுக்குரியதாக ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த கதையையே சுஜாதாவும் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டாம், மூன்றாம் பரிசுக்கதைகள் மட்டும் சற்றே முன்பின்னாக இருந்தன. இருப்பினும், மெஜாரிட்டிபடி பரிசுகளை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.


சுமுகமாக எல்லாம் முடிந்தது. அதன்பின்னர் டின்னர். சாவியின் மூத்த புதல்வர் பாச்சா (பாலச்சந்திரன்) அவர்கள், எங்களை நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினார் (கலைஞர், சாவி இவர்களோடு நாங்கள் இருக்கும் புகைப்படத்தை எடுத்ததும் பாச்சாதான்). வரிசையில் ஓரமாக நின்றிருந்த என்னை அருகே அழைத்த சாவி,ரவி! உன் அபிமான எழுத்தாளர் சுஜாதா பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கோ! பின்னாடி ஒரு நாள் எடுத்துப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும்” என்றார். பின்பு,


சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு அத்தனை உயிர்!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென்று என் மனம் நெகிழ்ந்து, இதயம் இளகின மாதிரி ஓர் உணர்வு. சரியாக அதை வர்ணிக்கத் தெரியவில்லை.சுஜாதாவின் தீவிர வாசகன் நான் என்பது உண்மைதான். ஆனால், அவரைவிடவும் என் அபிமானத்துக்குரியவர் சந்தேகமில்லாமல் சாவி சார்தான்! எனவே, அன்றைக்கு அவரே என்னை அழைத்து, சுஜாதா பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, என் மனத்தில் உண்டான அதே உணர்வுகளை, இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், அதை உங்களுக்கு எப்படி விவரித்துச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.
சுஜாதாவை நான் முதன்முதல் நேரில் சந்தித்தது அந்த நிகழ்ச்சியின்போதுதான்!


No comments:

Post a Comment