Wednesday, April 10, 2013

சிறுகதை : பலிக்கடா!






'ப்ளங்!'
ஏதோ ஒன்றுடன் மோதியது போல சத்தம் கேட்டதிலே கண்ணை மெல்ல விழித்தேன். இருட்டிலே முதலில் எதுவுமே சரியாகத் தெரியவில்லை. இருட்டு பழகிய பின்பு திருகாணி போன்ற குமிழும் கிராமபோனில் இருக்கும் கைபிடி போல ஏதோ ஒன்றும் மங்கலாகத் தெரிந்தது.
தலையை உயர்த்திப் பார்ப்பதற்கு நினைத்தும் அதீத களைப்பு காரணமாக அது உடனே சாத்தியமில்லை என்பதால் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அப்படியே படுத்திருந்தேன்.
படுத்திருந்தவாறே அரைக்கண்ணால் நான் கிடத்தப்பட்டிருந்த இடத்தை நோட்டமிட்டேன்.

அது ஒரு தோலாலான பஞ்சு இருக்கை. அதிலே நான் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தேன். எனது பக்கவாட்டிலே சிறியதும் பெரியதுமாய் ஊலோகக்குமிழ்கள்.. திருகாணிகள்.. கண்ணாடி உபகரணங்கள் காணப்பட்டன. இலோசான இருட்டு பரவியிருந்த அந்த இடத்தில் எனது பின்புறமாக ஒரு சிறு வெளிச்சம் 'பீப்..பீப்' என்ற ஒலியுடன் விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதைத் தவிர வேறு எந்த ஒலியுமே இல்லாத நிசப்தம்தான் மிகப்புதிதாக இருந்தது எனக்கு.

அந்த ஒலியை முன்பு எங்கோ கேட்டது போலவும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வேறு சில சம்பவங்களும்  இலேசாக நினைவுக்கு வருவது போலத் தெளிவில்லாமல் உணர்ந்தேன். மீண்டும் அந்த பீப் ஒலி தருகின்ற ஞாபக இழையின் முனையைப் பற்றி முன்னேற முயன்றும் முடியாமல் தவறினேன். தலைவலியும்  சோர்வும் ஒன்று சேர மீண்டும் உறக்கத்தில் ஆழ்..ந்..தே.ன்!

மீண்டும் விழித்தபோது சற்றுத் தெம்பாக இருந்தது. தலைவலியும் நின்று
போயிருக்கவே மெல்லத் தலையை உயர்த்தினேன். கால்களுக்கிடையிலும் இடுப்புப் பகுதியிலும் தடித்த தோல் பட்டிகளால் யாரோ இருக்கையுடன் சேர்த்துப் பிணைத்து வைத்திருந்தார்கள். இரண்டு தடவைகள் எழுந்திருக்க எத்தனித்து  விட்டு முயற்சியைக் கைவிட்டேன். நான் அடைத்து வைக்கப்பட்டிருக்குமிடம் ஒரு மிகச்சிறிய பெட்டி போலவும் இருந்தது. அறை போலவும் தோன்றியது. இதற்குள் ஏன் என்னைக் கட்டி வைத்திருக்கிறார்கள்? எப்படி இதற்குள் வந்து சேர்ந்தேன்? அல்லது யார் கொண்டுவந்தார்கள்? எதுவுமே விளங்கவில்லை.

பீப்..பீப்!

கண்களை மூடிக்கொண்டு நினைத்;துப் பார்த்ததில் சில பிம்பங்கள் நிழலாடின. ஆம் கடைசியாக நான் வசித்த தெருவின் முனையில் நான் எனது நண்பிகளோடும் நண்பர்களோடும் நின்று கொண்டிருந்தபோது...திடீரென வேகமாக வந்து நின்ற வாகனமும்..அதிலிருந்து இறங்கியவர்களும் ..அந்த வாகனத்திலிருந்து இதே போல ஒலி கேட்டதும் ஞாபகம் வந்தது. அதன் பிறகு...எதுவுமே நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதே...சே!
மறுபடியும் உடலை நெளித்து  விடுவிக்க எத்தனித்தேன். முழுப்பலத்தையும் பிரயோகித்து நெம்பியதில் மந்திரத்தால் விலகியது போல சகல தளைகளும் கழன்று போயின. அந்த உற்சாகத்திலே துள்ளி எழுந்த நின்றபோது உச்சி மண்டையிலே 'ணங்' என்று  பெட்டி அறையின் மேற்புற உலோகக் கூரையில் இடித்துக் கொண்டேன். 'பாவிகள் இவ்வளவு சிறிய இடத்திலா என்னைச் சிறை வைத்திருக்கிறார்கள்?' மீண்டும் மயக்கம் வந்து விடும் போலிருக்கவே  மெல்லப்படுத்துக் கொண்டேன். ஆற்றாமைக் கோபத்தில் இரண்டு  தடவை பலமாய் சத்தமிட்டுக் கத்தினேன். ஆனால் அந்தச்சத்தம் வெளியே போகாமல் ஏனோ என் காதுகளுக்குள் மட்டுமே எதிரொலித்தது.

பீப்..பீப்..பீய்ய்...ய்ப்!

ஒலித்துக் கொண்டிருந்த பீப் ஒலியிலே திடீரென ஏதோ மாறுதல் உண்டானது போலிருந்தது. அதன் வேகம் கூடிக்கொண்டே வந்து திடீரென நின்றுபோனது. அதே கணம் நான் அடைக்கப்பட்டிருந்த பெட்டியறையின் முன்புறமிருந்து சிறிய ஒளிக்கீற்று உள்ளே வந்தது. யாரோ டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு வருகிறார்களோ... மெல்லப் பதுங்கிக் கொண்டேன். ஆனால் என்ன ஆச்சரியம்... ஒரு காலடியோசை கூடக் கேட்கவில்லை. பீப் ஒலியும் நின்று விட்டதால் மயான அமைதிதான் நிலவியது. ஒளிக்கீற்று உள்ளே வருகின்ற கண்ணாடித் துளை எனது முகத்தை முட்டிக் கொண்டிருந்ததால் அதனூடாக கண்ணை வைத்துப் பார்த்ததுதான் தாமதம்.

'ஆ! ஆ..அஹ்!'

என் கண்ணே குருடானது போலிருந்தது. என் வாழ்நாளிலே பார்த்திராத அப்படி ஒரு பிரகாசமான வெளிச்சம் அது! அந்த ஒளித் தாக்குதலில் மதியிழந்து மல்லாந்து கிடந்தேன.; வெளியே தெரிந்தது சூரிய ஒளியா அல்லது மின்விளக்கா? அந்த வெளிச்சத்தின் பிரகாசம் மெல்ல அதிகரித்துக் கொண்டே வர இப்போது  நானிருக்கும் பெட்டிச் சிறையின்  இண்டு இடுக்குகள் அனைத்தும் நன்கு புலப்படலாயிற்று. நான் மல்லாந்தபடியே வீழ்ந்து கிடந்ததில் உச்சிக்கூரையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்தச் சின்னத்தை முன்பு வேறு எங்கோ ஓரிடத்திலும் பார்த்தது போல...

ஆம்! இப்போது ஞாபகம் வர ஆரம்பித்து விட்டது. வெள்ளைநிற வாகனமொன்றிலே வந்து தெருமுனையிலே இறங்கினார்கள் என்று சொன்னேல்லவா.. அந்த வாகனத்தின் பின் கதவுகளிலே இதே சின்னம் ஒரு ஆள் உயரத்திற்கு சற்றுப் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படியானால் அதே வாகனத்திற்குள்தான் நான் அடைத்து வைத்துக் கொண்டு செல்லப்படுகின்றேனா? அவ்வாறென்றால் ஏன் வாகனச் சத்தங்களோ போக்குவரத்து ஒலிகளோ கேட்கவில்லை.
இதற்கு முன்பு கூட ஒரு தடவை நானும் எனது நண்பர்கள் சிலரும் வாகனத்திலே அடைத்துக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றோம். ஆனால் அப்போது இப்படியெல்லாம் இருக்கவில்லை. வாகனம் போகும் வழியெல்லாம் சத்தங்களைக் கேட்டுக் கொண்டுவர எங்களால் முடிந்தது. அந்த வாகனத்திலிருந்து எப்படியோ தப்பித்து வந்துவிட்டோம். புதிய இடத்திலே இறங்கிய போதும் காதிலே கேட்டு வைத்திருந்த ஒலிகளை வைத்துத்தான் மீண்டும் எனது தெருவுக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு மிகவும் கூர்மையான கேட்கும் திறனும் ஞாபக சக்தியும் உள்ளது என்று எனது நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இந்தக் கடத்தலில் மட்டும் ஏன் வெளியே இருந்து எந்த ஒலியும் கேட்கவில்லை? இது ஒன்றுதான் எனக்குச் சிறிதும் புரியவேயில்லை.

வெளியே தெரியும் ஒளி வெள்ளத்தின் பிரகாசம் மேலும் அதிகரித்து கண்ணில் தெரிந்த  எல்லாமே வெளிறிப் பால்போலாகியது. இதே போல ஒரு பிரகாசவட்ட விளக்கின் கீழ் என்னை மல்லாக்கப் படுக்க வைத்திருந்ததும் என்னைச்சுற்றி வெள்ளை நிற கோட் அணிந்தவர்கள் ஏதேதோ வயர்கள் கருவிகளையெல்லாம் உடலிலே இணைத்துக் கொண்டிருந்ததும் இப்போது எனது ஞாபக மேடையிலே அரங்கேறியது.







அப்போது அந்த மனிதர்கள்  எனக்குப் புரியாத விதமாக தங்களுக்கிடையிலே பேசிக்கொண்டார்கள். அவர்களிலே சற்று வயதானவர் போலிருந்தவர் அடிக்கடி என்னருகே வந்து எனது கண்களைப் பிதுக்கித் திறந்து டோர்ச் வெளிச்சத்தில் பரிசோதித்தார். காதிலே குழாய்களைச் செருகி நெஞ்சிலே உலோகக் குமிழால் தடவித் தடவிச் சிந்தித்தார். பிறகு திருப்தியடைந்தவராக ஏதோ ஒரு புதுப்பெயரை எனக்குச் சூட்டி அழைத்தார். அருகிலிருந்தவர்களும் சிரித்தபடி அதே பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.ஆனால் அந்தப் பெயர்... அந்தப் பெயர்தான் எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.
இதற்குள் எனது உடல் மெதுவாகச் சூடேறிக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன். வெளியே தெரிந்த பிரகாசமான ஒளி வேறு திசையிலே திரும்பி நகர்வது போலத் தோன்றியது. ஒருவேளை என்னைக் கடத்திச் செல்லும் வாகனம் எங்காவது ஒரு ரயில்வே கடவையில் அமைதியாக நிற்கின்றதோ..? அப்படியானாலும் ரயிலின் கடகடப்பு ஏன் கேட்கவில்லை. தவிர இப்படியான நிசப்தம் இதுவரை நான் அறியவில்லையே? அப்படியானால் நான் எங்குதான் இருக்கின்றேன்.


மீண்டும் எழுந்து நின்று எனது உடலை சமநிலைப் படுத்திக் கொண்டு சுற்றிலுமுள்ள பொருட்களை ஆராய்ந்தேன். அந்தச் சிறிய இடத்திற்குள்ளே நிறையக் கருவிகள் இருந்தன. சில பொருட்களைத' தடவியும் முகர்ந்தும் கூடப் பார்த்தேன். சற்றுத் தள்ளியிருந்த நீள்சதுர மணிக்கூடு போன்ற ஒன்று எனது கவனத்தை ஈர்த்தது. அதிலே வெளிர்நீலநிறப் பின்னணியிலே பச்சையாய் 2011.09.11 AD 18:23 என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இதே போன்ற இலக்கங்களை நான் முன்னர் வசித்த தெருமுனையின் சந்தியிலுள்ள ஒரு கோபுரத்திலும் அடிக்கடி பார்த்திருக்கின்றேன். அவசர மனிதர்கள் தங்கள் கைக்கடிகாரங்களையும் அந்தக் கோபுரத்தின் இலக்கங்களோடு ஒப்பிட்டுச் சரிசெய்து கொண்டு செல்வார்கள்.


என்னையும் எனது நண்பர்களையும் அந்த வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய அந்நியர்கள் அந்தக் கோபுரத்தினருகில் வைத்துத்தான் சுற்றி வளைத்தனர். நாங்கள் அகப்பட்டுக் கொண்ட போது அந்தக் கோபுரத்தின் உச்சி மீதுதான்  கடைசியாக எனது பார்வை வீழ்ந்தது. ஆ! இப்போது எனக்கு எல்லாமே தெளிவாக ஞாபகம் வந்து விட்டது.


ஆம்! தெருமுனையில் வந்து நின்ற வாகனத்திலிருந்த இறங்கியவர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நானும் எனது நண்பர்களும் நின்றிருந்த ஒரு குப்பைத்தொட்டியுடன் சேர்த்து வளைத்துக் கொண்டனர். அவர்கள் எங்களைப் பிடிக்கப்போவதை உணர்ந்ததும் அதனை எதிர்த்து பலமாகக் கத்தி எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் அந்தப் படுபாவிகள் சிறிதும் பயமின்றி எங்களை வலை வீசிப்பிடித்து வேனில் ஏற்றினர். வேனிற்குள் இருந்த வெள்ளைக் கோட் ஆசாமிகள் எங்கள் அனைவருக்கும் ஊசிமருந்து ஏற்றினர். அத்தோடு எங்கள் நினைவு தப்பி விட்டது. பிறகு நடந்தவை எதுவுமே தெளிவில்லாமல் போனது. கடைசியாக பிடிபட்டவள் நான்தான் என்பதால் கடைசியாய் வாகனத்தின் கதவு மூடப்படும் போது அந்தக் கோபுரத்தின் உச்சியிலே தெரிந்தது அப்படியே என் கண்களிலே அழியாத நினைவாய் உறைந்து விட்டது.

அது 1957.10.23 8:15

அட! இப்போது என்னைக் கடத்தியவர்கள் எனக்கு வைத்து அழைத்த பெயர் கூட ஞாபகம் வந்து விட்டது.


அந்தப் பெயர்: லைக்கா!
 
ஆனால் இப்போது நான் எங்கு இருக்கின்றேன்..எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்...என்பதுதான் தெரியவில்லை.
 
உங்களுக்காவது புரிகின்றதா?
 
 
 
-மூதூர் மொகமட்ராபி
 
Thanks: ஞாயிறு தினக்குரல் 2010.12.26)


 

No comments:

Post a Comment