Monday, February 4, 2013

கமலுக்கு ஒரு கடுதாசி!





அய்யா 'கமல்' சாமி,

வணக்கம்

தெப்படி இன்னிக்கும் பாம்பேல உக்காந்துக்கிட்டு இனியொருமுறை பிரச்சனை வந்தால் நாடுவிட்டுப் போவேனு போவேனு திரும்பச் சொல்லமுடியுது...

அய்யா, நீ 100 கோடி போட்டு சினிமா எடுக்குற மவராசன், ஒரு தடவ வியாபாரத்துல பிரச்சனை வந்தவுடனே நாடு விட்டுப் போறேனு கூட சொல்லமுடியுது. உன்னால நாடுவிட்டு நாடு என்ன, நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ கூட போலாம், பணம் இருக்குது, பாஸ்போர்ட் இருக்குது, விசா கூட ஒடனே கெடச்சுடும்....

ஆனா, கெதியத்த நாங்க எங்க பிரச்சனைக்கு ஒரு மசுரும் புடுங்க முடியலையே  சாமி!

எங்களுக்கு கரண்டு இல்ல, 10 மணி நேரம் மெசின் எதும் ஓட்டுறதுக்கில்ல, தொழில் போச்சு... மழ பெய்யல, காவிரில தண்ணி வரல, கொஞ்சம் தண்ணியிருந்தாலும் அத பாய்ச்சுறதுக்கு கரெண்ட் எப்பவாச்சும் தான் வரும்... ஊட்டவுட்டு வெளியே வரமுடியல, மூனு வருசமா தோண்டுன ரோட்ட மூடக்கூட இல்ல.

சாயப்பட்டறை வெச்சதுல நிலம் போச்சு, தண்ணி கெட்டுப்போச்சு, சாயப்பட்டறைய நிறுத்தினதுல அவங்களுக்கு தொழில் போச்சுஸ. இதோ எங்கூர்ல செத்துப்போற 10 பேர்ல 2-3 புற்றுநோய்லதான் போறாங்க!

இதுமாதிரி எங்க பிரச்சனை ஒன்னா ரெண்டா! இதுக்கெல்லாம் உங்கிட்ட தீர்வு கேட்கல. உன் பிரச்சனை எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி, எங்க பிரச்சனை உனக்கு தெரியுமானுதான் கேட்கிறேன்.

முல்லைப் பெரியாறு சண்டை வந்தப்போ, எங்கவூட்டு முக்குல பேக்கரி வெச்சிருக்கிற  சாஜூவைக் கூட எதிரி மாதிரிதான் பார்த்தோம். ஆனாப் பாரு, சிவாகாசில வெடிச்சு சாகக் கெடந்தவங்களுக்கு மம்முட்டிதான் மருந்து கொடுத்தாராம்ல. மவராசன் நீ எதாச்சும் முல்லைப் பெரியாறுக்கு பேசுனியா அல்லது சிவகாசில ஒரு சிக்கல்னு வந்தப்போ காசு பணம் கொடுத்திருக்கியானு தெரியல. சிக்கலப்போ சொல்லிக் காட்டனும் சொல்லல. ஆனா எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்குது.

காவிரி காஞ்சுகெடக்குது, கடைமடை வறண்டு கெடக்குது, ஒரு சினிமாவுக்கு 100 கோடி போட்டு ரெண்டு மடங்கு, மூனு மடங்கு எடுக்கனும்னு நினைச்சது, நேத்து சொத்துப் போய்டும்னு ரொம்ப சோகமாயிட்டியே, அதுல சல்லிப் பைசா எந்த ஏழை விவசாயி வவுத்தையும் நனைச்சதானு தெரியல சாமி!

இப்ப பார்த்தா எங்காளுங்களே உன் படத்தத் தேடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும், பாண்டிக்கும் வண்டி கட்டுறாங்க. காசு இருக்கிற மவராசனுங்க நீ வெளிநாட்ல செட்டில ஆகி அங்கே மட்டும் படம் வெளியிட்டாலும் கூட வந்து பாப்பாங்களா இருக்கும்.

உனக்கு சினிமா வியாபாரம், அந்தம்மாக்கு அரசியல் வியாபாரம். நீ அந்த அய்யா இருக்கும்போது போயி சந்திச்சிட முடியுது. இந்தம்மா இருக்கையிலும் சந்திச்சிடமுடியுது. இதாஸ இப்பக்கூட நவம்பர் மாசம் சந்திச்சுப் பேசினப்ப இந்த படம் பத்தி எதாச்சும் பேசாமையா இருந்திருப்பீங்க!

இப்ப என்னடான்னா, எங்க ஊருல கெழடு கட்டைங்க கூட அன்னிக்கு ராத்திரி 10 மணி வரைக்கும் புள்ளத்தாச்சி பிரசவத்துக்கு போனமாதிரி டிவி முன்னால ஜட்ஜய்யா என்ன சொல்வாரோனு கொசுக்கடியில உட்கார்ந்திருந்தாங்க. அடுத்த நாள் நேத்து அரசாங்கம் ஆடுன ஆட்டத்தப் பார்த்துஸ..  இதென்ன இப்படியாயிப் போச்சாமேனு எழவு வீடு கணக்கா கெடந்து உம்பிரச்சனைக்கு முக்குக்கு முக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுத் திரியறாங்க...

படம் மட்டும் வந்துட்டா ஓட்டுப் போடப் போற மாதிரி ஒரு சனம் உடாம பார்த்துடறதுனு தீர்மானமா வேற இருக்காங்க! படம் வந்துட்டா காசு கெட்டிஸ கவலை வேணாம். அதுக்காக பாவம் நஷ்டப்படனும்னெல்லாம் சொல்லல! என்ன கருமம் எங்காளுங்க எச்சுமுச்சா காசு குடுத்து டிக்கெட் வாங்குவாங்கஸ நாலு நாள் பொறுத்து பொறுமையா பார்த்தாலும் அதே சினிமா தானேனு ஏனோ புரியறதில்ல. எல்லாத்திலேயும் அவசரம்தான்!

ஒரு சினிமா வியாபாரத்துக்கு பொங்குபொங்குனு பொங்குற எங்காளுங்க, எங்களோட கரண்டு பிரச்சனைக்கு, தண்ணி பிரச்சனைக்கு ஒரு சக மனுசனா நீ எப்பவாச்சும் வாய் தொறந்தியானு யோசிக்கக் கூட நேரமில்ல சாமில. இங்கதான் டிவில என்னேரமும் இதையே பேசித் திரியறாங்களே! கரண்டு பிரச்சனைக்குப் பேசுனா கவருமெண்டு கோவிச்சுக்கும், காவிரி, முல்லைப் பெரியாறுக்குப் பேசினா கர்நாடகா, கேரளாவுல பருப்பு வேகாதுன்னு உனக்குத் தெரியாமலா இருக்கும்?

அய்யா சாமி... என்னைப் பொறுத்த வரைக்கும், நீ ஒரு கலைஞன்... நீ எதாச்சும் நடிச்சு அது திரைக்கு வந்த பொறவு புடிச்சா ரசிப்பேன், புடிக்காட்டி நல்லால்லனு சொல்வேன்... மத்தபடிக்கு நாங்களும் மனுசங்கதான், நீயும் மனுசன்தான். நாங்க இன்னும் ஒருபடி மேல, கரண்ட், தண்ணியில்லாம இன்னும் மூச்சு தம் கட்டி, மானரோசத்துக்கும் பயந்து வாழ்ந்திட்டிருக்கோம். இதுல ஊட்ட விட்டு, ஊரவிட்டு ஓட எல்லாம் எங்களுக்கு நாதி இல்லை.

பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவதுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனுல எங்கேயும் போக வக்கில்ல. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும்.

இந்தா இதுக்கும் கூட உன்னை ரொம்பப் புடிக்கிற நாலு பேரு, சரியாப் படிச்சும் படிக்காமலும் வந்து தையத்தக்கனு குதிப்பாங்க. குதிக்கிறது அவங்க சுதந்திரம். எனக்குப் பட்டதைச் சொல்றது என் சுதந்திரம்.

எனக்கும் உன் நடிப்பைப் பிடிக்கும். முடியும்போது இந்தப் படம் பார்த்தாலும் பார்ப்பேன். புடிச்சிருந்தா நல்லாருக்குனு நாலு வார்த்தை சொல்வேன்ல.. அம்புட்டுதான்ல.

இனிமேலாச்சும் உனக்கு இப்ப வஞ்சனை நடந்த மாதிரி சராசரியான எங்களுக்கும் ஏராளமான வஞ்சனைகள் நடக்குதுனு உனக்கும் புரிஞ்சா சரி. எங்காளுங்க உன்னை நல்லாருக்கனும் சாதி மதம் ரசிகர் மன்றம் கடந்து நினைச்சதுல, கொஞ்சமாச்சும் திருப்பி குடு சாமி.

- ஈரோடு கதிர்



நன்றி: மாறுதல் இணையம்

1 comment:

  1. இந்த பதிவு அருமையான பதிவுங்க . அதற்குக் காரணம் இந்த கட்டுரை பாமர மொழியில் இருப்பது தான். சொல்ல நினைத்த கருத்து நச்சென வந்து சேர்ந்ததாக நினைக்கிறேன்.

    //பிரச்சனைகளால் நாங்க வஞ்சிக்கப்படுவதுக்கு... இந்த ஊரைவிட்டு... நாட்டை விட்டுனுல எங்கேயும் போக வக்கில்ல. ஒன்னே ஒன்னுதான் உலகத்தை விட்டுத்தான் போகனும்//

    ஒரு கட்டுரையாளன் எந்த அளவுக்கு எழுத முடியுமோ அந்தளவு செய்திருக்கிறார் .

    //எனக்கும் உன் நடிப்பைப் பிடிக்கும். முடியும்போது இந்தப் படம் பார்த்தாலும் பார்ப்பேன். புடிச்சிருந்தா நல்லாருக்குனு நாலு வார்த்தை சொல்வேன்ல.. அம்புட்டுதான்ல.//

    எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் எழுதியிருக்கிறார் கதிர் . நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கதிருக்கு மட்டுமல்ல , நல்ல கட்டுரைகளைப் பகிர்ந்தளிக்கும் ஜெஸ்ஸிக்கும் .ஆம ஜெஸ்ஸி உங்களுக்கு என் நன்றி .
    நான் , சந்திரபால் .

    ReplyDelete