Sunday, July 19, 2015

சிறுகதை :







நிலவு தூங்கும் நேரம்








லகத்திலுள்ள அத்தனை ஆண்களும் அழகான பெண்களைக் கண்டதும் அசடுவழிபவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அருணகிரி - கிறீன் வீதிச் சந்தியில் என்னையும் என் ஸ்கூட்டியையும் மோதி வீழ்த்திய ரமீஸ் மெய்யதீன் போன்ற சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


மதிய உணவு இடைவேளை முடிந்து அலுவலகம் திரும்புவதற்கு திருஞானசம்பந்தர் வீதியைத்தான் நான் வழமையாக விரும்புவேன். அன்றைக்கு மட்டும் என்ன நினைத்தேனோ தெரியவில்லை அருணகிரி
வீதியைத் தேர்ந்தெடுத்தேன். ஸ்கூட்டியைக் கிளப்பி சந்தியில் திருப்பியதுதான் தாமதம். கிறீச்... கிறீச் என்று டயர் தேய்த்து ஏதோ ஒன்று என்மீது மோதுவதுபோல வந்து உரசிவிட்டுச் சென்றது. அடுத்தகணம், நீர்வற்றி மணல் காய்ந்துபோன வடிகானுக்குள் கிடந்தேன்; மேலே துண்டு வானம் தெரிந்தது. நல்லவேளையாக இடது முழங்கையில் லேசான ஒரு சிராய்ப்புத் தவிர காயமேதுமின்றித் தப்பித்தேன். என் ஸ்கூட்டி அருகிலிருந்த கிடுகுவேலிக்குள் செருகிநின்று உறுமிக்கொண்டிருந்தது. அதற்குச் சேதமில்லை என்றாலும் வாங்கிய புதிதிலேயே இப்படி ஆனது கவலையாக
இருந்தது.


நான் சுதாரித்து எழுந்துகொள்வதற்குள் ஹெல்மெட் அணிந்திருந்த யாரோ ஒருவன் ஓடிவந்து என் கைகளைப் பிடித்துத் தூக்கிவிட்டான். அந்தவேளையில் வீதியில் யாருமே இருக்கவில்லை என்றாலும் விழுந்த அவமானம் பிடுங்கித்தின்றது. எனக்கு உதவியவன்தான் என்னை இடித்திருக்கிறான் என்பதை அவனது ஆடைகளின் அலங்கோலமே காட்டிக்கொடுத்தது.


'சே.. இப்பிடித்தான் கண் மண் தெரியாம வருவீங்களா..?' என்றேன் கோபத்தோடு.

'அதுசரி, ஏன் சொல்ல மாட்டீங்க.. வலதுபக்க பெண்டுல ரோங் சைட்ல வந்தது யாரு..? ஓ! 'எல்' போர்டா நீங்க.. காயம் ஒண்ணுமில்லியே..?' என்று ஹெல்மெட்டைக் கழற்றியபடி அக்கறையோடு கேட்டான். அவன் நடுத்தர உயரத்தில் வெண்ணிற சேர்ட், டை மற்றும் கருநீல ஜீன்ஸ் அணிந்து டைகட்டி லேசான தாடியுடன் இருந்தான். அவனது கண்களில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது.

'இல்ல.. உங்களுக்கு..?'

'அதான் பாக்கிறீங்களே..!' என்று தன் எரிச்சலை அடக்கிக்கொண்டு வரவழைத்த முறுவலோடு கழுத்துக்குக் கீழே காண்பித்தான். வலது தோள்பட்டை, மார்புச்சட்டை முழுவதும் புழுதியில் தோய்ந்திருக்க அதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த சன்க்ளாஸின் ஒருபக்கம் உடைந்து ஓட்டையாக இருந்தது. கோபத்தோடு அதைக் கழற்றிக் கானுக்குள் வீசி எறிந்தான்.

'ஓ.. வெரி ஸொறி' என்றேன் நிஜமான பரிதாபத்துடன்.

'இட்ஸ் ஓகே.. எனக்கும் ஒண்ணும் இல்ல. ஆனா என் பைக்தான்..' என்று அவன் கைகாட்டிய போதுதான் பார்த்தேன். வீதியெங்கும் கண்ணாடிச் சிதறல்கள் தறுமாறாய்ப் பரந்து கிடக்க அவனுடைய பைக் வலப்புறமிருந்த மின்சாரக்கம்பத்தில் மோதி நொறுங்கிக் கிடந்தது.

'உங்களில மோதிடாம இருக்கிறதுக்கு அந்தப்பக்கம் திருப்பப்போய்த்தான் போஸ்ட்ல கொண்டு விடவேண்டியதாச்சு.. இப்ப என்ன செய்யிறது..?'

'சரி, வாங்க.. என் வீடு இங்க பக்கத்திலதான்.. முதல்ல வந்து கை காலைக் கழுவிட்டு மற்றதை யோசிப்போம்' என்று அவனை அழைத்தேன்.
அவன் சிறிது யோசித்து தயங்கினான்.

'பரவாயில்ல வாங்க.. யாரும் உங்களை ஒண்ணும் பண்ணிர மாட்டாங்க வாங்க' என்று அவனை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இப்படித்தான் நாங்கள் இருவரும் அறிமுகமானோம்.



000



நான் கொடுத்த கப் டீயை வாங்கிக் கொண்டு, 'நீங்க மட்டும் தனியாவா இருக்கிறீங்க..?' என்று கேட்டான் ரமீஸ். முகம் கை, கால் கழுவியபின் இன்னும் கம்பீரமாகத் தெரிந்தான். என் கணவரின் சேர்ட் அவனுக்கு வெகுகச்சிதமாக இருந்தது.

'இல்லியே.. உலகத்தலைவர்கள், சாமிகளெல்லாம் என்னோடதான் இருக்காங்க.. பாருங்க' என்று ஹோல் சுவரைக் காண்பித்துவிட்டு அவன் சிரிப்பதற்கு காத்திருந்தேன்.

அவன் சிரிக்கவில்லை.

'எங்க வேலை செய்யறீங்க..?' என்று கேட்டான்.

'பில்டிங் டிப்பார்ட்மெண்ட்.. எஸ்டிமேட் செக்ஷன்ல. நீங்க?'

'நான் கல்ச்சரல் மினிஸ்ட்ரில அட்மின்ல.. உங்க ஸ்கூட்டி புதுசா..?'

'ஓம், எடுத்து இப்ப த்ரீ வீக்ஸ்தான் ஆகுது. நல்லவேளை ஒண்ணும் ஆகல்ல.. பாவம் உங்கடதுதான் நொறுங்கிட்டுது. திருத்தியெடுக்க எவ்வளவு செலவாகும்..?'


'தெரியல்ல. மெக்கானிக்கிட்டதான் கேக்கணும்..'

'என்னாலதானே.. நான் அதைத் தாறேன்..' என்றபடி பேர்ஸைத் திறந்தேன்.

'பரவாயில்ல.. இப்ப வேணாம். மெக்கானிக் ஷொப்ல கொடுத்திட்டு செலவு கூடுதலாயிருந்தா மட்டும் கேட்கிறேன்..'

 'எப்படிக் கேப்பீங்க.. என்னோட நம்பர்தான் உங்களுக்கிட்ட இல்லையே?' என்று சிரித்தேன்.



'அதுதான் இந்த வீடு தெரியுந்தானே...?'

'வேற வீடு மாறிப்போயிட்டா..?' என்று நான் குறும்பாய்க் கேட்டேன்.

'அதுக்குள்ளவா மாறிடுவீங்க.. அதுசரி, உங்க ஹஸ்பண்ட் எங்க..?' என்று கேட்டான் கழுத்திலிருந்த தாலியைப் பார்த்துவிட்டு.

'அவர் கனடாவுல.. வாற ஓகஸ்ட்ல நானும் போறேன்' என்றதும் அவன் பார்வை ஹோலிலிருந்த காலண்டரில் படிந்தது.

 'ஓகே.. எதுக்கும் நம்பரை எடுத்துக்கோங்க.. எப்ப வேணும்டாலும் போன் பண்ணிட்டு வாங்க. நாய் கிடையாது. ஆனா மாமி இருக்காங்க..' என்றேன் அழுத்தமாக.

எனது நகைச்சுவை புரியாமலே விடைபெற்று சென்றான்.


000





ரண்டொரு வாரம் கழிந்து அந்த சம்பவத்தை நான் ஏறத்தாழ மறந்துவிட்ட நேரத்தில் ஒரு புதிய இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது.

'ஹலோ யாரு?' என்றேன் பைல்களைப் புரட்டியபடி.

'என்ன அதுக்குள்ள மறந்திட்டீங்களா..?' என்றது ஆண்குரல்.

'ஓ! ரமேஸ். எப்படி மறக்கேலும். முழங்கை இன்னும் வலிக்குதே.. பிறகு என்னாச்சு.. பைக் செய்திட்டீங்களா.. எவ்வளவு செலவாச்சு..?'

'என்ட பேர் ரமேஸ் இல்ல ரமீஸ். ஹெட்லைட் சிக்னல் லைட் மாற்றிருக்கு.. ஹேண்டில்பார், முன்வீல் பெண்ட் நிமிர்த்த என்று நிறைய செலவாயிட்டுது.. நானும் அரைவாசி போட்டிருக்கிறன்.. மீதியை மட்டும்'

'ஓக்கே.. ரமேஸ்.. ஓ.. ஸொறி ரமீஸ், அதுதான் நான் காசு தர்ரேன்னு சொல்லிட்டேனே'

'பரவாயில்லையா.. மிஸ்... உங்க பேர்?' என்று இழுக்கவே

'மிஸஸ் சுனீத்தா முரளிதரன். சுனீத்தா என்றே கூப்பிடுங்களேன். இன்னைக்கு ஈவ்னிங் ஸிக்ஸ்க்கு வீட்டுக்கு வாங்க. பேசுவோம்.. ஓக்கே?' என்று ஆவலோடு கேட்டேன்.

அவன் பதில் கூறாமலே வைத்துவிட்டான்.


அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் உடனடியாகக் குளித்து முடித்து வெளியில் செல்வதற்கு தயாரானேன்.


நேரம் மாலை 6:04


ரமீஸ் தேடி வருவானென்று தெரிந்தும் வேண்டுமென்றே வீட்டைப்பூட்டி ஸ்கூட்டியைக் கிளப்பினேன். சற்றுத் தள்ளியிருந்த தெருமுனையின் ஓரமாய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு என் வீட்டு வாசலை நோட்டமிட்டவாறு நின்றிருந்தேன். சிறிது நேரத்தில் யாரோ ஒருவன் தன் பைக்கில் ரமீஸை வாசலில் இறக்கிவிட்டுச் செல்வது தெரிந்தது. நான் எதிர்பார்த்தது போலவே, ரமீஸ் இறங்கியதும் பூட்டியிருந்த வீட்டின் கேற்றைப் பார்த்து அதிர்ந்து போனில் என்னை அழைத்தான்.

'ஹலோ.. மிஸஸ் சுனீத்தா, உங்க வீடு பூட்டியிருக்கே..?'

'அப்பிடியா..? நான் வேற வீடு மாறிட்டேனே.. தெரியாதா?'

'விளையாடாதீங்க.. எங்கருக்கிறீங்க சொல்லுங்க?'

'நான் ஒரு வேலையா அலஸ் தோட்டத்துக்கு வந்திருக்கிறேன். அங்க வரமுடியுமா ரமீஸ்?' என்றேன், தூரத்தில் நின்றிருக்கும் அவனைப் பார்த்தபடியே.

'ஆண்டவனே..?'

'ஏன்.. என்னாச்சு?'

'நான் பைக்ல வரல்ல..'

'அப்போ எதுக்கு கையில ஹெல்மெட்டெல்லாம் வச்சிருக்கிறீங்க?' என்று கேட்டுவிட்டேன் வாய்தவறி.


'அதுவா..? அது வந்து ஒரு ப்ரெண்ட்டோட பைக்ல.. ஆ.. கொஞ்சமிருங்க.. அது எப்பிடி உங்களுக்குத் தெரியுது? ஓஹோ.. வெளியில பூட்டிட்டு உள்ளே இருக்கிறீங்களா என்ன..?' என்று காதில் போனை வைத்துக்கொண்டே கேற்றினுடாக உற்று உற்றுப்பார்த்தான்.

'சேச்சே.. சும்மா ஒரு கெஸ்ஸிங்தான். ரமீஸ், ஒரு த்ரீவிலரைப் பிடிச்சு 'ச்சாயாப்ளு ஹோட்டல்' சந்திக்கு வாங்க.. நான் அங்க நிக்கிறேன்.. சரிசரி, ஓட்டோவுக்கு நான் காசு தர்ரேன்டாப்பா..' என்று வைத்தேன்.

அடுத்த கணம் என் ஸ்கூட்டி அலஸ்தோட்டத்திற்கு பறந்தது.


000





ங்கியடிக்கும் அலைகளின் இடைவெளிகளினூடே ஒன்றையொன்று ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன சின்னஞ்சிறு மணல் நண்டுகள்.

'ரமீஸ், இவ்வளவு விசயத்தை நான் உங்ககிட்ட மனம் விட்டுப் பேசியிருக்கிறன்.. நீங்க எதுவுமே பேசாம இருக்கிறீங்க..?'

'எனக்கு என்ன சொல்றது என்றே தெரியல்ல. உங்கட ஹஸ்பண்ட் முரளி கனடாவுக்குப் போய் செய்திருக்கிற துரோகத்தை மன்னிக்கிறதா அல்லது பிரிந்திருக்கிறதா என்றதை நீங்கதான் முழுசாத் தீர்மானிக்கணும் மிஸஸ் சுனீத்தா. இதுல நான் ஏன் அபிப்பிராயம் சொல்லணும்..? தவிர, பைக் செலவைத் தந்து என்னை அனுப்பிவிடுறதை விட்டுட்டு இதைப்போய் எனக்கிட்ட சொல்லணும்னு ஏன் நெனைச்சீங்க..'

'ஒருத்தரைப் பார்த்தாலே காரணமில்லாம ஒரு நம்பிக்கை வரும் தெரியுமா? அப்படித்தான் உங்க மேலயும் ஏனோ வந்தது..  ஒபிஸ்ல கூட வேலைசெய்யிற கேள்ஸ்களுக்கிட்ட கூட இது எதையும் நான் சொன்னதில்ல.
ஆம்பிளைகளைப் பத்தி பேசவே வேணாம். அழகான பொம்பிளைகளைக் கண்டால் போதும். உதவிக்கு வர உயிரை விடுவாங்க. தெரியுந்தானே..?'

'அப்படியெண்டா.. நானும் ஒரு ஆம்பிளைதானே?'



'அதான் சொன்னேனே.. ரமீஸ், அன்னைக்கு உங்க பெறுமதியான பைக் என்னால ஒடைஞ்சு நொறுங்கின போதும் அதைவிட்டுட்டு நீங்க ஓடிவந்து முதல்ல என்னைத்தான் தூக்கினீங்க.. தவிர, என்னைப் பார்த்து இப்ப வரைக்கும் நீங்க வழியவேயில்ல.. அது போதாதா? நான் என் ஹஸ்பண்ட் முரளிதான் உலகம் என்று வாழ்ந்திட்டிருந்தவ.. அவரே இனி எனக்கு இல்லைன்னு ஆனபிறகு இனிமேல் யாரை நம்பி என்னோட மீதி வாழ்க்கையைத் தொடருறது..?'

'உங்க சொந்த பந்தத்தில யாராவது..?'

'எனக்கு இங்க சொந்தங்கள் என்று யாருமில்ல. நான் குழந்தையிலிருந்தே பராமரிப்பு இல்லத்தில வளர்ந்தவ.. அன்னைக்கு ரோட்ல அடிபட்டுக்கிடந்த என்னை தூக்கிவிட்டது போல நீங்க நெனைச்சா வாழ்க்கையிலயும் தூக்கிவிடேலும் ரமீஸ்'


'இருந்தாலும்..  எப்பிடி சுனீத்தா ரெண்டு தடவைதான் சந்திச்ச முன்பின் தெரியாத ஒருத்தருக்கிட்ட இவ்வளவு நம்பிக்கை வைக்கிறீங்க..? எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகூட இருக்கு சுனீத்தா.. என்னோட சம்பளத்தை நம்பித்தான் என் குடும்பமே இருக்கு'

'தெரியும். உங்க வைஃப் நேர்சரி டீச்சரா இருக்கிறா. வாப்பாவுக்கு பைபாஸ் செய்ய வீட்டை பேங்க்ல அடமானம் வச்சு லோன் எடுத்திருக்கிறீங்க.. நான் எல்லாம் விசாரிச்சுட்டேன்.. ரமீஸ்..'

அவன் விக்கித்துப்போனான்.

'இதெல்லாம் எப்படி சுனீத்தா உங்களுக்கு..? சரி, இதெல்லாம் தெரிஞ்ச பிறகுமா நான் உதவியா இருக்கலாமென்டு நெனைக்கிறீங்க..?'


'நான் உங்களுக்கு வேண்டிய சகல உதவியும் செய்வேன்.. என்னை நம்புங்க.. நாளைக்கே உங்க எக்கவுண்டுக்கு ஒரு பெரிய கேஷ் எமௌண்ட் போட்டு விடுறன். அதை வச்சு எல்லாப் பிரச்சினைகளையும் முடிச்சிடுங்க ரமீஸ். யாருக்கும் சொல்ல வேணாம்.. கண் சரியாத் தெரியாத மாமியை நான் சமாளிச்சுக்கிறேன்.. என்வீட்டுல என் கூடவே இருங்க. உங்க குடும்பத்தையும் பாருங்க..' என்று கெஞ்சியவாறு நெருங்கியமர்ந்தேன். பின்பு அவனுடைய முழங்காலின்மீது தலையைச்சரித்தேன். அவன் சட்டென எழுந்து விலகிக்கொண்டான். சிறிது முன்னோக்கிச்சென்று கடலையே வெறித்தவாறு அமைதியாக நின்றிருந்தான். பலமாக வீசிய கடல்காற்று அவனுடைய கேசத்தை அலைக்கழித்தவாறிருந்தது.

எனது முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி நான் விசும்பியழுதுகொண்டிருக்க வானில் மெல்ல இருள்கவிய ஆரம்பித்தது. எவ்வளவுநேரம் அழுதேனோ தெரியவில்லை, விரல்களில் ஏதோ ஊர்வது போலிருக்கவே சட்டெனத் தலையை உயர்த்திப் பார்த்தேன். அருகிலே ரமீஸ் அமர்ந்திருந்தான். கண்ணீர்க் கன்னங்களை விரல்களால் துடைத்து என்னைத் தன் மார்பில் சரியவிட்டு அவன் தாங்கிக்கொண்டபோது...

சோபையிழந்த நிலவு தொடுவானில் முளைத்திருந்தது.


000







சிலவாரங்கள் கழிந்து ஒரு சனிக்கிழமை மாலையில் நானும் ரெமீஸும் அவனுடைய பைக்கில் பெரிய குளத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

அங்குள்ள சிறுகோயில் ஒன்றில், எனக்கு தக்க துணையொன்று கிடைக்க வேண்டி நேர்த்தி ஒன்று வைத்திருந்ததை நினைவுபடுத்தி அதை இருவருமாகச் சென்றுதான் நிறைவேற்றிவிட்டு வரவேண்டும் என்று ரமீஸுக்கு கூறியிருந்தேன். இதிலெல்லாம் அவனுக்கு நம்பிக்கை கிடையாதென்றாலும் எனக்காக கூட வருவதற்கு உடன்பட்டிருந்தான்.
சாம்பல்தீவு பாலத்தை கடந்து விஷ்ணுகோயிலைத் தாண்டியதும் எனக்கு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன்,

'ஹலோ.. சொல்லுங்க!'

'........'

'ஆமா.. பைக்லதான். சரி, நீங்க சொன்னபடிதான் எல்லாம் நடக்குது..'

'.........'

'ஓமோம் வந்திட்டிருக்கு.. நீங்க ரெடி பண்ணுங்க!' என்று விட்டு போனை அணைத்தேன். பைக் சித்தூர் இறக்கத்தை அடைந்ததும் தார் வீதியிலிருந்து க்றவல் பாதையினுள் நுழைந்தது. மஞ்சள் சூரியனின் கிரணங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்திருக்கும் வயல்களிலும் சிறுகாடுகளிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சிக்கொண்டிருக்க மேய்ச்சல் முடித்த மாடு கன்றுகள் புழுதிகிளப்பியபடி சாரிசாரியாக சென்று கொண்டிருந்தன.

'யார் சுனீ போன்ல?'

'அதுவா..? அது வந்து என்னோட ஸ்டாப்ஃ மயூரா' என்றேன்.

'ஆம்பிளையோட வொய்ஸ் மாதிரி லேசா கேட்டிச்சு..'

'அ.. ஓமோம். அவள்ற குரலே அப்படித்தான்.. நாங்க கூட ஒஃபிசுல பகிடி பண்ணுவோம்'

'சரி, சுனீத்தா இன்னும் எவ்வளவு தூரம் போகணும்.. கோயிலுக்கு..?'



'பெரியகுளக்கட்டுல ஏறி பண்ட்லேயே நேரப்போனா உயரமான பாறைக்கல்லு ஒண்ணு வரும். அதிலருந்து இறங்கி..'

'சரி, இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாந்தானே..?'

'நிச்சயமா!' என்றேன் புன்னகையுடன்.


ஒருபுறம் சரிவாக இருந்த குளக்கட்டில் பைக் ஏறியதும் நீரில் விழுந்து வந்த காற்று சில்லென்று இருவரையும் ஊடறுத்துச் சென்றது. அதுவரை இருந்த பயணக்களைப்பு நீங்கி புத்துணர்ச்சி உண்டானது. ஒருபுறம் குளமும் மறுபுறம் நெடிதுயர்ந்து கிளைபரப்பியிருந்த மருதமரங்களும் வரிசையாக நின்றிருந்தன. ஆளரவமே இல்லாத அந்த அணைக்கட்டின் கிறவல் வீதியில் அமைதியைக் குலைத்தபடி பைக் ஓடிக்கொண்டிருக்க, இன்னும் சிறிதுநேரத்தில் கல்லுக்கோயிலில் நடக்கப்போவதை நினைத்து மனம் லேசாய் வலித்தது.

 'பாவம் எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கின்றான்'

நான் அப்படியே ரமீஸின் பக்கவாட்டில் இருபுறமும் கைகோர்த்து அவன் முதுகோடு மார்புகளைச் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அதை அவனும் விரும்பியதுபோல பின்புறமாகச் சாய்ந்து என்னைக் கொஞ்சுவதுபோல அபிநயித்தான்.

சிறிது தூரம் சென்றதும், யாரோ வேண்டுமென்றே நிமிர்த்தி வைத்ததைப்போலத் தோன்றும் உயரப்பாறையொன்று குளக்கரையோரமாக நின்றிருந்தது. சூரியன் தாழிறங்கி காடுகளுக்குள் மறைவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. குளத்தினுள் சிறியதும் பெரியதுமாய் முதலைகள் ஆங்காங்கே நீர்மட்டத்திற்கு மேல் மூக்கை வைத்தபடி நீந்திக்கொண்டிருந்தன.

'சுனீத்தா, அங்க பாரு, எவ்வளவு பெரிய முதலை.. பயங்கரமாயிருக்குல்ல..?' என்று ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் என்னிடம் காட்டினான் ரமீஸ். அவனது குதூகலிப்பைப் பார்க்க பாவமாக இருந்தது எனக்கு. பேசாமல் அவனிடம் பைக்கைத் திருப்பக் கூறிப்போய்விடுவோமா என்று கூட நினைத்தேன்.

ஆனால் காலம் கடந்து விட்டது.

திடீரென அணைக்கட்டில் ஓரத்தில் இருந்து இருவர் வெளிப்பட்டு பைக்கை வழிமறித்தனர். அவர்கள் கண்கள் தவிர தமது முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கட்டியிருந்தார்கள். காதுகளில் பூச்செருகி வெற்றுடம்பில் விபூதிப்பட்டைகள் பூசி இடுப்பிலே காவியுடை தரித்து பூசாரிகள் போலிருந்தனர். ஒருவனுடைய கையில் நீண்ட வாள் கத்தியொன்று பளபளக்க மற்றொருவன் கழுத்தில் சிறிய பைனாகுலர் போல எதையோ அணிந்திருந்தான்.

நான் சிறிதும் பயப்படாமல் அப்படியே பைக்கில் அமைதியாக அமர்ந்திருந்தேன். அதைப் பார்த்து ரமீஸ் குழப்பத்தோடு, 'யாரு இவங்கள்லாம்..?' என்று கேட்டபடி பைக்கை நிறுத்தினான். நாங்கள் இறங்கி நின்றதும் அந்த முகமூடிகள் இருவரும் என்னை விட்டுவிட்டு ரமீஸை வாள்முனையில் பயமுறுத்திப் பணிய வைத்தார்கள். அவன் மிரண்டுபோய் திமிற ஆரம்பித்ததும் ஒருவன் தன் கையிலிருந்த வாளை மற்றவனிடம் கொடுத்துவிட்டு, ரமீஸின் பின்புறமாக கிடுக்கிப்பிடி போட்டு அவனை அசையாமல் பிடித்து வைத்துக்கொண்டான். ரமீஸின் கண்கள் பிதுங்கி முகம் பயத்தில் வெளிறிப்போயிருந்தது. அவன் வாய்க்குள் எதையோ விடாமல் முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.

நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்த மண் அணையின் சரிவின் கீழேயிருந்த குளத்து நீர் 'சளக் புளக்' கென்ற ஓசையுடன் கரையை மோதிக் கொண்டிருந்தது. அதற்குச் சிறிது தள்ளி ஏறத்தாழ சுமார் ஆறு அல்லது ஏழு அடிகள் நீளமுள்ள பயங்கரமான முதலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடி நீந்திக்கொண்டிருந்தன.

பைனாகுலர் அணிந்திருந்தவன் ரமீஸை தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு பின்பு அசையாமல் நின்றிருந்த என்னிடம் வந்தான்.  அவன் கையில் வாளுடன் என்னை நெருங்க ஆரம்பித்ததும்,

'டேய் பொம்பளையை ஒண்ணும் செய்யாதடா நாயே..!' என்று
வெறிகொண்டவன் போல உரத்துக் கத்தினான் ரமீஸ். எனக்கு அவன் மேல் பரிதாபமாக இருந்தது. அதைக்கேட்டதும் என்னை நெருங்கி வந்தவன் ஒருகணம் திகைத்து நின்று பின்பு அடக்க முடியாமல் சிரித்துவிட்டு ரகசியமாய்,

 'பரவால்லயே சுனீத்தா அக்கா, உன்ட ஹீரோ உன்னில படு பாசமாத்தான் இருக்கிறான்' என்றபடி தன் முகத்திரையை அகற்றினான்.

நானும் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியபடி, 'அடப்பாவி ராஜன், நீயாடா இது? முகத்தை மறைச்சிருக்க நான் உன்னை காமினி என்று நெனைச்சிட்டேன்டா.. அதுசரி ராஜன், முரளி அத்தான் எங்க..?' என்றேன்.

'கீழ கல்லுக்கோயில்ல பலி பூசையிலருக்கிறாரு.. இதுதான் கடைசி.. மத்த பூசையெல்லாம் பக்காவா முடிச்சிட்டோம். இந்த ஆள் போனமுறை நீ கொண்டு வந்தவனை விட நல்ல வாட்ட சாட்டமாத்தான்க்கா இருக்கிறான். முதலைக்கெல்லாம் இரவுக்கு நல்ல தீனிதான்'

'அதெல்லாம் இருக்கட்டும் ராஜன், உண்மையில சரி வந்திருமாடா..? சே.. இது எவ்வளவு நாள் எடுத்த வேலை?'

 'இல்லக்கா இந்தமுறை நம்ம பொட்டுச் சாத்திரி வச்சிருக்கிற குறி தப்பாதக்கா.. புதையல் எப்படியும் கெடைச்சிரும்' என்று நாங்கள் பேசியவாறு அணையிலிருந்து கீழிறங்கி மருதமரத்தோப்பினூடாக கல்லுக்கோயிலை நோக்கி நடந்தபோது..

மேற்கு வானில் பிறை நிலவு சரிந்துகொண்டிருந்தது.


-'மூதூர்' மொகமட் ராபி


Tuesday, July 14, 2015

மாட்டுக்கறி : 'புனிதம்'






மாட்டுக்கறி 'புனிதமானது'. ஆம் மாட்டுக்கறி 'புனிதமானது' தான். உலகில் ஏகப்பட்ட கறிகள் இருக்க அதெப்படி மாட்டுக்கறி மட்டும் புனிதமானது? என கேள்வி எழலாம். மாடு புனிதம் என்பதை பார்ப்பனர்கள் சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆனால் மாட்டுக்கறி மட்டும் எப்படி புனிதமாகும்?

மாட்டுக்கறி புனிதம் பற்றி பார்க்கும் முன் சில புள்ளிவிவரங்களை பார்ப்போம். 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36.4 இலட்சம் டன் மாட்டிறைச்சி உற்பத்தி ஆனது. அவற்றுள் 19.6 இலட்சம் டன் மாட்டிறைச்சி உள் நாட்டில் சாப்பிட்டுள்ளோம். மீதமுள்ள 16.8 இலட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகிலே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. மாட்டிறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் ஏழாம் இடத்திலும் இருக்கிறோம். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? மாட்டிறைச்சி நம் நாட்டில் பரவலாக சாப்பிடப்படுகிறது. மாட்டிறைச்சியினால் நாட்டிற்கு அன்னிய 
செலாவணி கிடைக்கிறது.



மாடு என்றால் செல்வம் என பள்ளி குழந்தைகளுக்கும் தெரியும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அந்த சொலவடை மாட்டிற்கும் பொருந்தும். ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில், 'பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்' என்ற பாட்டு இருக்கும். பால், தோல் தவிர மாட்டினால் பல நன்மைகள் உள்ளன. பாலில் இருந்து தயிர், வெண்ணை, நெய் மற்றும் இனிப்புகள் என பல உணவு பொருட்கள் கிடைக்கிறது. மாட்டு கொழுப்பு, எழும்புகளில் இருந்து மருந்து மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதைத் தவிர மாட்டின் தோலினால் செருப்பு, ஷூ, பெல்ட், பை, கையுறை, குளிர் தாங்கும் கோட்டுகள் என பலவகை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவை போக மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகிறது.


மாட்டு இறைச்சி தொன்று தொட்டு நம் நாட்டில் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்திருக்கிறோம். பார்ப்பனர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் மாட்டு இறைச்சி சாப்பிடுவார்கள். வேதகாலத்தில் மாடுகளை மந்தை மந்தையாக யாகத்தில் பலி கொடுத்து பின்னர் சாப்பிடுவர். விருந்தினருக்கு சிறப்பு உணவாக மாட்டிறைச்சி அளிப்பார்கள். இப்படி கால காலமாக மாட்டு இறைச்சி சாப்பிட்டு வந்துள்ளோம். ஆனால் புத்த மதம் மற்றும் சமண மதம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் சைவமாக மாறினார்கள் பார்ப்பனர்கள். இவர்கள் பசுத் தோல் போர்த்திய புலிகளல்ல அல்ல நரிகள்.


மாடு புனிதம் என சொல்லும் அன்பர்கள் யாரும் மேல் சொன்ன பொருட்கள் எதையும் பயன்படுத்தாதவர்கள் கிடையாது. புராண புரட்டுக்களை தவிர வேறு எந்த உருப்படியான காரணத்தையும் சொல்வதில்லை மாட்டுக்கறி எதிர்ப்பாளர்கள். மாடு புனிதம் என்பது பார்ப்பனர்கள் கூற்று. வரலாற்று நிபுணர் மற்றும் எழுத்தாளர் டி.என்.ஜா தனது 'புனிதப்பசு எனும் கட்டுக்கதை' (The myth of the holy cow) புத்தகத்தில் மாடு புனிதம் என்பதை விரிவான வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். பிரண்ட்லைன் இதழில் அவரது பேட்டியை படித்து பாருங்கள்.


மாட்டுக்கறி திண்ணும் பிரித்தாணியர்களுக்கு முதன் முதலில் சேவகம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் தான். தொண்ணூறுகளில்  முதன் முதலில் மாட்டுக்கறி திண்ணும் அமெரிக்கர்களுக்கு பெருமளவில் சேவகம் செய்ய கிளம்பியவர்களும் பார்ப்பனர்கள் தான். ஆனால் உள்ளூரில் மட்டும் மாடு புனிதம், மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என பிரச்சாரம் செய்கிறார்கள். உள்ளூரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை வெறுக்கும் பார்ப்பனர்களால் மாட்டுக்கறி டாலர்களை புறந்தள்ள முடியவில்லை. அவர்களது கூற்றை ஏற்கும் முன் யோசித்து பாருங்கள்.


மாட்டுக்கறி உணவு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை என் சொந்த அனுபவம் மூலம் உணந்திருக்கிறேன். உடல் உழைப்பில்லாத காரணத்தால் தசைகள் உறுதியாக இருக்காது. எப்பொழுதாவது சில மாதங்கள் உடற்பயிற்சி செய்தால் தான் வலு பெறும். ஆனால் உடற்பயிற்சி செய்யாத போதும் சில வாரங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டாலே தசைகள் உறுதியாக இருப்பதை உணரந்திருக்கிறேன். இந்த இரகசியம் ஜிம் பாய்ஸ்களுக்கு நன்றாகவே தெரியும். புதிதாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களும் இதனை குறித்து கொள்ள வேண்டும். பொன்னாங்கன்னி கீரையை பதினெட்டு தினங்கள் சாப்பிட்டால் உடம்பு இரும்பாகும் என்பார்கள். கீரையில் இரும்பு சத்தின் சிறப்பினை எடுத்து கூற அப்படி சொல்வார்கள். மாட்டுக்கறி பதினெட்டு தினங்கள் சாப்பிட்டால் உடம்பு இரும்பாகும் என்பது புதுமொழி.


இனி மாட்டிறைச்சியின் மேன்மையை பற்றி பார்க்கலாம்.


மாட்டிறைச்சி அதிகம் விரும்பி சாப்பிடுவது ஐடி துறையினருக்கு வேலை வழங்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தான். அவர்கள் அனைத்து இறைச்சிகளையும் விட மாட்டிறைச்சியை விரும்புவது ஏன்? ருசி மட்டும் தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா?


இறைச்சி உணவின் சிறப்பு அனைவரும் அறிந்ததே. அதாவது புரத சத்து மிகுந்திருக்கும். ஆனால் எந்தெந்த இறைச்சி உணவில் எந்தெந்த சத்துக்கள் உள்ளன என்பது நமக்கு தெரியாது. மாட்டுக்கறியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன அவை உடம்புக்கும், மனதுக்கும் எப்படி பயனளிக்கின்றன என்பதை காண்போம்.



மாட்டுக்கறியின் மகத்துவங்கள் :

  • மாட்டுக்கறியில் உள்ள சில வகை கொழுப்புகளுக்கு கேன்சர் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. மாடு மற்றும் ஆட்டுக் கொழுப்பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

  • மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக்களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக்கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவித்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவையானது மாட்டுக்கறி தான்.

  • புரதம், ஸின்க், மெக்னீசியம், பாஸ்ப்பரஸ், காப்பர், கோபால்ட், க்ரோமியம், நிக்கல், செலனியம், இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் இ, மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மாட்டிறைச்சியில் மிகுந்துள்ளது. நமது தசைகள், பற்கள், எலும்புகள் வலுவாகின்றன. உடலின் செல்களுக்கு பிராண வாயுவையும், சக்தியையும் அளிக்கின்றன. பி வைட்டமின்களான தையமின், ரைபோப்ஃலேவின், பேன்டோனிக் ஆசிடு, ஃபோலேட், நியாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களும் சிவப்பு இறைச்சிகளில் மிகுந்துள்ளது. வளரும் சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி.

  • கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதய கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மையத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர். கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக்கொழுப்புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன. இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக்கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். (LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால். இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)

  • சிவப்பு இறைச்சிகளில் மட்டும் கிடைக்கும் கார்டினைன் என்ற சத்து இதயத்தினை சீராக இயங்க வைக்கிறது. இதய நோய் பீடித்த இந்தியர்களுக்கு ஏற்ற உணவு பீஃப்.

  • மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனிதனின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்தி கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங்காற்றியுள்ளன.

  • உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.

  • மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கிறது.

  • தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சி கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப்பிட்டு வந்தாலும் சத்து குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.

  • ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது. நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது பீஃப்.

  • சிவப்பு இறைச்சிகளில் வைட்டமின் டி மிகுந்துள்ளது. சூரிய ஒளி கிடைக்காத பகுதி மக்களுக்கும் மீன் சாப்பிடாதவர்களுக்கும் மாட்டிறைச்சி வரப்பிரசாதம். பாலில் கிடைக்கும் வைட்டமின் டியை விட மாட்டிறைச்சியில் அதிகம் உள்ளது. மேலும் நமது உடல் உறிஞ்சும் தன்மையுடன் இருக்கிறது. சூரிய ஒளி மிகுந்த நமது நாட்டில் இது பொருந்தாது என்றாலும், சூரிய ஒளியே படாமல் வாழும் மேட்டு குடியினருக்கும், குளீரூட்டப்பட்ட அலுவலகங்களிலே பெரிதும் அடைந்து கிடைக்கும் ஐடி துறையினருக்கும், இரவு பணி புரியும் கால்சென்டர் ஊழியர்களுக்கும் கட்டாயம் பொருந்தும். மேலும் வேலை நிமித்தம் மேலை நாடுகளில் வாழும் பன்னாட்டு ஐடி தொழிலாளிகளுக்கும் பொருந்தும். அவர்கள் உண்ண வேண்டியது மாட்டிறைச்சி.

  • அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட்டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. 300 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மூன்று கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது. 450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. உங்களுக்கு எல்லா சத்துக்களும் கிடைக்க வேண்டுமா? மாட்டுக்கறி சாப்பிடுங்கள்.

  • தாவரங்களில் கிடைக்கும் இரும்புச் சத்தை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் ஹெம் இரும்புச் சத்தை மனிதனின் உடல் சுளுவாக உறிஞ்சி கொள்கிறது. குறைந்த அளவு சாப்பிட்டாலும் போதும். இரும்பு சத்து குறைவானவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்று கொள்ள இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் எடுத்து கொள்ள வேண்டியது மாட்டிறைச்சி. கர்ப்ப காலத்தில் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி அடையும் பருவம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் அவசியானது. தாய்மார்களும், இளம் கணவன்மார்களும் இதனை குறித்து கொள்ள வேண்டும்.



யாராவது மாட்டிறைச்சியின் தீங்குகளை சுட்டி காட்டும் கட்டுரைகளையோ அல்லது பழைய ஆய்வறிக்கைகளையோ காட்டினால் நம்ப தேவையில்லை. ஏனெனில், அவை பதப்படுத்தப்பட்ட மாட்டுக்கறி உணவான சாசேஜ், ஹாட் டாக், பர்கர்களை வைத்து செய்த ஆய்வுகள். 'பேக்டு புட்ஸ்' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அனைத்திலும் உள்ள தீங்குகள் தான் பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியிலும் உள்ளன. ஏனெனில் பதப்படுத்தும் போது கெடாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும் அதீத உப்பு, சர்க்கரை, காரம், கொழுப்பு மற்றும் வேறு சில வேதி பொருட்களையும் சேர்ப்பார்கள்.  எனவே மாட்டிறைச்சி உடலுக்கு தீங்கானது என்பது தவறான வாதம். வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும்.


இத்துணை பயன் தரும் மாட்டுக்கறி உணவை சாப்பிடுவது நன்றா? அல்லது மாடு புனிதம் என மாட்டுக்கறி உணவை நிராகரிக்க சொல்லுவதை காரணமில்லாமல் ஏற்பது முறையா? எல்லாம் வல்ல 'இறைவன்' அனைத்து சத்துக்களையும் மாட்டினுள் வைத்து, நமது உடலையும் மாட்டுக்கறியில் உள்ள சத்துக்களை ஏற்குமளவு 'படைத்தாரோ' என்னவோ? காரணம் இல்லாமலா இருக்கும். தொன்று தொட்டு நாம் மாட்டுக்கறியை சாப்பிட்டு வருவதால் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை சுளுவாக ஏற்று கொள்கிறது.


'அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலிமையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்' என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்ற போது மாட்டுக்கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர். அசைவ உணவிலே சிறந்த உணவான மாட்டுக்கறியை சாப்பிடாமல் இருக்கலாமா? என்னை கேட்டால் வலிமையான இந்தியாவிற்கு மாட்டுக்கறி உணவு அவசியம் என்பேன்.



ஆக,
உடல் எடையை குறைக்க,
உடலை வலிமையாக்க,
இதய கோளாறுகள் நீங்க,
இதயம் வலிமை பெற,
நீண்ட ஆயுள் வாழ,
குழந்தை சத்து குறைவினை தவிர்க்க,
மனநோய்களை தவிர்க்க,
கிழட்டுத் தன்மையை குறைக்க,
மலட்டுத் தன்மையை நீக்க,
இளைஞர்கள்,
விளையாட்டு வீரர்கள்,
சிறுவர், சிறுமியர்கள்,
கர்ப்பிணிகள்,
தாய்மார்கள்,
கணவன்மார்கள்,
ஏழைகள்,
நடுத்தர வர்க்கத்தினர்,
உடல் உழைப்பாளிகள்,
கார்ப்பரேட் தொழிலாளர்கள்,
ஐடி துறையினர்,
என அனைவரும்
சாப்பிட வேண்டியது மாட்டிறைச்சி!


மாட்டுக்கறி 'புனிதம்' என இங்கு சொன்னது அதனை பூசிக்க அல்ல புசிப்பதற்காகவே. மாட்டுக்கறி உண்போம், அதன் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துரைப்போம். பார்ப்பனர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாமல் சிந்திப்போம். மாட்டுக்கறி சாப்பிட்டு நமது கரங்களை வலுப்படுத்துவோம்! பார்ப்பன புரட்டுக்களை எதிர்க்க நமது அறிவை கூர் தீட்டுவோம்!

Thanks: Suna Paana

Sunday, June 14, 2015

சிந்தனைக்கு ஒரு சிறுகதை :









“வந்தனங்கள்...! “

“சகோதர சகோதரிகளே கேள்வி-பதில் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் கேள்வி கேட்க முடியும்.  ஒருத்தர் ஒரு கேள்விமட்டும் கேட்கலாம். துணைக் கேள்விகளுக்கு அனுமதி கிடையாது” என்று உதவியாளர் ஒருவர் விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

“மைக்க... கொஞ்சம் ஆஃப் பண்ணச் சொல்லு...” என்றேன்.

‘கிளிக்’ என்று மைக் ஆஃப் செய்யப்பட்டது

”ஏம்ப்பா... இந்துக்களுக்கும், கிறிஸ்டியன்களுக்கும் எத்தனை டோக்கன் கொடுத்திருக்கீங்க, எல்லாம் கரெக்டாதானே செஞ்சிருக்கீங்க?” இது நான்.

“மொத்தம் பத்து டொக்கன்தான் குடுத்திருக்கோம், மஃரிப் தொழுகை இருக்க்றதால சீக்கிரமாக முடிச்சிறலாம்.  எல்லாம் நம்ப ஆளுகதான்ணே... விவகாரமா ஒன்னும் இருக்காது...!”

“சரி... மைக்க ஆன் பண்ணு ஆரம்பிக்கலாம்!”

வந்தனங்கள்! சகோதர சகோதரிகளே. இந்த மார்க்க உபதேசம் சம்பந்தமான உங்க கேள்விகள கேட்கலாம்!”

கூட்டம் சிறிது சலசலத்து பின் அமைதியானது.

“எல்லோருக்கும் வணக்கம்! என் பேர் பிச்சாண்டி. வேதநூலில் நிறைய அறிவியல் முன்னறிவிப்புகள் இருக்குன்னு சொலறாங்க. அதையெல்லாம் எங்கள மாதிரி மாற்று மதத்த சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?”

“சகோதரர் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்னா... வேதநூலுல நிறைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்குது அத மாற்று மதத்தைச் சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேட்கிறாரு... அது ரொம்ப சிம்பிளானது... நீங்க எங்க இணையதளத்தில இலவசமாகவே படிச்சி தெரிஞ்சிக்கலாம் அல்லது நாங்க வெளியிட்டிருக்கிற வேதநூலும் அறிவியலும்கிற புடிச்சு தெரிஞ்சிக்கலாம். சகோதரர் பிச்சாண்டிக்கு  அந்த புத்தகத்தோட பிரதி ஒன்னு கொடுத்திருங்க..."


“வந்தனங்கள்! என் பேர் ராபியா. உங்க உபதேசம்  ரொம்ப சிறப்பா இருந்திச்சு... இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுக்க துஆ செய்யறேன்...”

“மைக்க சரியா வைச்சு பேசுங்க...!”

“வேற கிரகத்தில உயிரினங்கள் இருக்கும்னு சொன்னீங்களே... அங்கே இருக்கிறவங்களும் இறைவனைத்தான் வணங்குவாங்களா? அவங்களுக்கும் இதே வேதநூல்தானா?”


“வேற்று கிரகத்திலிருக்கிறவங்களுக்கும்  இறைவனை வணங்குவாங்களா, ஆவங்களுக்கும் இதே வேதநூல்தானான்னு சகோதரி ராபியா கேட்கறாங்க... அகில உலகத்திற்கும் அருட்கொடையாக வேதநூலை அருளியிருப்பதாக இறைவன் சொல்கிறான். கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் இறைவக்கே உரியவர்கள்...’ என்று வேதநூல் 10.66 சொல்கிறது. எனவே வேறகிரகங்களில் உயிரினங்கள் இருந்தால் அவர்களுக்கும் இதுதான் வழிகாட்டி. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக இறைவன்  வேதநூலில் சொல்கிறான். இதன் அடிப்படையில பார்த்தோம்னா அவர்களுக்கும் இறைவன் மட்டுமே இறைவனாக இருக்க முடியும்!”



"என் பேர்  பிச்சை, நான் குஞ்சாண்டியூர்ல இருந்து வர்றேன். வேதநூலில நவீன அறியலைப்பற்றி சொல்லியிருக்குனு நீங்க கொடுத்த விளக்கம் ரொம்ப ஸூப்பரா இருந்துச்சு...”

“ரொம்ப சந்தோஷம் நீங்க கேட்க விரும்பறத சீக்கிறமாக கேளுங்க நிறைய பேர் கேள்விகேட்க காத்துக்கிட்டிருக்காங்க...”

"சரி... வானத்தில உயிர்னங்கள் இருக்கிறத வேதநூல் குறிப்பிடுறதா சொன்னீங்க, நம்ம  தூதர் அவங்க விண்வெளி யாத்திரை போனப்ப பார்த்த வானமும் நீங்க குறிப்பிடுற வானமும் ஒன்னுதானா?”

"க்ளிக்” மைக் நிறுத்தப்பட்டது. அருகிலிருக்கும் உதவியாளரிடம்,

“டேய்...  தம்பி... இங்கே வா... டோக்கனையெல்லாம் சரியான ஆட்களுக்குத்தான் குடுத்தியா?” என்றேன்

“ஆமாண்ணே... கரெக்ட்டாதான் கொடுத்தோம். எப்படி சொதப்பினாங்கன்னு தெரியலை நான் போய் பார்க்கறேன்!” என்றான்

“போ சிக்கிரம் போய்ப் பாரு நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்!”



“க்ளிக்” மீண்டும் மைக் 'ஆன்' செய்யப்பட்டது.

“சகோதரர் என்ன கேட்கிறார்னா...  தூதர் அவங்க  போன போது பார்த்ததாகக் கூறப்படும் வானத்தைப்பத்தி கேட்கிறார்”

“நான் அப்படிக் கேட்கல..” என்று சொல்லும்  பிச்சையின் குரலை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை.

“தூதர் அவங்க சென்ற விண்வெளி யாத்திரை ஆத்மரீதியான பயணம்தான்கிறத விஷயத்தை நீங்க மொதல்ல ஒரு விளங்கிக்கறனும். அழைச்சிக்கிட்டு போகற மாதிரியும், அங்கே வானங்கள் இருக்கிற மாதிரியும், அதற்குக் கதவுகளும் காவலாளிகளும் இருக்கிற மாதிரியும் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அந்த வானமும், வேதநூலில நேரடியாகக் குறிப்பிடுற வானமும் ஒன்னு கிடையாது. நாம அடுத்த கேள்விக்குப் போகலாம்!”

"எல்லோருக்கும் வணக்கம். என்பேர் பிச்சாண்டி. வேதநூலில 71:15 இறைவன்  ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்திருப்பதைப்பற்றி சொல்லறதை, நிறைய சமய அறிஞர்கள், வளிமண்டல அடுக்குகளைக் குறிப்பிடுறதாக சொல்லி, படம் வரைஞ்சு பாகங்களைக் கூட குறிச்சிருந்தாங்க. ஆனால் நீங்க சொல்லற வானம் இப்போ வேறுமாதிரியாக இருக்கே?”

நான் சிரித்துக் கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன் உதவியாளர்கள், ஒன்றுமே நடக்காததைப் போன்று கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதைப் போன்று பாவனை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவனை அருகில் வருமாறு கண்களால் சைகை செய்தவாறு,

"சகோதரர் பிச்சாண்டி, வேதநூலில  குறிப்பிடும் ஏழு வானத்தைப்பற்றி கேட்கிறார். அவரது கேள்விக்குப் போவதற்கு முன்னால். வானத்தைப்பற்றி  வேதநூல்   என்ன சொல்துங்கிற நாம பார்க்கனும்.

இறைவன்வானத்தைப்பற்றி சொல்லும் போது, ஏழு வானம் என்று மட்டும் சொல்லவில்ல. அதன் பணிகளை, திருப்பித்தரும் வானம், பாதுகாக்கப்பட்ட முகடு என்று கூறுகிறான். அதன் கட்டமைப்பற்றிச் சொல்லும் போது, வானத்தைப் படைப்பது பெரிய பணி என்பதாகவும், தூண்களின்றி நிறுவியிருப்பதாகவும், பூமியின் மேல் விழாதவாறு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறான்”

உதவியாளர் அருகில் வந்தான். மைக்கை கைகளால் மூடியவாறு அவனிடம்,“கேள்விகள் ஏண்டா இப்படி ஏடாகூடமா வருது? டோக்கன்களை ஒழுங்காத்தான் குடுத்திருக்கீங்களா?” என்று கிசுகிசுத்தேன்.

"தெரியலைண்ணே ஏதோ தப்பு நடந்திருக்கும்னு தோணுது. டோக்கன்கள் கைமாறியிருக்கலாம். புரோகிராம சீக்கிரம் முடிச்சிறலாம்” என்றான்.

"சரி போய் ஏதாவது செய்” என்றவாறு நிகழ்ச்சியை மீண்டும் தொடர தயாரானேன்.

"இதை நாம் எப்படி விளங்கிக்கிறது என்பதுதான் முக்கியமானது.  சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பத்தையும், புறஊதாக் கதிர்களையும் தடுப்பது வானம்தான். இதைத்தான் இறைவன் , பாதுகாக்கும் முகடாக வானம் இருப்பதாகச் சொல்கிறான். பூமியிலிருந்து மேலே ஆவியாகி செல்லும் தண்ணீர் திரும்பவும் மழையாக பொழிகிறது; அதேபோல ஒலி-ஒளி அலைகளும் வானில் பட்டு திரும்பவும் பூமிக்கே திரும்புகிறது இதை திருப்பித்தரும் வானம் என்று குறிப்பிடுகிறான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் வானத்தைப்பற்றி விதவிதமாகக் குறிப்பிடுகிறான்.

பன்மையில அதாவது, நிறைய என்று சொல்வதற்கு அரேபிய வழக்கில் 7, 70, 70000 என்று சொல்வாங்க. வேதநூல் இங்கு ஏழு வானம்னு சொல்லறது எண்ணற கேலக்ஸிகளைத்தான்னு நம்ம புரிஞ்சுக்கனும்!”

பிச்சாண்டியின் முகத்தில் தெறித்த எரிச்சலை என்னால் உணற முடிந்தது. அவர் எழுந்து திரும்பவும் ஏதோ கேட்க முயற்சிப்பதை நல்லவேளையாக உதவியாளர்  'அன்பாக' அடக்கிவிட்டார். துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே அறிவிக்கிறது எத்தனை உதவியாக இருக்கிறது!

Thank God!

நாலு காசு பார்க்கறதுக்கு எத்தனை கப்ஸா விடவேண்டியிருக்கு?  இன்னைக்கு  இரண்டு ரக்ஆத் சுக்ரி யாநஃபில் தொழுது இறைவனுக்கு நன்றி சொல்லயாகணும் என்று எண்ணிக் கொண்டேன். 


 “ ஐயா என் பேர் முருகானந்தம். நான் சேலத்தில இருந்து வர்றேன். வானத்தில உயினங்களை படைத்திருப்பதாக வேதநூல் குறிப்பிடறதாகச் சொன்னீங்க. வாதத்திற்கு அது உண்மையின்னு வைத்துக் கொண்டாலும், வேற்று கிரகங்களில் உயினங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, வானத்தில் உயிரினங்கள் இருப்பதாகக் வேதநூல் கூறுவது தவறுதானே?”

ஷைத்தான் சடைபின்ன ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு!நான்  இறைவனுக்கிட்ட பாதுகாப்பு கேட்கிறதா இல்லை ஷைத்தான் கிட்ட பாதுகாவல் தேடறதா? இவனுக்கு என்ன பதிலச் சொல்லறது?

“சகோதரர் முருகானந்தம் முதலில் நாம ஒன்றை விளங்கிக் கொள்ளனும். வேதநூல் கடவுளோட வார்த்தைகள் அதில் முரண்பாடு இருக்காதுன்னுங்கிற விஷயத்தில நாம தெளிவா இருக்கனும் இங்கே வானம்கிறது கேலக்ஸிகளைக் குறிப்பிடுறதாக நான் முதலிலேயே சொன்னேன். அந்த கேலக்ஸிகளுக்குளேதான் சூரியன்களும் கிரகங்களும் இருக்குது. 

நீங்க உங்களை அறிமுகப்படுத்தும் போது சேலத்தில் இருந்து வருவதாகச் சொன்னீங்க. உதாரணத்திற்கு சொல்கிறேன், நான் சேலம் அம்மாபேட்டை ஆறாவது வீதியில் ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறேன்னு சொல்லலை. யாரும் அப்படி தங்களை அறிமுகப்படுத்தவும் மாட்டாங்க. அதைப்போலதான் இதுவும். சில விஷயங்களை கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் நாம்தான் அதைப் சரியாகப் புரிஞ்சிக்கனும்!”

 "என் பேர் Antony.   இறைவன் உயிரினங்களை எங்கே பரவச் செய்திருக்கிறான் வானங்களிலா அல்லது பூமியைப் போன்ற கோள்களிலா என்பதை தெளிவாகச் சொல்லனும். வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருக்கிறான் என்றால் நீங்க கொடுக்கும் விளக்கத்தின்படி, கேலக்ஸி முழுவதும் உயிரினங்கள் பரவியிருக்குனு பொருள்வரும். கேலக்ஸிகளுக்குள் சூரியனைவிட மிகப் பெரிய red giant super களும் இருக்கலாம். அதற்குள்ளும் உயினங்கள் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டிவரும்.  கேலக்ஸிகளை உள்ளடக்கிய, எண்ணற்ற பேரண்டங்கள் இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. இவைகள் அல்லாமல் இறைவனும் அவனது உதவியாளர்களும், இறந்த  வசிக்கும் வானங்களும், சொர்க்கம் நரகம் இருப்பதாகக் கூறப்படும் வானமும் இருக்கிறது. அதனால் வானம் என்று வேதநூல் எதைக் குறிப்பிடுகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் தரவேண்டும்”



இது கேள்வியில்ல... Rivet!  இப்ப எப்படித் தப்பிக்கிறது… கலங்காதே... நோ அழக்கூடாது… தைரியமாக இருக்கனும் முகத்தை துடைச்சுக்க… சும்மா சிரிச்சு வை… ஐய்யோ நான் என்ன பதிலச் சொல்லுவேன்…


 "சகோதரர் Antony சமய எதிர்ப்பு ஊடகங்களை வாசிப்பவர் என்று நினைக்கிறேன்…”

திடீரென்று  உதவியாளர் என்னை நோக்கி ஓடிவந்து காதில் “அண்ணே மேல தொடரவேண்டாம் நம்ம மானம் போயிரும் ஏதவது சொல்லி தப்பிச்சிருங்க…” என்று கிசுகிசுத்தான்.

"சீக்கிரமா.. அதுவரை ஏதாவது சொல்லிவைக்கிறேன்” என்று கிசுகிசுத்தவாறு கூட்டத்தை நோக்கி,

”சகோதரர் Antony-யைப் பாருங்க குர்ஆனை ஆய்வு நோக்கோடு வாசித்திருக்கிறார் என்பது அவரது கேள்வியிலிருந்து புரிகிறது.  நாம் ஒரு நாளும் அதைப் பொருளணர்ந்து வாசிப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

Antony, நீங்க வேதநூல ஆய்வு செய்திருக்கலாம், ஆனால் தவறாகப் புரிஞ்சிருக்கீங்க! குற்றம் சொல்லனும்கிற நோக்கத்தோட அணுகினால் அதிலிருக்கும் உயர்ந்த தத்துவங்கள் உங்களுக்குப் புலப்படாது… உங்க கேள்வியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. வேதநூல் கருவின் வளர்ச்சியைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறது. அலக் என்ற சொல் மிகத்துல்லியமாக ஆரம்ப நிலைக் கருவின் அமைப்பை விவரிக்கிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து கருவின் வெவ்வேறு நிலைகளையும் கூறுகிறது.” 

நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இல்லாத அறிவியலை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். இதோ தொழுகை நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

" வேதநூல் 2:259-ல் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியைக் கூறிவிட்டு உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலெல்லாம் ஒரு முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அதுபற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத்  வேதநூலில் பரவலாகக் காணலாம்.

இந்நிகழ்ச்சியில் இருப்பதாக இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?

உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில்தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதைமக்கிப் போகின்றது. அதேசமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.”

கூட்டம் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தது.

"இப்படி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி வேதநூல் முன்னறிவிப்புச் செய்கிறது. இவ்வாறு வேதநூல் கூறும் ஒவ்வொரு சான்றுகளையும் இன்றுவரை எந்த அறிவியல் அறிஞர்களாலும் மறுக்க முடியவில்லை. எனவே வானத்தைப்பற்றி வேதநூல் கூறுவதில் தவறு இருக்காது இருக்கமுடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இப்பிரபஞ்சத்தையே படைத்தவன் கூற்றி எப்படித் தவறு இருக்க முடியும்.

நாம் சகோதரர் Antony-யின் கேள்விக்கு வருவோம்...

கேலக்ஸி என்பது கோள்கள், நட்சத்திரங்கள் ரெட் ஜெயண்ட் சூப்பர் எனப்படும் செம்பூதங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கியது.  உதாரணத்திற்கு சூரியனில் உயிரினங்கள் வாழமுடியாது காரணம் அதன் வெப்பம். இந்த செம்பூதங்கள் சூரியன் கோள்களென்று அனைத்தையும் விழுங்கக் கூடியவைகள். எனவே உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கே தெரியும் போது இத்தனையும் படைத்த இறைவனுக்குத் தெரியாதா? அப்படியானால் அவனது வார்த்தைகளான வேதநூல் எப்படி தவறான பொருளைத் தரும்? இப்படித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

அப்படியானல் இதை எப்படி விளங்குவது?

உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது"தொழுகைக்கு நேரமாகிவிட்டது நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். சகோதரர் Antony, உங்கள் கேள்விக்கான அதிகப்படியான விளக்கங்களை எங்கள் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!”

கூட்டம் கலையத் துவங்கியதால் ஏற்பட்ட சலசலப்பில் Antonyயின் குரல் எடுபடவேயில்லை.

இனிமேல்  ஒத்திகை பார்க்காம கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு வரவேகூடாது. கேள்வி கேட்கறவங்களை இண்டர்வியூ பண்ணாம அனுமதிக்கவும் கூடாது. கேள்வி கேட்கறது சுலபம். பதில் சொல்லிப்பாருங்க அப்பத் தெரியும் அதோட கஷ்டம் என்னாங்கிறது!

என்ன... நான் சொல்லறது சரிதானே.?

***