Saturday, August 3, 2013

எங்கும் ஒரே கதைதான்!










கூடைப் பந்தாட்ட வீராங்கனைகளுக்கான  ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு அதிதியாக கலந்து கொள்ளச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி மாணவிகளுடன் படம்  எடுத்துக் கொண்டார். அப்போது அந்த மாணவிகளில் இருவர் ஜனாதிபதிக்கு தங்கள் விரல்களால்  வேடிக்கையாக கொம்பு வைத்து மகிழ்ந்துள்ளனர். அவரும் அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு விட்டார்  என்பதுதான்  செய்தி.

"They are just like my daughters"


நமது நாட்டிலே இப்படி செய்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா?


உயர் அதிகாரிகளுடன் படம் எடுப்பது என்றாலே ஒரு மாதிரி, கடப்பாரையை விழுங்கியவர்கள் போல விறைத்துக்கொண்டு படு செயற்கையாய் நிற்பார்கள்.


ஆனலும் அமெரிக்காவென்ன அமிஞ்சிக்கரையென்ன (ஒரு ரைமிங்குக்காகத்தான் - மற்றப்படி எந்த ஊரையும் போட்டுக்கொள்ளலாம்) எங்கும் மாணவர்கள் என்றாலே வேடிக்கையானவர்கள்தான். நாம்தான் அவர்களை அப்படியில்லாமல் செயற்கையாய் டென்சன் பார்ட்டிகளாக்க பாடுபடுகின்றோம் போல.


- Jesslya Jessly
 
 


In America





In Sri Lanka

சவூதி எனும் 'பூலோக நரகம்’





வூதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் உச்சரிக்க வேண்டுமென்றால் ‘நரகம்’ என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.


அதிகாலையில் எழுந்து வீட்டை கழுவித் துடைத்து, காலை உணவுக்கான தயாரிப்புகளைச் செய்து, குழந்தைகளை எழுப்பி கவனித்துக் கொண்டு சற்று பெரிய குழந்தைகளென்றால் பள்ளிக்கூடத்திற்காக ஆயத்தப்படுத்தி, கடந்த நாளின் அழுக்கடைந்த ஆடைகளை துவைத்து உலர்த்தி தேய்த்து, மதிய உணவை தயாரித்து வழங்கி சுத்தப்படுத்தி, குழந்தைகள் பெற்றோரை தொந்தரவு செய்துவிடாமல் கவனித்துக்கொண்டு, இடையிடையே சௌதிகளின் தேவையறிந்து அவற்றில் உதவி, மாலையில் சௌதிப் பெண்களின் கடைவீதி உலாவுக்கு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பின்சென்று அல்லது வேண்டிய பொருட்களை சுமந்து வருவதற்காக பின்சென்று பின் இரவுச் சாப்பாடு குழந்தைகளைத் தூங்கவைப்பது என்று பின்னிரவு வரை தன்னைத்தானே ஒரு இயந்திரமாய் மாற்றிக் கொள்ளவேண்டியதிருக்கும்.


வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடம்இருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாக கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக திட்டுக்கள் முதல் அடிஉதை வரை அனைத்தும் கிடைக்கும்.


வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஒரு இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது. தனியாக செல்லிடப்பேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. நாட்டில் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ பேசுவதற்கு மட்டும் அனுமதிப்பார்கள். சம்பளப் பணத்தை ஊருக்கு அனுப்புவதற்குக்கூட சௌதிதான் வங்கிக்கு சென்று அனுப்புவான். இப்படி ஒழிவின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்து கொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.


பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சௌதியில் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களின் நிலை சொல்லும் தரமன்று. வேலை செய்யும் வீடு பெரிய பணக்கார வீடாக இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பெண்கள் இருந்தால் வேலையில் ஆறுதலுக்கும், பாலியல் கொடுமைகளிலிருந்து சிறிது தப்பித்தலுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கோ சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை.


அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” என்று கூறி உடைந்த  போது அவர் கண்களிலிருந்து வழிந்தது இரத்தமாக தெரிந்தது.



“பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? ஒரு பணிப்பெண் தனக்கு நேரும் பாலியல்கொடுமைகளுக்கோ, வதைகளுக்கோ தொலைபேசி மூலம் காவல்துறைக்கு புகார் கொடுக்கிறாள் என்று கொள்வோம். என்ன நடக்கும்?


சௌதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முதல் கட்டமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை என வீட்டிலுள்ள அனைவரும் விசாரணைக்காக வரும் காவல்துறையினரிடம் கூறுவர். அப்படி ஒன்று நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நிரூபிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிரூபித்தாலும் குற்ற நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி ஏதாவது இழப்பீட்டுத் தொகை வாங்கி சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் காவல்துறை செய்யும் அதிகபட்ச நடவடிக்கை. அன்றி கொடுமை நடைபெற்றதை நிரூபிக்க முடியாமல் போனால், இழப்பீடோ, பரிவுத் தொகையோ எதுவுமின்றி சொந்தநாடு திரும்ப வேண்டியதிருக்கும். ஏனென்றால், தொடர்ந்து அந்த வீட்டில் வேலை செய்தால் அது தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.


முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலிலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறை முயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்ணை வேலைக்காக தருவிக்கும் சௌதி அப்பெண்ணுக்கு வேலைவழங்குனர் மட்டுமல்ல, பாதுகாவலரும்தான்.


பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். ஏனென்றால் சம்பளம் கொடுப்பது அதை பணிப்பெண்ணின் வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றைச் செய்வது சௌதி ஆண்தான்.



நடக்கும் இவைகளுக்கு எதிராக முறித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் இங்கு வரும் பணிப்பெண்களில் பெரும்பாலானோர் இருப்பதில்லை. வாங்கி வந்த கடனும், வீட்டுச்செலவுகளும், தேவைகளும் அவர்களின் முன் பூதாகரமாக அச்சுறுத்துகின்றன. வறுமைக்குப் பயந்து, குடும்பத்தையும் குழந்தைகளையும் பிரியச் சம்மதிக்கும் பெண்கள் வந்த இடத்தில் எதிர்கொள்ளும் கொடுமைகளால், அதற்கு வடிகாலில்லாத நிர்ப்பந்தங்களால் நொறுங்கிப் போகிறார்கள். வேறுவழி தெரியாததால் பலபெண்கள் சம்மதித்து சகித்துப் போகிறார்கள். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக குழந்தைகளை துன்புறுத்துவதையும், கடத்திச் செல்வதையும், ஏதாவது வழியில் பழிவாங்க முடியாதா? எனும் எண்ணங்களுக்கு ஆளாகிப் போகிறார்கள்.


கடந்த சில வருடங்களாகவே சௌதி அரசு உள்ளே வரும் அனைத்து வெளிநாட்டவர்களையும், புகைப்படமும், கைரேகையையும் விமான நிலையத்திலேயே எடுத்து பதிவு செய்து ஆவணமாக்கி வருகிறது. விடுப்பில் செல்லும், இகாமா (இருப்பிடஅனுமதி) புதுப்பிக்கும் யாரும் கைரேகையை பதிவு செய்யாமல் முடியாது எனும் அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 


பெண்கள் வெளியேறிச் சென்று தனியாக எங்கும் வேலை செய்து விடவோ, ஊர் சென்று விடவோ முடியாத சூழலை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் தன்னுடைய பொறுப்பில் இருக்கும் குழந்தையை கடத்தி பணம் கேட்கிறாள் என்று கூறுவது அதன் பின்னணியில் தொழிற்படும் காரணங்களை மறைப்பதற்காகத்தானேயன்றி வேறொன்றுமில்லை.


இத்தகைய கொடுமைகள், பாலியல் வதைகள் குறித்து ஒரு சௌதி என்ன விதமான கருத்துகொண்டிருக்கிறான் என்பது இதில் இன்றியமையாத ஒன்றாகிறது. ஒரு சௌதிப் பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்படும்போது ஒரு சௌதி ஆணுக்கு ஏற்படும் அதிர்வலைகள், ஒரு வெளிநாட்டு பணிப்பெண் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டாள் எனும் போது ஏற்படுவதில்லை, அது ஒரு சாதாரண செய்தியாகவேபடுகிறது. இதை சொந்த நாட்டுப் பெண்ணுக்கும் அந்நிய நாட்டுப் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என எடுத்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் இல்லை.


சௌதியின் உளவியலிலே இத்தகைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் குர்ஆனிலிருந்து தொடங்கவேண்டும்.


 சௌதி ஆணின் பாலியல் தேவைகளை பொருத்தவரை மதகலாச்சாரரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கு சில வரம்புகளை மட்டுமே நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் ஆணின் பாலியல் சுதந்திரத்தை பேணப்படுகிறது.

"அனாதைகள் விசயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடமையாக உள்ள அடிமைப் பெண்களை. இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி." (குர்ஆன் 4:3)


சட்டபூர்வமாக நான்கு மனைவிகள் அல்லாது எத்தனை அடிமைப் பெண்களையும் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ஆணுக்கு அது அனுமதியளிக்கிறது. பரிகாரம் எனும் அடிப்படையில் அடிமைகளின் விடுதலை குறித்து குரான் பேசினாலும், அடிமையை வைத்திருப்பதும், அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்துவதும் மத அடிப்படையில் குற்றச் செயலல்ல. இந்த அடிப்படையிலிருந்து எழுந்து வருவதுதான் இப்போதைய சௌதிகளின் மனோபாவம். 1962ல் சட்டபூர்வமாக சௌதியில் அடிமையை வைத்திருப்பது தடை செய்யப்பட்ட பிறகும் இந்த மனோபாவம் தொடர்கிறது.வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்களை பாலியல் அடிமைகளாய் வைத்திருப்பது குற்றமல்ல எனும் உளவியல்தான்
அவர்களின் செயல்களில் பிரதிபலிக்கிறது.


வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஆண்களையும் சௌதிகள் இந்த மனோபாவத்துடனே அணுகுகிறார்கள் என்பதற்கு அனேக டுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால், ஆண்களுக்கு இருக்கும் வாய்ப்பும், வேறு வேலை தேடிக்கொள்வதற்கான வசதிகளும், பணம் செலுத்தி தன் பாதுகாவலரை மாற்றிக் கொள்ள முடிகிற நிலையும் அவர்களை அடிமையாக நடத்துவதினின்றும் ஓரளவு பாதுகாக்கிறது. இதேபோல் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் கூட இத்தகைய கொடுமைகளை சந்திப்பதில்லை. வீட்டு பணிப்பெண்களுக்கு அதில் அழுந்திக் கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை எனும் சூழல் இருப்பதால் ஆணாதிக்கத் திமிரில் அடிமையாக நடத்துவதும் தொடர்கிறது.


அடுத்து பெரும் சொத்தாய் குவிந்திருக்கும் எண்ணெய் பணத்தின் மூலம் சௌதிகள் சாதாரண வேலைகள் எதனையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்களை வைத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் வீட்டு வேலைகளுக்கான பெண்களும் அழைத்து வரப்படுகிறார்கள். வர்க்க ரீதியில் இருக்கும் இந்த மேட்டிமைத்தனமான மனோபாவமும் வீட்டு பணிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நாகரீகமாகப் பழகும் சௌதிகள் ஆசிய நாட்டவரைக் கண்டால் ஆண்டைகள் போலத்தான் நடத்துவார்கள். இதன்படி பணிப்பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது குறித்து அவர்கள் குற்ற உணர்வு ஏதும் கொள்வதில்லை.


சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த சாரா எனும் இளம் பெண் தன்னை பாலியல் வன்முறை செய்ய வந்த ஒரு கிழட்டு ஷேக்கை குத்திக் கொன்றாள். அதற்காக அவளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து முழு உலகும் போராட வேண்டியிருந்தது. காதல், கள்ளக் காதல், விபச்சாரம் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் சௌதியில் இருக்கும் ஆசிய நாடுகளின் பெண்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒப்பிடும் போது சௌதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை மிகவும் குறைவு.


சௌதிகளின் இருப்பை மதம் ஆளுமை செய்து கொண்டிருப்பது வரை அவர்களை இந்த மனோநிலையிலிருந்து மாற்றுவது கடினம். அதேநேரம் வெளியிலிருந்து வருபவர்களும் இவை குற்றம் எனும் நிலையை உணராது மத அடிப்படியில் ஆதரித்து நிற்பது வேதனை. காயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் மருந்திடுவது குறித்து சிந்திக்க முடியும். அந்த வகையில் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் கொண்டு வருவதும், வெளிப்படையாக விவாதிப்பதும் அந்த அடிமைத்தனத்தைக் களைவதற்கான முதற்படியாகும்.


அரசியல், பொருளாதார ரீதியில் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் சௌதி ஷேக்குகள் உள்நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு மட்டும் இசுலாத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மதச் சட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது முதலான கொடூரமான தண்டனைகளை அமல்படுத்தி வரும் ஷேக்குகள் அவர்களது சொந்த வாழ்வில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துதான் வருகிறார்கள். இவர்களை எதிர்த்து ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் எழாத வரைக்கும் இந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு விடுதலை இல்லை.

Thanks: Vinavu

Tuesday, July 30, 2013

இஸ்லாமிய உறையிலே போட்டு...











'நேற்று விசயம் தெரியுமா ?"


என்றார் எனது பக்கத்து வீட்டுக்காரர் திடீரென எட்டிப்பார்த்து.


"அப்படியா என்ன விசயம்" என்றேன்?


"எங்கேயோ ஒரு இடத்தில என்னமோ ஒரு சவமொன்றைக் கண்டு பிடிச்சிருக்கிறாங்களாம். எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முந்தியதாம். ஆனா அந்தச் மையத்துல புதிய காயங்கள் இருக்குதாம். அதைப்பற்றி அறிந்ததும் எத்தனையொ சயன்டிஸ்ட்மாரெல்லாம் ஒடனேயே  கலிமாக்கூறி இஸ்லாத்திற்கு வந்திட்டாங்களாம்." என்றார்.


"அப்படியா...? அது என்ன மாதிரி சவம்? எங்க தோண்டினவங்க.. என்று விபரம் சொல்லுறிங்களா...?"


"அது ஆ...! வந்து.. அது வந்து.. பள்ளில தொழுகை முடிஞ்சு வரக்கொள ஆக்கள் பேசிக்கிட்டாங்க... நெற்றுலயெல்லாம் வந்திருக்காம்.. நான் செரியா கேட்டுட்டுச் சொல்றன்.'" என்று போனவர்தான். அதன்பிறகு பலமுறையும் என்னைக் காணும்போதெல்லாம் அதைப்பற்றியே கதைப்பதாக காணவில்லை. நானாகவே கேட்டாலும் நழுவல்தான்.


ஆனால்,  இன்று வரையிலே அது தொடர்பான சிறுதுரும்பளவான ஆதார செய்தியைக் கூட தரக்காணவில்லை. ஆக மிஞ்சிப்போனால் தனக்கு தகவல் கூறிய ஆளைச் சந்திக்கத்தானும் முடியவில்லை என்பார். ஆனாலும் சில நாட்களாக அவர் தனது வீட்டுக்கு வருகை தரும் இன்னொரு நண்பரோ உறவினரோ அறிந்த பலரிடம் அதேவிடயத்தை என்னிடம் கூறியதைவிட தத்ரூபமாக விளக்கிக் கொண்டேயிருக்கின்றார்.


அது எனக்கு காதில் விழுந்தவண்ணமேயுள்ளது.


இதை நான் ஏன் கூறவருகின்றேன் என்றால் பலருக்கு தான் அறிந்த / கேள்வியுற்ற இன்னுமொருவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய விடயம் குறைந்தபட்ச ஆதாரத்தையாவது கொண்டிருந்தாக வேண்டுமே என்ற சிறு அக்கறைதானும் இருப்பதில்லை.

ஒருவர், தான்  சிலாகித்து கொண்டிருக்கும் விடயத்திற்கு சார்பாக யாரோ சிலர் எதையாவது கூறிவிட்டால் போதும் அதுகுறித்து தான் மற்றவருக்குத் தெரியப்படுத்த முன்பு, அவ்விடயம் பற்றிய குறைந்தபட்ச ஆதாரத்தையாவது சிந்திப்பது கிடையாது.

பழக்கங்கங்களாக மட்டுமே போய்விட்ட சில விடயங்களுக்கு நாமெல்லாம் அடிமையாகிப்போய்விட்டோமா?





ஒருவிடயம் உண்மைதானா நம்பகத்தன்மை மிக்கதுதானா...?

என்பதெல்லாம் பற்றிய அக்கறை கிடையாது. வேண்டியதெல்லாம் ஏதோ நமக்குக் கூறுபவன் நம்மைச் சேர்ந்தவனாக இருப்பதால் 'அவன் என்ன பிழையாகவாக சொல்வான்?' எனும் குருட்டு நம்பிக்கையும் அதுபற்றிய அலட்சியமும்தான். சொல்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் கூட உண்மையாக அது இருந்தாக வேண்டுமென்ற அவசியம் ஒன்றும் கிடையாது அல்லவா?


eg: ஒரே ஒருவனைத் தவிர இந்த உலகிலுள்ள ஏனைய அனைவரும் ஒன்று சேர்ந்து, நாம் வாழும் பூமி தட்டையானது காட்டுக் கூச்சல் போட்டாலும் கூட பூமி ஒருபோதும் தட்டையாகி விடுவதில்லை.


நமக்கு வேண்டியவர் ஒருவர் நம்பத் தகுதியில்லாத தகவலை அல்லது மிகையான தகவலை நம்மிடம் கூறும்போது  ஒரு இங்கிதம் கருதி நாம் அதை உடனடியாக மறுப்பதற்குச் சங்கடமாக இருப்பதுண்டு. ஆனாலும்  அவற்றை நாம் ஊக்குவிக்கக்கூடாது. மாறாக நமது மெல்லிய எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டாமா?

நமது விசயங்களிலே யாராவது இன்டநெற்றிலே அப்படியிருக்கின்றது இப்படியிருக்கின்றது என்று ஆதாரங்கள் பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாமல்  போகிற போக்கில் கூறிச்சென்றால், அதைவைத்து கதைபரப்ப எத்தனையோ பேர் காத்திருக்கின்றார்கள்.


அது உண்மையோ அப்படியில்லையோ தம்மைச் சேர்ந்தவர்களிடம் போலியாகவேனும் ஒருவித பக்திப்பரவச சிலிர்ப்பை ஏற்படுத்திவிடத் துடிக்கின்றார்கள்.


இப்படியே ஊகங்களால் கட்டமைக்கப்பட்ட தகவல்களை வைத்தே ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை வளர்த்தச் செல்ல முடியும் என்ற பிழையான தகவல்கள்தான் நாம் பின்பற்றும் மார்க்கத்தையும் கூட இன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய உறையிலே போட்டு கொடுத்து மட்டும் விட்டால் எதை வேண்டுமானாலும் நம்புவது என்பது எத்தனை மூடத்தனமானது தெரியுமா?

முன்பெல்லாம் நமது முன்னோர்கள், எங்காவது அரபி மொழியிலே உள்ள கடதாசிகளைக் கண்டால் அதனை பயபக்தியோடு எடுத்து உயரமான கூரையிலோ வேலியிலோ செருகி வைத்திருப்பதுண்டு.  அரபியில் அச்சடித்த காகிதம் எல்லாமே குர்ஆன் என்று கருதியது போன்றதுதான் இப்போது நான் கூறும் விடயங்களும்.


எனது அயலவர் விடயத்தில் பாருங்கள்,

  • நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த உடல் ஒன்று-

  • புதிதாக ஏற்பட்டது போன்ற காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது-  

  • அதைப் பற்றி அறிந்ததும் பல விஞ்ஞானிகள் உடனடியாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாறிவிட்டனர்


என்பதுதான் எனது அயலவர் கூறிய செய்தி!


அயலவர் என்பது ஒரு வெறும் குறியீடுதான். இவர்போல பலநூறுபேர் இருக்கின்றார்கள்.


இதிலே எத்தனை விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளன என்பதை சிந்தித்துப் பாருங்கள்!


எனது வினா இதுதுதான்.


ஒவ்வொரு மதத்திற்கும் பல தனித்துவங்களும் மாட்சிமைகளும் உள்ளன. அவற்றை அவரவர்கள் நம்புவதும் சிலாகிப்பதும் அவரவர் தெரிவுகள்.


அது போலவே நமது இஸ்லாமிய மதத்திற்கென்றும் தனித்தன்மைகளும் போதியளவு மாட்சிமைகளுமுள்ளன. அவ்வாறிருக்கும்போது இப்படியான உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளாலும் ஆதார ரீதியாக பலமற்றுப்போன செய்திகளாலும்தான்  நாம்  நமது சகோதரர்களை மெய்சிலிர்க்க வைக்க வேண்டுமா என்ன?


நாளை உண்மை அம்பலமாகும்போது வெட்கம் நிரம்பிய மௌனம் காக்க வேண்டிய தாழ்வுச்சிக்கலுக்கும் சங்கடங்களுக்கும் நாம் உள்ளாக வேண்டியிராதா?


அல்லது இப்படியெல்லாம் ஜல்லியடித்துவிட்டு போகிறவர்களின் ஈனக்குணத்தையெல்லாம் -அதுவும் அவர்கள் வேண்டுமென்றும் அல்லது சொறிதல் சுகத்திலும் மீண்டும் மீண்டும் கூறும் பொய்களையெல்லாம்  'நமது சகோதரர்களின் அந்தரங்கங்களை மறைத்தல் &  மன்னித்துவிடுதல்' என்ற தலைப்பின் கீழே தொடர்ச்சியாக கண்டுகொள்ளாமலே கொண்டிருக்கப்போகின்றோமா?


முஸ்லீம்கள் என்றால் அவர்கள், இஸ்லாம் என்ற உணர்ச்சிமிக்க கவரிலே போட்டு எதைக்கொடுத்தாலும் எதைவேண்டுமானாலும் நம்ப விரும்புபவர்கள்தான் என்பதைத் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டே இருக்கப்போகின்றோமா?

 
-மூதூர் மொகமட் ராபி







 

Sunday, July 28, 2013

இயல்பான முகம் அழகானது!







ன்று காலையில், நீண்ட காலத்திற்குப் பின்னர், அனுபவத்தில் என் வயதையொத்த ஒர் இலக்கிய நண்பரைப் பார்த்து வரலாம் என்று சென்றிருந்தேன். 


ஒருகட்டத்தில், எங்கள்  பேச்சு, 'துணிவான படைப்புகளை எழுதினாலும் அவற்றை உடனடியாக வெளியிட நினைப்பது நமது இருப்புக்கே ஆபத்தாகி விடும்' என்ற ரீதியில் சென்று கொண்டிருந்தது.


அப்போது, சட்டென "முஸ்டீனை அறிவீர்களா?" என்று வெகுசாதாரணமாகத்தான் கேட்டார்.


ஆனால் அந்தக் கேள்வி இன்றைய எனது நாளை இப்படி பந்தாடப்போகின்றது என்பதை நான் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.


இந்த வகைப் பெயர்கள் எங்கோ கேள்விப்பட்டது போலிருந்தாலும் கூட ஞாபகம் வராதது போலெல்லாம் அதிகம் நடிக்காமல், வழக்கம்போல தெரியாது என்பதை தெரியாது என்றே பதில் சொன்னேன்.  "இதை வாசித்துப் பாரும். அதன் பிறகு தெரியும்" என்று ஒரு சிறுகதைத் தொகுப்பைத்தந்தார்.


அதன் பெயரே வில்லங்கமானது:  ஹராங்குட்டி சிறுகதைகள் !


காலைமுதல் இப்போதுவரை அதைப்படித்தபடியும் சிந்தித்தபடியும்தான் இருக்கின்றேன் என்றால் அது மிகையில்லை.


இதுபற்றி இனிவரும் காலங்களிலே நான் புரியும் தேடல்கள், கிடைக்கப்போகும் சார்பான தகவல்கள், சேர்க்கைகள் எவ்வாறான மாற்றங்களையும் புரிதல்களையும் எனக்குள் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் இப்போதைக்கு என்னால் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், இந்த நிமிடத்தில் இந்த எழுத்திலுள்ள சத்தியம் அல்லது அறம் என்னை மின்னலாய்த் தாக்குவதால் நிலைகுலைந்துதான் போய்விட்டேன்.


இதைச் சொல்வதற்காக நான் வெட்கப்படவில்லை. 'இப்படியெல்லாம் கூட சிந்திக்கும் நேர்மையும் துணிவும் சத்திய அறமும் உள்ளவன் நம்மவர்களிலும் இருக்கின்றானே' என்ற பெருமிதம்தான் வந்தது.


ஆம்! எத்தனை உயர்வான ஒப்பனையையும் விட இயல்பான முகம் எப்போதுமே அழகானதுதான்!


அதனால்தான் வேறு எதையும் யோசிக்காது...  அந்த மனிதன் தனது தொகுப்பில், 'சொல்ல நினைப்பதை... என்று குறிப்பிட்டிருக்கும் பிற்சேர்க்கையை மட்டும் அப்படியே தருகின்றேன்.



-மூதூர் மொகமட் ராபி



வாழ்க்கை குறித்த புரிதல்களை நிறையப் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். அதிலும் எனது சிறைச்சாலை வாழ்வு பற்றி நிறையப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன். 2011 ஜூலை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கிய எனது சிறை வாழ்க்கை மார்ச் 2012 வரை நீடித்தது. ஏழு மாதங்களைக் கடந்துவிட்ட இந்த சிறைச்சாலை வாழ்க்கைதான் எனது வாழ்வின் பொற்காலம். 

திருமணம் செய்து இரண்டரை மாதங்களில் என் மனைவியைத் தவிக்கவிட்டுவிட்டு நான் தனியாகப் போன பின் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் உயர் ரிச்டர் அதிர்வுகள் தான், காரணம் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அதனோடிணைந்த பிந்திய நிகழ்வுகளும்தான். உயர் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இந் நிகழ்வு குறித்து ஒன்றையும் என்னால் எழுதமுடியவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அது குறித்து என்னால் எழுத முடியும். இறைவன் நாடினால் நிச்சயம் அது அனைத்தும் என்றாவது ஒருநாள் எழுதப்படும். 
 
 
நான் திடீரென்று மரணித்தாலும் கூடக் கவலைப்படத் தேவையில்லை அனைத்தையும் எப்போதோ எனது குரலில் பதிவு செய்து பாதுகாப்பாக இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறேன். அதன் கடவுச் சொல்லைக் கூட என்னை உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒரு நண்பியிடம் கொடுத்தும் வைத்திருக்கிறேன். எனவே உலகுக்கு சொல்லப்படாதது எதுவும் சொல்லப்படாமலேயே போகாது. ஆதலினால் எப்போதும் நான் மரணிப்பதற்குத் தயார். ஏற்கனவே நான்கு முறை மரணித்தவன் தானே நான். என்னைக் குறி வைத்து துப்பாக்கி சுமந்து மறைந்திருந்த கோழைகளின் உயிர் குடிக்கும் ஆசை மயிரிழையில் தவறிப் போனது, 2004 டிசம்பர் 14 இரவு வேளை அடை மழையில் அவர்கள் நடாத்திய தாக்குதலில் நான் மரணித்துப் போனேன் என்று இப்போதும் கருதுகின்றேன். 
 
 
ரூபியா என்ற ஒருத்தி இல்லாது போயிருந்தால் இந்த முஸ்டீனின் மரணச் செய்தி பத்திரிகையில் வந்திருக்கும். 
'இனந்தெரியாதோரால் சுடப்பட்டு இளைஞர் மரணம் - காவத்தமுனையில் சம்பவம்' 
 
 
ஒரு ஐந்து செக்கன்கள் ரூபியா தாமதித்திருந்தால் சரியாக நடு மண்டையில் கைத் துப்பாக்கியின் குண்டுகள் இறங்கியிருக்கும். இரத்தக்காயத்தோடு நின்ற எனது அழைப்புக்கு உடனடியாகப் பதிலளித்து எனக்குஅடைக்கலம் தந்த ரூபியா எனது தாய் வழியிலும் தந்தை வழியிலும் உறவுக்காரி. அவள் அன்று செய்த பேருபகாரத்திற்கு இன்று வரையும் நான் கைம்மாறு செய்திலன்.
அந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து முதன்முறையாக எழுதுகின்றேன்.
முதலாவது சூடு காலில் பட்டதோடு சரி. 
 
 
இரண்டாவது மூன்றாவது குண்டுகளுக்கு எதுவும் சாதிக்க முடியாமல் போயிற்று. 
 
அன்றே எனது மரணம் நிகழ்ந்திருந்தால்...
 
 
'இவனுக்குத் தேவையில்லாத வேலை' 
 
 
என்ற அடிக்குறிப்புடன் எனது அத்தியாயம் மூடப்பட்டிருக்கும். உடம்பை மண் தின்று எந்தவொரு எச்சமும் இல்லாது போயிருக்கும். 
 
 
ஆனாலும் எனது உழைப்பு, சமூகத்துக்கான குரல், மக்களைக் காக்கும் முயற்சிகள், என்றாவது ஒரு நாள் யாராலாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுதான் காலத்தின் பணி, காலம் எதையும் சரியாகச் செய்யும். 
 
 
எனவே அந்த முதல் கொலை முயற்சியோடு நான் மரணித்துப் போனேன். 
இப்போது நான் வாழும் வாழ்க்கை எனக்கு மேலதிகமாகவும் அதிஷ்டமாகவும் கிடைத்தது. அந்த அதிஷ்டவசமான வாழ்க்கை மேலும் மூன்று முறை இலக்கு வைக்கப்பட்டது. அப்படியும் அது அவர்களினால் காவுகொள்ளப்படவில்லை. துப்பாக்கிதாரிகளால் கடைசிவரையும் கொல்ல முடியாமலேயே போயிற்று. எனவே ஏற்கனவே நான் நான்கு முறை மரணித்து விட்டேன். இனி மரணிக்கப் போவது ஐந்தாவது முறை. அதனால் மரணம் எனக்கு பொருட்டே கிடையாது. அதனால்தான் எல்லாவற்றையும் உடனுக்குடன் இப்போதுள்ள தொழிநுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி பதிவு செய்து ஆவணமாக்கி வைத்துள்ளேன். அதனால்தான் மிகப் பயங்கரமான விசயங்களைக் கூட எனது மரணத்தின் பின்னர் எனது குரலில் ஒரு வாக்குமூலமாக எனது கையெழுத்துப் பிரதியாக ஒப்பத்துடன் உலகு அறிந்து கொள்ளும் என்ற பெரும் ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் எனக்கிருக்கிறது. நெஞ்சில் தைரியமுள்ள எந்தக் கோழையும் எப்போதும் இந்தப் பிணத்தைக் கொல்லலாம். ஐந்தாவது முறையாக. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு இரண்டு மாதங்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன், எனது சிறை வாழ்க்கையின் எஞ்சிய காலம் பொலன்னறுவை சிறைச்சாலையிலும் கழிந்துள்ளன. இப்போது உலகில் மிகத் தெளிவானதும் மிக மகிழ்ச்சிகரமானதுமான ஒரு மனிதன் இருக்கிறான் என்றால் அது நான் தான். ஏனெனில் எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. அதனால் குழப்பமுமில்லை. எனது வாழ்க்கையில் இடப்பட்டிருக்கும் பல்லாயிரம் முடிச்சுக்களை இனிவரும் காலங்களில் எனது எழுத்துக்கள் அவிழ்த்துப் போடும். அதனால் நானாகவே பாதுகாப்பு கருதிப் போட்ட மர்ம முடிச்சுக்களும் இனி அவிழ்ந்து  போகும். அவை நிறையப் பேருக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கும், 
 
 
 
ஏன் எனது திருமணம் கூட எனது வாழ்வில் போடப்பட்ட, அதுவும் என்னால் போடப்பட்ட ஒரு மர்ம முடிச்சுதான், எனது மனைவிக்குக் கூடத் தெரியாது, அந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது அவளே அறிந்து கொள்வாள். அப்போது இரண்டு தெரிவுகள் அவளுக்கிருக்கும் 
 
 
ஒன்று உலகில் உள்ள எல்லோரையும் விட அதிகமாக என்னை அவள் காதலிப்பாள், கௌரவிப்பாள், நேசம் கொள்வாள் எனக்காகவே தன்னை அர்ப்பணிப்பாள், 
 
 
அல்லது விவாகரத்துப் பெற்றுக் கொண்டு சென்று விடுவாள். இதில் எது நடந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை, எது நடந்தாலும் நான் மரணிக்கும் வரை அவள் எனது நிழலில் இருப்பாள். அதிலிருந்து அவள் எப்போதும் விடுபட முடியாது. இப்படி எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக மாற்றுவதற்கான சிந்தனை சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட பின்னர் தான் எனக்குள் உதயமாகின்றது. 

 
செய்யித் குதுப், அப்துல் காதிர் அல் அவ்தா, ஸைனப் அல் கஸ்ஸாலி, ஹஸன் துராபி, அர்பகான், அஹ்மத் யாஸின் என்று எனக்குப் பிடித்த எல்லா மனிதர்களும் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதைப் படிக்கும் போது மயிர்கள் சிலிர்த்துவிடும். இதயம் கனத்துவிடும். சிறைச்சாலை என்பது உலகில் உள்ள ஒரு நரகம் என்று நினைத்துக் கொண்டேன். அந்தத் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வைக் கட்டமைக்கத் தொடங்குபவன்தான் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடிப்பான். எனக்கு சரித்திரத்தில் இடம் பிடிக்கும் ஆசையெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அதிகம், ஆசை என்று சொல்வதை விட பேராசை என்று சொல்வது மிகவும் பொருத்தம். எனக்குப் படிப்பித்தவர்கள் இந்தப் பெரியார்களைப் பற்றி மிக உணர்வு பூர்வமாக நிறையவே சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பட்ட வேதனைகளையும் அனுபவித்த கொடுமைகளையும் விபரிக்கும் போது அதை அனுபவித்தால் தான் நமது கொள்கையின் உறுதியை உணர்ந்து கொள்ள முடியும் என்று அப்போதுகளில் நினைத்துக் கொள்வேன். என்றாவது ஒரு நாள் நான் சித்திரவதைகளை அனுபவிப்பேன் என்றும் அப்போது தான் என்னை நான் சுயமதிப்பீடு செய்து கொள்ள முடியும் என்றும் உறுதியாக நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு முப்பது வயதாகு முன்னரே அதை அனுபவிக்க கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. ஒன்று சொல்லட்டுமா 
'உலகில் எந்தக் கொம்பனாலும் இந்த இறைவனின் அடிமையை தலை வணங்கச் செய்ய முடியாது' 
 
 
நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். எளிமையையும், ஏழ்மையையும், பணிவையும் மிகமிக அதிகமாக நேசிக்கின்றேன். உண்மையான வாழ்க்கையின் சரியான அடையாளங்கள் அவைதாம். அதனால் இந்த உயர்வு உயிர்ப்பானது. நாமெல்லாம் ஒரு கடுகுக்குச் சமன் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் மிகத் தெளிவாகப் பதித்துக் கொள்ளச் செய்த பேருபகாரம் சிறைச்சாலையையே சாரும்.   
   
 
 
பொலிசாரின் தண்டனைகள் மிகவும் கொடூரமானவை. மனிதாபிமானமற்றது. எத்தனை கோடி மனித உரிமைச் சட்டங்கள் இருந்தாலும் அவற்றால் எதையும் சாதிக்க முடியாது, 
 
 
வெறுமனே ஒரு கோஷம்தான்...இந்த மனித உரிமை மயிர் மண்ணாங்கட்டியெல்லாம் 
 
 
யாராலும் எதையும் தடுத்து நிறுத்த முடியாது. அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் நினைத்ததைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்,  மனித உரிமைப் போராட்டம் ஒரு அழகான கோஷம், அத்துடன் அது ஒரு நாய்ப் பொழப்பு. சும்மா சத்தம் போடுவதற்குச் சரியது, எளிதாக ஒரு உதாரணம் சொல்வேன் 
 
 
கடல் நீரை நன்னீராக மாற்றுவோம் என்று கூஜாக்களில் நன்னீர் சுமந்து கடலில் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். 
 
 
அத்தோடு சும்மா சத்தம் போடுவது, சின்னதாய் ஒரு சலசலப்புக்கும், நாய் தொண்டை நீர் வற்றக் குரைக்குமல்லவா அது போல, அதனால் இதை 'நாய்ப் பொழப்பு' என்றேன். 
 
 
இந்தியாவில் பொடா, தடா என்று பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு லட்சக்கணக்கில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் அப்பாவிகளையும் அபு கரீப், குவாதனாமோ போன்ற அமெரிக்காவின் சிறைக் கூடங்களில் நடக்கும் மனித இனத்துக்கெதிரான பாதங்களையும் இஸ்ரேலிய சிறைகளில் அனுவனுவாக சிதைத்துக் கொல்லப்படும் மனிதத்தையும்  இந்த உரிமைகளால் காப்பாற்ற முடிந்ததா? முடியுமா? ஒரு நாளும் முடியாது. உலகம் அழியும் வரை சிறைக் கூடமும் சித்திரவதையும் தொடரும் அதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிக் வேண்டுமல்லவா அதுதான் இந்த மனித உரிமைக் கோஷம். எந்த நாட்டில் வதை கூடம் இல்லை?. 
 
 
என்னை அவர்கள் நிர்வாணப்படுத்திய போது இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டேன். அவர்கள் செய்த வதைகள் அனைத்தும் எனது உறுதியை திடப்படுத்தி அதிகரிக்கச் செய்தனவே தவிர கொஞ்சம் கூட என்னை அது தளரச் செய்யவில்லை. அந்த வதைகளின் மூலம் என்னை நான் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டேன் என்று எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. நான் வீரன் என்று எனக்கு உள்ளுணர்வு சொல்லியது. 
 
 
வதை செய்பவனுக்கு அவன் எதிர்பார்ப்பது தேவை, அது கிடைத்து விட்டால் விட்டுவிடுவான், வதைக்கப்பட்டவன் பொய் சொன்னாலும் கூட. 
அத்தனை வதைகளையும் தாங்கிக் கொண்டு நானும் அவர்களை மிக மோசமாக வதைத்தேன். அதுதான் எனது மாறாத புன்னகை. அனைத்தையும் தாங்கிக் கொண்டு நான் புன்னகைக்கும் போது அவர்கள் மிருகமாக மாறிப் போவார்கள். 
 
 
நித்திரை கிடையாது. சாப்பாடு கிடையாது, தண்ணீர் கிடையாது எனக்கு அவை மிகவும் சுவாரஷ்யமாக இருந்தன. அவர்கள் எதிர்பார்த்த எதையும் நான் கொடுக்கவில்லை. நானும் நடிக்கத் தொடங்கினேன். அவர்கள் நினைத்தார்கள் நான் கும்பிட்டு சரணாகதி அடைந்து கெஞ்சுவேன் என்று. 
 
 
கைகளைப் பின்னால் வைத்து கழுத்துக்கு மேலால் முதுகுப் பக்கமாக ஒரு கையையும் இடுப்போடு இணைந்து மறு கையையும் முதுகுப் பக்கமாக இணைத்து விலங்கு போடுவதற்கு மூன்று பேர் முயற்சித்தும் அது அவர்களால் முடியாமல் போனது. நான் தீவிரவாதி தானே அதனால் அவர்கள் நினைத்த மாதிரி என்னைக் கையாளலாம். கொன்றால் கூட சட்டமும் நீதியும் நியாயமும் சரியென்று விழி நிலையில் மௌன அங்கீகாரம் கொடுக்கும், கடைசியில் விலங்கு மாட்டத் தோற்றுப் போய், இரண்டு விலங்குகளில் கைகளை இணைத்தார்கள். அதை எனக்கு சொகுசாக நான் மாற்றிக்கொண்டேன். ஒரு கைவிலங்கினால் இரண்டு கைகளையும் பிணைத்துவிட முடியும். ஆயினும் அதற்கு நான் அவகாசம் கொடுக்கவில்லை. ஒரு விலங்கினால் பிணைத்தால் பத்து நிமிடத்தில் செத்து விடலாம் என்று தோன்றும் ஆறு மணித்தியாலங்கள் அதே நிலையில் தொங்கிக் கொண்டிருந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும். அவ்வளவு எளிதில் எதையும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. என்னை வதை செய்த எவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. இப்போதும் கூட அவர்களை நான் உண்மையாக நேசிக்கிறேன். வதை செய்தல் மூலம் என்னை எனக்கு அடையாளம் காண்பித்த அவர்களை கோபிக்க முடியுமா? 
 
 
அப்போது எனக்கு ஒன்று தெளிவாய் புரிந்தது அதைச் சொல்ல நான் யாருக்கும் பயப்படவும் தேவையில்லை. அது ஆணவத்தின் வெளிப்பாடும் இல்லை. முட்டாள் தனமுமல்ல. யாராலும் என்னைத் தகர்த்து விட முடியாது. நான் எதற்கும் அஞ்சுபவனுமல்ல. அச்சம், பயம் என்று எதுவும் என்னிடம் ஒரு துளியளவும் கிடையாது. என்னால் எல்லாம் செய்ய முடியும். என்னால் எதுவும் செய்ய முடியும். ஒரு போர்க்களத்தில் தளபதியாகவும் நிற்க முடியும். கடைக்கோடியில் பண்டம் சுமக்கும் ஒரு கழுதை போலவும் இருக்க முடியும். பேனை தூக்கி ஒரு பத்திரிகை ஆசிரியராய், வானொலியில், தொலைக்காட்சியில் எதிலும், அதுபோல கெமரா தூக்கிய ஒரு ஒளிப்பதிவாளனாய், இயக்குநராய், ஏன் ஒரு ஆன்மீகத் தலைவனாய், அரசியால் வாதியாய், பெருஞ்செல்வந்தனாய், ஒரு எளிமையான ஏழ்மை வாழ்வு வாழும் ஏழையாய் .... யாராலும் என்னைத் தகர்த்துவிட முடியாது. என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் எல்லாவற்றையும் மிஞ்சி நான் அல்லாஹ் என்ற ஏக இறைவனின் ஒரு பலவீனமான மனித அடிமை அவனுக்கு முன்னால் மட்டுமே எனது சிரம் பணியும். மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவன்  வேறு எப்படிச் சிந்திக்க முடியும். நான் சொல்ல நினைப்பதைச் சொல்லி விடுவேன், செய்ய நினைப்பதைச் செய்து விடுவேன். யாருக்கும் அடி பணிந்து தாழ்ந்து போகும் எண்ணம் எனக்குக் கிடையாது. 
 
 
'தலை வணங்கு, சரணடைந்து விடு இல்லாவிடின் அடுத்த செக்கன் உன்னைக் கொல்வோம்' என்றாலும் கூட சும்மா ஒரு பேச்சுக்காகவேணும் அடிபணிய நான் தயாரில்லை 
 
 
'கொல்லப் போகிறாயா கொல்' 
 
 
அதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது உலகத்தைக் கட்டியாள நான் நினைக்கவில்லை பிறகு ஏன் சாவைப் பற்றி பயப்பட வேண்டும். 
நான் எனது சிறுவயது முதல் ஒரு கொள்கையைச் சுமந்திருக்கிறேன். அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்ய வேண்டும். அந்தக் கொள்கையை நான் தான் காப்பாற்ற வேண்டும் என்பதில்லை. அதற்கு என்னால் முடிந்ததைச் செய்தல், அவ்வளவு தான் என் பணி. என்னைப் போல லட்சம் பேர் கொல்லப்பட்டாலும் அந்தக் கொள்கையானது  வாழ்ந்து கொண்டுதானிருக்கும், உலகின் கடைசி மனிதன் மரணிக்கும் வரை. பின்னர் ஏன் நான் அதற்காக அலட்டிக்கொள்ள வேண்டும். எனது பங்கு என்னவென்பதை மட்டும் நான் யோசிக்கின்றேன். அதைச் செய்ய துடிக்கின்றேன், முயற்சிக்கின்றேன், செயற்படுகின்றேன். 
 
 
யாருடைய அங்கீகரமும் எனக்குத் தேவையில்லை,  ஒரேயொருவரின் அங்கீகாரம் மட்டுமே தேவை, அது அந்தக் கொள்கையின் சொந்தக்காரன். அவன் எனது உள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் தெரியும் நான் யார் என்று. ஆக பலவீனமான மனிதர்கள் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை, அதற்கு தயாருமில்லை. என்னைப்பற்றி யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். அவையொன்றும் எனது கொள்கைப்பிடிப்பிலும், லட்சியத்திலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திடாது. அதே நேரம் அவர்கள் மீது கோபமோ ஆத்திரமோ கூடக் கொள்ளத் தேவையில்லை. அனைத்தையும் ஒரு புன்னகையால் எதிர்கொள்ள எனக்குத் தெரியும். எனவே தான் யாருக்கும் எதற்கும் அஞ்சும் அவசியம் எனக்குக் கிடையாது என்று சொன்னேன். எனக்குள் இந்த ஓர்மத்தைப் பட்டை தீட்டியது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ள வாழ்வுதான். அதைப் பட்டை தீட்டியவர்கள் அதிகாரிகள் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை நேசிக்கிறேன். கனவுகளையும் லட்சியங்களையும் உறுதியையும் பற்றையும் பட்டை தீட்டிப் பொலிவு பெறச் செய்து ஒரு வெளிச்சத்தை எனக்குக் காண்பித்தது சிறைச்சாலையின் சூரிய ஒளி படாத எந்த வசதிகளும் இல்லாத ஒரு அறைதான். 

பொதுவாக சிறைச்சாலை ஓர் உயர்ந்த பாடத்தைக் கற்றுத் தரும். அது நம்மைச் சூழ இருப்பவர்கள் யார்? உண்மையாகவே நம்மை நேசிப்பவர்கள் யார்? நம்முடன் உண்மையான நட்பு பாராட்டியவர்கள் யார்? நமது நண்பர்கள் யார்? அவர்களின் தரம் என்ன? இதுபோக தனிப்பட்ட ரீதியில் சில விசயங்களை அது நமக்குக் கற்பிக்கும். எனது தாய், எனது மனைவி, எனது நெருங்கிய உறவுகள் அனைவரையும் மிகத் துல்லியமாக நான் கணித்துக்கொள்ள எனக்கு எத்தனை ஆயிரம் சந்தர்ப்பங்களை சிறைச்சாலையின் ஒவ்வொரு நிகழ்வும் ஏற்படுத்தித் தரும் தெரியுமா? மனிதர்கள் மாறும் நிலைப்பாடுடையவர்கள் எப்போதும் எல்லாமும் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும். வீழ்ச்சி வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். அப்படி ஒரு திடீர் வீழ்ச்சி வந்து விட்டால் அத்தோடு எல்லாம் முடிந்து விட்டன என்று நினைக்கிறார்கள். அதன் பின்னர்தான் அவர்களின் வார்த்தைகள் கடிவாளமின்றிய மூர்க்கத்தனமிக்க போர்க் குதிரைகள் போல் எல்லாப் பரப்புகளிலும் விரவித் தாக்குகின்றன. தம்மை நியாயப்படுத்துவதிலும், தன்னை நிலை நிறுத்துவதிலும் மட்டுமே, அனைவரும் மிக மிகக் கவனமாக இருப்பார்கள். 

 
அடுத்தது நண்பர்கள், ஒன்றாகப் படித்தவர்கள், எந்தவொரு யதார்த்தத்தையும் தேடாமல் நிகழ்வுகளை வைத்து முடிவெடுத்து மின்னல் வேகத்தில் அதைப் பரப்பி விடுவார்கள். 
 
 
நான் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது, நான் கல்வி கற்ற ஜாமியா நழீமியாவின் பழைய மாணவர் சங்கமான ரபிததுன் நழீமிய்யீன் தனது பொதுக் கூட்டம்மொன்றில், ஜாமியா நழீமியாவில் கல்வி கற்ற மாணவர்களில் நானும் ஒருவன் என்றவகையில் அவர்கள் பேசிக்கொண்ட விடயங்களில் எனது கைது பற்;றிய கருத்தாடல் மிக முக்கியமானதொன்றாகவும் இருந்ததாம். 
 
 
வெளியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பற்றிய செய்திகள் என்னை வந்தடைந்து கொண்டேயிருந்தன.

ஜாமியா நழீமிய்யாவின் எனது தோழர்களே! உங்கள் யோக்கியம் என்னவென்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். என்னை விமர்சிக்கவோ என்னைக் குறித்து கருத்துச் சொல்லவோ உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அருகதை இல்லை. நான் நழீமியாவின் கற்கையை பூரணப்படுத்தவில்லை. அதைப் பூரணப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. எனது பாதை நிதானமானது அது உங்களைப் போல கனவுகளாலும் கற்பனைகளாலும் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளாலும் சோடிக்கப்பட்டதல்ல. அது எதார்த்தமானது. நீங்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நிறைய விசயங்களைச் செய்து முடித்துவிட்டேன். எனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விசயத்தைக் கூட உங்களால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் இன்னும் கோட்பாடுகளில்தான் கதையளக்கிறீர்கள் நான் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றேன். உங்கள் உலகம், நகர்வு, சிந்தனை, செயற்பாடு, நிதிமூலம் வளவாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் யார்? அனைத்தும் எனது விரல் நுனியில் இருக்கிறன. ஆனால் பாருங்கள் என்னைப்பற்றி உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது. 
 
 
காரணம் தெரியுமா நீங்கள் தேடல் நடாத்தவில்லை. நான் தேடல் நடாத்தினேன். உங்களைப் போல எனக்கு 'பலாய்' கழுவிக் கொண்டிருக்க அவகாசமிருக்கவில்லை. 
 
 
 
எனவே தோழர்களே இதன்பிறகாவது என்னைப்பற்றி தேடிவிட்டு கருத்துச் சொல்லுங்கள். 
 
 
 
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் பத்திரிகையான எங்கள் தேசத்தில் ஒரு கட்டுரை வந்தது. அதில் கட்டுரை எழுதியவனுக்கு எழுத மட்டும்தான் தெரியும். எதைப் பற்றியும் தேடல் நடாத்தாத எருமை மாடு அந்த எழுத்தாளன். அந்தக் கட்டுரையைப் படித்த போது எனக்குச் சிரிப்பு வந்தது. இப்படிப்பட்ட எருமைகளை நம்பி ஓரு இஸ்லாமிய இயக்கம் பத்திரிகை நடாத்துவதை நினைத்துத்தான் அந்தச் சிரிப்பு.

உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லவா?
 
 
சமூகக் களம் என்பது நளீமிய்யாவுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பது போல மொழிபெயர்ப்புச் செயற்பாடும் கிடையாது. தகவல்களைப் பொறுக்கி கோர்த்து விடும் செயற்பாடும் கிடையாது. 
 
 
'இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிஸம்' பற்றித் தெரியுமா?  புலனாய்வுப் பத்திரிகையாளனாய் உள்ள ஒருவன் நீண்ட தேடலின் பின்னும் ஆய்வின் பின்னும் எழுத வேண்டிய விசயங்களை சும்மா கண்ட கண்ட மாதிரி நளீமிய்யாவுக்கு இறுதி வருட ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போக்கில் எழுதுவது பொறுத்தமானதல்ல. எனவேதான் எதையும் சரியாக துல்லியமாக ஆய்ந்தறிந்து மிகச் சரியாச் செய்ய முனைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பாலர் வகுப்புப் பிள்ளை திடுக்கதை சொல்வது போன்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சுமக்கும் பொறுப்புக்கேற்ப தகுதியை மேம்படுத்துங்கள். 

நீங்கள் அனைவரும் இந்த முஸ்டீனைப் புரிந்து கொள்ள மிக நீண்ட காலம் எடுக்கும். விரைவில் உங்கள் அனைவருக்கும் எனது உதவி தேவைப்படும் அப்போது அள்ளுண்டு வருவீர்கள், அது உங்களுக்குள்ள நிர்ப்பந்தம், காலத்தின் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவத்தின் அறுவடையாகச் சொல்கின்றேன். நிச்சயம் வருவீர்கள், அப்போது உங்களைப் பார்த்துப் புன்னகைப்பேன். வஞ்சமின்றி. இன்ஷா அல்லாஹ்

சிறைச்சாலைக்குச் சென்றபின்னர் எனக்கு மிகவும் பெரிய ஓய்வு கிடைத்தது. நிறையச் சிந்திக்கவும் எழுதவும் அவகாசம் கிடைத்தது. வெளி உலகில் குற்றம் புரிந்து மாட்டிக்கொள்ளாத, உள்ளத்தை மறைத்து பொய்மையோடு வாழும் எதிர்மறை மனிதர்களோடு வாழ்ந்தேன். ஆனால் சிறையில் குற்றம் புரிந்து அகப்பட்டுக் கொண்டதும், குற்றம் நிரூபிக்கப்பட்டதுமானதும்,  சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து  வைக்கப்பட்டிருந்ததுமான மனிதர்களுடன் வாழ்கிறேன். மொத்தத்தில் குற்றவாளிகளுடன் வாழ்வதாக பொதுவாக எடுத்துக் கொண்டேன். இங்கு இவர்களிடம் வெளியில் உள்ள மனிதர்களிடம் போன்று போலி கிடையாது. அனைவரும் நேர்மறை மனிதர்கள், மிகவும் வெளிப்படையானவர்கள். உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விடுவார்கள். அவர்கள் செய்த குற்றத்தை அப்படியே ஒழிவு மறைவின்றி காலப்போக்கில் ஒப்புவித்துவிடுவார்கள். கைதிகளுக்கு வேஷம் போடத் தெரியாது. வேஷம் போட்டால் அது வெளிப்படையாகத் தெரிந்து விடும் இந்த புள்ளியில் இருந்தது தான் எனது சிந்தனை சூடு பிடித்தது. வாழ்க்கை பற்றிய தேடல் நிதானத்துடன் என்னை தள்ளிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் புரிந்துக்கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது. 

 
இந்நிலையில் கிடைக்கும் நிதானம் கடந்தகால வாழ்வையும், எனது வாழ்வில் கடந்துபோன அனைத்து மனிதர்களையும் ஒவ்வொருவராகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது. ஒவ்வொரு செயற்பாடுகளையும் வார்த்தைகள் கூட மாறாமல் நினைவுத் திரையில் இருந்து மீட்டெடுத்து மீள்படைப்புச் செய்துவிடுகின்றது. எல்லா நிகழ்வுகளையும் மிக அமைதியாக அசைபோட முடியுமாக இருக்கிறது. 
 
 
அப்போது பல விடயங்கள் தெளிவாகப் புரிந்தன, அவை... 
 
 
 
சிறைச்சாலை சென்று வந்த ஒருவன் ஏன் தெளிவாக இருக்கிறான் என்பதும், சிறைச்சாலையில் இருந்து வரும் எழுத்துக்கள் ஏன் வீரியம் மிக்கவையாக இருக்கின்றன என்பதும். சலனமில்லாத சிந்தனைக்கான சூழலை சிறைச்சாலை உருவாக்கி விடுகிறது என்பதும்தான். 
 
 
 
இங்கு பொறுப்புகள் குறைவு. சாப்பிடுவதும், நித்திரை செய்வதும் தான் முக்கியமான வரையறுக்கப்பட்ட கட்டாயம் செய்ய வேண்டிய பணிகள். ஆயினும் அதில் கூட பலத்த நிர்ப்பந்தம் கிடையாது, இப்போது எழுதும் ஒருவனின் மனோநிலை தெளிந்த ஓடை போன்றது. அந்த எழுத்தில் குழப்பம் இருக்காது. தடுமாற்றம் இருக்காது ஒரு ஞானம் இழையோடும். அது சிறைச்சாலையில் மட்டுமே வசப்பட்டுப்போவது. 

 
சமூகத் தளத்தில் நான் நிறையப் பேருடன் பல்வேறுபட்ட நிலையில் பழகி இருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார ஆழமாக நேசித்தேன். அவர்கள் மீது எந்த எதிர்பார்ப்புகளுமில்லாது உண்மையான அன்பை மட்டுமே செலுத்தினேன். அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள என்னால் முடிந்தது. 
 
 
இரண்டு எளிய சம்பவங்களை நினைவு கூருகிறேன். 
 
 
ஒர் அரச அதிகாரி, என்னைவிட இரண்டு தசாப்தங்கள் வயதில் மூத்தவர். என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுகின்றவர், சமூக விவகாரங்களில் ஒன்றித்து இயங்குபவர், பலர் என்னிடம் அவரைப் பற்றி மிக மோசமாகச் சொல்லியிருக்கிறார்கள் அப்போதெல்லாம் அவரை நியாயப்படுத்தி நான் அறிந்த உண்மைகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். அவருடன் நான் கொஞ்சம் நெருங்கிப் பழகுவதன் காரணத்தினாலும் அவரை மிகவும் நெருக்கமாக ஓரளவு அறிந்தவன் என்ற வகையினாலும் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நான் புரிந்து கொண்ட நியாயங்களால் மறுதலிக்க முடியுமாக இருந்தது, அதற்காக அவரிடம் எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை, அவருக்காக நான் கொடுக்கும் குரலை பெரும்பாலும் அவர் அறிந்துமிருக்கமாட்டார், சிலவேளைகளில் யாராவது சொல்லியிருந்தால் வாய்ப்புண்டு,  அவருக்கு ஒரு முறை பொருளாதாரப் பிரச்சினை வந்துவிட்டது. ஒன்றரை லட்சம் ரூபாய் உடனடியாகத் தேவைப்பட்டது. அப்போது எனது பராமரிப்பில் இருந்த ஒருவருக்காக வீடு கட்டிக் கொண்டிருந்தேன். அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத்தில் உடனடியாக ஒரு லட்சம் ரூபாவையும் பின்னர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஐம்பதாயிரமுமாக அவரின் தேவைக்கு அவசியமான தொகை கொடுக்கப்பட்டது. அவர் மீது நான் வைத்திருந்த மரியாதையும் அன்பும் அப்படி என்னை செயற்பட வைத்தன. எப்போது தரவேண்டும் என்ற காலம் கூட நிர்ணயிக்கவில்லை. அவருக்கு வசதிப்படும் போது என்னைக் கஸ்டத்தில் ஆழ்த்தாமல் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணம் வரவில்லை. நான் குறிப்பால் உணர்;த்தினேன் அவருக்கும் அது தெரியும் தரக் கூடிய நிலையில் அவர் இருக்கவில்லை. அதனால் நானும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. 

 
ஒன்றரை வருடங்கள் வீடு கட்டும் பணி பிற்போடப்பட்டது. அதனால் அந்த ஜீவனின் திருமணமும் பின்னோக்கிப் போயிற்று. பின்னரும் நான் அந்தப் பணம் குறித்து பெரிதாக எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. எனக்கு இறுக்கம் வரும் போது இங்கிதமாக குறிப்பால் உணர்த்துவேன். அவரால் முடிந்தால் தருவார். இல்லாத போது விட்டுவிடுவார். இப்படி ஒரு நல்ல புரிதல், நான் மனதார அவர் மீது அன்பு சொரிந்தேன். பின்னர் படிப்படியாக அவர் தனது கடனை நிறைவேற்றினார். 

 
நான் சிறைச்சாலைக்கு வந்தபின்னர் எனக்கு கிடைத்திருந்த அவகாசத்தை நபிமொழிகளைப் படிப்பதில் செலவிடலாம் என்று தோன்றியது. எனது உறவுக்காரர் ஒருவரை அவரிடம் உரிமையோடு அனுப்பிவைத்தேன். அவரிடம் இருந்த நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புஹாரியின் முதல் மூன்று பாகங்களையும் வாங்கி வரும்படி சொன்னேன்,  உறவினர் சென்று  அவரிடம் கேட்டபோது, அவர் ஒரு கேள்வி கேட்டாராம். 
 
 
'எப்போது திருப்பித் தருவார்' என்று 
 
 
மிக வேதனையோடு உறவுக்காரர் வந்து தகவல் சொன்னார், அனைத்தையும் மறந்து விடுங்கள் என்று அவரைச் சமாதானம் செய்து வைத்தேன். 
 
 
அந்த வலி அது மறக்காது மாறாது. பின்னர் நான் ஒரு நண்பர் மூலமாக நபிமொழித் தொகுப்புகளைப் பெற்றுக் கொண்டேன். 
 
 
அவர் எனக்காகவே புதிதாக அந்தத் தொகுப்புகளை வாங்கி அனுப்பியிருந்தார். 
சில புத்தகங்களை இரவலாக வாங்கிப் படிப்பதற்கு கூட அவரிடம் நான் பெறுமதியற்றுப் போனேனா என்று யோசித்தேன். என்ன செய்வது மனிதர்கள் இப்படித்தான் எப்போது மாறிப்போவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனாலும் ஒரு உண்மை என்னுள் ஆழமாகப் பதிந்து போனது. 
 
 
அவர் என்னை உண்மையாக நேசிக்கவில்லை. இப்படி எத்தனை பேர் இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர்கள் மீது நான் கொண்டுள்ள உண்மையான அன்பையும் மரியாதையையும் என்னால் விலக்கிக் கொள்ள முடியவில்லை பரிதாபத்திற்குரியவர்களாக மாறிப்போன அவர்களை இப்போதும் நேசிக்கிறேன். 

மற்ற சம்பவம் இரண்டு இலக்கியப் பேர்வழிகள் அவர்கள் பற்றிய தப்பான புரிதல்களை கொண்டுள்ள பலரிடம் நேரடியாகச் சென்று அந்தத் தப்பான புரிதல்களை நீக்குவதற்காக நீண்டநேரம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவர்களுடன் கூடவே இருந்து கொண்டு நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் சிலர் மற்றவர்களிடம் மோசமாகப் பேசும் போது அதை உடைத்து நான் அவர்களை நியாயப்படுத்தியிருக்கிறேன். ஒருவர் மூத்த இலக்கியவாதி, ஒரு சிறுகதையாசிரியர், ஒரு தேர்ந்த வாசிப்பாளன். மற்றவர் அவருக்குப் பிந்திய தலைமுறை, அவர் ஒரு மௌலவியும் கூட, அத்துடன் கவிதை. சிறுகதை பத்தி எழுத்து என்று நன்கு அறியப்பட்டவர், ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதியும் கூட, இவர்கள் இருவரும் என்னைவிட வயதில் மிகவும் மூத்தவர்கள். அவர்களைப் பற்றி அரசல் புரசலான நிறையச் செய்திகள் வரும் அது தானே இலக்கிய உலகத்தின் நியதி. பிரதேசத்தின் பிரபல கவிஞர் ஒருவருடன் அவருடைய வீட்டிலேயே அந்தக் குறிப்பிட்ட இரு இலக்கியவாதிகள் தொடர்பாகவும் கவிஞர் முன்வைத்த அவர்களது சமயக் கொள்கை, இலக்கிம் சார்ந்து தன்னிலையான குற்றச்சாட்டுக்களை நான் பலமாக எதிர்த்து உடைத்தேன். அந்தக் காரசாரமான விவாதத்தின் பின்னர் எமக்குள் சின்னதாய் ஒரு இடைவெளி கூட வந்தது. அதைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. 

காரணம் அந்த இலக்கியவாதிகள் இருவரோடும் மிக நெருக்கமாக நான் பழகியிருக்கிறேன், அவர்களின் நடையுடை பாவனைகளை அவதானித்திருக்கிறேன், அனைத்திற்கும் மேலாய் குரோதமாகப் பேசும் அல்லது தப்பபிப்பிராயம் கொண்டு கருத்துரைக்கும் போக்கு என்னிடம் இருக்கவில்லை, யாரோ சொன்னார்கள் என்று அதில் தொங்கிக் கொண்டு யாரையும் வார்த்தைகளால் நான் தாக்குவதுமில்லை அப்படித் தன்னிச்சையாகத் தாக்குபவர்களை அப்படியே விட்டுவிடுவதுமில்லை, அதனால்தான் அவர்களினைப் பற்றிய தப்பான கருத்தியலை அது தப்பானதுதான் என்று நிறுவ முயன்றேன். 
 
 
ஆனால் நான் சிறைக்குச் சென்ற பின்னர் அது எல்லா ஊடகங்களினதும் செய்தியாக மாறியது, அது முழுமையாக ஒரு பக்கச் செய்தி மட்டுமே, எந்தவொரு ஊடகத்துக்கும் செய்தி வழங்கும் உரிமை எனக்களிக்கப்படவில்லை, ஒவ்வொருவரும் எழுதியது செய்தியானது, பொலிசார் சொன்னது உண்மையானது என்னைப் பிடிக்காதவர்கள் நினைத்ததெல்லாம் சத்தியமானது, குறிப்பிட்ட அந்நிகழ்வு தொடர்பில் என்னால் சொல்லப்படாத அனைத்தும் மறைந்து போக நான் குற்றவாளியாக்கப்பட்டேன், அப்போதும் எனக்கு ஒரேயொரு உறுதியான நம்பிக்கையிருந்தது
 
 
'என்னைப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் என்னை நியாயப்படுத்துவார்கள், அவர்கள் தன்னிச்சையாக இந்தப் போலியான கருத்துக்களின் பின்னால் இழுபட்டிட மாட்டார்கள்' என்பது அது. ஆனால் நடந்தது???

 அந்த இரு இலக்கியவாதிகளும் வெளியிட்ட கருத்துக்களும் இணையத் தளத்தில் இட்ட பின்னூட்டங்களும் இப்படியமைந்தது, 
'சம்பவம் நடந்து எமது பிரதேசத்தில்தான் இப்படி ஈனத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்ட அந்த ஒருவருடன் இவ்வளவு காலமும் பழகி இருக்கிறோமே என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று அதிர்ச்சியடைகிறோம்' 

அவர்கள் இருவருக்கும் சபாஷ் சொன்னேன். 
 
 
சத்தியமாக நான் இப்போது வெட்கப்படுகின்றேன். இவர்கள் மீது நேசம் கொண்டதற்காக, 
எதையும் ஆய்வு செய்யாது தேடல் செய்யாது ஒருபக்க செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எப்படி இவர்களால் இப்படி அநாகரீகமான கருத்துச் சொல்ல முடிந்தது. 
அப்படியாயின் அவர்களின் எழுத்துக்களும், சமூகத்தின் மீதான அவர்களின் பார்வையும் மற்றவர்களின் மீதான அவர்களின் விமர்சனமும் 'ஒன்லி வன் சய்ட்' தான், ஒரு பக்கச் செய்திதான். 
அவர்களின் எழுத்தில், பேச்சில் உண்மையில்லை 
அப்படியாயின் செயற்பாடுகளும் கூட உண்மையாக இருக்காது. இப்போது நான் படும் வெட்கம் அப்படியாக உண்மைகளை உணர்ந்ததன் விளைவாகத்தான். அவர்களைப் பற்றி மோசமாக ஒரு செய்தி வரும்போது நான் உரத்து மறுதலிப்பேன் ஏனெனில் எனக்குத் தெரியும் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அதுதான் உண்மையான புரிதல் மற்றும் உண்மையான நேசத்தின் வெளிப்பாடு. என் மனதில் நிலைகொண்ட குறைபாடு அவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். பிரயாணம் செய்திருக்கிறேன். கருத்துப் பறிமாறியிருக்கிறேன் அப்போது என்னைவிட வயதில் மூத்த அவர்கள் என்னை விளங்கிக்கொள்ளாமலா போனார்கள். 
'சேச்சே' முஸ்டீன் அப்படி செய்திருக்காது. அதற்குப் பின்னால் ஏதோ ஒரு உண்மை மர்மமாக மறைந்திருக்கும். எங்களுக்குத் தெரியும் தானே முஸ்டீனைப் பற்றி' இப்படித்தான் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அது தான் உண்மை, யதார்த்தம். புரிதலின் சரியான அர்த்தம். 
ஆனால் அவர்கள் வன் சைய்ட்.... சிக்கிக்கொண்டு அதை எவ்வளவு தைரியமாக இணையதளத்தில் பதிவு செய்து விட்டார்கள். அதிலிருந்து
 
 
இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தன. 
 
 
ஒன்று இதை இனி முஸ்டீன் எங்கே பார்க்கப்போகிறான் என்று கருதிக் கொண்டது 
 
இரண்டு, இந்த முக்கியமான தருணத்தில் நமது கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதுவும் விசயத்தின் போக்கிற்கு ஏற்ப, காரணம் நாம் பெரிய இலக்கியவாதிகள் என்ற மூன்றாந்தர சாக்கடைச் சிந்தனையும் அழுகிப் போன ஆசையும் அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். 

தோழர்களே!  முஸ்டீன் மட்டும் தான் சிறைச்சாலையில் அவனது கண்கள் சிந்தனைகள், மூளை, இதயம் என்ற எல்லா வார்ப்புக்களும் சிறைச்சாலைக்கு வெளியேதான் உயிர்ப்போடு இருந்தன. மறந்து விடாதீர்கள் ஆனால் ஒன்று விரைவில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். இது குறித்தெல்லாம் கேட்பேன். அப்போது போலியான புன்னகையாலும் புணைந்தெடுக்கப்பட்ட வறண்ட வார்த்தைகளாலும் என்னை திருப்திப் படுத்தலாம் என்று நினைத்து விடாதீர்கள், நீங்கள் திருப்தியாக பதிலளிக்காவிட்டால் நான் பேனையாலும் கெமராவாலும் உங்களைத் தண்டிப்பேன், அது மிக மிகக் கேவலமான தண்டனையாக இருக்கும். சட்டம் அப்போது மௌனித்துப் போகும். 

காத்தான்குடியில் ஒரு நண்பன் பற்றிய செய்தி வந்தது. 
 
 
ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருந்த வேளை ஊர் மக்களால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசலில் ஒப்படைக்கப்பட்டார். 
 
 
எனக்கு இச்செய்தி எத்தி வைக்கப்பட்டபோது அது ஹொட் நியூஸ், ஆனால் அது என்னில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. தகவல் சொன்னவருக்கு நான் சொன்னேன். அவன் அப்படி ஒருபோதும் தகாத உறவு கொண்டிருக்க மாட்டான் அதில் வேறு ஏதோ சிக்கல் இருக்கிறது. ஏனெனில் அவன் எனது நண்பன் அவனுடன் பழகியிருக்கிறேன். அவனை எனக்குத் தெரியும். 
எல்லோரினதும் ஒருமித்த கருத்து அவன் தப்புச் செய்தான் என்பதுதான் 
சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளிவாயலில் கூட அவன் விசாரிக்கப்பட்டு இருக்கிறான். அந்தச் செய்திகள் எல்லாம் கிடைத்த போது கூட நான் கொஞ்சமும் அவன் மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை. அவன் மீது கோபம் வரவில்லை. எனக்கு கிடைத்த தகவலை அப்படியே நான் பலருக்கும் சொல்லவும் இல்லை, என்னிடம் தகவல் கேட்பவர்களுக்கும் நான் சொன்னது 
'சம்பவம் நடந்தது உண்மை ஆனால் குறித்த நபர் அப்படிச் செய்யக் கூடியவரல்லர். அதன் பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கக் கூடும்' 
 
 
அப்படித்தான் அதன் மீதான வேகத்தை என்னால் உடைக்க முடிந்தது. இறுதியில் எனது நம்பிக்கை வென்றது. சதியின் பிடி வலு விழந்தது. அவனுக்காக எதிரிகளை வீழ்த்த, எனது உயிரை இழப்பதற்கும் சிரமமிக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நான் தயாராக இருந்தேன். அவனுக்காக நானும் சிந்தித்தேன். 
 
 
இப்படித்தான் என்னால் எந்தவொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ள முடிந்தது. உலகமெல்லாம் அளந்த அந்த நண்பனுக்கு சிறைச்சாலைக்கு வந்து என்னைப் பார்க்க அவகாசம் இல்லாமல் போனது மிகவும் துரதிஷ்டமானது. அதைவிட மிகவும் துரதிஷ்டமானது அவனது கருத்துக்கள்

'உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். மதியாதோர் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதர்க்கு ஒளவை சொன்னது அதில் அர்த்தமுள்ளது' 

எல்லாப் புரிதல்களையும், என் நண்பர்களையும் நேசத்துக்குரியவர்களையும் நான் இப்படியே எடுத்துக் கொள்கிறேன். அவர்களுடன் நெருக்கமான உறவு பாராட்ட இனி நான் தயாரில்லைதான் ஆனாலும் அவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றை நான் அவர்களிடம் கட்டாயம் கேட்பேன். அவர்களின் நியாயப்படுத்தல்கள் எப்படிப்பட்டவை என்பதை அறிய வேண்டாமா? 

இப்படி ஒவ்வொருவராக இவ்வளவு துல்லியமாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது சிறைச்சாலையில்தான். இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்கு உருவாக்கித் தந்தது சிறைச்சாலைதான். 
 
 
அடுத்துவரும் முப்பது வருடங்களுக்கு எனது செயற்பாட்டுத்தளம் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே போடப்பட்ட எனது எதிர்காலத் திட்டத்தை மிகமிக வினைத்திறன் கொண்டதாக வடிவமைக்க எனக்குப் போதிய அவகாசம் சிறைச்சாலையில்தான் கிடைத்தது. 
 
 
எனது மரணம் எப்போது என்பது எனக்குத் தெரியாது. அடுத்த செக்கனும் மரணிக்கலாம், இன்னும் ஐம்பது வருடங்களின் பின்னும் மரணிக்கலாம், மரணத்தை தீர்மானிப்பது இறைவன். எனவே மரணம் வரும்போது வரட்டும் அதுவரைக்கும் வாழ்வதற்கான திட்டமிடலை நான் போட்டுக் கொள்ளத்தானே வேண்டும். சிறைச்சாலை என்னை எல்லாத் தளங்களிலும் மிக வலுவாக ஒழுங்கு படுத்தியிருக்கிறது. ஒவ்வொருவர் பற்றிய மிக நுண்ணிய அறிவூட்டலை அது செய்துவிட்டது. உண்மையாகவே நான் சிறைச்சாலைக்கு வராதுவிட்டிருந்தால் வாழ்க்கையில் தோற்றுப் போய் இருப்பேன். வேஷதாரிகளை நம்பி எல்லாவற்றையும் இழந்திருப்பேன் இறுதியில் நிம்மதியில்லாமல் அலைந்து திரியும் பைத்தியமாகிப் போயிருக்கவும் கூடும்.
வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் அதன் தூய்மையான வடிவில் சிறைச்சாலையில் தான்; தரிசிக்க முடிந்தது. பிரச்சினை இல்லாத மனிதனே உலகில் கிடையாது. அந்தப் பிரச்சினைகளை எப்படி ஒழுங்குப்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் எமது நிம்மதி, வெற்றி, தோல்வி எல்லாம் தங்கியிருக்கிறது. சில தவறுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. சில தவறுகள் மிகவும் நியாயமானவை ஆயினும் சட்டத்தின் முன்னால் அவை அவனைக் குற்றவாளியாக்கி விடுகின்றன. 

ஒருவன் இரட்டைக்கொலை செய்கிறான். முதலில் ஒரு வாலிபனைக் கொலை செய்கிறான். அது சட்டத்தின் முன் யார் செய்தது, என்று நிரூபிக்கப்படவில்லை மர்மம் இன்னும் தொடர்கிறது. ஆனால் அந்தக் கொலையைச் செய்தவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்னர் தன் மனைவியைக் கொன்றதை மட்டும் ஒப்புக் கொள்கிறான். 
 
 
ஏன் தன் மனைவியைக் கொன்றான்? அவள் அவனுக்குத் துரோகம் செய்திருக்கிறாள். தன் மனைவி அந்த இளைஞனுடன் சல்லாபித்திருப்பதை அவன் தனது கண்களாலேயே கண்டுவிட்டான். நிதானித்து செயற்பட்டான். உடனே உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்து குழப்பிக் கொள்ளாது, முதலில் அந்த இளைஞனைக் கொன்று விட்டு பின்னர் மனைவியைத் துண்டம் துண்டமாக வெட்டி மிக மிகக் கொடூரமாக அவள் மரணத்தின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து செத்துப் போகச் செய்தான். 
 
 
இப்போது அவனுக்கு நிறையச் சந்தேகம் அவனுடைய பிள்ளைகள் மூன்றும் அவனுக்குப் பிறந்தது தானா என்று? அவனது ஆத்திரம், கோபம், வழிமுறை அனைத்;துமே நியாயமானது. அவன் மானஸ்தன் அதனால் தான் ஒரு வாரத்தில் இரண்டு கொலை. ஆனால் சட்டத்தின் முன்னால் அவனது நியாயம் எடுபடுமா. 
 
 
'ஏன் மனைவியைக் கொன்றாய்?'
 
 
'அவளோடு வாழப் பிடிக்கவில்லை அதனால் கொன்றேன்' அப்போதும் கூட அவன் அவளுடன் வாழ்ந்த வாழ்வை கொச்சைப்படுத்தி இறந்து போன அவளை அவமானப்படுத்தவில்லை அவளது மோசமான நடத்தையை பகிரங்கப்படுத்தவில்லை. ஆயினும் அவன் சட்டத்தின் முன் குற்றவாளி. நியாயம் இங்கு எடுபடாது. சாட்சியங்கள் அனைத்தையும் தீர்மானித்து விடுகின்றன. தர்மம், நியாயம் எல்லாம் மௌனிகளாகி விடுகின்றன. அவனை சமூகம் ஒதுக்கும் ஆனாலும் அவன் இனி ஒரு நடைப்பிணம் தான். ஆழமாக நேசித்த ஒருத்தியை அவன் கையால் கொன்று விட்டு ஒரு பேருண்மையை மனதில் போட்டுப் பூட்டிக் கொண்டு அவஸ்தைகளுடன் ஒரு பிணமாகத்தான் வாழ முடியும். தனக்கு துரோகம் செய்தவளைத் தண்டித்துவிட்ட திருப்தியுடன் அவன் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்ப்பதற்கும் தயாரில்லை. அப்படியாயின் அவன் சத்தியவான் தானே. அவன் செய்த கொலை நியாயமானது தானே. ஆயினும் சட்டம் அதையெல்லாம் கண்டு கொள்ளாது அவனைத் தண்டிக்கும். சில வேலை சாட்சிகள் சரியாய் அமையாவிட்டால் அவனைச் சட்டம் தண்டிப்பதற்குச் சிரமப்படும்.  சட்டத்தின் முன்னால் அவன் மறைத்த உண்மையை சிறைச்சாலையில் மறைக்க முடியாமல் போயிற்று. இதுதான் இங்குள்ள பெரிய விநோதம். ஓவ்வொரு நிகழ்வுகளின் மீதான கேள்விகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. கைதிகளுக்கு அனுபவம் தான் இவ்வாறான கனதி மிக்க கேள்விகளுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது. ஒருவன் எத்தனை முயன்றாலும் சிறைச்சாலைச் சூழலில் அவனால் நடிக்க முடியாது. காரணம் இங்குள்ளவர்கள் எல்லோரும் வாழ்க்கையின் நிஜ நடிகர்கள் அவர்களின் முன்னால் போலியாக போடப்படும் வேஷங்கள் நீண்ட நேரம் நிலைக்காது. அதனால் அவர்களிடம் உண்மைகளை அதிக காலம் மறைக்க முடியாது. 

எனது மனது இப்போது மிகவும் ஆழமான அமைதியைச் சுவாசிக்கின்றது. வாழ்க்கையின் சரியானதோர் படிமத்தையும் அதன் மீதான ஆழமான வாசிப்பைப் புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் எனக்கு சரியான சந்தரப்பத்தை பொருத்தமான நேரத்தில் இறைவன் அருளினான். அதனால் தான் எனது வாழ்வின் பொற்காலமாக சிறைச்சாலையில் இருந்த காலத்தைக் கருதுகிறேன். இப்போது மிக எளிதாக என்னால் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரத்தை விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஒருவர் மிக நீண்ட நாட்களுக்கு என்னை ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்றுபவன் என்னை விட அதிகமாக சிறைச்சாலையிலும் தடுப்புக் காவல் தண்டனைகளாலும் புடம் போடப்பட்டவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனிடம் நான் தோற்றுப் போவது மிகவும் வாஸ்தவமானது, காரணம் அவன் என்னைவிட புத்திசாலி. என்னை ஏமாற்ற முடியும். ஆயினும் அவ்வளவு எளிதில் அவனால் அது முடியாது. இந்தப் பின்னணியில்தான் கௌரவமான எனது நண்பர்களையும் தாய் உட்பட்ட குடும்ப உறவுகளையும் மனைவி உட்பட்ட சொந்தங்களையும் மிக எளிதாக என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியுமாக இருக்கிறது. இதற்கு முந்தைய காலங்களில் மனிதர்களை எதிர்கொள்ளும் போது எனக்கிருந்த வாசிப்பறிவும் சிந்தனையும், ஓரளவு சமூகத் தளத்துடனான தொடர்பும்தான். 
 
 
ஆனால் இப்போது அவை பலமடங்காகப் புடம் போடப்பட்டு ஒளியேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் வாழும் உலகம் தான் சிறைச்சாலை தினம் தினம் பலர் வருவார்கள். அவர்களின் வாழ்வின் மொத்தச் சரிதத்தையும் அப்படியே கொட்டிவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு. அவர்கள் எந்த வயதினராய் இருந்தாலும் சரி எந்த நிலையிலும் இருந்தாலும் சரி, எல்லாம் சிறைச்சாலையில் பூச்சியத்திலிருந்து தொடங்குகின்றது. அவரது பெறுமானம் பூச்சியம். அவரது கௌரவம், உழைப்பு, சமூகநிலை, மானம், மரியாதை, பதவி, செல்வம் எல்லாமும் பூச்சியம்தான். 

ஒரு குழந்தை பிறக்கும் போது எதையும் கொண்டுவருவதில்லை. பூச்சியத்திலிருந்து தான் அதன் வாழ்க்கை தொடங்குகின்றது. அது போலத்தான் சிறைச்சாலையிலும் ஒருவர் அனைத்தும் இருந்தும் பூச்சியத்திலிருந்து எல்லாவற்றையும் தொடங்குகின்றார். இந்த வாழ்வின் தத்துவம் மிகவும் வித்தியாசமானது. அதைச் சரியாகப் புரிந்து கொள்கின்ற போது உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் மிக மிக எளிதாகக் கையாள முடியும். அவர்கள் எந்தப் பெரிய கொம்பர்களாக இருந்தாலும் சரியே. 

தொங்கிக் கொண்டிருந்த எனது வாழ்க்கை சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் நிலைநிறுத்தப்படுகின்றது. அது ஒரு சக்தி வாய்ந்த நிகழ்வு. அமைதியும், தெளிவும் அந்நிலை நிறுத்தலின் பின்னால் நிறைந்து கிடக்கின்றன. உலகில் யாரிடமுமில்லாத நிதானத்தால் அது அலங்கரிக்கப்படுகின்றது. அந்த அலங்காரம் மிகவும் கவர்ச்சிகரமானது. மிகவும் கனதியானது. பின்னால் அவ்வளவு உள்வாங்கிக் கொள்ள முடியாது. பொதுவாக நான் எந்தவொரு விடயத்திலும் அதிகம் பேசுபவன். எனக்குத் தெளிவான ஒருவிடயத்தை மிகமிக ஆக்ரோஷாக விவாதிப்பேன் சில வேளைகளில் பலர் சலித்துக் கொள்வதும் உண்டு. 
 
 
'முஸ்டீன் அதிகம் பேசுவான்' என்று 
 
 
அப்போதுகளில் அது தப்பில்லை அது எனக்குச் சரி, அவர்களால் சரியாக அது உள்வாங்கப்படவில்லை. என்னை அதிகம் பேசவிடாமல் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாத களமாக இருந்துவிட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிப் போய்விட்டது. 
 
 
நான் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தெளிவான சாத்தியமான களத்தில் கூட நான் அதிகம் கடைப்பிடிப்பது மௌனமும்,அர்த்தங்கள் பொதிந்த புன்னகையும் தான் 
 
 
வாழ்க்கையின் மிக உயரிய இந்தத் தத்துவத்தை இந்த இருபத்தெட்டு வருடங்களில் என்னால் எங்கும் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஏழுமாத சிறை வாழ்க்கை எவ்வளவு தத்ரூபமாக என்னை செதுக்கிவிட்டது. 

இப்போது தெரியும் எனது வார்த்தைகளின் பெறுமதி எத்தகையது என்றும் அதன் கனதி எத்தகையதென்றும். அதற்காக பேசவேண்டிய இடத்தில் மௌனியாகிச் சென்றுவிடுவேன் என்றும் அர்த்தம் கிடையாது. பேச்சும் செயற்பாடுகளும் மிகச் சமாந்திரமாக இருக்கும். இரண்டும் வலுவானவை, மனிதர்களை ஒரு புன்னகையாலும் மௌனத்தாலும் எதிர்கொண்டு செற்பாடுகளால் வெற்றி கொண்டு புத்தியாலும் உழைப்பாலும் நிலைநிறுத்திக் கொள்ளல் எனும் உயரிய கோட்பாட்டை எனக்குள் தினம் தினம் பட்டை தீட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் கைதிகள் தான். 
 
 
கட்டணமில்லாது அரச செலவில் நான் கஸ்டங்களைத் தாங்கியபடி, என்னைப் பூச்சியத்தில் இருத்திக் கொண்டு கற்றுக் கொண்ட பாடமிது. இந்தப் பாடம் எனது வாழ்வில் வசப்படாது போய் இருந்தால் சத்தியமாக வாழ்ந்து கெட்டவர்களின் பட்டியலிலும், வென்று தோற்று அடையாளம் தொலைத்தவர்களின் பட்டியலிலும், எனது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கும். அது எனது பரம்பரைக்கே ஈடுசெய்ய முடியாத பாரிய வீழ்ச்சியாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால் காலம் என்னை நஷ்டவாளியாக்க விரும்பவில்லை. என்னைக் கொண்டு எதையோ முடிக்க வேண்டுமென்பதை திட்டமிட்டுள்ளது போலும், என்னைக் கொண்டு முடிக்க வேண்டியவைகளைக் காலம் மிகச் சரியாக செய்து முடிக்கும். ஒரு கருவியாக நின்று செயற்படுவது மட்டும்தான் இப்போது எனக்குள்ள ஒரே ஒரு பணி. 

இனி வரும் பொழுதுகளில் மிகுந்த யோசனையின் பின்னர்தான் முடிவுகள் எட்டப்படும் அவை மிகுந்த உறுதியானதாக மாற்ற முடியாததாக இருக்கும். யாராலும் எப்போதும். 
 
 
50 ரூபாய் திருடிய ஏழையும் 50 கோடி மோசடி செய்த பணக்காரனும் ஒரே தளத்தில் நின்று நமக்கு வாழ்க்கை பற்றிய அறிவூட்டல் நடக்கும் ஒரே தளம் சிறைச்சாலைதான். 
 
 
தனது சொந்த மகளை கற்பழித்தவன், 
 
 
60 வயது மூதாட்டியுடன் வல்லுறவு கொண்ட 25 வயது இளைஞன், 
 
 
சிறுமியைக் கற்பழித்த புத்தபிக்கு, 
 
 
தகாத உறவு கொண்டு வன்மம் செய்து மாட்டிக் கொண்ட செல்வந்தன். 
 
 
பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிகாரி,
 
 
திருடன், கொள்ளைக்காரன், குடிகாரன், போதைப்பொருள் வியாபாரி, கடத்தல்காரன், தாயுடன் உறவு கொண்டவன், மோசடி செய்தவன், வசியம் செய்த பூசாரி, கையாடல் செய்த ஹாஜியார், மனைவியைக் கொன்றவன், தாயைக் கொன்றவன், தந்தையக் கொன்றவன், மகளை, நண்பனை, அதிகாரியை என்று தொடரும் கொலை பட்டியல்காரர்களும் 
 
 
ஜனாதிபதியை, அமைச்சரைக் கொல்ல சதி செய்தவன், 
 
 
கொள்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவன், 
 
 
கொள்ளையடிக்க ஆயுதம் ஏந்திப் போராடியவன், 
அடிபுடி, சண்டை மல்லு, பழங்கால பொக்கிஷங்களை, புதையல்களை
தோண்டியவன்,  என்று உலகில் உள்ள எல்லாக் குற்றவாளிப் பட்டியலும் சங்கமிக்கும் ஒரே தளம் சிறைச்சாலை.

இங்கு என்னால் இரண்டு அம்சங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. 
 
 
ஒன்று வயிற்றுப் பசிக்கான போராட்டம். அதில் முறையாக, முறைகேடாக
ஏதோவொரு விதத்தில் சட்டத்தின் முன் குற்றவாளியாக்கப்பட்டவர்கள், குற்றவாளியாகக் கருதப்பட்டவர்கள் 
 
 
அடுத்தது பேராசை கொண்டு உலகைச் சுருட்டி தன் பையில் வைத்துக் கொண்டு வாழ நினைத்த பேராசைக் காரனும் உடல் பசிக்காக தன்னை மீறிச் செயற்பட்டவனும் 
 
 
இவை இரண்டினதும் அடிப்படையில் அடைந்து கொள்ளுதல் தீர்த்துக்கொள்ளுதல் என்ற என்ற அம்சங்கள் தான் இருக்கின்றன. 

இத்தனை பேருக்குள்ளும் நின்று வாழ்க்கையை ஒரே தளத்தில் புரிந்து கொள்ளக் கிடைத்த காலத்தை பொற்காலம் என்று விளிப்பதில் தவறில்லை. இப்போது எனக்கு மிக எளிதாக கிடைக்கப்பெற்ற வரம் ஒருவனின் செயற்பாடுகளை கொஞ்சம் அவதானித்தால் போதும் அவன் எத்தகையவன் என்று தீர்மானித்துக் கொள்ள முடியும். 
 
 
உள்ளத்தில் உள்ளதை இறைவன் மட்டுமே அறிந்தவன். 
வெளிப்படையான செயற்பாடுகள் பார்வை, உடலசைவு அவன் பேச்சு இவை உள்ளத்தின் எண்ணவோட்டங்களால் வழிநடாத்தப்படுபவை எனவேதான் அவதானிப்பின் மூலம் அவன் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் ஒன்றை துல்லியமாகக் கணிப்பீடு செய்து கொள்ளலாம். 
 
 
இப்போது ஒன்றை மட்டும் என்னால் உரத்துச் சொல்ல முடியும். 

இந்த முஸ்டீன் இனி வாழ்வில் என்றுமே தோற்றுப் போகமாட்டான் இறைவன் அருளால் மரணம் கூட அவனின் உயர்ந்த வெற்றிதான். வீழ்ச்சி கிடையாது தோல்வி கிடையாது.
 
 
Thanks : sim production.

Friday, July 26, 2013

கொடிது... கொடிது... டெங்கு கொடிது!





ஆனால், அதனிலும் கொடிது : அது பற்றிய உண்மைகள்!
 
 
 
ன்புள்ள நண்பர்களே!


நமது நாட்டில் அடுக்களை  முதல் அமைச்சரவை வரை டெங்கு பற்றி இப்போதெல்லாம் பரவலாக பேசப்படுவது அனைவரும் அறிந்ததே. அது தொடர்பாக பல இணையத் தளங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒர் பதிவு இது.

இது நமக்கும் மிக நன்றாகவே பொருந்தும் என்பதால் வெகு சில அவசியமான மாற்றங்களுடன் தருகின்றேன். படித்துப் பாருங்கள்...

- Jesslya Jessly





டெங்கு காய்ச்சல் (தமிழகத்தை) மீண்டும் வளைத்திருக்கிறது.


குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். தினமும் டெங்கு மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் மே ஜூன் மாதங்களில் கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வந்திருக்கும் இந்தவகைக் காய்ச்சலினால் இதுவரை 70 பேர் வரை கொல்லப்பட்டிருந்தும் அரசு அதை தடுப்பதற்கு திடமான எந்த முயற்சியையும் எடுக்காமல் மேம்போக்கு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வந்தது. அதாவது சாக்கடைகளின் ஓரங்களில் வெள்ளைப் பொடியை தூவுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீரை தேங்க விடாதீர்கள் என அறிவிப்புச் செய்வது போன்றவைகள் தான் அதிகபட்சம் டெங்குவுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இதனால் கடையநல்லூர் பகுதிகளை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த டெங்கு கடந்த ஜூன் மாதத்தில் (தமிழகம்) முழுவதும் பரவியது. இப்போது மீண்டும் பலரை பலி கொண்டிருக்கிறது. ஆனால் அரசோ அவைகள் டெங்குவினால் ஏற்படும் மரணங்கள் அல்ல என டெங்கு காய்ச்சல் முன்வைத்து செய்யப்பட்ட கொலைகளின் கணக்கை குறைத்துக் காட்டுவதிலேயே குறியாயிருக்கிறது.
 

இந்த நோயின் தன்மைகளைக் கொண்டு ‘குருதிப் போக்குக் காய்ச்சல்’ என்று மருத்துவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால்,  அரசோ மர்மக் காய்ச்சல் என்று புதுப் பெயர் சூட்டி ஊடகங்கள் மூலம் உலவ விட்டிருக்கிறது. நாளிதல்களில் முழுப்பக்க விளம்பரமாய் சிரட்டைகளில் கூட தண்ணீர் தேக்கக் கூடாது என்று  படத்துடன் விரிந்திருக்கிறது. காட்சி ஊடகங்களில் வட்டமாய்  நடிகர்கள் தோன்றி எல்லாக் காய்ச்சலும் டெங்குவல்ல என்றும், அரசு மருத்துவமனைகளில் நிறைய இரத்தமும் போதிய வசதிகளும் இருக்கிறது என்றும் பயமுறுத்துகிறார். ஏதோ மக்களின் சுகாதாரக் குறைபாட்டினால் தான் டெங்கு பரவுகிறது என்பதைப் போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மட்டுமல்லாது, ஏடிஸ் வகைக் கொடுக்கள் கடிப்பதாலேயே இந்நோய் உண்டாவதைப் போன்ற அதாவது ஏடிஸ் வகையின் எந்தக் கொசு கடித்தாலும் நோய் தொற்றிவிடும் என்பதைப் போன்ற ஊகத் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
 

டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஏடிஸ் கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கு பரவு பரவுகிறது என்கிறார்கள். ஆனால் இது முழுமையான உண்மையல்ல. டெங்கு வைரஸ் மனிதர்களின் உடலிலும், ஏடிஸ் கொசுக்களிலும், சில வகை குரங்குகளிலும் தங்கியிருக்கும் திறனுள்ளவை. இவை கொசுக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் கொசு வேறொருவரைக் கடிக்கும் போது அவரையும் டெங்கு வைரஸ் தொற்றிக் கொள்கிறது. வேறொரு மூலத்திலிருந்து பெறாமல் சுயமாக எல்லா ஏடிஸ் கொசுக்களும் டெங்குவை பரப்புவதாக ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. டெங்குவை உண்டாக்கும் வைரஸ்களை ஏடிஸ் கொசுக்கள் (நுளம்புகள்)  உற்பத்தி செய்வதில்லை, மாறாக பரப்புகின்றன. ஆனால், அந்த வைரஸ் எதனால் நீடித்திருக்கிறது?
 
மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் பல நாட்களாக வடியாமல் தேங்கி நின்று பள்ளிக்கூடத்துக்கு செல்வது  உள்ளிட்ட அனைத்துக்கும் சிரமப்படும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு சொல்கிறது, சிரட்டைகளில் கூட நீரை தேங்க விடாதீர்கள் டெங்கு வந்துவிடும் என்று. கொசுக்கள் உற்பத்தியாக நீங்களே வழி ஏற்படுத்திக் கொடுக்கதீர்கள் என்கிறது அரசு. ஆனால், நாடெங்கும் சாக்கடைகளையும் கழிவுகளை மூடாமல் திறந்த வெளியாக விட்டு கொசு உற்பத்திக் கூடம் நடத்திக் கொண்டிருப்பதே அரசு தான். போதாதென்று ஆறுகளையும் சாக்கடைகளாக மாற்றியிருக்கிறது. ஓரிடத்தின் திடக்கழிவுகளை அகற்றி இன்னொரு இடத்தில் கொட்டி விட்டு சுத்தம் செய்துவிட்டதாக கூறுகின்றன உள்ளாட்சி அமைப்புகள். ஆனால் அப்படி கொட்டப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொசுக்களும் (நுளம்புகள்)  நாற்றமும் தாங்க முடியவில்லை என்று சாலை மறியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கொசு(நுளம்பு)  வளர்ப்பு திட்டத்தை இவ்வளவு செம்மையாக நடத்திவிட்டு நீரைத் தேக்காதீர்கள், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறுவதற்கு இந்த அரசுக்கு கொஞ்சமாவது அறுகதை இருக்கிறதா?
 

இரவு நேரங்களில் தொடர்வண்டி நிலையங்களிலோ, பேருந்து நிலையங்களிலோ, பொது இடங்களிலோ சிறிது நேரம் நின்றால் தெரியும், ஒரு படையெடுப்பை நடத்தும் நேர்த்தியுடன் கொசுக்கள் (நுளம்புகள்) எப்படி நம்மைத் தாக்குகின்றன என்று. கொசுத்தடுப்பு மருந்துகளோ, திரியோ இல்லாமல் ஓர் இரவு கூட தூங்க முடியாது எனும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி கடவுளைப்போல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன கொசுக்கள் (நுளம்புகள்).


குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் மாதாந்திரம் கொசு மருந்துகளுக்கென்றே எல்லா குடும்பங்களும் நிதி ஒதுக்குகின்றன.

இந்த நிலை எப்படி ஏற்பட்டது?


இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கொசு இப்படி ஒரு பூதாகரமான பிரச்சனையாக இருந்திருக்கவில்லை. தெருக்களில் சேரும் குப்பைகளை சிறுவர்கள் இரவில் தீ வைத்து எரிப்பார்கள், அதுவே ஒரு வாரத்துக்கு கொசுக்கள் அண்டாமல் விரட்டியடிக்க போதுமானதாக இருக்கும். கொசுவலையை பயன்படுத்துவது கூட ஆடம்பரத்தின் செல்வச் செழிப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று .. .. ? நீங்கள் தூங்க வேண்டுமென்றால் தனியாக நிதி ஒதுக்கி கொசு மருந்து நிறுவனங்களுக்கு கப்பம் கட்டியே தீர வேண்டும்.





கொசு (நுளம்புகள்) மருந்து நிறுவனங்களின் ஆண்டு லாபம் ஆயிரம் கோடிகளை தாண்டி இருக்கிறது. இந்த நிறுவனங்கள் காந்தியின் அகிம்சை நிறுவனங்கள். இவை தயாரிக்கும் கொசு மருந்துகள் மறந்தும் கூட கொசுக்(நுளம்பு)களை கொல்வதில்லை. அந்த இடங்களிலிருந்து விரட்டிவிட மட்டுமே செய்கின்றன. கொசுச் சுருளைப் பற்றவைத்தால் அந்தச் சுருளில் உட்கார்ந்து இளைப்பாறும் அளவிற்கு கொசுக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி தகவமைத்துக் கொள்வதற்கும், படுவேகத்தில் இனப்பெருக்கம் செய்வதற்கும் கொசுமருந்துகளில் ஊக்கிகள் இருக்கின்றனவா என ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் கிடைக்கலாம்.


கடந்த பத்தாண்டுகளில் கொசு (நுளம்பு)க்களை முன்னிட்டு மக்கள் பணம்
சுரண்டப்படுவதும், அந்த மருந்துகளே கொசுக்களின் இனப்பெருக்கத்தை துரிதப்படுத்துவதும் குறித்து இந்த அரசுக்கு ஏதாவது அக்கரை இருக்கிறதா?
 

டெங்குவை சாதாரண இரத்தப்பரிசோதனை மூலம் அறிய முடியாது, எலிசா பரிசோதனையின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்று மக்களிடம் கூறும் இந்த அரசு அந்த சோதனை செய்யும் வசதியை எத்தனை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தியிருக்கிறது? போதுமான அளவுக்கு இரத்தம் சேமிப்பில் இருப்பதாக புளுகும் இந்த அரசு, டெங்குவுக்கு இரத்தம் ஏற்றுவதை விட இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளைப் பிரித்தெடுத்து அதை ஏற்றுவதே சரியானது என மருத்துவர்கள் கூறுவதை எப்படி எதிர் கொண்டிருக்கிறது. இரத்தத் தட்டுகளை ஏற்றுவதற்கு அரசு மருத்துவமனைகளில் வசதி இருக்கிறதா?


இவைகளைப் பயன்படுத்திக் கொண்டு தான் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதுவரை டெங்குவுக்கு பலியானவர்களில் அதிகமானோர் தனியார் மருத்துவமனைகளுக்கு கொட்டியழ முடியாத அடித்தட்டு மக்கள் தாம்.
 

தொகுத்துப் பார்த்தால், சாதாரண விசயமாக இருந்த கொசுவை விரட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கிய பிறகு தான் கொசுக்கள் பல்கிப் பெருகி மிகப்பெரும் பிரச்சனையாக ஆனது. தொடர்ந்து கொசுக்களால் நோய்கள் பரவ அதைக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் அரசு கொசுக்களை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் கொசு வளர்ப்புத் திட்டங்கள் மூலம் அந்த தனியார் நிறுவனங்களுக்கு உதவுகிறது. டெங்குவினால் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்கான நச்சுச் சுழல் இது தான். இந்தச் சுழலைச் சுழற்றும் அச்சாணியாக தனியார்மயமே இருக்கிறது. எனவே டெங்குக் காய்ச்சல் தனியொரு மனிதனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்றோ, தனியார் மருத்துவமனைகளுக்கு கப்பம் கட்ட முடியாத அவலம் என்றோ புரிந்து கொள்வது டெங்குவை ஒழிப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.


சுகாதாரத் துறையில் தனியார்மயத்தை கொசுவை அடிப்பது போல் அடித்து ஒதுக்கினால் மட்டுமே டெங்குவையும் இன்னபிற நோய்களையும் சமூகத்திலிருந்தே விரட்டியடிக்க முடியும்.

Thanks: senkodi

Thursday, July 25, 2013

செங்கொடி –நல்லூர் முபாரக் விவாதம்







ன்புள்ள உலகளாவிய சிறகுகள் நண்பர்களே! 
 
 இருவேறு கருத்துக்களைக் கொண்டவர்கள், பொதுவாக மனித நாகரீக விழுமியங்களை அனுசரித்துச் செல்லும் விதமான கருத்துப் பரிமாற்றத்தினுடாக அல்லது இதயசுத்தியான ஒரு பொதுவிவாதத்தினுடாக பொதுமுடிவுக்கு வருவதற்கு முயற்சிப்பதுண்டு.
 
அத்தகைய விவாதத்திலே நேரடியாக பங்குபற்றுபவர்கள் தவிர ஊடகங்களிலே அதனைக் காண்பவர்களும் அதை நுகர்வது  வழமை. இவ்வாறான நிலையில் அது பொதுமனித விழுமியங்களை மேலும் அனுசரித்துச் செல்வதற்கான ஆரோக்கியமான வாய்ப்பும் அதிகரிக்கும்.
ஆனால் இங்கே பாருங்கள் கீழே இடம்பெறும்,


எது மக்களை சரியாக வழிநடத்துகிறது, இஸ்லாத்தின் சட்டம் குறித்த பார்வையா? கம்யூனிசத்தின் சட்டம் குறித்த பார்வையா?

என்ற விவாதத்தில் செங்கொடி எனும் மனிதரை விவாதம் புரிய வெகுவாக வருந்தியழைத்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதை கவனியுங்கள்! (ஒரு வாக்கியம் கூட தவறாமல் தரப்பட்டுள்ளது)

-Omar Mukthar


செங்கொடியின் முன்விளக்கம்:


நண்பர்களே! தோழர்களே,

மீண்டும் ஒரு விவாதம்.

வழக்கம் போல இஸ்லாமிய மதவாதிகளுடனான இந்த விவாதம் இந்த முறை சட்டம் எனும் சட்டகத்திற்குள் நடத்தப்படவிருக்கிறது. நண்பர் முபாரக்குடன் இப்படி ஒரு விவாதம் நடத்துவதில் தொடக்கத்தில் எனக்கு ஆர்வம் இருந்திருக்கவில்லை. ஆனால் முபாரக்கோ விடாப்பிடியுடன் விவாதம் நடத்தியே தீரவேண்டும் என்று தொடர்ந்து பின்னூட்டங்கள் எழுதி வந்தார்.


விளைவு:


எது மக்களை சரியாக வழிநடத்துகிறது, இஸ்லாத்தின் சட்டம் குறித்த பார்வையா? கம்யூனிசத்தின் சட்டம் குறித்த பார்வையா?
எனும் தலைப்பில் நண்பர் முபாரக்குடன் இந்த விவாதத்தை தொடங்குகிறேன்.


வழக்கம் போல தகுந்த உள்ளீட்டுடனும், நேர்மையாகவும், விமர்சனப்
பார்வையுடனும், நட்புணர்வுடனும் என்னுடைய வாதங்களை வைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.


நண்பர் முபாரக் இங்கு தன்னுடைய வாதங்களை எந்தவித தயக்கமோ, அசூயையோ இன்றி எடுத்து வைக்கலாம். அவை எந்தவித மட்டுறுத்தலுக்கோ, திருத்தலுக்கோ உள்ளாக்கப்படாது. விவாதத்தில் பங்களிக்க விரும்புபவர்கள் வாதங்கள் குறித்த தங்களின் கருத்துகளை தாராளமாக பதிவு செய்யலாம். ஆனால் அந்தக் கருத்துகள் விவாதத்தில் குறுக்கீடு செய்யும் விதமாகவோ, விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாகவோ இருக்கக்கூடாது. அதாவது, ஒரு பார்வையாளனாக கலந்துகொண்டு விவாதம் குறித்து, அது செல்லும் திசை குறித்து தங்கள் கருத்துகளை கூறலாமேயன்றி தாங்களே விவாதத்தை நடத்திச் செல்லக் கூடாது.

(இது இடையிலே  புகுந்து கருத்துக் கூறுபவர்களுக்காக. எனினும் தொந்தரவு கருதி அவை மட்டும் சேர்க்கப்படவில்லை. தேவையானால் பின்பு பார்க்கலாம் - Omar Muktar)



முந்திய விவாதங்களைப் போலல்லாது, இந்த விவாதம் சீராக நடந்து சரியான முடிவை எட்ட வேண்டும் என்றே எண்ணுகிறேன்.


அதனால் தான் விவாத முறையில் கூட – ஒரு கேள்வி அதில் ஒரு முடிவை எட்டிய பின் அடுத்த கேள்வி என – மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறேன். இந்த விவாதம் சீரிய முறையில் நடந்து, அது இன்னும் பலரை அவர்கள் கொண்டிருக்கும் அறிவியல்பூர்வமற்ற நம்பிக்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்கும் நிலைக்கு தூண்ட வேண்டும். இது போன்ற விவாதங்களின் சாராம்சமான நோக்கமும் அது தான்.

இனி விவாதக் களத்தில்....

 
செங்கொடி –நல்லூர் முபாரக் விவாதம்
 
 
( Index: 0 = நல்லூர் முபாரக்  @ = செங்கொடி )


0 ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும், உங்களைச் சார்ந்த கம்மூனிச கொள்கை கொண்டவர்கள் மீதும் இன்னும் அனைத்து விதண்டாவாதிகள் மீதும் உண்டாக வேண்டுகிறேன். செங்கொடி முதலில் சுருக்கமாக துவங்குகிறேன்.


எங்களைப் பொருத்தவரையின் அல்லாஹ் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவன். அவன் காரியங்களில் குறைநிறை சொல்லும் அளவுக்கு எந்த மனிதனுக்கும் யாதொரு அறிவும் தகுதியும் சக்தியும் இல்லை. ஆகையினால் இந்த விவாதம் அந்த ஏகனைப் பற்றி தெரிந்து கொண்டதில் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசங்களை முன்னிட்டே இந்த விவாதம் நடக்கிறது என்பதை மெயினாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கேள்வியாக விவாதம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். மனிதன் பிறப்பது முதல் மரணிப்பது வரை எல்லா சந்தர்ப்பங்களிலும் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனித குலம் முழுவதுக்குமான நல்வழிகாட்டுதல்களை ஏக அதிபதியாகிய அல்லாஹ் (ஜல்) 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் சங்கை மிக்க குரானில் தெளிவாக அறிவித்துத் தந்திருக்கிறான். அந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாயிண்டாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால். மனிதன் தவறு செய்யக்கூடியவனாக பலஹீனமானவனாக படைக்கப்பட்டிருக்கிறான். எனவேதான் இந்த உலகம் குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் தோன்றிய காலம் தொட்டு அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் சட்டங்கள் போட்டுக் கொண்டே இருக்கிறான். இந்த உலகம் நன்றாக மாறவே இல்லை. இதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் சொன்னாலும் ஒன்று தெளிவாக விளங்கும். அது இந்த உலகத்திற்கு மனிதச் சட்டங்களை விட இறைச் சட்டங்களே அவசியம் தேவை என்பதை உறுதிப்படுத்துகிறது. கம்மூனிச சட்டங்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று நீங்கள் கூறினாலும் அது பலஹீனமான படைப்பான மனிதன் உருவாக்கிய சட்டங்கள் தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? நேர்மையாக உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்த உலகில் மனிதச் சட்டங்கள் செய்த குழறுபடிகள் போதாதா? கம்மூனிஸ்டுகள் அனைத்து மனிதர்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு மனிதச் சட்டம் தேவையா? இது தான் என்னுடைய முதல் கேள்வி. நீங்கள் நேர்மையாக பதில் கூறுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் பதில்கண்டு பிறகு நான் விரிவாக எழுதுகிறேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும். 


@ நண்பர் முபாரக்,
 
இறைவனைப் பற்றி தெரிந்து கொள்வதில் இருக்கும் வேறுபாடுகள் தாமா நம்மிடையே இருப்பது?

அல்ல, நீங்கள் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நான் அதை மறுக்கிறேன். இந்தப்புள்ளிதான் விவாதத்தின் தொடக்கம். உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விவாதிக்கலாம் தவறில்லை.  ஆனால் உங்கள் நம்பிக்கையை பொது உண்மையாகக் கொண்டு விவாதிக்க முடியாது. தெளிவாகச் சொன்னால் உங்கள் நம்பிக்கையை உரசிப்பார்ப்பதற்கான தளம் தான் இந்த விவாதக் களம்.
 
இந்த விவாதத்தின் முதல் கேள்வியாக மனிதனுக்குத் தேவை இறைச்சட்டமா? மனிதச் சட்டமா? என்பதை முன்வைத்திருக்கிறீர்கள்.


நீங்கள் பழைய விவாதங்களைப் படித்ததாக கூறியிருந்தீர்கள். அவற்றில் இதற்கான பதில் இல்லையா? போகட்டும். உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் கூறுவதற்கு முன்பாக சட்டம் என்றால் என்ன? அதன் தன்மைகள் என்ன? அதன் நோக்கம் என்ன? எப்படி எப்போது தொடங்கியது? போன்றவற்றை வரலாற்றின் ஒளியில் பார்ப்பது இன்றியமையாதது. சட்டங்கள் குறித்த கம்யூனிசப் பார்வையும் அது தான்.
 

மனிதகுல வரலாற்றில் சட்டங்கள் அதாவது மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு என்பது போன்ற அமைப்போ, அதற்கு இசைவான சட்டங்களோ தொடக்கம் முதலே இருந்ததில்லை.


குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தான் சட்டங்களின் தேவை ஏற்பட்டது.


தெளிவாகச் சொன்னால், மக்கள் தங்களுக்குள் பேதமின்றி, இணக்கமாக அனைவரும் உழைத்து அதன் பயனை அனைவரும் பகிர்ந்து கொண்டிருக்கும் வரையில் சட்டங்களின் தேவை எழவில்லை. அந்த மக்கள் பிரிவினரிடையே இணக்கம் காண முடியாத அளவுக்கு பகை முற்றிய போது ஒரு பிரிவினர் ஏனைய பிரிவினரை தங்களின் நோக்கங்களுக்கு ஏற்ப அடக்க முற்பட்டதன் விளைவு தான் அரசும் சட்டங்களும். இது தான் வரலாறு. இது தான் சட்டங்கள் குறித்த கம்யூனிசப் பார்வை.


எந்த வடிவங்களிலான அரசின் சட்டம் என்றாலும் குடியரசு, முடியரசு, ஜனநாயகம் என எந்த வடிவமாக இருந்தாலும் அதன் பொருள் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக ஏனைய வர்க்கங்களை அடக்க உதவும் கருவி என்பது தான்.


இந்த சட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்யும் அதாவது, மக்களை நேர்வழிப்படுத்தும் என்பது ஆளும் வர்க்கங்கள் பரப்பி வைத்திருக்கும் நம்பிக்கை. சட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனும் நம்பிக்கையை விதைத்து வைத்திருப்பதன் மூலம் தான் ஆளும் வர்க்கங்கள் தங்களின் மேலாதிக்கத்தை மறைத்து மக்களைச் சுரண்டிக் கொழுக்க முடிகிறது. இதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. இது தான் சட்டம் என்பதின் பொருள்.
 
இன்றைய மனிதன் தோன்றி ஏறக்குறைய மூன்று லட்சம் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலங்களின் பெரும்பகுதி தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டம் என்பது அதன் வடிவத்தில் மக்களிடம் இல்லை. அதாவது தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்வரை மக்கள் அனைவரும் வர்க்க பேதமின்றி சமமாக இருந்தார்கள். இதை கம்யூனிசம் புராதன பொதுவுடமைச் சமுதாயம் எனும் பெயரால் குறிப்பிடுகிறது.


இந்தக் காலகட்டத்திற்கு பிறகு தான் மக்களிடையே இன்றைய பிரிவும் பேதங்களும்; சண்டையும் சச்சரவுகளும் தோன்றின. தெளிவாகச் சொன்னால் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே சட்டங்கள் (அரசு) இல்லை. ஆனால் சம வாய்ப்பும், சம வசதியும் இருந்தன. சமூகத்திற்கு இயல்பாகவே பெண் தலைமைப் பாத்திரம் ஏற்றிருந்தாள், சில சமூக ஒழுங்குகள் இருந்தன. ஆட்சியோ சட்டங்களோ இல்லை.  ஆக மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் சட்டங்களின் காலம் வெகு சொற்பமானது. மனித சமூக உறவுகள் மிகச் சிக்கலாகவும், கடினமாகவும், பகைமையாகவும் ஆனது சட்டங்களின் காலத்தில் தான்.
 

அடிமைக் காலத்தில் ஆண்டான்களுக்கு விரோதமாக சட்டம் இருந்திருக்க முடியுமா? அடிமைகள் தான் சட்டத்திற்கு எதிராக பேசியிருக்க முடியுமா? நிலப்பிரபுத்துவக் காலத்தில் மன்னர்கள் கடவுளைப் போல் மதிக்கப்பட்டனர், மன்னனின் சட்டத்தை குடிமக்கள் திருத்த முடியுமா? இப்படித்தான் சட்டங்களின் பாதை இருந்திருக்கிறது.


இதில் எங்கிருந்து மனிதச் சட்டம் இறைச் சட்டம் எனும் வித்தியாசம் வருகிறது? உலகில் இருந்தவை இருப்பவை எல்லாம் மனிதச் சட்டங்களே.  அச்சட்டங்களை உருவாக்கியவர்கள் சில போதில் தங்களைத் தாங்களே கடவுளாகக் கருதிக் கொண்டனர். சிலர் கடவுளின் அவதாரமாய் கருதிக் கொண்டனர், வேறு சிலரோ கடவுளின் தூதனாய் கருதிக் கொண்டனர். அவர்கள் அவ்வாறு கருதிக் கொள்வதாலேயே கடவுளாகவோ, அவதாரங்களாகவோ, தூதர்களாகவோ ஆகிவிடுவதில்லை.  அவை கருதல்கள், நம்பிக்கைகள். எனவே இருப்பவை, இருந்தவை அனைத்தும் மனிதச் சட்டங்களே, இறைச் சட்டம் என்று ஒன்றுமில்லை.
 

ஆனால் உங்களின் கேள்வியோ மனிதச் சட்டமா? இறைச் சட்டமா? என்று இருக்கிறது. சாராம்சத்தில் அப்படி இருக்க முடியாது என்பதைத்தான் மேலே விளக்கியிருக்கிறேன். ஆக நம் முன் இருப்பது எந்த அடிப்படையிலான சட்டம் சிறந்ததாக இருக்க முடியும் எனும் கேள்வி தான். இஸ்லாம் அதன் நெறிகள் இந்த அடிப்படையிலான சட்டமா? கம்யூனிசம் அதன் நெறிகள் இந்த அடிப்படையிலான சட்டமா? எதன் அடிப்படையிலான சட்டம் ஆகப் பெரும்பான்மையான மக்களைக் காக்கும் என்பதை இந்த விவாதத்தின் தொடர்ச்சியில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது எல்லாம் மனிதச்சட்டம் தான் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா? மெய்யாகவே இறைச் சட்டம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்கள்.  நாம் தொடர்ந்து களமாடலாம்.



0 மிஸ்டர் செங்கொடி

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பார்களே அதுமாதிரி இருக்கிறது உங்கள் பதில். இறைச் சட்டம் இல்லை எல்லாம் மனிதச் சட்டம் என்கிறீர்கள். இதற்கு நிறைய விளக்கமெல்லாம் தேவையில்லை. சிம்பிளாக ஒரு கேள்வி.. உலகம் எப்படி தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் இன்று தான் கண்டுபிடித்து பிக்பாங்க் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்கள். இது எப்படி அவர்களால் முடிந்தது?.


அல் குர் ஆன் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியது தான். ஆனால் சொல்ல வைத்தவன் அல்லாஹ். அதனால் தான் உலகத்தில் என்னென்ன நாடுகள் இருக்கும் என்று கூட தெரியாத முகம்மது நபி (ஸல்) அவர்கள் பிக்பாங்க் தியரி பற்றி பேசினார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? சொன்னது மனிதரல்ல இறைவன். உங்கள் மீது கல்லெறிந்தால் கல்லைப் பார்ப்பீர்களா எரிந்தவனைப் பார்ப்பீர்களா. மனம்போன போக்கில் பேசாதீர்கள் மனிதச் சட்டத்திற்கும் இறைச் சட்டத்திற்கும் இடையே தெளிவான கோடு இருக்கிறது. எல்லாம் மனிதச் சட்டம் தான் என்று பொத்தம் பொதுவாக கூற முடியாது. நீங்கள் மதம் என்றால் எல்லாம் ஒன்றுதான் என்று நுனிப்புல் மேய்கிறீர்கள். அதுதான் தங்களை கடவுளாக சொல்லிக் கொண்டவர்களையும், அவதாரம் என்று சொல்லியர்களையும் தூய இஸ்லாத்தோடு இணைத்து முடிச்சு போடப் பார்க்கிறீகள். அவர்கள் புரட்டல்காரர்கள் என்று நாங்களே சொல்கிறோமே ஆனால் இஸ்லாம் உண்மையின் ஒளி. அதை உங்களைப் போன்றவர்களால் ஊதி அணைத்துவிட முடியாது. நீங்கள் எப்படி எல்லாம் மனிதச் சட்டம் என்பதை விளக்காமல் புதாரண பொது உடமை காலம் என்று ஏதேதோ கூறியிருக்கிறீர்கள். சட்டம் இல்லாமல் மனிதன் எப்படி இருக்க முடியும்? சட்டம் இல்லையென்றால் சின்ன பிரச்சனைக்குக் கூட வெட்டிக் கொண்டு சாக வேண்டும். ஒருவன் இடத்தில் இன்னொருவன் வீடு கட்டினால் இடம் யாருக்குச் சொந்தம் என்று எப்படி கண்டுபிடிப்பார்கள்? எப்படி தீர்த்து வைப்பார்கள். கோர்ட், போலீஸ் எல்லாம் இருந்தால் தான் சட்டமா? ஒரு நாட்டாமை தீர்ப்புச் சொன்னாலும் அது சட்டம் தானே. அரசு மட்டும் சட்டம் என்று வராது. அரசு அல்லாத விஷங்களும் சட்டம்தான். உதாரணமாக ஒரு ஸ்கூலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு அரசாட்சியா நடக்கிறது? அல்லது ஜனநாயகமா? அல்லது கம்யூனிசமா? அல்லது வேறு ஏதுவும் நடக்கிறதா? ஸ்கூலின் சகல விஷயங்களையும் கவனிக்கும் தலைமைப் பொறுப்பு ஒருவரைச் சார்ந்ததது. அதற்குகு் கீழ் பல பிரிவுகள் வரை இருந்து ஸ்கூல் நிர்வாகம் உட்டபட மாணவர்களது அனைத்து நடவடிக்கைகளும் கவனிக்கப்படும். அங்கும் மாணவர்களுக்கென்று ஒரு சட்டமும் ஆசிரியர்களுக்கென்று ஒரு சட்டமும் இருக்கும். ஒருவர் ஓர் இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று கட்டளை வகுப்பதும் சட்டம் என்பதை நீங்கள் அறியவில்லையா? சட்டம் இல்லாத காலம் இருந்தது அதுவும் லட்சக் கணக்கான வருஷங்கள் என்று சொல்கிறீர்கள் இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? நீங்களாக உங்கள் இஷ்டத்துக்கு கூறுவதெல்லாம் வரலாறு ஆகிவிடுமா? நீங்கள் இது தான் வரலாறு என்று சொன்னால் அது வரலாறு ஆகிவிடுமா? அல்லது செங்கொடி வரலாறு என்று சொல்லி விட்டால் அது வரலாறாகிவிடும் என்று யாரும் சட்டம் போட்டிருக்கிறார்களா? அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை வளைப்பதைப் பற்றி எழுதியிருக்கிறீகள். இதெல்லாம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். அரபு நாட்டில் மன்னனுக்கும் சாதாரண மனிதனுக்கும் ஒரே சட்டம் தான். சமீபத்தில் ஒரு கொலைக் கேசில் இளவரசருக்கே தண்டனை கொடுத்தார்கள். இதெல்லாம் மனிதர்கள் சட்டத்தை அமல்படுத்தும் விதம். அமல்படுத்துவதில் சிலர் கூட்டிக் குறைத்து செய்யலாம் அதெல்லாம் இறைச் சட்டமில்லை என்பதற்கு ஆதாரமாகிவிடுமா? இதெல்லாம் மனிதனின் தவறுகள். நாம் இங்கு சட்டத்தைப் பற்றி தான் விவாதம் செய்கிறோமே தவிர அதை செயல்படுத்துவதை பற்றி அல்ல. மனிதர்கள் இயற்றும் சட்டம் இது போன்ற ஓர வஞ்சனைகளுடன் தான் இருக்கும். இவை எதுவுமே அல்லாத முழுக்க முழுக்க நியாமான சட்டங்கள் கட்டாயம் மனிதன் சொல்லியிருக்க முடியாது! கடவுள்தான் சொல்லியிருக்க முடியும்.


சமீபத்தில் டெல்லி பஸ்ஸில் நடந்த கற்பழிப்பு கேசில் இந்தியாவின் எல்லா வாயும் கற்பழிப்புக்கு இஸ்லாமியச் சட்டம் வேண்டும் என முழங்கினார்கள். அவர்களெல்லாம் முஸ்லீம்களா? அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இஸ்லாமிய சட்டம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று அதனால் தான் இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்று கேட்டார்கள். இது தான் மனித சட்டத்துக்கும் இறைச் சட்டத்துக்கும் உள்ள வித்தியாசம். இதுமட்டுமா? அந்தக் காலத்தில் சட்டம் இல்லை சட்டம் இருந்தது என்று இரண்டு விதமாகக் கூறி சினிமா காமடியை நினைவு படுத்துகிறீர்கள். ஒரு இடத்தில் இந்தக் காலங்களின் பெரும்பகுதி தோராயமாக பத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டம் என்பது அதன் வடிவத்தில் மக்களிடம் இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு இடத்தில் சமூகத்திற்கு இயல்பாகவே பெண் தலைமைப் பாத்திரம் ஏற்றிருந்தாள், சில சமூக ஒழுங்குகள் இருந்தன என்று எழுதியிருக்கிறீர்கள். பெண் எதற்கு தலைமைப் பொருப்பு ஏற்க வேண்டும்? சமூக ஒழுங்குகள் இருந்ததாம் அது என்ன சமூக ஒழுங்கு அதை தானே சட்டம் என்கிறோம். இறைச் சட்டம் இல்லை என்று ஷோ காட்டுவதற்காக முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக கூறுகிறீர்கள். எனவே இல்லாத ஊருக்கு போகக்கூடாத வழியில் போகாமல் இஸ்லாத்தை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இறைவன் இருக்கிறான் என்பதை பொது உண்மையாகக் கொண்டு விவாதிக்கக் கூடாது என்று என்னிடம் கூறிவிட்டு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? கம்யூனிசத்தில் சொன்னதெல்லாம் பொது உண்மை என்பது போல் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்தில் 90 சதவீத மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்பி தங்கள் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதை பொது உண்மை இல்லை என்று எழுதும் நீங்கள், பத்து சதவீதம் கூட இல்லாமல் செத்து ஒழிந்து போய்விட்ட கம்மூனிசத்தை பொது உண்மை போல் விவாதிக்கிறீர்கள். ஏதோ கடவுள் இல்லை என்பது 21ஆம் நூற்றாண்டின் அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை போன்றும், நாங்கள் நிரூபிக்காத நம்பிக்கையில் உழல்வது போன்றும் படம் காட்டியிருக்கிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பது எங்களின் நம்பிக்கை என்கிறால் அதே அளவுக்கு கடவுள் இல்லை என்பது உங்களின் நம்பிக்கை! எங்கள் நம்பிக்கையை பொது உண்மையாக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கும் நீங்கள் உங்கள் நம்பிக்கையை மட்டும் பொதுவிதி போன்று எழுதலாமா? இது தான் நீங்கள் நேர்மையாக விவாதிக்கும் அழகா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்.


@நண்பர் முபாரக்,
 
உங்கள் பதிவை படிக்கும் போது பரிதாபமாய் உணர்ந்தேன். உங்களுக்கு இஸ்லாம் குறித்து அதிகம் தெரியாது என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். கம்யூனிசம் குறித்து உங்களுக்கு எதுவரை தெரியும் என்று கேட்டால் நீங்கள் வாத்தியாரா என்று கோபப்படுகிறீர்கள். ஆனால் உங்கள் பதிவோ உச்ச அலட்டலாய் இருக்கிறது. இந்த நிலையில் கண்டிப்பாய் நாம் விவாதிக்கத்தான் வேண்டுமா? பரிசீலனை செய்யுங்கள்.
 
என்மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்கள். நான் கம்யூனிசத்தை பொது உண்மையாய் வைத்து விவாதித்திருந்தேனா? சுட்டிக்காட்டுங்கள். நீங்கள் இறைவனை அறிவதில் இருக்கும் வித்தியாசம் தான் நம்மிடையே இருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதை மறுத்துத்தான் நான் இறைவன் இருக்கிறான் என்பது பொது உண்மையல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய வாதம் எனும் அளவுக்குத்தான் நான் கம்யூனிசத்தைப் பயன்படுத்தியிருந்தேன். ஏனென்றால், என்னுடைய வாதத்தின் அடிப்படை கம்யூனிசமே. ஆனால் கம்யூனிசம் என்பது பொது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது என்பது உங்களின் கவனத்திற்கு. இதில் இன்னொரு அம்சம் பொது உண்மை என்றால் என்ன? என்பது. நூற்றில் தொன்னூற்றொன்பதுவர் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாலும் அது பொது உண்மை ஆகிவிடுவதில்லை. ஒற்றை ஒருவர் தவிர ஏனைய அனைவரும் பூமி தட்டை என்றாலும் பூமி உருண்டை என்பதே பொது உண்மை. எனவே அறிவியலின் மேடையில் உரசிப்பார்த்து சமூகம் ஏற்றுக் கொண்டிருப்பது தான் பொது உண்மையாய் கருதப்படுமேயன்றி அது எண்ணிக்கை கணக்கில் வருவதில்லை.
 
இஸ்லாமியச் சட்டங்கள் இறைச்சட்டங்களா? நீங்கள் பெருவெடிப்புக் கொள்கை குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னமே குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று புளகமடைகிறீர்கள். இதுபோன்ற புளகாங்கிதங்கள் தான் உங்கள் ஆதாரங்களா? நான் ஏற்கனவே இஸ்லாம் குறித்த தொடரில் இது குறித்து எழுதியுள்ளேன். குறிப்பிட்ட அந்த வசனங்களில் பெருவெடிப்புக் கொள்கை குறித்து எதுவும் இல்லை. தவிரவும் இவ்வாறான நிருவல்கள் இறைவன் உண்டா இல்லையா எனும் வாதத்திற்குத்தான் இட்டுச் செல்லும். அது இங்கு தேவையில்லை. நான் எல்லாம் மனிதச் சட்டங்களே என்பதை வரலாற்று, அறிவியல் பார்வையினூடாக எடுத்து வைத்ததைப் போல் நீங்களும் யதார்த்தத்தினூடாக உங்கள் வாதங்களை எடுத்து வைக்கவும், கற்பனைகளிலிருந்து அல்ல.
 
புராதன பொதுவுடமை சமுதாயம் குறித்து நான் கூறியிருப்பவை என்னுடைய சொந்தக் கற்பனையோ, கம்யூனிசத்தின் நிலைப்பாடு மட்டுமோ அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் ஆய்வுகள் குறித்த எந்த நூலை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவற்றில் அரசோ சட்டமோ இல்லாத, சமவாய்ப்பும் சமவசதிகளும் கொண்ட சில லட்சம் ஆண்டுகள் நீண்ட இனக்குழுக்களின் வாழ்க்கச் சித்திரத்தை நீங்கள் காண முடியும். இதற்கு நீங்கள் கம்யூனிச ஆய்வாளர்களின் நூல்கள் மட்டுமல்ல முதலாளித்துவ ஆய்வாளர்களின் நூல்களைக் கூட எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் வாதம் புரிவதற்கு முன் சற்று அறிதலுடன் இருத்தல் நலம்.
 
சட்டம் என்பதும் சமூக ஒழுங்கு என்பதும் ஒன்றா? ஆட்சியமைப்பு என்பதும் பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றதும் ஒன்றா? இவைகளுக்கிடையேயான வேறுபாடுகளையும் அதன் பின்னணிகளையும் அறிய வேண்டியது அவசியம். சட்டத்திற்கும் சமூக ஒழுங்கு என்பதற்கும் இரண்டு வேறுபாடுகளை முதன்மையானதாக குறிப்பிடலாம்.


 1) சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு, சமூக ஒழுங்கை மீறினால் தண்டனை இல்லை.


2) விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்டத்தை பின்பற்றவேண்டியது அனைவரின் கடமை, விரும்பி, ஏற்று செய்வது சமூக ஒழுங்கு.


திருடக்கூடாது என்பது சட்டம் அதை மீறினால் தண்டனை. காலையில் எழுந்ததும் அனைவரும் பல்துலக்க வேண்டும் என்பது சமூக ஒழுங்கு இதை மீறியதாகக் கூறி எவரையும் தண்டிக்க முடியாது. எனவே சட்டங்கள் என்பதும் சமூக ஒழுங்கு என்பதும் ஒன்றல்ல. இதுபோல ஆட்சி என்பதையும் பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றதையும் ஒன்றெனக் கருத முடியாது. இதற்கும் இரண்டு வேறுபாடுகளை முதன்மையானதாக கூறலாம்.


1) ஆட்சி என்பது அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது, பெண் தலைமைப் பொறுப்பு ஏற்றது அதிகாரமற்றது. அதாவது ஆட்சியாளர்களைப் போல எந்த அதிகாரமும் தலைமைப் பொறுப்பேற்ற பெண்ணுக்கு கிடையாது. ஒரு இனக் குழுவை அதிக சேதமின்றி உணவைப் பெறுவதற்காக இயல்பாக, வழிகாட்டும் தேவையிலிருந்து ஏற்பட்ட ஒரு தலைமை.


2) ஆட்சி என்பது தனிப்பட்ட நிர்வகப் பொறுப்பு, பெண் தலைமை என்பது அவ்வாறன்றி இனக்குழு உறுப்பினர்கள் அனைவரும் என்னென்ன வேலைகள் செய்வார்களோ அதற்கு ஈடாக தலைமைப் பெண்ணும் செய்ய வேண்டும் கூடுதலாக இனக்குழுவுக்கும் வழிகாட்டுவார். எனவே ஆட்சி என்பதும் தலைமைப் பொறுப்பேற்றதும் ஒன்றல்ல. இங்கு சட்டம் குறித்து மட்டுமே விவாதிக்கிறோம் ஆட்சி குறித்தல்ல என்று கூறமுடியாது. ஏனென்றால் ஆட்சி என்பதும் சட்டம் என்பதும் பிரிக்க முடியாதபடி ஒன்றானவை. சட்டமில்லாத ஆட்சியை கற்பனை செய்து பாருங்கள். அல்லது அதிகாரம் இல்லாத சட்டம் குறித்து சிந்தித்துப் பாருங்கள். எனவே சட்டம் என்பது வேறு சமூக ஒழுங்கு என்பது வேறு. அதுவும் சட்டம் தான் என பொதுமைப்படுத்த முடியாது.
 
இதில் நீங்கள் பள்ளிக்கூடத்தை எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்கள். அதுவும் அரசைப் போலத்தான், அதிலும் அதிகாரமும் சட்டங்களும் உண்டு. நாட்டாமை தீர்ப்பு கூறுவது, பள்ளிக்கூட விதிமுறைகள், இதுபோன்ற வேறு சில ஆகியவைகள் அரசைப் போல அதிகரத்தின் நீர்த்த வடிவங்கள். எனவே அரசு செய்யவில்லை என்பதனால் மட்டுமே அது சட்டங்களில்லை என்று ஆகிவிடாது. அரசைப் போன்ற அதிகாரத்திலிருந்து அரசு சட்டமியற்றும் நோக்கத்தை ஒத்திருக்கும் அனைத்தும் சட்டங்கள் தாம். இவைகளையும் சமூக ஒழுங்கையும் கூட ஒரு தட்டில் வைக்க முடியாது. எனவே மனிதன் வர்க்கங்களாய்ப் பிரிந்து அவர்களிடையே இணக்கம் காணமுடியாதபடி பகை ஏற்பட்டதன் விளைவாக அரசு தோன்றிய பின்னரே சட்டங்கள் வருகின்றன. ஆனால் சட்டங்கள் தோன்றுவதற்கு முன்னதான சில லட்சம் ஆண்டுகளில் மனிதனை வழிகாட்டவேண்டிய தேவை அதிகமதிகம் இருந்தது. அந்த தேவையின் வலியில், வழியிலேயே மனிதன் முட்டிமோதி ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டான். மாறாக சட்டங்களோ ஒரு வர்க்க மக்களுக்கு சாதகமாக பிற வர்க்க மக்களை ஒடுக்கும் கருவியாக இருந்தது. இந்த அடிப்படையிலும் கூட சட்டங்கள் என்பது இறைச் சட்டமாக இருந்திருக்க முடியாது என்று கூறலாம்.
 
அடுத்து இந்திய ஆட்சியாளர்கள் சட்டங்களை தவறாக கையாள்வதாக குறிப்பிட்டிருந்தீர்கள். இதை நான் என்னுடைய வாதத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டிருந்ததெல்லாம் சட்டம் ஆளும் வர்க்கத்தின் கருவியாய் இருந்து பிற வர்க்கங்களை ஒடுக்குகிறது என்பதைத்தான். வாதத்தை சரியாக புரிந்து கொண்டு அதில் ஐயங்களை, கேள்விகளை எழுப்பினால் தகுந்த பதிலளிக்கப்படும்.
 
தொகுப்பாக: சட்டங்கள் இல்லாத காலம் இருந்தது. சமூக ஒழுங்குகளும் சட்டங்களும் ஒன்றல்ல. எனவே, எல்லாம் மனிதச் சட்டங்களேயன்றி இறைச் சட்டங்கள் என்று ஒன்றுமில்லை. இன்னும் இறைச்சட்டங்கள்  இருப்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் அதற்கான சான்றுகளை எடுத்து வைக்கவும்.

(பின்குறிப்பு: வேலைப்பழு அதிகம் இருந்ததால் விரிவாக எழுத முடியவில்லை. தேவைப்படின் அடுத்த பதிவை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுகிறேன்.)



0 மிஸ்டர் செங்கொடி,


ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இப்படித் தான் பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்டதற்கும் நீங்க எழுதியிருப்பதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? நீங்கள் எழுதியிருப்பது தான் ஒரே அலட்டலாக இருக்கிறது. தன்னைத்தவிர மற்ற எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிறையப் பேர் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இஸ்லாம் தெரியாது, கம்மூனிசம் தெரியாது என்று நான் கூறினேனாம். சரி உங்களுக்கு எல்லாம் தெரியுமோ. உங்களுக்கு என்ன தெரியும் என்பது நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே. உங்களுக்கு என்னுடன் வாதம் செய்ய முடியவில்லை என்றால் தாராளமாய் நின்று விடலாம். எனக்கே பதில் சொல்ல முடியாமல் தள்ளாடும் நீங்கள் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பில்டப் கொடுக்கிறத முதல்ல நிறுத்துங்கள். கம்மூனிசம் என்றாலே பொது உண்மைதான் என்று சொல்லும் உங்களுக்கு எங்க மார்க்கத்தைப் பற்றி என்ன தெரியும்? நாலு வெப்சைட்ட படிச்சுட்டு பத்து கட்டுரை எழுதிட்டா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதா ஆயுடுமா? இந்த உலகம் எப்படி தோன்றியது என்று விஞ்ஞானிகளே வியக்கும் படி விளக்கும் திருக் குர் ஆனின் வசனங்கள் உங்களுக்கு கற்பனையாகத் தெரிகிறதா? எல்லாம் தானாகவே வந்தது என்று சொல்லும் அரைவேக்காட்டுத் தனமான உளறல் உங்களுக்கு பொது உண்மையா? புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். எது சட்டம் எது சமூக ஒழுங்கு எனக்கு டியூசன் நடத்திய செங்கொடியே பல் துலக்கவில்லை என்றால் அதற்கு தண்டனை கிடையாதா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் மகன் காலையில் பல்துலக்காமல் டீ குடித்தால் ஆஹா நல்ல காரியம் செய்தாய் என்று பாராட்டுவீர்களா? அடித்து பல்துலக்கச் செய்ய மாட்டீர்களா? இப்படி ஈஸியான விஷயம் கூட தெரியவில்லை என்று நினைக்கும்போது உங்களைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது. இப்படி கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு பாயிண்ட் பாயிண்டா எழுதுவதற்குப் பதிலாக உண்மையை ஒப்புக் கொள்ளலாம். ஒரு விசயத்தில் எதுவெல்லாம் கட்டுப்படுகளை விதிக்கிறதோ அதுவெல்லாம் சட்டம் தான். இதன்படி பார்த்தால் சட்டமில்லாத காலம் என்று ஒன்று இல்லவே இல்லை. மனிதச் சட்டங்களெல்லாம் ஒரு வருஷத்துக்குக் கூட தாக்குப் பிடிக்காமல் மாற்றிக் கொண்டிருக்கும் போது 1400 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு சின்ன மாற்றம் கூட தேவைப்படாமல் இருக்கும் ஒரே வேதம் திருக் குர் ஆன் ஒன்றுதான். இது ஒன்றே புரியவைகவில்லையா ஷரியத் சட்டங்கள் இறைச் சட்டங்கள் என்று. இதை தெளிவாக மறுத்து உங்கள் கருத்துகளை கூறுங்கள் பார்க்கலாம். அது முடியாததால் தானே புரியாமல் கம்மூனிச புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே காப்பிபேஸ்ட் செய்கிறீர்கள். இதற்கும் காப்பிபேஸ்ட் வித்தையை காட்டாமல் சிம்பிளாக பதில் கூறுங்கள். எனக்கும் வேலை அதிகமாக இருப்பதால் இத்துடன் முடிக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்தமுறை விரிவாக பதிலளிக்கிறேன்.




@ நண்பர் முபாரக்,
 
நீங்கள் என்னுடைய பதிலை படித்து உள்வாங்காமல், அகக்கிளர்ச்சி அகலாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு கோபம் கொப்பளிக்கிறது உங்கல் பதிவில். நிதானமாக யோசித்துப் பாருங்கள். உலகில் இறைச் சட்டங்கள் உண்டா? நீங்கல் எழுதிய விஞ்ஞானிகளே வியக்கும் படி விளக்கும் 1400 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு சின்ன மாற்றம் கூட தேவைப்படாமல் இருக்கும் என்பன போன்ற புளகமடைதல்கள் எல்லா மதங்களிலும் உண்டு. இதைத்தான் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? என்றால் நம்முடைய விவாதம் வேறு தலைப்புகளில் திரும்பும் இதை விரும்புகிறீர்களா?
வரலாற்று பூர்வமாகவே மனிதன் தனக்கு தேவையான கட்டுப்பாடுகளை தானே சொந்த அனுபவங்களின் மூலம் முட்டிமோதி கற்றுக் கொண்டு அதை சமூகத்திற்கும் தந்து சென்றிருக்கிறான். மனிதனல்லாத ஏதோ ஒரு ஆற்றல் மனித அனுபவங்களுக்கு அப்பாற்பாட்டு கட்டுப்பாடுகளைத் தந்து சென்றதாக எந்த நிகழ்வும் வரலாறுகளில் இல்லை. ஆனால் இதை புரிந்து கொள்ளவோ பரிசீலனை செய்யவோ போதிய உள்ளீட்டுடன் நீங்கள் இல்லை. எனவே மதவாத கற்பனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களிடம் உங்கள் மதம் தொடர்பான மூலகங்களிலிருந்து கேள்வி எழுப்பினால் தான் புரியவைக்க முடியும் எனக் கருதுகிறேன்.
இறைச் சட்டமா? என்பதை எடுத்துக் கொள்வோம். கொலைக்கு கொலை என்பது உங்கள் வேதம் சொல்லும் நிலை. செய்த திருட்டை மறைப்பதற்காக ஒருவன் இன்னொருவனைக் கொண்று விடுகிறான். தன் மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்ற தந்தையை தாயே கொன்றுவிடுகிறாள். இந்த இரண்டு நிகழ்வுகளில் உங்கள் மத விகாரங்களின் படி இரண்டும் கொலை என்றாகிறது. ஆனால் மனித விழுமியங்களின்படி இரண்டையும் கொலை என்ற ஒரே தராசில் வைத்து மதிப்பிட முடியாது. அப்படி மதிப்பிட்டால் அது பெரும் பிழையாகும். ஆனால் அந்த பெரும்பிழையை உங்கள் மத வேதங்கள் செய்திருக்கிறது. இதை மறுத்து உங்களால் விளக்கமளிக்க முடியுமா? இறைவன் எல்லா தவறுகளையும் விட்டு நீங்கியவன் என்று உங்களால் கூறப்படுவது உண்மையானால் இப்படி ஒரு சட்டத்தை இறைவன் தந்திருக்க முடியாதே. எனவே அவை இறைவன் பெயரால் கூறப்படும் மனிதச் சட்டங்களே.
 

சமூகக் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் ஒன்றா? என்பதை எடுத்துக் கொள்வோம். வட்டி வாங்கக் கூடாது என்பது உங்கள் வேத நூல்களின்படி சட்டம். வாங்கினால் தண்டனை உண்டு, வட்டி வாங்குவதற்கு நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்பதும் உங்கள் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் ஒன்று தான். ஆனால் இதைச் செய்யா விட்டால் அதற்கு தண்டனை கிடையாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு கீழ்ப்படிந்தே ஆக வேண்டும் என்று கண்டிப்பு கிடையாது. (பக்கத்து வீட்டில் ஒரு ஆலிம்ஷா தன் மகன் தாடி வளர்க்காததை கண்டித்து தண்டித்து வளர்க்கச் சொன்னதை நான் பார்த்திருக்கிறேன் என்று எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்) இரண்டுமே உங்கள் வேதங்களில் கூறப்படுவது தான். இரண்டுமே மனிதனின் வாழ்க்க நெறிகள் எனும் அடிப்படையில் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பவை தாம். ஆனால் ஒன்று ஷரீயத் ஆகவும் மற்றொன்று சுன்னா ஆகவும் கருதப்படுகிறதே ஏன்? எனவே கட்டுப்பாடுகளை விதிப்பவை எல்லாம் சட்டங்கள் தம் என பொதுமைப்படுத்த முடியாது.
 
இவைகளுக்கு தகுந்த மறுப்பை நீங்கள் கூற வேண்டும். அல்லாத பட்சத்தில் இறைச் சட்டங்கள் என எதுவுமில்லை என்றும், கட்டுப்பாடுகளும் சட்டங்களும் ஒன்றல்ல எனும் அடிப்படையில் நீண்ட நெடிய காலம் மக்கள் சட்டங்களின்றியே சரியான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொண்டதாக கருதப்படும்.
 
போதும் எனக் கருதுகிறேன். தேவைப்படின் மீண்டும் மேலதிக விளக்கங்களுடன் வருகிறேன்.



0 மிஸ்டர் செங்கொடி,


நீங்கள் பயந்து போய் இருக்கிறீர்கள் என்பது அருமையாக தெரிகிறது. செங்கொடி இஸ்லாத்தை குறைகூறி பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால் கம்மூனிசத்தைப் பற்றிக் கேட்டால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவார் என்று இந்த விவாதம் தொடங்கும் போது சகோதரர்கள் என்னிடம் கூறினார்கள். அது உண்மை என்று இப்போது புரூஃப் ஆகி விட்டது. புதாரண பொது உடமை என்றீர்கள், சமூகக் கட்டுப்பாடு என்றீர்கள் திடீரென அதெல்லாம் மிஸ் ஆகி விட்டதே ஏன்? கம்மூனிசத்தில் இதற்கு மேல் சரக்கு இல்லையா? அல்லது இதற்கு மேல் கம்மூனிச பருப்பு வேகாது என நினைத்தீர்களா? இப்போது சைலண்டாக திருக் குர் ஆன் வசனங்களுக்கு வந்து விட்டீர்கள். இது தான் நீங்கள் எந்த அளவுக்கு பயந்து போய் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக் கொடுக்கிறது. உங்கள் கற்பனைகளைக் கூறி இது தான் வரலாறு என்றீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சட்டமே இருந்ததில்லை என்றீர்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டேன். பதிலே இல்லை. பல்துலக்குவதற்கு தண்டனை இல்லை என்றீர்கள். உங்கள் மகனோ மகளோ (மேரேஜ் ஆயிடுச்சு தானே) பல்துலக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கிடுக்கிப் பிடி போட்டேன். மூச்சே விடவில்லை. பதில் சொல்ல முடியவில்லை என்றதும் இப்போது நைசாக குர் ஆன் க்கு தாவி விட்டீர்கள். அதையாவது உருப்படியாய் செய்தீர்களா என்றால் அதுவும் இல்லை. நீங்கள் சொல்லியிருப்பதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யார் எதற்காக கொலை செய்தாலும் அதற்கெல்லாம் ஒரே தண்டனை என்று திருக் குர் ஆனில் எந்த இடத்தில் இருக்கிறது? உங்களுக்கு தைரியமிருந்தால் எடுத்துக் காட்டுங்கள். அதே மாதிரி தான் தாடியும் எந்த இடத்தில் எல்லோரும் கண்டிப்பாக தாடி வைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது காட்ட முடியுமா? கிருக்குத்தனமாக நீங்கள் கற்பனை செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா? காழ்ப்புணர்ச்சியுடன் நீங்கள் உளறுவதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதலில் நீங்கள் சொல்லியதற்கு ஆதாரம் தாருங்கள் அல்லது இஸ்லாத்தின் மீது கண்ட கண்ட கற்பனைகளைச் செய்ததற்காக மன்னிப்ப்பு கேளுங்கள். நீங்கள் நேர்மையாக ஆதாரபூர்வமாக எழுதும்போது அதற்கான மறுப்பு இன்ஷா அல்லாஹ் சவுக்கடி போல் வரும்.


@ நண்பர் முபாரக்,
 
எந்த வடிவில் பதில் கூறினால் உங்களுக்கு புரியும் என யோசித்தேன், எப்படி எழுதினால் உங்களால் உள்வாங்க முடியும் என சிந்தித்தேன், என்ன வகையில் சொன்னால் உங்களுக்கு எளிமையாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் உங்களுக்கு எதையும் பரிசீலிக்கும், மீளாய்வு செய்யும் விருப்பமிருக்கிறதா என ஐயம் கொள்ளும் இடத்திற்கு என்னை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மதங்களை, கடவுளர்களை நம்புவது என்பது வேறு, அது குறித்து கொஞ்சமும் பரிசீலித்துப் பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பது வேறு. முந்தியதில் நீங்கள் அப்பட்டமான மதவாதியாக இருக்கிறீர்கள். பிந்தியதில் நீங்கள் மனிதனுக்கான இலக்கணங்களைத் தொடவே இல்லை. உங்கள் பதிவுகளைக் கொண்டே இதைக் கூறுகிறேன். இப்படியான நிலையில் உங்களுடன் விவாதத்தை தொடர்வது எவ்வளவு கடினமானது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். எனக்கான நேரத்தை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் தொடர்கிறேன்.
 
புராதன பொதுவுடமை சமுதாயம் குறித்த செய்திகளுக்கும், பல்லாயிரம் ஆண்டுகள் சட்டமின்றி இருந்தது மனித வரலாறு என்பதற்கும் ஆதாரம் காட்டாமல் இருந்தேனா?

/// நீங்கள் இது தான் வரலாறு என்று சொன்னால் அது வரலாறு ஆகிவிடுமா? அல்லது செங்கொடி வரலாறு என்று சொல்லி விட்டால் அது வரலாறாகிவிடும் என்று யாரும் சட்டம் போட்டிருக்கிறார்களா?//// என்று நீங்கள் கேட்டது ஜூன் 15ம் தேதி. இதற்கு நான்

////வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் ஆய்வுகள் குறித்த எந்த நூலை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவற்றில் அரசோ சட்டமோ இல்லாத, சமவாய்ப்பும் சமவசதிகளும் கொண்ட சில லட்சம் ஆண்டுகள் நீண்ட இனக்குழுக்களின் வாழ்க்கச் சித்திரத்தை நீங்கள் காண முடியும். இதற்கு நீங்கள் கம்யூனிச ஆய்வாளர்களின் நூல்கள் மட்டுமல்ல முதலாளித்துவ ஆய்வாளர்களின் நூல்களைக் கூட எடுத்துக் கொள்ளலாம்/// 

என்று பதில் கூறியது ஜூன் 24ம் தேதி. இதற்குப் பிறகு இது குறித்து நீங்கள் ஏதாவது கூறியிருக்கிறீர்களா? ஒன்றுமில்லையே. இப்போது திடீரென மீண்டும் நான் ஆதாரமில்லால் கூறியிருப்பதாக  பொய் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?
 
பல் துலக்கும் விசயத்தில் நீங்கள் எனக்கு கிடுக்கிப்பிடி போட்டீர்களா? கிடுக்கிப்பிடி, சவுக்கடி, செருப்படி, நெத்தியடி இதுபோன்ற சொற்களெல்லாம் முகம்மதியவாதிகளுக்கு மட்டும் காப்பீடு செய்யப்பட்ட சொற்களா என்ன? உங்களைப் போன்றவர்களை இவ்வாறான சொற்பாவனை செய்யும் போது குபீர் சிரிப்பு கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை. இந்த விசயத்தில் உங்களின் கேள்வி எள்ளவளவு பாமரத்தனமானது என்பதை ஓர் எள்ளல் மூலம் காட்டியிருந்தேனே கவனிக்கவில்லையா நீங்கள்? ஜூலை 8ம் தேதி நான் எழுதிய அந்த எள்ளல் இதோ ///(பக்கத்து வீட்டில் ஒரு ஆலிம்ஷா தன் மகன் தாடி வளர்க்காததை கண்டித்து தண்டித்து வளர்க்கச் சொன்னதை நான் பார்த்திருக்கிறேன் என்று எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்.
 
உங்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தான் நான் குரான் வசனங்களுக்கு தாவி விட்டேனா? உங்களின் எந்தக் கேள்விக்கு நான் பதில் கூறாமல் விட்டு விட்டேன் என்று கூற முடியுமா? மட்டுமல்லாமல் நான் ஏன் குரான் வசனங்களுக்கு தாவுகிறேன் என்பதை தெளிவாக அறிவித்து விட்டுத்தான் செய்திருக்கிறேன். இதோ அந்தக் காரணம்


////ஆனால் இதை புரிந்து கொள்ளவோ பரிசீலனை செய்யவோ போதிய உள்ளீட்டுடன் நீங்கள் இல்லை. எனவே மதவாத கற்பனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களிடம் உங்கள் மதம் தொடர்பான மூலகங்களிலிருந்து கேள்வி எழுப்பினால் தான் புரியவைக்க முடியும் எனக் கருதுகிறேன்.///


 பதில் கூறுமுன் என்ன எழுதப்பட்டிருக்கிறது? எதற்கு பதில் கூறுகிறோம் என்பதை அலசிப் பார்த்துவிட்டு பின் எழுதுவது நலம்.
 

இஸ்லாம் குறித்து நான் கூறியிருப்பவை ஆதாரமற்ற காழ்புணர்சியிலானாலான கற்பனைகளா? முதலில், எதற்கு ஆதாரம் வழங்க வேண்டும். வெளிப்படையான ஒன்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. இஸ்லாம் குறித்து நான் எழுப்பியிருக்கும் எதுவும் மறைமுகமானவை அல்ல. இஸ்லாமிய மூலகங்களில் இல்லாததும் அல்ல. இது நீங்கள் உட்பட இதனை படிக்கும் அனைவருக்கும் தெரியும். கொலைக்கு இன்ன தண்டனை தான், வட்டி வாங்குவது ஹராம், தாடி வைப்பது சுன்னத் இது போன்ற செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் கேட்டீர்கள் என்றால் குரானை நீங்கள் படிக்கவில்லை என்பது பொருளாகிறது. முதலில் அதைச் செய்யுமாறு பணிக்கிறேன். கொலைக்கு என்ன தண்டனை என்று குரான் அத்தியாயம் 2 அல்பகராவில் வசனம் 178ல் கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருளுக்கு மாற்றமாக, அதாவது கொலைக்கான காரணங்களால் அதற்கான தண்டனை மாறுபடும் எனும் பொருளில் குரான் வசனமோ ஹதீஸ்களோ இல்லை. இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களா? இங்கு நான் எழுப்பியிருக்கும் கேள்வி என்னவென்றால் இருவேறு விதமான நோக்கங்களுக்காக செய்யப்படும் கொலைகளில் காரணங்களை முன்வைத்து அக்கொலைக்கான தண்டனை மாறுபடுமா? என்பது தான்.


குரானிலோ ஹதீஸ்களிலோ காரணங்களை நோக்கங்களை முன்வைத்து தண்டனை மாறுபடும் என்று ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? ஆம் இருக்கிறது என்றால் சுட்டிக் காட்டுங்கள். பரிசீலித்து என்னுடைய கேள்வியை நான் விலக்கிக் கொள்கிறேன். சுட்டிக் காட்ட முடியுமா உங்களால்? இஸ்லாமிய மூலகங்களின்படி கொலை என்பது ஒருவனுடைய குற்றம், அதற்கான தண்டனை அல்லது அதற்கான பரிகாரம் (இரத்தப்பணம்) எனும் கோணத்தில் தான் அணுகுகிறதேயன்றி; அந்தக் கொலைக்கான காரணம் என்ன? அந்தக் காரணத்தில் நேர்மையோ நீதியோ இருக்கிறதா என்பதெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் இல்லை. இப்படி இஸ்லாத்தின் பார்வை விசாலமில்லாதிருப்பது ஏன்? இப்படியான குறுகிய பார்வை கொண்ட ஒரு சட்டம் இறைச்சட்டமாக இருக்க முடியுமா? மனிதச் சட்டமே என்பது தான் என் வாதம் மறுக்க முடியுமா உங்களால்?
 
தாடி வளர்ப்பது குறித்து நான் என்ன எழுதியிருக்கிறேன்? கண்டிப்பாக அனைவரும் தாடி வைக்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தேனா எங்காவது? சுட்டிக் காட்டுங்கள். வட்டி வாங்குவது ஹராம், கூடாதது, மீறினால் தண்டனை என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம் தாடிக்கு அப்படியான தண்டனைகளோ, ஹராம் என்ற அறிவிப்போ இல்லை. இரண்டுமே எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒழுங்குமுறைகள் தாம். ஆனால் ஒன்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது மற்றொன்று அவ்வாறன்றி ஒழுங்கு முறையாக மட்டுமே விடப்பட்டுள்ளது. இது ஏன்? என்பது தான் என்னுடைய கேள்வி. அதாவது நீங்கள் கூறினீர்களே ஒரு விசயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கும் அனைத்துமே சட்டம் தான் என்று; அதை மறுத்துத்தான் நான் மேற்கண்ட செய்தியை கூறியிருக்கிறேன்.


நீங்கள் கூறியபடி கட்டுப்பாடுகள் விதிக்கும் எதுவும் சட்டம் தான் என்றால் தாடி வளர்ப்பது ஏன் சட்டமாக்கப்படவில்லை? வட்டி வாங்கக் கூடாது, வட்டி வாங்கினால் தண்டனை என்பதைப் போல தாடி வைக்காவிட்டால் குற்றம் என்று ஏன் தெளிவிக்கப்படவில்லை? ஏனென்றால் கட்டுப்பாடுகள் விதிக்கும் அனைத்தையுமே சட்டம் என்று கொள்ள முடியாது. இந்த அடிப்படையில் தான் மனித குலத்தின் தொடக்க காலங்களில் சட்டம் என எதுவுமின்றி சில சமூகக் கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டு வாழ்ந்திருந்தார்கள் என்று கூறுவது. இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?
 
'
நண்பர் முபாரக், எதையும் உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல், அறிவுவயப்பட்டு அணுகுங்கள். அது தான் உங்களை சரியானவைகளுக்கான தேடலில் என்றும் இருத்தி வைக்கும்.



Thanks: Senkoddi