Tuesday, July 30, 2013

இஸ்லாமிய உறையிலே போட்டு...











'நேற்று விசயம் தெரியுமா ?"


என்றார் எனது பக்கத்து வீட்டுக்காரர் திடீரென எட்டிப்பார்த்து.


"அப்படியா என்ன விசயம்" என்றேன்?


"எங்கேயோ ஒரு இடத்தில என்னமோ ஒரு சவமொன்றைக் கண்டு பிடிச்சிருக்கிறாங்களாம். எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முந்தியதாம். ஆனா அந்தச் மையத்துல புதிய காயங்கள் இருக்குதாம். அதைப்பற்றி அறிந்ததும் எத்தனையொ சயன்டிஸ்ட்மாரெல்லாம் ஒடனேயே  கலிமாக்கூறி இஸ்லாத்திற்கு வந்திட்டாங்களாம்." என்றார்.


"அப்படியா...? அது என்ன மாதிரி சவம்? எங்க தோண்டினவங்க.. என்று விபரம் சொல்லுறிங்களா...?"


"அது ஆ...! வந்து.. அது வந்து.. பள்ளில தொழுகை முடிஞ்சு வரக்கொள ஆக்கள் பேசிக்கிட்டாங்க... நெற்றுலயெல்லாம் வந்திருக்காம்.. நான் செரியா கேட்டுட்டுச் சொல்றன்.'" என்று போனவர்தான். அதன்பிறகு பலமுறையும் என்னைக் காணும்போதெல்லாம் அதைப்பற்றியே கதைப்பதாக காணவில்லை. நானாகவே கேட்டாலும் நழுவல்தான்.


ஆனால்,  இன்று வரையிலே அது தொடர்பான சிறுதுரும்பளவான ஆதார செய்தியைக் கூட தரக்காணவில்லை. ஆக மிஞ்சிப்போனால் தனக்கு தகவல் கூறிய ஆளைச் சந்திக்கத்தானும் முடியவில்லை என்பார். ஆனாலும் சில நாட்களாக அவர் தனது வீட்டுக்கு வருகை தரும் இன்னொரு நண்பரோ உறவினரோ அறிந்த பலரிடம் அதேவிடயத்தை என்னிடம் கூறியதைவிட தத்ரூபமாக விளக்கிக் கொண்டேயிருக்கின்றார்.


அது எனக்கு காதில் விழுந்தவண்ணமேயுள்ளது.


இதை நான் ஏன் கூறவருகின்றேன் என்றால் பலருக்கு தான் அறிந்த / கேள்வியுற்ற இன்னுமொருவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய விடயம் குறைந்தபட்ச ஆதாரத்தையாவது கொண்டிருந்தாக வேண்டுமே என்ற சிறு அக்கறைதானும் இருப்பதில்லை.

ஒருவர், தான்  சிலாகித்து கொண்டிருக்கும் விடயத்திற்கு சார்பாக யாரோ சிலர் எதையாவது கூறிவிட்டால் போதும் அதுகுறித்து தான் மற்றவருக்குத் தெரியப்படுத்த முன்பு, அவ்விடயம் பற்றிய குறைந்தபட்ச ஆதாரத்தையாவது சிந்திப்பது கிடையாது.

பழக்கங்கங்களாக மட்டுமே போய்விட்ட சில விடயங்களுக்கு நாமெல்லாம் அடிமையாகிப்போய்விட்டோமா?





ஒருவிடயம் உண்மைதானா நம்பகத்தன்மை மிக்கதுதானா...?

என்பதெல்லாம் பற்றிய அக்கறை கிடையாது. வேண்டியதெல்லாம் ஏதோ நமக்குக் கூறுபவன் நம்மைச் சேர்ந்தவனாக இருப்பதால் 'அவன் என்ன பிழையாகவாக சொல்வான்?' எனும் குருட்டு நம்பிக்கையும் அதுபற்றிய அலட்சியமும்தான். சொல்பவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் எத்தனை பேராக இருந்தாலும் கூட உண்மையாக அது இருந்தாக வேண்டுமென்ற அவசியம் ஒன்றும் கிடையாது அல்லவா?


eg: ஒரே ஒருவனைத் தவிர இந்த உலகிலுள்ள ஏனைய அனைவரும் ஒன்று சேர்ந்து, நாம் வாழும் பூமி தட்டையானது காட்டுக் கூச்சல் போட்டாலும் கூட பூமி ஒருபோதும் தட்டையாகி விடுவதில்லை.


நமக்கு வேண்டியவர் ஒருவர் நம்பத் தகுதியில்லாத தகவலை அல்லது மிகையான தகவலை நம்மிடம் கூறும்போது  ஒரு இங்கிதம் கருதி நாம் அதை உடனடியாக மறுப்பதற்குச் சங்கடமாக இருப்பதுண்டு. ஆனாலும்  அவற்றை நாம் ஊக்குவிக்கக்கூடாது. மாறாக நமது மெல்லிய எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டாமா?

நமது விசயங்களிலே யாராவது இன்டநெற்றிலே அப்படியிருக்கின்றது இப்படியிருக்கின்றது என்று ஆதாரங்கள் பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாமல்  போகிற போக்கில் கூறிச்சென்றால், அதைவைத்து கதைபரப்ப எத்தனையோ பேர் காத்திருக்கின்றார்கள்.


அது உண்மையோ அப்படியில்லையோ தம்மைச் சேர்ந்தவர்களிடம் போலியாகவேனும் ஒருவித பக்திப்பரவச சிலிர்ப்பை ஏற்படுத்திவிடத் துடிக்கின்றார்கள்.


இப்படியே ஊகங்களால் கட்டமைக்கப்பட்ட தகவல்களை வைத்தே ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை வளர்த்தச் செல்ல முடியும் என்ற பிழையான தகவல்கள்தான் நாம் பின்பற்றும் மார்க்கத்தையும் கூட இன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய உறையிலே போட்டு கொடுத்து மட்டும் விட்டால் எதை வேண்டுமானாலும் நம்புவது என்பது எத்தனை மூடத்தனமானது தெரியுமா?

முன்பெல்லாம் நமது முன்னோர்கள், எங்காவது அரபி மொழியிலே உள்ள கடதாசிகளைக் கண்டால் அதனை பயபக்தியோடு எடுத்து உயரமான கூரையிலோ வேலியிலோ செருகி வைத்திருப்பதுண்டு.  அரபியில் அச்சடித்த காகிதம் எல்லாமே குர்ஆன் என்று கருதியது போன்றதுதான் இப்போது நான் கூறும் விடயங்களும்.


எனது அயலவர் விடயத்தில் பாருங்கள்,

  • நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த உடல் ஒன்று-

  • புதிதாக ஏற்பட்டது போன்ற காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது-  

  • அதைப் பற்றி அறிந்ததும் பல விஞ்ஞானிகள் உடனடியாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாறிவிட்டனர்


என்பதுதான் எனது அயலவர் கூறிய செய்தி!


அயலவர் என்பது ஒரு வெறும் குறியீடுதான். இவர்போல பலநூறுபேர் இருக்கின்றார்கள்.


இதிலே எத்தனை விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளன என்பதை சிந்தித்துப் பாருங்கள்!


எனது வினா இதுதுதான்.


ஒவ்வொரு மதத்திற்கும் பல தனித்துவங்களும் மாட்சிமைகளும் உள்ளன. அவற்றை அவரவர்கள் நம்புவதும் சிலாகிப்பதும் அவரவர் தெரிவுகள்.


அது போலவே நமது இஸ்லாமிய மதத்திற்கென்றும் தனித்தன்மைகளும் போதியளவு மாட்சிமைகளுமுள்ளன. அவ்வாறிருக்கும்போது இப்படியான உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளாலும் ஆதார ரீதியாக பலமற்றுப்போன செய்திகளாலும்தான்  நாம்  நமது சகோதரர்களை மெய்சிலிர்க்க வைக்க வேண்டுமா என்ன?


நாளை உண்மை அம்பலமாகும்போது வெட்கம் நிரம்பிய மௌனம் காக்க வேண்டிய தாழ்வுச்சிக்கலுக்கும் சங்கடங்களுக்கும் நாம் உள்ளாக வேண்டியிராதா?


அல்லது இப்படியெல்லாம் ஜல்லியடித்துவிட்டு போகிறவர்களின் ஈனக்குணத்தையெல்லாம் -அதுவும் அவர்கள் வேண்டுமென்றும் அல்லது சொறிதல் சுகத்திலும் மீண்டும் மீண்டும் கூறும் பொய்களையெல்லாம்  'நமது சகோதரர்களின் அந்தரங்கங்களை மறைத்தல் &  மன்னித்துவிடுதல்' என்ற தலைப்பின் கீழே தொடர்ச்சியாக கண்டுகொள்ளாமலே கொண்டிருக்கப்போகின்றோமா?


முஸ்லீம்கள் என்றால் அவர்கள், இஸ்லாம் என்ற உணர்ச்சிமிக்க கவரிலே போட்டு எதைக்கொடுத்தாலும் எதைவேண்டுமானாலும் நம்ப விரும்புபவர்கள்தான் என்பதைத் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டே இருக்கப்போகின்றோமா?

 
-மூதூர் மொகமட் ராபி







 

No comments:

Post a Comment