Wednesday, June 4, 2014

யாருக்கும் இல்லை அந்தரங்க வாழ்க்கை




இன்றைய நம்முடைய வாழ்க்கை என்பது - தொழில்நுட்ப வாழ்க்கை. ஊடக வாழ்க்கை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்கிற, கொஞ்சிக்கொள்கிற வாழ்க்கை. நாம் வாழ்கிற காலம் நிச்சயமாக மகத்தானதுதான். அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது சாத்தியப்பட்டது. அதே நேரத்தில் அது மனிதர்களிடம் இருந்த வெட்கத்தையும், கூச்சத்தையும் போக்கிவிட்டது. முகநூல், யூ டியூப், ப்ளாக், வெப்சைட், ட்விட்டர் போன்றவற்றின் மூலம் யாரைப் பற்றிய தகவலையும் யார் வேண்டுமானாலும் சேகரிக்கலாம். சேகரித்த தகவலை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம் என்ற நிலை வாழ்க்கையின் போக்கை மாற்றிவிட்டது. சிந்தனை தளத்தின் போக்கை மாற்றி விட்டது. சமூக வலைத்தளங்கள் தகவல் அறிவு சிலருக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றிவிட்டன. அறிவு தேடலை எளிதாக்கிவிட்டது. தகவல் அறிவை அனைவருக்கும் பொதுவாக்கி விட்டது. இருநூறு முந்நூறு ஆண்டு காலத்தில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபது முப்பது ஆண்டுகளிலேயே அடைந்து விட்டோம். தகவல் தொழில்நுட்பத்தின் அரிய சாதனைதான். அதே நேரத்தில் உலகில் எந்த மூலையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவனை அமெரிக்காவின் ‘எக்லியான்‘ என்ற சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கமுடியும் - கண்காணிக்கப் படுகிறோம் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.இன்று நாம் வாழ்கிற வீடும், புழங்குகிற வெளியும் எப்படிப்பட்டதாக இருக்கிறது?  என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  தொழில்நுட்பமும் பணமும் நம்மை எங்கு கொண்டுபோய்க்கொண்டிருக்கிறது?    நாம் பேசுகிற பாரம்பரியம், பெருமை, சமூக ஒழுக்கம், சமூக அறம் என்பது வெறும் மேடைப் பேச்சுகளாக, பட்டிமன்ற நகைச்சுவை துணுக்குகளாக அப்போதைக்கு சிரிக்க வைக்கிற விசயங்கள்தானா?  மதிப்பீடற்ற வாழ்க்கைக்குள் எவை நம்மைத் தள்ளுகின்றன?  எதை நாம் மதிப்பீடாகக் கொண்டிருக்கிறோம்?  எது நாகரீகம்?  எது சமூக வளர்ச்சி?  கேமராவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகம்-அறிவார்ந்த படித்த சமூகம்தானா?  படிப்பு-கல்வி என்பது என்ன?  நம்முடைய கல்வி எதைக் கற்றுத் தருகிறது? சமூகத்தைப் பாழாக்கும் நாசக்கார கிருமிகள் எவைஎவை? தமிழ் சமூகம் தனக்கான அறத்தை, ஒழுக்கத்தை எப்போது கைவிட்டது? இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழர்களுடைய எல்லா முகங்களுமே காட்சி ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுவிடும். மற்றபோட்டிகளைவிட கேமராவில் முகத்தைப் பதிவு செய்வதற்கான போட்டிதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதில் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லை. ஊடகங்களின் சக்தி கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெருகிவிடும்.

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சிகளுமே சேனல்களை வைத்திருக்கின்றன. இருபத்துநான்கு மணி நேரமும் செய்திகளை அவை தந்துகொண்டிருக்கின்றன. Ôபரபரப்பு ஏற்பட்டது‘, ‘பதட்டமான சூழல் நிலவுகிறது‘ என்று செய்திகளைத் தரவில்லை. மாறாக உருவாக்குகிறார்கள். இருபத்திநான்கு மணிநேரமும் ‘பதட்டம், அச்சம், பரபரப்பு என்ற சொற்கள் ஓயாமல் நம்முடைய காதுகளில் விழுந்துகொண்டேயிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தை பரபரப்பும், அச்சமும் பதட்டமுமான நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்களா? ஒரே செய்தியை ஒவ்வொரு சேனலும் ஏன் ஒவ்வொரு விதமாக சொல்கின்றன? யார் சொல்வது உண்மை? பொய் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடுநிலை - உண்மை என்பதை அறியும் மனநிலையும் நமக்கு இல்லாமல் போய்விட்டது.   பரபரப்பு, பதட்டம், அச்சத்தில் உறைந்துபோன சமூகம். சூடான செய்திகளை மட்டுமே அறியும் சமூகம். செய்திகள் இப்படி இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி இருக்கின்றன?நடந்தது என்ன, சொல்வதெல்லாம் உண்மை, வாய்மையே வெல்லும்- நீயா - நானா, மனம் விட்டுப் பேசலாம், ‘பேசத் தயங்கியதைப் பேசலாம்‘, குற்றம், நித்யதர்மம், கோப்பியம் போன்ற நிகழ்ச்சிகளை தமிழக தொலைக்காட்சிகள்தான் ஒளிபரப்புகின்றன.  எதை, யாரிடம், எப்போது பேசுவது என்ற கூச்சத்தை தமிழ்ச்சமூகம் கைவிட்டுவிட்டது.  நம்முடைய குடும்பப் பெண்கள்தான் தங்களுடைய அந்தரங்கத்தை, அந்தரங்க உறவுகளைக் காட்சிக்கு வைக்கிறார்கள்.  குடும்பப் பிரச்சினையைத் தீர்க்கிறோம் என்ற பெயரில் ஊடகங்கள் தனிமனித அந்தரங்க, ரகசிய உறவுகளுக்குள் நுழைவதோடு-அவற்றைப் பணமாகவும் மாற்றுகின்றன.  நம்முடைய வாழ்வை, வாழ்வின் ரகசியத்தை-நமது மனதை மட்டுமல்ல உடலையும் திறந்தே வைத்திருக்கிறோம்.  நம்முடைய ரகசியங்களை, நம்முடைய அந்தரங்கத்தை, நம்முடைய காம விளையாட்டுக்களை நம்முடைய வாயாலேயே சொல்ல வைக்கிறார்கள். நடித்துக் காட்ட வைக்கிறார்கள்.  கேமராவுக்கு முன் நாம் நிர்வாணமானவர்களே.  கேமரா -  புனிதங்கள், சமூக ஒழுக்கம் என்று நம்பப்பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டது.  மாதத்திற்கு ஒருமுறை பாலியல் சர்வே வெளியிடுகிறது முக்கியமான தமிழ்பத்திரிக்கை. திருமணத்திற்கு முன் உறவு கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்?  திருமணத்திற்குப் பிறகு கணவன் அல்லாதவருடன் உறவு கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்?  கன்னித்திரையைப் புதுப்பித்துக்கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லா கேள்வி களுக்கும் தமிழ் சமூகமும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. எது அதிகம் விற்பனை ஆகிறதோ அதற்குத்தான் மதிப்பு அதிகம். அந்தரங்க விஷயங்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன என்பதை அறிந்த விளம்பரதாரர் என்ற கடவுள் அந்த நிகழ்ச்சிகளுக்கே ஸ்பான்ஸர் செய்கிறார். ஒரு தொலைக்காட்சி எதைக் காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்று தீர்மானிக்கிற அதிகாரம் விளம்பரம் தருகிற கடவுளிடம்தான் இருக்கிறது. முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட அந்தக் கடவுள் உண்மையைப் பேசவிடுவாரா? சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேமரா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஒவ்வொரு மனிதனும், உணர்விலும் - உடலிலும் கூச்சமில்லாமல் அந்தரங்கத்தைப் படையலிடுகிறார்கள்.

தந்தையே மகளைக் கர்ப்பிணியாக்கிய நிஜம். ஒரே ஆணுடன் தாயும் மகளும் காதல் செய்யும் உண்மை. ஆறு மாதத்திற்குள் காதலனின் மூன்று நண்பர்களுடன் பழகி, கர்ப்பமாகி, கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்று அறிவதற்கு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்த இளம்பெண், இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்காதலனுடன் ஓடிப்போன மனைவி, முகநூல் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஆணுடன் வாழ்ந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி, மிஸ்டு கால் மூலம் உருவான காதல் கதையின் துயர சம்பவம், கல்யாணம் செய்துகொண்ட பெண்ணுக்கு கணவன் உரிமையா, காதலித்த பெண்ணுக்கு அந்த ஆள் உரிமையா? என்று பலரும் நீதிகேட்டு நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. மாறாக, தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள்.

கற்கும் வயதில் கருவைச் சுமக்கும் கன்னிகள், பருவத்தை தொலைத்த பரிதாப ஜீவன்கள், உள்ளத்தை உலுக்கும் முக்கோணக் காதல் கதைக்காரர்கள் காதலைத் தேடி, கணவனைத் தேடி, குழந்தைகளை மீட்பதற்காக காவல் நிலையம் செல்லாமல் தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒவ்வொரு நீதிபதி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் உருவாக்கி வைத்திருக்கும் நீதிபதிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தோற்கடித்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு நீதிபதி நித்யானந்தா. தனக்கு ஆண்மையே இல்லை என்று அறிவித்துக் கொண்ட அவர் கணவன்- மனைவி பிரச்சினையை, குடும்ப சிக்கல்களைத் தீர்த்து வைக்கிறார். நித்ய தர்மத்தின் வழியாக. சாமியார்கள் தன்னை ஆண்மை அற்றவன் என்றும், ‘அம்மா‘ என்றும் அறிவித்துக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கிற அதிசயம்.


நம்முடைய தொலைக்காட்சிகள் குடும்பத்தின் துயரங்களை மட்டுமே தீர்த்து வைக்கவில்லை. காதலன், காதலி, கணவன், மனைவிக்கிடையேயான அன்பையும் கூட்டுகின்றன. எப்படி? முதலில் காதலைச் சொன்னது யார்? உங்களுடைய முதலிரவை எந்த ஊரில் கொண்டாடினீர்கள்?  ஜோடியாகச் சென்று பார்த்த சினிமா எது? ஜோடியாக முதலில் சென்ற இடம் எது? காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா? முதன்முதலில் பார்த்தபோது எப்படி இருந்தது? குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் எது? உங்களுக்கு உங்களுடைய மனைவியிடம் பிடித்தது எது? அடுத்த பிறவியிலும் இவரே உங்களுடைய கணவனாக வரவேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்? உங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்? கருப்பா, சிகப்பா, மாநிறமா? எவ்வளவு சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுடைய காதலர் உங்களுக்கு வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருள் எது? இப்படியான கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்த ஆண் யார்? பெண் யார்? உங்களுடைய மனைவியோடு ஒரு நிமிசம் சேர்ந்து ஆடிக்காட்ட முடியுமா? என்று கேட்ட கேள்விக்கு மறுத்த தமிழ்மகன், தமிழ்மகள் யார்? இந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக இருப்பவர்கள் சமூகப் போராளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்‘ என்று கேட்டு கேமரா நம்முடைய வீட்டுக்கு வந்தபோது முகத்தை மூடிக்கொண்டவர்கள் குழந்தைகளா, பெண்களா, ஆண்களா என்று கேட்டால் பதில் எவரும் இல்லை என்பதுதான். தொலைக்காட்சியில் குழந்தைகளை நடிக்க வைக்க எப்படிப்பட்ட அலங்காரங்கள் செய்து அனுப்புகிறோம்? தொலைக்காட்சியில் பேசும்போது மட்டும் ஏன் எல்லாரும் அழுகிறார்கள்? சிரிக்கிறார்கள்?

திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களைப் போட்டோக்காரனும், வீடியோக்காரனும் படம் எடுக்கிற விதம் எப்படி இருக்கிறது? ‘இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க. ‘தோள் மேல கைய வையிங்க.‘தோள்மேல சாஞ்சமாரி நில்லுங்க'. ‘துணிய மாத்திக்கிட்டு வாங்க.' ‘நல்லா சிரிங்க.' ‘இப்படி நின்னுக்கிட்டு போஸ் கொடுங்க.‘ என்று சொல்கிற போட்டோக்காரனின் ஆணைக்கு, வீடியோக்காரனின் கட்டளைக்கு ‘முடியாதுÕ என்று சொன்ன மணமக்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா? பந்தியில் ஒவ்வொருவரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை வீடியோ எடுத்துப் பாதுகாப்பவர்கள் தமிழர்களாகவே இருப்பார்கள். அதே மாதிரி கல்யாணச் செலவில் பாதித் தொகையை போட்டோவுக்கும் வீடியோவுக்குமே செலவிடுகிறவர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள். திருமண நிகழ்வில் எடுக்கப்படும் போட்டோவும், வீடியோவும், இலவசமாக வெப்சைட்டில் வெளியிடுகிறார்கள், ஸ்டுடியோக்காரர்கள். நம்முடைய குடும்பப் பெண்களின் படங்கள்-நம்முடைய வீட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது  இந்திய அழகிகள்-என்ற தலைப்பின்கீழ் தமிழ் குடும்பப் பெண்கள் என்ற தலைப்பின் கீழ் எந்த நிமிடமும் வலைத் தளங்களில் ஏற்றப்படலாம்.  தெருவில், சாலையில், கடைவீதியில் நடந்து போகிற பெண்களின் பின்புறம் கூகுளில் ஏற்றப்படுகின்றன. பொதுவெளியில் நடக்கிற பெண்களின் படம்-காட்சியாக்கப் படுகிறது.  விற்பனைப் பொருளாக, காம விளையாட்டுக்கான பண்டமாக மாற்றப்படுகிறது.  செல்போன் வழியாக மட்டுமல்ல, கேமராக்களின் வழியாகவும் இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம். நம் உடல் காட்சிகளாக மாற்றப்பட்டு வணிகப் பொருளாக மாறுகிறது. எந்த நிமிடமும், எந்த நேரமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில், அந்தரங்கங்களில் கேமராக்கள்-ஊடகங்கள் நுழையலாம். அதை ஒருபோதும் நாம் எதிர்க்கப்போவதில்லை.  மேளம் கொட்டி வரவேற்கவே செய்வோம்.  எவ்வளவு பெரிய ஆபத்து என்று தெரியாமல் நம்முடைய முகத்தை கேமராவுக்குள் பதிய வைக்க முயற்சிக் கிறோம்.

முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை. அக்கப்போர்களை எழுதலாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது, குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது, குடும்பச் சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற்படங்கள், வாழ்த்துக்கள் எல்லாம் பார்க்கக்கிடைக் கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப் பருவத்து செயல்கள் என்று இவற்றைச் சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும் கட்டுக் கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பைத் தருகின்றன. வலைத்தளங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை?
அரசியல்வாதிகளை மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதவிதமாக போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக் கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப்சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களைப் பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் தோற்றுப்போவார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. சினிமா நடிகர்-நடிகைகளைவிட விதம்விதமாக நடித்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நடித்த நிழற்படங்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு அரசியல் தலைவருடைய படம் இருக்கும். சாமி படங்கள் இருக்கும். இன்று அந்நிலை இல்லை. கல்யாண போட்டோக்கள், குழந்தைகளின் போட்டோக்கள் இருக்கின்றன. ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்று குறைப்பட்டுக் கொள்வது மாதிரி ‘ஏன் முகநூலில் இல்லை?Õ என்று கேட்டு வருத்தப்படுகிறார்கள். முகநூலில் இல்லாதவர்கள் மனிதப் பிறவியே இல்லை என்பது மாதிரி பார்க்கிறார்கள். முகநூலில்தான் மனிதர்கள் அதிகபட்ச நேரத்தை செலவிடுகிறார்கள். முகநூலில் கணக்கு இல்லாதவர் இன்று பிணம்தான். முகநூலில் ஆயிரக்கணக்கில் நண்பர்கள் இல்லாதவர்கள் ‘தத்திகள். ஆறாவது படிக்கிற பையனுக்கு ஆயிரத்து முந்நூறு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒளிவுமறைவு, ரகசியம், அந்தரங்கம் அனைத்தும் பகிரப் படுகின்றன. தயக்கமின்றி, வெட்கமின்றி.வயது வித்தியாசமின்றி. நட்புபாராட்ட, தகவல் பரப்ப உதவும் சமூக வலைத்தளங்களின் வழியாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமா? எவற்றைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது? என்ற எல்லைக்கோடு நீக்கப்பட்டு விட்டது. ஹைடெக் தொழில்நுட்பம் - ஹைடெக் ஆபத்து. ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய தகவல்களை, கதைகளை ஓயாமல் சொல்லத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். வசதியற்றவர் கள் தொலைக்காட்சிக்கு ஓடுகிறார்கள். வசதியானவர்கள் பிளாக், முகநூல், ட்விட்டருக்கு ஓடுகிறார்கள். என் பிளாக்கை இத்தனை ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றும், முகநூலில் இத்தனை ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் பெருமை கொள்கிறார் கள். ஷகிலா நடித்த குளியல் காட்சிகளை ஒரு காலத்தில் ஊருக்குத் தெரியாமல், தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக சென்று பார்த்தோம். இன்று கூடத்தில் உட்கார்ந்து கொண்டு ஷகிலா நடித்த தமிழ்ப் படங்களையும், நகைச்சுவைக் காட்சி களையும் பார்த்து சிரிக்கிறோம், ரசிக்கிறோம். அப்படி பார்க்கும்போது இதே ஷகிலா நடித்த படங்களை ரகசியமாக சென்று பார்த்திருக் கிறோமே என்ற எண்ணம் வந்து, கூச்சத்தில் நெளிந்திருக் கிறோமா?  

சட்டசபையில் ஆபாசப் படம் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் நம்முடைய மந்திரிகள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது செல் போனில் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் நம்முடைய குழந்தைகள். ஆபாசப் பட போஸ்டர் ஒட்டாத தமிழ்நாடு பஸ் ஸ்டாண்டு இல்லை. நம்முடைய வருங்காலம், தமிழகத்தின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படுகிற நடிகர்கள் எல்லாம் ஆபாசப் பட நடிகைகளுடன், ஷகிலாவுடன் மகிழ்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நம்முடைய எதிர்காலத் துக்கு, தமிழகத்தின் வருங்காலத்துக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறோம்.
 


இன்று குடும்ப வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி ரகசியம், அந்தரங்கம் இல்லை என்றாகிவிட்டது. இன்று உடை என்பது உடலை மறைப்பதற்கானது அல்ல. கேமராவும், வீடியோவும், இணையமும் மனிதர்களை நிர்வாணமாக்கிவிட்டது. “ஒரு நிமிசம் இருங்க. இங்க பாருங்க' என்று முதலமைச்சர், கவர்னர் என்பதோடு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள எவரையும் ஒரு புகைப்படக்காரரால் நிறுத்திவைக்க முடியும். அதற்கான அதிகாரத்தை கேமரா அவருக்கு வழங்கி இருக்கிறது. சமூகத்தின் மொத்த செயல்பாடுகளையும் தன்கட்டுப்பாட்டுக்குள் கேமரா கொண்டு வந்துவிட்டது. “ஒரு நிமிசம் இங்க பாருங்க. கொஞ்சம் சிரிங்க' என்ற புகைப்படக்காரரின் கட்டளையை எப்படிப்பட்டவராலும் மீற முடியவில்லை. அப்போது யாருக்கும் எந்த அந்தஸ்தும் இருப்பதில்லை. போட்டோ சரியாக வரவில்லை, வீடியோ சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது முறையும் தாலி கட்டப்படுகிறது. நம்முடைய திருமணங்கள் போட்டோ திருமணங்கள், வீடியோ திருமணங்கள். கேமராவைப் பார்த்தாலே நம்மை அறியாமலேயே நாம் நடிக்க ஆரம்பித்துவிடுகிறோம். முன்பெல்லாம் பெண் பிள்ளைகளை “தெருவில் நின்றுகொண்டு பேசாதே. தெருவில் நின்றுகொண்டு எதற்காகப் பேசுகிறாய்?' என்று கேட்போம். இன்று அப்படிக் கேட்க முடியாது. யார் யாரிடம் பேசுகிறார், தெரியாது. குடும்பத்தில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை செல்போன்கள். ஒரு மாதத்தில் உணவிற்காகச் செலவிடப்படும் தொகையைவிட செல்போனுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. எல்லாருடைய கையிலும் கேமரா உள்ள செல்போன்தான் இருக்கிறது. எல்லையைக் கடந்து செல்வதே நம் காலத்தின் செயல்பாடு. இருபத்திநான்கு மணிநேரமும் தொலைக்காட்சிகள் தருகிற செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் தமிழ் சமூகத்தை சுரணையுள்ள சமூகமாக, அறிவார்ந்த சமூகமாக மாற்றக்கூடியவை தானா? வன்முறையையும் ஆபாசத்தையும் இருபத்திநான்கு மணிநேரமும் தொலைக்காட்சிகள் நம்முடைய மூளைக்குள் கொட்டிக்கொண்டேயிருக்கின்றன என்பதோடு, நமக்குநாமே வன்முறையையும் ஆபாசத்தையும் உருவாக்கி நம்மைநாமே இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இது வளர்ச்சி அல்ல. சமுக மேம்பாடு அல்ல. ஆடையற்ற, அந்தரங்கமற்ற மனிதர்களாக இருப்பது ஏற்றதல்ல. ஆடையின்றி இருப்பதுகூட அவமான மில்லை. கூச்சமும், வெட்கமும், அந்தரங்கமும் இல்லாமல் இருப்பதுதான் உண்மையான நிர்வாணம்.


Thanks: Uyirmai

Wednesday, May 14, 2014

சிறுகதை : அமெரிக்கக்காரி






ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.


பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ முக ஒப்பனைகளோ அவள் செய்துகொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப் போலப் பேசுகிறாள் என்று சொல்ல முடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்குப் புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள் sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அவையெல்லாம் ஆரம்பத்திலேதான். ஆனால் வெகு விரைவிலேயே அவள் தன்னைத் திருத்திக்கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.


கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோலப் பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும் கறுத்துச் சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள் அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். ‘யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?’ அவள் எப்படிப் பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக் கூடத்துக்குப் போனாள், வந்தாள். அதைத் திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்குப் பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.


அன்று நடந்த கூடைப்பந்துப் போட்டியைப் பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை. கூடைக்குள் பந்தைப் போட வேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும் நீளமான சிவப்புக் காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து ஆரவாரித்தார்கள்; சிலவேளைகளில் பந்தைக் கூடையில் போடாதபோதும் கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளைத் திகைப்படையவைத்தது. அவளைப் போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.


இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்குத் தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒரு நாள் அவள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையைச் சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. ‘பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வர வேண்டும்’ என்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது ‘நீ உங்கள் நாட்டு இளவரசியா?’ என்றான். ‘இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டைத் தேட வேண்டும்’ என்றாள். ‘நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் தன் அறையில் தங்க முடியுமா என்று கேட்டான். அதற்குப் பிறகு அவனும் மறைந்துபோனான்.


இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரும் முன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் வீதியிலும் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளைத் தன் வகுப்புத் தோழிகளுக்குச் சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறித் தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.


சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், ‘நான் அமெரிக்கக்காரியா?’ தாய் சொல்வார், ‘இல்லை, நீ இலங்கைக்காரி.’ ‘அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?’ ‘அது முடியாது.’ ‘நான் அமெரிக்காவுக்குப் போனால் ஆக முடியுமா?’ ‘இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.’ ‘நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?’ ‘நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.’ அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்குப் பெரிய ஏமாற்றமாகப்போய்விடும்.
மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளைப் பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர் போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.
அவன் காரில் இருந்து இறங்குவது விசித்திரமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தரையில் ஊன்றி எழுந்து நடந்து வருவான். நேற்று வகுப்பில் என்ன பாடம் நடந்தது, இன்று என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்ற கவலையே அவனிடம் கிடையாது. பல்கலைக் கழகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பது அவன் எண்ணம். அவள் பின்னாலேயே அவன் திரிந்தான். ஒரு நாள் அவளைக் கண்ணை மூடச் சொன்னான். அவன் ஏதாவது பரிசுப் பொருள் தரும்போது அப்படித்தான் செய்வான். அவள் மூடினாள். வாயைத் திற என்றான். ஏதோ சொக்லட்டோ இனிப்போ தரப் போகிறான் என்று நினைத்து வாயைத் திறந்தாள். அவளுடைய அம்மா மருந்து தரும்போதும் அப்படித் தான் திறப்பாள். அவன் குனிந்து அப்படியே திறந்த வாயில் முத்தம் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. ‘இது என்ன பெரிய விசயம். நான் உன் கையிலே முத்தம் கொடுத்திருக்கிறேன். உன் நெற்றியிலே முத்தம் தந்திருக்கிறேன். நெற்றியில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உன் வாய் இருக்கிறது. இது இரண்டு அங்குலத் தவறுதான்’ என்றான்.


நன்றிகூறல் நாள் விருந்துக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்குப் போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.
அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கைச் செய்தித் துணுக்குகளை அவளுக்காக வெட்டிவைத்து அவளிடம் தந்தது அவள் மனத்தைத் தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரைப் பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடிக் கடிதம் எழுதும் விலாசத்தைத் தான் மாற்ற வேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாகப் போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.


இரவானதும் சோபாவை இழுத்துக் கட்டிலாக்கி அதில் அவளைப் படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச் சாமம்போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்குப் பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனைத் துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.


அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சாரக் கலைநிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். ‘பாரம்பரிய நடனம்’ என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையைக் கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனைசெய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவுசெய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாகப் பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.
அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையைக் கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன் 16 கம்பிகள் கொண்ட அந்தப் பெண்கள் வாத்தியத்தைத் தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாகத் தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் தன்னுடைய பெயர் லான்ஹங் என்றான்.


அடுத்த நாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். ‘உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?’ என்றான். அவள் ‘மதி’ என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்’ என்றாள். ‘அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?’ அவள் ‘புத்தி’, ‘சந்திரன்’ என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். ‘வியட்நாமியருக்குச் சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கியப் பங்கு உண்டு’ என்றவன் தொடர்ந்து ‘நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது’ என்றான். ‘அப்படியா? நன்றி’ என்றாள். ‘தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?’ இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காகக் கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.


‘கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாயே’ என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு ‘அந்தத் தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டிவைத்தால் அந்தத் தாயைச் சிசுவதைச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்’ என்று சொல்லிவிட்டுப் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோலப் பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியவில்லை.


இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்குப் பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்க வேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ உட்காரும்போதோ பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப்படுத்த அவள் வேறு எவ்வித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.


ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்குக் கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருதடவை வெளிக்கிட்டுப் பட்டணத்துக்குப் போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களைச் சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டிச் சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அது பற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். ‘அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்குப் பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்றுக் குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாதக் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னைத் திரும்பவும் பார்க்க வேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’


லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘என்னை ஆச்சரியப்படுத்து.’ இரவு நேரத்தில் இருவரும் உணவருந்தச் சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான். சினிமாவுக்கு போவார்கள். ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்பாள் இவள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான்.


ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல
கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகுநேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதைப் பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையைத் தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்துக் கையில் வைத்துத் தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.


மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக் கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனத்தில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சிச் சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரைக் கண்டதும் ஒரு பழங்காலத்துப் போர்வீரன்போலத் துள்ளிப்பாய்ந்து அவள் முன் வந்து குதித்தான். ‘இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?’ என்றாள் மதி. உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித் தன்மையான ஆடையில் வசீகரமாகக் காட்சியளித்தாள் அவள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்து விட்டு ‘இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது’ என்றான். ‘அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து’ என்றாள்.


‘இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?’


‘எனக்குத் தெரியாது, நீ சொல்’ என்றாள் அவள். ‘ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்குப் பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்குத் தெரியுமா?’
‘இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.’


‘பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.’


‘இதை ஏன் எனக்குச் சொல்கிறாய்?’


‘நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.’

அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.


‘பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.’

அவள் முனைவர் படிப்பைத் தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்குப் பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியைச் சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். ‘வியட்நாமியச் சடங்கு இல்லையா?’ என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்துக் கடித்துக் சாப்பிட்டான். மீதியை அவள் கடித்துக் சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.


மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்கப் பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும் நோட்டுப் புத்தகங்களும் குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்க முடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணிநேரமாக வீட்டைத் துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.


முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்க வேண்டியிருந்தது. சில நாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். ‘அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.’
ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக் கட்டுரையைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களைத் தள்ளிப் படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். ‘இந்த உலகத்தில் ஆகச் சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. நமக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்க வேண்டும். நாம் ஒரு மருத்துவரை பார்க்கலாம்’ என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.


மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ‘என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து’ என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தைப் பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளே போனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டு போனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்க வேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.


அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்னும் வெறி உண்டானது. மதியின் தாயாருடைய கடிதங்கள் ‘நீ கர்ப்பமாகிவிட்டாயா?’ என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில் படுத்திருந்த அவளிடம், ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாள முடியாமல் இருந்தது. ‘இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்துச் சங்கிலியில் பேனாவைக் கட்டி வைப்பதுபோல நான் உன்னைக் கட்டிவைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்துப் பிள்ளை பெற்றுக்கொள்’ என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் தலையை மேலும் அழுத்திபடுத்துக்கொண்டாள்.


அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் - மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆய்வுக் கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய்விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார் சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து மாணவர்களும் மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.


அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காகச் சேமித்துவைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து மிக்ஷிதி கருத்தரிக்கும் முறையைப் பரிசோதிப்பது எனத் தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களைத் தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறையச் சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளைத் தயார்செய் தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவளுக்குள் செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவமனையில் போய்ச் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். ‘நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.’


அவளுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவப் பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளைச் சொன்னாள். ஒரு நாள் கேட்டாள், ‘இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்கக் கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாகப் பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துத் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். ‘எனக்கு ஒரு அமெரிக்கப் பிள்ளை பிறந்திருக்கு.’ ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்கத் தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்கக் கிராமத்தில் அலைவாள்.


இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சைப் பிடித்துப் பட்டணத்துக்குப் போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.


இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. ‘மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?’
‘பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.’
‘அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?’ குழந்தையைத் தூக்கி டெலிபோனுக்குக் கிட்டப் பிடித்தாள். ‘மகளே, குழந்தைக்கு என்ன பேர் வைத்தாய்?’ அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பைச் சத்தம்தான் கேட்டது.


‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளைப் பார்க்க வேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’


இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன.
அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப் போலக் கொண்டையைச் சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டைப் பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டுப் பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.

‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லித் தப்பியோட முயலமாட்டாள்.
பல்கலைக்கழகக் கலாச்சார ஒன்றுகூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டிவந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக் கொள்வாள்.


-அ. முத்துலிங்கம்


Thanks : Kalachuvadu   


Saturday, April 26, 2014

தோப்பில் முகம்மது மீரான் :







தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக முஸ்லீம் மதத்திற்கு மாறியது. ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும், இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் பத்திரிகைகளிலும் மற்ற மேடைகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்போது எத்தனையோ வருடங்கள், கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் கடந்து விட்டது. அவர்களுக்கு வாக்குறுதி தரப்பட்ட சமத்துவமும், சமநீதியும் அந்த ஏழை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்கு கிடைத்துள்ளதா, மற்ற முஸ்லீம்களுடன் அவர்கள் சமமாக கருதப்படுகிறார்களா, வாழ்கிறார்களா என்பது தெரியாது. விசாரித்து அறியப்பட வேண்டிய விஷயம் இது.


இதை ஒட்டி நடந்த இன்னொரு சம்பவம், ஒரு விதத்தில் இதுவும் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் சம்பவம், ஒரு இலக்கிய நிகழ்ச்சி. ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் தலைப்பில் வந்த தோப்பில் முகம்மது மீரானின் நாவல். அந்த கடலோரத்து கிராமத்தின் பெயர் தேங்காய்ப் பட்டினம். மீனாட்சிபுரத்திலிருந்து அப்படி ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களே பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்த நாவல் வெளிவந்தது 1988-ம் வருடம். அதன் பிறகு தேங்காய்ப்பட்டினம் என்ற தான் பிறந்த சொந்த கிராமத்தை இன்றைய தமிழ் இலக்கியத்தில் தேங்காய்ப்பட்டினம் மிகவும் அறியப்பட்ட, புகழ்பெற்ற கிராமமாக ஆக்கிவிட்டார் தோப்பில் முகம்மது மீரான். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினைப் போல, கா·ப்காவின் ப்ராக் போல, ஏன் இன்னும் அருகே ஆர்.கே நாராயணின் மால்குடி போல, தேங்காய்ப் பட்டினம் தமிழ் இலக்கியத்தில் தானும் இடம் பெற்றுவிட்டது இந்த கிராமம். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு அந்த கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள் பலரை, அந்த கிராமத்தின் சந்து பொந்துகள், மசூதி, இன்னும் பல் முக்கிய இடங்கள் எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் தெரியும்.



இந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் தாங்கள் அசலான அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக்கும் என்பதில் பெருமை கொள்பவர்கள். "ஏன் பெருமைப்படமட்டோம்?. நாங்கள் என்ன மற்றவர்கள் போல ஹிந்துவாக இருந்த மதம் மாறியவர்களா என்ன? எங்கள் முன்னோர்கள் சௌதி அரேபியாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவர்கள் அல்லவா? அது இன்று நேற்று நடந்த விஷயமா என்ன? அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் சரித்திரமும் உண்டு, அது 9- நூற்றாண்டிலிருந்து தொடங்கும் சரித்திரமாக்கும்" இன்றும் அந்த பிரக்ஞையுடன் தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு மாதிரியான மலையாளமும் தமிழும் கலந்த, நிறைய அரபுச் சொற்கள் தூவிய மொழி பேசுகிறார்கள். இது தான் மீரானின் நாவல்கள் பேசும் மொழியுமாகும். மீரானின் முதல் நாவல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் வாழ்ந்த தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. இந்த வாழ்க்கையும் மனிதர்களும், மீரான் தன் பெற்றோர்கள், குடும்பத்து முதியோர்களிடமிருந்து கேட்டறிந்தது. அந்த வாழ்க்கை, வெளிஉலகை ஒதுக்கிய, தமக்குள் சுருண்டு கொண்ட வாழ்க்கை. தங்கள் கிராமத்து, அல்லது அந்த பக்கத்து முஸ்லீம் மத குருமார்கள் சொல்படி தான் அனேகமாக வாழ்க்கை முழுதையும் அமைத்துக் கொண்டவர்கள். அரபு மொழி தவிர வேறு மொழி கற்பதோ, மதரஸாவை விட்டு வேறு எந்த கல்வியையும் கற்பதோ, பத்திரிகைகள் படிப்பதோ, வகுப்பின் கரும்பலகையில் அரபு மொழியும் குரானும் தவிர வேறு மலையாளம் அல்லது தமிழ் மொழிகளில் எழுதுவதோ கற்பதோ, தலையை மொட்டை அடித்துக் கொள்ளாதிருப்பதோ, இப்படி யான கூடும் கூடாதுகளின் பட்டியல் மிக நீண்டு செல்லும் - இந்த எல்லா 'கூடாது' களும் ஹராம் தான். அதாவது முஸ்லீம் மதத்தில் பகிஷ்கரிக்கப்பட்டவை. அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் அடி மனதிலேயே இந்த 'கூடாது' கள் எல்லாம் கல்லில் செதுக்கப்பட்டது போல பொறிக்கப்பட்டுள்ளவை. ஜின்னா என்று ஒருவர் பெயரை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு 'கா·பிர்' தான். ஏனெனில் அவர் அணிவது மேல்நாட்டு உடைகளை அல்லவா? பேசுவது ஆங்கிலம் அல்லவா? தலையில் கிராப் அல்லவா வைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் மசூதிக்கு தொழுகைக்கும் போவதில்லை, Quran படிப்பதில்லை என்பதை அவர்கள் அறிவார்களா இல்லையா என்பதை மீரான் சொல்லவில்லை.


மீரானின் துறைமுகம் என்னும் இரண்டாவது நாவல் 1940களில் அம்மக்களது வாழ்க்கையைச் சொல்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு. இதில் ஏழை மீனவமக்கள் தூத்துக்குடி நகரத்திலிருக்கும் இடைத் தரகர்களின் பிடியில் வதைபடும் வாழ்க்கையச் சுற்றி எழுதியிருக்கிறார் மீரான். தூத்துக்குடி இடைத்தரகர்களுக்கும் மேலே இலங்கையிலிருக்கும் மொத்த வியாபாரிகள் எஜமானர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் முஸ்லீம்கள் தான். அந்த மொத்த வியாபாரிகள் இதே கிராமத்திலிருந்து சென்றவர்கள் தான். வியாபாரம் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் வாய் வார்த்தைகளில்தான் நடைபெறுகிறது. . இலங்கையில் இருக்கும் பண முதலைகள் கிராமத்து மக்களின் மதிப்பையும் மரியாதையையும் மிகப் பெற்றவர்கள். காரணம் அந்த கிராமத்து மசூதிக்கு அவர்கள் நிறைய பணம் உதவி செய்கிறர்கள். அவர்கள் ஹஜ் யாத்திரை முடித்து கிராமத்துக்கு திரும்பும் போது பெரிய ஆரவாரத்தோடு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிராமத்து இளம் வாலிபர்கள் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அவரது ஆதர்சத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் முஸ்லீம் மதத்திற்கு எதிரானதென கண்டனம் செய்யப்பட்டு, அதன் ஆசிரியர் கிராமத்திலிருந்தே விரட்டப்பட்டுவிடுகிறார். ஒரு நாயர் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்லும் மாணவனின் குடும்பம் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறது. அந்தப் பையனின் பெற்றோரோ, கா·பிராகிவிட்ட தங்கள் பையன் காரணமாக தமக்கு நேர்ந்த சாபம் தான் இந்த ஜாதி பிரஷ்டம் என்று கருதுகிறது.
அந்த கிரமத்து ஹாஜி (முஸ்லீம் மத குரு) இப்போது ஜின்னாவை ஒரளவுக்கு ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார். முழுமையாக அல்ல முஸ்லீமகளின் தரப்பை வாதிட ஒருவர் வேண்டுமே. காந்திதான் ஹிந்துக்களின் தலைவராகிவிட்டார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் ஒருவரை நிறுத்த வேண்டாமா? மத குருக்களும், பெருந்தனக்காரர்களும் ஒன்றும் அறியாத கபடமற்ற எளிய மக்களை தம் இஷ்டத்திற்கு பணிய வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அந்த எளிய மக்கள் மதத்தின் பேரால் சொல்லப்படும் எந்த கட்டளைக்கும் சுணங்காது, கேள்வி எழுப்பாது அடி பணியப் பழக்கப் படுத்தப் பட்டவர்கள். கிராமத்து மசூதியின் காப்பாளரான அஹ்மது கன்னு பெரும் பணக்காரர். அந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ள, தன்னை கடவுளின் தூதனாக கற்பிதம் செய்துகொள்ளும், ஒரு போலி மதகுருவை தன் வீட்டில் தங்க வைத்து உபசரணைகள் செய்கிறார். அவர் அந்த கிராமத்துக்குத் தப்பி ஓடி வந்துள்ள ஒரு பிசாசை பிடித்து ஒடு போத்தலுக்குள் அடைக்கவேண்டும் என்ற திட்டத்தோடு வந்துள்ளதாக செய்தி பரவவிட்டுள்ளார். கிராமத்து மக்களின் எந்த நோய் நொடியையும், துக்கத்தையும் போக்கிவிடுவார். அவர் தங்கியிருக்கும் இடம் சென்று கையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரோடு சென்று வரிசையாக அவர் வருகைக்காக காத்திருப்பார்கள் ஜனங்கள். அவர் அந்தக் கிண்ணத்தில் துப்புவதே அவர் அவர்களை ஆசீர்வத்தித்ததாகும். அவர் துப்பிய நீரை அருந்தினால் அவர்கள் குறைகள் தீரும். அவர் அந்த கிராமத்தில் தங்கி இருக்கும் வரை கிராமத்து மக்கள் தம் குடும்பத்து இளம் பெண் ஒருத்தியை அவருடைய சுகத்திற்கு அனுப்பி வைத்தாலே தாங்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அஹ்மது கன்னுவின் வீட்டுப் பெண் ஒருத்தியையே அனுப்பி வைக்கச் சொன்ன போது தான் அஹ்மது கன்னுவுக்கு கண்திறக்கிறது, இந்த ஆள் செய்து வந்துள்ளது ஒரு பெரும்
மோசடி என்று.




கூனன் தோப்பு என்னும் நாவல் இரண்டு கிராமங்களிடையே நடந்த மதக்கலவரத்தைப் பற்றியது. ஒரு நதியின் எதிரும் புதிருமான கரைகளில் இரண்டு கிராமங்கள். இரண்டு கிராமங்களிலும் இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இரண்டு கிராமங்களிலும் அவரவருக்கு உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் சரி, எங்கும் காணப்படும், திருடர்கள், சண்டியர்கள், தம்மை ரோமியோக்களாக நினைத்துக் கொண்டு திரியும் வாலிபர்கள், நதியில் குளிக்கும் பெண்களைப் பார்த்துக் கண்ணடிக்கவே தாமும் குளிக்க வரும் காதலர்கள் கிட்டத்தட்ட ஒரே விகிதாசாரத்தில் இரண்டு கிராமங்களிலும் உண்டு. அத்தோடு கோழி திருடுபவர்களும் உண்டு. எல்லா கிராமங்களிலும் நடக்கும் இந்த கோழித்திருட்டுதான் இந்த இரண்டு கிராமங்களிடையே மதக்கலவரம் வெடிக்கவும் காரணமாகிறது. கோழி திருடியவன் ஒரு கிராமத்து முஸ்லீம். கோழி இன்னொரு கிராமத்து கிறிஸ்தவப் பெண் ஒருத்திக்குச் சொந்தமானது. அந்த கிறிஸ்தவப் பெண்ணுக்கு காதலன் ஒரு சண்டியர். அவன் தன் வீரத்தைக் காதலிக்குக் காட்டும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? திருடிய எதிர் கிராமத்து முஸ்லீமை நன்றாக விளாசிவிட்டு வருகிறான். இது சாதாரண ஒரு கோழித்திருட்டை மிகச் சிக்கலான மதமோதலாக்கி விடுகிறது. பின் என்ன! இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியுமா? முஸ்லீம் சமூக கௌரவம் என்ன ஆவது? ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்க சிக்கல் அதிகமாகிறது. காயம் பட்ட மத கௌரவம், தனி மனித குரோதம், பழி வாங்கல், நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா என்ற ஆவேச கொந்தளிப்புகள் எல்லாம் பூதாகாரமான மதக்கலவரமாகிறது. ஒரு ஹாஜி அவமானப்படுத்தப்பட்டால் சும்மா இருக்கமுடியுமா என்ன? அது மதத்திற்கே, கிராமத்திற்கே, அந்த சமூகத்திற்கே கேவலம் இல்லையா? இரண்டு கிராமங்களிலும் முடிவுறாது நீண்டு செல்லும் பகைமை, ரத்தம் சிந்த, வீடுகள் நாசமாக, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதில் முனைப்பு கொள்கின்றனர்.


மீரானது நான்காவதும், இப்போதைக்கு கடைசியுமான நாவல் சாய்வு நாற்காலி ஒரு முஸ்லீம் குடும்பத்து இரண்டு நூற்றாண்டுக்கு நீளும் சரித்திரத்தை முன் வைக்கிறது. பாவுரீன் பிள்ளை என்னும் ஒரு முஸ்லீம் சிப்பாயின் வீர தீரச் செயல்களோடு தொடங்குகிறது. திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் உயிரையும் அவரது ராஜ்யத்தையும் டச்சுக்காரகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீரச் செயலுக்கு மகாராஜ மகிழ்ச்சியடைந்து ஒரு கிராமம், ஒரு வாள் பின் அரண்மனை போன்ற ஒரு பெரிய வீடு, இத்தனையும் பரிசாக அளிக்கிறார். அந்த சிப்பாயின் சந்ததியார்களின் கதையைச் சொல்லி வரும் நாவல் கடைசியில் முஸ்தபா கன்னுவைச் சுற்றிய் நிகழ்வுகளை அதிகம் விஸ்தரிக்கிறது. முஸ்தபா கன்னு, அதிகம் முதல் நாவலின் அஹ்மது கன்னுவைப் போன்ற மனிதன். எல்லா விஷயங்களிலும். பண்டைக்கால பெருமை, கடந்து விட்ட பழங்காலத்திலேயே இன்னும் வாழ்வதான நினைப்புகள். குருட்டு நம்பிக்கைகள், இறுகி கெட்டித்துப் போன மதப் பிடிப்பு, தன் சுற்றியுள்ள சீரழியும் பண்டைச் சின்னங்களில் கர்வம் - எல்லாம். இந்த மாதிரியான பண்டைப் பெருமைகளில் வாழும், நிகழ்காலத்தைப் பற்றிய நினைப்பே இல்லாத மனிதர்களை, அந்த அவலத்தை சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர், ஆடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சாதுக்கள். அப்பாவிகள். முஸ்தபா கண்ணு கொடுமை மிக்க முரடன். தன்னைச் சுற்றியிருக்கும் உறவினர்களையும் மற்றோரையும் அவன் படுத்தும் பாடு கொடூரம் நிறைந்தது. அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, சமூகம், காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்து போனது. நாறி அழுகி வருவது. தன்னுள் சுருங்கி, மூட மதப் பழக்கங்களில் இறுகிப் போனது. தன் குடும்பம், கிராமம், மத சமுதாயம் இதற்கு வெளியே உள்ள உலகைக் காண மறுப்பது.


மீரானின் எல்லா எழுத்துக்களிலும் பதிவாகியிருப்பது இருண்டு போன முஸ்லீம் மத அதிகாரத்தின் காலடியில் வதைபடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. பதிவாகியுள்ள காலம் மூன்று அல்லது அதற்கு மேற்கொண்ட தலைமுறைகள் வாழ்ந்த காலம். பழமையாகிப்போன மத அதிகாரம் மாறாதிருப்பதில் சுய நலம் காண்பது. அதே சமயம் மீரானின் நாவல்கள் அவர் அறிந்த மனிதர்களின் நினைவில் பதிந்து விட்ட முஸ்லீம் சமுதாயத்தின் வரலாற்றையும் கதையாக நமக்குச் சொல்கின்றன. தான் எந்த கட்டத்திலும் சம்பவங்களையோ மனிதர்களையோ கற்பனையாகச் சித்தரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை என்கிறார். தான் அறிந்த, கேட்ட வரலாற்றையும், சம்பவங்களையும் மனிதர்களையும் தான் தன் நாவல்களில் உலவவிட்டுள்ளதாகச் சொல்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க சுய விமர்சனமாகும். அவர் எதையும் மறைக்கவில்லை. பூசி மெழுகவில்லை. ஒரு சுயவிமர்சனமாக அவர் எழுத்து கூர்மையானது. மன்னிப்புகளும் சமாதானங்களும் இல்லாதது. ஒன்றைச் சொல்ல வேண்டும். இத்தகைய, பக்ஷபாதமற்ற சுயமதிப்பீடு, சுய விமர்சனம், இன்றைய தமிழ் எழுத்தில் காணப்படாத்து. இன்றைய தமிழ் ஹிந்து சமூகத்தில் காணும் ஆயிரம் ஆயிரம் சாதிப் பிரிவினைகளும், அது விளைவிக்கும் சாதிப் பூசல்களும், சுய சாதிப் பெருமைகளும், சாதி வெறியும், தன் சாதி அடையாளங்களைப் பாதுகாக்கும் உற்சாகமும், அதே சமயம் மற்ற சாதியினருடன் எந்த சமத்துவத்தையும் விரும்பாத சகிப்பின்மையும், சுய விமர்சனத்திற்கும் சுய மதிப்பீடுகளுக்கும் ஒரு வளம் நிறைந்த களமாகும். ஆனால், சமூக நீதி பேசும் தலைமைகள், சாதி ஒழிப்பு பற்றி பேசும் தலைமைகள் சுய விமர்சனத்தைப்பற்றியே சிந்திக்காதவை.



இன்றைய தமிழ் நாட்டின் ஹிந்து சமுதாயத்தின் சாதிகள் தம்மிடையேயிருந்து ஒரு மீரான் போன்ற எழுத்தாளர், தம் சமூக, சாதி சித்திரத்தை பக்ஷபாதமின்றி பதிவு செய்யும் ஒரு எழுத்தாளர் எழுவதை சற்றேனும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு சமூக விமர்சனம் பிராமணர்களைச் சாடுவதற்கு எல்லோருக்கும் நிறைந்த சுதந்திரமும் வரவேற்பும் உண்டு. ஆனால் யாரும் மற்ற சாதியனரைப் பற்றி ஏதும் சொல்லிவிட முடியாது. சொல்லித் தப்பிவிடவும் முடியாது. சாதி ஒழிப்பும், அந்த கோஷத்தில் சாதி விமர்சனமும் ஒரே ஒரு சாதிக்கு எதிராகத் தான், பிராமணர்களுக்கு எதிராகத்தான் எழுத அனுமதி உண்டு. தப்பித் தவறி ஒரு சின்ன குறிப்பு வெளிவந்துவிட்டால், அந்த எழுத்தாளன் அத்தோடு தொலைந்தான். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் சுஜாதா எழுதி வந்த சரித்திரத் தொடர்கதையில் தேவரோ நாயக்கரோ ஒரு பாத்திரத்தின் குணசித்திரம் அந்த ஜாதியினருக்கு விரும்பும் வகையில் இல்லை. அந்த ஜாதியில் எல்லோரும் என்ன சொக்கத் தங்கங்களா? ஒரே புனித வார்ப்பா? எல்லா குணச்சித்திரங்களும் எல்லா சாதி மனிதர்களிலும் இருக்கத் தானே செய்யும். ஒரு சரித்திரக் கதையில் அந்த சாதிக்காரன் கொஞ்சம் மாற்றுக் குறைந்து விடக்கூடாது. குமுதம் பத்திரிகை இதழ்கள் ஆங்காங்கே குவித்து எரிக்கப்பட்டன. குமுதம் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது. கலவரங்கள், கண்டன ஊர்வலங்கள் இத்யாதி, இத்யாதி. கடைசியில் குமுதம் நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்டனர். அந்த தொடரும் உடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுஜாதா தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின் அவர் மிக நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதில் முனைப்பாயிருக்கிறார். இது போன்ற எந்த வம்புக்கும் போவதில்லை.


ஆனால், எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வெளிவரத்தொடங்கிய தலித் எழுத்துக்களில் தான் தலித் சமூகம் தன் சமூகத்தில் உள்ள பிளவுகளையும் தன் தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்குள்ளேயே கூட நிலவும் சாதிப்பிரிவுகளையும் வீண் சாதி வெறியையும் வெளிப்படையாக முன் வைக்கப்படுவதைக் காண்கிறோம். இந்த சுய எள்ளல்கள், விமர்சனங்கள் பிரசுரமாகின்றன. தலித் சமூகத்தினர் எவரும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பவில்லை. வீட்டுக்குள் இருக்கும் அழுக்கை ஏன் வெளியில் மற்றோர் பார்க்கக் கொட்டுகிறாய் என்று எந்த தலித்தும் சீறவில்லை. ஆனால் தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும், என்று சித்தாந்தக் கட்டுமானம் தரும் சித்தாந்திகள் தான் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் கட்டமைத்துள்ள சித்தாந்த விதி, தலித்துகளை வெறி கொண்டு தாக்குவது நாயக்கர்களும், தேவர்களுமானாலும், தலித் இலக்கியம் பிராமணர்களைத் தான் தம் எதிர்ப்புக்கு இலக்காக்க வேண்டும். தம்மையே சுய விமர்சனம் செய்து கொள்வது தம்மக்களையே காட்டிக் கொடுப்பதாகும் என்று சித்தாந்திகள் சொல்கின்றனர்.


இத்தகைய பின்னணியில் சில உண்மை விவரங்களைச் சொல்லலாம். மீரானின் முதல் நாவல், ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை தொடராக பிரசுரமானது, அவர் வட்டாரத்து முஸ்லீம் சமுதாயத்து பத்திரிகயான முஸ்லீம் முரசுவில். அப்போது அதை யாரும் வெளியில் கவனித்ததாகத் தெரியவில்லை. 1988-ல் அது புத்தகமாக வெளிவந்த பிறகு தான் அது ஒரு வணிக வெற்றியாயிற்று. அதுவும் பெரும் அளவில். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அதற்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு, நேஷனல் புக் டிரஸ்டின் எல்லா இந்திய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் ஆதான் பிரதான் திட்டத்தில் அவரது இன்னொரு நாவல் சேர்க்கப்பட்டது. வணிக வெற்றியும் சரி, இலக்கிய அங்கீகாரமும் சரி, மீரானை அவர் சமூகத்தில் ஒரு புகழ் பெற்ற நபராக்கியுள்ளது. இவையெல்லாம் மீரானுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளன. இவ்வளவு வணிக வெற்றியும் இலக்கிய புகழும் முன்னுதாரணமற்றவை.


Salman Rushdiக்கும், Taslima Nasrin னுக்கும், தில்லி ஜாமியா மிலியாவில் ஒரு முஸ்லீம் சரித்திரப் பேராசிரியருக்கும், சீக்கிய வரலாறு பற்றி எழுதிய ஆராய்ச்சிக்காக ஒரு சீக்கிய பேராசிரியருக்கும் என்ன கொடுமைகள், கண்டனங்கள், இழைக்கப்பட்டன என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். ஒரு மிரட்டலில் நம்மூர் சுஜாதா பணிந்து விட்டார். நம்மூர் சமூக நீதிக்காரர்களின், சாதி ஒழிப்பாளரின் இரட்டை நாக்கும், இரட்டை நீதியும் இன்றும் செல்லுபடியாகின்றன, கவர்ச்சிகரமான கோஷங்களில்.
அதே சமயம் சையத் ஷாஹ்புதீன்களும், ஒவைசிகளும், அப்துல்லா புகாரிகளும், பனத் வாலாக்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மீரான் நாவல்களைப் படிக்கக்கூடுமானால்.... என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.


அதே சமயம் நம் மீரானே கூட வரலாற்றில் உறைந்து விட்ட சமாச்சாரங்களைத் தாண்டி, சம காலத்துக்கு வரலாம். அப்போது அவருக்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பழைய சமாசாரங்களுக்கு பொறுமை காட்டி அவரைக் கீர்த்திமானாக்கிய சமுதாயம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அவர் இப்போது எழுதுவதையே நிறுத்தி விட்டாற்போல் தோன்றுகிறது. ஆபத்துக்கள் பயமுறுத்துகின்றனவோ என்னவோ. ஹெச் ஜி. ரசூலுக்கு நடந்தது அவரை எச்சரிக்கையோடு இருக்கச் செய்திருக்கலாம். அதே சமயம் நாம் என்ன வாழ்ந்தோம் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காது எழுதிய மீரான் சௌக்கியமாக திருநெல்வேலியில் வாழ்கிறார். முஸ்லீம் மக்களிடையே ஒரு கௌரவம் மிக்க பிரதிநிதியாக. அதே காரியத்தை மிகச் சின்ன அளவில் ஒரு வரலாற்றுத் தொடர்கதையின் ஒரு பாத்திரத்தின் சித்தரிப்பைக் கூட நம்மால் சகித்துக் கொள்ளமுடியவில்லையே. எந்த முஸ்லீம் கலவரக் கூட்டம் முஸ்லீம் முரசை சுற்றி வளைத்துக் கொண்டு அதன் அலுவலகத்தை சூறையாடியது?



- வெங்கட் சாமினாதன்


Thanks : Azhiyachudar

Friday, April 18, 2014

சுஜாதா பதில்கள் :







பஞ்சவர்ணம், போளூர்.
நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?
நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

*****

செந்தில் வேலவன், திண்டிவனம்.
கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?
ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ?
மைதிலி வேணுகோபால், சென்னை.
சிறுகதை எழுதுவது எளிதா ? நாவல்கள் எழுதுவது எளிதா ?
100 மீட்டர் ஓட்டம் எளிதா ? 25 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டம் எளிதா ?
*****

ஜே.மோசஸ், சிதறால்.
இளம் எழுத்தாளர்களிடம் உள்ள பலம் – பலவீனம் என்ன ?
பலம் – புதிய புதிய வார்த்தைப் பிரயோகம், நவீன சிந்தனை.
பலவீனம் – மற்ற எழுத்தாளர்களைப் படிக்காமல் எழுதுவது.
*****

கே.அரவிந்த்.
நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா ? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா? இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே?
கவனிக்கும்போது இரண்டுமே இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பிறகு எழுத்தாகும்.
*****

வெங்கடாசலம்.
நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிப்பதால்.
*****

ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?
கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.
*****

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
ஓர் எழுத்தாளன் எப்போது உயர்வான் ?
தன் எழுத்தின் குறைகளை அறியும்போது.
*****

டி.சுப்பிரமணியன், மேலையூர்.
இலக்கியத் துறையில் உங்கள் இமாலய இலக்கு எது ?கடைசி வரை எழுதிக்கொண்டிருப்பது.
*****

சுமதி ராஜேந்திரன், அரக்கோணம்.
சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா ?இல்லை. மற்ற எல்லா சமயங்களிலும் படிப்பேன்.
 *****

டி.ரவிக்குமார், திருப்பத்தூர்.
புத்தகம் படிக்க எந்த நேரம் உகந்தது ?எந்த நேரமும். தினம் நாலு பக்கமாவது படிக்க வேண்டும். அது எனக்கு முக்கியம்.
*****

சாருமதி, சென்னை.
எழுத ஆரம்பிக்கும்போது யாரை மனதில் நினைத்துக் கொண்டு துவங்குவீர்கள் ?படிக்கப் போகிறவர்களை.
*****

சி.மணிவண்ணன், பெங்களூர்.
ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ?சாதாரணமாக சில மணி நேரம். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும்.
*****

முகமது ரஃபீக், ஆம்பூர்.
நடைபாதைக் கடைகளில் புத்தகம் வாங்கிய அனுபவம் உண்டா ?
இள வயதில் நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் நடைபாதைக் கடைகளில்தான். கடைக்காரர்களிடம் கெஞ்சிய அனுபவமும் உண்டு.
*****

சுகுமாரன், திருச்செந்தூர்.
நமது நாட்டில் எழுத்தாளர்கள் அனைவரும் பத்திரிகைகளை நம்பியே இருக்கும் நிலை எப்போது மாறும் ?மாறிவிட்டதே. எல்லா முன்னணி எழுத்தாளர்களும் சகட்டுமேனிக்கு டி.வி.க்கு எழுதி வருகிறார்களே!
*****

கார்த்திகேயன்.
எப்படி உங்களால் நிறைய புத்தகங்களைப் படிக்க இயலுகிறது? வேகமாய் படிக்க எதாவது டெக்னிக் வைத்திருக்கிறீர்களா ?
அனாவசியமான புத்தகங்களைத் தவிர்த்திருக்கிறேன். படித்ததையே திரும்பிப் படிப்பதில்லை. சில வேளைகளில் speed reading முறைகளைப் பயன்படுத்துவேன்.
*****

கோபாலன், ஃப்ராங்பர்ட்.
எழுத்துலகில் நீங்கள் ஏதாவது ‘மெகா ப்ராஜெக்ட்’ யோசித்து வைத்திருக்கிறீர்களா ?
அப்படியெல்லாம் இல்லை. எழுதிக் கொண்டே இருப்பதுதான் எனக்கு மெகா.
*****

கவாஸ்கர்.
புதிதாய் ஏதாவது அறிவியல் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ?கதைகள் இல்லை. அவ்வப்போது சிறிய அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
*****

அசோக்குமார்.
ஸ்பீட் ரீடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?
1. தலையை இடம் வலமாக அசைக்காமல் வார்த்தை வார்த்தையாக மனசுக்குள் படிக்க வேண்டும்.
2. நாவல்களில் பாராக்களின் முதல் வரிகளையும், உரையாடல்களையும் மட்டும் படித்தால் கதை புரிந்து விடும்.
3. தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.
*****

வெங்கடேஸ்வரன்.
எப்படி உங்களால் நேரம் காண முடிகிறது ? அதே இளமை வேகத்துடன் இருக்கிறீர்களே…?
நேரம் காண்பது அனாவசியங்களைத் தவிர்ப்பதால். இளமை லோரியால் ( l’oreal ) உபயம்.
*****

விவேக்.
எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?
முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.
*****

கே.அரவிந்த்.
நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்கள் பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?
1962-லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதி கூட இல்லையேல் வெட்கம்.
*****

ராம்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க யோகாவைத் தவிரவும் வேறு வழிகள் உள்ளன என்று பதிலளித்திருக்கிறீர்கள். அவைகளைச் சொல்லி எனக்கு உதவ இயலுமா?
ஒரு வழி – நல்ல புத்தகங்கள் படிப்பது. பால் டேவிஸின் Superforce படித்துப் பாருங்கள்.
*****

சுரேஷ்.
தங்களின் எழுத்துலக வாரிசு…?
எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.
*****

கல்யாண்.
எழுத்தில் உள்ள உங்களது நகைச்சுவை உணர்வு நிஜ வாழ்க்கையில் குறைவாமே, அப்படியா ?
நிஜ வாழ்வில் நகைச்சுவையாக இருப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணம் உங்கள் மேலதிகாரியைக் கேலி செய்ய முடியுமா ?
*****

சபீர்.
சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?
என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.
*****

எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா?
நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது. எதைப்பற்றித் தெளிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

*****

உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.
*****

நீங்கள் கற்ற பாடங்கள் ?நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும். எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.
*****

உங்கள் எழுத்து மற்றும் எழுதும் சூழ்நிலை பற்றி…எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
*****

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள எதாவது எளிய முறைகள் ?எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும். எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
*****

பால்சாக் பற்றி ?பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம்.
*****

சொந்தக் கதை அல்லது தெரிந்தவர்கள் கதை எழுதலாமா ?
The image that fiction produces is purged of the distractions, confusions, and accidents of ordinary life 
-என்றதுபோல தினவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.
*****

எழுதியதைத் திருத்துவதும், திரும்பத் திரும்ப எழுதுவதும் அவசியமா ?எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம். உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.
*****

நமக்கு எழுத்தாற்றல் வந்து விட்டது என்பது எப்படிப் புரியும் ?எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போலஉணர்வீர்கள். நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்களை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.
*****

சிறுகதைக்கு உங்களின் எளிய விளக்கம் ?உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீஸுக்குக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.
*****


நாம் observe செய்யும் அத்தனையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா 
என்ன ?எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த அத்தனையையும் எழுத வேண்டுமென்பதில்லை. எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.
*****

உங்களுக்கு கஷ்டமாக இருப்பது எது ?எனக்கு சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும் போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது.
*****

உங்கள் வாசகர்கள் பற்றி?என்னுடைய வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்.
*****

நீங்கள் மைலாப்பூர் வீட்டுக்கு இடம் பெயர்ந்தது பற்றி ?புதிய வீடு எனக்கு எப்படியோ! ஆனால், என்னுடன் அம்பலத்தில் பணியாற்றிய பலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்ததாக நம்பினார்கள். பல ஆண்டுகளாக நான் தேர்ந்தெடுத்து படித்து… சேகரித்து வைத்திருந்த நூலகத்தைத் திறந்துவிட்டு… விருப்பமான, தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னது – அந்த புது வீட்டுக்கு இடம் பெயர்ந்தபோதுதான். இன்று, நண்பர் சந்திரன் வீட்டில் இருக்கும் சின்ன லைப்ரரியின் பெரும்பாலான தமிழ் கிளாஸிக்ஸ் – அந்த நூலகத்திலிருந்து பெற்றவைதான்.
*****

ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கடைசி கதையான “மாஞ்சு” பற்றிக் கூற முடியுமா ?“சில கதைகளில்தான் இந்த மாதிரி அனுபவம் கிடைக்கும். நாம ஒன்றுமே செய்ய வேண்டாம் அதுவா எழுதிக்கொள்ளும். அப்படி எழுதப்பட்ட கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கும்.
*****


க்ரைம் கதைகள் நிறைய எழுதி நேரத்தை வீணடித்துவிட்டோம் என்று எண்ணியதுண்டா ?
க்ரைம் கதைகள்-எழுதியிராவிட்டால் வாசகர்கள் என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

*****

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
நீங்க ஒரு பக்கம் பிரபஞ்சம் பத்தி விஞ்ஞான பூர்வமா எழுதறீங்க; அதே சமயத்துல ஆன்மீக விஷயங்களைப் பத்தியும் நிறைய எழுதறீங்க. இது எப்படி முடியுது ?
‘நான் பிறந்து சுமார் 20 வருஷம் வரைக்கும் வளர்ந்த சூழலை, எந்த ஒரு காரணத்தாலும் மாற்ற முடியாது; அதே சமயத்துல, நான் விஞ்ஞானத்தைப் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களை இல்லைன்னு மறுக்கவும் முடியாது.
*****

நீங்கள் ஏன் எழுத வந்தீர்கள் ?
boredom வேறு ஒன்றுமில்லை.
*****


சுஜாதா தேசிகன்.
சார் இப்ப எல்லாம் சிறுகதை எழுதினா கொஞ்சம் பெரிசா எழுதிடறீங்க. விகடன் கூட ‘சற்றே பெரிய சிறுகதை‘ ன்னு போடறாங்க. முன்னாடி இருந்த அந்த ‘நறுக் சுறுக்‘ இப்ப கம்மியாடுச்சே ?
ஆமாம்பா. ஏனோ தெரியலை இப்ப எல்லாம் நிறைய வர்ணிச்சு எழுதணும் போல இருக்கு.
*****

உங்கள் சிறுகதைகள் எல்லாம் வெவ்வேறு புத்தகங்களில் சிதறியிருக்கின்றன, அவைகளில் சிறந்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடுங்களேன் ?நல்ல யோசனைதான். இருந்தாலும் ஒரு சிக்கல்! சிறந்த சிறுகதை என்றால் என்ன ? அதற்கு பதில் கிடைத்து விட்டதென்றால் நான் இனி கதைகள் எழுத வேண்டியதில்லை. “இன்றைக்கு 9-05 க்கு நான் ஒரு ‘சிறந்த சிறுகதை‘ எழுதினேன்” என்று எந்த எழுத்துக்காரனாலும் சொல்ல முடியாது. தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது.
*****

நீங்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அளவுக்கு வட்டார வழக்கைப் பயன்படுதுவதில்லையே ஏன் ?
வாழ்க்கையை இடம் பொருள் ஏவலுக்குத் தேவைப்பட்ட அளவுக்கு பிரதிபலித்தால் போதும் என்று எண்ணுபவன் நான். இதனால்தான் நான் வட்டார வழக்கு எழுதும்போது, ஒவ்வொரு வார்த்தையும் சரியாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவதில்லை. அதன் வாசனை மட்டும் போதும். இல்லையேல், வட்டார வழக்கு துல்லியமாக இருக்கும் கதை, பரதேசம் போய்விடும்.
*****

உங்கள் கதைகளில் வரும் ‘நான்’ நீங்கள் தானா ?வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களை, ஒரு விதமாகக் கலக்கித்தான் கதைகள் எழுதுகிறோம். இதனால் வாழ்க்கை வினோதங்களிலிருந்து எழுத்து தப்பவே முடியாது என்பது என் கருத்து. வாழ்க்கை என்று சொல்வது, மனித வாழ்க்கை. என் வாழ்க்கையாக அது இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஓர் எழுத்தாளன் ஊரெல்லாம் சுற்றிவந்து, பல இன்ப துன்பங்களை அனுபவித்து ஹெமிங்வே போல வாழ்ந்தால்தான் சொந்த வாழ்க்கையில், வற்றாமல் . . . விதம்விதமான கதைகள் எழுத முடியும். அப்படி எல்லோர் வாழ்க்கையும் அமைவதில்லை. சொந்த வாழ்க்கையைத் தான் எழுத வேண்டும் என்றால், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப எழுதவேண்டி வரும். இதை சுவாரஸ்யமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். நான் அந்த ரகமில்லை. காரணம், என் சொந்த வாழ்க்கை அதிகச் சஞ்சலமற்றது. ஏதோ இருபது, முப்பது சிறுகதைகள்தான் தேறக்கூடிய சலனமற்ற வாழ்க்கை. அதனால் மற்றவர் வாழ்க்கையைக் கவனித்து, அவர்கள் வாழ்க்கையை வாழ முயல்வது தான் எனக்குச் சவாலாகப் படுகிறது. இதனால் கதையின் ‘நான்’ பல விதங்களில் மாறலாம். ‘நான் எனும் பொய்யை நடத்துவோன் நானே’ என்று பாரதி சொன்னாலும், ‘விண்ணில் திரிகிற புள்ளெலாம் நானே’ என்று அவர் ரேஞ்சுக்குப் போக முடியவில்லை. ஆனால் என் கதைகளில் பலவித ‘நான்’கள் இருப்பது தவிர்க்க முடியாதது. அத்தனை பேரும் வாழ்க்கையைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்கள் உண்மையான ‘நானா’க இருக்கத் தேவையில்லை. இந்த விதத்தில் எழுத்தாளன் ஒரு தேர்ந்த நடிகன் போல!”
*****

உங்கள் கதைகளில் உண்மை – கற்பனை கலப்பு பற்றி ?பல சமயங்களில், முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதிய எழுத்துகள் நாளடைவில் வாழ்க்கையாகிவிடுவதும் உண்டு. ‘ஜில்லு’ என்கிற கதை, இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அணு ஆயுதப் போருக்குப் பின் நிகழும் வெளியேற்றத்தைப் பற்றியது. உண்மையாகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எழுத்தாளன், இதனால் தீர்க்கதரிசி அல்லது வாழ்க்கையின் கோட்பாடுகளை அமைக்கிறான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாது. முழுக் கற்பனை என்பது சாத்தியமே இல்லை. உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒரு வாழ்க்கை அதைப் போல் இருந்திருக்கும். அல்லது இருக்கக் காத்திருக்கும்.
எழுதும்போது எச்சரிக்கையாக, செயற்கை கலந்துதான் எழுத வேண்டியிருக்கும். ஆணைப் பெண்ணாகவும் வயசைக் கூட்டிக் குறைத்தும் கும்பகோணத்தை டில்லியாகவும் மாற்ற வேண்டிவரும். (எப்படியும் மனைவி கண்டுபிடித்துவிடுவாள்.) இந்த எச்சரிக்கை இல்லையென்றால், எழுத்து நன்றாக இருக்கும்; எழுத்தாளன் பிழைத்திருக்க முடியாது.
 *****

நாங்கள் அல்லது இன்னொருவர். உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன் ?
பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும். தனிமை கொண்டு (தனிப் புத்தகம்), ஜன்னல் (கசடதபற), காணிக்கை (கல்கி), செல்வம் (கலைமகள்), முரண் (சுதேசமித்திரன்), நகரம் (தினமணிகதிர்), எதிர் வீடு (கணையாழி), அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்), வீடு (தினமணிகதிர்), ஒரே ஒரு மாலை(ஆனந்த விகடன்), அம்மோனியம் பாஸ்பேட் (தினமணிகதிர்) பார்வை (தினமணிகதிர்) இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியதரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writingஎன்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.
*****

ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க ஆவலாய் இருக்கிறேன். எதில் துவங்கலாம் ? உங்கள் அறிவுரை வேண்டும்.
முதலில் ஒரு டிக் ஷனரி வாங்கவும்.
*****

ரவிசெல்வன்.எஸ்.
ஜனரஞ்சக இதழ்களில் எழுத மாட்டோம் என்று சொல்லும் எழுத்தாளர்களைப் பற்றி ?இப்போது யாரும் அப்படிச் சொல்வது இல்லை. எல்லோரும் ஜ. இதழ்களில் எழுதுகிறார்கள். எப்போது கடிதம் வரும் என்று காத்திருக்கிறார்கள்.
*****

சுகந்தி.
இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் என்ன வித்தியாசம் ?இன்ஸ்பிரேஷனில் ஒரிஜினல்காரர் கேஸ் போட முடியாது.
*****

ஐஸ்வர்யா.
நீங்கள் தமிழ் மொழியைப் பற்றி அதிகமாய் விவரித்தாலும் உங்கள் எழுத்தில் ஆங்கிலம் நிறையக் கலந்திருக்கிறதே.
யதார்த்த வாழ்வில் யாரும் செந்தமிழில் பேசுவதில்லை. அதனால்தான்.
*****

வெங்கட்.
இன்னும் பத்து வருடங்களில் இன்டர்நெட், தொலைகாட்சி, சினிமா இவற்றின் வடிவங்கள் மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள். புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் ?புத்தகங்களை அழிக்க முடியாது. ஆனால் புத்தகப் பிரசுர முறைகள் மாறும். சுடச்சுட தோசை சுடுவது போல ஆர்டர் வந்ததும் புத்தகம் அச்சடித்துக் கொடுக்கப்படும். இதனால் காகித விரயம் குறையும்.
*****

அன்பு.
உங்கள் கதைகளில் பாத்திரங்கள் பேசுவது இயல்பாக இருப்பதற்கு என்ன காரணம் ?மக்களின் பேச்சு முறைகளை நீங்களும் சீரியஸாகக் கவனித்திருக்கிறீர்கள், உள் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்.
*****

சுரேஷ்குமார்.
உங்கள் கதைகள் எப்படி சிருஷ்டிக்கப்படுகின்றன ? உங்கள் அனுபவங்களினாலா ?அனுபவங்களுடன் கற்பனை கலந்து.
*****

விமல்.
சமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் எது ?
Best American Essays 2001
 என்கிற கட்டுரைத் தொகுதி. இம்மாதிரி ஒரு புத்தகத்தை யாரும் தமிழில் தொகுக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது.
 *****

சுதா.
தன் சுயசரிதைப் புத்தகத்தில் பாலகுமாரன், நீங்கள்தான் எழுத்துக்கு குரு என்றும், சிறுகதை எழுதுவது குறித்து நீங்கள்தான் வழிகாட்டினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா ? அவரது படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது ?பாலகுமாரனுக்கு சொன்னதையே பலருக்கு சொல்லியிருக்கிறேன். அவர்களில் பாலகுமாரன் தான் சிறந்து வந்தார். ஆதாரமான எழுத்துத் திறமை இல்லையெனில் எந்த குருவும் சரிப்படாது. அவர் எழுத்தில் எனக்குப் பிடித்தது ‘இரும்புக் குதிரைகள்‘
*****

சுதா.
சார், சென்ற மாதம் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது எப்படி என்று கேட்டதற்கு முதலில் டிக் ஷனரி வாங்குங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். வாங்கி விட்டேன். அடுத்து எங்கிருந்து தொடங்குவது ?

எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.
*****

தியாகு, திருச்சி.
சுஜாதா வீட்டு லாண்டரி கணக்கைக் கூட பிரசுரிப்பார்கள். ஆனால் எங்கள் படைப்புகளைப் பிரசுரிக்க மாட்டார்கள் என்று இளம் எழுத்தாளர்கள் கூறுகிறார்களே ?இது ரொம்ப ரொம்ப பழைய (1978) குற்றச்சாட்டு.
*****

கல்யாண்.
உங்கள் எழுத்துகளை 1973-லிருந்து விடாமல் படித்து வருகிறேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?உங்களை 73-லிருந்து தொடர்ந்து படிக்க வைத்த என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதேதான்.
*****

ஆர்.தியாகராஜன்.
மறு பிறப்பில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ? ‘மெனி லைவ்ஸ் மெனி மாஸ்டர்ஸ்’ புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ?
படித்திருக்கிறேன். ‘ஆ‘ என்று ஒரு கதை எழுத அது வசதியாக இருந்தது. மற்றபடி மறு பிறவி இருந்தாலும் ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம்.
 *****

முத்துகுமார்.
பல எழுத்தாளர்கள் குடிக்கிறார்கள். அதை மறைப்பதும் இல்லை. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
குடித்தால்தான் எழுத வரும் என்று சொல்லாத வரை சரி.
*****

சந்திரசேகரன் ஆர்.பிள்ளை, கிளீவ்லேன்ட்.
நீங்கள் பேச்சுத் தமிழில் எழுதுவதன் மூலம், தமிழ் மொழி இலக்கணம் பாதிப்படைய காரணமாய் இருக்கிறீர்கள் அல்லவா ?இலக்கணம் முதலில் வராது. இலக்கியத்தை விவரிப்பதுதான் இலக்கணம். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழின் பேச்சு மொழியில் டாக்டரேட் பண்ணுகிறார்கள்.
*****

சீனிவாசன்.
வெறும் ஒரு தமிழ் எழுத்தாளராய் இருந்து பிழைக்க இயலுமா ?முடியும் சிலரால்.
*****

ச.ராஜாராமன்.
சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். நண்பர் ஒருவர் ‘வா மலையேறிட்டு வரலாம்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘மலையேறுவது’ என்றால் மது குடிப்பதாம். எங்கே போகிறது தமிழ் ?நல்ல வேளை. அவர் உங்களை ‘சால்னா சாப்பிடலாம் வா’ என்றழைக்கவில்லை. அது சரி, ‘ஹீட்டர் போடுவது’ என்றால் என்ன தெரியுமா ?

*****

மலர்க்கொடி, காஞ்சிபுரம்.
நீங்கள் ஏன் தொலைகாட்சி தொடர்களுக்கு கதை எழுதுவதில்லை ?அண்மையில் ‘சித்தி’ பாஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சி தொடர் என்பது பாசஞ்சர் ரெயில் போல என்றேன். அவர், ‘அது மட்டும் இல்லை, எப்ப வேணா ட்ராக் மாத்தலாம், யாரை வேணா நிறுத்தி இறக்கி விடலாம், மறுபடியும் ஏத்திக்கலாம். மெல்லப் போகும் பாசஞ்சர்’ என்றார். ‘உங்களுக்கு வராது’ என்றார். என் ‘24 ரூபாய் தீவை‘ சினிமாவாக எடுக்கப் போகிறார்.
*****

சௌந்தர்யா, திருச்சி.
பெண்களை சுவாரசியமாக வர்ணிக்கும் நீங்கள், ஆண்களை அப்படி வர்ணிப்பதில்லையே, ஏன் ?வர்ணித்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகமில்லை. அவ்வளவுதான். அண்மையில் எழுதிய ‘உள்ளம் துறந்தவ‘னில் (கல்கி) அழகேசன் ஒரு உதாரணம். என்ன, கொஞ்சம் அல்பாயுசாகச் செத்துப் போய்விடுகிறான், அவ்வளவுதான்.
*****

ஜி.ஜோசப்ராஜ், புதுக்கோட்டை.
டான் ப்ரௌனின் ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா ? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை ?தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ போன்ற சித்திரம் தமிழ் நாட்டில் வேண்டும். ஐகனா கிராஃபி பற்றிய ஆராய்ச்சி தெரிந்தவர்கள் வேண்டும். அவர்களுக்கு ஜெட் வேகத்தில் செல்லக் கூடிய தமிழ் நடை வேண்டும். நிறைய நிறைய ஓய்வும், பண பலமும் வேண்டும். டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து, அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக, ‘கருப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற ஒரு தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்து விட்டேன்.

ஒரு யோசனை தோன்றுகிறது. ராஜாரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.


நன்றி: http://balhanuman.wordpress.com