Wednesday, February 24, 2016

ஷிர்க்கும் வஹாபிசமும்










வஹாபிசம் பற்றி தி இந்துவில் சமஸ் எழுதியிருந்த கட்டுரை இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்தக் கட்டுரையை இன்றுதான் படிக்க முடிந்தது. நான் ஏற்கெனெவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி எழுதியிருந்த ஒரு சிறு பதிவு என் முகநூல் வரலாற்றிலேயே அதிகபட்ச பகிர்வுகளைக் கொண்டிருந்ததாலும் எனக்கு அடிப்படியிலேயே இருக்கும் இஸ்லாமிய வரலாறு பற்றிய அக்கறை காரணமாகவும் இன்னொரு பதிவு எழுதலாம் என்று யோசித்தேன்.


வஹாபிசம் அடிப்படைவாதம் அல்ல என்று சொல்லும் வாதத்தை முதலில் பார்க்கலாம்.


மத அடிப்படைவாதம், அதாவது Religious Fundamentalism என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி பின் வரும் அர்த்தத்தை கொடுக்கிறது:


Fundamentalism: The strict maintenance of the ancient or fundamental doctrines of any religion or ideology.
-Concise Oxford Dictionary - Tenth Edition


அதாவது ஒரு மதத்தின் மறை நூலை, அது எழுதப் பட்ட காலத்தை கருத்தில் கொள்ளாமல் எந்தக் காலத்துக்கும் அதில் குறிப்பிட்ட மாதிரியே பின் பற்ற நினைப்பதற்கு ‘மத அடிப்படைவாதம்’ என்று பெயர். இது முதன் முதலில் கிறித்துவ ப்ராடஸ்டன்ட் மதத்தின் மூலம் ஆரம்பித்தது. இன்றைய சமூக மாறுதல்களை கருத்தில் கொள்ளாமல், இரண்டாயிரம் வருடத்திய பைபிளில் என்ன சொல்லி இருக்கிறதோ அதன் படியே இன்றும் வாழ முயற்சிக்க வேண்டும் என்று கிறித்துவர்களில் ஒரு பிரிவினர் கருத ஆரம்பிக்க அதற்கு அடிப்படைவாதம் என்று பெயரிடப் பட்டது.


அதே மாதிரி மற்ற மதத்திலும் கருதும் குழுவினர் அடிப்படைவாதிகள், அதாவது religious fundamentalists என்று அழைக்கப் பட்டார்கள். இந்த விளக்கத்தின் படி  இந்துத்வா அபிமானிகள் ஹிந்து அடிப்படைவாதிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.


இதே தியரிப்படிதான் வஹாபிசத்தையும் விளக்க வேண்டும். இஸ்லாத்தில் இடைப்பட்ட காலத்தில் எழுந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் துறந்து ‘தூய இஸ்லாம்’ நோக்கிப் போக வேண்டும் என்று முன்னெடுப்பதும் அடிப்படைவாதம்தான். வஹாபிசம் தூய இஸ்லாத்தைத்தான் முன்வைப்பதால் அவர்களையும் அடிப்படைவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.


மேலும் ‘நாங்கள் எங்கள் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளைத்தான் ஒழிக்கப் போராடுகிறோம்,’ என்று பேசுவது நியாயமான விவாதமாக பார்க்கப் படுகிறது. அதைப் பார்க்கலாம்.


முதலில் இந்த சர்ச்சையே தவ்ஹீத் இயக்கம் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ நடத்தியதில்தான் ஆரம்பித்தது. ஷிர்க் என்பதற்கு செவ்வியல் அரபி மொழியில் ‘சம நிலை’ அல்லது ‘தொடர்பு’ என்று அர்த்தம். அதாவது வேறு ஒரு கடவுளை அல்லாவுடன் சம நிலையில் வைத்துப் பேசுவது என்று பொருள் கொள்கிறார்கள். ஆதியில், அதாவது இஸ்லாத்தின் துவக்கத்தில் அல்-மனத், அல்-லத், உஸ்ஸா என்கிற மூன்று பண்டைய அரபிக் கடவுளர்களுடன் அல்-லாஹ்-வையும் சேர்த்து ‘சம நிலையில்’ வைத்துப் பார்த்தனர். இதனை முஹம்மது கண்டித்தார். (அவர் ஆரம்பத்தில் இதனை ஏற்றுக் கொண்டார் என்று ஒரு தனி தியரி இருக்கிறது; ஆனால் நவீன இஸ்லாமிய ஆய்வாளர்கள் இதனை மறுதலிக்கிறார்கள். அது இங்கே தேவையில்லாத சர்ச்சை. எனவே அதில் புக வேண்டாம்.)  


ஷிர்க் என்பதன் ஆதார சிந்தனை இதுதான். இதனையே கொஞ்சம் பண்டைய அரேபியா விட்டு விஸ்தரித்துப் பார்த்தால் படைப்பு, காத்தல், அழிப்பு என்று எந்த வேலையை செய்வதாக நம்பப் படும் கடவுளர்கள் எல்லாமே ஷிர்க்-கின் கீழ் வருவார்கள். அதாவது விஷ்ணு காக்கும் கடவுள் என்று யார் நம்பினாலும் அது ஷிர்க்-தான். ஏனெனில் அல்லா மட்டுமே காப்பவர் என்கிற சிந்தனையை அது மறுதலிக்கிறது. சிலைகளை என்று மட்டும் அல்ல பொதுவாக எந்த சக்தியையுமே கடவுளாக வழிபடுவதையே ‘ஷிர்க்’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அதைத்தான் பண்டைய அரேபியாவில் செய்தார்கள். எனவே இது வெறும் இஸ்லாத்தில் உள்ள ‘மூட நம்பிக்கைகளுக்கு’ எதிரானது என்று மட்டுமே பொருள் கொள்வது அப்படி சொல்பவர்களுக்கே ஷிர்க்-கின் வரலாறு தெரியவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது வேண்டுமென்றே விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.


சரி, பிரச்சனை மூட நம்பிக்கைகள்தான் என்றே எடுத்துக் கொண்டாலும், எது மூட நம்பிக்கை என்ற கேள்வி வருகிறது. அதன் ஆங்கில வார்த்தை superstition-க்கு ஆக்ஸ்போர்ட் அகராதியை கேட்டால் பின்வரும் விளக்கம் தருகிறது:


'A widely held but irrational belief in supernatural influences.'


இதில் முக்கியமான வார்த்தை ‘irrational’ அதாவது அர்த்தமற்ற நம்பிக்கைகள் அல்லது ஆதாரமற்ற நம்பிக்கைகள். இப்படிப் பார்த்தால் எந்த ஒரு மத நம்பிக்கையையும் ஆதாரமற்றது, அதாவது மூட நம்பிக்கை என்று சொல்லி விடலாம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், ராமர் அயோத்தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் பிறந்தார், பிள்ளையாரின் சொந்தத் தலை வெட்டப் பட்டதும் பார்வதி ஒரு யானைத் தலையை பொருத்தி அவரை காப்பாற்றினார், குரான் இறைவனால் ஜிப்ரில் தேவதை மூலம் நேரடியாக இறைத் தூதருக்கு வழங்கப் பட்டது போன்ற எதுவுமே நிரூபிக்க முடியாத, ஆதாரமற்ற நம்பிக்கைகள்தாம். இந்த மாதிரி எந்த மத நம்பிக்கைகளையுமே நாம் கேள்வி கேட்டு அவற்றை மூட நம்பிக்கைகள் என்று புறந்தள்ளி விட முடியும்.


அப்படி எல்லாம் இல்லை, ஒரு மதம் உருப் பெரும் போது கிடைத்த விஷயங்கள் எல்லாமே நன்னம்பிக்கைகள், அதற்குப் பிறகு நடந்த மாற்றங்கள் எல்லாமே மூடத்தனம், என்கிற ஒரு விளக்கத்தை நாம் முன் வைத்தால் அதுவும் கேள்விக்கு உள்ளாகும்.


உதாரணத்துக்கு தலித்துகள் தீண்டத் தகாதவர்கள்; அவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஒரிஜினல் ஹிந்து மத நம்பிக்கை. இவை பண்டைய ஹிந்து மதப் புத்தகங்களில் காணப்படும் விஷயங்கள். ஆனால் தீண்டாமையை ஒழித்தது, தலித்துகளை கோயிலுக்குள் அனுமதித்தது எல்லாமே நவீன மாறுதல்கள். ஒருவேளை யாராவது ஒரு தீவிர பிராமணர் கிளம்பிவந்து, ‘தலித்துகளுக்கு உரிமை கொடுத்தது எல்லாமே மூட நம்பிக்கைகள், ஹிந்து மதத்துக்கு எதிரானவை, ஆகவே இவற்றைக் களைந்து தூய ஹிந்து மதத்தை கொண்டு வர வேண்டும்,’ என்று இன்று போராடத் துவங்கினால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்வோமா?


அதே போலதான் இந்த வஹாபிச ‘மூட நம்பிக்கை’ வாதங்களும். இவர்கள் வாதத்தைப் பொறுத்த வரையில் ஷியா பிரிவு கூட மூட நம்பிக்கைதான். ஆனால் அந்தப் பிரிவுக்கான ஆதார சிந்தனைகள் நபிகள் இறப்புக்கு உடனேயே துவங்கி விட்டவை. ஷியா - சுன்னி என்பதே நபிகள் இறப்புக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டி நடந்த அரசியலின் தொடர்ச்சிதான். இதில் சுன்னிதான் நன்னம்பிக்கை, ஷியா மூட நம்பிக்கை என்பதே தவறான வாதம். ஏனெனில் அதே வாதத்தை ஷியாக்கள் கூட இவர்களுக்கு எதிராக முன் வைக்க முடியும்.


சூஃபி சிந்தனைகளும் கூட ஏறக்குறைய நபிகள் காலத்துக்கு உடனேயே துவங்கி விட்டன. அலி இபின் அபி தாலிப், நபிகளின் மருமகன்தான் சூபி சிந்தனைகளின் ஊற்று என்று நம்பப் படுகிறது. அதே போல அப்த்-அல்லா இபின் முஹம்மத் இபின் அல்-ஹனஃப்பியா என்பவர்தான் முதல் சூஃபி துறவி என்று கருதப் படுகிறார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. அதாவது இந்த சிந்தனைகளும் ஏறக்குறைய இஸ்லாத்துடன் சேர்ந்தே வளர்ந்தன. சொல்லப் போனால் நடுவில் முளைத்த விஷயம் என்பது வஹாபிசம்தான். சூஃபி, ஷியா இவர்கள் எல்லோரும் சேர்ந்து வஹாபிசம்தான் மூட நம்பிக்கை சொன்னால் அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.


ஒவ்வொரு மதமும் காலத்துக்கு ஏற்பவும், அந்தந்த மதம் பரவுகின்ற இடங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டு வருகிறது. ஐரோப்பாவில் பரவிய கிறித்துவம் ஈஸ்டர் என்கிற பண்டைய ஐரோப்பியப் பண்டிகையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. (ஒரு கொசுறுத் தகவல்: ஈஸ்டர் என்பது யூஷ்டர் என்கிற அதிகாலைக்கு சொந்தமான ஜெர்மானியக் கடவுளில் இருந்து மருவியது. யூஷ்ருக்கும் பண்டைய வேதக் கடவுளான உஷஸ்-க்கும் சம்பந்தம் இருக்கிறது. உஷஸ், உஷா என்பதெல்லாம் அதிகாலையைக் குறிக்கும் சொற்கள். காலையில் விழித்து எழுதலை ஏற்படுத்தும் கடவுள் சம்பந்தப் பட்டதாக இருப்பதால் இயேசு விழித்து எழுந்ததை இதனோடு இணைத்து கொண்டாடத் துவங்கி விட்டார்கள்.)


இதே போலத்தான் இந்தியாவிலும் பல்வேறு மதங்கள் காலப் போக்கில் ஒன்றிடம் இருந்து இன்னொன்று உள்வாங்கி சில சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பின் பற்றுகின்றன. இந்த மாதிரி கலப்படங்கள் எல்லாமே அநியாயம் என்று கருதுபவர்கள் உலகம் எங்குமே பொதுவாக கலாச்சாரங்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் இந்த மாதிரிதான் தூய ஆரியம் போதித்தார். ஹெட்கேவர் ஆர்எஸ்எஸ் துவக்கி தூய ஹிந்துத்துவம் போதித்தார். இலங்கையில் புத்த பிக்குகள் தூய பௌத்தத்தை போதித்தனர். அரேபியாவில் வஹாப் தூய இஸ்லாம் போதித்தார். இந்த ‘தூய்மை’யின் விளைவுகள் எல்லாமே கடைசியில் கடும் ரத்தக் களரியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. இதில் வஹாபிசம் கொஞ்சம் தேவலாம், தூய ஆரியம் ரொம்ப மோசம் என்கிற ரேங்கிங்-குக்கே இடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். ஐரோப்பாவில் ஹிட்லருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அரேபியாவில் இபின் சவுத்-க்கு கிடைத்தது. எண்பதுகள் வரை ஹெட்கேவர் ஆட்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. 1992ல் கிடைத்தது; 2002ல் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தபோது என்ன செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது என்ன முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதேதான் வஹாபிசத்துக்கும் நடக்கும். சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தானின் பக்தூன்க்வா மாநிலம் போன்ற பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளில் எல்லாம் வஹாபிகளுக்கு பங்கு இருக்கிறது. கடந்த  இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பகுதிகளில் ஷியாக்கள் கொல்லப்பட்டது, தர்காக்கள் தகர்க்கப் பட்டது போன்றவற்றின் பின்னணியில் வஹாபிச சிந்தனை இருந்திருக்கிறது.  வஹாபிகள் மூட நம்பிக்கையை எதிர்க்கவில்லை. இவர்கள்தான் மூட நம்பிக்கையின் மொத்தக் கொள்முதல்காரர்கள். இவர்கள் தூய்மையை போதிக்கவில்லை. இவர்களே இஸ்லாத்தின் மொத்த அழுக்கிற்கும் சொந்தக் காரர்கள். அமைதியை, நல்லிணக்கத்தை, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் கடுமையாக எதிர்க்க வேண்டியவர்கள் வஹாபிகள். இவர்களுக்கு வேர் கொடுப்பது பெரும் கேட்டில் கொண்டு போய் முடியும். ஆனால் இன்னமும் அது இங்கே வேர் பிடிக்கவில்லை என்பது ஒரு நல்ல விஷயம். காரணம் அந்த அளவுக்கு ஆழமாக பண்பாட்டுக் கலப்பு இங்கே நிகழ்ந்திருக்கிறது. பன்மைக் கலாசாரத்துக்கு இந்தியாவுக்கே முன் உதாரணமாக நம் மாநிலம் இருந்திருக்கிறது.  பாபர் மசூதி இடிப்பு நடந்த போதே அமைதி காத்தவர்கள் நம் தமிழக இஸ்லாமியர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த வஹாபிச அழுக்கையும் இங்கிருந்து துடைத்து எறிவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Thanks :Tharkasasthiran

No comments:

Post a Comment