Saturday, August 15, 2015

வசீம் தாஜுதீன் : புதைகுழியிலிருந்து எழுந்துவரும் உண்மைகள்






கிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமாகவில்லை என்றும் அது ஒரு கொலை என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதற்கமைய தெகிவளை முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜுதீனின் புதைகுழி சட்டமருத்துவ அதிகாரி, நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் தோண்டப்பட்டது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சங்கள், சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.மொஹமட் வசீம் தாஜுதீன்

மொஹமட் வசீம் தாஜுதீன் கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியில் கல்வி கற்ற இவர் 2001 முதல் 2003 வரையான காலப்பகுதியில் கல்லூரியின் ரக்பி அணிக்காக விளையாடியதுடன் 2003 இல் கல்லூரி அணியின் துணை தலைவராகவும் இருந்துள்ளார். அத்துடன் 19 வயதுக்குற்பட்ட தேசிய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாடியுள்ளார்.

கல்லூரியில் இருந்து வெளியேறியபின் தாஜுதீன் Havelock Sports Club க்காக விளையாடியதுடன், 2008 ல் இடம்பெற்ற Hong Kong Sevens தொடரில் தேசிய அணிக்காகவும் விளையாடினார். இவரின் மிகச்சிறப்பான ஆட்டம் மற்றும் நடத்தைகள் காரணமாக 2009 ல் இவர் Havelock Sports Club இன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் மிகவும் பிரபல்யமான ரக்பி வீரர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் காயம் காரணமாக சிறிதுகாலம் ஓய்விலிருந்த இவர் 2012 ல் மீண்டும் ரக்பி விளையாட்டுக்குள் பிரவேசிக்க தயாரான போதே மிகக்கொடுரமான முறையில் கொல்லப்பட்டார்.

வெள்ளவத்தை முருகன் வீதியில் வசித்து வந்த வசீம் தாஜுதீன் தனது 28வது வயதில் 2012 மே மாதம் 17 திகதி கார் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதாக பொலிசார் அறிவித்தனர். அவர்களது கட்டிய கதை இவ்வாறு இருந்தது:




“விமான நிலையத்துக்கு காரில் விரைந்துகொண்டிருந்த தாஜுதீனின் கட்டுப்பாட்டிலிருந்து வாகனம் நீங்கியதால் அதிகாலை 1.00 மணியளவில் காரானது நாரஹேன்பிட்டிய பார்க் வீதி சாலிகா மைதானத்தின் சுவற்றில் மோதியதன் விளைவாக கார் வெடித்ததனால் வசீம் தாஜுதீன் கொல்லப்பட்டார்.”




நல்லடக்கம்:

இவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் நன்றாக பொலிதீன் பையினால் சுற்றப்பட்டு தெஹிவளை ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

2015 ஆட்சி மாற்றத்தின் பின் பூதம் கிளம்பியது:

2015 பிப்ரவரி – தாஜுதீன் மரணம் விபத்து அல்ல அது ஒரு கொலை என பொலிசார் தெரிவிப்பு. விசாரணைகள் CID இடம் ஒப்படைப்பு.

2015 மே – தாஜுதீன் கொலை தொடர்பாக இடம்பெற்ற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை CID இனரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி JMO (சட்ட வைத்திய அதிகாரி ) விடம் கோரிக்கை.

2015 ஜூன்- JMO வினால் வழங்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகளுக்கும் கடந்த ஆட்சியில் பொலிசாரினால் வழங்கப்பட்ட இறுதி அறிக்கைகளுக்கும் இடையில் பாரியளவு முரண்பாடுகள் காணப்படுவதாக CID அறிவிப்பு.

2015 ஜூலை- கொலை இடம்பெற்ற அன்று தாஜுதீனின் கையடக்க தொலைபேசி இயக்கம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது என Dialog நிறுவனம் அறிவிப்பு.

27 ஜூலை 2015 – தாஜுதீன் கொலை செய்யப்பட்டார் என்பதை CID உறுதி செய்தனர். அவர்களது கருத்துப்படி

“அவரது மரண சான்றிதழில் அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் பற்கள் உடைக்கப் பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, குதி கால் பகுதியில் உள்ள எலும்பும் உடைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியும், தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர்.

யஸாராவின் வாக்குமூலம்:



தாஜூடீன் கொல்லப்பட்ட பின்னர், தன்னை அச்சுறுத்திய சிலர் தன்னை வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் பணியாற்ற அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். தாஜூடீனை சித்திரவதை செய்து , அவர் கொலை செய்யப்பட முன்னர் குறித்த காதலிக்கு போன் செய்து அவரை பேசவைத்து விட்டு தான் பின்னர் கொலை செய்துள்ளார்கள் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது.

வாகனம் சிக்கியது!

இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான வாகனமென்றிலேயே ரக்பி வீரர் கடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை செஞ்சிலுவை தலைவர் ஜகத் அபயசிங்க இது குறித்து மௌனமாக உள்ள அதேவேளை இது குறித்து பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்திற்காகப் பெறப்பட்ட வாகனங்கள் இரண்டில் ஒன்றின் நிறம் மாற்றப்பட்டதாகவும் அவ்வாறு நிறம் மாற்றப்பட்ட வாகனத்திலேயே வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்ட வாகனத்தை முன்னாள் முதற் பெண்மணியின் அரச சார்பற்ற அமைப்பிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் பார்த்தால் ஒட்டு மொத்த குடும்பமே இதில் , பங்குகொண்டு உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகள் ராஜபக்சகளினால் நிராகரிப்பு :

இந்தக் கொலை மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனினும், அதனை மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவின் நண்பியுடன் தாஜுதீன் கொண்டிருந்த காதலின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தன் சகோதரர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய நாமல் ராஜபக்ச, தாஜுதீன் தமது குடும்ப நண்பர் என்று தெரிவித்தார்.

வாசிம் தாஜுதீனை தன்னுடைய பள்ளிக்கூடக் காலம் முதல் அறிந்திருந்ததாகவும் இந்த மரணம் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்வதை தவிர்த்து, ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமற்றது என்றும் நாமல் கூறினார்.

வாசிம் தாஜுதீனின் குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய நாமல் ராஜபக்ச, இந்த சம்பவத்தை அரசியலாக்குவதன் மூலம் எந்த நன்மையும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் கலைப்பு:

இந்தக் கொலையில் இலங்கை அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூவருக்குத் தொடர்பிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிபர் பாதுகாப்புப் பிரிவும் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த அனுர சேனநாயக்கவே, தாஜுதீன் மரணம் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

தாஜுதீன் மரணம் நிகழ்வதற்கு முன்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் உணவகத்தில் தாஜுதீன் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாஜுதீன் கொலை தொடர்பான முக்கியமான சான்றை காவல்துறையினர் விசாரிக்கவில்லை.

தாஜுதீனின் பணப் பை, விபத்து நடந்த இடத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் மீட்கப்பட்டிருந்தது. அதுபற்றி விசாரிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

பல கொலை மர்மங்கள் விரைவில் துலங்கும்:

இந்நிலையில், பல கொலை மர்மங்கள் விரைவில் துலங்கும் எனவும் சம்பிக்க ரணவக்க போன்றோர் தெரிவித்து வருவதுடன், மஹிந்தவின் புதல்வர்கள் குறித்த கொலைச் சம்பவத்தில் நீண்ட நாட்களாகத் தொடர்பு பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அகழ்ந்தெடுக்கப்பட்ட ரக்பி வீரர் தாஜூதீனின் சடலம் முற்றாக சிதைவடையாத நிலையில் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடக யுத்தம்:

வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் பலமான சந்தேகங்களை எழுப்பி, குறித்த மரணம் தொடர்பில் மீள் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் கடந்த ஜனவரி தொடக்கம் மீடியா லிங்க் அமைப்புடன் இணைந்து கொழும்பு நிவ்ஸ் டுடே நிறுவனம் மிகப்பெரிய ஊடக யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

சடலம் முற்றாக சிதைவடையவில்லை:

இந்நிலையில் தாஜூதீனின் சடலம் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டதனை அடுத்து இச்செய்திச்சேவை சட்ட வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்திருந்தது.

இதன்போது சடலம் முற்றாக சிதைவடையாமல் இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சடலம் பொலித்தீன் ஒன்றினால் முற்றாக பொதியிடப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது.

சடலத்தை சுற்றியிருந்த பொலித்தீன் பழுதடையாமல் இருப்பதன் காரணமாக சடலமும் பழுதடையாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தடயவியல் பரிசோதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக தாஜூதீனின் சடலம் தற்போது கொழும்பு சட்ட வைத்திய மருத்துவபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

டிலான் பெரேரா வக்காலத்து: 

வசீம் தாஜுதீனின் மரணத்தை வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு களங்கம் கற்பிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

வசீம் தாஜுதீனின் மரணம் கொலை என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. அவரின் உடலை தோண்டி எடுக்க வேண்டாம் என அவரது குடும்பத்தினர் மன்றாடுகின்றனர். இது இவ்வாறிருக்கவே வேண்டுமென்று ஆதாரங்களைச் சோடிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார:

இந்த நிலையில் இதனை மூடிமறைப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த றக்பீ வீரர் வசீம் தாஜுதீன், கொலை செய்யப்பட்டிருப்பதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமது குடும்ப அங்கத்தவர்களையும, ஊழல் செய்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

"விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்" -  மஹிந்த:

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சரியாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

எனது கரங்களில் இரத்தக் கறை இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலின் பின்னர் தனது அரசாங்கம் அமையப் பெறின் இந்த மரண விசாணையைத் தொடர்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Thanks : importmirror.com

No comments:

Post a Comment