கடந்த 20.09.2014 சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வலயம் எனும் குறும்படம் திருகோணமலை நகர முதல்வர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த S. S. லிங்கேஸ்வரன் எனும் இளைஞனின் நெறியாள்கையின் கீழ் அவருடைய நண்பர்கள் குழு மற்றும் இரு பாடசாலைச் சிறார்கள் நடித்திருந்தனர்.
இந்தக் குறும்படத்தை விமர்சிப்பதற்கு முன்பு ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகின்றேன். திரைப்படம் சார்ந்த போதிய அறிவோ அனுபவமோ இல்லாதநிலையிலே குறைவான நிதி மற்றும் தொழினுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறும்படம் ஒன்றை உருவாக்க நினைத்த இளைஞன் லிங்கேஸ்வரனினதும் அவரது குழுவினரதும் தைரியத்தை முதலிலே பாராட்டியாக வேண்டும்.
முதன்முதலாக ஒரு சைக்கிளை சுயமாக ஓட்டிப்பார்க்கும் சிறுவன் பலதடவை விழுவதும் மீண்டும் எழுந்து முயல்வதுமான அந்தப் புது அனுபவத்தைப்போல இந்த இளைஞனும் இந்தத்துறையில் இறங்கியிருக்கின்றான். அவனுடைய முதல் முயற்சியிலேயே அவனுடைய முழுத்திறமையையும் மட்டிட முடியாது. மட்டிடவும் கூடாது.
இனிமேல் படத்திற்கு வரலாம்..
'வலயம்' படத்தின் கதை நமது மண்ணின் சூழலுக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பது ஆரம்பக் காட்சியிலேயே புரிந்து விடுகின்றது. ஆம் இப்போதெல்லாம் தமிழக சினிமாவில் ஒரு போக்காக ஆகிவிட்ட கேங்ஸ்டர் & டாஸ்மாக் வகைக் கதை.
அதாவது சட்ட விரோத செயல்களைப் புரிந்துவரும் பாதாளக்கோஷ்டி ஒன்றில் இயங்கும் துப்பாக்கி இளைஞர்கள் படம் முழுவதும் சாராயம் குடிக்கின்றார்கள். மதுபோதையுடன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தமது சகாக்களுக்கு துரோகம் செய்து போட்டுத்தள்ளுகின்றனர். இது ஒரு வளையமாக நடந்துகொண்டிருப்பதை 23 நிமிடத்துக்குள் காண்பிக்கின்றார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது. இசை பெரும்பாலும் கதையின் தன்மையை ஒட்டிச் செல்கின்றது. எடிட்டிங்கும் பரவாயில்லை. ஆனால் உரையாடல் படத்தின் நிச்சயமாக விமர்சனத்திற்குரியது.
கண்களை சிறிது மூடி படத்தின் உரையாடலை மட்டும் ஒருவர் கேட்க நேர்ந்தால் தான் பார்ப்பது ஒரு தென்னிந்திய சினிமாவைத்தான் என்று கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார். அந்தளவுக்கு படத்தில் கோடாம்பாக்கம் மற்றும் மதுரைத் தமிழ் கோலோச்சுகின்றது.
உதாரணத்திற்கு ஒரு காட்சி:
கதவு தட்டப்படுகின்றது. வந்திருப்பது யாரென்று பார்க்கும்படி அடியாட்களை பணிக்கின்றார் போதையிலிருக்கும் தலைவன். கதவு திறக்கப்பட ஒருவன் கையிலே பையுடன் நிற்கின்றான். உள்ளே வந்து,
'இதுல 10 லச்சம் பணம் இருக்கு. அண்ணன் குடுத்திட்டு வரச்சொன்னாப்பல' என்கின்றான். (இதிலே 'சொன்னாப்பல' என்ற வார்த்தையை கவனியுங்கள்) சரி, அதே காட்சியில் தொடரும் உரையாடலை கேட்போம்.
'பணமெல்லாம் கரெக்டா இருக்கில்ல'
' இருக்கும்ண வேணுண்னா எண்ணிப்பாருங்க!'
'சரக்கு சாப்பிர்றியாப்பா!'
'பரவால்லண்ண'
'யேய்.. அவன் எங்க?'
'கடைக்காரன் வாட்டர் பாட்டில் வக்க மறந்திட்டாண்ண.. இட்டான்டு வரப்போயிருக்கான்..'
'சரிண்ண.. நான் கௌம்பறேன்!'
இப்படிப் போகின்றது அந்த உரையாடல்.
இந்தப் பேச்சு-வழக்கு நமது திருகோணமலையை அண்டியுள்ள எத்தனையோ தமிழ் கிராமங்களிலே எங்காவது பேசப்படும் ஒன்றா..? அவ்வளவு ஏன் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்துவரும் மலையகம் நீங்கலாக நமது நாட்டில் எந்தப்பிரதேசத்திலாவது பேசப்படுகின்றதா..?
மரத்திலே அழகான பூக்களைக் காணும் நமது தமிழ் பேசும் ஒரு சிறுமி எப்படி குதூகலிப்பாள்..?
'அங்க பாரு.. எவ்வளவு வடிவான பூ..!' பொதுவாக இப்படித்தானே..
ஆனால் இந்தப்படத்தில் வரும் நம்மூர்ப் பாடசாலைச் சிறுமி, 'ஐ! பூவு! என்கிறாள். அதுமட்டுமல்ல,
"டேய் ஜீவா, அதை ஏறிப் பிச்சித் தாவன்" என்று கேட்பதற்குப் பதிலாக 'டேய் ஜீவா பறிச்சிக் குடுரா!' என்கிறாள்.
கூட வரும் சிறுவனோ 'முடியாது.. முடியாது இம்மாம் பெரிய ஒயரம் இஞ்ச பாரு என்னால மரல்லாம் ஏற முடியாது' என்கின்றான்.
இந்த உரையாடல்களிலே வருகின்ற வார்த்தைகளும் அதை உச்சரிக்கும் பாங்கும் தென்னிந்திய தமிழ் பிரதேசத்திற்குரியது என்பதை படங்களைப் பார்க்கும் சிறுகுழந்தையும் கூறிவிடும்.
இப்படி அந்நியத்தனமாய் படம் எடுப்பது யாருக்காக....?
பெரும் முதலாளிகளின் கைகளிலே இருந்த வந்த சினிமா எனும் வலுவான ஊடகம் விஞ்ஞான வளர்ச்சியின் பேறாக குறும்படம் எனும் வடிவில் தற்போது சாமானியர்களும் கையாளத்தக்கதாகியிருக்கின்றது. இதனை நாம் நம்முடைய மண்ணின் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்காமல் வெறும் ஃபேன்டஸி காட்சிகளை எடுத்து வீணடித்துக் கொண்டிருப்பது நியாயமா?
ஷங்கர் போல படம் எடுப்பதற்கு நாம் தேவையில்லை. அதற்கு ஷங்கரே போதும். விஜய், சூர்யா, அஜீத் போல நடிப்பதற்கு அவர்களே போதும். யோசித்துப் பாருங்கள் நம்மவர்களை வைத்து மதுரைத்தமிழில் உரையாடுவதற்குப் பயிற்சியளித்து நம்மூரிலே படம் பிடிப்பதற்குப் பதில் அதை அவர்களே அவர்களது ஊரில் இன்னும் நன்றாகச் செய்யவிடலாமே.
எந்தவொரு படைப்பையும் உருவாக்க நினைக்கும்போது நாம் நம்முடைய கால்களை நமது மண்ணிலே ஊன்றிக்கொள்ள வேண்டும். உலகம் நமக்கு கொடுத்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை நம்முடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவதுதான் நியாயம். அதைவிட்டு எல்லாவற்றையும் அப்படியே பிரதி பண்ணவேண்டும் என்று நினைத்தால் இறுதியில் காகம் அன்ன நடைபோட்ட கதையாகத்தான் இருக்கும்.
குறும்படம் எடுப்பதை நாகரீகமாகவும் தமது அறிவுஜீவித்தனத்தை பறைசாற்றிக்கொள்வதற்குரிய வழிமுறையாகவும் பின்பற்றுவது தற்போது ஒரு (Fashion) போக்காகி விட்ட நிலையில் இந்தப்படமும் இப்படியான ஒரு நோக்கில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.
இன்றைய இளைஞர்கள் தென்னிந்திய மற்றும் ஹொலிவுட் சினிமாக்களை பார்த்து அதேபோல தமது குறும்படங்களை தமது சூழலுக்குள் மிகக்குறைவான வசதி வாய்ப்புகளைக் கொண்டு எடுப்பதற்கு முயல்வதைக் காணமுடிகின்றது. ஆனால் அந்த முயற்சி நமது மண்ணின் சூழலுக்குப் பொருந்தாமலும் நமது வாழ்க்கை முறையினைப் பிரதிபலிக்காமலும் இருக்கின்றது. சுருங்கச் சொன்னால் இத்தகைய படைப்புகள் ஆறாவது விரல்போல நம்மை விட்டு விலகி தனியே பயனின்றி நிற்கின்றது.
இறுதியாக..
இந்தப் படத்திற்கு பின்னே மறைந்திருக்கும் இளைஞன் லிங்கேஸ்வரனின் அசாத்திய உழைப்பு, விடா முயற்சி, பொறுமை, நம்பிக்கை அத்தனைக்கும் நாம் மதிப்பளித்தே ஆக வேண்டும்.
இனிவரும் காலங்களிலே நமது மண்சார்ந்த படைப்புகளை உருவாக்கி வெற்றிபெறுவார் என்று நம்புவோமாக.
'ஒருவன் எத்தனை தடவை விழுந்தான் என்பது அவசியமல்ல. ஆனால் எத்தனை தடவை மீண்டும் எழுந்து வந்தான் என்பதுதான் முக்கியமானது.'
-'மூதூர்' மொகமட் ராபி
25.09.2014
25.09.2014
No comments:
Post a Comment