Tuesday, July 22, 2014

கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் !kamal_400
மலின் 'உன்னை போல் ஒருவன்' படத்தை சமீபத்தில் தான் டிவியில் பார்க்க நேர்ந்தது, இந்தப் படத்தை பார்க்கும் வரை கமலின் மீது ஓரளவாவது அபிமானம் வைத்து  இருந்தேன், அது சுக்குநூறாக சிதறிப்போனது இப்போது. அந்த படத்தை பார்த்த உடன் ஏற்பட்ட உள்ள குமுறலை எங்காவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. பின்னர், அந்தப் படம் வெளி வந்து வெகு நாளாகிவிட்டது; இத்தனை காலம் கழித்து இந்த விமர்சனம் தேவையா? என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் இன்னொரு எண்ணம் எழுந்து இதை எழுத வைத்துவிட்டது. இந்த ஒரு படத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன்னர் வந்த படங்களிலும் (உதாரணம்: ஹேராம்) இஸ்லாமியர்களின் மீது அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். இனிமேலும் அடுக்குவார் (விஸ்வரூபம்). அவரைப் பொறுத்தவரை சினிமா என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணம். இதை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அது சொல்ல வந்த காரணத்தை முழுமையாக சொல்லிக்கொண்டே இருக்கும். ஆதலால் அதே அடிப்படையில், கண்டனம் காலம் கடந்த கண்டனம் என்றாலும், பதிவு செய்வது முக்கியமாகப் பட்டது.
 
 
சரி இந்த படம் அப்படி என்னதான் சொல்லவருகிறது? தீவிரவாதத்தை யார் செய்ய வேண்டும் என்பதை இந்தப்படம் சொல்ல வருகிறது. அதாவது யார் வன்முறையை கையில் எடுத்தால் அது தீவிரவாதம், யார் வன்முறையை கையில் எடுத்தால் அது வதம் என்பதையே இப்படம் கயமைத்தனத்துடன் அழுத்தமாகச் சொல்கிறது.
 
 
இந்தப் படத்தைப் பற்றி பேசுமுன் கமலின் நியாயம் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பார்க்க கீற்று இணைய இதழில் திரு.சுப வீரபாண்டியன் எழுதிய சிவனின் அருளும், ராமனின் வாளும் என்ற கட்டுரையைப் படிக்க வேண்டும்.
 
அதற்காக கட்டுரையின் முக்கிய பகுதியை இங்கே கொடுத்துள்ளேன்.
 
 
"திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஒரு ஏழைப் பாணனுக்காக விறகு சுமந்த கதை முதலான பல கதைகளைத் தமிழ்ப் புலவர்கள் மேடைகளிலும், ஏடுகளிலும் எடுத்துக் காட்டுவர். ஆனால் மகா பாதகம் தீர்த்த கதை என்று ஒரு கதை அதே திருவிளையாடல் புராணத்தின் 12 ஆவது படலமாக இடம்பெற்றுள்ளது. அதனைப் புலவர்களும், ஆன்மீகவாதிகளும் பல நேரங்களில் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அந்தக் கதை அவ்வளவு மோசமானது.
 
 
குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயும் அதற்கு இணங்குகிறாள். இருவரும் உறவு கொள்கின்றனர். அதனை அறிந்த தந்தை எதிர்க்கின்றார். அவரை அவர் மகனே வெட்டிக் கொன்றுவிடுகிறான். அதனால் அவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிடுகிறது. தந்தையைக் கொன்றதால் அந்தப் பாவம் ஏற்படவில்லை. பார்ப்பனராகிய ஒருவரைக் கொன்றதே பாவத்திற்குக் காரணம் என்கிறது திருவிளையாடல் புராணம். பிறகு அவன் தாயோடு வேற்றூருக்குச் செல்கின்றான். வழியில் அவன் தாயையும், அவனுடைய பொருள்களையும் கள்வர்கள் கவர்ந்து கொள்கின்றனர். இறுதியில், அவன் ஒரு பார்ப்பனன் என்பதால், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.
 
 
இதுதான் திருவிளையாடல் புராணம் கூறும் கதை. இக்கதை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வாழ்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதியுள்ள திருவிளையாடல்
புராணத்திலும் இதே கதை இதே வடிவில் இடம் பெற்றுள்ளது.
 
 
இப்புராணக் கதை இப்படி இருக்க, நாம் அனைவரும் அறிந்த ராமாயணக் கிளைக்கதை ஒன்றை இங்கு நினைவுகூர்ந்து, இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். வால்மீகி எழுதிய
ராமாயணத்தில் உத்தரகாண்டம் என ஒரு காண்டம் உள்ளது. அக்காண்டத்தின் 73 ‡ 76ஆம் சருக்கங்களில் சம்பூகன் பற்றிய ஒரு செய்தி உள்ளது.
 
 
ராமர் அரண்மனையில் மன்னராக வீற்றிருக்கும் போது, வயதான பார்ப்பனர் ஒருவர் உயிரிழந்த தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகின்றார். 14 வயது கூட ஆகாத தன் மகன் இறந்துவிட்டான் என்று கூறி கதறி அழுகின்றார். அதுகண்ட ராமரும், மற்றவர்களும் பதறுகின்றனர். ' ராமா, உன் ஆட்சியில் ஏதோ மகாபாதகம் நடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேசத்தில் குழந்தைகளுக்கு மிருத்யுபயம் உண்டாகுமா? ' என்று அந்தப் பார்ப்பனர் குரல் எழுப்புகின்றார். அப்போது அங்கிருந்த நாரதர், ' உன் ராச்சியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். இந்தப் பிராமணனின் மகன் அகால மரணமடைந்ததற்கு அதுவே காரணம் ' என்று தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்துச் சொல்கிறார்.
 
 
உடனே தன் புஷ்பக விமானத்தை வரவழைத்து, அதில் ஏறி ஆயுத பாணியாக ராமர் புறப்படுகின்றார். விந்திய பர்வதத்திற்கு அடுத்த சைவலம் என்ற மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், சம்பூகன் என்னும் ஒரு தபஸ்வி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளிக்கிறான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறார். உடனே தேவர்கள் அனைவரும் 'நல்லது நல்லது ' என்று ஆர்ப்பரித்து மகிழ்கின்றனர்.
உத்தரகாண்டச் செய்திகளும், அதில் இடம் பெற்றுள்ள சில வடமொழிச்  சொற்களும், சங்கீத பீஷ்ம, சங்கீத விமர்சகாச்சாரிய, அபிநவ த்யாகப்ரஹ்ம, ஸ்ரீ உ.வே.சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உத்தரகாண்டம் தமிழ் வசனம் என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
 
 
இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?
இவற்றை எல்லாம் கடந்த எழுபது, எண்பது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி வருகிறது. இன்னும் தொடர்ந்து சொல்ல வேண்டிய கடமையும், தேவையும் நமக்கு இருக்கின்றன."
 
இதுதான் கட்டுரையின் கரு...
 
மேலே விவரிக்கப்பட்ட சம்பவமும் அதற்கு வழங்கப்பட்ட நீதியும் போதும். படத்தில் கமல் எந்த நீதியின் அடிப்படையில் வதம் செய்கிறார் என்று புரிந்துகொள்ள.இந்த படத்தில் தன் கண்முனே பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் பாதிக்கபட்ட காட்சியை பற்றி கமல் உருக உருக விவரித்து பின்னர் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த ஒருவன், அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும் என்று கேள்வி வேறு கேட்டு தீவிரவாதிகளை தான் வேட்டையாட வந்தற்கான முக்கிய காரணமாக அதைச் சொல்லுவார்! ஆனால் இதில் கூத்து என்னவென்றால், அதே சம்பவம் ஒருவனின் மனைவிக்கு நேர்ந்து அதுவும் கமலால் விவரிக்கப்பட்ட அதே முறையில் கொல்லபடுகிறாள்; அதைப் பார்த்த கணவன் அவளை மானபங்கப்படுத்தி கொன்றவர்களை பழி வாங்கவே அவன் தீவிரவாதியாகிப் போனதாக சொல்லுகிறான். அவனை கொல்லத்தான் கமல் அந்தக் கதையை சொல்லுகிறார். மேலும் அவனின் பக்கம் உள்ள நியாயத்தை அசிங்கப்படுத்தும் விதமாக அந்த படத்தில் வரும் ஓர் இந்து ஆயுத வியாபாரி வக்கிரமாக "அதுதான் அவ போனா என்ன? மற்ற ரெண்டு பேர் இருக்காள்கள்ல" என்று சொல்லி அவனின் அத்தனை உணர்வுகளையும், கேலிக்குரியதாக ஆக்கி, இறந்து போனது ஒரு பெண், அதுவும் அவள் பாலியல் வல்லுறவு ஆளாகி  கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதை எல்லாம் தாண்டி, 'அவள் வெறும் ஒரு போகப்பொருள்; அவளுக்குப் பதிலாக, வேறு ஒருத்தி இருந்தால் அதாவது அவனின் 'உடல் பசியைத் தீர்க்க' அப்போது அவள் மரணத்தால் அவனுக்கு எந்த இழப்பும் இல்லை' என்பதைப் போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அவனுடைய மற்ற மனைவிகள் இருக்கும்போது அவன் தீவிரவாதியான செயல் தேவையற்றது என்று சொல்ல வருகிறார்.
 
 
அது மட்டும் அல்ல; இஸ்லாமியர்கள் ஒரு மனைவி போனால் எளிதாக வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண் ஒரு பொருட்டே அல்ல என்று மற்ற மதத்தினர் முன் தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கவே (ஏற்கனவே அப்படி ஒரு கண்ணோட்டம் ஊடகங்களால் உண்டாக்கப்பட்டுவிட்டது வேறு விஷயம்) இப்படி ஒரு காட்சி.
 
 
மேலும் இதில் கமல் சொல்லவரும் நீதி என்ன? இப்படி மதவெறியும், காமவெறியும், கொலைவெறியும் பிடித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நீதி கிடைக்காத காரணத்தாலும் நீதி தாமதமாக கிடைக்கின்ற காரணத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு பழி வாங்கப் புறப்படுவதினாலேயே சட்டம் ஒழுங்கு கெடுகிறது, அதிலும் அவன் இஸ்லாமியனாக இருந்தால் அது தீவிரவாதமாகிவிடுகிறது என்றுதான் சொல்லவருகிறார், சரி இதிலும் ஒரு பகுதி நியாயம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்! அதாவது ஒருவன் பாதிக்கப்பட்டாலும் அவன் சட்டத்தின் மூலமே அவனுக்கான நீதியைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தாலும் சரி!  இங்கு அதுவும் இல்லை.. நேரிடையாக பாதிக்கப்பட்ட  ஒருவனே பதிலுக்கு பழி வாங்குவது தவறு எனும்போது, எவனோ ஒருவன் திடீர் என்று தோன்றி, பாதிக்கப்பட்டவர்களையே (பின்னால் இப்படிப்பட்ட கருத்துக்கள் எழும் என்று தெரிந்தே ஒரு இஸ்லாமிய போலீஸ் அதிகாரியை வைத்து கொலை செய்ய வைத்தாலும், கொலைக்கான சூத்திரதாரி என்னவோ கமலாகவே இருக்கிறார். அவர்களை அழித்து தான் அவதாரம் என்பதை உறுதிப்படுத்த, அழித்து முடித்தவுடன், பின்னணி இசையில் சம்பவாமி யுகே யுகே என்று ஒலிக்கிறது) கொலை செய்ய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
 
 
இந்திய தண்டனை சட்டத்தைப் பொறுத்தவரை ஒருவன் குற்றம் செய்திருந்தாலும் அவன் எந்த காரணத்தால் எந்த சூழ்நிலையில், அந்த குற்றத்தைச் செய்தான் என்பதைப் பொறுத்தே அவனுக்கான தண்டனை தீர்மானிக்கபடுகிறது. பல வேளைகளில் அதை தீர்மானிக்க காலதாமதமும் ஆகிறது. அதனாலேயே அதை ஒப்புக்கு சப்பாக ஆகிவிட்டு அவரவர்களுக்கு மனதில் தோன்றிய முறையில் அல்லது தன்னுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில், தான்தோன்றித்தனமாக தனக்கு சரியென பட்ட காரணத்தை மட்டும் முன்னெடுத்து வைத்துவிட்டு தண்டனை கொடுத்து விட முடியுமா என்ன? அரசு இயந்திரம் அப்படித்தான் கால தாமதம் செய்கிறது. ஆனால் அப்படி ஆகும் காலதாமதத்தால் எத்தனை இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியரல்லாத இளைஞர்கள் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? உங்களுடைய Point of View (விருமாண்டி) யுக்திப்படி, அவர்களுடைய வாழ்வின் இழந்த பகுதியை யார் தருவார்கள்? இதே உங்களுடைய விருமாண்டி படத்தில் Point of View யுக்தியை பயன்படுத்தி இந்த பக்கம் இருந்து, அந்த பக்கம், அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் என்று சூழ்நிலைகளை விளக்கிக் கூறி, மரணதண்டனையே கூடாது என்று அழுத்தமாகக் கூறினீர்கள். அதன்பிறகு அது படத்தில் மட்டுமே பதியப்பட்ட கருத்தாக மட்டும் இல்லாமல் உங்களுடைய சொந்த கருத்தாகவே பல இடங்களில் பதிவு செய்தீர்கள்.
 
அதே போல (அன்பே சிவம், தசாவதாரம், குருதிபுனல்) பல படங்களில் நீங்கள் சொன்ன பல கருத்துக்கள் உங்கள் தனிப்பட்ட சித்தாந்த நிலைப்பாடாகவும், உங்கள் கருத்தாகவுமே நினைத்து வரவேற்கப்பட்ட போது, அதை ஆமோதித்தீர்கள். இதை நான் ஏன் சொல்லவருகிறேன் என்றால், இதற்குப் பின்னால் பல அறிவுஜீவிகள் படத்தை படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று வாதிட வரலாம். அதற்காகவே இதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த ஒரு படத்திலும் நீங்கள் விரும்பாத ஒரு கருவை வைத்துவிட முடியாது. அதே அடிப்படையில் இது ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் என்றாலும், இதுவும் நீங்கள் விரும்பிய ஒரு கரு தான்.
 
மற்ற எல்லோருக்கும் நீங்கள் மெல்ல இயங்கும் அரசு இயந்திரத்தின் மெத்தனப்போக்கையும், மெல்ல நடைபெறும் விசாரணைகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதை கண்டிப்பதைபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. எல்லா பஜ்ஜியும் கடலைமாவுதான். ஆனாலும் வாழைக்காய், வெங்காயம் என்று உள்ளே உள்ளதுதான் முக்கியம். ஹிந்துத்துவா அமைப்புகள் மற்றும் சங்பரிவார் அமைப்பு போன்றவை இஸ்லாமியர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள்; தீவிரவாதிகள் என்றாலே அது அவர்கள்தான்; காங்கிரஸ், திமுக மற்றும் பாரதிய ஜனதா அல்லாத அரசுகள் இஸ்லாமியர்களின் மேல் பரிவு கொண்டு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் அவர்களின் மேல் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றன. அந்த போலி குற்றச்சாட்டை உறுதிபடுத்தவும், பதிவு செய்யவுமே இந்த படம்.
 
மேலும் நாடே அறிந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட எத்தனைபேர் தீவிரவாதிகளாக மாறியுள்ளனர்? இதைச் சொல்ல உங்களுக்கு மனம் கூசவில்லையா? பெஸ்ட் பேக்கரி  சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முழுமையான நீதி கிடைக்காமல் நொந்து போயும் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருகிறார்கள். உண்மைநிலைகள் அப்படியிருக்க எப்படி உங்களால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறியுள்ளதைப்போல சித்தரிக்கமுடிகிறது? தெரியவில்லை. ஆனால் இதே குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகள் என்று நாடே அறிந்திருந்தும், பரிவார் அமைப்புகள் மற்றும் குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைபோல பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி இன்னும் பல பாரதீய ஜனதா தலைவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களிலும் வழக்கு எப்படி உள்ளது என்பதை இந்த நாடே அறியும். அவர்களின் வழக்கு விசாரணையிலும்தானே பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டியதுதானே?.
 
பார்ப்பனர்கள் எல்லோரையும் நான் குற்றம் சொல்லவரவில்லை. எல்லா மதங்களிலும் மதவெறியர்கள் உண்டு. மதவெறியை பலர் வெளியே துப்பி விடுகிறார்கள். சிலர் அதை விழுங்கி அது செரித்து ரத்தத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் உங்களைப் போன்றோர் வியாபார தந்திரத்தால் விழுங்கியவர்களாகவும் காட்டமாட்டீர்கள்; அதன்மேல் உள்ள பாசத்தால் அதைத் துப்பவும் மாட்டீர்கள். தொண்டையில் நஞ்சாக அதை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 
 
 
ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் உணரமுடிகிறது, பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களின் உண்மையான ரூபம் இப்போதுதான் மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கிறது. உங்கள் மனதின் உள்ளே மறைந்திருந்த பூணூல், மெல்ல நாகமாகி, உங்கள் தோள் மேல் ஏறி கழுத்தை சுற்றிக்கொண்டு படம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. உங்களின் கருஞ்சட்டை கிழிந்து புலித்தோலாக மாறிவருகிறது. கம்யூனிசத்தையும் நாத்திகத்தையும் எழுதிய உங்கள் பேனா சூலமாகி, பழைய நூலக வாசம் மறைந்து விபூதி மண‌ம் கமழ நீங்கள் ஓர் அழிவு சக்தியாக விரைவில் விஸ்வரூபம் எடுக்கப் போவதைத்தான் இது காட்டுகிறது.
 
 
அதைத்தான் உங்கள் சமீபத்திய பேட்டியில் கோவிலுக்கு வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம் என்று கூறியிருக்கிறீர்கள். பக்தியுடன் இருங்கள்; ஆனால் இரட்டைவேடம் போடாதீர்கள். மோடியைப் போல் ஆர்.எஸ்.எஸ். போல் நேரிடையாக எதிர்த்துப் பேசிவிடுங்கள். ரஜினியைப்போல் மதநம்பிக்கையுடன் இருந்துவிட்டுப் போங்கள். நீங்கள் மற்றும் மணிரத்தினம் போன்றவர்கள் எப்போதுமே சமுதாயத்திற்குள் அறிவுஜீவிகளைப் போல் இருந்து கொண்டு மதம் சார்ந்த கொரில்லா தாக்குதலை கலைத்துறையின் துணைகொண்டு செய்துகொண்டிருக்கிறீர்கள். இது நல்லதல்ல. மேலும் இந்த விமர்சனத்தை உங்களின் விஸ்வரூபம் உண்மை என்று நிச்சயம் நிரூபிக்கும்.
 
Thanks: Keetru

No comments:

Post a Comment