Sunday, April 21, 2013

படகுமாறும் ஆன்மீகமும் காத்திருக்கும் "துரோகி"களும்

 
 
டந்த புதன்கிழமை கிண்ணியநெற் இணையத்தளத்தில் அபூறாதியா எனும் பெயரிலே ஒரு நண்பர் எழுதிய அறிவுடையோருக்குத் திடமாக அத்தாட்சிககள் பல இருக்கின்றன ஏன் எனும் கட்டுரைக்குப் பதில் விமர்சனமாக இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.
 
 
 
நண்ப அபூறாதியா,
 
நல்லதொரு கட்டுரை எழுதியிருக்கின்றீர்கள். நமது ஆன்மீக விழுமியங்களை இன்றைய  அறிவியல் உண்மைகளுடன் உரசிப்பார்க்கும் உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன். ஆனால் அதேவேளை இவ்வாறான முயற்சிகள் ஒரு கூர்மையான கத்தியின் அலகிலே அல்லது உயரமான இரு கட்டிடங்களை இணைக்கும் கம்பியிலே எதுவித பாதுகாப்புச் சாதனங்களின் உதவியுமின்றி நடப்பதை ஒத்த முயற்சி என்பதையும் நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும்.
 
இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கின்றது என்றால் இத்தகைய முயற்சிகள் பலசமயங்களிலே வாசகர்களை வீண் குழப்பத்தில் ஆழ்த்திவிடக்கூடியக்கூடியது. ஆசிரியர் ஒருவர் தனது பாடப்பரப்பை விளக்கும்போது கடினமான விடயங்களை இலகுவாகப் புரியவைக்கும் நோக்கிலே சில உதாரணங்களைக் கூறுவது வழமை. ஆனால் சில சமயங்களில் தெரிவு செய்யும் தவறான அல்லது குழப்பமான உதாரணங்களே அவரது பாடப்பரப்புக்குரிய விளக்கத்தை பாழடித்து விடுவதுமுண்டு.
 
 
அவ்வாறுதான் எமது ஆன்மீக உணர்வுகளை வலுப்படுத்துவதற்காக நாம் அறிவியல் எனும் உரைகல்லை நாடும்போது அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.
 
இதை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலிலே ஆன்மீக நம்பிக்கைகளையும் அறிவியலையும் தெளிவாக அறிந்து கொள்வது அல்லது வரையறுத்துக்கொள்வது அவசியம்.
 
 
ஆன்மீகம் பொதுவாக முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விடயம். இங்கு இதுதான் உண்மை என்று ஒரு விடயம் கூறப்பட்டிருந்தால் அதை நம்புவது என்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனை நம்புவதற்கு மறுப்பதோ அல்லது சந்தேகிப்பதோ மறுதலித்து நடந்து கொள்வதோ பாவங்களாக அல்லது தண்டனைக்குரிய குற்றமாக அல்லது நம்;பிக்கையின் மைய சக்தியின் (கடவுள் அல்லது பெரும் சக்தி) கோபத்திற்கு ஆளாக்ககூடிய செயலாகவே கணிக்கப்படும்.
 
 
-ம்: பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று கத்தோலிக்கத் திருச்சபையினர் வரையறுத்து நம்பியிருந்த காலத்தில் அதனை கணித வானவியல் ரீதியாக துல்லியமாகக் கணித்து அதை மறுத்த அறிஞர்கள் மதநிந்தனையாளர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் கணிப்பு மிகச்சரியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரிந்ததே.
 
சுருங்கச் சொன்னால்,
 
நாம் சொல்கின்றோம் நீ நம்பு! என்பதுதான் ஆன்மீகம்.
ஆனால் அறிவியலோ இதற்கு முற்றிலும் முரணானது.
இங்கு கூறப்படும் விடயங்கள் அதை எத்தனை பெரிய உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் கூறினாலும் அத்தனையும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது ஒருவர்  பூமி முக்கோணி வடிவானது என்று கூற ஆசைப்படுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எத்தனை தாழ்ந்தவராக இருந்தாலும் அவ்வாறு நீங்கள் கூறக்கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது. ஆனால் அவர் தனது கூற்றை மக்கள் முன்னே பல்வேறு நிபந்தனைகளின் கீழே ஆதார பூர்வமாக நிரூபித்துக் காண்பித்தாக வேண்டும். அதுவும் அவரது கூற்று பற்றி திறந்த முறையிலே வைக்கப்படுகின்ற சந்தேகங்கள் விமர்சனங்களையெல்லாம் முறியடித்து பலமுறை பல்வேறு இடங்களிலும் நிரூபித்தாக வேண்டும்.
 

கடந்த நூற்றாண்டின் இறுதியிலே இந்தியாவில் ராமர் பிள்ளை எனும் தமிழர் ஒருவர் தாவர இலைகளிலிருந்து எரிபொருள் அதாவது மூலிகைப் பெற்றோல் தயாரிப்பது எனும் ஒரு விடயத்தை முன்வைத்தார். அதுபற்றி முதலிலே தனது மாநில பத்திரிகைளுக்கு தெரிவித்தார். பின்பு அவ்விடயம் பிரபலமாகி தமிழ்நாடு அரசிலுள்ள அறிவியல் பிரிவு அவரை ஆய்வுக்குட்படுத்தியது. அங்கு அவர் பரிசோதனை ரீதியாக இலைகளை ஒரு பாத்திரத்தினுள் இட்டு ஒரு சிறு மத்து போன்ற உபகரணத்தினால் தொடர்ந்து மசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருகட்டத்தில் பெற்றோல் வாசனையுடன் கூடிய திரவம் வெளிவரலாயிற்று.
 
இதனால் மகிழ்ந்த தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் ராமர் பிள்ளையைப் பாராட்டி பட்டம் கூட அளித்தார்கள். ராமர் பிள்ளையும் அரசாங்கம் தனக்கு பெரும்தொகை பணத்தை வழங்கி ஊக்கமளித்தால் அந்த முயற்சியில் தாம் ஈடுபட்டு வெற்றிபெறுவேன் என்றும் உறுதியளித்தார். ராமர்பிள்ளை ஒருபுறம் பிரபலமாகிக் கொண்டிருக்க தமிழ்நாடு அறிவியலாளர் குழு இது தொடர்பாக மேலும் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்தது. இதற்கிடையிலே தமிழக அரசியல்வாதிகளும் ராமர்பிள்ளையை ஏறத்தாழ ஒரு சூப்பர் விஞ்ஞான ஹீரோவாக்கி விட்டனர்.
 
ஆனால் இறுதியில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்று கூடி இது தொடர்பாக ஆராய்ந்தனர். ராமர் பிள்ளையை அழைத்து பொதுமேடையொன்றில் அவரது மூலிகைப் பெற்றோர் தயாரிப்புச் செயன்முறையை பலமுறை திரும்பத் திரும்பச் செய்யுமாறு கோரினார்கள். அவரும் சளைக்காது காண்பித்தார். விஞ்ஞானிகளின் அவதானிப்பின் இறுதியில் மூலிகைப் பெற்றோல் மட்டுமல்ல ராமர் பிள்ளையின் மோசடியும் வெளியானது என்பதுதான் உண்மை.
எப்படி என்கிறீர்களா?
 

ராமர் பிள்ளை கடைவதற்கு வைத்திருந்த மத்து வெகுதுல்லியமாக எடை பார்க்கப்பட்டது. பின்பு பெற்றோல் வெளியானதும் மீண்டும் அதே மத்து நிறுக்கப்பட்டது. அப்போது மத்திலே எடையிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சந்தேகத்திலே புதிய மத்து ஒன்று ராமர் பிள்ளைக்கு விஞ்ஞானிகளால் வழங்கப்பட்டு மீண்டும் மூலிகைப் பெற்றோல் தயாரிப்பைச் செய்விக்கச் சொல்லப்பட்டது. ஆனால் அந்தோ பரிதாபம் அந்தத் தடவை மட்டும் ஏனோ மூலிகைப் பெற்றோல் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
 
இப்போது புரிகின்றதா உங்களுக்கு...?
 
ஆம் ராமர் பிள்ளையின் மத்தினுள்தான் பெற்றோல் இருந்தது. ஆனால் அது வெகுகவனமாக அவரால் மத்தினுள்ளே அடிப்புறமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. மத்தின் அடிப்பகுதியின் வெளிப்புறமேற்பரப்பு தேன்மெழுகினால் செய்யப்பட்டிருந்தது. வேகமாக கடையும்போது சூடாகி மெழுகு உருகியதும் அதன்வழியாக மத்தினுள்ளேயிருக்கும் பெற்றோல் கசியும். இதுதான் மூலிகைப் பெற்றோலின் ரகசியம் அல்லது மோசடி!
 
மூலிகைப் பெற்றோல் புகழ் ஹீரோ ராமர் பிள்ளை சிறைக்கம்பி எண்ணும்  ஸீரோவான கதை இதுதான்.
 
இதை ஏன் கூறவேண்டியிருந்தது என்றால் அறிவியல் உண்மைகள் என்பது எத்தனை படிநிலைகளையெல்லாம் தாண்டி வரவேண்டிய விடயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்காககத்தான்.
 
இவ்வாறு சந்தேகத்திற்கிடமின்றிய பல்வேறு ஆராய்வு பரிசோதனை மீளா ய்வுகளுக்குப் பின்புதான் அறிவியல் அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அங்கனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களிலும் கூட நிகழக்கூடிய மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு காலத்தக்கக் காலம் மீள்பரிசீலனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
 

ஒருவர் எத்தனை பெரிய அறிவாளியாக விஞ்ஞானியாக இருந்தாலும் அறிவியல் விடயங்களை நினைத்தபடியெல்லாம் மாற்றியமைத்துவிட முடியாது. அதேவேளை நியாயமான ஐயம் கொண்டிருப்பவர் அதனைத் தெரிவித்து மறுபரிசீலனை புரியக்கோருவதற்கு மாமேதையாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்பதுதான் அறிவியலின் அழகே.
 
தனிப்பட்ட மனிதர்களின்  விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காத அறிவியல் உண்மைகள் கடைசிவரை மாறாமலே நிலையாக இருக்கும் என்று மார்தட்டுவதுமில்லை. அறிவியல் என்பதே காலத்திற்கேற்ப வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்ச்சியான செயன்முறைகள்தான்.
இப்போதெல்லாம் ஆன்மீக நம்பிக்கைகளை அறிவியலுடன் ஒப்பிட்டு விளக்கம் கூறுவதும் அல்லது முயற்சிப்பதும் ஒரு போக்காக மாறிவிட்டிருக்கின்றது. ஆனால் இரண்டிற்கும் அடிப்படையிலேயே முரண்பாடுகள் உள்ளதை மேலேயுள்ள விளக்கங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
 
கடந்த பல நூற்றாண்டுகளை கவனித்தால் பொதுவாக மதங்களை அறிவியலும் அறிவியலை மதங்களும் ஏற்றுக்கொள்ளாத போக்குகளே காணப்பட்டிருந்தன. முன்பெல்லாம் மதநிகழ்ச்சி நிரல்களிலே அறிவியலையும் அறிவியலாளர்களையும் ஏசுவது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது. ஆனால் காலப்போக்கிலே குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறுகளிலே அது மாற்றமடைந்துள்ளது.
 

ஒருவேளை அறிவியல் கண்டுபிடிப்புகளான ஒலிவாங்கிகள் ஸ்பீக்கர்களை கட்டிக்கொண்டு அறிவியலை ஏசுவது ஆன்மீகவாதிகளின் மனதை உறுத்தியதோ என்னவோ மெல்ல மெல்ல அறிவியலை ஏசுவதை விட்டு இப்போது நாங்களும் அறிவியலுக்குரியவர்கள்தான் என்று ஸேம் ஸைட் கோல் போடுமளவுக்கு வந்து விட்டார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேல்போய் அறிவியலை அறிமுகப்படுத்தியதே நாம்தான் என்று இத்தனை வருடங்களுக்கு முன்பே... நாங்கள் அதைக் கூறியிருக்கின்றோம்.. இதைக் கூறியிருக்கின்றோம் என்று சில வருடங்களைக்கூட குறிப்பிட்டுச் சிலாகித்து வேறு வருகின்றார்கள்.
 

ஆனால் அறிவியல் என்பது இவ்வுலகில் மனிதன் தோன்றி இயற்கையை மாற்றியமைக்க ஆரம்பித்தபோதே உருவாகிவிட்டது. அது படிப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து இன்றும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
 
இத்தகைய பண்புகள் கொண்ட அறிவியலை நாம் நமது மதவிழுமியங்களின் மகோன்னதங்களை சிலாகிப்பதற்கும் குறிப்பாக இலத்திரனியல் தொடர்பாடல் யுகத்தில் இருக்கும் நமது இளைய தலைமுறையினரை வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது கிட்டிய காலத்தில் நமக்கு நன்மையை அளிப்பது போலவும் வசதியாகவும் இருக்கலாம். ஆனால் இது நீண்ட காலத்தில்  எங்கு சென்று முடியும்..?
 

இன்றைக்கு சில அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நமது நம்பிக்கைகளுக்குத் தோதாக இருக்கலாம். ஆனால் இதே அறிவியல் நாளை நமது மதங்களின் அடிப்படை ஆணிவேரையே அசைக்கத்தக்கதான பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தலாம். அவ்வாறான நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்தால் இன்று நமக்கு வசதியாக இருக்கும் இதே அறிவியல் நாளை அதுவே நம்மால் விளக்கங்கள் கூறப்பட முடியாதளவுக்கு வளர்த்த கடாக்களாகி மார்பிலே பாய ஆரம்பித்துவிடும் அபாயம் நிச்சயம் உண்டு.
 
சுருக்கமாகக் கூறினால் இதுவரைகாலமும் உறுதியான நம்பிக்கைகள் எனும் அழகான தோணியிலே பாதுகாப்பாகவும் நளினமாகவும் பயணித்து வந்த ஆன்மீகத்தை அறிவியல் நிரூபணம் எனும் விசைப்படகிலே மாற்றிவிடுவதற்கு நம்மில் ஒரு சாரார் முயற்சித்துக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் இன்று நாம் இருக்கின்றோம். இந்த இயந்திர வேகத்திற்கு தாக்குப்பிடிக்குமா...?
 

இன்று இவ்வாறு கூறுவதை ஒருசாரார் ஏற்றுக்கொள்ள முடியாமல் கசப்படையலாம்.   ஆன்மீகத் துரோகி முத்திரைகளைக்கூட தயாராக வைத்திருப்பீர்கள்.
ஆனால் இதுதான் யதார்த்த நிலைமை என்பதை நன்கு சிந்தித்துப் பார்த்தால் விளங்கிக் கொள்வீர்கள். யதார்த்தங்கள்  பல சமயங்களில் படுகசப்பானதாகவே இருப்பதுண்டு. ஆனாலும் இனிப்பான பொய்களை விட அவை எவ்வளவோ சிறந்தவை என்பதை மறந்துவிடவேண்டாம்.
 
இறுதியாக ஒரு தகவல்:
 

 
2009 ஜனவரியில் கிளிநொச்சி வீழ்வதற்கு வெகுகாலத்துக்கு முன்பு 'புலிகள் தோல்வியடையும் நிலையிலே இருக்கின்றார்கள்' என்று கூறிய சில விமர்சகர்களை தமிழினத் துரோகிகள் என்று இழிவாகக் கூறினார்கள், நமது தமிழினக் காவலர்கள் பலர்.
 
இன்று அவர்கள் என்ன சொல்வார்கள்...?
 
யதார்த்தத்தை சொல்பவர்களெல்லாம் துரோகிகள் என்றால் அதைச் சொல்பவர்களும் சேர்ந்து தோற்றுப்போகும்வரை இந்த "துரோகிகள்" காத்திருக்கத்தான் வேண்டும்.
 
-Jesslya Jessly

No comments:

Post a Comment