Thursday, May 16, 2013

சோசலிஷம் எதற்காக? : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


 
 
 
 
Albert-Einstein
பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
 
 
 
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல.
எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை.
 
 
அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால
 
 
சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.
இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.
 
 
இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.
 
 
மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன்.
 
 
என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”
 
 
ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?
 
 
இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.
 
 
மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.
எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன.
 
 
இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.
 
 
 
மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது.
 
 
 
மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.
மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.
என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.
 
 
இன்றைய மனித சமூகத்தின் கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
 
 
இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
 
 
தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.
 
 
 
தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.
 
 
 
எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.
 
சோசலிஷம் எதற்காக?
 
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
 
தமிழாக்கம்: சிவலிங்கம் மு.
 
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]
 
Thanks : Inioru.com

No comments:

Post a Comment