வகாபிசம்
அல்லது சலாஃபியிசம் என்று அழைக்கப்படும் சுன்னி இசுலாமியக்
கடுங்கோட்பாட்டுவாதிகளின் பிறப்பிடம் அரேபியத் தீபகற்பம். பதினெட்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்த முகம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வகாபிசம்
எனும் இந்த மதப்பிரிவு.
மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும்
கஞ்சிக்கே வழியில்லாத பொருளாதாரமும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில் நம்மூர்
பாளையக்காரர்கள் போல கும்பல் கும்பலாய்ப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இதில் திரிய்யா எமிரேட் எனப்படும் பகுதியின் இளவரசரான முக்கம்மது இப்னு சவூத்தோடு
கைகோர்க்கும் வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை அடிப்படையாக வைத்து இசுலாமிய
நாடு ஒன்றை உருவாக்க முனைகிறார்.
1744ல்
திரிய்யா எமிரேட் சவுதி அரசானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச்
சண்டைகளில் இறங்குகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவிய தர்ஹா வழிபாடு உள்ளிட்ட
பல்வேறு நாட்டுப்புற இசுலாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக்
கட்டுகிறார்கள். சவுத்தின் அதிகாரம் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன்
சாம்ராச்சியத்தின் எகிப்திய தளபதியினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான
அரசாட்சியின்றி சவுத் வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு
ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும்
செய்கிறார்கள்.
முதலாம்
உலகப் போரின் சமயத்தில் நேசநாடுகளுக்கு (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) எதிரணியான
அச்சுநாடுகளோடு (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) இருக்கிறது துருக்கியை மையமாகக்
கொண்ட ஒட்டோமன் பேரரசு. இந்நிலையில் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அரேபிய
பகுதியைச் சேர்ந்த குட்டிக் குட்டி பாளையக்காரர்களில் சிலர் ஒட்டோமன்
சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கிலாந்தை ஆதரிக்கின்றனர். அதில்
முதன்மையாக இருக்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவருக்கு துணையாக
நின்றது வகாபிய அடிப்படைவாதத்திற்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர்.
வஹாப்
மற்றும் சவூத் குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை பரஸ்பர திருமண பந்தங்களின்
மூலம் இணைந்துள்ளன – இவர்கள் தாம் சவுதி அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து
அதிகாரம் செலுத்துகிறார்கள்.
மேலும் விரிவான வாசிப்புக்கு
20ம்
நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து
பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிடையே அதைக் கைப்பற்றும் நாய்ச்சண்டை மூள்கிறது. இதில்
சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவின் காலில் சரணாகதியடைகிறது. எண்பதுகளில்
ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டியடிக்க நேரடியாக அமெரிக்காவால்
உருவாக்கப்பட்ட முஜாஹித்தீன் குழுக்களுக்கு அமெரிக்க உத்தரவின் படி, ஆள் பலம் முதல்
மத அடிப்படையிலான தத்துவ அடிப்படை வரை வழங்கியதும் இசுலாமிய மதவெறியையும்
ஊட்டியதும் சவுதியைச் சேர்ந்த வகாபிகளே.
மட்டுமின்றி,
அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக்
போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய செல்ல
ரவுடியாக செயல்பட்ட இசுரேலுக்கும் சவுதி நேரடியான நட்பு நாடாகவும் அடியாளாகவும்
விளங்கி வருகிறது. ஈரான், சிரியா, லெபனான் என்று எங்கெல்லாம் அமெரிக்க
ஏகாதிபத்தியத்திற்கு அடியாட்களும் கூலிப்படையும் தேவையோ அங்கெல்லாம் முன்னின்று
உதவிக்கு வருவது சவுதி அரசும் அதன் வகாபிய தத்துவமும் தான்.
உலகெங்கும்
இசுலாம் அல்லாத மக்களிடையே எழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நிறுவனமயமாக்கி
நீர்த்துப் போகச் செய்ய என்.ஜி.ஓக்களை அமெரிக்கா நம்பியிருக்கிறதென்றால்,
இசுலாமியர்களை அரசியல் ரீதியில் காயடிக்க சவுதி வகாபியம் உதவி செய்கிறது. சவுதியில்
உள்ள எண்ணெய் கிணறுகளில் நேரடியாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது என்றால், அவற்றில்
பங்குகளைக் கொண்டிருக்கும் ஷேக்குகள் தங்கள் வருமானத்தை முதலீடு செய்வதும்
அமெரிக்காவில் தான். அமெரிக்கப் பங்குச சந்தையில் மட்டுமின்றி, வால்வீதி (Wall Street) யின்
முக்கியமான நிதிமூலதன வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற்
கழகங்களின் பங்குகளிலும் ஷேக்குகள் தங்கள் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள்.
ஒருவேளை
இராணுவ ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடையுமானால்
அது அரபி ஷேக்குகளையும் தன்னோடே பாதாளத்திற்குள் இழுத்துச் சென்று விடும். வேறு
வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள் இருவரின் நலனும் பிரிக்கவொண்ணாதபடிக்கு
பரஸ்பரம் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.
ரூபர்ட்
முர்டோச்சின் ஸ்டார் குழுமத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகெங்கும் அமெரிக்கா
நடத்தும் இசுலாமிய நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சாதகமாக
கருத்துப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆதரவான பொதுக்கருத்தைக் கட்டமைப்பது இந்த
ஸ்டார் குழுமம் தான். இதில் பிரதான பங்குதாரர், சவுதி இளவரசர். அந்த வகையில்
இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலமாக சித்தரிப்பதற்குத் துணை போகும் சவுதி
ஷேக்குகள், மறுபுறம் தூய இசுலாம் எனும் பெயரில் வகாபியிசத்திற்கு ஸ்பான்சர்
செய்கிறார்கள்.
உலகின்
எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் இசுலாமியச்
சடலங்களிலிருந்து வழிந்தோடும் குருதியில் சவுதி அரசுக்கும் பங்கு கிடைக்கிறது.
அந்தப் பங்கிலிருந்து கிள்ளிக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான டாலர்களில் தான்
வகாபிய மதரஸாக்களும் பள்ளி வாசல்களும் கொழிக்கின்றன. நமது ஜெய்னுல்லாபிதின்கள்
மஞ்சக்குளிக்கிறார்கள்.
எண்பதுகளில்
பாகிஸ்தானில் முஜாஹித்தீன்களை அறுவடை செய்ய அமெரிக்கா உருவாக்கிய மதரஸாக்கள் இன்று
அதற்கு தலைவலியாக உருவெடுத்திருப்பதாக சிலர் கணிக்கிறார்கள். ஆனால், தன்னால்
உருவாக்கப்பட்ட இந்தக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் நடவடிக்கைகளையே நாகரீக
உலகத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்து அதையே தனது ஏகாதிபத்திய இராணுவ
நடவடிக்கைகளுக்கான நியாயமாகவும் அமெரிக்கா முன்னிருத்துகிறது. இந்த மேட்ரிக்ஸ்
உலகில் அமெரிக்க ஹீரோ தான் இசுலாமிய பூச்சாண்டியின் கர்த்தா. அந்தப்
பூச்சாண்டியின் சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தனது போர் நடவடிக்கைகளை
நியாயப்படுத்த அமெரிக்கா வைத்திருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு.
இந்தப்
பின்னணியில் வைத்துத் தான் உலகெங்கும் விஷம் போல பரவிவரும் வஹாப்பியத்தை நாம் ஆராய
வேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட வஹாபிய
அடிப்படைவாதிகள் இசுலாமியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குப்
போராடுவதில்லை. கோகோ கோலா, டிஷ் ஆன்டனா, உலகமயமாக்கம் ஆகியவை குறித்து இசுலாம் என்ன
சொல்கிறது என்று கூறுவதில்லை. தூய இசுலாமியர்கள் இப்படி சைத்தான் தனமான கேள்விகளைக்
கேட்பதும் இல்லை.
கடுங்கோட்பாட்டுவாத
நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப்
போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப்
போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக
ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒருபக்கம்
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகள் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தும்
பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஜெய்னுல்லாபிதின்
போன்றவர்கள் முன்னின்று அதைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்தக் கடுங்கோட்பாட்டுவாத
வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல்
அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.
பீ.ஜே
தளத்தில் வெளியாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கான எதிர்வினையில் தொனிக்கும்
காட்டுமிராண்டித்தனத்தை அவதானித்திருப்பீர்கள்.
இது போன்ற காட்டுமிராண்டித்தனமான
அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி
டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது.
இதன் விளைவுகளை பீ.ஜே எதிர்கொள்ளப் போவதில்லை – சாதாரண உழைக்கும் வர்க்கத்து
இசுலாமியர்கள் தான் எதிர்கொள்ளப் போகிறார்கள். இந்தியாவில் இந்து பயங்கரவாதம்
தன்னளவிலேயே ஒரு பாசிச அரசியல் அடிப்படையைக் கொண்டிருந்தாலும், மேலதிகமாக சாதாரண
உழைக்கும் மக்களிடம் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித் தரும் வேலையை பீ.ஜே
போன்றவர்கள் செய்கிறார்கள்.
ஆதிக்க
சாதியில் பிறந்த ஜனநாயகவாதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை
நிகழும் போது அதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஒரு ஜனநாயகவாதி என்கிற வகையில் அது
தான் அவர்களின் முதன்மையான கடமை. அதே போல் இசுலாமியர்களில் கொஞ்சமேனும்
ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் முன்னின்று பீ.ஜே உள்ளிட்ட
கடுங்கோட்பாட்டுவாதிகளையும், ஷரியத் சட்டத்தையும் எதிர்க்க வேண்டும். இசுலாமிய மத
அடிப்படைவாதத்தால் வெட்டி வீழ்த்தப்பட்ட ரிசானாக்களின் தலைகளுக்கு அது தான் நாம்
கொடுக்கக் கூடிய நேர்மையான பதிலாக இருக்க முடியும்.
ஆனால்
ஜைனாலுபிதீன் போன் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் இசுலாமியராக பிறந்து ஷரியத்தையும்,
கடுங்கோட்பாட்டு வாதத்தையும் எதிர்க்கும் இசுலாமியர்கள் மிகக் குறைவு. இதுதான்
தவஹீத் ஜமாஅத்துக்களின் பலம். இந்நிலையில் பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும்
மனுஷ்ய புத்திரன் வெளிப்படையாக இவர்களை மட்டுமல்ல இவர்கள் புனித ஜல்லி அடிக்கும்
இசுலாமிய மத பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கிறார். அதுதான் அவர் மீது இவர்கள்
கொள்ளும் கொலைவெறிக்கு அடிப்படை.
நாம்
மனுஷ்யபுத்திரனை ஆதரிப்பதோடு குறிப்பாக இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக
தவஹீத்தையும், பிஜேவையும், ஷரியத்தையும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம்.
இல்லையெனில்
இசுலாமிய மக்களை ஒரு இருண்ட காலத்தில் மூழ்க வைத்து ஷரியத்தின் பெயரில் அவர்களை
ஆயுள் கைதிகளாக்கி தொடர் விளைவாக இந்து மதவெறியர்களை மனங்குளிர வைக்கும் ஆபத்திற்கு
நீங்கள் துணை போனதாக வரலாறு உங்களை கேள்வி கேட்கும்.
இசுலாமிய
நண்பர்கள் வெளிப்படையாக பேச வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நட்புடன்
முன்வைக்கிறோம்.
பின்குறிப்பு:
1.
இந்தப் பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பின், அவர்கள் நன்றி
தெரிவிக்க வேண்டியது ஜெய்னுலாபிதினுக்கே! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
2.
‘விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக
சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று பி.ஜே உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களும் அமைப்புகளும்
எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், ரிசானா விவகாரத்தில் ‘நாங்கள்
பயங்கரவாதிகள்தான்’ என்று பி.ஜெயினுலாபிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய மதவாதிகள்
வெளிப்படையாகக் கூவுகின்றனர். இவர்களைக் கண்டிக்காமல் விஸ்வரூபத்தை மட்டும்
எதிர்க்க முடியுமா?
Thanks : Olirumpaathai
No comments:
Post a Comment