Thursday, February 14, 2013

சுஜாதா : சிறுகதை


 
 
என் முதல் தொலைக்காட்சி அனுபவம்

 
 
ஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்.ஐ.டி’யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.

ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’

‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்… அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’

‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றே… எலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’

‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.

‘‘அவர் வந்தா கேட்டுருவமே.

பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமே… ஆள் எப்படி?’’

‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு. சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களே… அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’

‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’

‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.

ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.

‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.

‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. ஏ.எம்.ஐ.இ. மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’

‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’

‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’

அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’

‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’

‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’

‘‘எப்படி இருக்கும்?’’

‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’

ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.

‘‘அண்ணாசாமி… என்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’

‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’

‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’

‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஈ ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.

‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’

‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறா… அம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’

‘‘சேச்சே… அதெல்லாம் இல்லை!’’

‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’

‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்�
��ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’

‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.

‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’

‘‘இதா&ன வேணாங்கறது. சில்றை எத்தனை… கரெக்டா சொல்லுமேன்.’’

‘‘ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’

‘‘பொம்மை தெரியுமா?’’

‘‘கட்டாயம்.’’

ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’

‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’

எம்.ஐ.டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.

‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’

நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.

ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.

அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்க… சம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள். ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.

‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.

எனக்கு உட&ன சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.

‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’

‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.

ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் ஐ.எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.

என்னவோ சத்தங்கள் கேட்டன.

இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்க… விந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமி ‘பக்கல நிலபடி’ பாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்’ வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.

‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’

ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்… முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’

‘‘அதுல பொம்மை தெரியுமா?’’ என்றான் ரங்கு.

‘‘ஆமா.’’

‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா&ன சொல்றே?’’

‘‘ஆமா…’’ என்றேன்.

‘‘டி.வி. ஸ்டேஷ&ன இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையா… நீ என்னடா சொல்றே?’’

‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.

அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லை… இது முழுக்க நா&ன அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா&ன சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’

நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.

‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’

ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’

‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல். சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’

நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.

‘‘முதல்ல அது என்ன பெட்டி… காட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’

அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.ஏ. தெரியுமா?’’

‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’

‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’

சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.

தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.

‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.

சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.

நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.

தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்… அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.

‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’

ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.

‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.

‘‘என்ன அண்ணா… டி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’

அண்ணாசாமி, ‘‘நம்பாதாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.

‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமே… துணி உலத்தவா?’’

‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.

அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’

‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் ஏரியல் மாதிரி.’’

‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’

‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&ன?’’

‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’

‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.

ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.

‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.

‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங்களே… உடன வாங்க எங்காத்துக்கு.’’

‘‘என்ன தெரியறதா?’’

‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’

‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம். மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.

‘‘சம்பா டியர்… திருப்பு திருப்பு!’’ என்றார்.

அவள் ‘‘தெரியறதா… தெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.

‘‘நிறுத்து… நிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.

‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’

‘‘பஜ்னுதான் இருக்கு… ஆனா, மூஞ்சி தெரியறது.’’

‘‘டி.வியே தெரியாதுன்னிங்களே… உங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.

நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.

‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆக… போகப் போக…’’

மேலேயிருந்து சம்பா, ‘‘போருமா… இன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.

‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.

சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.

அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.

‘‘என்ன ஓய்… எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’

‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.

‘‘என்ன ‘டா’வா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’

‘‘என்ன வண்டவாளம்…
அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’

சம்பா, ‘‘போருமே… போருமே…’’ என்றாள்.

‘‘நான் யார்றா? ரங்கு… சொல்றா நான் யாருன்னு!’’

‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’

‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.

‘‘நான் யாரு… சொல்றன். இதே சம்பா, இதேசம்பா… எனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமா… நான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’

அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!

‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரையும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா… காட்டிட்டா… போடா!’’ என்றார்.

கடைசி செமஸ்டருக்கு எம்.ஐ.டிக்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.

அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராபகேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வியாக இருக்கலாம்’’ என்றார்.

ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.

 

Tuesday, February 12, 2013

மாவீரன் மருத நாயகம் :



 
 
 
 
 

 இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர். அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?
 
 
 
அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.
 


 ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர். கோழையாக இருந்தவர்கள், நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு. அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ? இனியாவது விழிக்குமா வரலாறு ?



மேலும் இவரை போற்றும் விதமாக மதுரை விமான நிலையதிற்கு இவரது பெயரை வைக்குமா அரசாங்கம்? இனி இவரது சாதனைகளை பார்ப்போம்.



சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம்பிறந்தார். மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.  இவர் பிறவி முஸ்லிம். இதை பல நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.



வளரும் பயிரும், துடிப்பான தொடக்கமும்:



சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.மருத்துவர், தையல் தொழிலாளி,படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது. தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!




பிரெஞ்சுப் படையின் ஆயுதம்:



பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப் யார் ?


ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.



ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்:


ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
 
 

வீரமும் – பரிசும்:


மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!


அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது.


விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.



மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.



ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.



இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர். இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.



மனம் மாறிய மருதநாயகம்:
 


திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும்,விடுதலை உணர்வையும் தூண்டியது!
 


மதுரைப் போர்:


முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.



தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.



ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார். பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.



தந்திரம் & வஞ்சகம்:
 


ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!



இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!



மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.



போரில் உறுதி:
 

கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.



இறுதி யுத்தம்:
 


ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.



ஹைதர் அலியின் உதவி:
 


முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore) பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.



சீறினார்… மோதினார்:
 


உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.


தந்திரம்:
 
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.


 
சூழ்ச்சி வென்றது:
 

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.


 
விசாரணை:
 

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.



மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலேயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.


தூக்குக் கயிறை முத்தமிட்டார்:


15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!



அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார். மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை.



தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.



இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே, மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.


தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!



 மருதநாயகம் அடக்கஸ்தலம்:
 


அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி (வீரமரணம்) மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?
 
Thanks: FB of KTP

Friday, February 8, 2013

கடிதங்கள் கூறும் கதை :





    


     அரச திணைக்களங்களில் நிகழும் ஒழுங்கீனங்கள் ஒருங்கிணைப்பின்மை பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். 


                    ஆனால் அவற்றின் பாதிப்பின் இலக்காக நாம் இருக்கும்போதுதான் அதன் வலியை முழுமையாக உணரமுடியும் அல்லவா? வலி, ஆச்சரியம், பரிதவிப்பு ஏன் சிலவேளைகளிலே பெரும் நகைப்புக்கூட ஏற்பட்டிருக்கும்.

           
              அப்படியோர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அது என்ன என்பதை தயவு கீழே தரப்பட்டிருக்கும் இரு கடிதங்களிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.


                திருகோணமலையை சேர்ந்த என்னுடைய ஆசிரியர்களிலே ஒருவர் நீண்டகாலமாக மூதூர்  வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அன்றைய கால கடல்வழிப் போக்குவரத்துச் சிரமங்களால் சோர்ந்துபோன அவர், திருகோணமலை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெறுவதற்குத் தீர்மானித்தார்.

            
            இதற்காக  அன்றிருந்த வடக்கு-கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி எழுத்து மூலம் இடமாற்றம்கோரி விண்ணப்பித்திருந்தார்.

அவரது விருப்பப்படியே இடமாற்றம் கிடைத்தது.

                திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து (அப்போது அது பிராந்தியக்கல்வி அலுவலகம் என்ற பெயரிலே இருந்தது) இடமாற்றக் கடிதமும் அனுப்பப்பட்டது.

(மேற்படி ஆசிரியரின்  சங்கடங்களைத் தவிர்க்க  அவரது பெயர், விபரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.)




 
 
                       'இதிலே என்ன புதுமை உள்ளது?' என்று நீங்கள் அவசரப்பட்டு விடாதீர்கள். இதோ வருகின்றது அதன் பின்னர் நிகழ்ந்த விடயம்.


                       அந்த ஆசிரியர் புதிய பாடசாலைக்குச் சென்று கடமையயேற்று சரியாக இருவாரங்கள் கழித்து  மாகாணக்கல்வி அமைச்சிலிருந்து அவரது வீட்டு முகவரிக்கு தபாலிலே வந்து சேர்ந்தது இப்படி ஒரு கடிதம் :

(திகதி, விடயம் இரண்டையும் கவனியுங்கள்)








நண்பர்களே,  இது எப்படியிருக்கு?



- Jesslya Jessly