Sunday, July 21, 2019

ஒரு தாயின் மறைவு








தன் வயிற்றில் சுமக்கவில்லை என்பதை  தவிர ஏறத்தாழ தனது மகனாகவே என்னை வரித்து அன்பு காண்பித்து வந்த ஒரு பெண்மணி நேற்றைய தினம் மரணித்து விட்டார்.

நிபந்தனையில்லாத அன்பை எப்போதும் என் மீது சொரிந்த அந்தப் பெண்மணி இத்தனை விரைவாக மறைந்துவிடுவார் என்று எதிர் பார்க்கவில்லை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரைப்போய்ப் பார்த்து அன்பு மழையில் நனைந்து திரும்புவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன். இருந்தும் அவரது இறுதி நாட்களில் சுகவீனமுற்று வைத்திய சாலையில் இருந்தைக்கூட அறியாதவனாக மரணச் செய்தியை மட்டுமே பெறுபவனாக இருந்தது இப்போதும் குற்றவுணர்வின் தீயில் வைத்து என்னை வாட்டுகின்றது!

அவரது பெயரைக்கூட மரணச் செய்தி நோட்டீஸில் படித்துத்தான் நான் அறிந்த கொண்டேன்.  திருமதி அன்னப்பிள்ளை அழகுராசா என்ற  இயற்பெயருடைய அவரை 'கங்குவேலி அக்கா' என்றுதான் நான் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை அழைப்போம்.

இத்தனை முக்கியத்துவம் மிக்க பெண்மணியின் இறுதிச்சடங்குக்கு நான் வேண்டுமென்றே தாமதித்து சென்றேன். அவரை உயிரோடு பார்த்துப்பழகிய என்னால் ஒரு படுக்கையில் பிணமாக பார்க்க முடியாது என்பதுதான் அதற்கான காரணம்.

கங்குவேலி மயானத்தில் அவரைப்புதைத்த பின்பு, சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த மாலையில் வயல்வெளியினூடே தனியாக மோட்டார் சைக்கிளில் திரும்புகையில், 'இது யானைக்காடு... நேரத்துக்கு போய்ச் சேர்ந்திடணும்' என்று முன்னம் ஒருமுறை இதே கங்குவேலிக்கு அக்காவை பார்க்கச் சென்றிருந்தவேளையில் கங்குவேலி அக்கா கூறியது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது!.

சென்று வாருங்கள் கங்குவேலி அக்கா!

-Mutur Mohammed Rafi

Thursday, February 8, 2018

குறும்படம்

சிறுகதை எழுத்தாளரான நண்பர் மூதூர் மொகமட்ராபி முதன் முதலாக குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

கதைகள் எழுதுவது எத்தனை சுலபமான வேலை என்பது படப்பிடிப்புக்காக குழுவினரை ஒன்றுசேர்க்கும்போதே தனக்குப் புரிய ஆரம்பித்து விட்டதாகவும்  குழுவினரை வைத்து படப்பிடிப்பை நடாத்துவதற்கு தயார்படுத்துவதை க்யூப் எனப்படும் நிறங்களை ஒன்று சேர்க்கும் விளையாட்டுக்கு ஒப்பிட்டிருந்தார்.

படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று வந்தால் குறித்த தினத்தில் நடிப்பவருக்கு நேரமிருக்காது. அவருக்கு நேரமிருந்தால் ஒளிப்படக் கலைஞருக்கு வேளை இருக்காது. இருவருக்கும் வேளை வந்தால் குறித்த தினத்தில் வெளிச்சம் போதாதிருக்கும் அல்லது அனுமதி இருக்காது. இப்படியே பலநாட்கள் வெட்டியாக கடந்து கொண்டிருந்த காரணத்தால் அந்தவேளையில் தனது கோபத்தையெல்லாம் சேர்த்து குறும்படம் என்ற பெயரில் ஒரு சிறுகதையை எழுதியதாகவும் கூறினார்.





குறும் படம்
 
 
 
 


தியம் பன்னிரண்டு மணியளவில் நானும் நேசனும் வீடியோ கேமரா சகிதம் போஸ்ட் ஒபிஸிற்கு முன்னால் போய் இறங்கினோம்.

அந்தத் தெரு அதிக சனநடமாட்டமில்லாமல் இருக்க மேற்கு வானம் லேசாக இருட்டியிருந்தது.

'மழை வந்தால் பரவாயில்லையா, ஆதில்?' என்றவாறு கேமராவின் உறையைக் கழற்றி ஸ்டேண்ட்களை பிரித்தான் நேசன்.

'ஸ்க்ரிப்ட்ல மழையெல்லாம் கிடையாது. மண்டையப் பிளக்கிற வெயில் என்றுதான் இருக்கு'

'சரி, மழை வர்றதுக்குள்ள முதல் ஸீனை எடுத்திரலாம். மற்றதெல்லாம் போஸ்ட் ஒபிசுக்குள்ளதானே நடக்குது..'

'ஓமோம், ஆனா இவன் ரமீஸைக் காணல்லியே..?'

'பதினொன்றரைக்கே நிப்பேன் என்று பெரிசாப் பீத்தினானே.. இன்னும் என்ன செய்யிறானாம். பேசாம அந்த பாலசிங்கம் கேரக்டரை நீயே செய்திருக்கலாம்.. இவன எதுக்குடா போட்ட நீ?'

'நடிச்சிட்டே டைரக்ட்டும் பண்றது கஷ்டம்டா நேசன். தவிர, அந்த வயசாளி கேரக்டருக்கு அவன்தான் சரியா வருவான். ஆட்டோ வேற புதுசா வாங்கி வச்சிருக்காம் பாரு. விடலாமா? இல்லாட்டி அதுக்கு வேறயா அலையணும்'

'எதுக்கும் அவனுக்கு போனப் பண்ணு. மழை வந்திடப்போகுது..'

'இரு.. இரு, எப்பிடியும் வந்துருவான். பைக்கைத் தள்ளிட்டு போற கேரக்டருக்கு ஒரு சிங்களப் பொடியன கேட்டிருந்தமே. அவனைக் கூட்டிட்டு வரத்தான் போயிருப்பான்'

'அவன் எதுக்கு ஆதில்? மழை வந்திட்டா பைக்கை தள்ளிட்டு போறஸீன் இன்டைக்கே எடுக்கேலாது தெரியுமா?'

'அடப்பாவி, அதுக்குள்ள நீ கதையை மறந்திட்டியா? போஸ்ட் ஒபிசுக்குள்ள பாலசிங்கம் மெனக்கெடுற நேரம் பெக்ரவுண்ட்ல சனங்களும் அந்தச் சிங்களப் பொடியனும் நடமாடுறது தெரியணும். அப்பதான் பின்னால க்ளைமாக்ஸ்ல எல்லாம் பொருந்தி வரும் யோசிச்சுப் பாரு..'

'ஓ! அதை நான் யோசிக்கல்ல.. ஓகே அப்ப அவனைக் கூட்டிட்டே வரட்டும். அதுசரி, ஆட்டோ பொடியன் ரோல் யாரு செய்யிறது?'

'அதுக்கும் ரமீஸ்தான் பொறுப்பு. யாரையாவது இழுத்துட்டு வருவான்'

000



ரியாகப் பன்னிரன்டரைக்கு ரமீஸ் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான். ஒரு சிங்களப் பையனும் மற்றொருவனுமாக இரண்டு பேர் உள்ளே இருந்தார்கள்.

நான் கேட்டுக்கொண்டபடி தொள தொளவென்ற ட்ரவுசரும் சேட்டும் அணிந்து வந்திருந்தான் ரமீஸ். அதைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கிக் கொள்வதற்காக
நானும் நேசனும் மறுபுறம் திரும்பிக் கொண்டோம்.

'ரமீஸ், நீ இப்ப பாலசிங்கம். கொஞ்சம் அப்பிடியே ஆட்டோவுலருந்து இறங்கி நடந்து வா பாப்பம்' என்று நான் கூற சிறிது தளர்வாக நடந்து வந்து நின்றான். அது எனக்கு திருப்தியாக இருக்கவில்லை என்றாலும் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தேன்.

'ரமீஸ், நீ பிறவி நடிகண்டா!'

கேமராவுக்குள்ளால் அவனைப் பார்த்து கூவிய நேசன், கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கண்ணடித்தான்.

எல்லோரும் தயாரானதும் முதல் காட்சியை எடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யலானேன்.

முதலில் ரமீஸின் ஆட்டோவை போஸ்ட் ஒபிசுக்கு முன்னாலிருந்த வேப்பமரத்தின் கீழே நிறுத்தினோம். நேசனின் பைக்கை நுழைவாயிலருகே ஸைட் ஸ்டாண்டில் நிற்பாட்டிவிட்டு திறப்பை விட்டு வைத்தோம். சிங்களப் பையனின் கையில் ஹெல்மெட் ஒன்றைக்கொடுத்து கையில் கொழுவிக்கொள்ளச் செய்தேன்.

ரமீஸை ஆட்டோவுக்குள்ளே இருத்தி தோள்பைக்குள்ளிருந்த மேக்-அப் செட்டைத் திறந்தேன். அவனுடைய காதோர கேசத்துக்கு சிறிது நரை நிறம் பூசியபடியே, 'டேய் பாலசிங்கம், தலை நரைச்சிருந்தா மட்டும் காணாது.. ஒரு அம்பது அம்பத்தஞ்சுதாண்டின வயசாளி மாதிரி உன்ட பொடி-லேங்வேஜும் சரியா இருக்கணும் விளங்குதா?' என்றேன் நான்.

'சும்மாவே இவன் அப்பிடித்தானேடா இருக்கிறான். ரெண்டு வருசம் போனா மச்சானுக்கு மேக்-அப்பே தேவைப்படாது' என்றான் அருகிலிருந்த நேசன்.

'ஒதச்சனென்டா கேமராவோட போஸ்ட் மாஸ்டர்ர றூமுக்குள்ளபோய் விழுவடா மவனே. பாவம், படமெடுக்கிறீங்களேன்டு நடிக்க ஒத்துக்கிட்டா எல்லாருமாச் சேர்ந்து கலாய்க்கிறீங்களாடா..?' என்று காலை உயர்த்தி உதட்டைக்கடித்தான் ரமீஸ்.

'டேய் அடங்குடா! ஓவரா ஸீன் போடாம'

'சரி, ரெண்டுபேரும் கொஞ்சநேரம் சும்மாயிருங்க. ரமீஸ், எப்பிடிப் பாத்தாலும் நீதான மச்சான் படத்துக்கு ஹீரோ. என்ட அடுத்த ப்ரொஜெக்ட்லயும் நீதான். அதில நீ ஒரு யுத் தெரியுமா? ப்ரேக் டான்ஸ்லாம் வச்சிருக்கிறன்'

'யேசுவே, என்னால அதையெல்லாம் பாக்கேலாது.. கேமராவுக்கு வேறாளப் போட்டுக்க ஆதில்.' என்று நேசன் முகத்தை சோகமாக்கி மார்பில் சிலுவை கீற அவனை முறைத்தான் ரமீஸ்.

'நேசன் நீ ஒண்ணு செய்யிறியா.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் போய் அங்கருந்து போஸ்ட் ஒபீஸ ஒரு லோங் ஷொட் எடுத்திட்டுவா.. நேம் போர்ட் க்ளியராத் தெரியணும் ஓகே?'என்று அனுப்பிவைத்தேன்.

அவன் அகன்றதும், 'இஞ்ச பாரு ரமீஸ், நேசனை உனக்குத் தெரியுந்தானே.. அதையெல்லாம் ஸீரியஸாக எடுத்துக்காதே' என்றேன்.

'இல்லடா ஆதில், இவன் ஓவரா கலாய்க்கிறான். உனக்காகத்தான் பாத்திட்டிருக்கிறன். கொஞ்சம் சொல்லி வை' என்றான் ரமீஸ் சிறிது கோபத்தோடு.

இருவரையும் ஒருவாறு சமாதானப்படுத்தி எல்லோரையும் அடுத்த காட்சிக்குத் தயாராக்கினேன்.

நுழைவாயிலில்; நின்றிருக்கும் பாலசிங்கம் மோட்டார் சைக்கிளிலிருந்து திறப்பை உருவியெடுத்தபடி போஸ்ட் ஒபீசுக்குள்ளே நுழையும் காட்சியை படமாக்கினோம். முதல் தடவை ரமீஸ் கேமராவைக் கடைக்கண்ணால் பார்த்து சிரித்து விட்டான். இரண்டாவது டேக்கில் ரமீஸ் சரியாகச் செய்ய நேசன் தயாராகாமல் சொதப்பினான்.

ஒருவழியாக மூன்றாவது டேக் திருப்தியாகி எல்லோரும் ஆசுவாசப் பெருமூச்சுடன் நிமிர்ந்தால், 'எய் மாஸ்டர், மூட்ட ஹெல்மெட் துன்நெத்த' என்ற குரல்கேட்டு எல்லோரும் திரும்பினோம்.

அங்கு ரமீஸ் அழைத்து வந்த அந்த சிங்களப் பையன் புன்னகைத்தவாறு பின்னால் நின்றிருக்க எல்லோரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டோம்.

'அதானே? நானும் கேக்க மறந்திட்டன். பைக்கை வச்சிட்டு போறவருட கையில ஹெல்மெட் இருக்கணுமே ஆதில்?'

நான் முறைக்க, நேசன் 'பொத்திட்டு நடிக்கிறியா?' என்று சைகையால் ஏதோ ரமீஸுக்கு காண்பித்தான். உடனே அவன் சிங்களப் பையனைத் தோள்மீது கைபோட்டு தனியாக தள்ளிச் சென்றான்.

நானும் நேசனும் போஸ்ட் ஒபிசுக்குள்ளே எடுக்கவேண்டிய காட்சிகளுக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்யலானோம்.

மூன்று நாட்களுக்கு முன்பே அனுமதி கோருவதற்காக போஸ்ட் மாஸ்டரை அவரது அலுவலகத்தில் சந்திந்தோம். ஆளைப் பார்த்ததுமே நம்பிக்கை போய்விட்டது. பெருவிரலின் புறப்பக்கம் போலிருந்தது அவரது முகம். கொடுவாள் மீசை, கிருதா எல்லாம் வைத்து ஏறக்குறைய துப்பாக்கி இல்லாத சந்தனக்கடத்தல் வீரப்பனைப் போலிருந்தார். காகம் கொண்டு வந்து போட்ட மீன் தலையைப் பார்ப்பது போல இருவரையும் பார்த்தார்.

நல்லவேளையாக நேசனுக்கு ஒரு சித்தப்பா இருந்து தொலைத்தார். அவருடைய க்ளாஸ்மேட்டாக இருந்த தமயந்தி எனும் ஒரு பெண்மணி அங்குதான் வேலை செய்து வந்தார். எதேச்சையாக போஸ்ட் மாஸ்டரின் அலுவலகத்திற்குள் வந்த ஆன்ரி தமயந்தி எங்களைக் கண்டு பேசியதைப் பார்த்த ச.க. வீரப்பன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென அனுமதி தந்துவிட்டார். ஆனாலும் தன்னுடைய ஊழியர்களின் வேலைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடைஞ்சல் தராதபடி எடுத்தால் சரி என்ற நிபந்தனையோடு அரைமணி நேரம் மட்டுமே வழங்கியிருந்தார்.

'ரெடியா ஆதில்..? ரமீஸ் எங்கே?' கேமராவை ஸ்டாண்டில் வைத்து விட்டு கேட்டான் நேசன். மதியவேளை என்பதால் உள்ளே அலுவகத்தினுள்ளே வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தார்கள்.

'வெளியில மரத்தடியில நிக்கிறான்.. வந்திடுவான். நீ வா ஒருக்கா பிஎம்முக்கிட்ட சொல்லிட்டு வருவோம்' என்று அழைத்தேன்.
'ஐயோ அந்த வீரப்பனுக்கிட்டயா? வேணாம்டா ஆதில். அதான் அன்றைக்கு கேட்டாச்சே..?'

'இல்லடா, எதுக்கும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து எடுப்பம்' என்றேன் நான்.

'சரி, இரு போனை எடுத்திட்டு வாறன்'

இருவரும் அறைக்கதவை மெதுவாகத் தட்டி விட்டு மெல்ல உள்ளே சென்றோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி இருவரையும் தூக்கி வாரிப்போட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு பார்த்த வீரப்பன் அறையின் அலுமாரி இருக்கும் மூலையில் எங்களுக்கு முதுகைக் காண்பித்தவாறு தமயந்தி ஆன்ரியை அணைத்தபடி நின்றிருந்தார். நாங்கள் வந்ததைக்கூட கவனிக்காமல் இருவரும் ஒருவரையொருவர் தழுவியவாறு கண்கள் மூடி மெய்மறந்து நின்றிருந்தனர்.

அதைப்பார்த்ததும் நான் வெலவெலத்து வெளியே ஓடிவந்து விட்டேன். ஆனால் நேசன் சிறிது நேரம் கழித்துத்தான் வெளியில் வந்தான். அவனுடைய நமுட்டுச் சிரிப்பே அந்தக்காட்சியை நின்று நன்றாக ரசித்து விட்டு வந்திருக்கிறான் என்பதைக் கூறியது.

'என்ன கொடுமைடா நேசன்? இப்ப என்ன செய்யிறது?'

'சிவபூசையில நமக்கேன் கரடி வேலை? வா பேசாமப் போய் படத்தை எடுப்பம்'
நாங்கள் திரும்பிச் செல்ல நினைத்த கணத்தில், 'யெஸ் கமின்' என்ற கண்டிப்பான குரல் உள்ளிருந்து கேட்டது. வேறுவழியின்றி மீண்டும் அறைக்குள் நுழைந்தோம்.

இப்பொழுது அந்தப் பெண்மணி எதுவுமே நடவாதது போல எங்களைப்பார்த்து புன்னகைத்தபடி மேசையின் ஓரத்தில் நின்று ஒவ்வொரு பைலாக நீட்டிக் கொண்டிருக்க போஸ்ட்மாஸ்டரும் அவற்றில் சாவதானமாக கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்.

'யெஸ் போய்ஸ், பீ ஸீட்டட். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?' என்று அவர் வெகுகூலாக கேட்க, சற்று முன்பு நாங்கள் கண்டதெல்லாம் காட்சிப் பிழையோ என்ற சந்தேகமே வந்து விட்டது.

அறையை விட்டு வெளியே வந்ததும், 'யப்பா! இவர்தாண்டா ஆதில் ஒலக நாயகன்' என்றான் நேசன்.

000
 
 
பால் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பாலசிங்கமாக நடிக்கும் ரமீஸ் கவுண்டரின் முன்னால் நின்று முத்திரை வாங்குவதையும் கடிதமொன்றை பதிவுத் தபாலில் இடுவதையும் பலகோணங்களில் படமாக்கினோம்.
வெளியில் வந்த பார்த்தபோது மழைமேகங்கள் விலகி வெய்யில் எறித்துக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைத் தடையில்லாமல் தொடரலாம் என்ற சந்தோசத்தில் 'எடுத்த ஸீனெல்லாம் நல்லா வந்திருக்காடா நேசன்' என்று கேட்டான் ரமீஸ்.

'இதெல்லாம் ஒரு ஸீனாடா ரமீஸ்..? உள்ள பாத்தமே ஒரு ஸீன். அது ஸீன்! என்ன ஆதில்?' என்று கெக்கலித்துச் சிரித்தான் நேசன்.

'அப்படி என்னடா பாத்தீங்க?'

'அதெல்லாம் கேக்கப்படாது மிஸ்டர் பாலசிங்கம், பாத்துத்தான் தெரியணும்?'

'நேசன் நீ சும்மாவேயிருக்க மாட்டியா? ரமீஸ் இங்க பார், நீ வெளியில வந்தா பைக் இருக்காது. முகத்தில ஷொக் தெரிய அக்கம் பக்கத்தில தேடணும்.. ஓகே?'

'ஓகே, நான் ரெடி!'

'இரு, க்ளோசப் ஷொட்டுகளுக்கு மட்டும் மைண்ட் வொய்ஸ்ல ரெகோடட் டயலாக் இருக்கு. அது உன்ட பொக்கட்லருக்கிற போன்ல ப்ளேயாகும். அதுக்கேற்றபடி முகத்தை வச்சுக்கோ.. ஓவராக்ட் மட்டும் பண்ணிடாத சரியா?' என்றேன்.

அந்த காட்சி பிரச்சினையின்றி படமானது. ஆனால் ரமீஸுக்கும் ஆட்டோ ட்ரைவராக நடிக்கும் பையனுக்குமிருந்த அடுத்த காட்சி உயிரை எடுத்தது.
'நீங்களாண்ண டைரக்ட் பண்றீங்க..?' என்று கேட்டான் அந்த ஆட்டோ பையன்.
அவனை ஒருதடவை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பார்த்தேன்.
அவனுக்கு மிஞ்சிப்போனால் பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. ஒரு காதில் தோடு மணிக்கட்டுகளில் ஏராளமான வண்ணப்பட்டிகள் அணிந்து கழுத்தில் பச்சையும் குத்தியிருந்தான். செங்கபில டீசேர்ட் அணிந்து தலை முடியை ஒருவிதமாய் கத்தரித்து பார்ப்பதற்கு மரங்கொத்தி போலிருந்தான்.

'ஓம், ஏன் தம்பீ?'

'இல்லண்ண, படத்தில லவ் சீன், பாட்டெல்லாம் வைக்கல்லயா?'

'வச்சுத்தான் இருந்தனான்.. அதுக்கு நடிக்கிறதுக்கு ஒரு அழகான ஆம்பிளை கிடைக்கல்லண்டு பிறகு கட் பண்ணிட்டன். நீங்க நடிக்கிறீங்களா?'

'போங்கண்ண பகிடி பண்ணாம.. ஒரு பைட் சீனாவது வச்சிருக்கலாந்தானே.. நான் கராத்தே பைட்லாம் நல்லா செய்வன். படத்தைப் பாத்திட்டு நம்ம பசார் பொடியன்கள்லாம் கேப்பாங்க. அதான் கேட்ட நான்'

'அப்பிடியா? அடுத்த படத்துல லவ்சீன், பைட், கார் சேஸிங்லாம் இருக்கு. இப்ப நான் சொல்றதை மட்டும் செய்வம்'

ஒரேயொரு வீடியோ கேமராவை வைத்துக்கொண்டு ஆட்டோவின் உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் நிறைய ஷொட்டுகள் மாற்றி மாற்றி எடுக்க வேண்டியிருந்த காரணத்தால் நிறைய தாமதம் ஏற்பட்டது. போதாதற்கு ஆட்டோ பையன் வேறு நான் சொல்லிக் கொடுப்பதை மனதில் வாங்காமல் நடிப்பிலும் உதட்டசைவிலும் சொதப்பிக் கொண்டேயிருந்தான்.

நேசனால் கேமராவைத் தனியாக சமாளிக்க முடியவில்லை. எனவே சிங்கள பையனையும் உதவிக்கு வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கோல்ஃப் விளையாட்டில் ஸ்டிக்குகளை சுமப்பவன் போல அவன் நேசனின் போன், கேமரா பாகங்களையெல்லாம் காவிக்கொண்டு பின்னால் திரிந்தான்.
அன்றைய நாளுக்குரிய படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் இரு ஸீன்கள் மட்டுமேயிருந்தன.

போஸ்ட் ஒஃபிஸ் அருகேயுள்ள நாற்சந்திவரையில் ரமீஸ் விரக்தியுடன் நடந்து செல்வதையும் அங்கு நின்று கடந்து போகும் பைக்குகளையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதையும் படம்பிடித்து விட்டால் அதற்கடுத்த காட்சியையும் முடித்துவிடலாம்.

'சந்திக்குப் போய் நிற்பமா, ஆதில்?'

'கொஞ்சமிரு, முதல்ல சணச பேங்க் பில்டிங் மொட்டைமாடிக்கு ஏறி டொப் ஆங்கிள் ஷொட்டை முடிப்பம். அதுக்குப் பிறகு டௌன் ஷொட்ஸ் எடுத்துக்கலாம்.. எடிட்டிங்ல மாத்திக்கலாம்'

'சரி, பரவாயில்லை. இதுவரைக்கும் எடுத்ததெல்லாம் தொடர்ச்சியாத்தான் வந்திட்டிருக்கு.. ம்.. இப்பிடிச் செய்தாலென்ன ஆதில்?'

'எப்பிடி?'

'ரமீஸ் போஸ்ட் ஒஃபீசுலருந்து சந்திக்கு வர்ரதை மேலருந்து ஸும் பண்ணி ரன்னிங்ல எடுப்பம். லோங் மிடில் ஷொட்டெல்லாம் அதுக்குப் பிறகு வரட்டுமே. அடுத்த ஷொட் க்ளோசப்பும் இருக்கல்லவா?'

'குட் ஐடியா நேசன், இங்கருந்து எடுத்தா யாரும் கேமராவைக் கவனிக்கவும் மாட்டான். நேச்சுரலாகவும் இருக்கும். அதுசரி, எங்கடா உன்ட புது அஸிஸ்டென்ட் அந்த சிங்களப் பொடியன்?'

'போனுக்கு பெற்றி போய்ட்டு. புதுசு மாத்திட்டு வரச்சொல்லி நாந்தான் கடைக்கு அனுப்பியிருக்கிறன்'

'பெறுமதியான போன் அது. அதை அவனை நம்பிக் குடுத்திருக்க.. ஏதாவது பண்ணிடப் போறான் கவனம்டா. அதுசரி, நல்ல ஆள்றா நீ, நடிக்கிறதுக்கு வந்தவனை எடுபிடிக்கு வச்சிட்டிருக்க. ஒரு கலைஞனை இப்பிடியெல்லாம் இன்ஸல்ட் பண்ணக் கூடாது தெரியுமா?' என்றேன் வேடிக்கையாக.

'ஓமடா, பைக்கைத் தள்ளிட்டு இன்னர் ஹாபர்
ரோட்டுல நடக்கிறவனெல்லாம் ஒரு கலைஞன்.. இதெல்லாம் ஒரு நடிப்பு? இத நானே செய்வனே'

'அப்பிடியா? ஓகே, இப்ப உன்ட கேமராவை பறிச்சு அவனுக்கிட்ட குடுத்திட்டு பைக்கை உன்ட கையில தர்ரேன் தள்ளுறியா?'

'இப்பவும் அவன் நம்ம ஷுட்டிங்கை படம் புடிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறான் தெரியுமா?'

'என்னடா சொல்ற?'

'நாந்தான் என்ட போனைக் குடுத்து ஒரு ஒரமா நின்டு நம்ம பண்றதையெல்லாம் ஒண்ணும் விடாம எடுக்கச் சொல்லியிருக்கன். மேக்கிங் ஒஃப் 'ஆயிரத்தில் ஒருவன்' எப்பிடி நம்ம ஐடியா?' என்று கொலரைத் தூக்கி விட்டுக்கொண்டான் நேசன்.

'எப்பிடிடா நேசன்? இது எனக்கே ஸ்ட்ரைக் ஆகல்ல பாரு. பேய்க் காய்டா நீ! உன்னாலதான்டா நம்ம டீமுக்கு பெரிய பேர் வரப்போகுது' என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன்.

'சரி, வா ஆதில் பில்டிங்ல ஏறுவோம்'

'ஒரு நிமிஷம் இரு நேசன், ரமீஸுக்கு ஷொட் மாத்தினதைப்பத்தி இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திட்டு வாறன்'

'சரி, அவன்ட பொக்கட்லருக்கிற போனை அவுட் ஸ்பீக்கர்ல போட்டா மேல நின்று கொண்டே குடுக்கலாம். சொல்லிட்டு கெதியா வா'

000
 
 
 
றுநாள் பிற்பகல் ஒன்றரை மணி.

இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்த காரணத்தால் காலை பத்து மணிக்குத்தான் இருவரும் எழுந்திருந்தோம். முதல் நாள் படப்பிடிப்பின் மிகுதிக் காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் போஸ்ட் ஒஃபீஸுக்கு முன்னால் ஒன்று கூடுவதாக உத்தேசித்திருந்தோம்.

நானும் நேசனும்தான் முதலில் வந்தோம். நாங்கள் வந்தபோது அந்தச் சூழல் ஏதோ வித்தியாசமாக சோகையாக இருப்பது போலத் தோன்றியது. ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை.

இருபது நிமிடம் கழித்து ரமீஸ் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.

'ஏய் என்னடா தனிய வர்றா.. அவனெங்க?'

'யாரு? நேத்து ஆட்டோ பொடியனா நடிச்சவனா?'

'உன் மண்டை, அவனுக்குத்தான் இனி ஸீன் இல்லியே. அந்த சிங்களப் பொடியனெங்கடா?

'அவனா? அவன் தங்கியிருக்கிற இடத்துக்கு போயிட்டுத்தான் வாறேன். காலையில பேக்கை எடுத்திட்டு எங்கேயோ போனானாம். என்று சொன்னான்கள்.. நான் நெனைச்சேன் ஒருவேளை இஞ்சதான் வந்திருப்பானென்டு. அப்ப அவன் இஞ்ச வரல்லியா?'

'யா அல்லாஹ்!' என்று நான் அப்படியே தலையில் கை வைத்து தரையில் குந்திவிட்டேன்.

நேசனின் முகத்தில் கடுகு வெடித்தது.

'ஆண்டவனே, இன்டைக்கு எடுக்கிற ஸீனெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும்தான் தெரியுமா உனக்கு? எல்லாம் கொம்பினேஷன் ஷொட்ஸ். இனி வேறாளையும் போடேலாது. கொன்டினியூட்டி மிஸ்ஸாகிரும்' புலம்பினான் நேசன்.

'சே! காலையிலயே நீ அவனுக்கிட்ட பேசியிருக்கலாமே ரமீஸ். சரி, அவனுக்கு நம்பர் இருக்குதானே? உடனே போனைப் போடு'

'அங்கேயே வச்சு அடிச்சுப் பாத்திட்டுத்தான் வாறேன். 'அடைய முடியவில்லை' என்று வருது. நீ வேணா அடிச்சுப்பாரு நேசன்'

'எனக்கு வர்ற கோவத்துக்கு..'

'கூல்டவுன் நேசன், சிலவேளை அவன் இஞ்சதான் பக்கத்துல எங்கேயாவது வந்து நிக்கிறானோ என்னவோ.. நேற்றும் இஞ்ச வேலை செய்யிற மிகிந்தபுர பெட்டையோட சிரிச்சுப் பேசிட்டிருந்தான். ரமீஸ், நீ ஒருக்கா போஸ்ட் ஒஃபிசுக்குள்ள போய்ப்பாத்திட்டு வா' என்று அவனை அனுப்பி வைத்தேன்.
சில நிமிடங்கள் கழித்து ரமீஸ் ஓட்டமும் நடையுமாய் திரும்பி வந்தான்.

'என்னடா அவன் இருந்தானா?'

'ஆதில் நீ சுணங்காம பைக்கை எடு. டேய் நேசன், நீ கேமராவையெல்லாம் எடுத்திட்டு ஆட்டோவுக்குள்ள கெதியா ஏறு பாப்பம்' என்று ஆட்டோவுக்குள் ஏறிக்கொண்டு ஸ்டார்ட் செய்தான் ரமீஸ். அவன் முகம் பேயறைந்தவன் போலிருந்தது.

'டேய் எங்கடா போற? லூசா உனக்கு?' வெடித்தான் நேசன்.

'டேய், அங்க நிலைமை சரியில்ல. மூடிட்டு ஏறு கெதியா!' என்று பதறினான் அவன்.

'டேய் ரமீஸ் நில்றா! என்னென்டு விசயத்தைச் சொல்றா முதல்ல' என்று நான் அவனைமறித்தேன்.

'அதுக்குள்ள வேலை செய்த ஒரு ஆன்ரியோட வீடியோ ஒண்ணு இரவு பேஸ் புக்ல வைரலாகியிருக்குதாம். அதைப்பாத்திட்டு அவ காலையில வீட்ல தூக்கில தொங்கிட்டாவாம். போஸ்ட் மாஸ்டரை பொலீஸ் அரஸ்ட் பண்ணியிருக்கு. அந்த வீடியோவை அப்லோட் செய்தவனை போலீஸ் தேடிட்டிருக்கிறாங்களாம். வாங்கடா முதல்ல இஞ்சருந்து போவம்' என்றான் ரமீஸ்.

-மூதூர் மொகமட்ராபி

Sunday, June 18, 2017

பிளாஸ்டிக் அரிசி : மூளையை அடகு வைக்கலாமா?

 
 
 
 
பிளாஸ்டிக் அரிசி
 
 
 
 
ன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி?” என்பது தான். அந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை, பிளாஸ்டிக் அரிசி குறித்து தகவல் கொடுக்க தனி தொலைபேசி இலக்கம் அறிவிப்பு என தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களை பீதிக்கு உள்ளாக்கின.

 
அது என்ன பிளாஸ்டிக் அரிசி? சமூக ஊடகங்களில் ஒரு காணொளிக் காட்சி பரவி வருகிறது. ஓர் இயந்திரத்தின் ஒரு முனையில் பிளாஸ்டிக் தாளை உள்ளிடுகிறார்கள். அப்படியே காமிரா நகர்ந்து செல்கிறது, அந்த பிளாஸ்டிக் தாள் பிரிந்து உடுட்டப்பட்டு அரிசி போல் சிறுசிறு துண்டுகளாக வெளிவருகிறது. இந்த இடத்தில் அது அரிசி தானா என்பதை உறுதி செய்ய காமிரா அதை நெருங்கிச் செல்லவில்லை. கழிவு பிளாஸ்டிக் தாளை பிளாஸ்டிக் துருவல்களாக மாற்றும் வேலை நடக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் அதை பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் தொழிற்சாலை என்ற தலைப்பில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிலோ அரிசி தோராயமாக 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை ரகம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கச்சா பிளாஸ்டிக் துருவலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகம். இதில் கலப்படம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு எத்தனை கிலோ அரிசி தயாரிப்பார்கள்? எளிமையான இந்தக் கேள்வி கூட எழுப்பப்படாமல் தான் அந்த காணொளிக் காட்சி ஊரெங்கும் உலா வருகிறது.


பிளாஸ்டிக் அரிசி என பரப்பப்படும் இந்த அரிசியை செயற்கை அரிசி என்று சொல்லலாம். உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரிசி தான் பிளாஸ்டிக் அரிசி என தூற்றப்படுகிறது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியிலிருக்கும் கார்போஹைட்ரேட் தான் உருளை கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளிலும் இருக்கிறது என்றாலும் நெல் அரிசியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சத்துக் குறைவானது. அதேநேரம் இன்று பீதியூட்டப்படுவது போல இந்த செயற்கை அரிசியை உண்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இந்தியாவின் பழைய பஞ்ச காலங்களில் உருளைக் கிழங்கும், மரவள்ளிக் கிழங்கும் தான் அரிசிக்குப் பதிலாக உணவாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.

ஏன் இவ்வாறு பீதியூட்டப்படுகிறது?
 
ஏனென்றால் அது தான் இதன் பின்னாலிருக்கும் அரசியல்.
 
ஊடகங்களில் பரபரப்பாக திரும்பத் திரும்ப காட்டப்படும் எதுவும் உண்மையாகத் தான் இருக்கும் எனும் பொதுப் புத்தி மிகக் கவனமாக உருவாக்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறித் தான் ஈராக்கின் மீது படையெடுத்தது அமெரிக்கா. ஒரு பேனாக் கத்தியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது  என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலின் கோடிக் கணக்கில் படுகொலைகளைச் செய்தார் என்று பரப்பட்டிருக்கிறது. அவ்வாறு எழுதியவர்களே பணம் வாங்கிக் கொண்டு தான் அவ்வாறு எழுதினோம் என்று வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் கோடிக் கணக்கில் மக்களை படுகொலை செய்தார் என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது ஊடகங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் நம்முடைய மூளையை கட்டுப்படுத்துகிறார்கள். அது தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

 
மரபணு மாற்றப் பயிர்கள் என்பது இன்று சாதாரணமாகி இருக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை உண்பதன் மூலம் உடலுக்கு எவ்வளவு தீங்கு நேர்கிறது? என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அவை எந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. தெளிவாகச் சொன்னால், மரபணு மாற்று பயிர்களுக்கு, விதைகளுக்கு எதிராக பேசினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அண்மையில் தெலுங்கானாவில் மரபு சார்ந்த மிளகாய் விதையை பரப்பினார் என்பதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஊடகங்களில் அந்தச் செய்தி போலி மிளகாய் விதைகளை விற்றவர் கைது என வெளிவந்திருக்கிறது. அது என்ன போலி மிளகாய் விதை? மரபணு மாற்ற விதைகளை பற்றி மக்களிடம் விழுப்புணர்வு செய்யக் கூடாது. பாரம்பரிய விதைகளை வைத்திருந்து விற்றால் கைது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் என்ன முடிவுக்கு வர முடியும்? முதலாளிகளுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதுவெல்லாம் லாபத்தைக் கொட்டிக் கொடுக்குமோ அவைகலெல்லாம் – அவைகளில் உடலுக்கு தீங்கு இருந்தாலும் – உலகில் நல்லவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும். ஏகாதிபத்தியங்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்காத எதுவும் – அவைகளில் உடலுக்கு நன்மை இருந்தாலும் – உலகில் கெட்டவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.


சில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது. மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது? அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? அவை என்னென்ன விதங்களில் உடலுக்கு தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது. படித்துப் பார்த்த பலர் புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவைகளை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான். இதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்? கேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவை பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு, புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்.


இதேபோலத் தான் அஜினாமோட்டாவுக்கு எதிரான பிரச்சாரமும். கரும்பு மரவள்ளிக் கிழங்கு ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு. இதன் வேதிப் பொருள் மோனோ சோடியம் குளூட்டமைட் என்பது. அஜினாமோட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஒரு வாசகம், ‘அதில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் தீங்கான பொருள் கலக்கப்பட்டிருக்கிறது எனவே அதை பயன்படுத்தாதீர்கள்’ என்பது தான். ஆனால் அஜினாமோட்டோவின் ஒவ்வொரு பாக்கெட்டிலும் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பெயர் தவறாமல் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது அஜினோமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பொருள் கலந்திருக்கவில்லை. அஜினாமோட்டோவின் பெயரே மோனோ சோடியம் குளூட்டமைட் தான் என்பதே அதன் பொருள். சாதாரண உப்பை பயன்படுத்தாதீர்கள் அதில் சோடியம் குளோரைடு எனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமானதோ அதே போலத் தான் அஜினாமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் கலந்திருக்கிறது என்பதும். இது உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உப்பு. சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு துணை உணவுப் பொருள். அளவோடு பயன்படுத்தினால் எந்தத் தீங்கும் இல்லை.


இப்படி உடல்நலம் எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலம் மக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதற்கு எளிமையான இன்னொரு எடுத்துக்காட்டு தான் உப்பு. சமையலில் சாதாரண உப்பின் பயன்பாடு முழுவதுமாக ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அயோடின் உப்பின் ஆதிக்கம் இருக்கிறது. அயோடின் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது என எண்ணி பயன்படுத்துகிறார்கள். இது எப்படி நடந்தது? இந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் அயோடின் குறைபாட்டுடன் இருக்கின்றன என்றொரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதைக் கொண்டே இந்தியாவின் மொத்த மக்களும் அயோடின் உப்பை பயன்படுத்துவதே நல்லது என்று பிரச்சாரம் செய்தார்கள். இன்று டாடா உட்பட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் அயோடின் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.


எல்லாம் இருக்கட்டும், பிளாஸ்டிக் அர்சியிலும், மைதாவிலும் அஜினாமோட்டோவிலும் என்ன ஏகாதிபத்திய ஆதாயம் இருக்கிறது என எண்ணுகிறீர்களா? பொதுவாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் பெயரில் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலிருந்து, விவசாய மானியங்களை ஒழிப்பது வரை எல்லா நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் தன்னுடைய நாட்டில் விவசாய மானியங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக இருப்பது சீனாவின் உற்பத்திப் பொருட்களே. உலகில் சீனப் பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு அது தன் எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்காக சீனம் சார்ந்த பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செயற்கை அரிசி, அஜினாமோட்டோ போன்றவை சீன உற்பத்திப் பொருட்களே.


இன்னொரு முக்கியமான அம்சமும் இதில் இருக்கிறது. பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகத் தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அது தற்போது திடீரென வேகம் பெற்றதற்கான காரணத்தை நாம் பதஞ்சலியோடு இணைத்துப் பார்க்க வேண்டும். மோடி பிரதமராக உருவாக்கப்பட்டதில் அதானிக்கு இருக்கும் தொடர்பைப் போலவே பதஞ்சலி நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு. மோடி பிரதமரானதற்கு பிறகு தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் வெகுவாக கவனம் பெற வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பதஞ்சலி அரிசி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. பதஞ்சலி அரிசி என்ற பெயரில் விற்கப்படும் அரிசிக்கான சந்தையை உறுதிப்படுத்தவே, பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் அரிசி குறித்த பீதி திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.


எனவே, நாம் நாமாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றி விடாமல் தடுப்பது மட்டுமே. நம்மைச் சுற்றி நிகழும் எதுவானாலும், முதலில் அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள அவை குறித்து பருண்மையாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தில் நடப்பவைகளை நாம் சரியாக உள்வாங்காமல் போனால் நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றுவதை நம்மால் தடுக்க முடியாமல் போகும்.
 
 
நன்றி : செங்கொடி

Monday, December 5, 2016

மூதூர் மொகமட் ராபிக்கு மீண்டும் முதலிடம்!





திருகோணமலை மாவட்ட இலக்கிய கலைப்பெரு விழாவும் பரிசளிப்பும் இன்றைய தினம் பிற்பகலில் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளைச்சேர்ந்த போட்டியாளர்களிடையே பாடசாலை மட்டத்திலும் திறந்த பிரிவிலுமாக நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழும் புத்தகப்பரிசுகளும் வழங்கப்பட்டன.



ஏற்கனவே திருகோணமலை பிரதேச மட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுகதையாக்கப் போட்டியில் (திறந்த பிரிவில்) முதலிடத்தைப் பெற்றிருந்த எனது நண்பரும் ஊக்குவிப்பாளருமான திரு. மூதூர் மொகமட் ராபி மாவட்ட மட்டப்போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Wednesday, November 23, 2016

'முயல்களும் மோப்ப நாய்களும்'





மூதூர் மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'முயல்களும் மோப்ப நாய்களும்' நூலின் அறிமுகவிழா கடந்த 14.11. 2016 திங்கட்கிழமை முழுநிலா நாளில் மாலை 4.00 மணியளவில் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. 

திருகோணமலையிலிருந்து வெளிவரும் 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் வாசக வட்டத்தின் ஏற்பாட்டில் திருகோணமலைநகராட்சி மன்றத்தின் பொதுநூலத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ந்த மேற்படி அறிமுக நிகழ்வுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரச ஊழியர்கள் உட்படஏராளமான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 
நிகழ்வை 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் ஆசிரியரும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. எஸ். ஆர். தனபாலசிங்கம் ஆசிரியர் தலைமை தாங்க வரவேற்புரையை பொதுநூலகத்தின் உதவி நூலகர் திரு.கே வரதகுமார் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் திருகோணமலை பொதுநூலகம் வெறுமனே நூல்களை இரவல் தருவதும் பின்னர் பெற்றுக்கொள்வதுமான நிறுவனமாக அன்றி இப்பிரதேசத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு மேலும் உறுதுணையாகச் செயற்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

நூலின் அறிமுகத்தை நிகழ்த்திய கவிஞர் ஷெல்லிதாசன், மூதூர் மொகமட் ராபியின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். 
 

சிறுகதை நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் வழங்கி வைக்க பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. ஏ.ஜெகசோதி பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை தனது பெற்றோர்களும் ஓய்வு பெற்ற அதிபர்களுமான திரு. ஏ.எம் புஹாரி மற்றும் திருமதி அம்ரா புஹாரி ஆகியோருக்கு நூலாசிரியர் வழங்கிக்கௌரவித்தார்.

மேற்படி நூல் மர்ஹும் ஏ. எச். என்சுதீன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்த காரணத்தால் அன்னாரது இளைய மகளும் கிண்ணியா வைத்தியசாலை ஊழியருமான திருமதி. ரிஸ்னா நஸீருக்கு வழங்கி வைக்கப்பட்டது. சபையோருக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

அதனையடுத்து நூலின் விமர்சனத்தைப் புரிவதற்காக திருகோணமலை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் திரு. எம். எஸ். எம். நியாஸ், சட்டத்தரணியும் எழுத்தாளருமான திரு. எம். சீ. சபருள்ளாஹ் மற்றும் ஆசிரியை திருமதி. எஸ். சந்திரகலா ஆகியோர் முறையே அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர்.

திரு. எம். எஸ். எம். நியாஸ் தனது விமர்சனத்தில், மூதூர் மொகமட் ராபி சமகாலப் பிரச்சினைகளின் மீது தனக்குள்ள  சமூகக் கோபத்தை கதைகளில்  காண்பித்திருப்பதாகக் கூறியதோடு  அவற்றை எளிமையாகவும் நுணுக்கமாகவும்  அவர் வடிவமைத்திருக்கும் பாங்கினை சிலாகித்துப் பேசினார். 
 
சட்டத்தரணி திரு. எம் சீ. சபருள்ளா உரையாற்றுகையில், கிரிக்கட் ஆட்டத்தில் தான் ரசிக்கும் இந்திய அதிரடித்துடுப்பாட்ட வீரர் வீரேந்திர  ஷேவாக்கின் அதிரடித் துடுப்பாட்டத்துடன் ராபியின் எழுத்து நடையை ஒப்பிட்டுப்பேசினார். தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் போதாதிருப்பதைக் குறிப்பிட்ட அவர், கையிலெடுத்தால் கீழே வைப்பதற்கு மனமில்லாது  ரசித்துப்படித்து முடிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் மொகமட்  ராபியின் கதைகள் இருப்பதாகக்குறிப்பிட்டார். அவர் இந்நூலை மிகவும் ரசித்துப் படித்ததாகவும் அவரின் கதைகள் பற்றி விரைவில் தனது முகநூலில் ஆழமான விமர்சனமொன்றை எழுதவிருப்பதாகவும் கூறினார்.

பெண் எழுத்தாளரான திருகோணமலை தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் ஆசிரியை  திருமதி. எஸ். சந்திரகலா, பொதுவாக இலக்கிய நிகழ்வுகளில் பெண்களுக்குரிய வாய்ப்புகள் போதியளவு ஆற்றப்படாததைக் குறிப்பிட்டு இந்நிகழ்வில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கவேண்டும் என்று கருதி தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திற்காக 'நீங்களும் எழுதலாம்' ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மொகமட் ராபியின் கதைகளை மிகவும் உணர்பூர்வமாக சிலாகித்துப் பேசினார். குறிப்பாக, கள்ள மௌனங்கள், விசுவரூபம் கதைகளைக் குறித்து சில சமூகத்தினரிடையே காணப்படும்  போலிப்புனிதம் காக்கும் இழிகுணத்தையும் அவற்றை விடுத்து கலந்துபேசி சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, நூலாசிரியரான திரு. எம். பீ. முகம்மது ரஃபி (மூதூர் மொகமட் ராபி) தனது ஏற்புரையில், நூல் வெளியீடுகள் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் விருப்பத்துடன் கலந்துகொள்வோரின் தொகை அருகிச் செல்லும்போக்கு குறித்துப் பேசினார். இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்து அமர்ந்திருப்பவர்களின் பெறுமதியான நேரத்தை வீணடிக்கும் அநாவசியமான சொற்பொழிவுகளையும் சம்பிரதாயங்களையும் விடுத்து மேற்படி நிகழ்வுகளை சுவாரசியமானதாகவும் காத்திரமானதாகவும் நடாத்த வேண்டுமென்றும் அவ்வாறு செய்தால்தான்  மறுமுறை அழைக்கும்போது ஆர்வமாக வர எத்தனிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், இளைய தலைமுறையினரிடம் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதில் பாடசாலை ஆசிரியர்கள் குறிப்பாக தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் சிறப்பான பங்களிப்பை புரியமுடியும் என்பதோடு இன்றுள்ள கைத்தொலைபேசி முகநூல் போன்ற நவீன சாதனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களுக்கூடாகக் கூட அவற்றினை பரந்தளவில் ஆற்றிட முடியும் என்றார்.

இறுதியாக, நன்றியுரையை நிகழ்த்திய சிரேஷ்ட இலக்கிய ஆர்வலரான திரு. வீ.ரீ. நவரெத்தினம் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுக்கும் உதவியோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தனது நூல் வெளியீட்டு அனுபவங்களை நகைச்சுவை தொனிக்கப்பேசி அதுவரையில் அமைதியாகவிருந்த சபையோரை சிரிப்பிலாழ்த்தி சிந்திக்க வைத்ததோடு நூல் அறிமுக நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
 
-Omar Mukthar

 
 

Friday, June 3, 2016

நூல் விமர்சனம்:


 மூதூர் மொகமட் ராபி யின்
'இலுப்பம் பூக்கள்' :


வாசலெங்கும் நிறைந்து போய்க் கிடக்கின்ற வாசனைப் பூக்கள்:






1990களில் 'நிழலாக சில நிஜங்கள்' கதையோடு தனது சிறுகதைப் பயணத்தை ஆரம்பித்தாலும், 2012ம் ஆண்டுக்குப் பின்னரேயே கதைகள் எழுதுவதற்கான ஊக்கிகள் தனது மூளையின் நியுரோன்களை பிசாசு கணங்களின் நகங்களைக்; கொண்டு பிறாண்டியது என்று சொல்லியவாறு, 21 வருட காலத்துள் பத்தொன்பது கதைகளையே எழுத முடிந்தது என்றாலும் 2012க்குப்பின்னர் கதைகளின் வளர்ச்சி நான்காம் கியரில் கார்ப்பெட் வீதிகளில் வழுக்கிக் கொண்டு செல்லுகின்றது என்று தனது கதைகளின்; அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற மூதூர் மொகமட் ராபியின் பதினைந்து கதைகள் அடங்கிய 'இலுப்பம் பூக்கள்' 2014ம் ஆண்டு அவரது முதற் தொகுதியாக வெளிவந்தது.


சம கால இலங்கையின் சிறுகதை இலக்கியத்தில் மொகமட் ராபியின் எழுத்துகளுக்கு தனி வேறான இட ஒதுக்கீடு செய்வதற்கான தகுதிகளை அவரது கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதனை அவரது கதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றவன் என்ற காரணத்தினாலும், இந்தத் தொகுதியின் கதைகளை ஒருசேர வாசித்த மனோநிலையிலும் குறிப்பிடுவதில் குறற்மில்லையெனக் கருதுகின்றேன். இவரது கதை உலகம் வேறு. அதன் மாந்தர்கள் வேறு. புதிதாக யோசிக்கின்ற 'அன்ட்ராய்ட்' சிந்தனையாளர்.


மூதூரின் வ. அ. இராசரத்தினம் தொடக்கம், வரால் மீன்கள் தந்த அமானுல்லா மற்றும் ஜலசமாதி தந்த உபைதுல்லா ஆகியோரின் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்ற மொகமட் ராபி அவர்களிடமிருந்து தனது மாறுபட்ட கதைகளுக்கூடாக 'இவன் வேற மாதிரி' என்று புதிய கதைகளோடும் புதிய கதைக்கருக்களோடும் வெளிப்படுகின்றார்.


முன்னையவர்கள் தாம் சார்ந்த கடலையும் கடல் சார்ந்த மாந்தரையும் அவர்களின் எல்லைகள் கடந்த துயரங்களையும், விளிம்பு நிலை மக்களின் வலி பொழிகின்ற வீக்கங்களையும், வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்காரர்களையும் தமது கதைகளில் அழைத்து வந்து அடங்காத அலைகளூடாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற போது, மொகமட் ராபி தனது கதைக் களத்தினை வேறு திசைகளிலிருந்தும் வேறு புலங்களிலிருந்தும் வாங்கிக் கொண்டு வந்து புதிய கோணங்களில் தன்னை புகுத்திக் கொள்ளுகின்றார்.


ஓர் ஆங்கில ஆசிரியராக பணி புரிகின்ற மொகமட் ராபி இந்த டிஜிட்டல் நூற்றாண்டு பற்றி யோசித்து நோவாக் கலங்களில் காலங்களை கடந்து செல்ல ஆசைப்படுவதும், தன்னைச் சுற்றியுள்ள சூழலின் வெளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மைகளையும் யதார்த்தங்களையும் ரியலிச எல்லைக்குள் கொண்டு வரமுற்படுவதனையும் அவரது சிறுகதைகளில் காண முடிகின்றது.


தனது அனுபவங்களையும், அனுபவமல்லாத ஆனால் யதார்த்தத்துக்கு நெருக்கமானதையும், நேரடியாக தன்னுள் ஒளிபரப்பாகின்ற சம்பவங்களின் தொகுப்புகளையும் வழமையாக கைக்கொள்ளப்படும் பாணியிலிருந்தும், வார்ததைகளின் பிரயோகங்களிலிருந்தும் மாறுபட்டு வேறோர் தொனியில் தொனிக்க முற்படுவதனை அவரது 'இலுப்பம் பூக்கள்' தொகுதியில் கண்டு கொள்கின்றேன்.

இந்தத் தொகுதியை முற்றிலுமாக வாசித்து முடிக்கின்ற போது ஒன்று மட்டும் மிகத் தெளிவாகும். மொகமட் ராபி வழமையான கதை சொல்லுகின்ற சிறுகதைப் புள்ளிக்குள்ளிருந்து கொண்டு, அதன் மரபுக்குள் வசித்துக் கொண்டு சொல்லும் விதத்தையும் சொல்லும் மொழியையும் மாற்றியிருக்கின்றார் என்பதனை கண்டு கொள்ளலாம். பல நல்ல கதையாளர்கள் இப்படி செய்திருப்பது நாம் அறிந்ததே. அதாவது அடிப்படைகளை மாற்றாமல் விதிகளுடைத்தல்.


இந்தத் தொகுதியில் உள்ள சில கதைகள் அவரது கல்விச் சூழலையும், அந்த சூழலின் அனக்கொண்டா விஷத்தில் ஊறிப்போன அரசகல்வி நிறுவனங்களின் அழுக்கு உடல்களையும் அம்மணப்படுத்துகின்றன. மிக நீண்ட காலமாக ஆசிரியப் பணியில் உள்ள மொகமட் ராபி தான் சந்தித்த தான் அனுபவித்த தான் துயருற்ற, தான் விரக்தித்த அந்தக்கல்விச் சூழலை தனது கதைக்குள் மிக லாவகமாகக் கொண்டு வந்து விடுகின்றபோது அரச கல்விப்புலத்தின் அழுக்குகள் எமது முகத்தில் கருமை நிறத்தில் வந்து குந்திக்கொள்ளுகின்றன.


இந்தத் தொகுதியின் நான்கு கதைகள் கல்விப்புலத்தினை அடிப்படையாகக் கொண்ட அதேவேளை பெரும்பாலான கதைகள் பிரச்சினைகள் பற்றி பேசுவதனையே பிரதானமாகக் கொண்டுள்ளதனையும் அவதானிக்கலாம். 1. சம்பள நிலுவை, 2. இலுப்பம் பூக்கள், 3. நான் எனும் நீ, மற்றும் 4. ஒரு கதையின் கதை ஆகிய நான்கு கதைகளும் தான் சார்ந்த கல்விப் பிரிவின் கேவலங்களையும் அவலங்களையும் கதையாடல் செய்கின்றன. 'சம்பள நிலுவை'யில் தனது சம்பள நிலுவைக் காசோலையை எடுத்துக் கொள்வதற்காக ஓர் அப்பாவி ஆசிரியன் வலயக் கல்விப் பணிமனையில் படுகின்ற பாடும், அந்தரமும் யதார்த்தத்தின் உச்சம். இப்போதெல்லாம் கல்விப் பணிமனைகள் அரசியலின் அனுசரணையில் அநியாயக்கார கும்பலினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கின்றன. பாவம் இலட்சிய தாகமுள்ள ஆசிரிய சமூகம்.


'நான் எனும் நீ' யில் பாடசாலையை அலிபாபா குகையாக மாற்றிக்கொண்டு திருட்டுப் புரிகின்ற அதிபரின் கொள்ளை பிஸினஸ் கமிராவில் பதிவாகி விடுகின்றபோது அதிலிருந்து தப்பிக்கொள்வதற்காக அப்பாவி ஆசிரியரின் மீது கருணையே இல்லாமல் பாலியல் குறற்றசாட்டுப்பத்திரம் தயாரிக்கின்ற அசிங்கம் பிடித்த அதிபரினால் அழுத்தம்கூடி இறந்து போகின்ற அந்த அப்பாவி கௌரவ ஆசிரியனின் மரணத்தில் எவ்வளவோ உண்மைகளும் எவ்வளவோ கொடுமைகளும் கண்ணுக்குத் தெரியாத வைரசுகளாக மாறி காயப்படுத்தி விடுகின்றன மனசை.


'இலுப்பம் பூக்கள்' மற்றும் 'ஒரு கதையின் கதை' இரண்டும் ஒரேநேர் கோட்டில் பயணிக்கின்ற ரயில் பெட்டிக் கதைகள். ஒரே பாதை இன்டர் ரிலேட்டட் கதைகள். இரு வேறு கதைகள். இரு வேறு சம்பவங்கள். ஒரே கதைக் களம்.. அதே கதா பாத்திரங்கள். இரண்டையும் சேர்த்து வாசிக்கின்ற போது இரண்டு கதைகளுக்குள்ளும் ஒரு பொதுப்பண்பினை உணர்ந்து கொள்ளலாம். இரண்டு கதைகளுக்குமான நடுப்புள்ளியில் கதாசிரியரே நின்று கொண்டிருக்கின்றார் என்பதனை பத்துப் பேரை சாட்சிக்கு அழைத்து நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்பது என் வாதம்.


நன்றாகப் படிப்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளையும், ஒன்றுக்குக்கும் உதவாத பேர்வழிகளின் ஒதுங்குமிடமாய் வலயக் கல்விப் பணிமனை மாறிவிட்டிருக்கின்ற மலட்டுத்தனத்தினையும், இஸ்ரேலின் அஜென்டாவின் கீழ் செயலாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் சபை போல வலயக்கல்விப் பணிப்பாளர் சிலரது அஜென்டாவின் கீழ் வேலை செய்கின்ற கேவலத்தையும், கல்வி அதிகாரிகள் என்ற பெயரில் நல்ல ஆசிரியர்களை ஃபுட் போலாக்கிக் கல்வியின் மீது தாம் நினைத்ததுபோல ஆடிக் கொண்டிருக்கும் ஷைத்தான்களையும் பற்றி மொகமட் ராபி இந்த இரண்டு கதைகiளிலும் சொல்லும் போது நேரடியாக பட்ட ஒருவனால்தான் இந்த யதார்த்தம் வெளி வரும் என்று எனது உள் மனசு உரக்கச் சொல்லுகின்றது.


தவிரவும் இந்த இரண்டு கதைகளையும் அவர் தைரியமாக துணிகரமாக தான் சார்ந்த துறையின் அசிங்கங்களினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது ஓர் எழுத்துக்காரனின் நேர்மையை மதிப்பீடு செய்ய உதவுகின்றது. குறித்த இந்த நான்கு கல்வி சார் கதைகளையும் படிக்கின்ற போது கிண்ணியாவின் கல்வி வலயமும் அதில் எந்த வித வேலையுமில்லாமல் மாதாந்தம் சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பற்றியும், அரசியல் மற்றும் தகுதியில்லாத அதிபர்களால் சாக்கடையாகிக் கொண்டிருக்கின்ற பாடசாலைகளும் , ஆசிரிய பயிற்சி நிலையமும் எனக்குள் வந்து கதறியழுகின்ற காட்சியை தவிர்க்க முடியமாற் போய் விடுகின்றன.


பலிக்கடா, என்ன விலை அழகே, மியூறியன் கிறேட்டர் ஆகிய மூன்று கதைகளும் சயன்ஸ் ஃபிக்ஷன்ஸ் ரகம். இலங்கையின் சிறுகதைத் துறையினைப் பொறுத்த வரை விஞ்ஞானப் புனை கதைகள் என்பது எப்போதுமே வெறுமை தட்டிப்போய்க்கிடக்கின்றன. யாரும் விஞ்ஞானப் புனை கதைகள் எழுதுவதற்கு முன் வருவதுமில்லை அதற்காக ஆகக் குறைந்தது முனைவதுமில்லை. விஞ்ஞானப் புனைகதைகள் தொடர்பில் அறியாமையும் தெரியாமையும் அதனை எழுதுவது தொடர்பிலான அச்சமுமே எமது எழுத்தாளப் பெருந்தகைகளுக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வப்போது சில விஞ்ஞானப் புனை கதைகளை வாசிக்கின்ற அபூர்வங்கள் மட்டுமே இங்கே நமக்கு கிடைக்கின்ற அனுபவங்கள். தீரன் நௌஷாத் தனது 'வெள்ளி விரல்' தொகுதியில் ஒரு
விஞ்ஞானப் புனைகதை எழுதியிருக்கின்றார்.


ஆனால் மொகமட் ராபி இந்தத் தொகுதியில் மூன்று சயன்ஸ் ஃபிக்ஷன்களை தந்திருக்கின்றார். 'பலிக்கடா' லைக்கா நாய் பற்றிய விண்வெளிக்கதை. வாசிக்கின்ற போது சற்று குழப்பத்தை உண்டு பண்ணி விடுகின்றது. 'என்ன விலை அழகே' சயன்ஸ் ஃபிக்ஷனுக்கு நெருக்கமானது. முற்று முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனல்ல.


'மியூறியன் கிறேட்டர்' முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனின் அனுபவத்தினை தந்து விடுகின்ற விஞ்ஞான வித்தை. ஆர்தர் சீ கிளார்க் தனமான இந்தக் கதையினை வாசிக்கின்ற போது சுஜாதாவும், ஆர்னிக்கா நாசரும் நமது வாசலுக்கு வந்து சுகம் விசாரித்து விட்டுப் செல்கின்றனர்.


எனினும் மொகமட் ராபியின் இந்தக் கதை சயன்ஸ் ஃபிக்ஷனில் தனியாகத் தெரிகின்றது. நிறைய மெனக்கெட்டிருக்கின்றார் இந்தக் கதைக்காக என்பது மட்டும் புரிகின்றது. புனை கதை என்றாலும் வெறுமனே கற்பனையில் மட்டும் விஞ்ஞானத்தை சொல்லப் போனால் அந்தக் கதை அம்புலிமாமாக் கதையாகி விடுகின்ற ஆபத்துகள் நிறையவே இருக்கின்றன. அதனால்தான் மொகமட் ராபி இந்தக் கதைக்காக நிறைய பாடு பட்டிருக்கின்றார். நிறையத் தேடியிருக்கின்றார். அவரது கதையில் வந்து விழுகின்ற விஞ்ஞான அரும் பதங்கள் அவர் இதற்காக ரெஃபரன்சுக்காக புத்தகங்கள் புரட்டி எடுத்திருக்கின்றார் என்பதனைக் காட்டுகின்றது.


'எனது பெயர் இன்சாப்' கதை தனியே சயன்ஸ் ஃபிக்ஷன் என்ற வரையறைக்குள் கொண்டு வரமுடியாது. இன்ஃபோர்மேட்டிவ் ப்ளஸ் சயன்ஸ் ரியலிசக் கதை இது. ஃபிக்ஷனைத் தாண்டி பூமியின் கிரேவிட்டி சம்பந்தமான விஞ்ஞான எடுகோளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதை ஃபிக்ஷனைத் தள்ளி விட்டு ரியலிசத்துக்குள் வந்து நிற்கின்றது. அதனால்தான் ரியலிசம் கலந்த ஃபிக்ஷன் என்று இந்தக் கதையினை மதிப்பீடு செய்ய முடிகின்றது.


இந்தத் தொகுதியில் என்னை பிரமிக்க வைத்த கதைகளுள் ஒன்று 'கரைகள் தேடும் ஓடங்கள்'. இலங்கையின் தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் பேசப்படாமலே பல சங்கதிகள் மூலைக்குள் குந்திக் கொண்டு அழுதுகொண்டிருக்கின்றன. வழமையான பல்லவிகளோடு (சில விதி விலக்குகள் தவிர) தமது கதைகளுக்கு தாளக் கட்டுகளுக்குள் மெட்டமைத்துக் கொண்டு கட்டுகளுக்குள் தம்மை கடிவாளமிடுகின்ற இலங்கையின் தமிழ் சிறுகதைப் பரப்பில் நானறிந்த வரை யாரும் தொடாத ஒரு விடயத்தை மொகமட் ராபி தொட்டிருக்கின்றார்.


திருநங்கையாகின்ற அல்லது அரவாணியாகின்ற (Trans Gender) ஒருவனின் அல்லது ஒருத்தியின் மனோநிலைகளில் சதாவும் கத்தி வீசிக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்ற எமது சமூகக் கட்டமைப்பில் சொந்த ரத்தங்களே புரிந்து கொள்ளாத நிலையில் அணைப்பதற்கும் அறுதல் தருவதற்குமென ஒரு நபர் வந்து விடுகின்ற போது ஏற்படுகின்ற ஆறுதலையும், வாழ்வின் மீதான பிடிப்பினையும் மொகமட் ராபி சொல்லுகின்ற விதம் ரசனைகளில் ஏலக்காய் வாசம்.


இந்தத் தொகுதியில் கரைகள் தேடும் ஓடங்களை மிகக் கடுமையாக ரசித்தேன். கதையின் முடிவில் துயரத்தை அள்ளி எமது கைகளில் தந்து விட்டுச் செல்லுகின்ற மொகமட் ராபி அதனூடாக தனது கதையினை வெற்றி பெறச் செய்வதோடு அழவும் வைத்து விடுகின்றார். இலங்கையில் யாரும் பேசாத ஒரு சங்கதியை எடுத்து கதையாக்கித் தந்த மொகமட் ராபியின் மனோ நிலையில் பரவுகின்ற வித்தியாசத்தை உணருகின்றேன். இந்தக் கதையை சில இடங்களில் நக்கலும் நையாண்டியுமாக, சில இடங்களில் சீரியசாக என்று கலந்து சமூகம் ஒதுக்கித் தள்ளுகின்ற ஒரு திருநங்கைக்கு வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்துகின்ற கதாபாத்திரத்தின் மீது பெயர் சொல்ல முடியாத நேசத்தை பொருத்தி விடுகின்றார்.


'வேடிக்கை மனிதர்கள்' தாடிகளையும் ஜிப்பாக்களையும் தஸ்பீஹ் மணிகளையும் வைத்துக்கொண்டு மார்க்கத்தின் மரியாதைக்குரிய மனிதர்களாக மாறிவிடுகின்ற வெளி வேஷங்களை துகிலுரிகின்ற கதை. வெளி வேஷங்களுக்கே மரியாதை கொடுத்து பழக்கப்பட்டு விட்ட நமது சமூகத்தின் மார்க்கத்தின் மீதான பார்வையில் உள்ள கோளாறினை கேள்விக்குள்ளாக்குவதோடு, ஆன்மீகம் என்ற சொல்லுக்கு தப்லீக் சமூகம் கொடுத்துள்ள கருத்தினை தகர்த்தெறிகின்றார்.


வெறுமனே {ஹகுகுல்லாவுக்குள் மட்டும் தம்மை சுருக்கிக் கொண்டு, {ஹக்குக்குல் இபாதாவான சமூக வாழ்வின் அத்தியாவசியங்களிலிருந்து நைசாக கழன்று கொண்டவர்கள் மீது சாட்டை வீசுகின்ற மொகமட் ராபி, இந்தக் கதையின் முடிவில் 'அடடா மிச்சம் நன்றி அமீர் சாப் உங்களுக்கு பெரிய மனசு. ஆனால் பாருங்க நான் உங்கட சீட்ல இருக்குறத விட இப்படியே நின்றுட்டு வரத்தான் விரும்புறேன். தேங்க்ஸ்' என்று கூறி விட்டு சற்று முன்னே தள்ளிப் போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னால் சரவணபவன்' என்று கதையை முடிக்கின்ற போது மொகமட் ராபி ஒட்டு மொத்தக் கதையையும் மீண்டும் மனசுக்குள் ரயிலோட்டிப் பார்க்கின்றார்.


மறைந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், மேதையுமான அபுல் ஹசன் அலி நத்வி சொல்வது போல 'இலங்கை போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் இஸ்லாத்தை சொல்லத் தேவையில்லை நீங்கள். மாற்றாக மார்க்கம் சொல்லுகின்ற ஒரு முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். அதுவே மிகப் பெரிய தஃவா' என்பது இந்தக் கதையை வாசித்த போது என்னை சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டேன்.


உண்மைதான் தாடிகளுக்கும் நீண்ட ஜிப்பாக்களுக்கும் பள்ளி இபாதாக்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சமூக வாழ்வில் பேணப்பட வேண்டிய மார்க்கக் கடமைகளை மறந்து போய்விட்ட எமது சமூகத்தின் வெளிவேஷங்கள் களையப்பட வேண்டுமென்ற செய்தியினை சொல்லுகின்ற இந்தக் கதை போலிகளின் மீதான நேர்மையான விமர்சனம்.


'மணல் தீவுகள்' கதை நவீன உலகின் செல் ஃபோன் கலாசாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கின்ற இளவட்டங்கள் பற்றிய கதை. கதையின் கரு சின்னதென்றாலும் ஒரு திரைக்கதை போல மொகமட் ராபி விரித்துச் செல்லுகின்ற அழகு வாசிக்க வைக்கின்றது. பல மரணங்கங்களுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கின்ற கைபேசிக் கலாச்சாரத்தின் கொடூரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மொகமட் ராபி பதியத் தவறி விட்டாரோ என்று தோன்றுகின்றது.


'சிலந்திக் கூடுகள்' கதை காதலின் துரோகம் பற்றி சொல்லுகின்ற காலாகாலத்துக்குமான கதை என்றாலும் கதையை ஜவ்வு மாதிரி இழுக்காமல் அதன் போக்கிலே விட்டு சம்பவங்களை கோர்வையாக்கி மொகமட் ராபி தருகின்ற போது வாசிப்பானுபவம் காதலின் துரோகத்தை நொந்து கொண்டாலும், இரு வேறு பட்ட காதல் கதைகளை குழப்பி இரண்டாவது காதல் கதையை அழுத்தமாக்கும் முயற்சியில் மொகமட் ராபி இறங்கியிருக்கின்றார்.


இரண்டாவது காதலுக்கு அழுத்தம் கொடுக்கின்ற ராபி, அதனையே மையக் கருத்தாக எடுத்திருந்தால் முதற் காதல் கதை அநாவசியமானது. முதல் காதல் கதை வழமையான மித்திரன் அல்லது ராணி இதழ்க் கதை வடிவில் சென்று இடை வேளைக்குப் பின்னர் இரண்டாம் காதல் கதை அழுத்தத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இந்த இடத்தில் இரண்டாம் காதலையே ஒரு காதலாக்கி அதன் துரோகத்தை பதிவு செய்திருந்தால் சுப்ரமணியபுரம் படத்தின் துரோகங்களை பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும். இந்தக் கதை அதனை செய்யத் தவறி விட்டது ராபி.


'விழியில் வடியும் உதிரம்' கதை இந்த் தொகுதியின் இன்னுமொரு நட்சத்திரக் கதை. இந்தத் தொகுதியின் போர்க்காலக் கதை இது மட்டுமே. மரத்தால் விழுந்த ஒரு தமிழ் இளைஞனை மாடு மிதித்து அப்புறம் ஆர்மிக்காரன் தனது சூக்களால் மிதித்து என்று செல்லுகின்ற கதையில் மனித நேயத்துக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமிட்டு அழுகின்றார் மொகமட் ராபி.

ரயிலில் சந்திக்கின்ற பார்த்தீபன் எனும் தனது உயிரை பணயம் வைத்து தனது பேர்சை மீட்டுத்தந்து கொழும்பு செல்லுகின்ற அந்த புகை வண்டியில் அந்த இளைஞனை புலி என்று ஆர்மிக்காரன் பிடித்துச் செல்லும் போது அவன் அவனது தாய் கதறுகின்ற அலறலை கேட்கத்தான் முடிகின்றது. எதுவும் செய்ய முடியாத கையறு நிலையை உருவாக்கி விட்ட யுத்தத்தின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் விரக்தியும் ஆழம் காண முடியா சமுத்திரத்தைப் போல பரந்து விரிகின்றது என்பதனை சொல்லுகின்ற இந்தக் கதை மொகமட் ராபிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடிய கதை. ஓட்டமாவடி அரபாத் மற்றும் தீரன் நௌஷாத் போன்றோர் போர்க்கால கதை சொல்லிகளாக இருக்கின்றார்கள். மொகமட் ராபியின் இந்த ஒற்றைக் கதையும் அதற்குள் அடங்கும்.


'சுற்றுலா' கதையில் மூதூர் போன்ற முஸ்லிம் கிராமங்களில் காவாலிகள் கலாச்சாரத்தின் காவலர்களாக மாறி விடுவதனையும், விளிம்பு நிலைப் பெண்கள் மீதான சமூகத்தின் அடக்கு முறையையும், சுய நலத்தோடு சதாவும் இயங்கிக் கொண்டிருக்கின்ற பச்சோந்திகளையும், தற்போது ஓரளவுக்கேனும் அந்த பெண்ணடிமைத்தனமும் பெண் பற்றிய பிரக்ஞையும் மாறி இருக்கின்றது என்று கதையை நகர்த்தும் மொகமட் ராபி வெறுமனே சிறு உரையாடல்கள் மற்றும் ஓரிரு ஃ;ப்ளஷ் பெக்குகளோடு கதையை முடித்து விடுவது ஏனோ மொகமட் ராபி சொல்ல வந்த மையக் கருத்தை விட்டு விலகி நிற்கின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.


'கரையொதுங்கும் முதலைகள்' உரையாடல்கள் மூலம் வெள்ள நிவாரணங்களிலும் இதர அனர்த்த நிவாரணங்களிலும் ஊரில் அரச அதிகாரிகளால் நடாத்தப்படுகின்ற லஞ்ச ஊழல்கள் பற்றிய கதை. வெறுமனே எக்கச்சக்க உரையாடல்களோடு கதை நகருகையில் சற்று அயர்ச்சியினைத் தந்தாலும் கதையின் முடிவில் ஒரு ஆறுதல் பெருமூச்சுக்கு அபயமளிக்கின்றார் மொகமட் ராபி.


ஒட்டு மொத்தத்தில் மொகமட் ராபியின் இலுப்பம் பூக்கள் கனதியான கதைகளின் நவீன அல்பம். பெரும்பாலான கதைகளில் தன்னை ஒரு புதிய கதை சொல்லியாகக் காட்டுகின்ற மொகமட் ராபி, மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், அங்கு வாழ்ந்தவர் என்றாலும் போரின் எல்லாவித துயரப் பாடல்களையும் கேட்டு விட்ட மூதூர் மண்ணையும் மூதூர் மக்களையும் ஏன் இவர் தனது கதைகளுக்கூடாக பதிவு செய்யாமலே போய் விட்டார் என்பதில் எனக்கு வருத்தமும் கவலையும் இருக்கின்றது. அதனைத் தாண்டி இலங்கையின் சிறுகதைப் பரப்பில் ஒரு பேசப்படக்கூடிய காத்திரமான கதைத் தொகுதியை மொகமட் ராபி இலுப்பம் பூக்களாக தந்திருக்கின்றார் என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.


இலுப்பம் பூக்கள் வாசித்து முடித்த பின்னரும் மனசுக்குள் இறைந்தே கிடக்கின்றது.

-கிண்ணியா சபருள்ளா
2016-06-03

Thursday, March 24, 2016

சிறுகதை: உபச்சாரம்











தொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
“எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.

உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.

சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.

அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை

“என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை... அதுதான் அழுகிறாள்.... ”


"சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கிறதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸுக்குப் போவமே.....? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே.. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.

-திரு. பொ. கருணாகர மூர்த்தி

Thanks :En Puthu Veedu