Saturday, July 6, 2013

ஜெஸ்லியா பேட்டி : சஹிட் அப்ரிதியை பிடிக்காதா?











0 அஸ்ஸலாமு அலைக்கும் ஜெஸ்லியா!


அலைக்கும் ஸலாம்


0 உங்களைப் பற்றி நீங்களே அறிமுகம் ஒன்றைத்தாருங்கள்.


நான், ஜெஸ்லியா ஜெஸ்லி. ஒரு பல்கலைக்கழக இளம் பட்டதாரி மாணவி. எனது சொந்த ஊர் திருகோணமலை மாவட்டத்தில் இயற்கையழகு மிகுந்த கடலோரக் கிராமமான நிலாவெளி ஆகும். ஆயினும் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினரோடு மத்திய மாகாணத்திற்கு இடம்பெயர்ந்து வந்து விட்டோம்.


0 அப்படியா? இப்போதும் உங்கள் ஊரிலுள்ளவர்களோடு தொடர்புகளுள்ளதா?


இல்லை. சிறுவயதிலேயே அங்கிருந்து இங்கு வந்தபின்பு ஒரே ஒருதடவை மாத்திரமே திருகோணமலைக்குச் சென்றிருக்கின்றேன். அதுகூட எனது  தகப்பனாரின் நீண்டகால நண்பர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காகவே. ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் என்னோடு பயிலும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சக மாணவிகள் மற்றும் மாணவர்கள் மூலமாக அங்குள்ள நிலைமைகள் பற்றி நிறையவே அறிந்து கொள்கின்றேன்.


0 நல்லது. இனி பொதுவான விடயங்களுக்கு வருவோம். அண்மைக்காலமாக சில தமிழ்மொழி மூலமான இணையத்தளங்களிலே உங்களது பெயரை அடிக்கடி காணக்கூடியதாகவுள்ளதே...


ஆம், இயல்பாகவே எனக்கு இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, இசை, சினிமா அரசியல் போன்ற துறைகளிலே ஆர்வமுள்ளது. நான் எனது பாடங்களை கற்கும் நேரம் தவிர ஓய்வுநேரங்களிலே இணையத்திலே உலாவுவது வழமை. அப்போது நமது சமூகத்தை பிரதிபலிக்கும் தமிழ் மற்றும் பிறமொழி செய்திகள் ஆக்கங்கங்கள் என்பவற்றைப் படிப்பதுண்டு. அவை என்னில் ஏற்படுத்தும் தாக்கத்தை எனது கருத்தை பின்னூட்டமிடுவதுண்டு.


0 கிண்ணியா நெற், ஜாஃப்னா முஸ்லீம்ஸ் நெற் போன்ற இணையத்தளங்களிலே அண்மைக்காலமாக உங்கள் பெயர் பிரபலமாகப் பேசப்பட்டு வருவதை அறிகின்றோம். இதற்குக் காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?


அப்படியா!?


எனது பின்னூட்டங்களைப் படித்துவிட்டு அதுபற்றி பலர் தங்களது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துவார்கள். அவற்றில் பல ஊடக நாகரீகத்தை பேணியதாக இருந்தாலும் சில தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களாகவும் இருப்பதுண்டு.


இதனால் அவற்றுக்கு உரிய விதத்தில் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுவதுண்டு. தவிர, நான் பெண் என்பதால் 'இவளுக்கு என்ன தெரியப்போகின்றது' என்ற இளக்காரத்தோடு அணுகுபவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பதால் அவ்வாறான நிலைமை உண்டாகியிருக்கலாம்.


0 உங்களை மட்டும் குறிவைத்து அவர்கள் தனிப்பட்ட ரீதியிலே தாக்குவதற்கு காரணம் நீங்கள் பெண் என்பது மட்டும்தானா?


இல்லை. இல்லை! அதுவும் ஒரு காரணம் என்றுதான் கூறினேன்.


நம்மவர்களிலே பலர் இணையத்தளங்களில் எழுதும்போது உண்மைக்குப்புறம்பாக தமது சிலாகிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதை நான் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதிருப்பதுதான் அவர்கள் என்னைப் போன்றோரை தனிப்பட்ட ரீதியிலே தாக்குவதற்கு முதற்காரணம்.


0 'உண்மைக்குப் புறம்பான சிலாகிப்பு' என்றீர்கள். அதை இன்னும் சிறிது விளக்க முடியுமா?


நிச்சயமாக!


உதாரணத்திற்கு ஒருவர் தனக்குப் பிடித்தமான ஓர் அரசியல்வாதியை கொண்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அந்த அரசியல்வாதியைப் பிடிக்குமென்பதற்காக அந்த அரசியல்வாதி புரிகின்ற அனைத்துக் காரியங்களையும் சிறந்தது என்று கூறமுடியுமா?


தனிப்பட்ட விதத்திலே நமக்குப் பிடித்தவர்களாகவே இருந்தாலும் கூட பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட மனிதர்கள், சமூகத்திற்கு எந்தவகையிலே பயனுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களை நாம் பாராட்டுவதும் விமர்சிப்பதும் இருக்கவேண்டுமே தவிர தனிப்பட்ட சிலாகிப்பாக இருக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.


இது அரசியல் நபர்களுக்கு மட்டுமல்ல இலக்கியம், ஆன்மீகம், தத்துவம் உட்பட அனைத்துக்கும் பொருந்தும்.


0 அப்படியா? உங்களது கருத்துகளுக்கு கிடைத்த பிரதிபலிப்புகள் எல்லாமே வெறும் எதிர்ப்புகள் மட்டும்தானா? ஆதரவான கருத்துகள் இருந்ததில்லையா?


அப்படியில்லை. ஆதரவான கருத்துகளும் நிறையவுள்ளன. ஆனால் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள்தான் அதிகமிருந்தன.


0 எப்படியான கருத்துகளுக்கு அதிக எதிர்ப்புகள் வருகின்றன?


அரசியல், ஆன்மீகம், சமூகம் சார்ந்த விடயங்களுக்கு.


குறிப்பாக, நம்மவர்களிலே பலர் பெண்களை இன்னும் இரண்டாம் தர பிரஜைகளாகவே கருதிவருவதைச் சாடி நான் எழுதும் பின்னூட்டங்களுக்கு ஆண் நண்பர்களிடமிருந்து அதிகமான எதிர்ப்புகள் வருவதுண்டு.


பெண்கள் என்றாலே ஏதோ தனியான பிறவிகள் என்று கருதும் பலர் நமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றார்கள். இவர்கள் பெண்களை ஆண்களுக்குச் சமமாக கருதுவதை ஏதோ கள்ளச்சாராயம் காய்ச்சுவதைப் போல ஒரு குற்றச்செயலாகவே பார்க்கின்றார்கள்.


பெண்கள் என்றால் ஏதோ பாலியல் குற்றமிழைப்பதற்காகவே படைக்கப் பட்டவர்கள் என்றே பலர் நினைக்கின்றார்கள். பெண்கள் ஆண்களை பாலியல் ரீதியாக வழிகெடுப்பதற்காக பிறந்தவர்கள்  என்றும் அவர்களுக்குரிய சிறிய உரிமைகளை அனுமதித்தால் கூட (I'm sorry to say this...) அவர்கள் 'அவிழ்த்துப்போட்டு ஆட' ஆரம்பித்து விடுவார்கள் என்றும் மூடத்தனமாகக் கருதிச்செயற்படுகின்றார்கள்.


ஆண்கள், தங்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை அனுபவித்துக்கொண்டே பெண்களை மேலும் அழுத்தி வைத்திருப்பதுதான் சரியான வழிமுறை என்று நம்புவதோடு அப்படியான கருத்துருவாக்கத்தையே அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல நினைக்கின்றார்கள்.


0 சரி, அப்படியானால் பெண்கள், குற்றம் நிகழ்வதற்கு காரணமாக இருப்பதில்லை என்கிறீர்களா ஜெஸ்லியா? ஆபாச விளம்பரங்களிலிருந்து திரைப்படங்கள், கிரிக்கட் ஆட்டங்கள், அழகுராணிப்போட்டிகள் என்று எங்கும் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் தோன்றி பார்வையாளர்களின்  பாலியல் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்றார்களே...?


உண்மைதான்.

ஆனால் நீங்கள் கூறிய அனைத்துத் துறைகளையும் நிர்வாகம் புரிபவர்கள் யார்? அங்கு யாருடைய ஆதிக்கம் நீக்கமற நிறைந்துள்ளது என்று கூறுங்களேன். ஆண்கள்தானே தவிர பெண்கள் கிடையாது.

அங்கு வேலைபுரியும் பெண்கள் ஒன்றும் ஆபாசமாகத்தான் ஆடையணிவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருவதில்லை. அவர்களை பணத்திற்காக நிர்ப்பந்திப்பவர்கள் பல்தேசியக் கம்பனிகளின் ஏவல்நாய்களாகச் செயற்படும் ஆண்கள்தான்.

இவ்வாறு பெண்களை போகப்பொருளாக காண்பிப்பதற்காக நாம் எதிர்க்க வேண்டியது அங்கு பணிபுரியும் பெண்களையல்ல. அவர்களின் பின்னே மறைகரங்களாகச் செயற்படும் பல்தேசியக்கம்பனிகளின் பண முதலைகளைத்தான்.

அவ்வாறனவர்களை எதிர்க்கும் பல கட்டமைப்புக்கள் இப்போது உலகமெங்கும் உருவாகி தமது காட்டமான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.


0 பெண்கள் பற்றியும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் பற்றியும் தப்பான அபிப்பிராயங்கள் நம்மவர்களிடம் இருப்பதற்கான காரணம் பற்றி சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?


சரி, நாம் ஆரம்பத்திலிருந்தே வருவோம்.

தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து  வருகின்றான் ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து  தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாகவே வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..? என்று யோசித்துப் பாருங்கள்.

பாலியல் தேவைகளுக்காக பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதை வேண்டுமானால் ஓர் இயற்கையான உணர்வாக உந்துதலாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீதான மரியாதையற்ற அவனது எண்ணங்களையும் நடத்தைகளையும் நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

நமது சமூகத்திலே தனது வயதொத்த ஒரு பெண், தன்னைவிட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருப்பதை விரும்பாத அல்லது சகித்துக்கொள்ள முடியாத போக்கு ஆரம்பப்பாடசாலைப் பருவத்திலிருந்தே ஆண்பிள்ளைகளிடம் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பதின்வயதை அடைந்ததும் ஒரு பெண்பிள்ளை பாடங்களிலோ அல்லது பாடசாலைச் செயன்முறைகளிலோ ஆண் பிள்ளைகளுக்குச் சமமாகவோ அல்லது ஆண்களை விடத் திறமையாகவோ சவாலாக இருந்தால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவார்கள்?

ஒன்றில் முயன்று படித்துப் பயின்று அவளை முந்துவதற்கு நினைப்பான். முடியாதவிடத்து நேர்மையீனமான வழிமுறைகளைக் கையாண்டு அவளை வீழ்த்துவதற்கு நினைப்பான். இரண்டும் முடியாதவிடத்து அவள் திறமை காட்டும் துறையை மலினமாகச் சித்திரித்து அவளது சுயதிருப்தியை இல்லாதொழிக்க முயற்சிப்பான்.

இதுவே வளர்ந்து ஒரு தொழிற்துறைக்குள் வந்தபின்பு தனது சக பெண் ஒருத்தி உயர்பதவிக்கு வந்து விட்டாளெனின் அவளை சக ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள்...?

ஒன்றில் அவளை மானசீகமாக வெறுப்பார்கள். அல்லது அவளது பெண் என்ற பால்நிலை வேறுபாட்டை ஒரு பலவீனமாக எடுத்துக்காண்பிக்கும் விதமாக அவளை சுயமாக இயங்கவிடாது மிகையான உதவிகளைப் புரியமுற்படுவார்கள். 

உதாரணத்திற்கு ஒரு பாடசாலைக்கு அதிபராக சகல தகைமைகளுடனும் ஒரு பெண் நியமிக்கப்பட்டாளாயின் அங்குள்ள நமது பெரும்பான்மையான ஆண் ஆசிரியர்கள் அவளை தமது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வதற்கு உள்ளுர விரும்புவதில்லை. அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் 'ஒரு பெண்ணின் கீழே இயங்குகின்றோமே' எனும் ஆற்றாமையோடு வெதும்பிக் கொண்டிருப்பார்கள்.

அல்லது 'நீங்கள் பெண் என்பதால் உங்களால் எல்லாவற்றையும் செய்ய இயலாது. ஆகவே நாங்கள் உங்களுக்கு ஒத்தாசை புரிகின்றோம்' என்று உதவுவார்கள். உதவிபுரிவது நல்ல விடயம்தான் என்றாலும் அந்த உதவிகளுக்குள்ளே இருக்கும் மறைமுக செய்தி முக்கியமானது.

அதாவது ஒரு தகைமையுள்ள பெண்ணைக்கூட அவளது பலவீனங்களை வைத்து வீழ்த்துவதிலே ஆண்களுக்குள்ள குரூர திருப்தியைத்தான் அந்த உதவிகள் வேறுவிதமாக நிறைவேற்றுகின்றன.

  இவ்வளவு ஏன் ஒரு நமது நாட்டின் ஆட்சி உயர்பீடத்திலே ஒரு பெண் இருந்த கால கட்டங்களில் எல்லாம், 'பொம்பளை ஆட்சிக்குக் கீழ் இருப்பது நல்லது இல்லை' என்று கூறித்திரிந்த படித்த கனவான்கள் கூட நம்மவர்களிடையே இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


0 நல்லது, நீங்கள் கூறுவது படி பார்த்தால் ஒரு கேள்வி எழுகின்றதே.. அதைக் கேட்கலாமா...?


தயக்கம் வேண்டாம், தாராளமாக கேளுங்கள்.


0 நீங்கள் இப்படிக் கூறினாலும் பல சமூகங்களிலே ஆண்கள் பெண்களை கடவுள்களாகப் போற்றுகின்றார்கள்.  காதலி காதலி என்று கொஞ்சுகின்றார்கள்.. மனைவி மனைவி என்று மாய்கின்றார்களே. அதுமட்டுமா தாயிற் சிறந்த கோவிலுமில்லை... தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருப்பதெல்லாம் நீங்கள் சாடும் இந்த ஆணாதிக்கமுள்ள இந்தச் சமூகம்தானே...?


நல்ல கேள்வி. அவசியம் இதற்கு பதில் கூறுகின்றேன். (சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாகச் சிந்திக்கின்றார்)


முதலிலே ஒன்று கூற ஆசைப்படுகின்றேன். நாம் வாழும் இந்த உலகில் பெண்களைப் புரிந்து கொண்டு மேலாதிக்கம் புரியாமல் சக மனிதர்களாக நடாத்தும் ஆண்களும் நிறையவே இருக்கின்றார்கள். எனவே எனது பதில்களிலே ஆண்கள் என்று நான் குறிப்பிடுவது பெண்களை மேலாதிக்கம் புரிபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கூறுவது போல, ஆண்கள் பெண்களை மிகையாக போற்றுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையவும் முடியவில்லை. ஏனெனில் அது ஆண்வர்க்கத்தினரின் ஒரு விதமான ஏமாற்று அல்லது தப்பித்தல்... hypocrisy or escaping!

அதாவது.. நீங்கள் பெண்களை ஒரேயடியாக உயர்த்திக் கடவுளாக்குவதிலும்  எதிர்மறையாக, 'ஆண்களை மயக்கி மோசம்செய்ய வந்த பிசாசுகள்' என்று வசைபாடுவதிலும் நிகழும் விளைவு ஏறத்தாழ ஒன்றுதான்.

ஆம்! இந்த இரண்டு செயல்களினாலும் பெண்களுக்கு சமூகத்திலே கிடைக்க வேண்டிய நியாயமான சம அந்தஸ்தை அல்லவா மறுக்கின்றீர்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால்... கடவுள் - பிசாசு என்ற இரு எல்லைகளுக்கும் பெண்ணை எடுத்துச் செல்வதன் மூலம் பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்பதிலிருந்தும் அவளுக்குச் சம முக்கியத்துவம் தருவதிலிருந்தும் தந்திரமாகத் தப்பித்துக் கொள்கின்றீர்கள்.

ஒருவன் தனது மனைவியை அல்லது காதலியை ஓர் சகமனிதனாக எண்ணுவதை விட்டுவிட்டு ஒரு போகப்பொருளாக அவiளைக் கொண்டாடுவதனால் அவளுக்குரிய சமவாய்ப்பு அல்லது முக்கியத்துவம் கிடைத்து விடுவதில்லை.

"ஓ! என் அழகிய கிளியே பார்! உன்னை எவ்வளவு விலையுயர்ந்த கூண்டிலே அடைத்து வைத்திருக்கின்றேன்..இதைவிட கௌரவம் வேறென்ன வேண்டும் உனக்கு?" என்று அதுவரை சுதந்திரமாய்ப் பறந்துதிரிந்த கிளியிடம் கூறுவதற்கும் ஒரு மனைவியை அல்லது காதலியை அழகிய துணிமணிகளாலும் விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அலங்கரித்து "கார்கூந்தலழகியே..கயல்விழித் தேனே காலம் முழுக்க நான் உனதழகுக்கு அடிமையே" என்று பிதற்றுவதற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

ஆண்களின் இந்தப் புகழ்ச்சிக்குப் பின்னாலிருக்கும் ஏமாற்றுச் சதிவலையைப் புரிந்து கொள்ளாத மழுங்குப் பெண்கள் வேண்டுமானால் ஏமாந்து போகலாம். ஆனால், சிந்திக்கத் தெரிந்த பெண்களிடம் இந்தப் பருப்பு வேகாது. அதேசமயம் உண்மைகளை நீண்ட காலத்திற்கு ஒளித்து வைக்கவும் முடியாது. அது ஒரு பெண்ணின் கர்ப்பம் போல என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.


0 காதலியை அல்லது மனைவியை ஆண்கள் மிகையாக புகழ்வதிலே வேண்டுமானால் பாலியல் தேவைகளுக்கு அவள் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஒரு தேவையாவது உண்டு.  ஆனால், தாயைக் கூட மிகையாக அவர்கள் புகழ்வதற்கு காரணமென்ன?


மனிதன் ஓர் உயர்நிலைப் பகுத்தறிவுள்ள விலங்கு. 

அவன் தான் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் தனது சமூகம் சார்ந்த பெறுமானங்களை அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கக்கூடியவன். எந்தவொரு தீங்கான செயலைச் செய்யும்போதும் உள்ளார்ந்த குற்றவுணர்வை வேறு ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்ய வேண்டிய தேவை அவனுக்குள்ளது. 

(உ-ம் : பாவகாரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்தவர்கள் தான தருமங்கள் புரிய முனைதல், தத்தமது கடவுளரிடம் மானசீகமாக பாவமன்னிப்பு கோருதல், கோயில் உண்டியல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது பொருளை பரிகாரமாக்குதல் etc.etc)

ஓர் ஆண், தாய் என்பவளை மிகைத்துப் போற்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்றில் சிறுவயதிலே தாயை இழந்ததனால் உண்டான பிரிவாற்றாமை ஏக்கமாக கூட இருக்கலாம்.  இருந்தபோதிலும் தனது குற்றவுணர்வை சமாதானம் செய்யும் நோக்கமே பெரும்பாலும் உள்ளது. 
சிறுவயதிலே தனது குழப்படிகளால் தாயை வருத்திய குற்றவுணர்வுகள்... இளைஞனானதும் தாயைச் சரிவரப் போஷிக்காத குற்றவுணர்வுகள்.. திருமணமானதும் தனது அன்றாட அலுவல்களினாலும் பொறுப்புகளினாலும் தாயைச் சென்று பார்த்துவரக்கூட முடியாத குற்றவுணர்வுகள்... என்று உள்மனத்திலே கிளம்பும்போது அவற்றைச் சமாதானஞ் செய்ய ஏதாவது செய்தாக வேண்டுமே...

0 அப்படியானால் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா, வாலி போன்றவர்கள் சினிமாவிலே தாய் பற்றிய பாடல்கள், ஆக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் கூட இதுதான் காரணமா? இயல்பான தாய்ப் பாசம் என்பது அவர்களுக்கு இருக்க முடியாதா?

அடடா, உங்களுக்கு வேறு உதாரணங்களே கிடைக்கவில்லையா என்ன?

இவர்கள் அனைவரும் நான் மதித்துப் போற்றும் கலைஞர்கள். ஆனாலும் நான் மதிப்பது அவர்களது திறமைகளை மட்டும்தான் என்பதால் பரவாயில்லை. அவர்கள் எனது பேட்டியைப் பார்க்காதவரை அவர்களிடமிருந்து வசவு கிடைக்காது இல்லையா? (சிரிக்கின்றார்)

தாய்மீது பாசம் எல்லோருக்கும் பாசம் இருக்கத்தான் செய்யும். அது இயற்கையானது; உயிரியல் தேவையும் கூட.

'அம்மாவென்றழைக்காத உயிரில்லையே...' போன்ற 'அம்மா'பாடல்களை எழுதியும் பாடியும் இயக்கியும் வருகின்ற அவர்களைப் பார்த்தீர்களானால்  ஒரு உண்மை தெளிவாக விளங்கும். அவர்கள் அத்தனைபேரும் தமது துறைசார்ந்த பரபரப்பான மனிதர்கள்.

கிராமத்துத்தாயை ஊரிலே கள்ளிக்காட்டிலும் கருவேலங்காட்டிலும் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள். நீண்டகால அலைச்சல்களுக்குப் பின்பு சினிமாத்துறையிலே குறிப்பிடத்தக்களவு வெற்றிபெற்றாலும் கூட அவர்களுக்கெல்லாம் உள்ளுர தங்கள் தாய்குறித்த மேற்கூறிய உணர்வுகளின் உறுத்தல்களை சமாதானஞ் செய்வதற்கு எதாவது செய்தாக வேண்டிய தேவையுள்ளது.

அதன் விளைவுகள்தான் தாய்மீதான அதீத பாசத்தை வெளிக்காட்டும் விதமான பாடல்கள், நூல்கள், திரைப்படங்களை அவர்கள் அதிகம் புனைவதற்கும் எழுதுவதற்கும் இயக்குவதற்கும் காரணமாக இருக்கலாம்.

அதேவேளை அவர்களின் பெண் சகோதரிகளை எடுத்துக்கொண்டால்...

கிராமத்திலேயே கிடந்து வாழ்நாள் முழுவதும் தாய்க்கு ஒத்தாசையாக இருந்துவரும் பிள்ளைகளுக்கு - அதிலும் குறிப்பாக தாயை அவளது முதுமைப்பருவத்தின் ஆரம்பம் முதலே பராமரித்து வரும்  பெண் சகோதரி களுக்கு இத்தகைய மிகை-முயற்சிகளின்  அவசியம்
இருப்பதில்லை.



0 நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். இருந்தாலும் நமது சமூக அமைப்பு ஆண் மேலாதிக்கமுடையதுதான் எனும்போது ஆண்களை எதிர்த்து அல்லது அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி பெண்களால்  தம் மீதான அடக்குமுறைகளை விலக்கிக்கொள்ள முடியும்?


இதுதான் நம்மவர்கள் பலரிடையே பரவலாக இருந்துவரும் தப்பான அபிப்பிராயம்.

ஆண்களின் மேலாதிக்கத்தை ஒழிப்பது ஒன்றும் தனியான விடயம் கிடையாது.  ஆண் - பெண் இருபாலாரும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து ஒழித்துக்கட்ட வேண்டிய எத்தனையோ சமூக அவலங்களில் அதுவும் ஒன்று.

தவிர, ஆண் மேலாதிக்க சிந்தனை ஒன்றும் தனியே ஆண்களுக்கு மட்டுமே உரியதும் அல்ல.


0 புரியவில்லையே..?


 ஆண்கள் தம்மை பெண்களிலும் மேலானவர்களாக கருதிக்கொண்டு, பெண்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை மறுப்பதும் அவற்றை மேலாதிக்கம் செய்வதுதான் பொதுவாக ஆணாதிக்கம்.


என்றாலும் நீண்டகாலமாக அந்த மேலாதிக்க குணத்திற்கு ஆட்பட்டு, ஆட்பட்டு அதுவே பழகிப்போனதால் அதனை ஆதரித்துப்பேசும் பெண்களும் ஏராளமாக நம்மிடையே இருக்கின்றார்கள். அதனால்தான் அப்படிக்கூறினேன்.


0 அப்படியானால் பெண்கள் தாம் மேலாதிக்கத்துக்குட்படுவதை ஏற்றுக்கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்கிறீர்களா?


ஒவ்வொரு மாதமும் வருடமுமாக விலைவாசி, வாழ்க்கைச்செலவு ஏறிக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் அதை விமர்சிக்கும் மக்கள் பின்பு அதனைச் சகித்துக்கொண்டு வாழப்பழகிக் கொள்கின்றார்கள். அதற்காக அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தமா?


0 அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு?


தீர்வு விலைவாசிக்கு கேட்கின்றீர்களா.. அல்லது ஆணாதிக்கத்துக்கு கேட்கின்றீர்களா? (மீண்டும் சிரிப்பு)

சரி, இரண்டுக்குமே பொதுவாக சொல்கின்றேன்.  உள்ளுர குமுறியவாறே சகித்துக்கொண்டிருப்பவர்களின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க ஒருகட்டத்திலே பொறுமை எல்லைமீறும்.

எரிமலையாய் அவர்கள் பொங்கியெழும்போது, அதுவரையில் அவர்களைக் கட்டிப்போட்டிருந்த கைவிலங்குகளும் கால்கட்டுகளும் நொறுங்கிச் சிதறும். அப்போது  எல்லாமே முற்றாக மாற்றியமைக்கப்படும்.



0 எப்படி த்தனை உறுதியாகச் சொல்கின்றீர்கள்?


நான் ஒன்றும் சோதிடமோ , ஆரூடமோ கூறவில்லை.

இதுவரையிலான சமூகவியல் மாற்றங்களையும் வரலாற்றையும் அறிவியல் ரீதியாக கூர்ந்து கவனித்துப்பார்க்கும் நடுநிலையாளர்களுக்கு இனிமேல் நடக்கப்போவதை யூகிப்பதிலே அத்தனை சிரமம் இருக்காது.

'இரும்புத்திரை ஒன்றியம்' என்று வருணிக்கப்பட்ட சோவியத் யூனியன் உடைந்து சிதறும் என்று 1990க்கு முன்பு கம்யூனிஸ்ட்டுகளிடம் யாராவது கூறியிருந்தால் அதனை ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்றுகூறி கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் 25 -30 ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறுதான் நிகழும் என்று எதிர்வு கூறிய நடுநிலையாளர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

புலிகளின் வீழ்ச்சி, அரபு வசந்தம் போன்றவையும் அப்படித்தான்.


0 சரி, இனி தனிப்பட்ட விடயங்கள் இலக்கிய ரசனை பற்றிய விடயத்தைப் பேசலாமா..?

தாராளமாக. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை: குடும்ப விவரங்களை ஆழமாக கூறும்படி தயவுசெய்து வற்புறுத்த வேண்டாம்.

0 அதற்கு காரணம் ஏதும் உண்டா..?

நிச்சயமாக உள்ளது.

இன்று இணையம் போன்ற உலகளாவிய ஊடகங்களை ஏறத்தாழ அனைவரும் பார்வையிடுகின்றனர். சிறு குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை, மேதைகளிலிருந்து மனநோயாளிகள் வரை இணையத்தில் உலாவுகின்றனர்.

நான் எனது கருத்துகளைக் கூறும்போது, அதனைப் பலரும் பலவிதமாகப் புரிந்து கொள்கின்றனர். பலர் ஆரோக்கியமாகப் புரிந்துகொள்ளும்போது சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்காமல் தனிப்பட்ட ரீதியில் தாக்கலாமா என்று கூட நினைக்கின்றார்கள். இன்னும் சிலர் 'நான் யார் எங்கே வசிக்கின்றேன்' என்பது போன்ற விபரங்களைத் தேடி, வந்து தாக்கப்போவதாக மிரட்டியது கூட உண்டு. அதனால்தான் நான் எனது தனிப்பட்ட விபரங்களைத் தருவது கிடையாது.

0 ஆனால் இது ஒருவகையில் கோழைத்தனமில்லையா..? கருத்துகளை துணிச்சலுடன் எழுதுபவர்கள் தமது சொந்த விபரங்களை மறைத்து வைத்துக்கொண்டிருப்பது அவர்களது துணிச்சலுக்கு பொருத்தமாக இல்லையே..?

இல்லை, ஒருபோதும் நான் அப்படிக்கருதவில்லை.

நமது சமூகம் என்பது கருத்துகளை கருத்தால் மட்டும் எதிர்கொள்பவர்களால் அல்லது மாற்றுக் கருத்துகளையும் சகித்துக்கொள்ளக் கூடியவர்களால் மட்டுமே நிரம்பியிருந்தால் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும். ஆனால், நிலைமை அவ்வாறில்லையே...?

நீண்டகாலமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் சில நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் இன்றுள்ள நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாராமல், கண்ணைத்திறந்து கொண்டே தூங்குபவர்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். அத்தகையோர் மாற்றுக்கருத்துக்களை சிறிதும் பரிசீலிக்காமல் தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரானது என்றே முத்திரை குத்திவிடுகின்றனர்.

வயிற்றுப்பசிபொறுக்க முடியாமல், கடைவீதியில் தேங்காய் ஒன்றைத் திருடிய ஏழை ஒருவனை நையப்புடைக்க, அந்தத்தெருவிலே உலாவும் பிக்பாக்கட் அடிக்கும் பொறுக்கிகளும் முடிச்சு மாற்றும் குண்டர்களும் ஒன்று கூடுவதுபோல மாற்றுக் கருத்தை கூறுபவருக்கு எதிராக வன்முறை புரிய அத்தனைபேரும் கிளம்பி விடுகின்றனர்.

நெஞ்சுக்கு நீதியைக் கூறுபவர்களுக்குரிய பாதுகாப்புக்கு சமூகத்தில் உத்தரவாதமில்லாதபோது நமது விபரங்களை மறைத்துக் கொள்வது தற்காப்புத்தானே தவிர கோழைத்தனம் கிடையாது.

இன்னுமொரு விடயத்தையும் கூறி விடுகின்றேன்.

மாற்றுக் கருத்துச் சொல்பவர்களை தேடிவந்து தாக்குபவர்கள் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதற்காக நான் முற்றிலும் பாதுகாப்பற்றவளாக இருக்கின்றேன் என்று அர்த்தமில்லை.

எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்புக்கு அடுத்ததாக, குடும்ப உறுப்பினர்கள் ரீதியான பாதுகாப்பு எனக்கு நிறையவே உள்ளது. எங்கள் குடும்பத்தை அயலவர்கள்  'கலண்டர் குடும்பம்' என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.

ஆம், ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவருக்கு பிறந்தநாள் வந்து கொண்டேயிருக்கும். நாங்கள் மொத்தமாக 12 பேர். என்னைத் தவிர ஏனைய அனைவரும் ஆண் சகோதரர்கள். வீட்டில் ஆண்களுக்குக்கு மத்தியிலே வளர்ந்தவள் என்பதாலோ என்னவோ இயல்பாகவே எனக்கு இந்த மிரட்டல் பூச்சாண்டிகளுக்கு பயம் வருவதில்லை.

எனது சகோதரர்கள் கல்வி, சட்டத்துறை, மருத்துவத்துறை, பொலீஸ் மற்றும் பாதுகாப்புப்படை, வியாபாரம், ஆன்மீகம் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தொழில் புரிகின்றார்கள். தவிர, எனக்கு தாய்வழி மாமனார்களும் அதிகம் என்பதால் தனிப்பட்ட தாக்குதல் நிமித்தம் என்னை அணுக முயல்பவர்களுக்கு தர்ம அடிகள் உத்தரவாதம். 

ஆம், அவர்கள்நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும்.

தவிர, 'சிறகுகள்' ஆரம்பித்த காலத்தில், இணையத்தளம் பற்றிய தொழினுட்ப விடயங்களும் போதிய புரிதல்களும் எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், 'சிறகுகள்' இணையத்தளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் உண்டானபோது நான் ஒரு பாடசாலை மாணவி. அப்போது எனக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கூட நான் உருவாக்கியிருக்கவில்லை.

இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்க விரும்புவதைப்பற்றி திருகோணமலையிலே கடற்படை உத்தியோகத்தராக பணிபுரிந்த மூத்த சகோதரரிடம் கூறினேன். உடனே அவர், என்னைத் தனது கம்ப்யூட்டர் முன்னே அமர்த்தி, தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் (இப்போது அவர் எனக்கும் நண்பர்) மின்னஞ்சல் முகவரியினூடாக எனது வீட்டு வரவேற்பறையிலே வைத்து வேடிக்கையாக ஆரம்பித்து வைத்ததுதான் இந்த 'சிறகுகள்' தளம்.


0 சரி, இனி உங்கள் இலக்கிய ரசனைகளுக்கு வரலாம் என்று நினைக்கின்றேன். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.

நான் ஆங்கில இலக்கியம் படித்தவள். அதனால் உலக இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியம் மீது இருந்த மோகம் மெல்ல மெல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழி இலக்கியங்களையும் படிப்பதற்கு கிடைத்தது.

பின்பு ஒருகட்டத்தில் நமது தமிழ் இலக்கியங்களின் பால் ஆர்வம் உண்டானது. அது இப்போதும் தொடர்கின்றது.


0 கிண்ணியா நெற் போன்ற இணையத்தளங்களிலே இடம்பெறும் சிறுகதைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்களை நீங்கள் விமர்சிப்பதை வாசித்திருக்கின்றோம். தமிழ் இலக்கியங்களை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன?

முன்பு குறிப்பிட்டிருந்தேனே...  எனது சகோதரரின் நண்பர் ஒருவர்தான் காரணம்.

ஒருநாள் எனது சகோதரர் திருகோணமலையிலிருந்து விடுமுறைக்காக வீட்டிற்குத்திரும்பிய வேளையில் அவரை அழைத்து வந்திருந்தார்.

இலக்கியத்துறையிலே ஆர்வமுள்ளவராகிய அந்த நண்பர் எனது அறையிலிருந்த சொந்த லைப்ரரியையும் அங்கிருந்த நூல்களையும் பார்த்து வியந்துபோய் என்னுடன் பேச ஆரம்பித்தார்.  எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு ஒன்றைத்தந்துவிட்டுச் சென்றார்.

அன்று ஆரம்பித்ததுதான் தமிழ் இலக்கியப் பரிச்சயம்.

சுஜாதாவிலிருந்து மெல்ல ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சுந்தரம் ராமசுவாமி, இந்திரா பார்த்தசாரதி, தோப்பில் முஹம்மது மீரான், கோமல் சுவாமிநாதன், வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கம் என்று எல்லோருமே எனது படிப்பறைக்குள் நூல் வடிவிலே வந்துவிட்டார்கள். இப்போது அதே வாசிப்பு இணையத்திலும் தொடர்கின்றது.


0 நிறைய வாசிப்பவர்களால் எழுதாமலிருக்க முடியாது என்பார்கள். நீங்கள் இலக்கிய ஆக்கங்கள் எழுதியதுண்டா? அப்படியானால் அவை எங்கு பிரசுரமாகியுள்ளன?

ஆங்கிலத்தில் நிறைய புனைகதைகள் எழுதியுள்ளேன். The Reader's Digest   சஞ்சிகையில் அவை பிரசுரமாகி வந்திருக்கின்றன. 

உயர்தரம் படிக்கின்ற காலத்தில் நான் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகளுக்கு அந்த சஞ்சிகையிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த  சன்மானங்கள் எனது அந்த நேரத்திற்குரிய pocket money யாக அமைந்திருக்கின்றன.

தமிழில் இலக்கிய ஆக்கங்கள் என்று இதுவரை எழுதியதில்லை. சில கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். அவைகூட நமது நாட்டின் அரசியல் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டதுதான்.


0 அவை எவை என்று குறிப்பிட்டுக் கூறுங்கள்..


கடந்த ஆண்டு கிழக்கில் மலையடிவாரம் ஒன்றில் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்ட வேளையிலே அதுகுறித்து மூதூர் பிரதேச நண்பர்கள் வாயிலாக அறிந்த தகவல்களை தொகுத்து நான் எழுதிய ஒரு கட்டுரை வீரகேசரி வாரஇதழில் பிரசுரமாகியிருந்தது.

'விமர்சனங்கள் பற்றிய விமர்சனம்' என்று ஒரு கட்டுரையும் சமகாலத்தில் கிண்ணியாநெற், கல்குடா இன்போ போன்ற இணையத்தளங்களிலும் வீரகேசரியிலும் வெளிவந்திருக்கின்றது.


0 தமிழில் இலக்கிய முயற்சிகள் என்று இதுவரையில் எதையும் படைக்கவில்லை என்றீர்கள். அப்படியானால் ஒரு வாசகராக இருப்பது மட்டுமே இலக்கிய ஆக்கங்களை விமர்சிப்பதற்கான தகுதியை உங்களுக்குத் தந்துவிடுமா?


ம்ம்.. தகுதிகள் பற்றியெல்லாம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு படைப்பை படித்ததும் என்னுடைய மனதுக்குச் சரியென்றும் பிழையென்றும் படுவதை வார்த்தைகளில் சொல்வதற்கு, எனது தாய்மொழி என்னோடு மிகநன்றாக ஒத்துழைப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது.



0 உங்கள் விமர்சனங்கள் இரக்கமற்றவை என்றுகூட சிலர் சொல்கிறார்களே ஜெஸ்லியா..?


அவர்கள் கூறுவது உண்மையாகக்கூட இருக்கலாம்.

விமர்சனங்கள் பொதுவாக படைப்பாளியின் ஆக்கத்தை மாத்திரம்தான் காணவேண்டுமே தவிர அவரது பெயரையோ அடையாளத்தையோ பின்னணியையோ அல்ல. நமது நெருங்கிய நண்பரோ பரம வைரியோ யாராக இருந்தாலும் இருவருக்கும் விமர்சனத்தைப் பொறுத்தவரையில் ஒரே பெறுமானம்தான் தரப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

என்னுடைய விமர்சனங்களின் நடுநிலைமையை பாராட்டியவர்களும் இருக்கின்றார்கள். கோபித்துக்கொண்டவர்களும் இருக்கின்றார்கள். ஒருவேளை எனது மொழிநடையில் அநாவசியமான புகழ்ச்சிகளும் அலங்காரங்களும் குறைவாக அல்லது முற்றாக இல்லாதிருப்பதனால்தான் அவ்வாறு நினைக்கின்றார்களோ தெரியவில்லை.


0 விமர்சனங்களுக்காக கோபித்துக் கொண்டவர்கள் என்று கூறினீர்கள் அதுபற்றி சொல்ல முடியுமா?

சொல்லலாம். ஆனால் பெயர் விபரங்கள் வேண்டாமே..

0 சரி, நீங்கள் நிகழ்வை மட்டும் சொன்னால் போதும்...

திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் ஆண்மேலாதிக்கம் பற்றி ஒரு கவிதை நூல் வெளியிட்டிருந்தார்.

அதைப்பற்றி வேறு ஒருவர் கிண்ணியா நெற்றில் அறிமுகக் குறிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கவிதை நூலிலே இருந்து சில கவிதை அடிகளையும் வழங்கியிருந்தார். அவை வாசகர்களை முகஞ்சுழிக்க வைக்குமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆகவே, அதுகுறித்து எனது விமர்சனத்தை முன்வைத்திருந்தேன்.

உடனே வேறு ஒருவர் மூலம் 'சிறகுகள்' தளத்தின் இணை நடாத்துனர்களில் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னைப்பற்றி யார் எவர் என்றெல்லாம் விசாரித்ததோடு கோபித்துக் கொண்டுமிருக்கின்றார். அத்தோடு 'ஜெஸ்லியா என்ற பெயரிலே எழுதுபவர் வேறு யாரோ ஒருவர்' என்று தனது கற்பனை யூகக் கதையையும் கிண்ணியா வாசகர்களிடம் பரப்பி விட்டிருக்கின்றார்.

ஆனால் தனது கவிதைகளின் தன்மை பற்றிய எனது விமர்சனத்திற்கு கடைசிவரை பதிலளிக்கவே இல்லை.


0 சரி, அதையெல்லாம் விடுவோம். வெகு அண்மையில் ஜாஃப்னா முஸ்லீம்ஸ் (jaffnamuslims.com) இணையத்தளத்தில் கலாநிதி அமீர்அலி அவர்களது பேட்டி பற்றிய ஒரு செய்தியை படித்தோம். 

அந்தச் செய்தி குறித்து வாசகர்களிடையே எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அந்தச் செய்திக்கு ஏறத்தாழ 100க்கும் மேலான பின்னூட்டங்களை சம்பாதித்துக் கொடுத்துச் சாதனையும் படைத்திருந்தது. அதிலே உங்களது பின்னூட்டங்களும் இருந்தன. அதுபற்றி கூறமுடியுமா?


யா அல்லாஹ்! அதுபற்றி நினைக்கவே எனக்கு ஆயாசமாகவுள்ளது.


அமீர்அலி தனது கருத்துகளைக் கூறியிருந்தார். அவை அத்தனையிலும் எனக்கு உடன்பாடு இருந்தது என்று கூறமுடியாது. ஆயினும் அவர் தனது கருத்துகளை துணிச்சலாகக் கூறியிருந்த விதம் எனக்கு சரியென்றே பட்டது.


அதுபற்றிய எனது  அபிப்பிராயத்தைக்கூறும் எண்ணம் கூட ஆரம்பத்திலே எனக்கு இருக்கவில்லை. படித்துவிட்டுக் கடந்து சென்றுவிடத்தான் நினைத்திருந்தேன்.


0 அப்படியானால் அதற்குள்ளே எவ்வாறு சென்று சேர்ந்தீர்கள்..?
 

அந்த மனிதருக்கு jaffnamuslims.com வாசகர்களிடமிருந்து கிடைத்த சில மரியாதைக்குறைவான கற்றுக்குட்டிப் பின்னூட்டங்கள் என்னுடைய மனதை வெகுவாகப் பாதித்தன. அவற்றைப் பார்த்த பின்புதான் நானும் களத்தில் குதித்தேன்.

ஆனால் அதன் பின்பு அமீர்அலியை விட்டு விட்டு என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.

பிறகு என்ன?

அது ஒரு பிரகடனம் செய்யப்படாத விவாத அரங்குபோலாயிற்று. வழமையான வாசக-விவாதிகளுடன் புதிது புதிதாக பலரும் கோதாவில் இறங்கிவிட, பல நாட்களாக தொடர்ந்தது அந்த விவாதம்.



 0 அந்த விவாதத்திலே நீங்கள் ஒருபக்கம் தனியாகவும் ஏனைய அனைவரும் மறுபக்கமுமாக விவாதித்ததை பார்த்தோம். உங்கள் கருத்துகளிலுள்ள சரி பிழைகள் ஒருபுறமிருக்கட்டும், இப்படியான நிலைமைகளிலே தனியாக எப்படி எதிராளிகளுடன் தாக்குப் பிடிக்கின்றீர்கள் ஜெஸ்லியா..?

ஓ! அதுவா...?

jaffnamuslims.com இல்  எனது பின்னூட்டங்களை அணுகுபவர்களில் பொதுவாக இரண்டு வகையானவர்கள் இருப்பதுண்டு.

 1. குறிப்பிட்ட செய்திக்கு எழுதப்பட்டுள்ள பின்னூட்டத்தை படித்துவிட்டு அதில் நான் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக மட்டும் விவாதிப்பவர்கள்.

 2. என்னுடைய பின்னூட்டத்தை படித்ததும் உடனடியாக எனது பெயரிலுள்ள இணையத்தளத்திற்கும் முகநூலுக்கும் விஜயம் செய்து, அங்குள்ள என்னுடைய ஆக்கங்களையும் நண்பர்களின் ஆக்கங்களையும் மேலோட்டமாக வாசித்து விட்டு அவர்களாகவே என்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்ட பின்பு மீண்டும் வந்து விவாதிப்பவர்கள்.

இதிலே முதலாவது வகையினர் கூடியவரையிலே குறித்த விடயத்தை ஒட்டியே விவாதிப்பதால் அவர்களோடு எனக்கு ஏற்படுவது பெரும்பாலும் கருத்து மோதல்கள் மட்டுமே நிகழ்வதுண்டு.

ஆனால் இரண்டாவது வகையினர், நான் கூறவிழையும் கருத்துகளைப்பற்றியோ அதற்கு அவர்கள் தரவேண்டிய பதில் விளக்கம் பற்றியோ அக்கறைப்படாமல் என்னைப்பற்றிய முன்முடிவோடு என்னைத் தாக்குவதிலும் மட்டம் தட்டுவதிலும்தான் குறியாக இருப்பார்கள்.

இத்தகையவர்களிடம் கருத்துகளோடு மோதுவதைவிட அவர்களது உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையோடும் போராட வேண்டியிருக்கின்றது.

இந்த இரண்டு வகையினர் தவிர,

தமிழ் மொழியில் சரிவர எழுதும் ஆற்றல் இல்லாத காரணத்தால், 'ஜெஸ்லியா உனது பல்லைப் பெயர்ப்பேன்... எழுதுவதற்கு விரல் இருக்காது' என்று ஓரிரு வரிகளை அரைகுறையாக  எழுதிவிட்டு காணாமல் போகும்  மூன்றாம் தரப்பினரும் உள்ளனர். அவர்களை நான் கண்டுகொள்வதேயில்லை.


0 சரி, முதல் இருவகையினரையும் ஒரே விதமாகத்தான் சமாளிப்பீர்களா அல்லது வேறு வேறு வழிகளிலா?


முதல் தரப்பினர், நாம் முன்வைக்கும் கருத்துகளுக்கு தமது பதில் கருத்துகளை மட்டுமே முன்வைத்து விவாதிப்பதால் அவர்களோடு நேரடியாக கருத்து மோதலிலே இறங்கி தீர்வை நெருங்குவதற்கு நம்மால் முடியும்.

ஒருவிடயம் குறித்து வாசகர்கள் தெளிவான தீர்மானங்களை எட்டுவதற்கு முதல் தரப்பினரின் விவாத அணுகுமுறைகள்  பெரிதும் பயனுள்ளவை.

மற்றைய வகையினரிடம் முதலில் அவர்களது பிறழ்வான அணுகுமுறைகளை பொறுமையாக எடுத்துக்கூறி, குறித்த விடயம் தொடர்பாக மட்டும் விவாதிக்குமாறு அறிவுறுத்த வேண்டியிருக்கும். அதைப் புரிந்துகொண்டால் முதல் தரப்பினர் போன்று செயற்படுவார்கள். மாறாக, அலட்சியம் புரிந்தபடியே விவாதத்தை தொடருவார்களாயின் ஒருகட்டத்தில் அவர்களாகவே மூன்றாம் தரப்புக்கு இறங்கிச் சென்று காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் ஒன்று, இவர்களோடு அதிக நேரத்தை செலவிட்டு போராட வேண்டியிருப்பதனால் சிலவேளைகளிலே ஆயாசம் ஏற்படுவதுமுண்டு.


0 முதல் தரப்பினர் மற்றும் இரண்டாம் தரப்பினர் என்று நீங்கள் குறிப்பிட்டவர்கள் எவ்வாறான விடயங்களிலே உங்களோடு விவாதங்களில் ஈடுபட்டார்கள்?


ஆரம்ப விவாதம் என்னவோ அபாயா & நிகாப் உடைகள் பற்றியதுதான்.

ஆனால் என்னோடு நிகழ்ந்த விவாதம் வேறு.

ஆம், ஏற்கனவே கலாநிதி அமீர்அலியின் பேட்டிக் கட்டுரைக்கு வந்திருந்த 29 பின்னூட்டங்கள் கழித்து 30வது பின்னூட்டத்தை நான் முன்வைத்தபோது நமது விவாதிகள் சிலர் ஏனோ பீதிக்குள்ளானார்கள்.

எனது பின்னூட்டங்களையெல்லாம் பெண்களின் உரிமைகள் பற்றிய விடயத்தோடு மட்டுப்படுத்துமாறும், இஸ்லாம் பற்றிய ஏனைய விடயங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் சிறிது மிரட்டல் தொனி கலந்த  வேண்டுகோள் ஒன்றை வைத்தார்கள்.

'அப்படியெல்லாம் எனக்கு ஆணைபோடுவதற்கு நீங்கள் யார்? அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தவர்கள் எவர்?'  என்று நான் அவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டதோடு சூடுபிடித்ததுதான் என்னுடனான விவாதம்.


0 சரி, எந்த விடயம் குறித்து பேசப்பட்டது?

மனிதர்கள் தாம் பின்பற்றும் மதம் என்பது ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தமானது போலவும் அதுபற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படக்கூடாது என்று புனிதம்காக்கும் போக்கு ஒன்றை வலியுறுத்தும் தொனி அவர்களின் வாதங்களிலே இருந்தது.


ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் 'சமூகப்பொறிமுறை'  நமது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தும் வகையிலே அவர்களது வாதத்தை நான் மறுதலித்து வாதிட்டேன்.

அத்தோடு இரு எளிமையான வினாக்களையும் முன்வைத்தேன்.


அவற்றுக்கு பொருத்தமான பதில் தருவதற்கு அவர்களால் முடியாதிருந்தது. அல்லது பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு மதநூல்களிலே இருந்து அளவுக்கு மீறிய அடைப்புக்குறிகளோடுகூடிய பத்திகளை பிரதிசெய்து ஒட்டியே காலத்தை ஓட்டினார்கள். ஆனால் அவை எனது கேள்விகளுக்கு அருகாமையில்கூட வரவில்லை என்பதை நடுநிலை நின்று கவனிக்கும் வாசகர்கள் அறிவார்கள்.

ஒருகட்டத்தில் வழமைபோலவே எனது கருத்துகளுக்கு பதில் கூறமுடியாத நிலைமை உண்டானதும் விட்டுவிட்டு தடம் மாறி தனிப்பட்ட விடயங்களைத் தாக்குவதற்கு இறங்கிவிட்டார்கள். அதனால் விவாதம் தடம்மாறிப் போகலாயிற்று.

0 இரு எளிமையான வினாக்களை முன்வைத்ததாக குறிப்பிட்டீர்கள்..
அவை எவையென்று கூறுங்கள்.

1. இறைவன் ஆணுமல்லாத பெண்ணுமல்லாதவன் எல்லோருக்கும் பொதுவானவான் என்றால், ஆண்-பெண் மற்றும் ஏழை-பணக்காரன் விடயத்திலே எப்படி அவனால் இத்தனை பாரபட்சமாக இருக்க முடிகின்றது?

2. இறைவனின் சட்டங்கள் ஏழைகளையும் பெண்களையும் முறையே அவர்கள் சுரண்டப்படுவதிலிருந்தும் அடக்குமுறைக்குள்ளாவதிலிருந்தும் மீள்வதற்கு வழிபுரியாமல் சமரசம் செய்து கொண்டு அப்படியே வைத்திருப்பதற்குத்தான் என்றால், எப்படி அவை பொதுவானவையாகவும் நீதியானதாகவும் இருக்கமுடியும்..?


0 நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உண்மையிலேயே இறைவன், ஆண்-பெண், ஏழை - பணக்காரன் விடயத்தில் பாரபட்சமாகத்தான் இருந்திருக்கின்றானா?

இல்லவே இல்லை...!

ஒருபோதும் இறைவன் அப்படியிருக்கவே முடியாது. அப்படி பாரபட்சமுள்ளவனாக இருந்தால் நம்மை மீறிய சக்தி அந்த சக்தி இறைவனாக இருக்கவும் முடியாது.


0 உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை. அப்படியானால் எங்கு தவறு உள்ளது என்றாவது விளக்கமாகக் கூறமுடியுமா?


எங்கு தவறு என்று நிச்சயமாக கூறமுடியாவிடினும், ஓரளவு யூகிக்க முடியும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  சூழ்நிலைக்கும் தேவைகளுக்கு தக்கவாறு  வானவர்களின் வழியாக அவ்வப்போது இறைவனால் கூறப்பட்டவற்றின் தொகுப்புகள்தான் குர்-ஆன் எனும் நமது புனித நூல்.


இறைவனின் தூது வருகின்ற வேளைகளில் உடனிருக்கும் தனது தோழர்களிடமோ மனைவியரிடமோ அவற்றைக்கூறி ஒன்றில் எழுதிவைக்கவோ அல்லது மனனம் செய்து வைத்திருக்கவோ பணித்திருந்தார்கள். அவர்கள் அதை தோல்களிலும் மரப்பட்டைகளிலும் எழுதிவைத்துக்கொள்வர். ஆனாலும் அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரையில் அவை தொகுக்கப்பட்டிருக்கவில்லை.


குர்ஆனை எழுதிவைத்துக்கொள்வதற்காக ஒரு குழுவையும் முகம்மது (ஸல்) அவர்கள்  நியமித்திருந்தார். அவர்களில் முகம்மது (ஸல்) அவர்களுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்ற அபூபக்கர் (ரலி), உமர் (ரலி),  உஸ்மான் (ரலி),  அலி(ரலி),  முஆவியா ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். இப்படி தொகுக்கப்பட்ட குர்ஆன் இன்றைய குர்ஆனிலிருந்து வேறுபட்டது.

இன்றுள்ளதைப்போல் அது வரிசைப்படுத்தப்படாமல் வசனங்களின் மொத்தமான தொகுப்பாக இருந்தது. யாருக்கு எந்தப்பகுதி வேண்டுமோ அதை எடுத்து படித்துக்கொள்ளலாம். நமது முஸ்லீம்களின் வணக்கமுறையான ஐவேளை தொழுகையின் போதும் குர்ஆனின் பகுதிகள் ஓதப்படும் இது முஸ்லீம்கள் குர்ஆனை மறந்துவிடாமலிருக்க முகம்மது (ஸல்) அவர்கள் செய்த ஏற்பாடு. 

ஆனாலும் அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரையில் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலத்தில் கலீபாக்களின் காலத்தில்தான் அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றாற்போல 'இது தான் மெய்யான குர்ஆன்' என்று பலவடிவங்களில் குர்ஆன் உலாவத்தொடங்கியது. இதனால் கவலையடைந்த  ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள், தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமர்(ரலி)யின் ஆலோசனையுடன் குர்ஆனை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது. 

அதன்படி ஸைத் பின் ஸாபித் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு முகம்மது (ஸல்) அவர்கள் தொகுத்திருந்த குர்ஆனை, மனப்பாடம் செய்து வைத்திருந்தவர்களின் உதவியுடன் புதிய வடிவத்திலான குர்ஆனாக தயார் செய்து அதுவே அதிகாரபூர்வமானதாக அறிவிக்கப்பட்டது.
ஏதாவது ஐயம் ஏற்படும் வேளைகளில் இந்த குர்ஆனின் அடிப்படையிலேயே தீர்வுகள் பெறப்பட்டன. இந்த குர்ஆன் அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப் பிறகு வந்த உமர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும் அதிகாரபூர்வமானதாக இருந்தது.


உமர்(ரலி)க்குப்பின் அவரின் மகளும் முகம்மது (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) என்பவர்களிடத்திலும் இருந்தது. உமர்(ரலி)க்குப்பின் ஆட்சிக்கு வந்த உஸ்மான் (ரலி) அவர்கள் மீண்டும் ஒரு குர்ஆனை தொகுக்க முற்படுகிறார். உஸ்மான் (ரலி) அவர்கள் தாமே தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வசனங்களை அத்தியாயமாக ஒழுங்குபடுத்தி இன்றிருக்கும் வரிசைப்படி ஒரு குர்ஆன் தயாரிக்கப்பட்டு, அது பல படிகள் எடுக்கப்பட்டு விரிவடைந்திருந்த பல இஸ்லாமிய ஆட்சிப்பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அப்படி அனுப்பிவைக்கப்பட்ட குர்ஆன் படிகளில் இரண்டு இப்போது ரஷ்யாவிலும் துருக்கியிலும் இருக்கிறது.

கி.பி. 610 முதல் கி.பி. 633 ஏறத்தாழ 23 வருடங்களாக மனிதர்களின் ஞாபகத்திலும் முறையாக ஆவணப்படுத்தப்படாத விதத்திலும் இருந்துவந்த இறைவனின் வாக்குகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து வெகுகாலத்திற்குப் பின்பே தேடித்தொகுக்கப்ட்டிருக்கின்றது. ஆயின் இடைப்பட்ட காலத்தில் மனனம் செய்து வைத்திருந்தவர்களில் பலர் இயற்கையாகவோ போர்களிலே பங்குபற்றியோ மரணமடைந்திருக்கலாம். அல்லது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம். மறதி போன்ற மனிதத்தவறுகளுக்கு ஆட்பட்டிருக்கலாம்.


இவைதவிர கலீபாக்களின் ஆட்சிக்காலத்திலே, நாயகம் (ஸல்) அவர்களின் உயிரோடிருந்த  சில மனைவியர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையிலே பனிப்போர் நிலவியிருக்கின்றது. அது ஒருவரையொருவர் வசைபாடுமளவுக்கு வலுவடைந்து விரோதமாக மாறியதற்குக் கூட வரலாற்று ஆதாரமுள்ளது.


அதாவது குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோது தமது தோழர்களுக்கும் மனைவியருக்குமிடையே இருந்த சுமுகமான சூழ்நிலை மாற்றமடைந்திருந்தது.


இவ்வாறான காரணங்களால் இத்தகையோர்களின் ஞாபகத்திலும் பாதுகாப்பிலும் இருந்துவந்த இறைவனின் வசனங்கள் தொகுக்கப்பட்டபோது தவறுகள், விடுபடல்கள், திரித்தல்கள், மறைத்தல்கள், திட்டமிட்ட இடைச்சொருகல்கள் இடம்பெறுவதற்கு இருந்த வாய்ப்புகளை நாம் ஒரேயடியாக மறுத்துவிட முடியாது அல்லவா?


இறைவனின் வசனங்கள் வெளிப்படுத்தப்பட்ட இடத்திலேயே உடனுக்குடன் வரிவடிவம் பெற்றுத் தொகுக்கப்பட்டிருந்தால் மேற்குறிப்பிட்ட தவறுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருந்திருக்கும். ஆனால், நாயகம் (ஸல்) அவர்கள் மரணமடைந்து சில தசாப்தங்கள் கழித்து தொகுக்கப்படுகின்றபோது அதிலே மனிதத்தவறுகள் இடம்பெற வாய்ப்பு அதிகம் இருப்பதை நாம் அலட்சியம் புரியமுடியாது.


இப்படியான விடயங்களை நாம் நமது விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பால் நின்று நடுநிலையாக சிந்தித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


0 ஆனால், 'இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது'(41:42) என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே.  அவ்வாறாயின் எவ்வாறு தவறுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது?

Good question!

எல்லாவற்றையும் அறிந்தவனாகிய இறைவன், 'தனது வார்த்தைகளிலே முன்னும் பின்னும் தவறு வராது' என்பதைத்தான் குறிப்பிட்டிருக்கின்றானேயன்றி தொகுக்கப்படும்போது மனிதத்தவறுகளும் சதிகளும் இடம்பெறாது என்று கூறவில்லை.   இந்த யதார்த்தத்தை  நாம்  புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, போர்முனையில் நின்றிருக்கும் ஒரு தளபதி, துரோகியென சந்தேகிக்கும் தனது படைவீரன் ஒருவனை போர்முனையிலிருந்து அப்புறப்படுத்த திட்டமிடுகின்றார்.

அவனை அழைத்து, அவன் மூலமாகவே தன்னுடைய அரசனுக்கு ஒரு தூது அனுப்புகின்றார். அந்த கடித்தில், 'இந்தக் கடித்ததைக் கொண்டு வருபவனை உடனே தீர்த்துக் கட்டவும்' என்று மட்டும் எழுதியிருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்.

படைவீரன் செல்லும் வழியிலே தற்செயலாக தளபதியின் கடித்ததை திறந்து பார்க்க நேரிடுகின்றது. உடனே அவன் உசாராகி, அரண்மனை வாயிற் காவலன் ஒருவனிடம் கடித்ததை அரசனிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டு மீண்டும் போர்முனைக்கு திரும்பி வந்து தளபதியைக் கொன்று விடுகின்றான் என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது கூறுங்கள் பார்ப்போம். தூதைப் பெற்றுக்கொண்ட அரசன் செய்யவேண்டியது என்ன?


0 என்ன இது, பேட்டி காணவந்த என்னிடமே கேள்வியைத் திருப்பிவிட்டீர்களா?

பரவாயில்லை... நீங்கள் உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.. நான் விடயத்திற்கு வருகின்றேன்.


0 சரி, சொல்கிறேன். கடிதம் தந்த காவலனிடம், "கடிதத்தை தந்துவிட்டது யார் " என்று அரசன் விசாரித்து அவனைத்தேடி ஆளனுப்பி கைதுசெய்ய வேண்டும். அதுதானே?

ஆம், மிகச்சரியான பதில்.

கடிதத்திலிருக்கும் செய்தியானது 'கொண்டு வருபனைக் கொல்!' என்று இருந்தாலும் கூட அது எழுதப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டு அரசன் விவேகமாக நடந்து கொள்வதுதான் ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது. இல்லையா?

அதற்குப் பதிலாக கடிதத்திலே இருக்கும் செய்தியை அப்படியே பின்பற்றுவதுதான் சரியென்று நினைத்து, கடிதம் கொண்டு வந்தவனாகிய அரண்மனைக் காவலனை அரசன் கொன்றால் எப்படியிருக்கும்?


0 அப்படிச் செய்தால் மிகவும் தவறான முடிவாக இருக்கும்.

அதைத்தான் நானும் கூறவருகின்றேன்.

குர்ஆனில், 'இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது' என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மட்டும் நம்பி, குர்ஆனிலேயே நிகழ்ந்திருப்பதற்குச் சாத்தியமான தவறுகளையும் இடைச்செருகல்களையும் நாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் இதைப்போன்றதுதான்.

நீங்கள் உங்கள் வீட்டுப் பரணிலே தேடியெடுத்த ஒரு புத்தகத்தின் தலைப்பு 'புதிய சுகாதாரம்' என்றுள்ளது. ஆனால் அதன் உள்ளே, 'முதற் பதிப்பு – 1930' என்று பொறித்துள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'புதிய' என்று அட்டையில் எழுதி இருப்பதால் அந்தப் புத்தகம் என்ன புதியதா?
 
0 கடைசியாக, நீங்கள் என்னதான் கூறவருகின்றீர்கள்...? குர்ஆனில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்கின்றீர்களா அல்லது இல்லை என்கின்றீர்களா?

 குர்ஆன் என்றில்லை. ஏதாவது ஒரு நூலையோ அல்லது ஆவணத்தையோ எடுத்துக் கொள்ளுங்கள். வெகுசாதாரண மனிதர்களுக்கே இலகுவாகப் புரியும் விடயங்களிலெல்லாம் தவறானதும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தகவல்கள் காணப்பட்டால் அதனைச் சந்தேகிப்பதிலே தவறில்லைதானே?

ஆனால் குர்ஆன் ஒரு சாதாரண நூல் அல்ல. அது நமது எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைகளின் தொகுப்பு.

அதிலேயே ஏற்கனவே கூறியபடி, ஆண்-பெண் விடயங்களிலும் ஏழை-தனவந்தர் பற்றிய விடயங்களிலும் பாரபட்சமான வசனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது அவை இறைவனின் வசனங்களாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது.
ஏனெனில் இறைவன் பாரபட்சமானவன் கிடையாது.

இறைவனது வசனங்களுக்கிடையே திட்டமிட்ட இடைச்சொருகலாக ஆணாதிக்கக் கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளதோ எனும் ஐயம் நடுநிலை நின்று தர்க்கரீதியாக சிந்திக்க முடிந்த யாருக்குமே வரும். அது அப்படி நிகழ்ந்திருந்தால் அவை ஆராய்ந்து கண்டறியப்பட வேண்டும். இதுதான் எனது வாதம்.

நான் இப்படிக் கருதுவதற்கு நம் எல்லோருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனின் பாரபட்சமின்றிய இயல்பின் மீதுள்ள ஆழமான நம்பிக்கையே காரணம்.

0 நான் கேட்பதைத் தவறாக கொள்ள வேண்டாம். நமது குர் ஆனை நீங்கள் முழுமையாகவும் விளக்கமாகவும் படித்திருக்கின்றீர்களா?


ஆம் பலதடவைகள். இப்போதும் கூட அதை மிக ஆழமாக ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்.

0 உங்களுக்கு அரபு மொழியில் போதிய அறிவு உள்ளதா?

நிறையவே உண்டு. அரபு மொழியில் உரையாடவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றிருக்கின்றேன்.

0 நல்லது. உங்களுக்கு குர்ஆன் தொடர்பாக போதிய அறிவும் தெளிவும் இருக்கின்றது.

ஆம், அப்படித்தான் கருதுகின்றேன். நான் சிறுவயதிலேயே பெண்கள் மத்ரஸா ஒன்றில் அரபு மொழியை கற்று குர்ஆனை அதன் முழுமையான அர்த்தத்துடன் மனனம் செய்திருக்கின்றேன்.

தவிர, வளர்ந்த பின்பு, குர்ஆனின் ஆங்கில மற்றும் தமிழ் சிங்கள மொழிபெயர்ப்புகளையும் அசல் குர்ஆனுடன் ஒப்பிட்டுக் கற்றிருக்கின்றேன்.

0 அப்படியானால் மொழிபெயர்ப்புகளிலே ஏதேனும் வேறுபாடுகளை உணர்ந்திருக்கின்றீர்களா?

ஆமாம், சொற்றொடர்களிலே சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பிரதான கருத்திலே அவை பெரியளவிலே வேறுபடவில்லை.
தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தியப் பதிப்புக் குர்ஆன்களுக்குள்ளே பீஜே மற்றும் ஜான் ட்ரஸ்ட் போன்ற பதிப்புகளில் அதிக வித்தியாசங்கள் காணப்படுகின்றன.


0 சரி, இனி வேறு விடயங்கள் பற்றி பேசலாம். உங்கள் ப்ரொபைலில் பிடித்தமான விடயங்களாக இசை, விளையாட்டு போன்றவற்றையும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அது பற்றி சிறிது கூறலாமே.


முதலிலே விளையாட்டு ஆர்வம் பற்றிக் கூறிவிடுகின்றேன். நான் கல்வி பயின்ற பாடசாலை ஒரு கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி என்பதால் வலைப்பந்தாட்டம் கூடைப்பந்தாட்டம் போன்றவற்றிலே எனது திறமையைக் காண்பிக்க முடிந்தது. தவிர கிரிக்கட் ஆட்டத்திலும் ஆர்வமிருந்தது. அதற்குக் காரணம் எனது இளைய சகோதரர் ஒருவர். தன்னுடைய கல்லூரி அணிக்காக அவர் ஆடும் கிரிக்கட் ஆட்டங்களை  பாடசாலைத் தோழிகளோடு சென்று பார்த்து ரசித்திருக்கின்றேன். இப்போதும் அவ்வப்போது நேரம் கிடைத்தால் கிரிக்கட் ஆட்டங்களை சகோதரர்களோடு நேரடியாகச் சென்று பார்ப்பதுண்டு.

0 கிரிக்கட்டில் எந்த அணியை உங்களுக்குப் பிடிக்கும்?

நான் கிரிக்கட்டை ரசிப்பவள். எந்த இரு அணிகள் விளையாடினாலும் நேர்த்தியான விளையாட்டுத் திறமையையும் நுணுக்கங்களையும் ரசிப்பதற்கு என்னால் முடியும்.

ஆனால் தனிப்பட்ட வகையில் நான் மிகவும் ரசிப்பது பாகிஸ்தான் அணியை.


0 அதற்குக் காரணம்?


 
பாகிஸ்தான் அணியை நான் ரசிப்பதற்கு காரணம், அதில் விளையாடுபவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் என்பதற்காக (மட்டும்) அல்ல. அப்படிப் பார்த்தால் பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் அணிகளையும் அல்லவா நான் ரசிக்க வேண்டும்.

ஏனைய கிரிக்கட் அணிகளைப் போலன்றி பாகிஸ்தான் அணியினர் எப்போது எப்படி ஆடுவார்கள் என்று இலகுவிலே எதிர்வுகூற முடியாத அணியாக இருப்பதுவும் அதன் மீது எனக்கு எப்போது அதீதமான ஆர்வம் ஏற்படக் காரணமாகும். கிரிக்கட் உலகில் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி பின்னடைவுக்குள்ளானாலும் அவர்களது அணுகுமுறை மீது எதிரணியினருக்கு எப்போதுமே ஒரு பயம் இருப்பதைக் காணலாம்.
தவிர அவர்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் கிரிக்கட் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுபவர்களாகவும் எதிரணித் துடுப்பாட்ட வரிசைக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பார்கள். அவர்களுடைய துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டங்களும் என்னைக் கவர்வதுண்டு.


0 நமது இலங்கை அணியை ரசிப்பதில்லையா?


ஏன் ரசிக்காமல்? இன்றுள்ள மிகவும் சவாலான அணிகளில் இலங்கை அணியும் ஒன்று. களத்தடுப்பை மிகவும் நேர்த்தியாகப் புரிந்து எதிரணிக்கு மிகுந்த நெருக்கடியைத் தருவதில் நிகரற்ற அணியென்றால் அது இலங்கை அணிதான்.


0 ஒரு நாட்டில் வாழும் மக்கள் தமது அணியை விடுத்து பிற நாட்டு அணிகளுக்கு ஆதரவு தருவது சரியானததானா? பொதுவாக நமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தேசிய உணர்வு இல்லாதவர்கள் என்று குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுவதுண்டு. அதற்கு இலகுவாக உதாரணம் காண்பிப்பது நமது சொந்த அணியான இலங்கையை விட பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற விடயங்களைத்தான். அதனால்தான் இதைக் கேட்கின்றேன்.

 

அப்படியானால் விளக்கமாகத்தான் பதில் கூறவேண்டும்.

ஒருநாட்டில் வாழும் மக்கள் தமது தேசிய உணர்வைக் காண்பிப்பதற்கு  எத்தனையோ உருப்படியான வழிகள் உள்ளன. உதாரணமாக பஸ் ரயில் போன்ற பொது வாகனங்களிலே பயணிக்கும்போது அங்குள்ள ஆசன இருக்கைகைகளை கிழிக்காதிருத்தல், பாத்ரூமை சுத்தமாக வைத்திருத்தல், கண்ணாடியை உடைக்காதிருத்தல், சீலிங்பேனைக் கழற்றாதிருத்தல் இப்படி எத்தனையோ விடயங்கள் உள்ளன.

இத்தனை விடயங்களையும் உறுத்தலில்லாமல் செய்யும் நமது   பிரஜைகள், கிரிக்கட் விளையாட்டில் மட்டும் வெறுமனே  ஊதுழலை ஊதிக்கொண்டு இலங்கைக்கு சப்போர்ட் பண்ணுவது மட்டுமே தேசிய உணர்வாகிவிடாது. தவிர, விளையாட்டுகள் என்பதும் அதனை ரசிப்பதும் உலகளாவிய விடயம்.


உதாரணமாக  ஐஸ்ஹொக்கி, பனிச்சறுக்கிலே நாட்டமுள்ள ஒரு ரசிகரால் இலங்கையணிக்கு எவ்வாறு சப்போர்ட செய்வது?

விளையாட்டுத் திறமைகளை ரசிப்பதற்கு நாடு ஒன்றும் தடையாயிருக்க முடியாது என்பதுதான் எனது எண்ணம். அதனை நிரூபிப்பது போல ஐபிஎல் மேட்ச்கள் இப்போது வந்துள்ளன.

ஆனால் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வரும்போது மட்டுமே நமது முஸ்லீம் இளைஞர்கள் இரு பிரிவுகளான நின்று ஆதரவு தருவதை தீய சக்திகள் இனவாதக் கண்கொண்டு பார்ப்பதையும் அவற்றை நமது தலைவர்களும் கூட ஆதரிப்பதை பார்க்கும்போதுதான் கவலையாகவுள்ளது.



 0 பிடித்த கிரிக்கட் வீரர்கள் பற்றி...?


நிறையப்பேரைப்பிடிக்கும் பழையவர்களிலே சனத், சச்சின் டெண்டுல்கர், ட்ராகுல் ட்ராவிட், சவ்ரவ் கங்குலி, வாசிம் அக்ரம், சொகைப் அக்தார், ப்ரெட் லீ, ப்ரையன் லாரா, இன்சமாமுல் ஹக், சங்கக்கார மற்றும்  இப்போதுள்ளவர்களிலே டேவிட் வார்ணர், வாட்சன், க்றிஸ் கைல், டேவிட் மில்லர் என்று மிகப்பெரிய பட்டியல் உண்டு.


0 அப்படியானால், உங்கள் மிக விருப்பமான அணியின் நட்சத்திர வீரர் சஹிட் அப்ரிதியை பிடிக்காதா?


அட, அவரை யாருக்காவது பிடிக்காமல் கூட இருக்குமா?

அவரது ரசிகர்களைக் கவரும் தன்மையுள்ள வேகத் துடுப்பாட்டமும் பல்வேறு விதமாக பந்து வீசும் திறனும் தானும் உற்சாகமாகி மற்றவர்களையும் உற்சாகப்படத்தும் குணமும் நிச்சயம் யாருக்கும் பிடிக்கும்.

அதுமட்டுமல்ல, தனது முதல் இன்னிங்க்ஸிலேயே அதுவும் அன்றைய உலகச் சாம்பியனான இலங்கையணிக்கு எதிராக 37 பந்துகளில் வேகச்சதமடித்து இன்றுவரை 16 வருடங்களாக உடைக்கப்படாமல் இருக்கும் சாதனைக்குச் சொந்தக்காரரல்லவா அவர்?

ஆனால் அவரது கிரிக்கட் அணுகுமுறை மீது தீவிர விமர்சனம் எனக்குண்டு. எந்தவொரு நீளத்தில் வீசப்படும் பந்தையும் மைதானத்திற்கு வெளியனுப்பும் அவரது திறமையை  மதிக்கும் அதேவேளை சற்றுப் பொறுமையாக விளையாடினாரேயானால் அணியில் நீண்ட காலத்திற்கு நிலைத்து வெற்றிகரமாக ஆடமுடியும் என்பதுதான் எனது முதல் விமர்சனம்.

 

0 அப்பபடியானால் அதிகளவு பந்துகளை விரயம் செய்து இறுதியிலே எதுவித பிரயோசனமுமின்றி   ஆட்டமிழந்துவருகின்ற மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் விளையாடும் முறை தவறானது என்கின்றீர்களா?


நான் அப்படிக் கூறவில்லை.

ஒவ்வொரு வீரருக்கும் என்று தனித்துவமான பாணி உள்ளது. அதனை அணியின் நிலைமைக்கு ஏற்றபடி பயன்படுத்தி ஆடுவதுதான் சாதுரியமானது. வலுவான நடுவரிசைத் துடுப்பாட்டம் காத்திருக்கும் வேளையில் அப்ரிடியை சற்று முன்னதாக அனுப்பி விளாசலாம். இதனால் எதிரணியின் பந்து வீச்சு நிலைகுலைந்து போகலாம். ஆனால் நடுவரிசை பலகீனமாக இருக்கும்போது அப்ரிடியை 5வது இடத்திற்கு ஆனப்புவதே நல்லது. துணைக்கண்ட ஆடுகளத்தில் இது உசிதமானது. ஆனால் பந்துகள் எகிறிவருகின்ற பச்சை ஆடுகளங்களில் இதை மாறுபடுத்திக் கொள்வது நல்லது.

அண்மையில் எனது நண்பர் ஒருவர் இப்படிக் கூறினார்: 

"மிக வேகமான துடுப்பாட்ட வீரரும் மிகமந்தமான துடுப்பாட்ட வீரரும் ஒன்றாக விளையாடும் அணி பாகிஸ்தான் அணிதான்"


அப்ரிடி போன்ற வீரர் ஒருவர் தமது அணியில் இருந்தால்  அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற அணிகள் அவரை உச்சளவில் பயன்படுத்தியிருந்திருக்கும்.

எங்கு தவறுள்ளதோ தெரியவில்லை, ஆனால் பாகிஸ்தான் தேர்வுக்குழு அவரை சரிவரப் பயன்படுத்தாமல் விரயம் செய்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றுகின்றது.

(Contd...)
 
Note:
*இந்தப்பேட்டி முழுவதும் skyb தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்டது.
*ஜெஸ்லியாவிடம் கேட்பதற்காக கேள்விகள் வந்து குவிந்த வண்ணமுள்ளன. இந்த நீண்ட பேட்டி முடிவடைந்ததும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் ஜெஸ்லியா. - Omar Muktar

 

No comments:

Post a Comment