ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.
பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ முக ஒப்பனைகளோ அவள் செய்துகொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப் போலப் பேசுகிறாள் என்று சொல்ல முடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்குப் புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள் sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அவையெல்லாம் ஆரம்பத்திலேதான். ஆனால் வெகு விரைவிலேயே அவள் தன்னைத் திருத்திக்கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.
கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோலப் பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும் கறுத்துச் சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள் அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். ‘யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?’ அவள் எப்படிப் பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக் கூடத்துக்குப் போனாள், வந்தாள். அதைத் திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்குப் பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.
அன்று நடந்த கூடைப்பந்துப் போட்டியைப் பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை. கூடைக்குள் பந்தைப் போட வேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும் நீளமான சிவப்புக் காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து ஆரவாரித்தார்கள்; சிலவேளைகளில் பந்தைக் கூடையில் போடாதபோதும் கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளைத் திகைப்படையவைத்தது. அவளைப் போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.
இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்குத் தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒரு நாள் அவள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையைச் சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. ‘பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வர வேண்டும்’ என்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது ‘நீ உங்கள் நாட்டு இளவரசியா?’ என்றான். ‘இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டைத் தேட வேண்டும்’ என்றாள். ‘நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் தன் அறையில் தங்க முடியுமா என்று கேட்டான். அதற்குப் பிறகு அவனும் மறைந்துபோனான்.
இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரும் முன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் வீதியிலும் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளைத் தன் வகுப்புத் தோழிகளுக்குச் சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறித் தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.
சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், ‘நான் அமெரிக்கக்காரியா?’ தாய் சொல்வார், ‘இல்லை, நீ இலங்கைக்காரி.’ ‘அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?’ ‘அது முடியாது.’ ‘நான் அமெரிக்காவுக்குப் போனால் ஆக முடியுமா?’ ‘இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.’ ‘நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?’ ‘நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.’ அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்குப் பெரிய ஏமாற்றமாகப்போய்விடும்.
மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளைப் பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர் போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.

நன்றிகூறல் நாள் விருந்துக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்குப் போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.
அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கைச் செய்தித் துணுக்குகளை அவளுக்காக வெட்டிவைத்து அவளிடம் தந்தது அவள் மனத்தைத் தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரைப் பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடிக் கடிதம் எழுதும் விலாசத்தைத் தான் மாற்ற வேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாகப் போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.
இரவானதும் சோபாவை இழுத்துக் கட்டிலாக்கி அதில் அவளைப் படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச் சாமம்போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்குப் பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனைத் துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.
அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சாரக் கலைநிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். ‘பாரம்பரிய நடனம்’ என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையைக் கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனைசெய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவுசெய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாகப் பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.
அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையைக் கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன் 16 கம்பிகள் கொண்ட அந்தப் பெண்கள் வாத்தியத்தைத் தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாகத் தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் தன்னுடைய பெயர் லான்ஹங் என்றான்.
அடுத்த நாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். ‘உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?’ என்றான். அவள் ‘மதி’ என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்’ என்றாள். ‘அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?’ அவள் ‘புத்தி’, ‘சந்திரன்’ என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். ‘வியட்நாமியருக்குச் சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கியப் பங்கு உண்டு’ என்றவன் தொடர்ந்து ‘நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது’ என்றான். ‘அப்படியா? நன்றி’ என்றாள். ‘தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?’ இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காகக் கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.
‘கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாயே’ என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு ‘அந்தத் தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டிவைத்தால் அந்தத் தாயைச் சிசுவதைச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்’ என்று சொல்லிவிட்டுப் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோலப் பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியவில்லை.
இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்குப் பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்க வேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ உட்காரும்போதோ பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப்படுத்த அவள் வேறு எவ்வித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.
ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்குக் கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருதடவை வெளிக்கிட்டுப் பட்டணத்துக்குப் போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களைச் சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டிச் சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அது பற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். ‘அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்குப் பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்றுக் குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாதக் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னைத் திரும்பவும் பார்க்க வேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’
லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘என்னை ஆச்சரியப்படுத்து.’ இரவு நேரத்தில் இருவரும் உணவருந்தச் சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான். சினிமாவுக்கு போவார்கள். ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்பாள் இவள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான்.
ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல
கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகுநேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதைப் பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையைத் தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்துக் கையில் வைத்துத் தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.

மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக் கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனத்தில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சிச் சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரைக் கண்டதும் ஒரு பழங்காலத்துப் போர்வீரன்போலத் துள்ளிப்பாய்ந்து அவள் முன் வந்து குதித்தான். ‘இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?’ என்றாள் மதி. உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித் தன்மையான ஆடையில் வசீகரமாகக் காட்சியளித்தாள் அவள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்து விட்டு ‘இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது’ என்றான். ‘அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து’ என்றாள்.
‘இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?’
‘எனக்குத் தெரியாது, நீ சொல்’ என்றாள் அவள். ‘ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்குப் பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்குத் தெரியுமா?’
‘இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.’
‘பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.’
‘இதை ஏன் எனக்குச் சொல்கிறாய்?’
‘நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.’
அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.
‘பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.’
அவள் முனைவர் படிப்பைத் தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்குப் பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியைச் சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். ‘வியட்நாமியச் சடங்கு இல்லையா?’ என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்துக் கடித்துக் சாப்பிட்டான். மீதியை அவள் கடித்துக் சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.
மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்கப் பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும் நோட்டுப் புத்தகங்களும் குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்க முடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணிநேரமாக வீட்டைத் துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.
முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்க வேண்டியிருந்தது. சில நாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். ‘அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.’
ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக் கட்டுரையைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களைத் தள்ளிப் படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். ‘இந்த உலகத்தில் ஆகச் சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. நமக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்க வேண்டும். நாம் ஒரு மருத்துவரை பார்க்கலாம்’ என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.
மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ‘என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து’ என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தைப் பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளே போனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டு போனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்க வேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.
அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்னும் வெறி உண்டானது. மதியின் தாயாருடைய கடிதங்கள் ‘நீ கர்ப்பமாகிவிட்டாயா?’ என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில் படுத்திருந்த அவளிடம், ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாள முடியாமல் இருந்தது. ‘இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்துச் சங்கிலியில் பேனாவைக் கட்டி வைப்பதுபோல நான் உன்னைக் கட்டிவைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்துப் பிள்ளை பெற்றுக்கொள்’ என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் தலையை மேலும் அழுத்திபடுத்துக்கொண்டாள்.
அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் - மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆய்வுக் கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய்விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார் சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து மாணவர்களும் மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.
அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காகச் சேமித்துவைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து மிக்ஷிதி கருத்தரிக்கும் முறையைப் பரிசோதிப்பது எனத் தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களைத் தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறையச் சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளைத் தயார்செய் தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவளுக்குள் செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவமனையில் போய்ச் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். ‘நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.’
அவளுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவப் பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளைச் சொன்னாள். ஒரு நாள் கேட்டாள், ‘இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்கக் கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாகப் பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துத் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். ‘எனக்கு ஒரு அமெரிக்கப் பிள்ளை பிறந்திருக்கு.’ ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்கத் தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்கக் கிராமத்தில் அலைவாள்.
இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சைப் பிடித்துப் பட்டணத்துக்குப் போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.
இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. ‘மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?’
‘பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.’
‘அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?’ குழந்தையைத் தூக்கி டெலிபோனுக்குக் கிட்டப் பிடித்தாள். ‘மகளே, குழந்தைக்கு என்ன பேர் வைத்தாய்?’ அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பைச் சத்தம்தான் கேட்டது.
‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளைப் பார்க்க வேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’
இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன.
அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப் போலக் கொண்டையைச் சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டைப் பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டுப் பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.
‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லித் தப்பியோட முயலமாட்டாள்.
பல்கலைக்கழகக் கலாச்சார ஒன்றுகூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டிவந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக் கொள்வாள்.
-அ. முத்துலிங்கம்
Thanks : Kalachuvadu