Tuesday, September 24, 2013

கடிதம் பேசுகின்றது..




நான் ஒரு கடிதம் பேசுகின்றேன்:


மெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் சம்மர்விலே எனும் ஓர் அழகிய கிராமம் உள்ளது. அங்கு வாழும் றூத் ஹவ்லீ எனும் ஒரு பாடசாலை மாணவியால் இலங்கையிலே திருகோணமலையில் வசித்து வரும் நஸ்ரன் எனும் தனது பேனா நண்பிக்கு எழுதப்பட்டவள்தான் நான். என்னுடைய உடல் தூய்மையைப் பிரதிபலிக்கும் சுத்தமான  வெண்ணிற பளபளப்பான காகிதத்தினாலானது. அதிலே முத்து முத்தாக எழுத்துகள் எனும் பூக்களை அர்த்தமுள்ள வார்த்தைச்சரங்களாக வெகுநேர்த்தியாகக் கோர்த்து உருவாக்கி தனது உணர்வுகளால் நறுமணம் வீசச் செய்திருக்கின்றாள் அந்த அமெரிக்க மாணவி.
என்னை எழுதி முடித்ததும் அவள் அழகான உறையொன்றிலிட்டு விமானத் தபால் சேவைக்குத் தேவையான அஞ்சல் தலைகளை ஒட்டி தனது வீட்டுக்கு அண்மையிலுள்ள ஒரு தபாற்பெட்டியினுள் இட்டாள். அந்தப் பெட்டிக்குள் என்னைப்போலவே இன்னும் பலர் ஒன்றாகக் குவிந்து கிடந்தோம். மறுநாள் காலையில்  எங்கள் அனைவரையும் அங்குள்ள தபால்காரர் ஒருவர் வந்து பை ஒன்றினுள் சேகரித்து உள்ளுர் தபால் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார். அங்குள்ள ஊழியர்களால் நாங்கள் முகவரிகளுக்கேற்ப வகை பிரிக்கப்பட்டோம். இரண்டு தினங்களின் பின்பு நான் நியூயோர்க் விமான நிலையத்திலுள்ள தெற்காசிய நாடுகளுக்கான அஞ்சல் பிரிவுக்கு அனுப்பப்பட்டேன். அங்கிருந்து இலங்கைக்கான விமானத்தில் தபால் பொதிக்குள் திணிக்கப்பட்டு பயணித்தேன். இங்கு கொழும்புக்கு வந்ததும் நகரிலுள்ள மத்திய தபால் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டேன். அங்கு ஏறத்தாழ ஒரு வாரகாலமாக தேங்கிக்கிடந்த பின்பு தபால் ஊழியர்களால் ஊர் வாரியாக வகைப்படுத்தப்பட்டதிலே திருகோணமலைக்கான ஒரு பெரும் பொதியினுள் அடக்கப்பட்டேன். அன்றைய தினம் இரவுத் தபால் புகையிரதத்தின் மூலம் மறநாள் காலையில் திருகோணமலை நகருக்கு வந்து சேர்ந்தேன்.  அங்குள்ள பிரதான அஞ்சல் அலுவலகத்தின் விநியோகப் பிரிவினரால் சரியான முகவரிக்கு ஒரு தபால் ஊழியர் மூலமாக நஸ்ரினிடம் ஒப்படைக்கப்பட்டேன்.
என்னைக் கண்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விபரிக்க முடியாது.  உடனடியாக உறையிலிருந்த என்னைப் பிரித்து பலமுறை படித்து மகிழ்ந்தாள் அவள். அதுமட்டுமா என்னைத் தனது இருகைகளிலும் தாங்கிக் கொண்டு தனது குடும்பத்திலுள்ள அனைவரிடமும் சென்று படித்துக் காட்டினாள். அப்போதுதான் எத்தனை காலம் போனாலும் எங்களைப் போன்றோருக்கு இன்னும் மதிப்பும் மரியாதையும் ஒரேயடியாகக் குறைந்து விடவில்லை என்ற  உண்மை புரிந்தது.
இன்றைய நவீன உலகிலே கைத்தொலைபேசி, குறுஞ்செய்திச்சேவை, தொலைநகல், இலத்திரனியல் அஞ்சல் சேவை என்று பல்வேறு தொடர்பு சாதனங்களின் வருகையால்  எங்களது சேவை கணிசமாக குறைந்து போய்விட்டது. இன்றைய தலைமுறையினர் எங்களுக்கு 'நத்தைத் தபால்' என்ற காரணப்பெயரிட்டு அழைத்தாலும் கூட ஒருகாலத்தில் தொடர்புசாதன உலகிலே நாங்கள்தான் தனிக்காட்டு ராஜாக்களாக இருந்து வந்தோம் என்பதை அறிவீர்களா?
ஆரம்ப காலத்தில் உலக நாடுகளை ஆட்சிபுரிந்த பேரரசர்களுக்கும் குறுநில மன்னர்களுக்குமாக மட்டுமே ஆரம்பமான எங்கள் பரிமாற்றம் காலப்போக்கில் சாதாரண பிரஜைகளுக்கும் உரியதானது. முதலில் ஓட்ட வீரர்கள் மூலமாகவே எங்கள் சேவை ஆரம்பமானது. நாளடைவிலே குதிரை வீரர்கள் மூலமாகவும் பின்னர் நீராவி ரயில்கள் மூலமும் தொடர்ந்து வந்து இன்று அதிவேக விமானங்கள் வரை வந்துவிட்டோம்.
உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களின் தொடர்புகளை நாமே நடாத்தி வந்தோம். எத்தனை வகையான மனிதர்களையும் உறவுகளையும் உணர்வுகளையும் நாம் இணைத்திருந்தோம் தெரியுமா?  வேலைக்குச் சென்றுள்ள கணவனையும் வீட்டிலே காத்திருக்கும் மனைவியையும் நாம் இணைத்தோம். இராணுவத்தில் சேவையாற்றும் மகனையும் அவன் நலம் குறித்து ஏங்கும் பெற்றோர்களையும் நாங்கள் ஒன்றிணைத்தோம். தாயையும் மகனையும் தகப்பனையும் மகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் உற்ற நண்பர்களையும் முற்றாகப் பிரிந்து விடாதிருக்கும் வண்ணம் நாம் பிணைத்திருந்தோம். அதுமட்டுமா, ஒரே ஊரில் வாழ்ந்தபோதிலும் தமது எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் ஆசையிருந்தும் சந்தித்துக் கொள்ளவோ பிறரிடம் நம்பித் தூதுவிடவோ முடியாமல் தவித்த கோடிக்கணக்கான காதலர்களை காப்பாற்றியதும் நாங்கள்தான். ஆம் அன்றைய காலத்தில் அவர்கள் தமது உணர்வுகளை எழுத்தில் வடித்து பரிமாறிக்கொள்ள உதவியதும் நாங்கள்தான்.
ஒருகாலத்தில் இவ்வாறு தமது உறவுகளுக்குள் எழுத்துகள் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளப்பட்ட எங்களால்தான் 'கடித இலக்கியம்' என்ற அரிய வகை இலக்கியம் உருவாகி இன்னும் அது போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறியவேண்டும். எமது அண்மை நாடான பாரத தேசத்தின் முதற்பிரதமரும் ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படுபவருமான ஜவகர்லால் நேரு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்த காலத்திலே தனது மகளாகிய இந்திரா பிரிதர்சினிக்கு எழுதியகடிதங்கள் நினைத்துப் பாருங்கள். அவர் தனது மகளுக்கு எழுதிய கடிதங்களிலே உலக வரலாற்றை வெகுஎளிமையாகவும் சுவாரசியமாகவும் விபரித்து எழுதியிருந்தார். அவற்றை வாசித்ததால் ஏற்பட்ட ஆர்வத்தினால் உந்தப்பட்டு பிற்காலத்தில் சமூக அரசியலிலே ஈடுபட்டு இந்தியாவின் துணிச்சலான பிரதமர் என்ற அழியாப்புகழ்பெற்றவர்தான் திருமதி இந்திரா காந்தி அவர்கள். இப்போது அந்தக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன.
எங்களால்தான் இந்த உலகிற்கு முத்திரை சேகரித்தல் எனும் ஒரு பயனுள்ளதும் பொது அறிவுக்கு உவப்பானதுமான பொழுதுபோக்கு உருவானது. இரவு ரயில் வண்டிகளுக்கு தபால் வண்டி எனும் பெயர்கள் ஏற்பட்டன. எத்தனையோ சிக்கலான வழக்குகளுக்கு நாங்கள் சாட்சிகளாகவும் சான்றுகளாகவும் ஆகியிருக்கின்றோம்.
எங்களது சேவைபற்றிய பல சிறுகதைகள், நாவல்கள் நாடகங்கள் போன்ற அச்சு இலக்கியங்கள் மாத்திரமன்றி திரைப்படங்கள், திரையிசைப் பாடல்கள், குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களும் வெளிவந்துள்ளன. The Postman எனும் பிரெஞ்சுத் திரைப்படம் பல உலகத்திரைப்பட விழாக்களில் இன்றும் திரையிடப்பட்டு வரும் ஒன்றாகவுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு 'பொக்கிசம்' எனும் தென்னிந்தியத் தமிழ் திரைப்படம் 1930-40 களில் வாழ்ந்த ஒருகாதல் ஜோடியின் பரிமாறல்களுக்கூடாக எங்களது சேவையை அற்புதமாக விபரித்திருந்தது.
இதுபோன்று எங்களது மகிமையைப் பற்றி எல்லையின்றி விபரித்துக்கொண்டே செல்லமுடியும். இனிவரும் காலங்களில் எங்களது இருப்பு பற்றிய ஐயம் இருந்தாலும் அன்று முதல் இன்றுவரை மக்களின் வாழ்க்கையுடன் உணர்வுபூர்வமாக பின்னிப்பிணைந்து வந்திருக்கும் மாட்சிமை மிகுந்தவர்களான எங்களைப்பற்றிச் சிறிது பேசுவதற்கு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகின்றேன்.
நன்றி.
 
-பாத்திமா பாராஃ பாயிஸ்>
(தி/ அந்நஹார் மகளிர் மகாவித்தியாலயம்>
மூதூர்)