Friday, September 23, 2011

அடப்பாவிகளா!

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!






I


ண்மையில்  அனுராதபுரம் பழைய நகர்பகுதியில் ஒட்டுப்பள்ளம் என்ற இடத்திலே அமைந்திருந்த முஸ்லிம்களின் சியாரம் என அழைக்கப்படும் ஒரு கல்லறை விஷமிகள் சிலரால் பகிரங்கமாக உடைத்துத்தரைமட்டமாக்கப்பட்டது. இந்தச் செய்தியை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இதை யார் செய்தார்கள் எதற்காகச் செய்தார்கள் என்ற வாதப் பிரதி வாதங்கள் பல நடந்து கொண்டிருக்கையில் இது குறித்த நாம் சில கருத்துக்களை முன் வைக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது குழுவினரைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்படும் சின்னங்களை மாற்றுக் குழுவினர் அல்லது விஷமிகள் குழுவினர் திட்டமிட்டு அழிப்பது போன்ற பல்லாயிரக்கணக்கான சம்பவங்கள் மனித வரலாற்றிலே இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இப்படியான விஷமத்தனங்கள் மூலம் குறிப்பிட்ட மக்களைச் சீண்டிக் கோபப்படுத்தி அதனை ஒரு பெரிய விவகாரமாக ஊதிப்பெருப்பித்து தங்களது குறுகிய நோக்கங்களை கேவலமான வழியில் அடைந்து கொள்வதுதான் இதற்குக் காரணமானவர்களின் நோக்கமாக இருக்கவேண்டும்.

அதேவேளை இந்தியாவின் அயோத்தி நகரில் 2006 டிசம்பர் மாதம் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்புச்சம்பவம் ஏனோ நினைவுக்கு வருகின்றது.  அந்தவேளை மசூதி இடிக்கப்பட்ட விடயம் பல்வேறு பிரிவினராலும் வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகிக் கொண்டிருந்தவேளையில் நடிகர் கமலஹாசன், "அடப்பாவிகளா, உங்களது மதச்சண்டையில் இந்தியாவின் ஒரு வரலாற்றுச் சின்னத்தை அநியாயமாக உடைத்து விட்டீர்களே!" என்று ஒரு கருத்தை தனது ஆதங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

உண்மையில் மற்ற எல்லாவற்றையும் தாண்டி இதைத்தான் நாம் நிறைய யோசித்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களின் போற்றுதலுக்குரிய விடயம் என்பதற்காக நமது உலகின் / தேசத்தின் மனிதவாழ்வின் கலாசார சின்னங்களை அப்படியே மாற்றி மாற்றி அழித்துக் கொண்டிருந்தால் இறுதியில் நமது எதிர்கால சந்ததிக்காக நாம் விட்டு வைக்கப்போகும் வரலாற்றுச் சின்னங்களும் அடையாளங்களும்தான் எவை?

அனுராதபுரத்தில் சியாரம் அழிக்கப்பட்டாலென்ன அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டாலென்ன ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலை தகர்க்கப்பட்டாலென்ன நஷடம் என்னவோ நம் எல்லோருக்கும்தான்.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!


II









திலே இன்னுமொரு விடயமும் உண்டு.

இது சிறிது சர்ச்சைக்குரியதுதான் என்றாலும் குறிப்பிடாமல் விடுவது எழுத்து நாகரிகத்துக்கு உரியதல்ல.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களிடம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சில கொள்கைகள் இருந்து வருகின்றன. சில குழுவினர் தமது மதநம்பிக்கை காரணமாக  சமயப் பெரியவர்கள் அல்லது மகான்கள் எனக்கருதப்படுவோரின் இறந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை புனிதமான இடங்களாக கருதி அதிலே பிரார்த்தனைகள் நேர்ச்சைகள் வைத்து வருகின்றனர்.

அதே வேளை இன்னும் சிலர்,  மேற்குறிப்பிட்ட விடயங்களும் இடங்களும் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறானது என்றும் அத்தகைய கல்லறை வழிபாடுகள் புரிவது இறைவனுக்கு இணைவைப்பதை ஒத்தது என்றும் கூறி மறுதலித்தும்  வருகின்றனர்.
இந்த இரு பிரிவினருக்குமிடையில் நீண்டகாலமாகத் தொடரும் பனிப்போரும் அவ்வப்போது அங்காங்கே தலைகாட்டும் பதற்ற நிலைமைகளும் இருந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை.

இதன் விளைவாக, ஒரு காலத்திலே நமது நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக இருந்து  வந்த சியாரம்கள் பல நம்மவர்களாலேயே அழித்தொழிக்கப்பபட்டிருக்கின்றன. அந்த சியாரம்கள் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு  முரணான அடையாளச் சின்னங்கள் என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையானோரிடம் அபிப்பிராயமிருப்பதால் அவை அழிக்கப்பட்ட வேளைகளில் யாரும் அதை ஒரு பெரிய விடயமாகவே கருதியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், இப்போது அனுராதபுரத்திலே சியாரம் அழிக்கப்பட்டதற்கு முஸ்லிம்கள் அனைவரும் -கொள்கை வேறுபாடுகளையெல்லாம் தாண்டி- ஏதோ ஒரு வகையில் கவலை கொண்டுள்ளதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

இந்த சியாரம்களும் அது போன்ற வேறு சின்னங்களும் சர்ச்சைக்குரிய விடயங்களான போதிலும் இதிலுள்ள சரி பிழைகளுக்கப்பால் நின்று பார்த்தால் இதுவரை காலமும் அவை தங்களையறியாமலே ஒரு வரலாற்றுப் பணியை செய்து வந்திருக்கின்றன.

அதாவது  பண்டைய காலந்தொட்டு இலங்கைத் தீவில் எங்கெல்லாம் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்களோ அங்கெல்லாம் அங்கனம் முஸ்லீம்கள்  வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களாகவும் மறுக்கவே முடியாத வரலாற்றுச் சின்னங்களாகவும் இந்த சியாரம்கள்  இருந்து வந்திருக்கின்றன. அவற்றை நாமே அழித்தொழித்ததன் மூலம் இலங்கை முஸ்லீம் மக்களில் ஒரு சாராரின் கொள்கைப் பிடிப்புகள் வேண்டுமானால் காப்பாற்றப்பட்டு நலமாக இருந்திருக்கலாம்.

ஆனால் மறுபுறத்தில் அது  தங்களது  முன்னோர்களின் ஆதாரங்களை தாமே அழித்துத் தீர்த்து விட்ட செயலாகவும் மாறிவிட்டதுதான் பரிதாபம். அன்று தமது கொள்கைக்காக முஸ்லீம்களே சியாரம்களை மூர்க்கமாக உடைத்துத் தரைமட்டமாக்கிய போது ஆதரித்தும் ஆமோதித்தும் நின்றவர்கள் இன்று அதே அக்கிரமத்தை அந்நியர்கள் அதிகார வெறியுடன் புரியும்போது...  

 தான் இகழ்ந்த வார்த்தைகளையே பொறுக்கியெடுத்து  தன் தாய்க்குத் வேறு ஒருவன் பழி கூறப் பார்த்து நிற்கும்  மகனைப்போல...


எந்தவிதமான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.



- Jesslya Jessly