Monday, April 1, 2013

பொதுபல சேனாவுக்கு பகிரங்க ஆதரவு

 


கடந்த March10ம் திகதி ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


 
-Jesslya Jessly


க்கள் மீதுள்ள அக்கறைத் தளத்தில் தீங்கற்ற செயற்பாடு போல் தென்பட்டாலும், சர்ச்சைக்குரிய நகர்வொன்றை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த 9ம் திகதி மேற்கொண்டிருப்பது பல்வேறு மட்டங்களில் ஊகங்களை ஏற்படுத்தி விட்டுள்ளது,

கடந்த மார்ச் 09, சனிக்கிழமை ஜனாதிபதியின் சகோதரரும், தற்போது இலங்கையில் இரண்டாவது பலம் வாய்ந்த நபராக குரிப்பிடப்படுபவருமான கோட்டபாய இனவாதப் பாசிச அமைப்பான, பௌத்த சக்திப் படை எனும் பொருள்படும் பொது பல சேனாவுடன் தொடர்புடைய அமைப்பொன்றின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அதன் கட்டடத்தை திறந்துவைத்தார்.

தென் மாகாணத்தின் தலைநகரான காலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். வரலாற்றில் றுஹுண என அறியப்படுகின்ற தெற்குப் பிரதேசத்தின் வஞ்சவல பகுதியின் பிலன எனும் இடத்தில் இந்தப் பயிற்சியகத்தின் கட்டடம் கவர்ச்சிகரமான சுற்றயல் பகுதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

குறித்த பயிற்சியகம் தமது அங்கத்தவர்களான பிக்குகளினதும், பௌத்த தலைவர்களினதும், பௌத்த ஆர்வலர்களான இளைஞர்களினதும் தலைமைத்துவ தரத்தை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக பொது பல சேனா குறிப்பிடுகிறது. மேலும் ஏதிர்காலத்தில் இப்பயிற்சியகம் முழு வசதிகளும் கொண்ட பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஆரம்ப விழாவுக்கு வண. பள்ளத்தற சுமணஜோதி மகாநாயக தேரோ தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றியவர்களுள் “மெத் செவன” என பெயர்சூட்டப்பட்டுள்ள குறித்த பயிற்சியகத்தின் தலைவர் வண. எம்பிலிப்பிடிய விஜித தேரோ மற்றும் பொது பல சேனாவின் செயலாளர் நாயகம் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோர் முக்கியமானவர்களாகும்.

சாதாரண நிலைமைகளின் கீழ் இவ்வாறான உயர்தரமான நோக்கங்களையும் இலக்குகளையும் கொண்ட பயிற்சியகம் ஒன்றை திறந்துவைப்பது எவ்வித தவறுமற்றதாகவே நோக்கப்படக்கூடியது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு செய்வது மற்றும் பொது பல சேனாவுக்கு அவர் மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதாக ஏற்கெனெவே சந்தேகங்களும் இதன் பின்விளைவுகள் தொடர்பான அச்சங்களும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.

உரை

இந்த விடயம் திறப்பு விழா உரையின் பொது கோட்டபாயவினாலேயே வெளியிடப்பட்டது.

இந்த உரையின் போது கோட்டபாய “பலர் என்னை இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட போதும் இந்நிகழ்வின் காலம் சார்ந்த முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு நான் கலத்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும் “இந்த பௌத்த மதகுருமார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, யாரும் பயப்படவோ சந்தேகப்படவோ கூடாத வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றும் அவர் சொன்னார்.

பாதுகாப்புச் செயலாளரின் பொது பல சேனாவினை பெருமையாக போற்றும் வண்ணமான மேற்குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும், இந்நிகழ்வில் தான் பங்குபற்றுவதில் பலருக்கும் ஆட்சேபணை இருந்ததை அவர் குறிப்பிட்டதும் இந்நிகழ்வினதும் பொது பல சேனாவின் செயற்பாடுகளின் பின்னணியிலும் மறைமுகமாக நிலவியதாக சந்தேகிக்கப்பட்ட உயர்மட்ட செல்வாக்குகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டவிதமாகவே அமைந்தன.

பொது பல சேனாவின் நடவடிக்கைகளே பலர் ஆட்சேபணை தெரிவிக்க காரணமாய் இருந்தன என்பது வெளிப்படை. ஏனெனில் முந்திய ஊடகச் செய்திகள் கோட்டபாய ராஜபக்ஷ காலியில் பொது பல சேனா தலைமையகத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாகவே தெரிவித்திருந்தன.

பொது பல சேனாவைத் தோற்றுவித்து அதன் தலைவர்களாக இயங்குவோர் பௌத்த மதகுருக்களான வண. கிரம விமலஜோதி தேரோ மற்றும் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோராகும்

நெதிமல

விமல ஜோதி தேரர் தெஹிவள நெதிமலவில் அமைந்துள்ள பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளராகவும் இருக்கிறார். காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி உண்மையில் நெதிமல நிலையத்துடன் இணைக்கப்பட்ட கல்வி மற்றும் கலாசார நிலையமாகவே திட்டமிடப்பட்டிருந்தது எனினும் பின்னர் விமலஜோதி தேரர் இதை பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகமாக மாற்றியமைத்தார். இரண்டு அமைப்புகளுக்கும் பொறுப்பானவராக அவரே இருந்தது இதைச் சாத்தியமாக்கிற்று

அத்துடன் காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி ஜேர்மன் நாட்டவர் ஒருவரால் நெதிமல பௌத்த கலாசார நிலையத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஜேர்மன் நாட்டவரே தற்போது பொது பல சேனா பயிற்சியகமாக மாற்றப்பட்ட வீடு மட்டும் நிலம் அடங்கிய சொத்தின் முந்தைய உரிமையாளர் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மை எனின் நெதிமல நிலையத்தின் இணைப்பு நிலையமாக அமைக்கப்பட இருந்த மேற்படி கட்டிடத்தொகுதியை பொது பல சேனா பயிற்சியகமாக மாற்ற அவர் சம்மதித்தாரா? என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. எவ்வாறெனினும் குறித்த ஜேர்மன் நாட்டவர் திறப்புவிழாவின் பொது பிரசன்னமாகி இருந்தார் எனினும் நிகழ்ச்சியின் முதல் மரியாதை அவருக்கன்றி கோட்டபாய ராஜபக்ஷவுக்கே வழங்கப்பட்டது.

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் பொது பல சேனா எவ்வித வெளிநாட்டு நிதியையும் பெறவில்லை என பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்த விமலஜோதி தேரர் திறப்பு விழாவின் போது இந்த நிலையத்துக்கான நிதியை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நலன்விரும்பி வழங்கியிருந்தார் எனக் கூறியதாகும்.

சிலோன் டுடேயின் ரங்க ஜயசூரியவுக்கு வழங்கிய செவ்வியின் போது விமலஜோதி தேரர் “நாங்கள் யாரிடமிருந்தும் ஒரு செப்புச் சதத்தையாவது பெறவில்லை என என்னால் புத்தர் சிலைக்கு முன்னால் வேண்டுமென்றாலும் சத்தியம் செய்ய முடியும். இந்த விடயத்ஹ்டில் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று யாராவது நிரூபித்தால், நாங்கள் எமது அமைப்பை (பொது பல சேனாவை) அடுத்த நாளே மூடிவிடத் தயார்” எண்று கூறியிருந்தார்.

பொது பல சேனாவின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியால்தான் அதன் முக்கிய நிகழ்வொன்றில் கோட்டபாய பங்கெடுப்பது ஒரு பிரச்சினையாக நோக்கப்பட்டது.

பாரதூரமான விளைவுகள் / நடவடிக்கைகள்

அண்மைக்காலமாக பொது பல சேனா இலங்கையின் மத வழி சிறுபான்மையினருக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சார நடத்திவருவது தொடர்பில் செய்திகளில் அதிகம் இடம்பெற்று வருகிறது

பொது பல சேனா நிர்வாகிகளின் மறுப்புகளைத் தாண்டி அவ்வமைப்பு பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புதிய பாசிச அமைப்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அடையாளப்படுத்தப்பட அதன் நடவடிக்கைகள் துணைபோயுள்ளன.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும் வேறு சில குழுக்களும் ஒருங்கிணைந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரமானது சர்வதேச ரீதியாக பல தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் நாட்டுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தி வரும் சேதங்கள் நாட்டுக்கு வெளியிலிருந்து இயங்கும் தீய சக்தி இந்நடவடிக்கைகளுக்கு பின்னல் இருக்குமோ என்ற சந்தேகத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. தெளிவான ஆதாரங்கள் இல்லை எனினும் சிலர் இஸ்ரேலின் மரிவான உதவிகள் இதற்கு பின்னணியில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனிக்கத்தக்க மற்றுமோர் முக்கிய விடயம் யாதெனில், அதன் வெளிப்படையாகவும், பெரும்பான்மையினரின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும், தெளிவான நோக்கத்தைக் கொண்டவையுமாக மேற்கொள்ளப்படும் அதன் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளை தடுப்பதில் ராஜபக்ஷ அரசு கவனமற்றிருப்பதாகும். இது வெளிப்படையாகவே புலப்படுகிறது.

பிரச்சாரம்

அடிக்கடி பௌத்த – முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டும் அதை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக தெளிவற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் வந்தன எனினும் பொது பல சேனாவைக் குறிப்பிட்டு இவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. முஸ்லிம்களுக்கு அரசு ஒருபோதும் அவர்களுக்கு தீங்கு நேர அனுமதிக்காது என்ற உறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிரான சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது தொடர்பில் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

முஸ்லிம் சமூகத் தலைவர்களும் பிரதிநிதிகளும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறையிட்ட போது, பொது பல சேனா மிகச் சிறிய ஆதரவு கொண்ட குழு என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அதை பௌத்தர்களிடம் பிரபலப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக ஆகி விடும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.

17.02.2013 அன்று மஹரகமயில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர் விடுக்கப்பட்ட பொது பல சேனாவை தடைசெய்யும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மஹரகம எதிர்ப்பு நடவடிக்கையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டது மஹிந்தவினதும் கோட்டபாயவினதும் பொது பல சேனா அதிக ஆதரவற்ற ஒரு சிறு குழு என்ற கருத்துகளைப் பொய்ப்பித்தது. அங்கு சேர்ந்த கூட்டமும் அவர்கள் வெளிக்காட்டிய வெறுப்பான மனோநிலையும் பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக பரவுவதை வெளிக்காட்டின.

உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும் பாஜபக்ஷ அரசு பொது பல சேனாவால் முன்வைக்கப்பட்ட அழுத்தமான கோரிக்கைகள் சிலதுக்கு இசைவாக நடந்து கொள்வதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் அண்மையில் அரசினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிரந்தர கருத்தடை முறைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகும்.

பொது பல சேனா மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை கடுமையாக எதிர்த்திருந்தது. இவற்றினால் சிங்கள பௌத்த சமுதாயத்தின் சனத்தொகை குறைவடைவதாகவும், முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சியடைவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது. சிங்கள பௌத்தர்களுக்கான “சிறிய குடும்பமே சிறந்தது” என்ற கருத்தடை ஊக்குவிப்பு சுலோகத்தை பொது பல சேனா குறித்து இலக்கு வைத்திருந்தது.

பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலான தீர்மானிப்பு நிலை

இங்கு தீர்மானிப்பு நிலையில் உள்ள முக்கிய விடயமாக பொது பல சேனாவின் நடவடிக்கைகள் மீது போலீசார் என்ன செய்கிறார்கள் ? என்பது அமைகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளையெல்லாம் உத்தரவிடப்பட்டபோது தகர்த்து எறிந்த பொலிசார், சிறுபான்மை இனம் ஒன்றையும் அதன் மார்க்கத்தையும் இலக்கு வைத்து ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடத்தப்படும் பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரலைக்கூட அசைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உச்ச நீதிமன்றத்துக்குள் செல்வதைத் தடுக்க முழு வலுவுடன் குவிக்கப்பட்ட சட்டத்தின் காவலர்களான காக்கி உடையினர், சமூகங்களுக்கிடையில் உறவைக் குலைக்கக்கூடிய பொது பல சேனாவின் நடவடிக்கைகளின் போது அவ்வியக்கத்தின் ஒட்டுக்குழு போன்று செயற்படுகின்றனர்.

அநேக சந்தர்ப்பங்களில் கோபமுற்ற பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளிலிருந்து தங்களை பௌத்த செயற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்ளும் போது பல சேனாவுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலேயே பொலிசாரின் செயற்பாடுகள் அமைந்தன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போது பொது பல சேனாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமான முறையில் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைந்திருந்தும், பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களை மாத்திரமின்றி, உலகளாவிய இஸ்லாமிய நம்பிக்கைக்கே கடுமையாக ஊறுவிளைவிக்கும் வகையிலான படங்கள், சுலோகங்கள் மற்றும் கொடும்பாவிகள் பாவிக்கப்பட்ட போதும் பொலிஸ் அசையவில்லை. பொது பல சேனா இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நிராகரித்து, குற்றச்சாட்டுகளை அவர்களை ஒத்த செயற்பாடுகளைச் செய்துவரும் ஏனைய அமைப்புகளின் மீது போட்டாலும், உண்மை பலருக்கு ஆதாரப்பூர்வமாக தெரிந்திருக்கிறது.

பொது பல சேனா மீது அதிருப்தியுற்ற பொலிஸ் அதிகாரிகள் நம்பிக்கைக்குரிய ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பதிவுக்கு வராத வண்ணம் மேலிட உத்தரவு காரணமாக எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்று ஒத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

சந்தேகம்

இவ்வாறாக நடந்துவரும் பிழைகள் ராஜபக்ஷ அரசால் கவனிப்பற்றும் நடவடிக்கைகள் அற்றும் விடப்படுவது, பொது பல சேனாவுக்கு அரசாங்கம் மறைமுகமாக ஊக்கமளிப்பது மட்டுமன்றி அனுசரணையும் வழங்குகிறதா? என்ற சந்தேகம் பரவ காரணமாக அமைகின்றன. அரசியலில் ஈடுபட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய போலன்றி, தாங்கள் அரசியில் ஈடுபடப் போவதில்லை என பொது பல சேனா கூறுகின்றது எனினும், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூரண ஆதரவை தாங்கள் வழங்குவதாக பொது பல சேனா உருதியளித்துள்ளதோடு, அவரது அரசை உண்மையான சிங்கள பௌத்த அரசு என்றும் அழைக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்ஷ அரசு ஏன் இவ்வாறு ஒரு இனவாத மதவாத பாசிச அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று பல்வேறு ரகசிய அரசியல் சதிவேலை தொடர்பான கதைகள் உலாவுகின்றன.

இவற்றுள் முக்கியமானதாக பாதுகாப்புச் செயலாளரை முக்கியப்படுத்தி, முன்னாள் கஜபா படைப்பிரிவு வீரரும் பௌத்த மதத்தை ஆழமாகப் பின்பற்றுபவரும், சைவ உணவுப் பழக்கமும் உடைய இவர் பொது பல சேனாவை ஆதரிப்பது மாத்திரமன்றி பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ரகசிய நிதியைப் பயன்படுத்தி இவ்வமைப்புக்கு நிதியுதவி அளித்து வருகிறார் என்பது அமைகின்றது.

முன்னர் குறிப்பிடப்பட்ட விமலஜோதி தேரரிடம் ரங்க ஜயசூரியவால் செய்யப்பட நேர்காணலில் இவ்விடயம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

பிரித்தெடுப்பு

கேள்வி: முந்தைய கேள்விக்கு மீண்டும் வருவோம். அரசாங்கம் உங்களது அமைப்புக்கு பின்னணியில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?

பதில்: அரசிடமிருந்து எமக்கு எவ்விதமான ஆதரவும் கிடைக்கவில்லை. சிறிதுகாலத்துக்கு முன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்புக்கு செல்ல ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஒரு வாகனத்தைக் கூட அனுப்பவில்லை.

கேள்வி: கோட்டபாய ராஜபக்ஷவிடமிருந்து கூடவா? அவர் ஒரு சிறந்த சிங்கள பௌத்தராயிற்றே?

பதில்: இல்லை, யாரிடமிருந்தும் நாங்கள் ஆதரவைப் பெறவில்லை என்று நான் உங்களுக்குச் சொன்னேன். பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. அவர் எங்களிடம் “ஹாமதுருமார்களே, தயவுசெய்து பிரச்சினையை உருவாக்க வேண்டாம்” என்று சொன்னார். நான் அவரிடம் நாங்கள் பிரச்சினையை உருவாக்குவதில்லை என்றும், அவரோ அரசில் உள்ளவர்களோ அதைப்பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் சொன்னேன்.

கேள்வி: நோர்வேயிடமிருந்து நீங்கள் நிதியுதவி பெறுவதாக சொல்லப்படுவது பற்றி…….

பதில்: சிலர் எங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் பணம் தருவதாகவும், இன்னும் சிலர் எங்களுக்கு நோர்வே நிதியுதவி செய்வதாகவும் சொல்கின்றனர். நாங்கள் யாரிடம் இருந்தும் ஒரு செப்புச் சத்தத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என என்னால் சத்தியம் செய்ய முடியும் – புத்த பெருமானின் சிலைக்கு முன்னால் கூட. இவ்விடயத்தில் நாங்கள் பொய் சொல்லுகிறோம் என யாராவது நிரூபித்தால், நாங்கள் மறுநாளே எமது அமைப்பை கலைத்துவிட தயாராக இருக்கிறோம். சம்புத்த ஜயந்தி மந்திரயவை புதுப்பிக்க பெறப்பட்ட கடன்களுக்காக நான் வங்கிகளுக்கு 240 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டியுள்ளது. எமது வேலைகளுக்காக எனது பௌத்த சன்க்ஸ்குருதிக மடையஸ்தானயவுக்கு சொந்தமான வாகனங்களே பாவிக்கப்படுகின்றன. நான் எழுதும் தம்ம புத்தகங்கள் பௌத்த பரோபகாரிகளின் நிதியுதவியுடன் அச்சிடப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் எந்த நிதியுதவியையும் பெறவில்லை என உறுதியாக கூறுகின்றீர்களா ?

பதில்: ஆம். அரசிடமிருந்தோ, எந்த வெளிநாட்டிடம் இருந்தோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ நாங்கள் ஒரு செப்புச் சதத்தையேனும் பெறவில்லை. அங்கத்தவர்களைச் சேர்த்து அவர்களிடமிருந்து அங்கத்துவப் பணத்தை வசூலிக்கும் முயற்சியொன்றை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களையும் மதகுருமாரையும் உள்ளடக்கி 100,000 அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வது எமது திட்டமாகும்.

இணைப்புகள்

வலுவான மறுப்புகளையும் மீறி இலங்கை மக்களிடயே கோட்டபாய ராஜபக்ஷ – பொது பல சேனா இணைப்பை பற்றிய சந்தேகம் நிலைத்திருக்கிறது. இந்த சந்தேகம் ஊடகங்களால் எழுப்பப்பட்டிருக்கும் பொது பல சேனாவின் எழுச்சிக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பிருக்கும் எனும் உறுதியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுத்து மேலும் வலுப்பெற்றுள்ளது.

பொது பல சேனா போன்ற அமைப்புகளுடன் தொடர்பற்ற எந்த அரசும் அதை உறுதிப்படுத்த பகிரங்க அறிக்கையொன்றை விடுப்பது வழமையான செயற்பாடாகும். ஜனாதிபதியோ அரசாங்கமோ பொது பல சேனாவை அதன் முஸ்லிம் எதிர்ப்பு வேலைத்திட்டத்துக்காக பகிரங்கமாக விமர்சிப்பது சிறந்த செயற்பாடாக அமைந்திருக்கும்.

ஆனால் இவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் தற்போதைய அரசின் கீழ் அது இடம்பெறவும் போவதில்லை போன்றே தெரிகிறது.

அவ்வாறே பாதுகாப்புச் செயலாளரும் அவருக்கு உண்மையாகவே புதிய பாசிசவாத அமைப்பு எனக் கருதப்படும் பொது பல சேனாவுடன் தொடர்புகள் ஏதும் இல்லாதவிடத்து அதை உறுதிப்படுத்தி அவரது நிலையை தெளிவுபடுத்தி இருக்க முடியும்.

மாறாக அவர் பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்து வைத்ததனூடாக பகிரங்கமாக தன்னை பொது பல சேனாவுடன் இணைப்பு உள்ளவராக காட்டுவதையே தேர்வு செய்துள்ளார்.

மனோநிலை

இவ்வாறு செய்வதன் ஊடாக பொது பல சேனாவுடன் தனக்குள்ள இணைப்பை வெளிக்காட்ட தான் தயங்கவில்லை என்ற தெளிவான செய்தியை அவர் சொல்லியுள்ளார். பொது பல சேனா தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சாதகாமான கருத்துகள் அவ்வமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அவரது மனோநிலையை தெளிவாகக் காட்டுகின்றன. அவரது மேற்படி செயற்பாடுகளால், கோட்டபாய பொது பல சேனாவின் பிரச்சாரத்தை தான் ஏற்றுக்கொள்வதை வெளிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சரியாக ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் செயலாளரின் நகர்வு தொடர்பில் அவரது செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்போரால் பல்வேறு நியாயப்படுத்தல்களும் காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோட்டபாய ராஜபக்ஷ தனது நடத்தைக்கு உண்மையான முறையில் பொது பல சேனா போன்ற அமைப்பு ஒன்றுடன் பகிரங்கமாக தன்னை இணைத்துக் காட்டிக் கொண்டார் எனக் கொண்டால், அவர் பொது பல சேனாவை எதிர்மறை அமைப்பாக பார்க்கவில்லை என்பதையும் தனது நம்பிக்கைகளுக்காக உறுதிபட நிற்பார் என்பதையுமே அவர் செயற்படுத்திக் காட்டியுள்ளார். சொற்களால் அன்றி செயற்பாட்டால் இதை வெளிக்காட்டியதன் ஊடாக அவர் குறித்த இனவாத மதவாத பாசிசத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த மரியாதையும் தான் அளிக்கவில்லை என்பதையும் அவர்களை தான் கருத்தில் கொள்ளவில்லை என்பதையுமே அவர் பகிரங்கமாக காட்டியுள்ளார்.

அவரது இந்த நடத்தைக்கு என்ன காரணம் இருப்பினும் அது கோட்டா – பொது பல சேனா இணைப்பு தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்தியே விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்புகள் அவர் மீது மட்டுமல்ல அவரது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவர் தலைமை தாங்கும் அரசின் மீதும் மோசமாக ஏற்படும் என்பது உண்மையாகும்.

பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்துவைத்தது சிறியதொரு செயற்பாடாக தோன்றினாலும், இந்நடவடிக்கையின் பின்விளைவுகள் முள்ளிவாய்க்கால் வெற்றியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளைப் போலவே ஜெனீவா, வாஷிங்டன், லண்டன் மற்றும் புது டில்லியில் உணரப்படும் என்பது மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் .
-D.B.S. ஜெயராஜ் 
 Thanks :  தமிழாக்கம்: காத்தான்குடி இன்போ

No comments:

Post a Comment