Saturday, March 2, 2013

மம்மூட்டி






நடிகர் மம்மூட்டி மலையாளத்தில் ‘காழ்ச்சபாடு’ என்ற தலைப்பில் எழுதிய அவருடைய வாழ்வனுபவங்கள், தமிழில் கே.வி.ஷைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘மூன்றாம் பிறை’ என்ற தொகுப்பாக வெளியாகவிருக்கிறது! அதில் இருந்து சில பகுதிகள்…


‘வக்கீலாகப் பணி ஆரம்பித்த நாட்கள். ஆரம்பம் என்ற பொருளை உள்ளடக்கி அது பெரிதாக நீண்டு நிலைக்கவில்லை. நீதிமன்றம், வழக்கு என்று கேட்கும்போதே ஒரு மாதிரி பிரமிப்பாக இருக்கும். முதல்முறை நீதிமன்றத்தில் வாதிட்டபோது, எனக்குக் கால்கள் இரண்டும் நடுங்கி வேர்த்துக்கொட்டின.


மஞ்ஞேரி நீதிமன்றத்தில் 60 வயதான, மிகவும் ஐஸ்வர்யமும் சாந்தமுமான மனைவிக்கும், விவசாயியைப்போல எளிமையான தோற்றமும் உடையும் அணிந்த கணவருக்கும் இடையிலான வழக்கு. காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள வராந்தாவில் காத்திருப்பார்கள். பெரும்பாலான நாட்களில் மாலை வரை அங்கேயே இருப்பார்கள். திருமண பந்தத்தை முடித்துக்கொள்ள நினைத்து, கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் வேண்டி மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். மஞ்ஞேரி நீதிமன்றத்தில் மட்டுமல்ல;


பெரும்பான்மையான நீதிமன்றங்களில் இதுதான் நிலைமை. பல வழக்குகள் உண்மையானவை. பல வழக்குகள் சொந்தபந்தங்களின் கௌரவப் பிரச்னை தொடர்பான வழக்குகள். இதில் கணவருக்கோ மனைவிக்கோ இடம் இல்லை.
மனைவி, தன் சகோதரனின் காரில் வந்து இறங்குவாள்.


சகோதரர்களுக்காகத்தான் இந்த கேஸை நடத்துகிறாள் என்பது பார்த்தாலே தெரியும். அவளின் கணவரோ யாருடைய துணையும் இல்லாமல் தனியாக பஸ்ஸில் வந்து இறங்குவார். ஜூனியர்களான நாங்கள் நீதிமன்றத்துக்குள் காரசாரமாக எதிர் எதிரே விவாதித்தாலும் வெளியில் ஒரு சிகரெட்டைப் பலர் இழுத்தும், ஒரு டீயைப் பலர் பகிர்ந்தும் குடிக்கும் நண்பர்களாக இருந்தோம். ஆனால், கட்சிக்காரர்கள் உடன் இருந்தால் இப்படி நடந்துகொள்வது இல்லை.
அந்த வயதானவரிடம் கடுமையான கேள்விகள் கேட்கும்போது மிகவும் மெதுவான குரல், தன்மையான மொழியில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். கணவர் பதில் சொல்லும்போது அவர் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தேன். கணவரிடம் இருந்து மங்காத பிரியமும் மரியாதையும் அந்த முகத்தில் இருந்தது. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் இதயத்தாலும் கேட்கப்படுகிறது என்பதை நான் உணர்ந்து இருந்தேன்.
விசாரணைக்குப் பிறகு, கூண்டில் இருந்து இறங்கும்போது அவர் மனைவியை ஒரு முறை பார்ப்பார். அவருடைய முகத்தில் துடித்துத் தெறித்து விழத் தயாராக இருந்த உணர்வுக் கலவைகளை நாம் பார்க்க முடியும்.



மனைவியிடம் விசாரணை நடக்கும்போது, அவர் எதிர் கூண்டின் அருகில் நின்றபடி இருப்பார். அன்றைக்கும் அப்படித்தான் நின்று இருந்தார். நீதிமன்றத்தின் கேள்விகள் பல நேரங்களில் வயோதிகத்தையும், பெண் என்பதையும் மறந்துபோனதாகத்தான் இருக்கும். பள்ளி வராந்தாவைக்கூட வேடிக்கை பார்த்திராத அந்த முதியவள் எதிர் விசாரணை தொடங்கிய சற்று நேரத்துக்கு எல்லாம், வக்கீல் கற்றுக் கொடுத்து இருந்த எல்லாவற்றையும் மறந்துபோய் இருந்தாள்.


பதப்படுத்தாத மொழியில் வெகுளித்தனமாக, களங்கம் இல்லாத வார்த்தைகளைக் கோத்து அவள் பேசிக்கொண்டே இருந்தாள். பொய் சொல்லும்போது ஏற்படும் இடறல் அவளது வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. கணவரின் குரூரத்தையும், அன்பில்லாமையையும், கணவரால் வீணடிக்கப்பட்ட தன் வாழ்க்கையையும் பற்றி வக்கீல் அவளிடம் கேட்டபோது அதைக் கேட்டுக்கொண்டு இருந்த முதியவரின் கண்கள் நிறைந்து இருந்தன. அதை மறைப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவராக அவர் நான்கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டார். பிடிமானத்துக்காக வேண்டி கூண்டின் மரச் சட்டங்களில் கை ஊன்றி ஒட்டி நின்றபடி மனைவியை ஒரு முறை பார்த்தார். பார்வை உரசியபோது மனதில் இருப்பதைச் சொல்ல முடியாமல் அந்த முதிய பெண் உடைந்து அழுதாள்.



அவளுடைய அழுகைச் சத்தம் நீதிமன்றத்தின் ஒவ்வோர் இதயத்திலும் மோதித் திரும்பியது. எண்ணி எண்ணிச் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையில் கேவல்களுடன், ‘என்னால முடியல தெய்வமே’ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் தளர்ந்தபடி விழுந்தாள். நீதிமன்றம் அப்படியே அமைதியில் உறைந்துபோனது. சட்டென முதியவர் கூண்டில் இருந்து இறங்கி ஓடி வந்து மனைவியைத் தாங்கிப் பிடித்து எழுப்பினார். தோளில் இருந்த துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்து நெஞ்சோடு சேர்த்து எழுப்பி நிற்கவைத்து மெள்ள நடக்கவைத்தார்.



நீதிமன்றத்தையோ, வக்கீலையோ, தீர்ப்பையோ, அவளின் சகோதரர்களையோ யாரையுமே மதிக்கவோ, உதாசீனமோ செய்யாமல், ஒரு குழந்தையைத் தோள் மேல் போட்டுக்கொள்வது மாதிரி, தோளோடு சேர்த்துப் பிடித்தபடி வக்கீல்களுக்கு நடுவில் வழி ஏற்படுத்தி வெளியேறினார். படி இறங்குவதற்கு முன்னால் எங்களைப் பார்த்த அவரின் பார்வையில் பகைமை இல்லை.



22 வருடங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மனிதன், அதன் பிறகு, முதல்முறையாகத் தன் மனைவியைத் தொடுகிறார். அவளோடு பேசுகிறார். வீட்டு ஆட்களின் குடும்பப் பகையினால் அவர்கள் இருவரும் வார்த்தைகள் இழந்த வெற்றுப் பார்வையால் இதயத்தில் மங்கிப்போகாத ப்ரியத்தைத் தேக்கிவைத்து, கொடுங்காற்றுக்கு இடையிலும் அணையாத நெய் விளக்கினை ஏந்தி நடப்பதுபோல வாழ்ந்து இருக்கிறார்கள்.
நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. பிறகு எப்போதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு வரவில்லை.



என் மனைவியிடம் ஒரு வார்த்தை கோபமாகப் பேசும்போதுகூட அந்த முதியவரின் கண்ணீர் நிறைந்த கண்கள் நினைவுக்கு வரும். அப்போது எனக்குத் திருமணமாகி இருக்கவில்லை. திருமணத்துக்குப் பின் மனைவியை, இந்தப் பெரியவரைப்போல நேசிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன்.



கைகளுக்குள் பொத்திவைத்துக்கொள்ளும் அளவு, அன்பு இருக்கிறது என்ற நினைப்பில் இறுமாந்திருந்த நான் அன்று கடலை தரிசித்தேன். ப்ரியத்தில் நிறைந்திருந்த கடல். ஞாபகங்களின் கரை ஓரத்தில் நிற்பதே மனதை ஈரமாக்குகிறது. நாமும் அவர்களைப்போல ப்ரியம் மீதூர வாழ்வோம்!

தமிழில் : கே.வி.ஷைலஜா

No comments:

Post a Comment