சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில் ஆணிகள் அடித்து வேலைக்கார சித்ரவதை
Aug 27, 2010
கொழும்பு: சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில், 24 ஆணிகள் அடித்து எஜமானர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 20 லட்சம் பேர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில், 14 லட்சம் பேர், வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு, எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து மாதங்களாக அரியாவதி(49) என்ற பெண், நிலசுவான்தார் வீட்டில் வேலை செய்து வந்தார். “அதிக வேலை தருகிறீர்களே’ என, இந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த நிலசுவான்தாரும், அவரது மனைவியும், அரியாவதியின் நெற்றி, கை, கால்களில் இரண்டு அங்குல நீளமுள்ள 24 ஆணிகளை சூடாக நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல், கடந்த வாரம் அரியாவதி கொழும்பு திரும்பினார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அரியாவதி, நடந்த சம்பவங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து இவரது உடலில் நுழைக்கப்பட்டுள்ள ஆணிகளை எடுப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆணிகள் சூடாக்கப்பட்டு பாதம், கால்களில் நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் ஊசி வைத்தும் குத்தியிருக்கின்றனர். அதற்கான தழும்புகள் காணப்படுகின்றன. அதில் நெற்றிப் பகுதியில் ஒன்று இருக்கிறது. சவுதி அரேபிய நிலசுவான்தார் தம்பதியினர் செய்த இந்த கொடுமை குறித்து, அந்நாட்டு அரசிடம், இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Rate This
23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்
வெறோனிக்கா – தமிழில் என்.சரவணன்.)

இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.
இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.
உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.
தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).
இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.

சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.
ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.
உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.
அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.
தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.
ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.

“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு… குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்…. “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..
அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.
இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்…” எனறார்.
இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “…எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்

“..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.” என்றார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.
வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.

வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.
27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

நீக்கப்பட்ட ஆணிகள்:
கண் இமை நெற்றிக்கருகில் – 1 கம்பி
வலது கையில் – 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் – 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் – 4 ஆணிகள்
இடது காலில் – 2 ஆணிகள்
ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.
குறிப்பு:
மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.
சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.
இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment