Monday, December 12, 2011

தெரிந்திருக்க வேண்டாமா?




ஒரு பவுர்ணமிச் சறுக்கல்!









"நேற்றிரவு இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணத்தை இலங்கையிலுள்ள மக்களில் பலர் கண்டு களித்தனர்..." என்றுதான் நமது நாட்டின் சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சேவையின் தமிழ் செய்தி அறிக்கையில் கிரகணம் பற்றிய செய்தியை அறிவிப்பாளர் கூற ஆரம்பித்தார். இதிலே என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்குத்தான் இதைச் சொல்லப் போகின்றேன்.

2011.12.10ம் திகதி மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த சந்திர கிரகணம் பற்றிய செய்தியினை மறுநாள் இரவுச் செய்திக்காக வாசித்த கடமை நேரச் செய்தி அறிவிப்பாளர், " நேற்று ஓர் போயா (பவுர்ணமி அல்லது முழுமதி) தினமாக இருந்தமையினாலும் சந்திர கிரகணத்தை அதிகமானோர் கண்டுகளிக்கக் கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றும் கூறினாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டவுடன் தூக்கிவாரிப்போட்டது. "எந்தக் காலத்திடா அம்மன் பேசியிருக்கிறாள்?" என்று கலைஞரின் வசனங்களை நக்கல் தொனியில் பேசுவாரே நமது நடிகர்திலகம், ஞாபகமிருக்கிறதா? அந்தப்பாணியில், "எந்தக்காலத்திலடா சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்தில் வராமல் வேறுதினத்தில் வந்திருக்கிறது?"


என்று கேட்க வேண்டும் போலிருந்தது.


 சரி பாவம், அந்த அறிவிப்பாளர் விடுங்கள். அவர் என்ன செய்வார் யாரோ எழுதிக் கொடுத்ததை காமிரா லென்ஸைப்பாரத்து வாசிப்பவரைக் குறைசொல்லிப் பயனில்லை.   ஆனால் ஒரு பொறுப்புள்ள தொலைக்காட்சி சேவையின் செய்திகள் தயாரிப்பாளர்களுக்கு ஓர் எட்டாம் தரத்தில் படிக்கும் மாணவிக்குத் தெரிந்த விஞ்ஞானப் பொது விடயங்கள் தெரிந்திருக்க வேண்டாமா?


நீரில் வாழும் பாலூட்டி வகை விலங்கான திமிங்கிலத்தை ஒரு மீன் என்றும் தனது நீ....ண்ட கைவிரல்களுக்கிடையிலே அமைந்திருக்கும் மென்சவ்வின் உதவியுடன் பறந்து திரியும் முலையூட்டியான வவ்வாலை ஒரு பறவை என்றும் யாராவது கூறினால் இந்தக்காலத்தில்  இரண்டாம் தரத்தில் கற்கும் குழந்தை கூட கேலிசெய்யும்.

இதைச் சொல்லும்போது ஒரு ஆசிரியரின் ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. அவருக்கு தமிழ் கொஞ்சம் தகராறு. ஒருநாள் அவர் கரும்பலகையில் 'அ-னி-ல்' என்று எழுதினாராம். ஒரு மாணவன் எழுந்து நின்று, 'அணிலுக்கு மூன்று சுழியுள்ள 'ணி' வந்து அ-ணி-ல் என்று அல்லவா வரும். நீங்கள் என்ன சேர் இரண்டு சுழியுள்ள 'னி' யைப் போட்டுள்ளீர்களே' என்று கேட்டானாம். "அது வந்து இதுவும் அணில்தான்...ஆனால் பாவம், கொஞ்சம் சின்ன அணில், அவ்வளவுதான்!" என்றாராம்.

-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment