Friday, May 29, 2015

குற்றம் செய்யத் திறமை தேவையில்லை! - கமல் ஹாசன் பேட்டி









உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து





உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன?


எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான்.


தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே...


தொழில்நுட்பத்தை வளர விடமால், நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். முற்காலத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு மகாராஜா வந்து மக்களின் விசுவாசத்தை சோதிப்பதற்காக கோயிலுக்கு வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய அண்டா செய்தாராம். மக்களிடம் 'எல்லோர் வீட்டில் இருந்து பால் கொண்டு வந்து நிரப்பி விடுங்கள்' என்றாராம். அண்டா என்பது கோபுர அளவிற்கு பெரியது. அப்போது ஒரு சிலர் 'இவ்வளவு பெரிய அண்டாவில் பால் ஊற்றி நிரப்ப வேண்டும் என்றால் கட்டுப்படி ஆகாது' என்று நினைத்தார்கள். இத்தனை பேர் பால் ஊற்றினார்கள் என்பது இரண்டு பேர் தண்ணீர் ஊற்றினால் தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள். எல்லாருமே பால் ஊற்றி இருக்கிறார்கள், ஆனால், எல்லாமே நீர்ந்து போய்விட்டது. ஏனென்றால், அதில் தண்ணீர்தான் மேம்பட்டு தெரியுதே தவிர பால் தெரியவில்லை. அதேதான் தற்போது தமிழ் சினிமாவில் நடக்கிறது.

நேர்மை இருந்தால் மட்டுமே எந்த வியாபாரமும் ஜெயிக்கும். எல்லாருமே காயைப் பழுக்க வைக்க மருந்து அடிச்சே பண்ணிட்டு இருக்க முடியாது. நிஜமாவே ஒரு பழம் இருக்கணும். அந்த பழம் தானே, இந்தப் பழம் என்று கவுண்டமணி - செந்தில் காமெடி எல்லாம் இந்த விஷயத்தில் பண்ண முடியாது. கண்டிப்பாக நேர்மை வந்தாக வேண்டும். வரும். எல்லாருமே கருப்பு பணத்தில் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறவர்கள்... வந்து பிற்பாடு வீடு வாங்கும்போது கஷ்டப்படுவார்கள். தன்னை ஒரு பணக்காரனாகக் காட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது பெரிய சூழ்ச்சி எல்லாம் பண்ண வேண்டியது வரும். அதேபோல் எல்லோரும் உண்பதற்கு இங்கே உணவு உண்டு. அதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தி திரையுலகில் எப்படி 400 கோடி, 300 கோடி என்று பேச முடிகிறது? நேர்மை வந்ததுதான் காரணம். இங்கேயும் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ஒரு முக்கியப் படைப்புக்கு 'எதிர்ப்பு, போராட்டம்' முதலான சூழலுக்கு வித்திட்டது, 'சண்டியர்'. அப்போது ஓர் கலைஞனாக உங்கள் தரப்புக்கு ஏற்பட்ட கோபம் தணிய எவ்வளவு நாளானது? ?


என்ன கோபம். நான் திட்டுவதற்குப் பதிலா... அவங்களே அவங்கள திட்டிக்கிட்ட மாதிரி இல்ல. கெட்டதோ, நல்லதோ வார்த்தைகள் தேவையில்லை. அவங்களுக்கே தெரிஞ்சு போச்சு. என்னை எதிர்த்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதில் என்ன வீரம் இருக்கிறது?
சண்டியர் என்பது சாதிப்பெயர் அல்ல. விருமாண்டி என்பதுதான் சாதிப்பெயர். அதைக்கொண்டு வந்து வைக்க வைத்தார்கள். சண்டியர் என்பது எந்தச் சாதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ரவுடித்தனம் பண்ணுபவர்கள் எல்லாருமே சண்டியர்தான். இந்தப் பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னவரை வேண்டுமானால்கூட அப்படிச் சொல்லலாம். அவர்களுக்கான பதிலைக் காலம் சொல்லிவிட்டது.


ஆனால், ஒரு படைப்பின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசியல் தலையீடு அதிகரித்தபடி இருக்கிறதே...


கடந்த 50 வருடங்களாக அரசியல்வாதிகள்தான் இதை பண்ணிகிட்டு இருக்காங்க. அமெரிக்காவில் இருக்கிற சுதந்திரம் கண்டிப்பா இங்கு கிடையாது. நாவலாசிரியர் ஜெய மோகனுக்கு இருக்கும் சுதந்திரம், ஒரு திரைக்கதையாளனாக ஜெயமோகனுக்குக் கிடையாது. சென்சார் போர்டு ஒண்ணு வைச்சு பரவாயில்லை, கொஞ்சம் வெட்டி எடுத்துக்கோங்க என்று சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு கூட்டம் உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்ததிற்கு என் மீது வழக்கு போட்டாங்க. டாக்டர்கள் அனைவரும் எங்களை வசூல்ராஜா என்று சொல்கிறார் என்றார்கள். ஃப்ரீயா பண்ற டாக்டர் எத்தனை பேர் இருக்கிறார்கள். இப்போ சொல்றேன். எனக்குத் தெரிஞ்சு இப்போ நிறைய நிஜ வசூல்ராஜாக்கள் இருக்கிறார்கள். என்ன பண்ணப் போகிறார்கள் இவர்கள்!




சரி, அரசியல் தலையீடுகளைக் காட்டிலும், இணையத்தில் மலிந்துவரும் விமர்சனங்கள் மீதுதான் தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு ஒருவித அச்சுறுத்தல் இப்போது அதிகரித்து இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?




இணையத்தில் விமர்சனம் பண்ணக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படித் தடுக்க முடியும்? என் கலைக்கு விமர்சனம் இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு படம் நல்லாயில்லை என்று சொல்லும் உரிமையை நீங்கள் எப்படித் தடுக்கலாம். கமல் ஹாசனுக்கு நடிப்பே வரலைங்க, அவர் எல்லாம் வீட்டில் போய் நடிக்காமல் உட்காரலாம் என்று சொல்லும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அந்த உரிமை உனக்கில்லை என்று சொல்லும் திறமை என்னுடையதாக இருக்கிறது. அதுதானே ஒரு நடிகனுடைய வெற்றி. ஆள் வெச்சு அடிக்கவா முடியும்.


‘ராஜபார்வை’, ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’ முதலான படங்கள் வெளியானபோது பெரிதாக கவனிக்கப்படாமல், காலம் கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


அது மாறி மாறி நடக்கும். ‘கை கொடுத்த தெய்வம்’ என்று ஒரு படம், அது வந்து ‘பாசமலர்’ அளவுக்குப் போகவில்லை. ‘கான் வித் த விண்ட் ’ என்னும் படம் இன்று எல்லோரும் பேசும் படம். முதல் சுற்றில் அது ஒரு தோல்விப் படம். 'சந்திரலேகா' கணக்குப் பார்த்தார்கள் என்றால் கம்மியான லாபம்தான் ஈட்டி இருக்கும். காலப்போக்கில் அது அடித்த அடிக்கு யாருமே பக்கத்தில் நிற்க முடியாது. அதே மாதிரி நிறைய படங்கள் இருக்கின்றன. திரும்ப திரும்ப வருமானம் ஈட்டும் வழிகள் அனைத்தையும் நாம் அடைத்துவிட்டோம். அதனால் சில உண்மைகள் நமக்குப் புரிவதில்லை.


'குருதிப் புனல்', 'அன்பே சிவம் போன்ற' படங்களை மீண்டும் திரையில் பார்க்க விரும்புவதாக ட்விட்டரில் ரசிகர்கள் அவ்வப்போது சொல்லி வருவதைப் பார்த்திருக்கிறேன். ரீ-ரிலீஸ் சாத்தியமா?


அது என்னுடையது இல்லையே. தயாரிப்பாளர்களே அந்தப் படத்தை நம்பவில்லை. தயாரிப்பாளர் நம்ப வேண்டும், தயாரிக்கும் போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். குதிரை ஒட்டத் தெரியாதவன் எப்படி மேலே ஏறி உட்கார்ந்தால் உடனே கீழே தள்ளி விட்டுவிடும். அதே மாதிரி தான் ரசிகர்களும். தயாரிப்பாளர்களின் பதற்றம் எல்லாம் ரசிகர்களுக்கும் பரவிவிட்டது. 'இது நல்லா இருக்காது போலிருக்கே.. தயாரிப்பாளரே இப்படி பயப்படுறாரு' என்று வேறு பக்கம் திரும்பி பார்த்து விட்டார்கள். அப்புறம் தெரிந்து சிலர் தேடி வருகிறார்கள். எனக்கு சிவாஜி சார் சொல்லித்தான் தெரியும், 'உத்தம புத்திரன்' வெற்றி படம் இல்லை என்று. என்னால் நம்பவே முடியவில்லை. நானே 10 தடவை பார்த்த படம் இது. எனக்கு தெரிந்து நான்கைந்து முறை பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

"என்ன.. சும்மா உத்தம புத்திரன் பத்தியே பேசிட்டு இருக்க. அது வெற்றி படம் எல்லாம் ஒண்ணும் கிடையாது. தெரியுமா?" என்று சிவாஜி சாரே என்னிடம் சொல்வார். நான் அவர்கிட்டயே சண்டை போட்டு இருக்கேன். "படம் பார்த்தப்போ உனக்கு நாலு வயசு இருக்கும். நான் அந்தப் படம் போகலயேனு கவலைப்பட்டிருக்கேன். ஒடுச்சுனு சொல்றால... வசூலைக் கொண்டுவந்து காட்டு. நம்புறேன்" அப்படினு சொல்லியிருக்கார் சிவாஜி சார். அது தோல்விப் படம் கிடையாது. ரி-ரீலீஸ் ஆகி படம் வெற்றியாகி இருக்கிறது.

நான் என்னுடைய படத்தை பண்ணலாம். மற்றவர்கள் படத்தை நான் எப்படிப் போய் சொல்ல முடியும். ரி-ரீலீஸ் பண்ண வேண்டும். திரையரங்கிற்கு மறுபடியும் பழைய படங்கள் வருவது ஒரு வாடிக்கையாக வேண்டும். அதை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.


கமல் ஹாசன் என்றாலே ஜீனியஸ் என்ற பிம்பம், தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் உண்டு. உன்னைப் போல் ஒருவனில் உங்களை ஒரு சாமானியாக ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற ஒரு வாதமும் உண்டு. அப்படி இருக்க, த்ரிஷ்யம் படத்தின் அடிப்படை அம்சமே ஓர் எளிய மனிதனின் அசாதாரண முயற்சி என்பதுதான். மலையாளம் ஆடியன்ஸ் மோகன்லாலை ஜார்ஜுகுட்டியாகத்தான் பார்த்தார்கள்... ஆனால், பாபநாசத்தில் கமல்ஹாசனை கமல்ஹாசனாகவே பார்க்க நேர்ந்தால்..?


நான் இதை மறுக்கிறேன். அந்தப் படத்தில் நான் மோகன்லாலாகத்தான் பார்த்தேன். ‘த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால்தான் தெரிகிறார். இதைவிட மோகன்லால் சிறப்பாக நடித்த படங்களை நான் காட்ட முடியும். இந்த மாதிரி பேசுபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் படமாகப் ‘பாபநாசம்' அமையும்.


நடித்தால் நடிக்கிறார் என்கிறீர்கள், ஓவராக மேக்கப் போட்டால் மேக்கப் என்கிறீர்கள். நான் செய்ததைப் பாருங்கள். நல்லா இருந்தால் நல்லாயிருக்குன்னு சொல்லுங்க, நல்லாயில்லை என்றால் பிடிக்கலன்னு சொல்லுங்க. தவறுகள் இருந்தால் ஒத்துக் கொள்ளலாம், இந்த மாதிரியான அவதூறுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ‘தேவர் மகன்' படத்தில்கூட கமல் தெரிவான். ஆனால் ‘மகாநதி'யில் அவன் கிருஷ்ணா. ‘தசாவதாரம்' பல்ராம் நாயுடு வேடத்தில் கமல் ஹாசன் எங்கு தெரிகிறான்?
இந்தத் தொழிலில் ரசிகர்களை விட எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியும். பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்களை ரசித்துவிட்டு, இப்படிப் பாடியிருக்கலாம் என்று சொல்லத் தெரியாது. இன்றைக்குத் தொண்டை கட்டியிருக்கிறதுபோல என்று வேண்டுமானால் சொல்லலாம். இது கர்வம் அல்ல. எனது ஆளுமையால் வரும் தன்னம்பிக்கை.




ம்... 'துரோகால்' சஸ்பென்ஸ் படம். அதை ரீமேக்கும்போது 'குருதிப் புனல்' சஸ்பென்ஸுடன் ஆக்‌ஷன் வகையறாவாக மாற்றப்பட்டது. 'வசூல்ராஜா'வில் மைக்கேல் மதன காமராஜனில் இருந்த வசன விளையாட்டு மிகுந்திருந்தது. அந்த வகையில், 'பாபநாச'த்தில் தமிழுக்காக என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?


கதையை மாற்றவில்லை. ரொம்ப வித்தியாசமாக வந்திருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். நான் நம்பக் கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையென்றால் டேக் 2 கேட்டிருப்பார்.


இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவுக்கான ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் ஒரேயொரு தமிழ்ப் படம்தான் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி விழாக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது "தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா, கன்டென்ட்-டில் வீக்கா இருக்கு" என்றார். தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த நிலை?


தலை குனிகிறேன். இன்னும் கோபத்தில் தலை நிமிர்ந்து அடுத்தப் படத்தில் நல்லா எடுக்கலாம். இதுக்கு மறுத்துப் பேசி, தமிழுக்கு இடம் கொடுங்கள் என்று பேசாதீர்கள். அது விலாசம். தகுதிக்கு இடம் கேளுங்கள். அது தப்பு என்றால் என்னவென்று பாருங்கள். நீ இந்த படிப்பு படிக்கல, அதனால் உனக்கு இந்த வேலை கிடைக்காது என்றால், அந்த வேலையை படித்து விடலாமே. இன்றைக்கே வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது நடக்காது. எனக்கே அந்தக் கருத்து உண்டு. நாம ஏதோ பெருசா சாதித்து விட்டோம் என்று பத்து படம் பார்த்து விட்டு எடுத்தால், நாமும் அதற்கு நிகராகி விடுவோமா? சிவாஜி மாதிரி நடித்துவிட்டால், அவரை விஞ்சிவிட்டதாக அர்த்தமா? யாரை மாதிரி பார்த்து நடித்தாலும், அது மிமிக்ரிதானே. 'கிஸ்தி, திரை, வட்டி' என்று நாங்கள் பேசியது எல்லாம் மிமிக்ரிதானே. நாகேஷ் மாதிரி செய்பவர்கள் எல்லாரும் நாகேஷ் ஆகிவிட முடியாது. அவர்கள் நாகேஷின் விசிறிகள்.
அந்த மாதிரிதான் நம்ம எடுக்கும் படங்கள் வந்து, வெள்ளைக்காரன் படத்தைப் பார்த்து காப்பியடிச்சு எடுத்தா அதற்கு நிகராகி விடாது. எழுத்தாளர்களில் ஜெயகாந்தனும், புதுமைப்பித்தனும் இப்போது இருக்கிற நிறைய நல்ல எழுத்தாளர்கள் மாதிரி, சினிமாவிலும் வர வேண்டும். ஜெயகாந்தன் எங்கிருந்து எடுத்தார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது ஒரு தனி ஊற்று. சுடச்சுட எப்போதும் வந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அப்படி வர வேண்டும் சினிமாவில். வரும் என்று நம்புகிறேன். வராததற்கு வியாபாரம் பெரிதாக கலந்துவிட்டது. வியாபாரிகளும் பின்னாடி நின்றுகொண்டு பேனாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவங்களுக்கு வெற்றியின் ரகசியம் தெரியாது. எனக்கு எந்த அளவுக்குத் தெரியாதோ, அதேதான் அவங்களுக்கும். சினிமா காட்டப்படும் தளங்கள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தத் தளங்களில் எல்லாம் சுதந்திரம் வேண்டும். தனியாருக்குப் போய் சேர வேண்டிய பணங்கள் போய்ச் சேர வேண்டும். அபகரித்தல் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதை நிறுத்தினால் எல்லாருக்கும் பணம் வரும். வேலி கட்டினால்கூட ஒத்துக்கொள்வேன். விஷத்தை போட்டால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.


அப்படி என்றால், கதை - திரைக்கதையிலும் தமிழ் சினிமா வலு பெறுவதற்கு, இலக்கியத்தின் பங்களிப்பு அவசியமாகிறது என்பது உணரப்பட வேண்டுமா? தமிழ் சினிமா - இலக்கியம் இடையிலான் பாலத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது சரிதானா?


இதை நான் சொல்லி 40 வருஷமாச்சு. பாலம் கட்டுறோம், பாலம் கட்டுறோம் என்று முயற்சியும் பண்ணினோம். பாலகுமாரன் எல்லாம் அப்படி வந்தவர்தான். சுஜாதா எல்லாம் அந்த பாலத்தில் நடந்து வந்தவர்தான். முதலில் வாசித்தல் வேண்டும். திரைக்கதை என்பது தனித்துறை என்றாலும்கூட, அதை எடுப்பது ஒரே இடத்தில் இருக்க வேண்டும். புதுசா ஏதாவது ஒண்ணு காற்றில் பிடிக்கலாம் என்றால் அதற்கும் இருக்கிறது. அது ஒரு யுக்தி. அத்தனை பேருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் இருக்கிற நீர்ச்சுணை நோக்கி போவதில் தப்புக் கிடையாது. போறதில்லை இங்க. இங்கே யாரு வேண்டுமானாலும், சினிமா எடுக்கலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சினிமா என்பது இப்போது குற்றம் மாதிரி ஆகிவிட்டது. குற்றம் செய்வதற்கு பெரிய திறமை எல்லாம் வேண்டியதில்லை, தைரியம் மட்டும் இருந்தால் போதும். அப்படி ஆகிவிட்டதே என்ற கோபம் இருக்கிறது.

'கிராமத்தில் இருந்து வந்தான்யா பாரதிராஜானு ஒருத்தன். அவனைப் பார்த்து எல்லாரும் வந்துவிட்டார்கள்' என்று பழைய தொழில்நுட்ப கலைஞர்கள் சொல்லுவார்கள். ஏன் பாராதிராஜாவை சொல்லுகிறீர்கள். அவர் அப்படியெல்லாம் வரவில்லை. அவரை அப்படி பேசுபவர்கள் பார்க்கும் போது கோபம் வரும். இவர்கள் எல்லாம் பாரதிராஜாவை பாராட்டமலே இருக்கலாம். அவர் வந்து பட்ட கஷ்டங்கள் எவ்வளவு?. இளையராஜாவிற்கு பின்னால் எவ்வளவு கல்வி, கடின உழைப்பு இருக்கிறது தெரியுமா இவர்களுக்கு. நான் பார்த்து வியக்கிற உழைப்பாளி இளையராஜா. அந்த உழைப்பு இல்லாமல் வருபவர்கள் விழாவிட்டாலும், விழுந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். அதில் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அறுவடை பண்ணுவது போல் நடித்தால் என்னவாகும் அறுவடையே நடக்காது. அப்புறம், எங்களுடன் வந்து பங்கிற்கு மட்டும் நிற்பார்கள்.


ஒரு முக்கியப் படைப்புக்கு 'படத்தின் வெற்றி என்பது மூன்று வாரங்களாகச் சுருங்கிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


2, 3 வாரங்கள் படங்கள் ஓடுவது போதும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பு 13 பிரின்ட் ரிலீஸ் பண்ணினார் எஸ்.எஸ். வாசன். அதைப் பார்த்தே என்ன முரட்டுத்தனமா பண்றாரே என்று சொன்னவர்கள் இருக்காங்க. தியாகராஜ பாகவதர் காலத்தில் 3 பிரின்ட்தான் போடுவார்கள். பிய்ந்துவிட்டது என்றால், அதைச் சரி செய்வார்கள். புதிதாகப் போட மாட்டார்கள். அதை அதிகரித்தவர்தான் வாசன். நான் 40 பிரின்ட்டாக இருக்கும்போதே, 100 பிரின்ட் தாண்டப் போகிறதுன்னு சொல்லிட்டிருந்தேன். இன்றைக்கு 3000 பிரின்ட்டைத் தொட்டிருக்கிறது. ஆகையால் இரண்டு வாரம் போதுமானது.


உள்ளூர் ரசிகர்களுக்கு உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் சினிமா கலைஞர்கள், படைப்பாளிகளின் கூடியிருக்கும் பொறுப்புகள் எத்தகையது?



முதலில் பார்க்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதாக கருதுகிறேன். ரசிகர்கள் பார்க்கிற அத்தனை படத்தையும் பார்க்க வேண்டும். இவர்கள் தன் சினிமாவை மட்டுமே பார்க்கிறார்கள். உறவுக்குள், உறவுக்குள் கல்யாணம் பண்ணிக் கொண்டே இருந்தால் உருவங்கள் ஒரே மாதிரி இருக்குமே தவிர, வியாதிகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் சாதி திருமணம் போன்றவை எல்லாம் நடப்பதாக நினைக்கிறேன். ஒரு வித்தியாசமான சிந்தனைக்காக அல்ல. காதல் தான் இந்த சாதியை எல்லாம் ஒழிக்கும் என்று நினைத்தேன். இப்போ அதையும் கெடுக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் பேசுறோம். ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றி யாருமே பேச மாட்டிக்கிறோம். சாதி ஒழிப்பு ரொம்ப மெதுவா நடக்குது. சாதி இல்லையடி பாப்பா என்று பாட்டு பாடிய பாப்பாவிற்கு எல்லாம் கொள்ளு பேத்தி பிறந்தாச்சு. இன்னும் சாதிக்கலவரம் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏதோ தமிழர்களை மட்டும் சாடுவதாக நினைக்க வேண்டாம். நகரத்தில் இருப்பவர்கள் என்னிடம் என்னங்க சாதி என்று இன்னமும் பேசி கொண்டே இருக்கிறீர்கள் என்று? சரவண பவனில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு சாதி எங்கிருந்து தெரியும். கொஞ்சம் தள்ளிப்போனால் தட்டில் சாப்பாடு கொடுக்க மாட்டுக்கிறார்கள். அந்த அநியாயத்தை பத்திரிக்கைகள் கூட சுட்டுக் காட்டுவதில்லை. என்ன அக்கிரமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். சாதி மாறவில்லை என்பது தான் நிஜம். சொல்லுவதற்கே பயமாக இருக்கிறது. இப்போது உற்றுக் கவனித்தீர்கள் என்றால், 'தேவர் மகன்' கதையை எப்படி எழுதியிருக்க வேண்டும். சாதிக் கலவரம் என்றால் ரெண்டு சாதி காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், நான் காட்டவே இல்லை. நான் சொல்ல நினைத்தது அது தான். ஏன் வம்பு என்று நான் சொல்லவே இல்லை. 

Thanks: The Hindu

Sunday, May 24, 2015

ஜனநாயகம் : ஒரு மாபெரும் கேலிக்கூத்து



கீழே வரும் உண்மைக்கதையோடு தமிழக (முன்னாள்) முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் 18 ஆண்டு கால வழக்கினையும் அவருடைய கைது மற்றும் தற்போது இடம்பெற்றுள்ள விடுதலை நாடகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜனநாயகம் என்பது எத்தனை பெரிய கேலிக்கூத்து என்பது புரியும்





மிழ்நாட்டில் ஒரு 6-7 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு!

ஒரு அரசு ஊழியர் (ஊர் பெயர், துறையின் பெயர் நினைவில்லை) ஒரு தடவை லஞ்சம் வாங்கி பிடிபட்டார். அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
அந்த ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர் லஞ்சமாக பெற்ற தொகை வெறும் 1,500 ரூபாய் தான். அவர் நீதிமன்றத்திடம் மன்றாடினார். ‘ஒரு சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? சஸ்பெண்டு செய்திருக்கலாமே!’ என்று கெஞ்சிப்பார்த்தார். நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

“தொகை சிறியதோ பெரியதோ… அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு அரசு ஊழியருக்கு தோன்றியது தவறு! உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டீர்கள். அதற்காகவே இந்த தண்டனை!”

அதன் பிறகு அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டில் எப்படியோ குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் படாத பாடுபட்டு, தன் சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டார். அப்போது அவர் ஓய்வு பெற ஒருசில வருடங்களே இருந்தன.

நீதிமன்றம் அவரை விடுவித்த பிறகு, அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குள் அவரது வேலையை எவன் பிடித்தானோ தெரியவில்லை. அவருக்கு வேலையை மீண்டும் கொடுக்காமல் அலைக்கழித்தது நிர்வாகம்.

ஒரு கட்டத்துக்கு மேல், அவர் சோர்ந்து விட்டார். அவரது நண்பர்கள் சிலர், ‘நீங்கள் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்! நியாயமாக அவர்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்!’ என்று யோசனை சொன்னார்கள்.

“இனியும் வழக்கு போட்டு அலைவதற்கு என் மனசிலும் உடம்பிலும் தெம்பு இல்லை… வழக்கு செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை” என்று சொல்லிவிட்டார் அந்த ஊழியர்.

கடைசிவரை அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலையில் இருந்தபோது லஞ்சப்புகாரில் கைதானதால், பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பலன்கள் எதுவும் சுத்தமாக வரவே இல்லை. இப்போது கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் அவர்.

சாமானியர்கள் எந்தவகையிலும் தப்பிவிட முடியாத இதே சட்டத்தில்தான், பணக்கார பெருச்சாளிகள் நுழைந்து வெளியே வர எண்ணற்ற ஓட்டைகளும் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் இந்த ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள முடிகிறது. மற்றவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

-Jesslya Jessly


Monday, April 13, 2015

மூதூரிலே மலர்ந்தன : 'இலுப்பம் பூக்கள்'









மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'மூதூர்' மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பாகிய 'இலுப்பம் பூக்கள்' வெளியீடு கடந்த 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மூதூர் தி/அந்நஹார் மகளிர் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.



இவ்வெளியீட்டு விழாவில் மூதூர், சம்பூர், தோப்பூர், கிண்ணியா மற்றும் திருகோணமலை ஓட்டமாவடியைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், அரச  ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் அதிபர் ஜனாப். எம். எஸ். அமானுல்லாஹ் அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு மூதூர் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு ஒன்று வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.



மறைந்த எழுத்தாளரான திரு. வ. அ. இராசரத்தினம் அவர்களுக்குப் பின்னர் மூதூரின் சிறுகதை வரலாற்றில் அண்மைக்காலமாக ஒருவித தேக்க நிலை ஒன்று நிலவி வருவதாக நூல் அறிமுகவுரையின்போது கூறிய அதிபர் ஜனாப். ஏ. எஸ். உபைத்துல்லாஹ் அவர்கள், மூதூர் மொகமட் ராபி அந்த தேக்கநிலையை தகர்த்தெறியும் ஆற்றல் மிக்கவர் என்றும் குறிப்பிட்டார்.


அடுத்து நூலாசிரியர் ஜனாப். எம். பீ. மொகமட் ராபி,தமது  பெற்றோர்களாகிய ஜனாப். ஏ. எம். புஹாரி மற்றும் ஜனாபா. அம்ரா புஹாரி தம்பதிகளுக்கு நூலின் முதற் பிரதிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார். இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற அதிபர்கள் என்பதோடு முறையே தி/மூதூர் மத்திய கல்லூரி மற்றும் தி/அந்நஹார் ம.வி.யின் முன்னாள் அதிபர்கள் குறிப்பிடத்தக்கது.



அதனையடுத்து இடம்பெற்ற நூல் மதிப்பீட்டு உரைகளை சிரேஷ்ட எழுத்தாளர்களான நந்தினி சேவியர், ஜனாப் கே. எம். எம். இக்பால், திருமலை நவம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

தி/ஸ்ரீவாணி வித்தியாலய அதிபர் திருமதி. வீ. அன்பழகன் அவர்களது ஏற்பாட்டில் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. ஆ. செல்வநாயகம் அவர்கள் நூலாசிரியரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.



நூலாசிரியர் தமது ஏற்புரையில் நேர்மையும் நெஞ்சுரமும் ஊட்டி வளர்த்த பெற்றோர்கள் இருவரையும் பாராட்டி தனது நன்றிகளையும் தெரிவித்ததோடு சிறுகதை முயற்சியில் தாம் ஈடுபட்டு இலுப்பம் பூக்களை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவர்களை உணர்ச்சிப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.


இறுதியில் ஆசிரியர் ஜனாப் ஏ.எஸ். அப்துல்லாஹ்வின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

-Jesslya Jessly

Saturday, April 11, 2015

'இலுப்பம் பூக்கள்' சிறுகதைத்தொகுப்பு வெளியீடு:







மூதூர் மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பு "இலுப்பம் பூக்கள்" நாளை 12. 04. 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மூதூர் தி/அந்-நஹார் மகளிர் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியிடப்படவுள்ளது.


மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் நூலாசிரியரான ஜனாப். எம். பீ. மொகமட் ராபி நூலை வெளியிட்டு வைக்க ஓய்வுநிலை அதிபர்களான ஜனாப். ஏ. எம். புஹாரி மற்றும் ஜனாபா அம்ரா புஹாரி தம்பதிகள் நூலின் முதற் பிரதியை இணைந்து பெற்றுக்கொள்கின்றனர்.



ஓய்வுபெற்ற மற்றுமொரு அதிபரான எம். எஸ். அமானுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் அதிபர் ஜனாப். ஏ.எஸ். உபைத்துல்லாஹ் நூல் அறிமுகவுரையை நிகழ்த்துவார்.


கலாநிதி கே. எம். எம். இக்பால், சிரேஷ்ட எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் ஓய்வுநிலை அதிபரும் பிரபல பத்தி எழுத்தாளருமான திருமலை நவம் ஆகியோர் நூல் விமர்சனம் புரியவுள்ளனர்.

-Jesslya Jessly

Thursday, February 5, 2015

என் உலகம் மாறிய அந்த ஒருநாள்









ள்ளிரவில் பிறந்த ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன். ஏறக்குறைய நான் இறந்துபோனபோது அது ஒரு நண்பகல் நேரம்.


ஒரு வருடத்திற்கு முன் பள்ளிக்குக் கிளம்பிச்சென்ற நான் பின் வீடு திரும்பவே இல்லை. தாலிபான்களின் தோட்டாக்களால் சுடப்பட்டு, சுயநினைவில்லாமல் பாகிஸ்தானிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டேன். சிலர் இனி நான் வீடு திரும்பப் போவதில்லை எனக் கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக நான் நாடு திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேசிக்கும் நாட்டைவிட்டுப் பிரிந்துசெல்லும் கொடுமை எவருக்குமே நேரக்கூடாது.


ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதெல்லாம், என் பொருட்களால் நிறைந்த, தரையெங்கும் என் உடைகள் இறைந்து கிடக்கின்ற, என் பரிசுகளால் நிரம்பிய அலமாரி நிற்கும் என் பழைய அறையைக் காண மனம் ஏங்குகிறது. ஆனால் என் அருமை பாகிஸ்தானிலிருந்தும் என் தாய்வீடான ஸ்வாட்டிலிருந்தும் ஐந்துமணி நேர வித்தியாசத்தில் இருக்கக்கூடிய நாட்டில் இப்பொழுது உள்ளேன். நினைத்துப்பார்க்க இயலாத அளவிற்கு இங்கு வசதிகள் உள்ளன. எல்லாக் குழாய்களிலும் வெந்நீரோ தண்ணீரோ எப்பொழுதும் கிடைக்கிறது. ஒரு ஸ்விட்சை இயக்கினால் இரவிலும் பகலிலும்கூட விளக்குகள் எரிகின்றன. எண்ணெய் விளக்குகள் இங்குத் தேவையே இல்லை. கடைத்தெருவிற்குச் சென்று சிலிண்டர்களில் எரிவாயு வாங்கிக் கொண்டு வந்து சமைக்கவேண்டாத அடுப்புகள் உள்ளன. இங்கு அனைத்தும் புதுமையாக உள்ளன. சமைத்த உணவுகூடப் பொட்டலங்களில்/
பாக்கெட்களில் இங்கு கிடைக்கிறது.


ஜன்னலில் இருந்து பார்க்கும்போது உயரமான கட்டடங்கள், வரிசை வரிசையாய் ஊர்திகள் செல்லும் நீண்ட சாலைகள், அழகாய் பராமரிக்கப்படும் பச்சைநிற வேலிகள், புல்வெளிகள் மற்றும் சுத்தமான நடைபாதைகள் இவையெல்லாம் கண்ணில் படுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு, ஒரு சில நிமிடங்கள் என் பள்ளத்தாக்கிற்குச் செல்கிறேன் - பனி சூழ்ந்த சிகரமுடைய மலைகள், காற்றிலாடும் பச்சை வயல்கள், தூய நீலநிற ஆறுகள் - ஸ்வாட்டின் மக்களைக் காணும்போது மனம் உவகைகொள்கிறது. எண்ண அலைகள் என்னை மீண்டும் பள்ளியில் கொண்டு நிறுத்துகின்றன. என் தோழிகளுடனும் ஆசிரியர்களுடனும் நான் மீண்டும் ஒன்று சேர்கிறேன். என் உயிர்த்தோழி மோனிபாவைச் சந்திக்கிறேன். நாங்களிருவரும் அமர்ந்து நான் பிரிந்துபோனது போலவே இல்லாமல் கதைபேசி, சிரித்துமகிழ்கிறோம். ஆனால் நான் இருப்பது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் என்பது நினைவுக்கு வருகிறது.


2012 அக்டோபர் 9ஆம் தேதியில் அனைத்தும் மாறிவிட்டன. அன்று இயல்பாகவே ஒரு நல்ல நாளாக இல்லை. ஏனெனில் எங்களுக்குத் தேர்வுகள் பாதி நடந்து முடிந்திருந்தன. நான் நன்கு படிக்கக்கூடிய பெண்ணாக இருந்தாலும், வகுப்பறையிலுள்ள மற்ற தோழிகளைப்போல் தேர்வுகளை முக்கியமாகக் கருதுபவள் அல்ல.


அன்று காலை ஐந்தாறு பெண்களை அடைத்துக்கொண்டு, டீசல் புகையைக் கக்கியவாறே செல்லும் அடர் வர்ண ரிக்க்ஷாக்களில், குறுகிய ஹாஜிபாபா மண்பாதையில் ஊர்வலமாய் வந்தோம். தாலிபானின் காலத்திலிருந்து எங்கள் பள்ளியில், பள்ளி என்பதற்கான எந்தச் சின்னமும் கிடையாது.


வேலைப்பாடுள்ள செப்பு வாயிற்கதவு கொண்டது எங்கள் பள்ளி. தான் எதை மறைத்துநிற்கிறோம் என்று சிறு அறிகுறியும் காட்டாது. சிறுமிகளான எங்களுக்கோ எங்களுடைய பிரத்தியேகமான உலகிற்கு அழைத்துச்செல்லும் மந்திரக்கதவு அது. துள்ளிக் குதித்துச் செல்லும்போது, சூரியனுக்குப் பாதை அமைக்க, மேகங்களைத் துரத்தும் காற்றைப்போல் எங்கள் முக்காடுகளை வீசியெறிவோம். பின் படிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவோம். படிக்கட்டின் உச்சியில் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லக்கூடிய கதவுகளுடன் உள்ள ஒரு முற்றம் இருந்தது. புத்தகப் பைகளை எங்கள் வகுப்பறையில் வைத்துவிட்டு, காலைக் கூட்டத்திற்கு, வெட்டவெளியில் - எங்களின் பின் மலைகள் நிற்கும் - ஒன்று கூடி கவனமாய் நிற்போம். ஒரு பெண் ‘ஆஸான் பாஷ்’ அதாவது லகுவாக சிரமமில்லாமல் நிற்கலாம் என்று உரக்கக் கூறுவாள். நாங்கள் எங்கள் கால்களால் சப்தமெழுப்பி ‘அல்லா’ என்று பதிலுரைப்போம். பின் அவன் ‘ஹோஷியார்’, அதாவது ‘கவனம்’ என்று சப்தமிடுவாள். மீண்டும் நாங்கள் கால்களைச் சப்தத்துடன் ஒன்றுசேர்த்து ‘அல்லா’ என்று கூறுவோம்.


நான் பிறப்பதற்கு முன்னமே என் அப்பாவினால் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் முன்னுள்ள சுவரில் சிவப்பும் வெள்ளையும் கலந்த பெரிய எழுத்துகளில் ‘குஷால் பள்ளி’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். வாரத்தில் ஆறுநாட்கள் நாங்கள் பள்ளிக்குச் சென்றோம். 9ஆம் வகுப்பில் படிக்கும் 15 வயது சிறுமிகளான எங்களுக்கு வேதியியல் சமன்பாடுகளும் உருது இலக்கணமும் கற்றுக் கொடுக்கப்பட்டன. படிப்பினை தரக்கூடிய, ‘அதிக வேகம் ஆபத்து’ போன்ற கதைகளை ஆங்கிலத்தில் எழுதுவோம் அல்லது ரத்த ஓட்டத்தை விளக்கும் படங்களை வரைவோம். என் வகுப்புத்தோழிகள் பலர் மருத்துவர்களாக விளங்க ஆசைப்பட்டனர். இதைப்போய் தமக்கு ஒரு அச்சுறுத்தல் என்று யாரோ கருதக்கூடும் என்று யோசிக்க ஆச்சரியமாக உள்ளது. எனினும் பள்ளியின் கதவுகளுக்கு வெளியே ஸ்வாட்டின் முக்கிய நகரான மிங்கோராவின் கூச்சலும் குழப்பமும் மட்டுமில்லை, சிறுமிகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று கருதும் தாலிபான்களும் இருந்தனர்.


எல்லாக் காலை நேரங்களும் போலவேதான் அந்தக் காலையும் விடிந்தது. ஆனால் சிறிது தாமதமாக... தேர்வுக் காலமானதால் எப்பொழுதும் எட்டுமணிக்குத் துவங்கும் பள்ளி ஒன்பது மணிக்குத்தான் ஆரம்பிக்கும். காலையில் சீக்கிரம் எழப்பிடிக்காத எனக்கு அது மிகவும் சௌகரியமாக இருந்தது. தொழுகைக்காக வரும் அழைப்பையும் காகத்தின் கரைதலையும் சேவலின் கூவுதலையும் மீறி நன்கு தூங்குவேன். முதலில் அப்பா என்னை எழுப்பப் பார்ப்பார். ‘எழுந்திருக்க நேரமாகிவிட்டது ஜானி மன்’ என்பார். இதற்குப் பெர்சிய மொழியில் ஆத்ம தோழமையே என்று அர்த்தம். காலையில் எப்பொழுதுமே அப்படித்தான் என்னை விளிப்பார். “இன்னும் சில நிமிடங்கள் அபா” என்று கெஞ்சி போர்வைக்குள் புதைந்து கொள்வேன். பின் அம்மா வருவார். ‘பிஷோ’ என்று என்னைக் கூப்பிடுவார். பிஷோ என்றால் பூனை. அவர் என்னைக் கூப்பிடும் செல்லப்பெயர் அது. அம்மா கூப்பிட்ட பிறகுதான் நேரமானது எனக்கு உறைக்கும். “ஐயோ நேரமாகிவிட்டதே பாபி” என்று அலறியடித்துக் கொண்டு எழுந்திருப்பேன். எங்கள் கலாச்சாரத்தில் எல்லா ஆண்களும் சகோதரர்கள், எல்லா பெண்களும் சகோதரிகள். அப்பா திருமணம் முடித்து அம்மாவைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றபோது, அண்ணனின் மனைவி என்ற ஸ்தானத்தில் அவரைப் பாபி அதாவது அண்ணி என்றழைத்தனர். நாங்களும் அவரைப் பாபி என்றே அழைக்கத் தொடங்கினோம்.


வீட்டின் முகப்பில் உள்ள நீண்டதோர் அறையில்தான் நான் தூங்குவேன். அந்த அறையில் ஒரே ஒரு கட்டிலும், எங்கள் பள்ளத்தாக்கின் அமைதிக்காகவும் பெண்களின் படிப்புரிமைக்காகவும் நான் போராடியதற்காக எனக்குக் கிடைத்த கொஞ்சம் காசில் வாங்கிய ஒரு அலமாரியும் இருந்தன. அதில் தங்கநிற வர்ணம்பூசிய சில பிளாஸ்டிக் கோப்பைகளை வைத்திருந்தேன். அவை நான் என் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக எனக்குப் பரிசளிக்கப்பட்டவை. இரண்டேமுறைதான் எனக்குக் கோப்பைகள் கை நழுவிப் போயின. அப்பொழுதெல்லாம் என் வகுப்புத் தோழி மால்கா - இ - நூரினால் நான் தோற்கடிக்கப்பட்டேன். அதுபோல் இனி நிகழக்கூடாது என அதன்பின் உறுதியாக இருந்தேன்.



வீட்டிலிருந்து பள்ளி நடந்துசெல்லும் தூரத்திலேயே இருந்தாலும், முந்தைய வருஷத்திலிருந்து மற்ற பெண்களுடன் போகும்பொழுது ரிக்க்ஷாவிலும், வீடு திரும்பும்போது பேருந்திலும் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாற்றமடிக்கும் கால்வாயின் ஊடாகவும் மருத்துவர் ஹூமாயூனின் முடி வளர்க்கும் நிலையத்தின் விளம்பரப் பலகையை - எங்கள் ஆசிரியர் ஒருவருக்கு, திடீரென்று அவர் வழுக்கைத்தலையில் முடி வளர்வதால் - அவர் இங்குதான் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கிண்டலுடன் - கடந்து செல்வோம். ஐந்துநிமிட பயணம்தான். நடந்தால் வியர்ப்பதுபோல் பேருந்துகளுக்குள் வியர்க்காது. மேலும் என் தோழிகளுடன் நன்றாக அரட்டை அடிக்கலாம். ஓட்டுநர் உஸ்மான் அலி, அவரை நாங்கள் ‘பாய் ஜான்’ அதாவது அண்ணாவென்று கூப்பிடுவோம், அவருடன் வம்புக்கதைகள் பேசலாம் என்பதால் இந்தப் பேருந்து பிரயாணம் மிகவும் பிடிக்கும். வினோதமான கதைகள் சொல்லி எங்களையெல்லாம் சிரிக்க வைப்பார் பாய் ஜான்.
நான் தனியே நடந்து பள்ளிக்குச் செல்வதைப்பற்றி அம்மா மிகவும் கவலைப்பட்டதால், பேருந்தில் செல்லத் தொடங்கினேன். வருடம் முழுவதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தவண்ணமே இருந்தன. செய்தித்தாள்களில் சிலதும், சில சிறு குறிப்புகளாகவும், சில மக்கள் வழியாகவும் வந்தன. என்னைப் பற்றித்தான் அம்மாவுக்குக் கவலை. ஆனால் எனக்கோ, தாலிபான்களை எதிர்த்து எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பதால், அப்பாவைக் குறிவைத்துவிடப் போகிறார்கள் என்று கவலை. இதுவரை தாலிபான்கள் ஒரு சிறுமியைக்கூடக் குறிவைத்ததில்லை. அப்பாவின் நெருங்கிய தோழரும், தாலிபான் எதிர்ப்பாளர்களில் ஒருவருமான ஜாகித் கான் ஆகஸ்ட் மாதம் தொழுகைக்குச் செல்லும்போது முகத்திலேயே சுடப்பட்டார். அன்றிலிருந்து அப்பாவைப் பார்க்கும் ஒவ்வொருவரும், ‘கவனமாய் இரு. அடுத்தது நீயாக இருக்கலாம்’ என்று எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.


எங்கள் தெருவில் கார் நுழைய முடியாது. வீட்டிற்கு வர பேருந்திலிருந்து ஓடையருகே இறங்கி, சட்டமிட்ட இரும்புக் கதவைத் திறந்து, சில படிகள் ஏறி வீட்டை அடையவேண்டும். யாராவது என்னைத் தாக்கவேண்டுமென்றால் நான் படியேறும் சமயம்தான் வாகானது என்று எண்ணிக்கொள்வேன். அப்பா சொல்வதுபோல் நான் பகல்கனவு காண்பவள். சில சமயம் வகுப்பறையில் பாடங்களை மறந்து நான் படியேறும்போது தீவிரவாதிகள் வழிமறித்து என்னைச் சுடுவதாகக் கனவு காணுவேன். அப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பேன். என் செருப்பைக் கழற்றி அவனை அடிக்கலாம். அப்படிச் செய்தால் அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காது. அவனிடம் கெஞ்சுவது மேல். “சரி என்னைச் சுடு. ஆனால் நீ தவறு செய்கிறாய். உன்னை நான் தனிப்பட்டமுறையில் எதிர்க்கவில்லை. எல்லாப் பெண்களும் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று கூறலாம்.


ஆனால் நான் உண்மையில் பயப்படவில்லை. இருந்தாலும் வாயிற்கதவு இரவில் நன்கு பூட்டப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வேன். இறந்தால் என்ன நடக்கும் என்று இறையிடம் கேட்கத் தொடங்கினேன். என் உயிர்த்தோழி மோனிபாவிடம் இவை எல்லாவற்றையும் கூறினேன். சிறுவயதில் நாங்கள் ஒரே தெருவில் குடியிருந்தோம். ஆரம்பப் பள்ளியிலிருந்து நாங்கள் தோழிகள். ஜஸ்டின் பீய்பர் பாடல்கள் ஆகட்டும், ட்விலைட் படமாகட்டும், முகம் வெளுக்க வைக்கும் க்ரீம் ஆகட்டும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டோம். அவளுடைய கனவு, உடைகள் வடிவமைப்பவளாய் ஆவது. அவளுடைய குடும்பத்தினர் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்திருந்ததால் தான் ஒரு டாக்டராக வேண்டுமென்றே கூறிக் கொண்டிருந்தாள். எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு, வேலைக்குச் செல்லும் வாய்ப்பு என்று ஒன்று வந்தால் அது ஆசிரியை ஆகவோ மருத்துவராகவோ மட்டுமே இருக்கும். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆரம்பத்தில் மருத்துவர் என்று சொல்லிக் கொண்டிருந்த நான், பின் என் கனவை மறைக்காது ஓர் அரசியல்வாதியாகவோ விஞ்ஞானியாகவோ ஆகவேண்டும் என்று கூறுவேன். ஏதாவது வேண்டாததொன்று நடக்கப் போகிறதென்றால் மோனிபாவிற்குத் தெரிந்துவிடும். “கவலைப்படாதே! தாலிபான்கள் சிறுமிகளைக் கொல்லமாட்டார்கள்” என்று அவளிடம் கூறினேன்.


பேருந்து வந்தவுடன் படிகளில் இறங்கி ஓடினோம். மற்ற பெண்கள் அனைவரும் வெளியே வரும்முன் தலையை முக்காடிட்டுக்கொண்டு பின்பக்கம் வழியே பேருந்தில் ஏறினர். பேருந்து என்பது நாங்கள் டைனா எனக்கூறும் ஒரு டொயோட்டோ ட்ரக்வண்டி. பின்புறத்தில் மூன்று பெஞ்சுகள் இடப்பட்டிருக்கும்; இரு ஓரங்களில் இரண்டும், நடுவில் ஒன்றுமாய். அதில் 20 மாணவிகளும் 3 ஆசிரியைகளும் நெருக்கியடித்துக்கொண்டு அமர்வோம். நான் மோனிபாவுக்கும், கீழ்வகுப்பில் படிக்கும் ஷாஸியா ரம்ஜானுக்கும் இடையில், தேர்வட்டைகளை மார்புடன் அணைத்துக் கொண்டும், புத்தகப்பையை காலில் இடுக்கிக் கொண்டும் அமர்ந்திருந்தேன்.
அதற்குப்பின் கொஞ்சம் தெளிவில்லாமல்தான் நினைவிற்கு வருகிறது. பேருந்தின் உட்புறம் மிகவும் வெப்பமாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. குளிர்காலம் இம்முறை தாமதமாகிவிட்டது. தூரத்தே ஹிந்துகுஷ்மலையின் உச்சியில்மட்டும் பனி ஒருதொப்பி போலிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் பின்புறம் ஜன்னல்கள் ஏதும் இல்லை. நல்ல கனமான பிளாஸ்டிக் விரிப்பு போட்டு மூடப்பட்டிருந்தது. அது மிகவும் அழுக்கடைந்தும் தூசு நிரம்பியும் காணப்படும். வெளியே எங்களால் பார்க்கமுடிந்ததெல்லாம் ஒரு சிறிய வானத் தகட்டையும், சில சமயங்களில் கொஞ்சம் சூரியனையும்தான். அந்தநேரத்தில் மஞ்சள்நிறத்தில் தூசு பறந்து எல்லாவற்றின் மேலும் படியும்.
பேருந்து எப்பொழுதும்போல வலதுபுறமாகத் திரும்பியது. அங்குதான் இராணுவச் சோதனைச்சாவடி உள்ளது. பின் யாருமில்லாத கிரிக்கெட்மைதானத்தின் முனையில் திரும்பியது. அதன்பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

என் கனவுகளில் ஒன்று நானும் என் அப்பாவும், பேருந்தில் பயணம் செல்லும்போது சுடப்படுவது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஒரே மக்கள்கூட்டமாய் இருக்கும். அதில் நான் அப்பாவைத் தேடிக் கொண்டிருப்பேன்.

ஆனால் நிஜத்தில் நிகழ்ந்ததோ வேறு. பேருந்து திடீரென்று நின்றுவிட்டது. எங்களின் இடதுபுறத்தில், முழுவதும் புதர் மண்டிக்கிடந்த ஸ்வாட்டின் முதல் நிதியமைச்சரான ஷேர் மொஹமத் கானின் கல்லறை இருந்தது. வலதுபுறம் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. சோதனைச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரம்தான் சென்றிருப்போம்.
பேருந்தின்முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் வெளுத்தநிறத்தில் உடையணிந்த தாடியுள்ள ஒரு மனிதன் பேருந்தை நிறுத்தக் கூறியிருக்கிறான்.


“இது குஷால் பள்ளியின் பேருந்துதானே?” என்று ஓட்டுநரிடம் கேட்டிருக்கிறான். பேருந்தின் வெளிப்பக்கத்தில் பெரிய எழுத்தில் பெயர் எழுதியிருக்கும்போது, முட்டாள்தனமான கேள்வி எதற்கு என்று எண்ணியபடி,

“ஆமாம்” என்றிருக்கிறார்.

சில குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தேவை என்றான் அவன்.

“அலுவலகத்திற்குச் சென்று கேட்டுக் கொள்” என்றார் உஸ்மான் பாய் ஜான்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, இளைஞன் ஒருவன் பேருந்தின் பின்பகுதியை நோக்கி வந்தான். “பார், யாரோ உன்னிடம் பேட்டி எடுக்க வருகிறார்கள் போலிருக்கிறது” என்றாள் மோனிபா. அப்பாவுடன் சேர்ந்து பெண்களுக்குக் கல்வி தேவை என்றும், எங்களை வீட்டிலேயே பதுக்கிவைக்க நினைக்கும் தாலிபான்களுக்கு எதிராய்ப் பல நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறேன். அதனால் பல ஊடகவியலாளர்கள் என்னைப் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால் யாரும் இதுபோல் நடுவீதியில் நிறுத்திப் பேசியதில்லை. அவன் ஒரு உயரமான தொப்பி அணிந்திருந்தான். வாயையும் மூக்கையும் குளிர்ஜுரம் வந்தவன்போல், கைக்குட்டையால் மறைத்திருந்ததால் காண்பதற்கு ஒரு கல்லூரி மாணவனைப்போல் தோற்ற மளித்தான். பின்பக்கம் வந்துநின்று எங்களை நோக்கிச் சாய்ந்தான். “இங்கு யார் மலாலா?” என்று கேட்டான்.


யாரும் எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனாலும் பல பெண்கள் என்னை நோக்கினர். முகத்தை மூடாமலிருந்த ஒரே பெண் நான்தான்.
அப்போதுதான் தன் கறுப்புத் துப்பாகியை உயர்த்தினான். பின்பு அது கோல்ட் 45 வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொண்டேன். பெண்கள் அலறினார்கள். அவள் கையை நான் இறுக்க பற்றிக் கொண்டதாக மோனிபா கூறினாள்.
அவன் அடுத்தடுத்து மூன்றுமுறை சுட்டதாக தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடதுதோளின் வழியே வெளிவந்தது. இடது காலிலிருந்து ரத்தம் வழிய மோனிபாவின்மேல் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். அதனால் அடுத்தடுத்த குண்டுகள் அருகில் இருந்தவர்களின்மேல் பாய்ந்தது. ஷாஸியாவின் இடதுகையில் இரண்டாவது குண்டும் அவளின் இடது தோளின் வழியாய் கைனத் ரைஸ்ஸின் வலது தோளுக்கு மூன்றாவது குண்டும் பாய்ந்தன.

சுடும்போது அவனுடைய கை நடுங்கிக்கொண்டிருந்தது என்று தோழிகள் பின்னர் கூறினர். மருத்துவமனையை அடைவதற்குள் என் நீண்டமுடியும், மோனிபாவின் மடியும் ஒரே இரத்தமாக இருந்தது.

யார் மலாலா? நான்தான் மலாலா. இதுதான் என் கதை.

(மலாலா யூசுபாஃஸாய், பிரபல ஊடகவியலாளர் கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய தன்வரலாற்று நூல் ‘ஐ ஆம் மலாலா’. காலச்சுவடு பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர உள்ள நூலின் பகுதி
இது. தமிழில் பத்மஜா நாராயணன்.)

Thanks: Kalachuvadu

Thursday, January 22, 2015

முட்டை அப்பமும் செத்த கிளிகளும்



Note: ஜனாதிபதித்தேர்தல் ஆரம்பித்த வேளையில் நான் பரீட்சை ஒன்றுக்காக மும்முரமாக ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன் அத்துடன் என்னுடைய  தளமும் செயலிழந்திருந்த காரணத்தால் அந்தநேரத்தில் கிடைத்த ஆக்கங்களையும் பதிவு செய்ய முடியாது போனது. இனியாவது அவற்றை பிரசுரிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை பதிவு செய்கின்றேன்.-Jesslya Jessly


 




முட்டை அப்பமும் செத்த கிளிகளும்



'அரசியல் பத்திகள் எழுதுவதை நிறுத்திவிடலாமா?' என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி தேர்தல் களம் திடீரென
சூடுபிடித்திருக்கின்றது.

'என்னை எதிர்த்து பேட்டியிடப்போகும் பொதுவேட்பாளரை காண நான் ஆவலாக இருக்கின்றேன்.. இன்னுமா நீங்கள் அவரைத் தெரிவு செய்யவில்லை?' என்று கிண்டலும் கேலியுமாக எதிர்க்கட்சிகளைப் பார்த்து கொக்கரித்துக் கொண்டிருந்தார் ஆளுந்தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஆனால் தேர்தல் அறிவிப்பினை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டு வெளியிட்ட அன்று மாலையே அவருக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சிறுவர்களுக்கான டொம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூண் படங்களிலே எலியை விடாமல் துரத்தும் பூனைக்குத் தலையில் விழும் எதிர்பாராத தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து அதன் தலைப்பகுதி புடைத்து எழுவதையும் நாம் பார்த்திருப்போம். அது போலவே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பிலும் விழுந்தது ஒரு அதிர்ச்சிக்குட்டு.

கேலிபேசியபடி ஜனாதிபதி தேடிய அந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வேறுயாருமல்ல.


வடக்கு மாகாணசபை நீங்கலாக தொடர்ச்சியாக 29 தேர்தல்களை ஆளும்தரப்பு வென்றெடுக்க காரணமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலருமான சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்கள்தான் ஜனாதிபதியின் நேரடிப்போட்டியாளாராக திடீர் அவதாரம் எடுத்திருந்தார்.



இது நமது ஜனாதிபதியை மட்டுமல்ல சகலரையும் அதிர்ச்சியிலாழ்த்தியிருக்கின்றது.

தோசையைப் புரட்டிப்போட்டதுபோல சட்டென மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையை சுதாரித்துக்கொள்ள முடியாமல் திணறினார்கள் ஆளும் தரப்பினர். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி அறிவிப்பை எப்படி எடுத்துக்கொள்வது அதற்கு எப்படியான தூண்டற்பேற்றைக் காண்பிப்பது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறியவர்களாக ஏதேதோ உளறிக்கொட்ட ஆரம்பித்தனர்.

ஆயினும் அதிர்ச்சியில் இருந்து அனைவரும் மீள்வதற்கிடையில் பல காரியங்கள் நடந்து முடிந்துவிட்டிருந்தன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் ராஜித சேனரத்ன, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுடன் இணைந்து ஊடகங்களை வரவழைத்து தனது அதிரடி முடிவை அறிவித்ததோடு ஜனாதிபதி தரப்பினரின் குடும்ப ஊழல் ஆட்சியையும் சர்வாதிகாரப்போக்கையும் விமர்சித்தார் மைத்திரிபால சிறிசேன. அத்துடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து மக்களுக்கான நல்லாட்சியை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்தார் அவர்.

தான் மற்றும் அமைச்சர் ராஜித சேனநாயக்க போன்றவர்கள் ஆளும் தரப்பிலிருந்து வந்தபோதிலும் மகிந்தரின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான போராட்ட மனோநிலையுடன் பொருமியவாறே இருந்து வந்ததாக குறிப்பிட்ட மைத்திரிபால தங்களைப்போலவே பல அமைச்சர்கள் இன்னும் இருந்து வருவதாகவும் கூறினார். முன்பெல்லாம் அமைச்சரவையைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி அண்மைக்காலமாக தனது குடும்ப உறுப்பினர்களின் முடிவுகளை கைச்சாத்திட்டு அங்கீகரிக்கும் இயந்திரமாக மாத்திரம் அமைச்சரவையை மாற்றியிருப்பதாக வேதனையுடன் கூறினார்.

உள்ளிருந்து போராடுவதிலே இனிமேலும் பலனில்லை என்பதால் நாட்டு மக்களின் நலன்கருதி ஒருகட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க வின் இணக்கப்பாட்டுடன் இந்த ஊழல் மிகுந்த மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சியைத்தகர்த்தெறியத் தீர்மானித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. அதற்கு ஒத்துழைத்து பெரும் தியாகம் ஒன்றைப் புரிந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

அமைச்சர் மைத்திரி கொடுத்த 30,000 மெகாவாட் மின்சார அதிர்ச்சியில் வெலவெலத்துப்போனார் ஜனாதிபதி. அவர் அதுபற்றி உடனடியாகத் தெரிவித்த கருத்தானது அதனை தெளிவாகத் தெரிவித்தது. அதுவரை அவர் தன்னைப் பற்றி நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கட்டமைத்திருந்த கனவான் பிம்பத்தை தகர்த்தெறிந்தது.

ஜனாதிபதி கூறினார், 'ரணிலுக்கு இப்போது இரண்டு மைத்ரிகள். வீட்டிலொரு மைத்ரியும் வெளியில் ஒரு மைத்ரியும் இருக்கிறார்கள்'

வீட்டில் இருப்பதாகக் கூறியது ரணிலின் பாரியாரை. அவரது பெயரும் மைத்ரி என்றே ஆரம்பமாகின்றது. பாருங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அதுவும் தேசத்தின் பெருமதிப்பிற்குரிய முதல் பிரஜை தனது சகபோட்டியாளரைப்பற்றி எத்தனை தரம் தாழ்ந்த கூற்றை வெளியிட்டுள்ளார் என்று.



அதிலிருந்து ஆரம்பமானதுதான் மைத்திரி மீதான ராஜபக்ஷ விசுவாசுகளின் சேறுபூசல்கள். அவர் துரோகம் செய்து விட்டார், ஜனாதிபதியைக் காட்டிக்கொடுத்து விட்டார் என்றும் வெளிநாட்டுச் சதியிலே அவர் விழுந்துவிட்டார் என்றும் மழைக்காலத் தவளைகளாக கூச்சலிட்டார்கள். ஜனாதிபதியோ, முதல் நாளிரவு தன்னுடன் ஒன்றாக அமர்ந்து முட்டை அப்பம் சாப்பிட்டவரான மைத்திரி மறுநாள் காலையில் எதிர்ப்புறத்திற்குச் சென்றுவிட்டதாக கூறி அவரை 30 வெள்ளிப்பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

முன்னம் ரணில் விக்கிரமசிங்கதான் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்பதை யூகித்து வைத்திருந்த ஆளும் தரப்பினரும் ஆதரவாளர்களும் மைத்திரியின் அதிர்ச்சி வைத்தியத்தில் நிலைகுலைந்து போயுள்ளனர். இலட்சக்கணக்கான பணத்தை இறைத்து ரணிலை மக்கள் மத்தியில் மலினப்படுத்தும் விதமாக முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளும் பதாதைகளும் இறுவட்டுக்களும் பயனின்றி வீணாகிப்போனதே என்ற ஆதங்கமும் அதற்கு காரணமாம். அதுமட்டுமல்ல, அவசர அவசரமாக மைத்திரியைச் சேறுபூசும் சுவரொட்டிகளைத் தயாரிப்பதற்கும் போதிய அவகாசமும் அவர்களுக்கு இல்லாது போனது.

ஆனால் அதற்கிடையில் மைத்திரியோ ஆளும் தரப்பினரின் அடிவேரையே அசைக்க ஆரம்பித்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் முதற்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் வரை எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பவற்றையெல்லாம் மக்கள் முன்னே புள்ளி விபரங்களுடன் போட்டுடைத்தார் மைத்திரி. மக்கள் விரோத ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியை நிறுவுவதை நோக்காகக் கொண்டே தான் தனக்கு நிகழ்வதற்குச் சாத்தியமான உயிராபத்தையும் பொருட்படுத்தாது அரசைவிட்டு வெளியேறி வந்திருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஏற்கனவே விலகிச் சென்றிருந்த ஹெல உருமய கட்சியும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் தங்களது ஆதரவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு தெரிவித்தன. அதுவரை தேர்தல் வெற்றி குறித்த இறுமாப்பில் திளைத்திருந்த ஆளும் தரப்பு முதன்முறையாக கதிகலங்க ஆரம்பித்தது. பொதுச்செயலாளரை இழந்துவிட்ட நிலையில் அரசதரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக எதிர்க்கட்சிக்கு தாவ ஆரம்பித்தது எரிந்த புண்ணில் உப்புத்தடவியது போலாயிற்று.

இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் ஜேவீபி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் நடப்பவற்றை அவதானித்தபடி அமைதிகாத்து வந்தது. ஜேவீபிக்கு எந்தக்காலத்திலும் ஐக்கிய தேசியக்கட்சியைக் கண்ணில் காண்பிக்கக்கூடாது. மகிந்தரின் ஊழல் அரசை வீழ்த்தவேண்டும் எனும் அவசியம் அந்தக்கட்சிக்கு இருந்த போதிலும் அதற்காக ஐ.தே.க வை நேரடியாக ஆதரிக்க அது விரும்பவில்லை. ஆகவே முன்பெல்லாம் வெறுமனே ஆளும் தரப்பை கடுமையாக விமரிசிப்பதையே அது முழுமூச்சாக செய்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அரசியல் அரங்கில் திடீரென ஏற்பட்ட மாறுதல் ஜேவிபீ கட்சியையும் உற்சாகங்கொள்ள வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே இந்த ஜனாதிபதித் தேர்தலே சட்டவிரோதமானது என்று கூறி ஒதுங்கியிருக்கத் தீர்மானித்திருந்த அக்கட்சி தற்போதைய நிலைமையை கவனித்து 'ஏகாதிபத்திய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவோம்' என்ற கோஷத்தை முன்வைத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது மைத்திரியை முன்னிறுத்தி நல்லாட்சிக்காகப் போராடும் எதிர்க்கட்சிகளின் பொது அமைப்புக்கு மறைமுகமாக தனது ஆதரவை வழங்க ஆரம்பித்துள்ளது.

ஆரம்பத்தில் மக்களிடம் வெற்றி நிச்சயம் என்று முழங்கி வந்த ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தொடர்ச்சியான கட்சித்தாவலையும் மைத்திரிக்கு கிடைத்து வந்த மக்கள் ஆதரவையும் பார்த்தபின்பு சுதியை மாற்றி, தாம் தோல்வியடைந்தால் நாட்டில் என்ன நிகழும் என்று புலம்ப ஆரம்பித்திருப்பது போலத் தெரிகின்றது.  அவர்களது புலம்பல்களிலே புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மகிந்தரும் ராணுவ அதிகாரிகளும் ஐ.நா வின் சர்வதேச விசாரணைக்குழுவால் போர்க்குற்ற விசாரணைக்காக கொண்டு செல்லப்படுவார்கள் என்பதுதான் பிரதான விடயமாக உள்ளது. இது தவிர, நமது நாடு இறைமையை இழந்து மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்க வேண்டிவரும், பாரிய செலவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி அபிவிருத்தி மற்றும் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும் போன்றவையும் அடக்கம்.

ஆனால் ஆளும் தரப்பின் இந்த யூகங்களுக்கெல்லாம் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு. மைத்திரிபால சிறிசேன, தான் ஜனாதிபதியானதும் மகிந்த ராஜபக்ஷவையோ அவரது ராணுவ அதிகாரிகளையோ சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் இன்றைய அரசின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஊழல் களைந்து மூன்று மடங்கு வேகத்துடன் செய்யப்போவதாகவும் தெளிவான பதிலடிகளை வழங்கியுள்ளார்.

இதனால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஆளும் தரப்பினர் பல்வேறு உபாயங்களைக் கையாள ஆரம்பித்திருக்கின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதில் ஒன்றுதான் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்தெடுக்கும் முயற்சிகளாகும். இதற்காக பெருந்தொகையான நிதி பரிமாறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுந்தரப்பு மாத்திரமல்ல எதிர்த்தரப்பினரும் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல் எனும் பழிவாங்கல் பாணியில் ஐ.தே.க வின் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவை தமது பக்கத்திற்கு எடுத்துக்கொண்டார்கள். ஆளும் தரப்புக்குத் தாவியதும் சொல்லிவைத்தாற்போல அதுவரைகாலமும் தானிருந்த தரப்பினரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் அத்தநாயக்க.




இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், திஸ்ஸ அத்தநாயக்கா ஐ.தே.க வை விட்டு ஆளும் தரப்புக்குத் தாவியதை எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். சிலர் 'ஒழிந்தது பீடை' என்று வெளிப்படையாகவே பேசியதும் குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ சமகாலத்தில்தான் கொலன்னாவையைப் பிரதிநிதிப்படுத்தும் மேல்மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் எதிர்த்தரப்புக்கு தாவியிருந்தார். உடனே, 'செத்தகிளியை ஆளும்தரப்புக்குக் கொடுத்துவிட்டு பஞ்சவர்ணக்கிளியை அல்லவா வாங்கியிருக்கின்றார்கள்' என்று மேற்குறித்த இருவரது தாவலையும் ஒப்பிட்டு மக்கள் வேடிக்கையாகப் பேசலானார்கள்.

தவிர, ஏராளமான தேர்தல்களில் தொடர் தோல்வி கண்ட ஐ.தே.க வின் செயலாளராக இருந்து அந்தத் தோல்விகளுக்கு விளக்கமளித்து விளக்கமளித்தே அனுபவம்பெற்றவரான திஸ்ஸ அத்தநாயக்காவை இம்முறை ஆளும் தரப்பினர் வாங்கியிருப்பதற்கு எதிர்கால அர்த்தமுள்ளது என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகின்றது.



அவை ஒருபுறமிருக்க ஒருகாலத்தில் புலிகளை ஒழித்துக்கட்டியதன் மூலம் நாட்டு மக்களின் மனதிலே ஒரு சாகச நாயகனாக உயர்ந்திருக்கும் இன்றைய ஜனாதிபதியின் சேவைகளையும் நாம் மறந்துவிட முடியாது. இதை நம்ம மறுப்பவர்கள் இறுதியுத்தத்தின்போது சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளை துணிச்சலாக எதிர்கொண்டு நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மகிந்த ராஜபக்ஷ போல வேறு எந்தத் தலைவராவது நிலைநாட்டியிருக்க முடியுமா என்று உங்;களுக்குள் ஒருதடவை கேட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.

அதுமாத்திரமல்ல வர்த்தகத் தலைநகராம் கொழும்பு நகரை உயர்ந்த தரத்தில் அழகுற அபிவிருத்தி செய்தமை, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை துரிதமாக அபிவிருத்தி செய்து பயணநேரத்தை குறைத்தமை, வடக்கு வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்கள் மூலம் யுத்தத்ததால் சிதைந்து கிடந்த பிரதேசங்களை புனர்நிர்மாணம் புரிந்துமை என்று அவரது சேவைகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.

அதேவேளை இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் நாட்டின் தலைவர் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக இன்று தன்னுடைய தரப்பு உறுப்பினர்களையே தக்கவைத்துக்கொள்ள முடியாதளவு தடுமாறிப்போனமைக்குரிய காரணங்களையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தாக வேண்டும்.

நாட்டின் தீராத் தலைவலியாக இருந்து வந்த தீவிரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டிருந்த போதிலும் அந்த தீவிரவாதம் முளைத்துக் கிளம்பியதற்குரிய அடிப்படைக்காரணங்களை அரசு புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்குரிய தீர்வுத் திட்டங்களை முன்வைத்து செயற்படுவதற்குப் பதிலாக வெறும் சலுகைகளையும் அபிவிருத்திகளையும் மட்டுமே வழங்கி திருப்திப்படுத்தி விடலாம் என்று கருதிச் செயற்பட்டு வருகின்றது.

தவிர, வடக்கு மற்றும் கிழக்கிலே சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலே முன்னர் அங்கு ஒருபோதுமே வசித்திராத பெரும்பான்மை மக்களை இராணுவத்தின் அனுசரணையுடன் திட்டமிட்ட விதத்தில் குடியேற்றிக் கொண்டிருகின்றமை.



சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்களின் மீதும் அவர்களின் மத தலங்கள் மற்றும் வியாபார நிலையங்களைக் குறிவைத்து கடும்போக்காளர்களும் சமூகவிரோதிகளும் இணைந்து திட்டமிட்டு நடாத்தி வருகின்ற பல தாக்குதல்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அல்லது கண்டும் காணாமல் நடந்து கொள்கின்றமை.

ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மீது நடாத்தப்படும் அடக்குமுறை மற்றும் உரிமைக்காக அமைதியாகப் போராடும் மக்கள் அமைப்புகள் மீதான இராணுவ அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றமை. ஆளுந்தரப்பு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட சுதந்திரமாக இயங்க முடியாத வகையில் மறைமுகமாக அழுத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கம்.

யுத்தம் முற்றாக நிறுத்தப்பட்டு பலவருடங்களாகிவிட்ட போதிலும் அதன் பலனை இன்னும் அனுபவிக்க முடியாதிருக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வரிச்சுமைகளால் வெறுப்பேற்றுகின்றமை.

வரலாற்றில் என்றுமில்லாத அளவில் வெளிநாட்டுக்கடன் பெறப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவற்றிலே பெருமளவில் ஊழல் நிறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் ஆதாரபூர்வமாக தெரிவித்து வருகின்றமை.

இவ்வாறான பல காரணங்களால்தான் இன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதுவே மகிந்த ராஜபக்ஷ இன்றைய தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய மிகவும் சவாலான விடயங்களாக இருந்து வருகின்றன.



இதேவேளை சிறுபான்மை மக்களை பிரநிதித்துவம் புரியும் கட்சிகளின் நிலைமைகள் இன்னும் கவலைக்கிடமாகவே இருந்து வருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே யாருக்கு வாக்களிப்பது என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டமைதான். ஆனால் அவர்களை வழிநடத்துவதாக பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கட்சிகள்தான் வரலாற்றில் என்றுமில்லாதளவு குழப்பத்தில் மூழ்கி தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் முதற்கட்ட தபால் வாக்களிப்பு கூட ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்றைய தினம் வரை தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில்தான்  தமிழ், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் புரிந்துவரும் சில கட்சிகள் இருந்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இதுவரை தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை. நாட்டின் முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானோரை பிரதிநிதித்துவம் புரியும் ஒரு பொறுப்புவாய்ந்த கட்சியானது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மிகச் சிக்கலான அரசியல் சூழ்நிலையில் அதுவும் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் இவ்வாறு தடுமாறிக்கொண்டிருப்பதானது வேடிக்கையானது மட்டுமல்ல மலினமானதும் கூட. இனிமேல் முஸ்லீம் மக்கள் குறித்த கட்சிக்கு வழங்கும் ஆதரவையும் மறுபரிசீலனை புரியவேண்டிய தேவையையும் இது உண்டாக்கியுள்ளது.



தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க முடியாதிருப்பதற்கு தனித்தனியே வௌ;வேறு காரணங்களிருப்பது போலத் தோன்றுகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகத் தெரிவித்தால் ஆளும்தரப்பினருக்கு ஆதரவான சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் அதை மக்களிடையே பகிரங்கபடுத்தி அரசியல் இலாபம் பார்த்து விடுவார்கள் என்பது ஒன்றும் மறைமுகமான விடயமல்ல.

முஸ்லீம் காங்கிரஸினருக்கு மகிந்தருக்கு தலையையும் மக்களுக்கு வாலையும் காட்டும் விலாங்குமீன் வேலை பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.

அதாவது பெரும்பான்மையான நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் இன்றைய நிலையில் எதிர்த்தரப்பு பொதுவேட்பாளர் வெற்றிபெற்றால் தமது மக்களும் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருப்பதை சுட்டிக்காட்டி புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஒட்டிக்கொள்ளலாம். மாறாக, மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டாரானால், 'ஐயா, நாங்கள் கடைசிவரை உங்களோடுதானே இருந்தோம்' என்று கூறி வழக்கமான பதவி சலுகைகளோடு அமோகமாய் இருந்துவிடலாம்.

இப்படி ஒரு நப்பாசை அவர்களுக்கு.

அதேவேளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி தரப்பினர் தேர்தல் விதிகளுக்கு முரணான விதத்தில் அரச வளங்களையும் மக்களின் வரிப்பணத்தையும் மட்டுமல்லாது தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொண்டிருப்பதையெல்லாம் பார்க்கும்போது இந்தத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து முடியுமா என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது.

எது எவ்வாறாயினும் வாக்களிப்பிற்கு ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கப்போவது திருவாளர் பொதுஜனமே.


-மூதூர் மொகமட் ராபி 
(2014.12.23)

Tuesday, September 30, 2014

சிறுவர் தினம் - 2014






காலம் மாறிப் போச்சு!







காலம் இப்போ மாறிப்போச்சு தோழா
காசுக்கெல்லாம் அடிமையாச்சு தோழா
சிறுவர் எங்கள் உரிமையெல்லாம் தோழா - வெறும்
ஒருநாள் கூத்தாய் ஆகிப்போச்சே தோழா!


ஓடியாட நேரமில்லை தோழா - எம்மை
ஓய்வில்லாமல் கொல்லுகின்றார் தோழா
பட்டி மாடு ஆட்டைப்போல தோழா - தினம்
காலை மாலை அடைக்கின்றாரே தோழா!


புத்தகப்பை பாரமாச்சு தோழா
பாலர் முதுகும் இங்கே கூனிப்போச்சு தோழா
பள்ளிச்செலவு கூடிப்போச்சு தோழா - ஆனால்
படிப்பின் நோக்கம் மாறிப் போச்சே தோழா..!


பள்ளிப்பாடம் கூடிப்போச்சு தோழா - ஆனால்
கல்வித் தரமோ இறங்கிப்போச்சு தோழா
பாடுபட்டு படித்தபோதும் தோழா - ஓர்
பலனும் அதிலே இல்லையடா தோழா!


கோயில் வாசல் உண்டியலோ தோழா - எங்கள் தலை
குப்பை நிறைக்கும் தொட்டியாமோ தோழா
வாழும் கலை சொல்லிடாமல் தோழா - வெறும்
ஏட்டுச்சுரைக்காய் சமைக்கின்றாரே தோழா..?


தேடிக் கற்கும் நாளும் வந்தால் தோழா - கல்வி
தேனைப்போல இனிக்குமேடா தோழா
வேறு எதுவும் வேண்டாமடா தோழா -முதலில்
எம் கட்டுகளை அவிழ்க்கச் சொல்லு தோழா!


-மூதூர் மொகமட் ராபி

Thursday, September 25, 2014

திருகோணமலை இளைஞன் S.S. லிங்கேஸ்வரனின் 'வலயம்' குறும்படம்






டந்த 20.09.2014 சனிக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வலயம் எனும் குறும்படம் திருகோணமலை நகர முதல்வர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த S. S. லிங்கேஸ்வரன் எனும் இளைஞனின் நெறியாள்கையின் கீழ் அவருடைய நண்பர்கள் குழு மற்றும் இரு பாடசாலைச் சிறார்கள் நடித்திருந்தனர்.



இந்தக் குறும்படத்தை விமர்சிப்பதற்கு முன்பு ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகின்றேன். திரைப்படம் சார்ந்த போதிய அறிவோ அனுபவமோ இல்லாதநிலையிலே குறைவான நிதி மற்றும் தொழினுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறும்படம் ஒன்றை உருவாக்க நினைத்த இளைஞன் லிங்கேஸ்வரனினதும் அவரது குழுவினரதும் தைரியத்தை முதலிலே பாராட்டியாக வேண்டும்.


முதன்முதலாக ஒரு சைக்கிளை சுயமாக ஓட்டிப்பார்க்கும் சிறுவன் பலதடவை விழுவதும் மீண்டும் எழுந்து முயல்வதுமான அந்தப் புது அனுபவத்தைப்போல இந்த இளைஞனும் இந்தத்துறையில் இறங்கியிருக்கின்றான். அவனுடைய முதல் முயற்சியிலேயே அவனுடைய முழுத்திறமையையும் மட்டிட முடியாது. மட்டிடவும் கூடாது.
இனிமேல் படத்திற்கு வரலாம்..


'வலயம்' படத்தின் கதை நமது மண்ணின் சூழலுக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பது ஆரம்பக் காட்சியிலேயே புரிந்து விடுகின்றது. ஆம் இப்போதெல்லாம் தமிழக சினிமாவில் ஒரு போக்காக ஆகிவிட்ட கேங்ஸ்டர் & டாஸ்மாக் வகைக் கதை.

அதாவது சட்ட விரோத செயல்களைப் புரிந்துவரும் பாதாளக்கோஷ்டி ஒன்றில் இயங்கும் துப்பாக்கி இளைஞர்கள் படம் முழுவதும் சாராயம் குடிக்கின்றார்கள். மதுபோதையுடன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தமது சகாக்களுக்கு துரோகம் செய்து போட்டுத்தள்ளுகின்றனர். இது ஒரு வளையமாக நடந்துகொண்டிருப்பதை 23 நிமிடத்துக்குள் காண்பிக்கின்றார்கள்.


படத்தின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது. இசை பெரும்பாலும் கதையின் தன்மையை ஒட்டிச் செல்கின்றது. எடிட்டிங்கும் பரவாயில்லை. ஆனால் உரையாடல் படத்தின் நிச்சயமாக விமர்சனத்திற்குரியது.

கண்களை சிறிது மூடி படத்தின்  உரையாடலை மட்டும் ஒருவர் கேட்க நேர்ந்தால் தான் பார்ப்பது ஒரு தென்னிந்திய சினிமாவைத்தான் என்று கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார். அந்தளவுக்கு படத்தில் கோடாம்பாக்கம் மற்றும் மதுரைத் தமிழ் கோலோச்சுகின்றது.

உதாரணத்திற்கு ஒரு காட்சி:

கதவு தட்டப்படுகின்றது. வந்திருப்பது யாரென்று பார்க்கும்படி அடியாட்களை பணிக்கின்றார் போதையிலிருக்கும் தலைவன். கதவு திறக்கப்பட ஒருவன் கையிலே பையுடன் நிற்கின்றான். உள்ளே வந்து,


'இதுல 10 லச்சம் பணம் இருக்கு. அண்ணன் குடுத்திட்டு வரச்சொன்னாப்பல' என்கின்றான். (இதிலே 'சொன்னாப்பல' என்ற வார்த்தையை கவனியுங்கள்) சரி, அதே காட்சியில் தொடரும் உரையாடலை கேட்போம்.

'பணமெல்லாம் கரெக்டா இருக்கில்ல'

' இருக்கும்ண வேணுண்னா எண்ணிப்பாருங்க!'

'சரக்கு சாப்பிர்றியாப்பா!'

'பரவால்லண்ண'

'யேய்.. அவன் எங்க?'

'கடைக்காரன் வாட்டர் பாட்டில் வக்க மறந்திட்டாண்ண.. இட்டான்டு வரப்போயிருக்கான்..'

'சரிண்ண.. நான் கௌம்பறேன்!'

இப்படிப் போகின்றது அந்த உரையாடல்.

இந்தப் பேச்சு-வழக்கு நமது திருகோணமலையை அண்டியுள்ள எத்தனையோ தமிழ் கிராமங்களிலே எங்காவது பேசப்படும் ஒன்றா..? அவ்வளவு ஏன் இந்திய வம்சாவழியினர் வாழ்ந்துவரும் மலையகம் நீங்கலாக நமது நாட்டில் எந்தப்பிரதேசத்திலாவது பேசப்படுகின்றதா..?


மரத்திலே அழகான பூக்களைக் காணும் நமது தமிழ் பேசும் ஒரு சிறுமி எப்படி குதூகலிப்பாள்..?

'அங்க பாரு.. எவ்வளவு வடிவான பூ..!'  பொதுவாக இப்படித்தானே..

ஆனால் இந்தப்படத்தில் வரும் நம்மூர்ப் பாடசாலைச் சிறுமி, 'ஐ! பூவு!   என்கிறாள். அதுமட்டுமல்ல,


"டேய் ஜீவாஅதை ஏறிப் பிச்சித் தாவன்" என்று கேட்பதற்குப் பதிலாக  'டேய் ஜீவா பறிச்சிக் குடுரா!' என்கிறாள்.

கூட வரும் சிறுவனோ 'முடியாது.. முடியாது இம்மாம் பெரிய ஒயரம் இஞ்ச பாரு என்னால மரல்லாம் ஏற முடியாது' என்கின்றான்.


இந்த உரையாடல்களிலே வருகின்ற வார்த்தைகளும் அதை உச்சரிக்கும் பாங்கும் தென்னிந்திய தமிழ் பிரதேசத்திற்குரியது என்பதை படங்களைப் பார்க்கும் சிறுகுழந்தையும் கூறிவிடும்.


இப்படி அந்நியத்தனமாய் படம் எடுப்பது யாருக்காக....?


பெரும் முதலாளிகளின் கைகளிலே இருந்த வந்த சினிமா எனும் வலுவான ஊடகம் விஞ்ஞான வளர்ச்சியின் பேறாக குறும்படம் எனும் வடிவில் தற்போது சாமானியர்களும் கையாளத்தக்கதாகியிருக்கின்றது. இதனை நாம் நம்முடைய மண்ணின் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்காமல் வெறும் ஃபேன்டஸி காட்சிகளை எடுத்து வீணடித்துக் கொண்டிருப்பது நியாயமா?


ஷங்கர் போல படம் எடுப்பதற்கு நாம் தேவையில்லை. அதற்கு ஷங்கரே போதும். விஜய், சூர்யா, அஜீத் போல நடிப்பதற்கு அவர்களே போதும். யோசித்துப் பாருங்கள் நம்மவர்களை வைத்து மதுரைத்தமிழில் உரையாடுவதற்குப் பயிற்சியளித்து நம்மூரிலே படம் பிடிப்பதற்குப் பதில் அதை அவர்களே அவர்களது ஊரில் இன்னும் நன்றாகச் செய்யவிடலாமே.


எந்தவொரு படைப்பையும் உருவாக்க நினைக்கும்போது நாம் நம்முடைய கால்களை நமது மண்ணிலே ஊன்றிக்கொள்ள வேண்டும். உலகம் நமக்கு கொடுத்திருக்கும் அறிவியல் வளர்ச்சியை நம்முடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவதுதான் நியாயம். அதைவிட்டு எல்லாவற்றையும் அப்படியே பிரதி பண்ணவேண்டும் என்று நினைத்தால் இறுதியில் காகம் அன்ன நடைபோட்ட கதையாகத்தான் இருக்கும்.

குறும்படம் எடுப்பதை நாகரீகமாகவும் தமது அறிவுஜீவித்தனத்தை பறைசாற்றிக்கொள்வதற்குரிய வழிமுறையாகவும் பின்பற்றுவது தற்போது ஒரு (Fashion) போக்காகி விட்ட நிலையில் இந்தப்படமும் இப்படியான ஒரு நோக்கில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது.

இன்றைய இளைஞர்கள் தென்னிந்திய மற்றும் ஹொலிவுட் சினிமாக்களை பார்த்து அதேபோல தமது குறும்படங்களை தமது சூழலுக்குள் மிகக்குறைவான வசதி வாய்ப்புகளைக் கொண்டு எடுப்பதற்கு முயல்வதைக் காணமுடிகின்றது. ஆனால் அந்த முயற்சி நமது மண்ணின் சூழலுக்குப் பொருந்தாமலும் நமது வாழ்க்கை முறையினைப் பிரதிபலிக்காமலும் இருக்கின்றது. சுருங்கச் சொன்னால் இத்தகைய படைப்புகள் ஆறாவது விரல்போல நம்மை விட்டு விலகி தனியே பயனின்றி நிற்கின்றது.


இறுதியாக..


இந்தப் படத்திற்கு பின்னே மறைந்திருக்கும் இளைஞன் லிங்கேஸ்வரனின் அசாத்திய உழைப்பு, விடா முயற்சி, பொறுமை, நம்பிக்கை அத்தனைக்கும் நாம் மதிப்பளித்தே ஆக வேண்டும்.

இனிவரும் காலங்களிலே நமது மண்சார்ந்த படைப்புகளை உருவாக்கி வெற்றிபெறுவார் என்று நம்புவோமாக.

'ஒருவன் எத்தனை தடவை விழுந்தான் என்பது அவசியமல்ல. ஆனால் எத்தனை தடவை மீண்டும் எழுந்து வந்தான் என்பதுதான் முக்கியமானது.'

-'மூதூர்'  மொகமட் ராபி
25.09.2014

Tuesday, September 2, 2014

பாலைவனத்தில் கற்கள் தானாகவே நகரும் மாயம்





ரேஸ்டிராக் பிளாயா பகுதி. ஒரே சம தரையாக
அமைந்துள்ளதைக் கவனிக்கவும்



மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் மர்மத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.


பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.
அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.


ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு.


பல பாறைகள் நகர்ந்துள்ளதால் ஏற்பட்ட தடங்கள்
வானிலிருந்து எடுக்கப்பட்ட படம்.

ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும். இவை “கால் முளைத்த” பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன.


அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப்பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.


ஒரு பாறை எவ்வளவு தூரம் நகர்ந்து வந்துள்ளது என்பதைக் கவனிக்கவும்.


அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.


1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மர்மம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் மர்மத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலகவாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர்.


ஒரே நேர்கோட்டில் நகர்ந்து வந்துள்ள பாறை

ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. காமிராவிலும் இது பதிவாகியது இல்லை.


இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற காமிராவாகும்.


அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.


அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது.பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?


பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார்.




ஜோடியாக நகர்ந்து வந்துள்ள பாறைகள்



பாறைகள் நகருவதில் பெரிய மர்மம் எதுவுமில்லை. அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். வருஷத்தில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.


அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.


அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.


தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.


பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும்.


 குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.


இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது.


பாறைகள் நகரும் சூழ்னிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம். அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை மர்மமாக இருந்து வந்துள்ளது.

Thanks: Ariviyalpuram

Thursday, August 21, 2014

மனதை ஈர்க்கும் புவியீர்ப்பு!






டந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஏராளமான விருதுகளை வென்றெடுத்த ஆங்கிலத் திரைப்படமான க்ராவிட்டி யை அண்மையில் பார்த்தேன். ப்ளு-ரே எனும் சிறப்பு ஒளித்தகடு வடிவமும் வழமையான டீவீடி தகடும் இருந்தன. சாதாரண வடிவில் பார்க்கும்போதே திரைப்படத்தின் ஒளிப்பதிவும் தொழினுட்ப நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. முப்பரிமாண சிறப்பு வடிவத்தில் பார்த்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றுகின்றது


இனி படத்திற்கு வருவோம்..








நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக ஐந்து பேர் அடங்கிய விண்வெளி தொழினுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று பூமியிலிருந்து 600 கிலோ மீற்றர் உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைக்காட்டியைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கின்றது.


அவ்வேளையில் எதிர்பாராதவிதமாக பயன்பாடு தீர்ந்துபோன செய்மதி ஒன்று அழிக்கப்பட்டதன் காரணமாக உண்டான சிதறல்கள் மிகுந்த வேகத்துடன் இக்குழுவினரின் விண்வெளி ஓடம், தொலைகாட்டி, மற்றும் குழுவினரையும் தாக்குகின்றது. இதனால் விண்வெளி ஓடம் பலத்த சேதமுறுவதனால் அதனுள் பாதுகாப்பற்றிருந்த வல்லுனர்கள் இருவரும் உடனடியாக மரணிக்கின்றனர். வெளியே தொலைகாட்டியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவர்களில் மூவரில் ஒருவரும் மரணிக்க, அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரான மெற் கோவ்லாஸ்க்கி (Matt Kowalski) யும் மருத்துவப் பொறியியலாளரான வீராங்கனையான டாக்டர் ரையான் ஸ்டோனும் (Ryan Stone)விண்வெளியில் வீசப்படுகின்றனர்.


தனது முதலாவது விண்வெளிப்பயணத்தில் வந்திருக்கும் டாக்டர் ரையான் மிகவும் பயந்து தவிக்கின்றார். ஆயினும் அனுபவஸ்தரான மெற் கோவ்லாஸ்க்கி தன்னிடமிருக்கும் உந்துவிசை வாயுக்கலனின் உதவியோடு ரையானைத் தேடிப்பிடித்து ஆசுவாசப்படுத்தியவாறு எப்படியாவது பூமிக்குத் திரும்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார். இதற்காக 1400 கிலோ மீற்றர் தூரத்தில் தாழ்வாக பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி உந்துவிசைக் கலனின் உதவியோடு பயணிக்கின்றனர்.


அவ்வாறு சர்வதேச விண்வெளி நிலையத்தை இவர்கள் நெருங்கும் போது மெற் கோவ்லாஸ்க்கியின் வாயுக்கொள்கலன் தீர்ந்து விடுகின்றது. இதனால் விண்வெளி நிலையத்தை அடைந்து அதைப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்காக இருவரும் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கின்றது.  முடிவில்  ரையான் மட்டுமே பற்றிக்கொள்ள இருவரும் ஊசலாடுகின்றனர்.  இருவருமே சாவதைவிட ஒருவராவது உயிர் பிழைப்பதுதான் விவேகம் என்று கூறிவிட்டு பற்றிப்பிடித்துக்கொள்ள  மெற் தன்னைத்தானே விடுவித்து Dr. Ryan னை விண்வெளி நிலையத்தினுள் சென்று உயிர்தப்புமாறு கூறுகின்றார்.



 Dr. Ryan  விண்வெளி நிலையத்தினுள்ளே நுழைந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றார். அதேவேளை  மெற் முடிவில்லாத விண்வெளியில் கட்டுப்பாடின்றி மிதக்கின்றார். தொடர்ந்து வானொலித் தொடர்பில் இருக்கும் Matt, Dr. Ryan  Stone க்கு பூமிக்குத் தப்பிச் செல்லக்கூடிய சாத்தியங்களை கூறியவாறு இறுதியில் தொடர்பற்றுப் போகின்றார்.


சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கு நிலையில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க பல சேதங்களோடு விண்வெளி வீரர்களால் கைவிடப்பட்ட நிலையில் வெறிச்சோடிக்கிடக்கின்றது. பூமிக்குத் தப்பிச் செல்வதற்குள்ள ஒரே வழியான சோயுஸ் தரையிறங்கு கலனும் தவறுதலாக பரசூட் விரிந்த காரணத்தால் புறப்படுவதற்குப் பொருத்தமில்லாத நிலையிலே விண்வெளி நிலையத்தின் பாகங்களுக்குள் சிக்குண்டு கிடக்கின்றது.


அதை விடுவிப்பதற்காக மீண்டும் Ryan விண்வெளி உலாவருகின்றார். அப்பொழுது நிகழும் விண்வெளிச் சிதறல்களின் தாக்குதலினால் எதிர்பாராத நல்விளைவாக சோயுஸ் தரையிறங்கு கலன் விடுபட்டுத் தனியாகின்றது. இதனால் நம்பிக்கை கொள்ளும்Ryan அதனுள் நுழைந்து இயக்குவதற்கு முயல்கின்றார். ஆயினும் எரிபொருள் தீர்ந்த காரணத்தால் அது கிளம்ப மறுக்கின்றது. இதனால் நம்பிக்கையிழந்த Ryan ஒரு கட்டத்தில் ஒக்ஸிஜனின் அளவைக்குறைத்து வைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றார். ஆயினும் மீண்டும் உத்வேகம் வந்து முடிவை மாற்றிக்கொண்டு மாற்று வழியொன்றைக் கண்டறிகின்றார்.


அதன்படி வெடித்து வேறாகும் வகையில் சோயுஸ் கொள்கலனை இயக்கி சற்றுத் தூரத்தில் பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் சீனாவின் Tiangong விண்வெளி நிலையத்தைச் சென்றடைகின்றார். அதுவோ சிறிது நேரத்தில் ஈர்ப்பு விசைக்குள்ளாகியதன் காரணமாக பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் இழுபடுகின்றது. காற்று மண்டலத்தினுள் பிரவேசித்ததும் விண்வெளி நிலையத்தின் பாகங்கள் உரசி தீப்பிடித்து வெடிக்கின்றன. ஆயினும் Ryan  இருக்கும் Shenzhou குடுவைப்பகுதி தனியாகப் பிரிந்து வந்து தன்னியக்க பாரசூட் விரிதலுடன் அரிசோனா பிரதேசத்திலுள்ள ஏரியொன்றினுள் (Powel lake) வந்து வீழ்கின்றது.



குடுவையினுள்ளே ஏற்படும் புகையினால் வெளியேறுவதற்காக கதவைத் திறக்கின்றார் Ryan. இதனால் குடுவை நீர் நிறைந்து ஏரியின் அடியில் மூழ்குகின்றது. வெகுசிரமத்துடன் விண்வெளியுடையை கழற்றி விட்டு ஏரியின் மேல்மட்டத்திற்கு வருகின்றார். மெல்ல நீந்திக் கரைசேர்ந்து மணலில் வீழ்ந்து கிடந்த பின்பு எழுந்து நிற்பதுடன் வானை அண்ணாந்து பார்த்துவிட்டு தடுமாற்றத்துடன் முன்னோக்கி நடப்பதுடன் படம் முடிவடைகின்றது.

கதை இதுதான்.

-Mutur Mohammed Rafi