Friday, November 15, 2013

சிறுகதை : சூது கவ்வும்








நைட் டியூட்டி முடிவடைந்து அறைக்குத் திரும்பியதும் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லொக்கரினுள் பத்திரமாகப் பூட்டிவைத்தான் சப் இன்ஸ்பெக்டர் ஜிஹான். பொலீஸ் யூனிபோமை களைந்து உடைமாற்றி கெண்டீன் பையன் வைத்து விட்டுச் சென்ற தேனீரைக்கூட அருந்தாமல் கட்டிலில் தொப்பென விழுந்ததுதான் அவனுக்குத் தெரியும். அடித்துப்போட்டதுபோல அப்படியொரு தூக்கம். எவ்வளவு நேரம் உறங்கினானோ தெரியவில்லை.


மீண்டும் அவன் கண்விழித்தபோது மேசையில் மதியச் சாப்பாட்டுப் பார்சல் தயாராய் இருந்தது.


மெத்தைக் கட்டிலில் இருந்து உடனே எழுவதற்கு மனமில்லாமல் தயைணைகளை முதுகுக்கு கொடுத்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தான். கண்ணாடி யன்னலினூடாக வெகுதூரத்தில் தனவந்திரி மருத்துவமனையும் அதன் பின்னணியில் அலையில்லாத மட்டிக்களிக்கடலும் தெரிந்தது. அதன் ஓரத்தில் மௌன எறும்புகளாய் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனப் போக்குவரத்தை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இனி எழுந்திருக்கலாம் என்று நிiனைத்தபோது செல்போன் சிணுங்கியது.


'ஹலோ கவுத?' என்று கேட்டான்.


'எஸ் ஐ ஜிகான் மஹத்தயா இன்னவாத?'


'ஒவ் கதாகரனவா.. கவுத ஒயா?' எங்கேயோ கேட்ட குரல் போலிருக்கவே அப்போதுதான் சட்டென செல்போன் திரையைப் பார்த்தான். அதில் 'பங்ஸ ஜாயா' என்று ஒளிர்ந்தது.


பங்ஸ ஜாயா ஜிஹானுடைய நண்பன். ஜிஹான் இங்கு வருவதற்கு முன்பு இதே பொலீஸ் நிலையத்தில் ஒரு சார்ஜனாக இருந்தவன். அவனிலும் பத்து அல்லது பன்னிரண்டு வயது பெரியவனாக இருந்தாலும் அவனும் பங்ஸாவும் வவுனியாவில் சிலவருடங்கள் பொலீஸ் கடமையில் ஒன்றாக இருந்தபோது ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி விட்டவர்கள். இங்கு கன்னியாவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் முழங்காலில் குண்டடிபட்டதும் பொலீஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்று விட்டான் பங்ஸா. தற்போது சீனக்குடா ப்றீமா ஆலையில் கணணி உதவியாளராக வேலைபுரியும் தன் மனைவி அமராவோடு தானியகம குவாட்டர்ஸ் ஒன்றில் வசிக்கின்றான்.


'ஹேய் பங்ஸா நீயாடா? நான் வேற யாரோன்டு நெனைச்சேன்..'


'என்னடா அவ்வளவுக்கு குரல மதிக்கல்லயா நீ? அதுசரி, இன்டைக்கு பின்னேரம் ஏதும் வேலை இருக்கா உனக்கு..?'


'இல்லை.. ஏன் என்ன விசயம்?'


'ஒண்ணுமில்லடா.. பின்னேரம் சர்தாபுர வளவு பக்கம் வாறியா நீ? நாளைக்கு காலையில தோட்டத்தில புதுவீட்டுக்கு அத்திவாரம் தோண்டப்போறோம். அதனால நாங்க எல்லாரும் இன்டைக்குப் பின்னேரம் அங்க இருக்கிற எங்க கொட்டேஜ்ல நைட் அவுட் சமையல் ஒண்டு போடறதா ஐடியா.. மரை இறைச்சி கொஞ்சம் கிடைச்சிருக்கு.. அதோட அதுவும் இருக்கு! நீயும் வந்தா நல்லாருக்குமே என்றுதான் எடுத்தன்.. என்னடா வாறியா?'


'ஆங் வரலாம்.. ஆனா நைட்ல நான் ஸ்டேசனுக்கு திரும்பி வர லேட்டாகுமே..?'


'ஆனா நீ திரும்பி போனால்தானே..?'


'என்னடா சொல்ற..?'


'இல்ல.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை உனக்கு ஓவ்ஃதானே.. அதால இங்கேயே எங்களோட நைட் தங்கிடு.. அதுதான் சொன்னேன்'


அவ்வளவுதான். ஜிஹானின் மண்டைக்குள் எங்கோ ஒரு மின்குமிழ் பளிச்சென எரிந்தது.


'டேய் பங்ஸ், யாரெல்லாம் இன்னைக்கு நைட் அங்க தங்கிறோம்..?' என்று கேட்டான் வெகுஆவலாக.


'அதுவா.. நானும் வைப்ஃ அமராவும் மகளும்தான் வாறோம். ஏண்டா?'


'இல்ல மச்சான் நம்ம தண்ணியடிக்கிற நேரம் அதுகள் இருந்தா பரவாயில்லையா..? அதுதான் பார்த்தேன்..' என்றேன் உள்ளுர பொங்கிப் பிரவகித்த மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு.


'இல்லடா.. காலையில அத்திவாரம் தோண்டுற கூலி ஆக்களுக்கு டீ சாப்பாடு செய்யிறதுக்கு பொம்பிளைகள் வேணும்தானே.. அதால அதுகளையும் கூட்டிக்கிட்டுத்தான் மச்சான் வரணும். அது பிரச்சினையில்லடா மச்சான்.. நம்ம தனியா தோட்டத்துக்குள்ள போய் லைட்டா பியர் ஸ்டவுட் மட்டும் எடுப்பம்..என்ன?'


'சரிடா பங்ஸ்!'


'நாங்க இதோ இப்பவே அங்கே போகிறோம்.. நீ இருட்டுறதுக்கு முதல் ஆறரை மணிக்கெல்லாம் வந்திடு. வழியில பாத்து வா.. புதுசா க்றவல் ரோடு டோசர் போட்டு வழிச்சு வச்சிருக்கான்.. மழையும் பெய்திருக்கு'


'சரி மச்சான்.. வாற வழியில ஒசின்ல இறங்கி நானே சாமான்லாம் வாங்கிட்டு வாறேன்.. நீ மனிசிட்ட சொல்லி பைற்ஸ் ட்வெல் ரெடி பண்ணி வை கலக்கிடுவோம் ஓக்கே ஸீயூடா!'


செல்போனை அணைத்ததும் உற்சாகம் தாங்க முடியாமல் 'Yes..Yes!' என்று கை முட்டியால் காற்றில் மாறி மாறிக் குத்தினான். கட்டில் மெத்தையில் எழுந்து நின்று துள்ளிக் குதித்தான்.


ஜிஹானின் அதீத உற்சாகத்திற்குக் காரணம் அவனுக்குள் இருக்கும் ஓர் இரகசியத் திட்டம். எத்தனையோ மாதங்களாய் தன் மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்து பார்த்துக் காத்திருந்த அவனுடைய கனவுத்திட்டம் நிறைவேறும் நாள் இன்றுதான் என்று பட்சி கூறியது. அதை நினைக்கும் போது அவனுக்கே பரபரப்பாக இருந்தது. இருங்கள்.. அதை முழுமையாகக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும்.


பங்ஸ ஜாயாவுக்கு பிள்ளைகளென்றால் ஒரே ஒரு மகள் மட்டுமே. அவளும் வெளியூர் பாடசாலை விடுதி ஒன்றில் தங்கி கல்வி கற்பதாக அவன் சொல்லியிருந்தான். அதனால் அவனும் மனைவி அமரா அக்காவும் மட்டுமே தானியகம குவார்ட்டஸிலே வசித்து வந்தார்கள். அமரா வேலைக்குச் சென்றுவிடும் நாட்களிலே அவன் தனியாகத்தான் இருந்தான். கட்டாய ஓய்வின் பின்பு தனிமை அவனை வெகுவாக வாட்டியிருக்க வேண்டும். அதனால் ஜிஹான் தன்னுடைய ஊரான அவிசாவளையிலிருந்து பதவி உயர்வு பெற்று திருகோணமலைக்கு வந்தபோது பங்ஸ ஜாயா மிகவும் மகிழ்ந்து போனான். ஜிஹானைப் பலமுறை குவாட்டசுக்கு அழைத்துச் சென்று விருந்தெல்லாம் போட்டு உபசரித்திருக்கின்றான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனை அங்கு வருமாறு அழைப்பான். ஜிஹானும் பைக்கில் அவனைத்தேடிச்சென்று பழைய கதையெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவதுண்டு. வவுனியாவில் பிரிந்த நண்பர்கள் மீண்டும் அடிக்கடி சந்திக்கும்படியாக திருகோணமலைக்கு வந்ததிலே பங்ஸாவைப் போலவே ஜிஹானுக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அவனுடைய அந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிக காலம் நீடிக்கவில்லை.



ஆம் ஒருநாள் கடமை நிமித்தம் சீனக்குடாவில் இருக்கும் பாலர் பாடசாலை ஒன்றுக்கு சென்றிருந்தான் ஜிஹான். அந்தப் பாடசாலையில் தன் வாழ்நாளிலே கனவிலும் கூட அவன் காணக்கிடைக்காத ஓர் அழகிய இளம்பெண் ஜிஹானின் கண்ணில் பட்டாள். அங்கு கற்பிக்கும் ஓர் ஆசிரியையுடன் அவள் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவன், 'உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்' என்று கண்ணதாசனோ வாலியோ எழுதிய பாடல் எத்தனை உண்மையானது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டான். அப்படிப்பட்ட அந்தப் பேரழகியிடம் அவன் மயங்கியதிலே ஆச்சரியமில்லைதானே. அந்த நிமிடம் தன்னுடைய கடமையையும் மறந்து அவளது கவனத்தை எப்படி தன் பக்கம் திருப்பலாம்.. அவளிடம் தனது விருப்பத்தை எப்படிக் கூறலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் மேலதிகாரியிடமிருந்து வந்த அவசர அழைப்பின் காரணமாக அவன் உடனடியாக தன்னுடைய ஸ்டேசனுக்குத் திரும்பவேண்டியிருந்தது. அதனால் அன்றைய தினம் அந்த அழகு தேவதையின் பெயரைக்கூடக் கேட்டுக்கொள்ள முடியாமல் வந்துவிட்டான்.


அவளைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பல நாட்களாக ஸ்டேசனில் ஜிஹானுக்கு வேலையே ஓடவில்லை. அந்த அழகியை எப்படி மீண்டும் சந்திப்பது அவளை எப்படி அடைவது என்பது பற்றியே இரவும் பகலும் எண்ணி எண்ணிப் பைத்தியமாய் உலாவினான். அவளைப் பற்றி பங்ஸ ஜாயாவிடம் கூறினால் அவன் மூலமாக அவளைத் தேடிக் கண்டுபிடித்து தான் நினைத்ததை அடையலாம் என்ற நம்பிக்கையோடு ஒருநாள் பைக்கில் பங்ஸ ஜாயாவின் வீட்டிற்குச் சென்றிருந்தான். ஆனால் அங்கு அவன் சென்றபோது ஓர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், பாலர் பாடசாலையிலே அவன் கண்ட அந்தப் பேரழகி அவன் வீட்டு வெளிமுற்றத்தில் ஈரம் சொட்டச் சொட்ட நின்று கழுவிய ஆடைகளைப் பிழிந்து உலர்த்திக் கொண்டிருந்தாள்.


ஜிஹான் உடனடியாக எதுவும் புரியாமல் குழப்பத்துடன் பைக்கை நிறுத்திவிட்டு அவளையே மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.


'மச்சான் ஜிகான், வாடா..வா! என்னடா அப்பிடிப் பாக்கிற? இதுதான்டா என்ட மகள் மல்காந்தி. நான் சொன்னேனே ஹொஸ்டல்ல படிக்கிறாள் என்டு. ஏஎல் எக்ஸாம் எழுதிட்டு போன கிழமைதான் ஊருக்கு வந்திருக்கிறா. மல், இதுதான் வாப்பாட ப்ரெண்ட் ஜிகான் எஸ்ஐ. டவுன்ல பெரிய பொலிஸ் ஸ்டேசன்ல இருக்கார்..' என்று அறிமுகப்படுத்தினான் பங்ஸா.


'ஹலோ அங்கிள்!' என்று அவனைப் பார்த்து வசீகரமாய் புன்னகைத்துக் கொன்று விட்டு உள்ளே சென்றாள் அந்த அழகிய ராட்சசி.


அவ்வளவுதான். ஜிஹான் நின்றிருந்த நிலப்பகுதியே உடைந்து அவனை உள்வாங்குவது போலிருந்தது அவனுக்கு. தேளிடம் கடிவாங்கிய திருடன் போல மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவன் அன்று தவித்த தவிப்பை யாருமறிய மாட்டார்கள்.


'என்னடா இப்படி பேயறைந்த மாதிரி யோசிக்கிறாய்..?' என்று கேட்டான் பங்ஸா.


'இல்ல.. உனக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா.. நான் ஏதோ சின்ன பிள்ளை என்று நினைச்சண்டா'


அன்றைய தினம் ஜிஹான் உள்ளுர உடைந்து நொறுங்கிப்போனாலும் எப்படியோ சமாளித்து பங்சா குடும்பத்தினரிடம் விடைபெற்று வந்து விட்டான். ஆனால் அன்றிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை அவனுடைய நிம்மதி தொலைந்தே போனது. அவனால் மல்காந்தியை மறக்கவும் முடியவில்லை. தன் வேலைகளில் முன்புபோல கவனம் செலுத்தவும் முடியவில்லை.


ஆண்களையெல்லாம் ஈவிரக்கமின்றி அடித்துப்போடும் அவள் பேரெழிலும் அவளை அடைவது பற்றி அவன் தனக்குள் வளர்த்து வைத்திருந்த கற்பனைகளும் ஒருபுறம் ஜிஹானைப் பாடாய்ப்படுத்திப் பைத்தியமாக்கினால் மறுபுறம் மல்காந்தி தன் நண்பனின் மகள் என்ற உண்மையோ அவனை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கிச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.


'மல்காந்தியை திருமணம் செய்வதற்கு பங்ஸாவிடம் கேட்டாலென்ன?' என்று ஓர் அசட்டுத் துணிச்சல் கூட அவனுக்கு வந்தது. ஆனால் தான் முப்பத்து ஐந்து வயதைத் தாண்டியவன். அவளோ வளர்த்தியாக இருந்தாலும் இப்போதுதான் ஏஎல் பரீட்சை எழுதியிருக்கும் ஒரு மாணவி. இருவருக்குமிடையில் வயது வேறுபாடு மிகப்பெரியதாக இருந்தது. வேறு யாரிடமாவது என்றால் தன்னுடைய வயதை அவன் குறைத்துககூடச் சொல்லலாம். ஆனால் ஜிஹானைப் பற்றி எல்லாம் தெரிந்த பங்ஸ ஜாயாவிடம் அது முடியுமா? மல்காந்தி படிப்பில் படுகெட்டிக்காரியாகவும் இருந்து நிறைய கனவுகளோடு வேறு இருப்பவளாம். தொடர்ந்து படித்து கெம்பஸ் அது இது என்று இப்போதைக்குத் தன் திருமணத்தை நிச்சயம் நினைக்கவே மாட்டாள்.


தவிர, 'அங்கிள்' என்று தன்னால் அழைக்கப்படும் ஒருவரை எந்த இளம்பெண்தான் திருமணம் செய்யச் சம்மதிப்பாள்? அதற்காக அப்படி ஓர் அழகுதேவதையின் அங்கங்களை அள்ளிப்பருகாமல் விட்டுவிடவும் ஜிஹானுக்கு மனது வரவில்லை. அவளை தமிழ் சினிமாவில் போல முகமூடி அணிந்து வாகனத்தில் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்வது என்றெல்லாம் அவன் குரங்கு மனம் தாவியது உண்மையே. ஆனால், அவையெல்லாம் தன் எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிவிடும் முட்டாள்தனமான செயல்கள் என்று புரிந்து சுதாரித்துக் கொண்டான்.


இறுதியில் ஒரு பெரும் மனப்போராட்டத்திற்குப் பிறகு மல்காந்தியை பிறர் அறியா வண்ணம் எப்படியாவது மடக்கி ஆசைதீர முழுமையாக ஒருதடவை அனுபவித்துவிடுவது எனும் 'இலகுவான' தீர்மானத்துக்கு வந்தான் ஜிஹான். அப்படி ஏதாவது செய்தாலொழிய தன்னுடைய அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதனால் அதற்கு சாத்தியமான வழிகளைப் பற்றி யோசித்து யோசித்து 'ஒபரேஷன் மல்காந்தி' திட்டத்தை மனதுக்குள் தீட்டினான்.


ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறும் நாள் இத்தனை விரைவாக - அதுவும் இன்றிரவே வந்து சேரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் இறைவன் சித்தம் போலும். இல்லையென்றால் ஏன் இப்படி பழம் நழுவிப் பாலில் விழ வேண்டும்?



000






'ஆங் எஸ் ஐ மஹத்தயா.. தாம கேஃவ நெத்த..?'



என்று கேட்டபடி அறையைக்கடந்து சென்ற ஒரு பொலீஸ் இளைஞனின் குரல் ஜிஹானை பழைய நினைவுகளிலிருந்து விடுவித்தது. எழுந்து குளித்துவிட்டு வந்து பார்சலைப்பிரித்துச் சாப்பிட்டான். அவன் கைகள் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தாலும் மனமெல்லாம் இன்றிரவு நடக்கப்போவதைப் பற்றியே சுழன்று கொண்டிருந்தது.

மாலையில் நன்றாகக் குளித்து மிகச்சிறந்த ஆடைகளை அணிந்து கொண்டான். தன்னுடைய 'ஒபரேஷன் மல்காந்தி'க்கு தேவையான சில பொருட்களை சோல்டர் பேக்கில் திணித்தபடி அறையைவிட்டு வெளியே வந்தான். இரவுக்கடமைக்குச் செல்லும் பொலீஸ் உத்தியோகத்தர்களின் சல்யூட்களை கடந்து வாகனத்தரிப்பிடத்திலிருந்த தன்னுடைய பைக்கை உதைத்தான். ஸ்டேசனை விட்டு பிரதான வீதிக்கு இறங்கி வந்து கண்டி வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சர்தாபுர நோக்கிப் விரைந்தான்.


இலிங்கநகர் பெற்றோல் ஷெட் ஃபுட் சிட்டியில் இறங்கி தன் கனவுக்கன்னிக்கு சொக்லேட்கள், ஐஸ்க்ரீம், பழங்கள் மற்றும் குளிர்பானக் கேன்கள் போன்றவற்றை வாங்கியபின் ஆண்டாங்குளம் ஒசின் ஹோட்டலில் பியர் ஸ்டவுட் கேன்களையும் சேகரித்துக்கொண்டு சர்தாபுரவிலுள்ள பங்ஸ ஜாயாவின் தோட்டத்தை ஜிஹான் அடைந்தபோது லேசாக இருட்டிவிட்டிருந்தது.


அவன் உள்ளே நுழைந்தபோது பங்ஸ ஜாயா, அவன் மனiவி அமரா மற்றும் அழகு தேவதை மல்காந்தி மூவரும் தங்கள் தோட்டத்துக் களிமண் குடிசைக்கு வெளியே மெல்லிய இருளில் பிளாஸ்டிக் கதிரைகளைப்போட்டு அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஜிஹானைக் கண்டதும் பங்ஸ ஜாயா எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்று ஒரு கதிரையில் அமர்த்தினான். பங்சாவிடம் தான் கொண்டு வந்த ஷோல்டர் பேக்கை திறந்து குடிபானங்களைக் காண்பித்தான் ஜிஹான்.


'ஓக்கே.. இது போதும்.. எங்கே நீ வராம இருந்திடுவியோ என்று நினைச்சன்டா'


வழமையாக ஜிஹானைக் கண்டதும் உற்சாகமாகப் பேசும் அமரா அக்காவும் மல்காந்தியும் சற்று டல்லாக இருந்தார்கள். அமரா அக்கா சம்பிரதாயத்துக்கு ஏதோ இரண்டு வார்த்தை அவனோடு பேசிவிட்டு சமையல் கட்டுப்பக்கம் நகர்ந்துவிட மல்காந்தியும் பின்தொடர்ந்தது அவனுக்கு ஒருமாதிரியாக இருந்தது. அவர்கள் இருவரின் நடத்தையும் ஏதோ தப்பு என்று அவனை உணரச் செய்தது.


'என்ன பங்ஸ் ஏதும் பிரச்சினையாடா?' என்று உரிமையோடு கேட்டான் ஜிஹான்;.


பங்ஸா எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அது ஜிஹானுக்கு இன்னும் சங்கடத்தைத் தந்தது.


'பங்ஸ்.. ஏன் நான் வந்தது அவங்க இரண்டுபேருக்கும் பிடிக்கல்லையா.. நீ வரச் சொல்லித்தானே மச்சான் வந்தேன்..'


'ச்சீ.. அதெல்லாம் ஒண்ணுமில்லைடா.. இது வேற பிரச்சினை' என்றான் பங்ஸா.


'என்னடா அது..? சொல்லக் கூடியதாயிருந்தா.. சொல்லேன்!'


'அது வந்து.. இன்டைக்கு ஏஎல் ரிசல்ட் இன்டநெற்ல வந்திருக்கு. உனக்கு தெரியுந்தானே..? அதை இன்டைக்கு மத்தியானம் நெற்கபே ஒண்டுக்குப் போய் மல்காந்தி பார்த்திருக்கா.. அதுதான் அழுகிறா!'


'ஏன் மச்சான் மல்லின் ரிசல்ட் என்னவாம்.. அவள் ஃபெயிலாடா?'


'சேச்சே.. அதெல்லாம் அவள் பாஸ்;தான்.. ஆனா இவ எக்ஸாம் மிச்சம் நல்லா செய்தவவாம்.. பெரீசா எதிர்பார்த்திருக்கா போல. தான் எதிர்பார்த்தளவு ரிசல்ட் வரல்லயாம்.. மெடிக்கல் பெகல்டி கிடைக்காதாம்.. தனக்குப் பெருத்த அவமானமாம் என்று என்னவெல்லாமோ சொல்லிட்டிருக்காள் பாரேன்!'


'சரி, இது ஃபெஸ்ட் டைம்தானே..? இதுக்குப் போய் அலட்ட வேணாம்.. மல் படிப்புல கெட்டிக்காரிதானே.. அடுத்த ஷையில் இன்னும் நல்ல ரிசல்ட் எடுத்தாப் போச்சு என்று சொல்லுடா!' என்றான் ஜிஹான் அவனிடம்.


'நானும் அமராவும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டோம்.. நீ கொஞ்சம் போய் எடுத்துச் சொல்லு மச்சான்' என்று என்னை அவளிடம் அழைத்துப் போனான். உள்ளே மல்காந்தியும் தாயும் கவலையோடு அமர்ந்திருந்தார்கள்.


'பாருங்க ஜிகான் மல்லி, அங்க ஸ்கூல்ல மல்லுக்கு கட்டாயம் மெடிசின் கிடைக்கும் என்று நம்பியிருக்காங்களாம். ஆனா இந்த ரிசல்ட்டுக்கு பீ எஸ்ஸியே சந்தேகமாம்.. அதுதான் பெரிய கவலையாயிருக்கு இவளுக்கு.. மத்தியானமும் சாப்பிடல்ல' என்றார் அமரா அக்கா தானும் விசும்பியவாறு.


ஜிஹானும் தன்னால் முடிந்தளவு அவர்கள் இருவரையும் தேற்றுவதுபோல நிறையப்பேசினான். ஆனால், மல்காந்தியை அதெல்லாம் சமாதானப் படுத்துவதாகத் தெரியவில்லை. பின்பு சூழ்நிலையை திசை திருப்புவதற்காக, 'அதெல்லாம் சரி, உங்களையெல்லாம் நம்பி சாப்பிட வந்த என்னை இப்பிடிப் பட்டினி போடலாமா?' என்று கேட்டுவைத்தான் ஜிஹான்.


அதன் பிறகு அமரா அக்கா சுதாரித்துக் கொண்டு சட்டென சமையலில் இறங்கிவிட்டா.


'மல்.. உனக்குத்தான் நிறைய பழம் சொக்லேட் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கி வந்தேன். இப்படி நீ இப்பிடி சாப்பிடாம டல்லாக இருந்தா எப்பிடி? கொஞ்சம் ஐஸ்க்ரீமாவது சாப்பிடு..!' என்று அவற்றையெல்லாம் எடுத்துக் கொடுத்தான். ஐஸ்க்ரீமில் போதுமானளவு தூக்க மருந்தை வரும் வழியிலேயே அவன் கலந்து விட்டிருந்தான்.


'தேங்ஸ் அங்கிள்!' என்று அவற்றை வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள் ஜிஹானுடைய கனவுத் திட்டத்தின் கதாநாயகி மல்காந்தி. அவளின் கவலைதோய்ந்த முகத்தையும் கண்ணீரையும் பார்த்தபோது பேசாமல் 'ஒபரேஷன் மல்காந்தி'யை ஒத்திப்போடுவோமா என்று கூட ஒரு தடவை அவன் யோசித்தான். ஆனாலும் வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை அல்லவா?


பங்ஸ ஜாயா சிறிது நேரம் ஜிஹானுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு சமையலுக்கு உதவுவதற்காக உள்ளே சென்றுவிட்டான். ஜிஹான் எழுந்து அந்த குடிசையைச் சுற்றிப் பார்த்தான். அது ஆங்கிலப் படங்களிலே வரும் பிக்னிக் கொட்டேஜையொத்த பெரிய விசாலமான ஒரு குடிசை. அதில் இரண்டு படுக்கை அறைகளும் ஒரு கூடமும் சமையலறையுமிருந்தது. மல்காந்தி தனது அறைக்குள்ளே சிமினி விளக்கு வெளிச்சத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது யன்னலினூடாத் தெரிந்தது. மறுபுறம் சமையலறைக்குள் பங்ஸ ஜாயாவும் மனைவி அமரா அக்காவும் பெற்றோ மெக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் இறைச்சிகளைப் பொரித்துக் கொண்டிருந்தார்கள்.


பின்பு ஜிஹானும் பங்ஸாவும் தோட்டத்தினுள்ளிருந்த நெருப்பு வாகை மரத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அமரா அக்கா ஒரு கிண்ணத்தில் பொரித்த இறைச்சியும் சமைத்த கறியும் தந்துவிட்டுச் சென்றதும் இருவரும் குடிபானங்களை வெளியிலெடுத்து அருந்த ஆரம்பித்தார்கள்.


ஜிஹான் எதிர்பார்த்து போலவே சிறிது நேரத்தில் பங்ஸ ஜாயா நிறையக் குடித்துவிட்டு உளற ஆரம்பித்துவிட்டான். வவுனியாவில் ஒன்றாக வேலைசெய்த நாட்களிலும் அவன் இப்படித்தான். போதையேறிவிட்டால் போதும் கட்டுக்கடங்காமல் பேசத்தொடங்கி விடுவான். இப்போது நண்பர்கள் இருவரினதும் நட்பு, காலில் துப்பாக்கிக் குண்டடிபட்டது, மல்காந்தியின் ஏமாற்றம் உட்பட எதையோவெல்லாம் பற்றிப் புலம்புவதும் கண்ணீர் விடுவதுமாக இடைவிடாது பேசிக்கொண்டேயிருந்தான் பங்ஸா. ஜிஹான் மட்டும் மிகவும் அவதானமாக வெறும் பியரை மட்டுமே அதுவும் அளவு மீறாமல்தான் அருந்திக் கொண்டிருந்தான். நிதானமாக இருந்தால்தானே அவனுடைய இரவுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியும்.


சிறிது நேரத்தில் பங்ஸா நிறைபோதையாகி தள்ளாடத் தொடங்கிவிட்டான். அது போததாதற்கு அவனுடைய மதுபானத்தில் தூக்கமருந்தையும் ஜிஹான் கலந்து விட்டிருந்தான். எப்படியும் இன்னும் அரைமணித்தியாலத்தில் பங்ஸா உறங்க ஆரம்பித்து விடுவான். உறங்கினால் குறைந்த பட்சம் ஆறு மணிநேரத்திற்கு அடித்து எழுப்பினாலும் அவனால் எழுந்திருக்க முடியாது. அடுத்து அவனுடைய மனைவி அமரா அக்காவையும் தூக்கத்தில் ஆழ்த்த வேண்டியிருந்தது. அதற்காக ஜிஹான் தூக்க மருந்தை குளிர்பானத்தினுள் கலந்து வைத்திருந்தான். சிலவேளை அது சாத்தியமில்லாமல் போனால் கூட வேறு ஒரு ஏற்பாடும் அவனிடமிருந்தது.


இரவுச்சாப்பாட்டை எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தார்கள். மல்காந்தியும் சபைக்கு வந்திருந்தது ஜிஹானுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் கொடுத்த குளிர்பானத்தை தாயும் மகளும் சாப்பிடும்போது அருந்தினார்கள். ஆக 'ஒபரேஷன் மல்காந்தி'க்கு தோதாக எல்லாமே சரியாக நடந்து கொண்டிருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் குளிர்பான கேன் ஒன்றை ஜிஹான் மல்காந்திக்கு கொடுத்து, 'இது ஒரு எனர்ஜி ட்ரிங்ஸ். இதை குடித்தால் மனம் ரிலாக்ஸாகி நல்ல நிம்மதியான தூக்கம் வரும். கொஞ்சம் தெம்பாகவும் இருக்கும்.' என்றான். அவள் அதை எடுத்துக்கொண்டு 'குட்நைட்' கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டாள். பங்ஸா உட்கார்ந்தவாறு தூங்கிவிழ ஆரம்பித்துவிட்டான். எனவே வேறுவழியின்றி ஜிஹானும் உறங்குவதற்காக அவனுக்கு ஒதுக்கியிருந்த அறையினுள் சென்று கட்டிலிலே அமர்ந்திருந்தான். பங்ஸ ஜாயாவும் மனைவியும் முன் கூடத்தில் தரைவிரிப்பை விரித்து உறங்கி விட்டார்கள்.




நடுநிசி தாண்டும் வரையில் ஜிஹான் உறங்காமல் 'ஒ.ம.' க்காக காத்திருந்தான். தூரத்தில் எங்கோ ஒரு நாய் நீளமாய் ஊளையிட்டது. வெளியே காற்றுடன் மழைவருவதற்கான அறிகுறி தெரிந்தது.



ஜிஹான் தன்னுடைய ஷோல்டர் பேக்கினுள் இருந்த டோச் லைட்டையும் ஸ்ப்ரேயருடன் கூடிய மயக்கமருந்தையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே கூடத்திற்கு வந்தான். மெல்லிய வெளிச்சத்தில் பங்ஸ ஜாயாவும் அவன் மனைவியும் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்திலிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அதை முழுவதுமாய் நம்பாமல் பூனைபோல மெல்ல அருகில் சென்று இருவரது பாதங்களிலும் லேசாய்த் தட்டிப் பார்த்தான். ம்ஹும் அசைவே கிடையாது. எதற்கும் இருக்கட்டும் இன்று அவர்கள் இருவரது மூக்கினருகே சிறிது குளோரபோர்மை ஸ்ப்ரே செய்துவிட்டு எழுந்து மல்காந்தியின் அறையை நோக்கிப் பூனைபோல நடந்தான்.


மல்காந்தியின் அறைக்கதவு சிறிது திறந்திருந்தது. உள்ளே சிறிய சிமினி விளக்கு ஒன்று புகைபிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் மல்காந்தி கட்டிலில் மல்லாந்து உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அறைக்கதவைத் திறந்து வாசலில் நின்றபடி அவளது உடலில் டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.


அந்த வெளிச்சத்தை அவள் பாதங்களில் ஆரம்பித்து மார்புவரை நகர்த்தி வந்தபோது மெல்லிய வெண்ணிற நைட்டியில் தங்கச்சிலை ஒன்றைக் கிடத்தியது போலிருந்தாள். அவனுடைய இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது. வியர்வை பெருக்கெடுத்து காதோரம் கசகசத்தது.

தன்னுடைய நீண்ட நாள் திட்டம் தடையின்றி நிறைவேறப்போவதை எண்ணி மனம் துள்ளியது. மெல்ல நிமிர்ந்து புகைபிடித்த சிமினி விளக்கில் தெரியும் அவளது உடலை பார்த்தவாறிருந்தான். சிறிது நேரம் என்ன செய்வதென்று புரியவில்லை.. முழுமையான மயக்க நிலைக்கு அவள் வந்துவிட்டாளா என்பதை எப்படி உறுதிசெய்வது என்று யோசித்தபடி மெல்ல எழுந்து அவளது மேசையருகே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். என்னதான் ஜிகான் ஒரு போலீஸ்காரனாக இருந்தாலும் உள்ளுர அவனுக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. தவறு செய்யப்போகும்போது பதற்றம் எல்லோருக்கும் இருப்பதுதானே.  பயத்திலே தொண்டை வரண்டு தாகம் அவன் உயிரை வாட்டியது. அப்போதுதான் மல்காந்தியின் மேசையிலே அவளுக்கு வாங்கித் தந்த குளிர்பான கேன் ஒன்று இருப்பதைக் கண்டான். அது உடைக்கப்பட்டு சிறிது அருந்தப்பட்டு இருந்தது தெரிந்தது. அவள்தான் பருகிவிட்டு வைத்திருக்கின்றாள்.

'ஆஹா.. மல்காந்தியின் அழகிய மிருதுவான இதழ்கள் பட்ட பானம்..!'

நினைக்கவே ஜிவ்வென்றிருந்தது ஜிகானுக்கு. ஆசையுடன் எடுத்து ஒரேமூச்சில் தொண்டையின் அடிவரையில் மிச்சம் மீதியின்றி கவிழ்த்தான். தாகத்திற்கு இதமாக இருந்தாலும் அது அடியில் மெல்லிய கசப்புச் சுவையாக இருந்தது ஏனென்பதுதான் புரியவில்லை. சிறிது நேரத்தில் அவனுக்கு தொண்டை கமறியது. நெஞ்சுக்குள் எதுவோ அரிப்பது போலிருந்து லேசாக தலைசுற்றலும் ஆரம்பித்திருந்தது.

 மணமும் கசப்பும் சந்தேகத்தைத் தரவே டோர்ச் லைட் அடித்து அதன் பாவனை முடிவுத் திகதியைப் பார்த்தான். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 'அப்படியானால் ஏன் இப்படி நெஞ்சை கரிக்கின்றது..?' என்று யோசித்தவன் எதேச்சையாக மேசையைப் பார்த்தபோதுதான் அதைக் கண்டான். அது ஒரு நோட்புக். மூடி திறந்த பேனையொன்றுடன் விரிந்தபடி கிடந்து காற்றில் படபடத்தது. அதிலே தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரியவே அதை எடுத்து மிகவும் சிரமத்துடன் படிக்க ஆரம்பித்தான்.

'அன்புள்ள வாப்பா உம்மா,

இரண்டு பேரும் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க.. என்னைப் பெற்று வளர்த்த உங்களுக்கு நான் இப்படிச் செய்வது நிச்சயம் துரோகம்தான். நீங்களெல்லாம் எத்தனை சமாதானம் சொன்னாலும் என்னால இந்த அவமானத்தைத் தாங்கவே முடியல்ல. ஸ்கூல்ல என்னால தலைகாட்டவே முடியாது. பெருத்த வெட்கம் வாப்பா இது எனக்கு. அதனாலதான் வாப்பா நான் நீங்க வாங்கி வச்சிருக்கும் எலி மருந்தைக் கூல் ட்ரிங்கிலே கலந்து குடித்துச் சாகும் முடிவுக்கு வந்தேன். இரவு மறைந்த சூரியன் உதிக்கும்போது நான் உயிரோடு இருக்கக் கூடாது. கடைசியாக அதிகாலையில் தொழுதுவிட்டு நான் உங்களை விட்டுப் பிரிந்து போய்விடுவேன். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க வாப்பா. என் சாவுக்கு நான்தான்....'

அதற்கு மேல் ஜிகானால் வாசிக்க முடியவில்லை. கண்கள் சொருகி கை கால்கள் யாவும் தளர்ந்துபோய் நிற்க முடியாமல் அப்படியே தரை..யி..ல் மயங்..கி அவன் சரிந்..து விழுந்தபோது தூரத்தில் எங்கோ ஒரு ரயில் கூவும் ஓசை மட்டும் கடைசியாய் கேட்டது.





-மூதூர் மொகமட்ராபி

(10.11.2013)

Sunday, November 3, 2013

தமிழ்ச் சினிமாவைச் சூது கவ்விய கதை!





பாரதிராஜா, 1970களில் தமிழ்ச் சினிமாவின் இரும்புக் கதவுகளை உடைத்துத் திறந்தார் என்பதாக திரைப்படக் கட்டுரையாளர்கள் வர்ணிப்பது வழக்கம். அப்படி சுத்தியலோடு வந்துதான் இயக்குநராக வேண்டிய அவசியம் இன்றைக்கு இல்லை. உடைக்கவும் வேண்டாமல், திறக்கவும் செய்யாமல், இறகு மாதிரி காற்றில் மிதந்து தமிழ் சினிமாக் கோட்டைக்குள் நுழைந்துவிடுகிற சூட்சுமம் கைவரப் பெற்றிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் அவரிடம் தொழில்  கற்றுக்கொண்டு, ஒரு தயாரிப்பாளரையோ ஹீரோவையோ சில ஆண்டுகள் விரட்டி படம் இயக்குவதென்பது, எல்லாவற்றையும் துறந்துவிட்டு சினிமாவுக்குத் தாலி கட்டிக் கொண்டதாகவே பொருள்படும். நம் உதவி இயக்குநர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதாலேயே அவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத முயல்வதில்லை. அப்படி எழுதுவார்களேயானால் அது நடிகைகளின் சுயசரிதைகளைவிட சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது நிச்சயம். ‘சூட்டிங் ஸ்பாட்ல எங்க டைரக்டர் குடுக்கிற டார்ச்சர்ல... எத்தனையோ தரம்... டாய்லட்ல கதவ மூடிக்கிட்டு அழுதுருக்கேன்’ என்றார் ஒரு உதவி இயக்குநர் நண்பர். ‘நாங்க சரக்கடிப்போம்னு தெரிஞ்சும் எங்கள முன்னால ஒக்கார வச்சுக்கிட்டு மிட்நைட்டு வரைக்கும் தண்ணியடிப்பாருங்க எங்க ஆளு’ என்பது இன்னுமிருவரின் புலம்பல். தனக்கு ஒரு ஆபீஸ் பாய் வேணுமென்று கேட்ட சக இயக்குநரிடம் ஒரு இயக்குநர் சொல்கிறார்... ‘புதுசா ஒருத்தன அசிஸ்ட்டென்ட் டைரக்டரா சேத்துக்கோ... அபீஸ்பாய் தனியா எதுக்கு?’ என்று. ஊரிலிருந்து இயக்குநராகும் சபதத்தோடு கிளம்பிவந்து எட்டு ஆண்டுகளாக இன்னும் தாய் தந்தையரைப் பார்க்கக்கூட ஊருக்கு இவர் சென்றதில்லை என்று ஒருவரைக் குறிப்பிட்டார் நண்பரொருவர். தன்னுடைய உள்ளாடைகளைத் துவைக்கச் சொன்னதால் அந்த பிரபல இயக்குநரிடமிருந்து வந்துவிட்டதாகச் சொன்னவர் இப்போது ஒரு பிரபல இயக்குநர். அவராவது உள்ளாடைகளை லாண்டரிக்குப் போடுகிறாரா? என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய நவீன குருகுலங்களிலிருந்து ஒரு இயக்குநர் வெளிவர பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சி பதினைந்து வருடங்களைப் பதினைந்து மாதங்களாகச் சுருக்கியிருக்கிறது.

வழக்கமாக வெளிவரும் படங்களின் பெரிய பட்டியலில் ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’, ‘சூது கவ்வும்’ ஆகியபடங்கள் பெற்றிருக்கும் வெற்றி தமிழ்சினிமாவின் அடுத்த நகர்வைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இதில் மிக முக்கியமான அம்சம் இந்த இயக்குநர்கள் யாரிடமும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்களல்ல என்பதுதான். ஓநாய்கள் வளர்த்த குழந்தை, ஓநாயின் தன்மைகளைப் பெற்ற கதையைப் போன்று, சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள், கோடம்பாக்கத்தில் குடியேறி இயக்குநராவதற்குள், அதன் பாரம்பரிய வழிமுறைகளுக்குள் தங்கள் தனித்துவங்களைத் தொலைத்து தண்ணீரை நக்கிக் குடிக்கும் ஓநாய்ப் பையனாய் பரிணாமம் அடைந்து விடுவார்கள்.

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் வழக்கமான வழிமுறைகளைப் புறக்கணித்தமையே அவர்களை முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்திற்குள் நகர்த்தியிருக்கிறது. இந்தியா வில் கற்றுக்கொள்வதில் ஒரே ஒரு முறைதான் புழக்கத்தில் இருக்கிறது. அது கேட்பது. கற்றலின் கேட்டலே நன்று அல்லவா? கேள்விகள் கூடக் கேட்காமல் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள் அல்லவா நாம். ஆகையால், சினிமாவிலும் இயக்குநரிடம் பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளக் கடமைப்பட்டவர்களே நம் உதவி இயக்குநர்கள். அதனால், பத்துஆண்டுகள் கழித்து உதவி இயக்குநராக இருந்த ஒருவர் தன் கைப்பட எவற்றையெல்லாம் செய்து பார்த்திருப்பார் என்று சொல்வதற்கில்லை. கன்டினியூட்டி பார்ப்பது, ஃபீல்டு கிளியர் பண்ணுவது (பெரும்பாலும் ஆட்கள், ஆடு மாடுகள் இன்ன பிற ஜீவராசிகள் ஃப்ரேமுக்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது) என்பதாக பெரும்பாலோர் பணி முடிந்துவிடும். ‘Learning by doing’ என்ற ஒன்றை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் அல்ல நம் பழைய பரம்பரை உதவி இயக்குநர்கள். அப்படிச் செய்து பார்ப்பதற்கும் பல இலட்சங்கள் தேவைப்படும் சூழல். ஆனால், தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம், பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்ச ரூபாய்க்குள் குறும்படங்களை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அத்தகைய வாய்ப்புப் பெற்றவர்களில் சில சமர்த்தர்கள் சினிமா என்ற தொழில் நுட்பத்தை விளங்கிக்கொள்ளும் திறன் பெற்றவர்களாகி வருகிறார்கள். இவர்களுக்குத் தேவை ஐந்திலிருந்து பத்தாண்டுகளல்ல, சில மாதங்களே.

அந்தவகையில் ‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. தமிழில் யாரும் பரீட்சித்துப் பார்த்திராத வகைமை என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் வடிவ ரீதியான புதிய முயற்சிகள் நடைபெறாத வரையில் அது முன்னகர்வது சாத்தியமாகாது என்ற வகையில் ‘சூது கவ்வும்’ அரிதான முயற்சி. ‘சூது கவ்வும்’, ‘பின் நவீனத் தன்மைகள்’ அதிகம் கொண்ட படம். இயக்குநர் மிகவும் திட்டமிட்டு இதைச் செய்தார் என்று சொல்வதற்கில்லைதான். ஆனால், அவர் சமகால பெருநகரப் பண்பாட்டின் அபத்தங்களை, தற்செயல்களை, முரண்களை பகடியும் எள்ளலும் நிறைந்த மொழியில் சொல்ல முயன்று சாதித்திருக்கிறார். வேலைக்குப் போவதன் அவசியத்தைப் பற்றிய எந்தக் குற்ற உணர்வும் இல்லாத, நயன்தாராவுக்குக் கோயில் கட்டும் இளைஞன், காலையில் எழுந்து அவசரமாகக் குளித்து உடை மாற்றி அறையில் அமர்ந்து சரக்கடிப்பவன், மனதில் அவன் காதலியைக் கண்டு சதா அவளோடு பேசிக்கொண்டிருப்பவன், மனப்பிறழ்வின் சாயலுடன் ஆட்களைக் கடத்தி பணம் பறிப்பதைக் கார்ப்பரேட் நேர்த்தியுடன் அணுகுபவன்  தறுதலையாக தன்னையே கடத்திப் பணம் பண்ண முயலும் அரசியல்வாதியின் மகன் & கட்சித்தலைவரே விரும்பாத அளவுக்கு நேர்மையாக இருந்து அரசியலிலிருந்து துரத்தப்படும் அரசியல்வாதி, தன்னைக் காதலிக்க மறுப்பவனை, தன்னை கொலை செய்ய முயற்சித்தவனாகச் சொல்லி, அவனை வேலையை விட்டுத் துரத்தும் மென்பொருள் இளம்பெண் & இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை அல்லது கதை போன்ற வஸ்து என்று சொல்லலாம். இப்படத்தை ஒரு காமெடிப் படமாக எளிமைப்படுத்திவிட முடியாது.

‘வேலை எதும் பாக்கலயா?’ எனக் கேட்கிறார். ‘எதுக்கு பாஸ், அதுக்குள்ள என்ன அவசரம்?’ என்கிறார் நயன்தாராவுக்குக் கோயில் கட்டியவர். லட்சணமாக மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்த ஒருவன், வேலை போனபின் வெகு விரைவில் கடத்தல் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

மனக்கண்ணில் காட்சிகளைக் கண்டு கொள்ளும் ஒருவன், திடீர் அரசியல்வாதியான ஒருவனுடன் நண்பர்கள் செட்டில் ஆகிவிட, அவன் தன் பழைய கடத்தல் தொழிலை அதே ஆர்வத்துடன் தொடர்கிறான். அவனுக்குப் பணம் பொருட்டல்ல. அவனைச் செலுத்துவது எது என்பது பார்வையாளர்களின் ஊகத்திற்கு விடப்படுகிறது.

தன் கட்சியில் இருக்கும் ஒரே நேர்மையாளரான அமைச்சரைத் தூக்கி எறிந்து அந்த அமைச்சரின் தறுதலை மகனிடம் பேரம் பேசுகிறார் முதலமைச்சர். வருசத்துக்கு மூணு கோடி கொடுப்பதாக இருந்தால் தேர்தலில் உனக்கு சீட் தருகிறேன் என்கிறார். மகனும் பேரத்தை ஏற்றுக்கொள்கிறான். நேர்மையாளரான தந்தை முன்டா பனியனுடன் வீட்டில் ஈ ஓட்டுகிறார்

இலக்கும் இலட்சியமுமற்ற இளைஞர்கள், பொதுவாழ்வில் நேர்மை தகுதிக்குறைவாக மதிக்கப்படும் அவலம், தன் மகனைக் கடத்தியவனிடமே தொழில் பேரம் பேசும் தந்தை, கத்தையான கரன்சிகளால் ஆளப்படும் உலகம், தத்துவங்களை யும் தர்க்கங்களையும் தகர்த்துவிடும் பணம், தற்காலிக வெற்றி தற்போதைய தமிழகத்தை / இந்தியாவை இதைவிட சிறப்பாகச் சித்தரித்துவிட முடியுமா என்ன?

எந்தப் பாத்திரத்தின் பின்புலங்களும் சொல்லப்படவில்லை. அவர்களின் தற்போதைய செயல்பாடுகளுக்கான காரணங்கள் தர்க்க ரீதியாக அலசப்படுவதில்லை. பெருநகர வாழ்க்கை தனிப்பட்ட நபர்களின் சுயங்களை நசுக்கி ஒரு ‘பொது மனநிலைக்குள் / பண்பாட்டுக்குள்’ தள்ளிவிடுவதால், காட்சிகள், பாத்திரங்களின் செயல்பாடுகள், காட்சியமைப்புகள் துண் டிக்கப்பட்டவையாக, தொடர்ச்சி வேண்டாதவையாக அமைந்துவிடுகின்றன.

பல கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் சிறீ சாந்தைச் சூது கவ்வியதைப் பற்றிய நியாயங்கள் ஏதும் புரிகிறதா? பல கோடிகள் சம்பளம் வாங்கும் ரன்பீர்கபீர் விமானநிலையத்தில் வரி கட்டாமல் திருட்டுத்தனமாய் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவர் கட்ட வேண்டியிருந்த தொகை வெறும் அறுபதாயிரம். எப்படிப்பட்ட ஹீரோக்களோடு வாழ்கிறோம் நாம்? இந்தக் காலகட்டத்தின் பொது உளவியலை வெளிப்படுத்தும் பின்நவீன வடிவம்தான் ‘சூது கவ்வும்’.

குறும்பட இயக்குநர்களில் தொழில்நுட்ப ரீதியான தெளிவும், தான் செய்ய விரும்பியதை திருப்தியாகச் செய்துவிடுகிறவராகவும் இருக்கிறார் நலன் குமாரசாமி. உரையாடல்கள், நடிகர் தேர்வு, இசை ஆகியனவற்றை மிக நேர்த்தியாகக் கையாள அவரால் முடிகிறது. மேலோட்டமாக எள்ளலும் நையாண்டியும் விரவிக்கிடந்தாலும் தன் திரைப்பட வடிவத்தையே உள்ளடக்கமாக மாற்றியிருக்கும் நலன் குமாரசாமி ஒரு முக்கியமான வரவு.

Thanks : Kaatchipilai

Thursday, October 31, 2013

இஸ்லாம் : சில புரிதல்களை நோக்கி





ஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் 1989 அக்டோபரில் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ‘குர்ஆனை அணுகும் முறை’ குறித்து எழுதியுள்ள சில வாசகங்கள்: “சித்தாந்தங்களையும் கருத்தோட்டங்களையும் எடுத்துக் கூறும் ஒரு நூலல்ல இது. சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய வேதமல்ல இது. பொதுவாக மதத்தைப் பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படியுள்ள ஒரு மதநூலன்று இது . . . மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும் இது. ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூலாகும் இது.” மேலும் அது கூறுகிறது: “எல்லாவித அசத்தியங்களுக்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்புமாறு அவரைத் தூண்டிற்று.” (பக். 33-34) ‘அவர்’ என்று சுட்டப்படுவது ஒரு முஸ்லிமைத்தான்.

இறைபக்தி என்பது என்ன? குர்ஆனின் வழியில் சொல்வதென்றால் சமூகத்தின் பல அம்சங்களுடன் இணைந்திருக்கிற ஒரு கருத்தியல் அல்லது ஓர் ஆன்மீக நிலை. வெறுமனே இறைபக்தி என்றால் மனமுருகி நிற்கின்ற ஒருநிலை போதும். ஆனால் இங்கே ஒரு போர்க்குரல் தேவை என்ற நிலையில் அது இறை பக்திக்கு அப்பாலும் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் சமூகம் இன்று உலகளாவிய நெருக்கடிக்குள் வந்து நிற்கின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ என்ற கருத்தாடல் அமெரிக்காவின் அடுத்தக்கட்டப் பொருளாதார மேய்ச்சலுக்கு நன்றாக உதவியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இளைஞர்கள்தான் பலிகடாக்களாக வேண்டும். வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள், நாடகக்கதைகள் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல; மிகத் தோதான முறையில் அப்போதைய வாஜ்பேயியின் பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முஸ்லிம் இளைஞர்களும் தம் கொம்புகளைச் சீவிக்கொண்டு களத்திற்குள் நுழைய வேண்டியதானது.


சரியாகப் பத்தாண்டுகள் கடந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்கள், பெண்கள் முன்னணியில் நின்று எகிப்தின் தஹ்ரீர் திடலில் அஹிம்சை எனும் காந்தீய வழியில் இடைவிடாது போராடினார்கள். தகவல் தொடர்பில் ஏற்பட்ட நவீனப் புரட்சியைப் பயன்படுத்திக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர் களைப் பந்தாடத் தொடங்கினார்கள். (ஆனால் அதன் பலன்கள் யாரைப் போய்ச் சேருகின்றன என்பது வேறு விஷயம்.) சிரியாவில் இன்றுவரை அந்த அலை ஓயவில்லை.

அப்படியானால், இதோ ஓர் ‘இஸ்லாமிய ஜனநாயகப் புரட்சி’ என்று எவருமே அதனை மனம்குளிர அழைக்கவில்லையே, அது ஏன்? இஸ்லாமியப் பயங்கரவாதப் பீதிக்கு அது ஒரு மாற்றுச் சொல்லாடலாக இருந்திருக்கும். இஸ்லாமிய அறிவு ஜீவிகளும் இதழ்களும் இதில் கவனம் செலுத்தவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் உளவியலை ஆதிக்கசக்திகளே தீர்மானித்து வருகின்றன. அதன் காரணமாகச் சமூகத்தின் நெருக்கடிகள் குறையாமல் நீடிக்கின்றன. முஸ்லிம் சமூகம் இறுக்கமானது என்ற கருத்தும் நிலைபெற்றிருக்கின்றது. காலத்தால் வெகு பின்னராகத் தோன்றுகின்ற இஸ்லாம், விரிவான சமூகப் புரிதலோடுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமிய அணுகுமுறையை முஸ்லிம்களே புரிந்துகொள்ள முடியாத நிலையில் அதன் உளவியல் அமைந்துள்ளது.

குர்ஆன் என்பது எல்லோருக்கும் ஓரே பார்வையில், புரிதலில் இல்லை. எல்லாவற்றிலுமே உலக நடைமுறை அப்படியானதுதான். ஒருவரின் மனநிலை, அவருடைய கல்வியறிவு, அரசியல், பொருளாதாரம், சமூகப் பற்று, இனம், கலாச்சாரம் போன்ற பல்வேறு அடுக்குகளிலும் உள்ள அவருடைய சாய்மானத்தை வைத்துத்தான் எல்லாமே அவரால் புரிந்துகொள்ளப்படுகிறது. குர்ஆனுக்கும் அதுவே நிலை. சமயங்களில் முஸ்லிமல்லாத ஒருவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு ஒத்து வருகிறார். ஒரு முஸ்லிமானவர் குர்ஆனின் அணுகுமுறை, கருத்துகளுக்கு வெளியேயும் போய் விடுகின்றார்.

ரயில் பயணத்தில் ஒரு கிறித்தவர் தூங்கியெழுந்த கையோடு பைபிளை வாசிக்கிறார். மாபெரும் பிரசங்கங்களில், சர்ச் பிரார்த்தனைகளில் பைபிள்கள் விரிக்கப்படுகின்றன. இன்று குர்ஆனை வாழ்வில் பலமுறை ஓதியவர்கள் சில இலட்சங்கள்தான் இருப்பார்கள். ஆனால் குர்ஆனை வாழ்வில் ஒருமுறையேனும் முழுதாய் வாசித்தறியாத முஸ்லிம்கள் பலகோடிப் பேர் தேறுவார்கள். குர்ஆனின் மீதான மரியாதைக்கும் அதனைத் தொட்டுத் திருப்புவதற்குமான இடைவெளி அளவிட முடியாதது. பலகோடி முஸ்லிம்களும் தங்கள் வேதநூலை அறிந்துகொண்டது, வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் நிகழ்த்தப்படுகின்ற “பயான்”களின் மூலமே. பயான் எனும் பிரச்சாரத்தை நிகழ்த்துகின்ற ஆலிம் (தொழுகையை முன்நின்று நடத்துபவர்) மேலே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள மனநிலை, கல்வியறிவு, சமூகப் பற்று, அரசியல் ரீதியிலான புரிதலின் அடிப்படையிலேயே தன் பிரசங்கத்தையும் நிகழ்த்துவார். துண்டு துண்டான குர்ஆன் வசனங்கள்; இதன் விளைவாய்ப் பகுதி பகுதியான இஸ்லாமியப் புரிதல்கள்: முழுமைபெறத் தவறிவிட்டது குர்ஆனிய வாசிப்பு.




இப்போது உலகெங்கும் நிகழ்த்தப்படும் பயான்கள் குர்ஆனை ஓர் ஆன்மீக எழுச்சியாக மாத்திரமே சித்திரிக்கின்றன. குர்ஆனியக் கருத்துக்கள் பேசப்படும் அதேநிலையில் இருந்தபடியேதான் நபிகள் நாயகத்தின் இறைபக்தி, நல்லொழுக்கங்கள் பேசப்பட்டு வருகின்றன. வட்டி வாங்குதல், புறம்பேசுதல், களவு புரிதல், குடிபோதை, காம உணர்ச்சிகள், இறை மறுப்பு என்பது மாதிரியான விசயங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, மிகக் குறைவான அம்சங்களோடு இஸ்லாம் வடிகட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகள், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் ‘இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மை’ என்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!

இஸ்லாம் இவ்விதமான ஆமை ஓட்டுத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. இன்று இஸ்லாமியப் புரிதல்களில் புதிய ஒளியும் விரிவுகளும் இல்லை; அனுபவச் செழுமைகள் ஏறவில்லை. இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கால்கள் இந்நேரம் சிறகுகளாக மாறியிருக்கவேண்டும். எண்ணெய்ச் செக்குகளைச் சுற்றிக்கொண்டே இருக்கும் நடைப் பயணத்தால், இஸ்லாத்தின் ஆன்மீகத் தன்மைக்கு அப்பாலும் நீண்டு செல்லும் சமூக வாழ்வுக்கான தேடல்களில் முஸ்லிம்கள் தேக்கநிலை பெற்றுள்ளனர். ஆனால் இறைமையும் நபித்துவமும் கலந்தெடுக்கப்பட்ட திரட்சியில் இஸ்லாமியச் சமூக ஒளி பல இருட்டுகளை உடைக்கின்றது.

நபிகள் நாயகம் தொழுகையை மட்டுமே முறைப்படுத்தித் தரவில்லை. நாயகம் ஒரு சமூகப் போராளியாகப் பரிணமித்தவர். நபித்துவ நிலையை அடைவதற்கு முன்பு முஹம்மது முஸ்தபாவாக அறியப்பட்ட அவர் ஹில்ஃபுல் ஃபுதூல் என்ற அமைப்பில் இடம் பெற்றிருந்தார். அரேபியப் பொருளாதாரம் நாடோடிப் பொருளாதாரத்தில் இருந்து வர்த்தகப் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருந்த நேரம். அதன் இயல்புக்கேற்றபடி ஒருபுறம் செல்வம் குவிந்தது, மறுபுறம் ஏழ்மை பெருகியது. சமூகத்தில் இதனால் அதிருப்தி அலைகள் உண்டாயின. நகரத்தில் வன்முறைகளும் ஏழைகளின் மீதான தாக்குதல்களும் நடந்துவந்தன. இதுபோன்ற சமயங்களில் ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவி அளிக்கவும் ஹில்ஃபுல் ஃபுதூல் அமைப்பிலிருந்த இளைஞர்கள் விரைந்தோடிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் முஹம்மது முஸ்தபா (பின்னாளில் அவரே நபிகள் நாயகம்)வும் முக்கியமானவர். அது ஒரு வீரர் குழாமாகவே அறியப்பட்டது. அப்படியானால் அது ஒரு சமூகச் சேவை அமைப்பாக மட்டுமே இருக்கமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நபிகள் நாயகமாக ஆன பின்னரும் அவருடைய மலரும் நினைவுகளில் அதன் உறுதி இருந்தது. “ஹில்ஃபுல் ஃபுதூல் தொடங்கப்பட்ட காலத்தில் நான் அதில் கலந்துகொண்டேன். இந்தப் பெருமையை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாகச் செந்நிற ஒட்டகங்களின் மந்தை ஒன்றைக் கொடுத்தால்கூட நான் இணங்க மாட்டேன். இன்றும்கூட யாரேனும் அந்தக் குழாமின் பெயரால் என்னை உதவிக்கு அழைத்தால் நான் ஓடோடிச் சென்று உதவுவேன்.” தமது இளம் வயதிலேயே மக்கா நகரச் சமூகத்தில் மண்டியிருந்த கேடுகளைப் போக்க நபிகள் நாயகம் ஏதாவது செய்ய விரும்பினார் என்று அஸ்கர் அலி என்ஜீனியர் குறிப்பிடுவது இதனால்தான். மக்கா நகர ஏகபோக வர்த்தகர்களின் அஹ்லாஃப் என்ற அமைப்பின் சவால்களை எதிர்த்து நின்றதன் மூலம், நபிகள் நாயகத்தின் சமூக அக்கறை என்றும் ஏழைகளுக்குரியதாகவே இருந்தது. பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள், செல்வத்தால் அகம்பாவம் கொள்ளாதீர்கள் என்று நபிகள் நாயகம் முஸ்லிம் செல்வந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் எந்த அளவிற்குத் தொழுகையையும் இறைபக்தியையும் வலியுறுத்தினார்களோ, அதே அளவில் சமூகத்தில் ஏற்பட்டு வந்த செல்வக் குவிப்பு, அதனால் உண்டான வறுமை, அது மக்களிடையே அதிருப்தியாகப் பரவி பின் சமூகக் கொந்தளிப்பாக வீச்சு பெறப் போவதையெல்லாம் நுட்பமாகக் கவனித்தபடியே இருந்தார்கள்.
அந்த மாதிரியான சமயங்களில் அவர் தன் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் ஏழைகளின் பக்கமே தன் சாய்வு என்று வெளிப்படுத்தி வந்தார். இதற்கான மாற்று இறைபக்தியும் அதனோடு சேர்ந்த தொழுகையும்தான் என்று வாளாவிருந்து விடவில்லை. சமூகச் சேவைகளின்பால் ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுத்தபடியே இருக்கிறார். விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோரைப் போஷிக்கும்படி மக்காநகரச் செல்வந் தர்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்குகிறார்.




இறை நம்பிக்கையாளர்களைச் சமூக நீதியின் பக்கம் நிறுத்துகிறது குர்ஆன். அவர் ஒரு முஜாஹித் (போராளி). “நம்பிக்கையாளர் என்பவர் இறைவனின் பூமியில் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு புதியவகை மானுடரே ஆவார்; எந்தச் சூழ்நிலைகளின் கீழும் எந்தவிதமான அநீதிக்கும் அவர் அடிபணிய மாட்டார். ஒரு நீதியான சமூகத்தை நிறுவுவதற்காக இறுதிவரை அவர் போராடுவார்.”

இஸ்லாத்தின் உன்னதங்களை தொழுகையின் வாயிலாக மட்டுமே எட்டுவது சாத்தியமில்லாதது. தொழுகை ஒரு நுழைவாயில்தான். ஆனால் இப்போதுள்ள நடைமுறைகளின்படியும் ஒருவர் சாதாரணமான அளவில் புரிந்துகொள்வதன்படியும் தொழுகைதான் இஸ்லாத்தின் உச்ச நிலை; அதைத் தொழுது முடித்துவிட்டால், ஒருவேளை வசதியிருந்து அதையே ஹஜ் பயணமாக நீட்டித்து மக்கா - மதீனாவிலும் தொழுதுவிட்டால், உயர்ந்த இறையச்சத்தைத் தான் கொண்டிருப்பதாகக் கருதிக்கொள்ளும் மனநிலையே ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றது. தொழுகை இறையச்சம் மிக்க உறுதியேற்பு நிகழ்வு. அந்த உறுதியேற்பின் வழியே அவர் ஜிஹாதி (புனிதப் போராளி) ஆகிறார்; அதாவது சமூக - அரசியல் - பொருளாதாரம், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றைச் சமூக நீதி அடிப்படையில் நிறைவேற்றித் தரவேண்டிய போராளியாக ஆகிறார். தொழுகைக்காக ஒரு முஸ்லிமைப் பள்ளிவாசலுக்கு அழைப்பதற்கான முழக்கத்தில் “தொழுகையின் பக்கம் வாருங்கள்; (மனித) நலத்தின் பக்கம் வாருங்கள்” என்கிற அறைகூவல் இருக்கின்றது. ஒருவரை மனிதகுல முன்னேற்றத்தின் செயல்பாடுகளுக்குச் சார்புநிலை இல்லாமல் அழைப்பதைவிட, ஆன்மீகத்தின் வழியே இறைவனைச் சுட்டிக்காட்டி அழைப்பது பயன்தரக்கூடும். நபிகள் நாயகம் பிறப்பிலேயே நபிகளாய்த் தோன்றவில்லை. 40ஆவது வயதில்தான் நபித்துவம் இறங்குகின்றது. அன்னாருடைய சமூகநோக்கங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றைத் தன் ஆன்மீகத் தேடலின் மூலமாக அவர் நிகழ்த்தி வந்ததனாலேயே நபித்துவம் அவருக்குச் சாதகப்பட்டது. நபிகளாரின் வாழ்வைப் புரிந்துகொள்வதில் இருக்கவேண்டியது இறைபக்தி மட்டுமல்ல; சமூகப் பற்றும் சமூகப் புரிதல் அவசியம். இதன்படி நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது (இஸ்லாமிய) சமூக வாழ்க்கையை அமைக்கும் முதல் அம்சமான அதன் பொருளாதாரம் பற்றியாகும்.




இஸ்லாமியப் பொருளாதாரம் எத்தகையது? இஸ்லாமிய இயக்கத்துக்கு முதன்மையான எதிர்ப்பு மக்காவைச் சேர்ந்த பணக்காரர்களிடம் இருந்தே எழுந்தது. குர்ஆனின் ஏராளமான வசனங்கள் செல்வக் குவிப்பைக் கண்டனம் செய்கின்றன. குர்ஆனின் வசனங்கள் மக்காவில் இறங்கியபோது அவை கடுமையான சொற்களாக இருந்தன. செல்வமே எல்லாவற்றுக்கும் தீர்வு என்று இஸ்லாம் நம்பவில்லை. அப்படி இருந்திருந்தால் செல்வர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமோ, ஹில்ஃபுல் ஃபுதூல் இயக்கத்தில் சேரவேண்டிய அவசியமோ நபி நாயகத்திற்கு இருந்திருக்காது. இஸ்லாமியச் செல்வம் சமூகத்திற்குள்ளே சுழன்றோடிய படியே இருக்கவேண்டும் (59:7). அதாவது, குவிப்பு அல்லது தேக்கம் கூடாது. அதனால்தான் பணத்தை ஈட்டும்போதே அதைச் செலவு செய்வதையும் உடனே பேசிவிடுகின்றது இஸ்லாம். “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள்தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதை இறைவழியிலும் அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான். அவனுக்கு நேர் மாறாக எவர் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுவதில்லையோ அவருடைய நிலை எத்தகையதெனில், எந்தக் காலத்திலும் முழுமையான மனநிறைவு அடையாத நிலையில் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்ற மனிதனைப் போன்றதாகும்.” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். (அறிவிப்பு: அபூ ஸயீத் குத்ரி (ரலி). நூல்: புகாரி.)

பொதுவாகவே நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர், மக்காவிலுள்ள குறைஷி இனத்தார், நபிகளின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீது கோபப்பட்டுப் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர் என்று எழுதுவார்கள். குறைஷி இனத்தாரின் கையில்தான் மக்காவின் செல்வாதாரங்கள் குவிந்து கிடந்தன. நபிகள் நாயகத்தின் இஸ்லாமியப் பிரச்சாரம் தங்களின் செல்வாக்கையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும் என்பதுதான் அவர்களின் அச்சம். அப்படியானால் அந்த உண்மையைப் பொருளாதார அநீதியாகக் குறிப்பிடும் வகையில் மக்காவின் பணக்காரர்கள் என்று வெளிப்படையாக எழுதாமல், இனத்தின் மீதான தன்மையைக் காட்டும் வகையில் குறைஷி குலத்தார் என்றே குறிப்பிடுகிறார்கள். இதில் இனம் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனெனில் நாயகமும் குறைஷி இனத்தவர்தான். நாயகத்தை எதிர்த்தவர்கள் அவருடைய உறவினர்களும் ஆவர். எனவே அதை ஒரு பொருளாதாரப் போராட்டமாக வர்ணிப்பதில் முஸ்லிம் அறிவு ஜீவிகளுக்கு இருக்கின்ற மனச்சிக்கலை நாம் கண்டுகொள்ள வேண்டும். இஸ்லாமிய எழுச்சியையும் நபிகள் நாயகத்தின் அறப்போராட்டங்களையும் இவ்விதமான ஏற்றத்தாழ்வுகளின் மீது நின்று எழுதினால், அது ஒருவகையான வர்க்கப் பிளவை அல்லது வர்க்கப்போரைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி இருப்பதாகச் சொல்லப்படுகின்றது; அதாவது அப்படிக் கருதிக் கொள்கிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்கள் கலாச்சார ரீதியான ஆதிக்கக் கூறுகளின் தன்மையோடு ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அப்படி எண்ணி வருகிறார்கள். இஸ்லாமியப் பொருளாதாரத்தை அடையாளம் காட்டும் ஒரே சின்னம் இஸ்லாமிய வங்கியியல்தான். இஸ்லாமிய வங்கியியலை முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்திவிட்டால் அங்கே இஸ்லாமிய ஆட்சி பரிபூரணமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இந்த இஸ்லாமிய வங்கியியலின் முக்கியத்தன்மை வட்டி ஒழிப்பு. வட்டியை ஒழித்துவிட்டால் சுரண்டலின் ஒரு பகுதி மட்டுமே முடிவுபெறும்; மற்றைய சுரண்டல்களையும் ஒழித்துக்கட்டும் இஸ்லாமிய மந்திரத்தை இங்கே எவரும் பேசவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது இஸ்லாமிய வங்கியியலை ஊடுருவ விட்டால் இஸ்லாமியப் பொருளாதாரம் துளிர்த்துவிடும் என்று நம்புகிறார்கள்!

இப்போது உலகம் முழுவதும் முதலாளித்துவமே நிலவுகிறது. அதன் உக்கிரம் உலகமயமாக்கலாக நம் தலையில் விழுந்துள்ளது. முதலாளித்துவமோ அல்லது உலகமயமாக்கலோ இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்களிடம் கலந்துபேசி உருவாக்கப்பட்டதல்ல! முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் இஸ்லாமியக் கூறுகளுக்கு இடமளித்திருக்கவில்லை. ஏற்கெனவே உலகம் முழுமைக்கும் முதலாளித்துவம்தான் கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்தது. உலகமயமோ எல்லா நாடுகளின் - எல்லா இனங்களின் - எல்லா மதங்களின் கலாச்சாரங்களையும் ஒழித்துக்கட்டி ஏகமயமான ஒற்றைக் கலாச்சாரத்திற்கு வித்திட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் எப்போதுமே இந்தக் கலாச்சாரச் சீரழிவைக் கண்டனம் செய்து வருகிறது. ஆனால் உலகமயமாக்கலை இருகரம் நீட்டி வரவேற்கிறது. முஸ்லிம் அறிவுஜீவிகளில் பலர் இஸ்லாமியப் பொருளாதாரம் என்று சமூகத்தின் கண்களை முதலாளித்துவத்தையும் உலகமயமாக்கலையும் நோக்கியே திருப்புகிறார்கள்.




சில ஆண்டுகளுக்கு முன் மதுரையிலிருந்து வெளியாகும் ‘சிந்தனைச் சரம்’ இதழில் இஸ்லாமிய அறிஞர் அ. முஹம்மது கான் பாகவி, மன்மோகன்சிங்கின் வாக்கினை நம்பி ஒன்பது சதவீதப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார். ‘முஸ்லிம் முரசு’ இதழில் எழுதிவரும் ரசூல் மைதீன் உலகமயம் நசுக்கியெறிந்த சென்னையின் நகர வீதிகளில் குப்பையாகக் கொட்டப்பட்டிருக்கிற கிராமத்து விவசாயிகளின் மீது சோம்பேறிகள், திருடர்கள் என்று வசைமாரி பொழிந்து அவர்களை சென்னையை விட்டே துரத்தியடியுங்கள் என்று உத்தரவும் போடுகிறார். கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் ஏழைகளின் அவலத்தையும் வேறுவேறாகப் பிரித்துப் பார்த்துச் சினமுறும் இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் திசையெங்கும் பரவித்தான் கிடக்கிறார்கள். இது நபிகள் நாயகத்தின் வாழ்வுக்கும் இஸ்லாமியத் தோற்றுவாய்க்கும் மாறான சிந்தனை. தங்களின் பரிசீலனைக்கு வருகின்ற எல்லா விஷயங்களின் மீதும் இஸ்லாமியக் கூறுகளைத் தோண்டித் துருவிப் பார்ப்பவர்கள், இன்றைய மனித வளங்களின் மீதும் இயற்கை வளங்களின் மீதும் நடத்தப்படும் உலகமயச் சூறையாடல்களை எப்படி மறுகேள்வி இல்லாமலே ஒப்புக் கொள்கிறார்கள்?

இன்றைய உலகப் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியப்பங்கு வகிக்கும் இயற்கை வளங்களில் பெட்ரோலியம் முதன்மையானது. அந்தப் பெட்ரோலிய வளங்களைக் கவர்ந்து செல்லவே நடந்து முடிந்த இராக் மீதான போரும் நடக்கப் போவதாக அஞ்சப்படுகிற ஈரான் மீதான போரும் இருந்தது; இருக்கின்றது. மற்ற அரபுலக நாடுகள் அமெரிக்காவின் காலடியில் கிடப்பவை. அமெரிக்க யானைக்கு மிஞ்சியதுபோக, சிந்திப்போன கவளங்களில் அரபுலக மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஷேக்குகள் போன்றோர் தங்களின் ஆடம்பர வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழும் வாழ்வும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட மன்னராட்சி முறைமையும் இஸ்லாத்திற்குப் புறம்பானவை; இந்த ஆட்சி முறைகளால் இஸ்லாமும் உலகளாவிய முஸ்லிம் சமூகமும் தீவிரமாகவே களங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் துயரங்களுக்கு இந்த அரபுலகே மூலகாரணமாய் உள்ளது.

அந்த அரபுலகத்தின் மூலமே உலகெங்கும் கொண்டு செல்லப்படும் இஸ்லாம் எப்படி சமூக நீதிக்கான - சமத்துவத்திற்கான - கோதரத்துவத்திற்கான தத்துவமாக இருக்கமுடியும்? அரபுலகின் மசூதிகளில், வெள்ளிக்கிழமை பிரசங்கங்களில், பெருநாள் தொழுகைகளில் நிகழ்த்தப்படும் உரைகளில் எப்படி இஸ்லாம் காணக் கிடைக்கும்? அந்த உரைகள் மன்னர்களின் தர்பார்களில் உருவாக்கப்படுபவை; அல்லது மன்னர்களின் கேளிக்கை மண்டபங்களின் அங்கீகாரம் பெற்றவை! சுயசிந்தனைக்கும் இஸ்லாமியத் தேடலுக்கும் வழியேயில்லாத உரைதான் ஓர் அரேபிய மௌலவியின் உரை. அமெரிக்க ஏகாதிபத்திய நுகத்தடிகளின் கீழே பூட்டப்பட்ட அரேபிய மன்னர்களின் சுயநலங்களை வர்ணம் பூசி மறைக்கின்ற இந்த இஸ்லாம் ஏழை எளியவர்களை எப்படி மீட்கும்? 1970 - 80களில் அணியணியாக அரபுலகம் சென்று தங்களின் பிழைப்புக்கான வழிதேடிய இலட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஒருவகையான தவ்ஹீத்வாதம் என்ற நச்சரவத்தால் தீண்டப்பட்டு அதில் மதிமயங்கிய நிலையில், தத்தம் நாடுகளுக்கும் சென்று அங்கேயும் தவ்ஹீத்வாதத்தைக் கொட்டிவிட்டார்கள். எப்போதுமே இளைஞர்களின் மனம் துறுதுறுப்பானது; புதிய புதிய மாற்றங்களை விரும்புவது. உலகநாடுகளின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் “தூய்மையற்ற இஸ்லாத்தோடு” அரபுலகம் சென்ற அந்த இளைஞர்கட்கு அரபுலகின் பழங்குடிக் கலாச்சாரங்களும் பாலைவனத்து ஆடை மரபுகளும் புதிய இஸ்லாமாகத் தோற்றம் தந்தன. தர்காக்கள் தகர்க்கப்பட்ட நிலையே ஒரு மாபெரும் புரட்சியாக அவர்களின் சிந்தனைகளில் பதிந்தன. சுரண்டல் ஏற்பாடுகளுக்காய்த் தந்திரமாகச் சுருக்கப்பட்ட தொழுகை முறைகளின் நுட்பம் அறியாமலேயே அதன் கீழே வசப்பட்டனர். அதாவது அந்த மாபெரும் வேலையற்றோர் கூட்டத்துக்கு எதிரான கருத்துக்களை - செயல்பாடுகளை “தூய்மையான இஸ்லாம்” என்கின்ற அறியாமையின் பேரில் தங்கள் தலையிலேயே சுமந்து வந்தனர். இன்று தவ்ஹீத்வாதப் பள்ளிவாசல்களில் நிகழும் பிரசங்கங்கள் தங்களின் வாழ்வமைப்புக்கு எதிரானது என்பது புரியாமலேயே ஓர் ஏழை ஆலிம் செயல்படுகின்றார்! பிரசங்கம் புரிகின்றார்!

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் வரும்போது பிற சமயத்தார் எந்தக் காரணங்களை முன்வைத்துத் தங்கள் தரப்புகளை நியாயம் செய்வார்களோ, அதனையே முஸ்லிம் பொருளாதார ஆர்வலர்களும் பின்பற்றிப் பேசுவது மரபு. அந்தச் சமயத்தில் இஸ்லாத்தின் நோக்கை அப்பட்டமாகக் கைகழுவி விடுவார்கள். ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன, மேடு இருந்தால் பள்ளமும் உள்ளதல்லவா என்பன போன்ற காரணங்களை முன் வைக்கிறார்கள். சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானில் முகாம் இட்டபோது தலிபான்கள் சோவியத் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டார்கள். அன்று தலிபான்களுக்கு ஆயுத உதவி செய்தது அமெரிக்கா, தலிபான்களின் போராட்டத்தை நியாயப்படுத்தி அவர்களை வலுப் படுத்துவதற்காகக் களமிறங்கிய அமெரிக்கா தந்திரமாகப் புனைந்துரைத்த வாசகம் இவ்வாறு அமைந்தது, “இஸ்லாம் இயல்பாகவே பொதுவுடைமைக் கருத்துகளுக்கு எதிரி என்பதால் தலிபான்கள் சோவியத் யூனியனை எதிர்த்துப் போர் புரிகிறார்கள்.” பின்னர் இது பொது வழக்காகியது. முஸ்லிம் சமூகத்துப் பொருளாதார மேதைகளுக்கும் அமெரிக்கா இறக்குமதி செய்த இஸ்லாமியக் கருத்துக்களே கைவிளக்காயிற்று. ஆனால் அல்லாஹ்வை முஸ்லிம்கள் குறிப்பிடும்போதெல்லாம் ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ என்றே குறிப்பிடுவார்கள். ‘எல்லாம் வல்ல அல்லாஹ்’ பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மட்டும் எப்படி ‘இயற்கை’யாகவே இருக்க விட்டுவிடுவான்? அல்லாஹ்வின் வல்லமையையே கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்கிற எண்ணம் இந்நாள் வரையிலும் இஸ்லாமியப் பொருளாதார வாதிகளுக்குத் தோன்றாமல் இருக்கின்றது! இவ்வகைக் கருத்துக்கள், சொற்பிரயோகங்கள் அடிக்கடிப் பயன்படுத்தப் பட்டமையாலேயே இஸ்லாமிய அறக்கோட்பாடுகள் ஜீவனற்றுப் போய்க்கிடக்கின்றன. இதன் நீட்சியாகவே முஸ்லிம் சமூகம் காலவெள்ளத்தில் எதிர்நீச்சலைப் போட முடியாமல் கரையொதுங்கிக் கிடக்கின்றது.

உலக அரசியல் அரங்கில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு இடமில்லை. எதைப் பேசுவதாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் பழம் பெருமைகளையே பேசித் தீர்க்க வேண்டியதாக உள்ளது. முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் கல்வியாளர்கள், முஸ்லிம் மனித உரிமைப் போராளிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் ஊடகவாதிகள் - கலாச்சாரவாதிகள் என அடையாளம் சுட்டுவதற்கு ஆளுமைகள் கணிசமாக இல்லை. உலக அரங்குகளில் முஸ்லிம்களின் குரல்கள் போதிய அளவு ஓலிப்பதில்லை. ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் தங்கள் கைவசம் இருப்பதாகப் பூரித்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். உலகின் மக்கள் தொகையில் நால்வரில் ஒருவர் முஸ்லிம் என்று விகிதாச்சாரக் கணக்கைக் காட்டுகிறார்கள். சோவியத் யூனியன் உடைந்தபோது தங்கள் அணிக்கு மேலும் ஆறுநாடுகள் வந்து சேர்ந்ததாக இறும்பூதெய்தினார்கள்.

என்ன சொல்லி என்ன பயன்? மேலைநாடுகள் முஸ்லிம் நாடுகளிலேயே முகாம் அமைத்து முஸ்லிம் நாடுகளிலிருந்தே விமானங்களை, ஏவுகணைகளை அனுப்பி முஸ்லிம்களையே அழித்தொழிக்க முடியும். உலக முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது எகிப்து, சவூதிஅரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள். மேலைநாட்டு முதலாளித்துவம் கூட தன் வளர்ச்சிக்கு மூலதனம் இடுகின்றது. ஆனால் அரபு மன்னர்கள் எவ்வித மூலதனமும் இல்லாமல் இயற்கையாய்க் கிடைத்த பெட்ரோலிய வளத்தை வாரிச்சுருட்டித் தமதுடைமையாக்கிக் கொண்டார்கள். எனவே கல்வி - விஞ்ஞான வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் இல்லை. இஸ்லாமியச் செல்வம் சுழலவேண்டும் என்பது இஸ்லாமிய விதி. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளுக்குள் அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்தச் செல்வம் அரபுலகத்திலேயே முதலீடு செய்யப்பட்டிருந்தால் கல்வியறிவின்றி வறுமையிலும் நோய்களிலும் வாடிவதங்குகிற அரேபியர்களும் ஆப்பிரிக்க
கறுப்பின மக்களும் வீறுகொண்டு எழுந்திருப்பார்கள். இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மூல ஊற்று அடைபட் டிருக்கும். அந்தப் பெட்ரோ டாலரை ஏனைய நாடுகளில் முதலீடு செய்திருந்தாலும் அரபுகளும் ஏனைய நாட்டவரும் தோழமை பூண்டிருப்பார்கள். கலாச்சார உறவுகளை வளர்த்திருப்பார்கள்.

இன்று அரேபியக் கலாச்சாரம் கலை இலக்கியங்கள் இல்லாமல், வளர்ச்சி காணாமல் அந்த உலகத்தின் நிலவியலுக்கு ஏற்றபடி எல்லாமே பாழ்பட்டுக் கிடக்கின்றன. அரேபியர்களின் மனஎழுச்சியைத் தூண்டி அதனைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டிய கலை - இலக்கியம் - கல்வி - தொழில்நுட்பம் - விஞ்ஞானம் என எல்லாவற்றின் முடக்கத்திற்கும் இந்தச் செயல்படா மூலதனம் காரணமாகின்றது. வெளிப்படையாக மேலைய முதலாளித்துவ நாடுகள் அறிவிக்கவில்லையே தவிர, அவை அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் முஸ்லிம்களைப் பல்வேறு காரணங்களால் அப்படியே தங்கள் அடிமைகளாக முடக்கி வைக்கவுமே விரும்புகின்றன. இந்த நிலைக்கு ‘இஸ்லாமியச் செல்வம்’ அந்த மேலை நாடுகளிலேயே முடங்கிக்கிடப்பது இன்னும் அவர்களுக்குத் தோதாக ஆயிற்று. அத்துடன் அந்தப் பெட்ரோ டாலர்களையும் தங்களின் ‘நாடு பிடிக்கும் ஆசை’களுக்கும் வணிக முதலீட்டுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாம் வட்டியைத் தடை செய்திருப்பதால் கோடிக்கணக்கான பெட்ரோ டாலர் களுக்கான வட்டியைக்கூட அரபு நாடுகள் பெற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமியச் செல்வம் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஆகாமல், அவர்களை அடக்கியாளத் துடிப்போரின் எதிர்ப்பு ஆயுதமாகவே ஆகிவிடுகின்றது. இதனால் அரபு நாடுகள் தங்கள் சுயமுன்னேற்றத்தை இழக்கின்றன. தங்களின் நுகர்பொருள் தேவைகளுக்கும் தங்கள் நாட்டுப் பாதுகாப்பான ஆயுதங்களுக்கும் ஏனைய தொழில் நுட்பங்களுக்கும் அவர்கள் மேலைநாடுகளை யாசிக்க வேண்டியிருக்கின்றது. அவர்களின் பெட்ரோ டாலர்களும் பெட்ரோ டாலர்களின் வட்டியுமே தங்களிடம் நுகர்பொருள்களாகவும் ஆயுதங்களாகவும் பரிமாணம் பெற்று மாறிவருகின்றன என்பதை அவர்கள் அறியவில்லை. ஒரு கல்லுக்கு இரண்டு மாங்காய்கள் என்றால் பெரிய ஆதாயம்தான். ஆனால் இங்கு ஒரு கல்லுக்கு ஒரு மரமே விழுந்து விடுகின்றது.

இது போன்ற அவலங்களையெல்லாம் உலக முஸ்லிம் சமுதாயத்தின் கண்களில் இருந்து மறைப்பதற்கு தவ்ஹீத்வாதம் அல்லது வஹாபியிசம் நல்லபடியாக அரபுநாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு உதவுகின்றது. சமூக நோக்கில்லாத, அர்ப்பணிப்பு உணர்வில்லாத வெறும் ஆன்மீகத்தை உணர்ச்சிமயமான முறையில் முன்வைத்து தம்முடைய ஆதாயங்களைப் பேணிக்கொள்கின்றது அரபுலகம். முஸ்லிம்களின் பொற்காலம் என்றால் அது நபிகள் நாயகத்தின் காலத்தில் துவங்கி அபூ பக்கர்(ரலி) காலம் வழியே நடந்து உமர்(ரலி) ஆட்சிக்காலம் வரைக்குமே! இவர்களின் காலங்களில்தான் செல்வப் பங்கீடும் செல்வச் சுழற்சியும் நடந்தன. அதிலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியோ ஒப்புவமை கூறமுடியாத மேன்மையான ஆட்சி. நபிகள் நாயகத்தின் மருமகனார் அலி, உமர் (ரலி)யின் உற்ற துணையாகவும் இருந்ததால் அவர்களிருவரும் ஏழைகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணம் செய்தார்கள். வரலாற்றில் முதன்முதலாகச் சாகுபடி நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டது உமர் ரலியின்
காலத்தில்தான். சாகுபடியின் பலன்களை அளிப்பதிலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என்ற பேதங்கள் இருக்க வில்லை. செல்வம் ஓரிடத்திலேயே குவிகின்ற நிலையைத் தடுக்க அவர் கடும் முயற்சிகளை எடுத்தார். அவருடைய ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நபிகளின் மருமகன் அலியுடன் இணைந்து ஏழைகளின் நல்வாழ்வுக்கான மேலும் சில நடவடிக்கைகளை அமுல் செய்தார். “நான் பிற்காலத்தில் செய்ததை முதலிலேயே செய்திருந்தால் பணக்காரர்களிடமிருந்து உபரிச் செல்வத்தை எடுத்து ஏழை எளியவர்களுக்குக் கொடுத்திருப்பேன்.” என்று உமர் (ரலி) சொன்னதாக ஒரு குறிப்பு இருப்பதை அஸ்கர் அலி எஞ்சீனியர் எடுத்துக் காட்டுகிறார். மூன்றாவது கலீஃபாவாக வந்த உஸ்மான் (ரலி) ஆட்சி, உமர் (ரலி) செய்த எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப்போட்டு ஓர் அபத்த நிலைக்குக் கொண்டு வந்தது. அந்த அபத்த நிலையே இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் ஆதாரநிலை அதன் சுழற்சிதான். ஒரு முஸ்லிம் எவ்வளவானாலும் சம்பாதிக்கலாம்; அதற்கு வரம்பு முறை கட்டவில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் சம்பாதிக்கிற பொருள், அது அப்படியே உடனடியாக இஸ்லாமியச் சமூகத்துக்குரிய பொருளாகின்றது. நபிகள் நாயகம் கூறியதாக நபிகளாரின் தோழர் அபூஸயீத் குத்ரி (ரலி) அறிவித்ததாக புகாரி நூலில் காணக்கிடைக்கிற வாசகம் இது: “முஸ்லிமுக்குச் சொந்தமான பொருள் தான் எத்துணைச் சிறப்பானது! அவன் அதனைச் சத்தியத்துடன் ஈட்டுகிறான். பிறகு அதனை இறை வழியிலும் - அநாதைகள், ஏழைகள், பயணிகள் போன்றோர்க்கும் செலவிடுகின்றான்.”

நபிகள் நாயகத்தின் வாழ்வைக் கூர்ந்து அவதானிக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் புலப்படுகின்றது. இறைத் தூதர்களாக அறியப்பட்டவர்கள் அல்லது ஞானத்தைத் தேடிச்செல்லும் ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் தங்களைத் துறவு நிலையில்தான் தக்கவைத்துள்ளார்கள். உலகின் மிகப்பெரிய மதங்களின் முன்னோடிகள் அல்லது அதன் நிறுவனர்களாய் அறியப்படுகிறவர்களின் வழியில்தான் இன்றைய எழுநூறுகோடி மக்களும் வழிநடக்கிறார்கள். மத வேறுபாடுகள் இல்லாமல் துறவு நிலையைப் பௌத்தம், கிறித்தவம், இந்துத்துவம் ஆகியன ஆதரிக்கின்றன. இதில் இஸ்லாம் மட்டுமே துறவறத்தைத் தடுக்கின்றது. சித்தார்த்தன் அரச வாழ்வைத் துறந்தே புத்தர் ஆகிறார். ஜீசஸ் அரசுக்கு எதிரான கலக மனப்பான்மையை உருவாக்குகிறார். ஆனால் முகம்மது நபியோ இவர்களுக்கு மாற்றமான முறையில் ஓர் அரசை அமைக்கிறார். இது ஒரு விசித்திரமான சூழல். வெறுமனே இறைபக்தி, ஞானம், தொழுகை, நல்லொழுக்கம் என்பனவற்றை முன்னெடுத்துச் செல்ல உலக வரலாற்றின் எந்த மூலையிலும் ஓர் அரசு அமைக்கப்பட்டதில்லை.

ஆன்மீகப் பரப்பலுக்கு வலிமையான பிரச்சாரங்களும் முன்னோடி யாய் இருப்பவரின் குணாம்சங்களும் நல்லொழுக்கங்களும் போதுமானவை. அவர் சமூகத்துடன் கொள்ளும் உறவு இன்னும் சிறப்பு. அப்படியானால் ஓர் அரசின் தேவைதான் என்ன? சமூகப் பரிணாம வளர்ச்சியில் ஓர் அரசு என்பது அரசியல் ரீதியான பொருளா தார இயக்கத்தின் அங்கமாகவே தோன்றியது. பொருளாதாரம் இல்லையேல் அரசு இல்லை. நபிகள் நாயகத்தின் அரசும் அந்தப் பொருளாதாரத் திட்டங்களையே கையில் எடுத்துக்கொண்டது. ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் அவர்கள் நல்லதொரு வாழ்வைக் கைவரப் பெறவும் தன்னுடைய அரசால் மட்டுமே முடியும் என நாயகம் நம்பிக்கை கொண்டிருந்தார். வெறும் போதனைகளாலும் இறை நம்பிக்கையாலும் சமூகத்தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்க முடியாது என்பதை நபிகள் உணர்ந்ததால்தான், அரசின் நிர்வாகத்தைச் செழுமைப் படுத்தினார். அதன் மூலமாக ஆன்மிக மறுமலர்ச்சியைச் செம்மைப்படுத்த முடியும் என நம்பினார். மகான்களும் தீர்க்கதரிசிகளும் ஏழைகளின் பசியின் மீதாகத் தங்களின் சமூகக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து செலுத்தினார்கள். நபிகள் நாயகம் அதில் முதன்மையானவர்; மாறுபட்ட நடைமுறையாளர். இஸ்லாமியக் கொள்கைகளை வெறும் போதனை யாகவே செய்தால் அது காற்றில் கரைந்தோடிவிடும். அதனை ஆக்கப் பூர்வமான ஒரு செயல்திட்டமாக நிறைவேற்றினால்தான் இறைவ னுடைய லட்சியத்தை ஊன்றி நிலைபெறச் செய்ய முடியும் என்று கருதினார். அதனாலேயே ஓர் அரசின் நிறுவனர் ஆனார். ஆனால் இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்டே அரசை நிறுவியபோதும் அது ஓர் இஸ்லாமிய அரசு என்று எப்போதும் சொல்லப்படவில்லை; நாயகம் அந்த உச்சரிப்பைச் செய்தது மில்லை!

ஒரு முஸ்லிம் தன் சம்பாத்தியத்தின் மூலம் அடைந்த பொருள் அனைத்தையுமே இறைவனின் அருட்கொடையாகத்தான் பார்க்க முடியும். அந்தப் பார்வை இருந்தால்தான் தான் பெற்ற வளங்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மட்டுமானதல்ல என்று ஒரு முஸ்லிம் உணரமுடியும். அந்த உணர்வு வந்துவிட்டால் போதும், அவருடைய செல்வம் சமூகத்தின் பயன்பாட்டுச் சுழற்சிக்கு வந்துவிடும். இந்த வகையில் நோக்க ஒருவனின் சொத்துக் குவிப்பு கண்டனத்திற்கு உரியதாகும். அளவுக்கு மிஞ்சிய செல்வக் குவிப்பும் அதன் வழியே கிடைக்கப் பெறுகிற அதிகாரமும் இறை நிராகரிப்பு வடிவங்களாகும். ஆனாலும் உலகளாவிய முறையில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அரேபிய அரசுகள், முஸ்லிம் நாடுகளின் அரசுகள் என்பன இஸ்லாத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. தம்முடைய வணக்க வழிபாடுகளின் மூலமாக மட்டுமே அவை இஸ்லாத்துடன் இணைவு கொண்டுள்ளன. ‘அரேபியா வசந்தம்’ ஏற்பட்டபோது துனீஸியாவின் அதிபர் பென்அலி தன்னிடமுள்ள பணத்தையெல்லாம் தூக்கிக் கொண்டுதான் ஓடினாரே தவிர, இறை நம்பிக்கை போதும் என்ற எண்ணத்தில் ஓடவில்லை.

இஸ்லாமியப் பொருளாதாரம் என்று தனியாக வரையறுக்கப்பட்ட பகுதியென ஒன்று இல்லை. குர்ஆனின் வசனங்களில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வாழ்வை விவரிக்கும் ஹதீஸ்களில் இருந்தும் பின்னர் கலீஃபாக்களின் முறைப்படி ஆளப்பட்ட அரச நடைமுறைகளில் இருந்துமே இஸ்லாமியப் பொருளாதாரக் கருத்துக்களைச் சேகரம் செய்யவேண்டும். கலீஃபாக்களின் ஆட்சி முறையைப் பரிசீல னைக்கு எடுக்கும்போதும் அதனை உமர்(ரலி) ஆட்சிக் காலத்தோடு நிறுத்திக்கொள்வதே சிறப்பு. உமர் (ரலி)க்குப் பின்வந்த உஸ்மான் (ரலி)யின் ஆட்சிக்காலம் இன்றைய ஆட்சி முறைகளின் மூலப்பதிப்பு. அவருடைய ஆட்சியை எதிர்த்து அப்போதே கிளர்ச்சிகள் தோன்றிவிட்டன. எனவே, அது இஸ்லாமிய மூலக்கூறுகளைக் கொண்டதல்ல. பொருளாதாரம் குறித்த பொது விவாதங்களில் சமூக நோக்கினை முன்னிறுத்துவதுதான் நல்லது. தங்கள் திறமையை, அறிவை வளர்த்துக்கொண்ட தனி மனிதர் களின் பங்களிப்பு ஒரு விஞ்ஞானியாக இருந்தால், ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு கலைஞராக இருந்தால் அது சமூகப் பொதுவில் தானாகவே வந்து சேர்ந்து விடுகின்றது. அது ஒரு தடையற்ற வெள்ளம் போன்றது. அது தவிர்த்த பெரும்பாலான துறைகளில் தனி நபர்களின் ஆளுமை அல்லது ஊக்கங்கள் வெறும் செல்வக் குவிப்பாகவே மாறுகின்றது. அது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

ஒரு கருத்து நம் புரிதலுக்கு வந்தபின் அதை மென்மேலும் செழுமை செய்து இன்னமும் அதிக விரிவும் வலுவும் உள்ளதாக்கிப் பேசுவதே மானுட மேன்மைக்கு உகந்ததாகும். வரலாறு பல அனுபவங்களை நமக்குத் தருகின்றது. மானுட இனம் அன்பும் கருணையும் மிக்க ஒளியுடன் இவ்வுலகை மலரச் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டுப் பழங்காலத்தில் இப்படித்தான் இருந்தது என்று குறுகிக்கொண்டு போவதில் சுயநலம்தான் இருக்கும்; அல்லது வறட்டுத்தனம் மேலோங்கும். என்னதான் வணக்க வழிபாடுகளும் வழிபாட்டு இடங்களும் மங்காமல் இருந்தாலும், மானுட நெறிகள் மாய்ந்து போய்க்கிடப்பது ஏன் என்கிற கேள்வியே இன்றையத் தேவை! ஒவ்வோர் இறை நம்பிக்கையாளரும் இந்தக் கேள்வியைத் தங்கள் மனத்தினில் எழுப்பி அதற்கான விடை என்னவென்று தேடிச் செல்லவேண்டும்.

-களந்தை பீர்முகம்மது
Thanks :  Kalachuvadu

Wednesday, October 30, 2013

வன்னியில் என்ன நடந்தது? : ஓர் அனுபவப் பதிவு



"உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும்" என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். 


வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும் உற்பத்தி செய்யப்பட்ட புனைவுகள் ஒருபுறமும், சிறிலங்கா அரசினதும் சிங்களத் தரப்பினதுமான புனைவுகள் மறுபுறமுமாகப் பெரும் புனைவுகள் நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுகளுக்கெதிரான மறுப்புக் குரல்களோ எதிர்க் குரல்களோ கலகக் குரல்களோ உரியமுறையில் வெகுசனத்திரளால் கவனத்திற்கொள்ளப் படவில்லை. எனவே இன்று வன்னி யுத்தம் பற்றியோ புலிகளின் இறுதி நாட்களைப் பற்றியோ அங்கே இருந்த மக்களின் நிலை பற்றியோ கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்தோ எதுவும் தெரியாதவாறு இந்தப் புனைவு மண்டலம் நீள்கிறது. இது மிகத் துயரமான ஒரு நிலை; அது மட்டுமல்ல ஆபத்தான நிலையும்கூட.


வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. ஐ.நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. உண்மை நிலவரத்தை அறிந்தவர்கள் வன்னி மக்கள் மட்டுமே. ஆனால் அவர்களோ இப்போது வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நலன்புரி நிலையங்கள் என்ற தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு பேசக்கூடிய நிலைமை உருவாகுமானால் எல்லாவற்றினதும் மெய்விவரங்களும் வெளித்தெரிய வரும். ஆச்சரியமளிக்கூடிய அதிர்ச்சியளிக்கூடிய உண்மைகள் அப்போது வெளியாகும்.


முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுதான் இலங்கை நிலவரம். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் உருவாக்கிய அச்சப் பிராந்தியமும் அபாய வெளிகளும் இன்னும் முற்றாக நீங்கவில்லை. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசால் தொடரப்படும் நெருக்குவாரங்களும் ஜனநாயக மறுப்பும் ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால்களும் அகலவில்லை. எனவே வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்து இடைத்தங்கல் முகாம், (நலன்புரி நிலையம்) என்ற தடுப்பு முகாம்களில் இருந்துகொண்டும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.


இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.
 
 

2




2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.


போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.


புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.


முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.


இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.


கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.



ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது. அகதிப் பெருக்கம், இடப்பெயர்வின் அவலம், சாவின் பெருக்கம் என நிலைமை மோசமான கட்டத்துள் வீழ்ந்தது. தினமும் இடப்பெயர்வு, கிராமங்கள் பறிபோதல், சிறு பட்டிணங்கள் வீழ்ச்சியடைதல் என்பதே செய்தியாயிற்று. ஆனால் புலிகளின் ஊடகங்கள் இதற்கு எதிரான செய்திகளையே சொல்லிக்கொண்டிருந்தன. ராணுவம் பொறியில் சிக்கப் போகிறது என்று அவை சொல்லிக் கொண்டிருந்தன. இடப் பெயர்வும் உயிரிழப்பும் மக்களை மிக மோசமாகத் தாக்கியது. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இந்தச் சனங்கள் இடம்பெயர்ந்தபோது மிக மோசமான அவலத்திற்குள்ளானார்கள். இடம் பெயர்ந்திருந்த இந்த மக்களிடமிருந்து புலிகள் கட்டாய ஆள் சேர்ப்புக்காகவும் போர்ப்பணி என்ற பெயரிலும் ஏராளமானவர்களைப் பிடித்துச் சென்றனர். தவிர போர் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்ததால் இவர்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டேயிருந்தனர். இவர்கள் போகும் ஒவ்வொரு ஊரைத் தேடியும் படையினர் விரட்டத் தொடங்கினர். புலிகளின் இறுதி வீழ்ச்சி நடந்த இடமான புதுமாத்தளன்-முள்ளி வாய்க்கால் பகுதிவரையில் ஏறக்குறைய 20 தடவைவரை மன்னார் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர். இறுதிக் காலத்தில் ஒரு இடத்தில் ஐந்து நாட்கள் மூன்று நாட்கள் என்ற அளவிலேயே இருக்கக்கூடிய நிலை உருவானது. அந்த அளவுக்குப் படைத்தரப்பின் தாக்குதலும் படை நகர்வும் வேகமாக இருந்தன.


படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை. இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.
இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, 'சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்', 'எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?' என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.


இக்காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவம் சனங்களின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்ததாக யாரும் சொல்ல முடியாது. ஆனால் படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு. சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.


கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.


இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.
இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.


குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. முன்னர் நடந்த படை நடவடிக்கைகளின் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மருத்துவமனைகள் வெவ்வேறு இடங்களில் மட்டுப்பட்ட அளவில் இயங்கினாலும் அவற்றால் முழு அளவிலான சேவைகளை வழங்க முடியவில்லை. ஆனால் இரவு பகல் என்றில்லாமல் அங்கிருந்த மருத்துவர்கள் - இப்போது சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் டொக்ரர் சத்தியமூர்த்தி, டொக்ரர் வரதராஜன், டொக்ரர் சண்முகராஜா உட்படப் பல மருத்துவர்கள் - பெரும் சேவையாற்றினர். மனித குலம் தன் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கான பெரும் சேவையை இவர்கள் செய்தனர். ஆனால் இவர்களுடைய அரசியல் பார்வை குறித்த விமர்சனங்கள் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மருந்துத்தடை அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் மத்தியிலும் தாக்குதல்களில் காயப்படும் மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மிகவும் உயிராபத்துகள் நிறைந்த சூழலில் இந்த மருத்துவர்களும் பணியாளர்களும் தொண்டாற்றினார்கள். அதேவேளை புலிகள் இந்த மருத்துவமனைகளைத் தமது நிழல் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். மருந்துப்பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.



உடையார்கட்டுப் பகுதியில் படைத்தரப்பு நடத்திய தாக்குதல்கள் மிகக் கொடியவை. சனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிலைகுலைய வைத்து அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. இது மிகக் கேவலமானது. மனிதாபிமானத்துக்கு முற்றிலும் எதிரான செயல் இது. எந்த வகையான நியாயப்படுத்தல்களையும் செய்ய முடியாத நடவடிக்கை இது.
மிகச் செறிவாக அடர்ந்திருந்த சனங்களை இலக்கு வைத்து ஆட்லறி மற்றும் எரிகணைத் தாக்குதல்கள் - றொக்கற் தாக்குதல்களைப் படைத்தரப்பு நடத்தியது. இதன்போது ஐ.நாவின் உலக உணவுத்திட்ட அதிகாரியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் வன்னியிலிருந்தனர். இந்தத் தாக்குதல்களை அடுத்து இவர்கள் வன்னியை விட்டு வெளியேறினர். அந்தளவுக்கு அவர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை என்றானது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.


கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.
தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.


எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். சனங்கள் தொடர்ந்து தம்மிடம் வருவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் படைத்தரப்பு மேலும் மேலும் சனங்களின் மீதே தனது இலக்கை நிர்ணயித்தது. இது மிகக் கேவலமானதும் கொடூரமானதும் மன்னிக்க முடியாததுமான நடவடிக்கை. ஆனால், இதை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாகப் படையினர் புதிய பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டதாகவும் சனங்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டதாகவும் படைத்தரப்பும் அரசும் பிரச்சாரம் செய்தன. இதில் இன்னும் கொடுமையானது பாடசாலைகளிலும் தற்காலிகமாக அவசர நிலையில் இயங்கிய மருத்துவமனைகள் மீதும் படையினர் நடத்திய தாக்குதல்கள். காயப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்களையும் காப்பாற்றுவதற்கு முடியாது என்ற நிலை பயங்கரமாகியது. புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் படுகொலைத் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள். ஆனால், இந்த நிலை குறித்து வெளியுலகத்துக்கு எந்தச் செய்தியும் வெளியே செல்ல முடியாதவாறு இரண்டு தரப்புகளும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் பார்த்துக்கொண்டன.


இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.


இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார். எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை
நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.


ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் - மக்கள் பிரதிநிதிகளைக்கூட - சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.


கிறிஸ்தவ மத குருமார் அமைப்பு இவ்வாறு எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. நலன் விரும்பிகள் எடுத்த எந்த முயற்சிகளுக்கும் அவர் செவி சாய்க்கவும் இல்லை. இதேவேளை புலிகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை- போர் முறையை மாற்றி- அமைக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வந்தனர். களத்தை மாற்றுங்கள் யுத்திகளை மாற்றுங்கள், என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதில் ஒரு சில புலம்பெயர் தமிழரும் அடங்குவர். ஆனால் இந்தப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளை விமர்சன பூர்வமாக ஆதரித்ததால் இவர்களின் கருத்தை ஏற்கப் புலிகள் தயாராக இருக்கவில்லை. இதே வேளை புலிகளின் ஊடகங்களோ மிக மூர்க்கமான விதத்தில் பொய்ப் பரப்புரைகளைச் செய்துவந்தன.
சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தையும் விமர்சனத்தையுமே அவை தீவிரப்படுத்தின. அத்துடன் மாற்றுச் சிந்தனையாளர்களைக் கடுமையாக விமர்சித்தன. எந்தவிதமான அபிப்பிராயங்களையும் புறக்கணித்து விட்டுத் தனது அதிகாரத்தின் மூலம் தான் விரும்பிய மாதிரி பிரபாகரன் நடந்துகொண்டார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே ஒரு கட்டத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்துத் திகைப்படைந்து விட்டனர். அவர்கள் அளித்துவந்த ஆதரவை வைத்துக்கொண்டு அவர்களையே சிறைபிடித்தனர் புலிகள். எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எல்லோரும் சிக்கியிருந்தோம். ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ நாவல் நினைவுக்கு வந்தால் அதையும்விடப் பலமடங்கு இறுக்கமான நிலைமையும் அதிகார வெறியும் வன்னியில் நிலவியது என்று நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர். தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.


ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.


வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் மட்டும் விடுவிக்கப்படுவார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின. புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.


ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.


முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.
புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள - அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் - ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர். வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.


இதைப் போன்றே சிறிலங்கா அரசு தரப்பிலும் இராணுவப் பேச்சாளர் சகலரும் முழுப் பொய்களையே சொல்லி வந்தனர். அதிலும் இந்தக் கொடூர யுத்தத்தை -போர் விதிமுறைகளை முற்றிலும் மீறிய கொடிய தாக்குதல்களை - இவர்கள் மனிதாபிமான நடவடிக்கை என்று அழைத்தனர். யுத்தத்தின்போது முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்த உண்மை முழுதாகவே பலியானது. இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்:

“உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”.


இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.
ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார். கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.


இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை. அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.


மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!
சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர். முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.


சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.


இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது. இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள். இவ்வாறு சுடப்படும்போது இறந்தவர்கள் போக ஏனையோர் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனார்கள். சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சிலர் செத்து மடிந்தார்கள். சிலர் காயப்பட்டு மருத்துவமனையில் கிடந்தார்கள். இவ்வாறு தம்மால் சுடப்பட்டு மருத்துவமனையில் காயமடைந்து சேர்க்கப்பட்டவர்களை மேலதிகச் சிகிச்சைக்காகக் கப்பலில் எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. காயப்பட்டவர்கள் புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.


இதுபோலப் பல நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிகழ்ந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு முழுப்பொறுப்பாக முதலில் தங்கனும் அவருடன் இணைந்து புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த வரும் பின்னர் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருமான மாதவன் மாஸ்டர், திருமலை, சூட்டி உள்ளிட்ட பலரும் இருந்தனர். சனங்கள் தமது முழுமையான எதிர்ப்பையும் இந்தச் சந்தர்ப்பங்களில் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மாத்தளன் பகுதியிலுள்ள கப்பல் துறையில் மக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்கள் முக்கியமானவை.


கட்டாய ஆட்சேர்ப்பின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு காலை மூன்று பேரைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சனங்கள் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு கப்பலுக்கு வழித்துணையாக வரும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் சென்றனர். அங்கே புலிகளின் கொடுமையை அவர்கள் அந்தப் பிரதிநிதிகளுக்கு விவரித்தனர். அப்போது கூட்டம் கூட்ட வேண்டாம் என்று சனங்களை விரட்டியடிக்க வந்த புலிகளையும் அவர்களின் காவல் துறையினரையும் மக்கள் கலைத்துக் கலைத்து அடித்தனர். அவர்களுடைய வாகனங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. எதிர்பாராத இந்த நிகழ்ச்சியால் புலிகள் ஆடிப்போனார்கள். ஆனால் மறுநாள் அந்தப் பகுதியில் 1500க்கு மேற்பட்ட புலிகளின் உறுப்பினர்களும் காவல் துறையினரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு கண்டபடி ஆண்களைப் பிடித்துத் தாக்கி எல்லோரையும் தமது வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் நாள் கலவரத்தையடுத்து மக்கள் 30 படகுகளில் அந்தப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று சேர்ந்தனர். இதுபோலப் பல சம்பவங்கள் உண்டு. வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்ச்சிகள் அவை.


ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது.
இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.


காரணம் இந்தப் போராட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும் வகையில் இவற்றைச் சுருக்கி புலிகள் தமக்கு வாய்ப்பை உருவாக்கும் முறையில் மாற்றிக்கொண்டனர். போராட்டங்களை நடத்திய முறையும் புலிகள் புலம்பெயர் தமிழர்களையும் அமைப்புகளையும் பயன்படுத்திய முறையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதாக அமையவில்லை. மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்குப் புலம்பெயர் மக்களால் முடியாமல் போனதையிட்டு இதை யாரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.


இன்னும் சற்று விளக்கமாகச் சொன்னால் புலிகளின் ஜனநாயக மறுப்பைப் பற்றிப் புலம்பெயர் தமிழர்கள் போதுமான அளவு பேசியதில்லை. புலிகளின் பகுதியில் அல்லது இலங்கைத் தீவில் புலிகளின் மீது விமர்சனங்களை யாரும் வைக்க முடியாது. அதற்கான வெளியை புலிகள் விட்டுவைக்கவில்லை. ராஜினி திரணகம செல்வி, ‘புதியதோர் உலகம்’ நாவலை எழுதிய கோவிந்தன் உட்பட ஏராளமானவர்களின் படுகொலைகள் இதற்கு உதாரணம். எனவே புலம்பெயர் மக்களால் மட்டும்தான் ஓரளவுக்குப் புலிகளின் ஜனநாயக மறுப்பையும் அரசியல் பார்வையற்ற தன்மையை யும் சர்வதேச மற்றும் போராடும் மக்களின் மனநிலை சூழ்நிலை என்பவற்றைக் கணக்கில் கொள்ளாத போர்முனைப்பையும் இன்னும் பலவாறான எதிர்மறை அம்சங்களைப் பற்றியும் பேசியிருக்க முடியும். அவர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு அதிகமுண்டு.


ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் தமது தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து தூர இடங்களில் இருக்கும்போது ஏற்படும் சொந்த நிலத்தின் மீதான தாகம். அடுத்தது தாம் பாதுகாப்பாக இருக்கும்போது தமது உறவினர்கள் போரால் வதைபடுவதும் கொல்லப்படுவதும். மூன்றாவது காரணம், சிறிலங்கா அரசு மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும். இந்தக் காரணங்கள் அவர்களை விசுவாசமாகப் போராடத் தூண்டின. ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு நண்பர் சொல்வதைப் போலப் பிரபாகரன் எல்லாவற்றையும் தியாகம் - துரோகம் என்ற பிரிகோட்டைப் போட்டுப் பிரித்து வைத்திருந்தார். புலிகளின் சிந்தனை முறைக்கு எதிராகச் சிந்திப்பவர்களும் செயல்படுபவர்களும் துரோகிகளாகவும் எதிர்நிலை யாளர்களாகவும் பார்க்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் இலகுவில் பதிந்துவிடக்கூடிய இன உணர்வு, மொழி உணர்வு போன்றவற்றை ஆதாரமாகக்கொண்டு பிரபாகரன் இதை வெற்றிகரமாகச் செய்துகொண்டார்.
எனவே ஜனநாயக உள்ளடக்கமற்ற புலிகளின் போராட்டத்தை - இந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் தங்களின் கைகளில் பிரபாகரனின் படத்தையும் தமிழ் ஈழப் படத்தையும் வைத்திருந்ததை நினைவில் கொள்க -மேற்குலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும், மக்களைக் காப்பாற்ற வேண்டும், ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை கொண்டுவரத் தாம் பாடுபட வேண்டும் என்று இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் விசுவாசமாகவே முயன்றனர். அதற்காக அவர்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராடினர்.
புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.
பிரபாகரன் எத்தகைய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பார் என்று தெரியாத ஒரு அச்சம் நிறைந்த புதிர் சிறிலங்கா அரசுக்கும், படைத் தரப்புக்கும் இருந்தது உண்மை. அதனால் அவர்கள் தமது நடவடிக்கையை முதலில் மந்தகதியிலேயே நடத்தினர். ஆனால் புலிகளின் பலவீனமான அம்சங்களை அடையாளம் கண்ட பின்னர் படை நகர்வின் வேகம் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் தமது இறுதிக் கணம் வரையிலும் புலிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தபோதும் பிரபாகரன் தன்னுடைய போரின் மூலம்-யுத்தத்தின் மூலம்-இனிமேல் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மையை வந்தடைந்தார். பிரபாகரனைப் போலவே ஏனைய புலிகளின் உறுப்பினர்களும் இந்த உண்மைக்கு வந்து சேர்ந்திருந்தனர். குறிப்பாக மேற்குலகம் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசுக்கு ஏதாவது அழுத்தங்களைக் கொடுக்கும்; யுத்த நிறுத்தமோ நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைச் சூழலோ உருவாக்கப்படலாம் என்று அவர்கள் நம்பினர்.


இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜீவின் படுகொலையைப் புலிகள் சாதாரணமாகக் கருதினார்கள். இந்தியா அப்படி அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய யதார்த்தத்தின்படி இந்தியாவால் அந்தக் கொலையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் பிரபாகரனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவ்வாறு அவர் நம்ப விரும்பினார். தமிழக எழுச்சி நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பிரபாகரனுக்கு நம்பிக்கையூட்டினார். இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது. நீண்டகால ஈழப்போராட்ட ஆதரவாளர்களாக இருக்கும் நெடுமாறன் போன்றோர், மக்கள் திரட்சியை ஓரளவுக்குக் கொண்ட ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்குகளுக்கும் ஒரு எல்லையுண்டு. அதிகாரத்திலிருக்கும் தரப்பைத் தவிர பிற சக்திகளின் ஆதரவுகளுக்கு ஒரு வரையறை உண்டு என்ற விசயங்களையெல்லாம் பிரபாகரன் பிந்தியே புரிந்துகொண்டார். இதேவேளை மாற்று நடவடிக்கைக்கான அவகாசமே இல்லாமல் மகிந்த அரசு அரசியல் நடவடிக்கைகளையும் இராணுவத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியது.
சர்வதேசத் தரப்பை ஒரே முகப்படுத்திய சிங்கள இராசதந்திரம் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா எனச் சகல நாடுகளில் இருந்தும் ஆயுத உதவிகளையும் போர்த்தொழில் நுட்பத்தையும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொண்டது. மகிந்த ராஜபக்சே எந்த விளைவுகளுக்கும் முகம் கொடுக்கத் தயார் என்ற நிலையில் தீர்மானங்களை எடுத்தார். ஏற்கனவே பெற்றிருந்த வெற்றிகள் சிங்களத் தரப்புகள் அத்தனையையும் போருக்கு ஆதரவாகத் திரட்டின. பிரபாகரன் எல்லோருடைய வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளானவர் என்ற அடிப்படையில் தமக்குள் முரண்கொண்ட சக்திகளும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டன. தமிழர்களோ - புலிகளோ நெருக்கடியில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள எந்த நண்பர்களும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.


இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. என்றபோதும் அவர்களின் உற்பத்திகள் நடந்துகொண்டேயிருந்தன. ஆனால் வரையறுக்கப்பட்ட அளவில் இறுதிவரை தாக்குதலை நடத்தும் திறனை இதன் மூலம் பிரபாகரன் தக்கவைத்திருந்தார்.
புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்பு-இராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.
இப்பகுதிகளில் இருந்து சனங்கள் புலிகளின் தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்றனர். கடலில் பயணம் செய்தோரை நோக்கிக் கடற்புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், தாக்குதல்களுக்கு இலக்கான படகுகளைத் தவிர ஏனையவை தப்பிச் சென்றுவிட்டன. இரவிரவாகப் படகுகள் புல்மோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்றன.


மாத்தளன் பிரதேசம் படைக்கட்டுப்பாட்டுக்கு வந்தபோது அங்கே இயங்கிவந்த கப்பல்துறையை வன்னியில் இருந்த ஒரே அரசாங்க அதிகாரியான பார்த்தீபன் முள்ளிவாய்க்காலுக்கு மாற்றும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். புலிகளும் அதை விரும்பினர்.
புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது.


இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. எனவே புலம்பெயர் தமிழர்களை அவர் முழு நம்பிக்கையோடு நம்பியிருந்தார். அவர்களின் அந்தப் போராட்ட இயந்திரத்தை அவர் முழு வேகத்தோடு இயக்கினார். இதற்கு நல்ல ஆதாரம் புலிகளின் புலம்பெயர் ஊடகங்கள். வன்னியிலிருந்து லண்டனில் இருந்து இயங்கும் மிஙிசி வானொலிக்குத் தகவல்களைத் தொலைபேசி மூலமாக வழங்கிய புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் (இவர் தமிழ்ச் செல்வனின் மனைவியினுடைய உடன் பிறந்த சகோதரர்) விடுத்த கோரிக்கையும் தெரிவித்த கருத்துகளும் இதற்கு ஆதாரம். இவரே வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை இணைந்து நடத்தினார்.


இந்தச் சந்தர்ப்பங்களில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரும் சிறிலங்காவுக்கு அவசரப் பயணத்தை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். வவுனியா அகதி முகாம்களுக்கும் சென்றிருந்தனர். ஐ.நாவிலும் இலங்கை விவகாரம் உரத்த தொனியில் பேசப்படுவதான ஒரு தோற்றம் உருவாகியது. ஐ.நா செயலரின் சிறப்புத் தூதுவராக விஜய் நம்பியார் கொழும்புக்கு விரைந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது. இதற்கு அந்த நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டங்களும் அழுத்தத்தை ஏற்படுத்தின. ஒபாமா நிர்வாகமும் இலங்கை நிலவரம் குறித்துக் கவனத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதற்கு அல்லது புலிகளின் தலைமையை ஏதோவொரு வகையில் காப்பாற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கை புலிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் மக்களின் ஒரு சிறுபகுதியினருக்கும் இருந்தது. ஆனால், நிலைமைகளைச் சரியாக அவதானிப் போருக்கும் அரசியல் ஞானமுடை யோருக்கும் இவற்றில் சிறு நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏனெனில் யுத்தத்தை நடத்திய தரப்புகளே இவைதானே. சர்வதேச அரசியல் பகைப்புலத்தில் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்திய இந்த நாடுகள் தமது நாடுகளில் தடைசெய்த புலிகளின் அழிவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தன என்ற யதார்த்தம் அரங்கேறியது.
பிரபாகரனுக்கு இராணுவரீதியிலும் மாற்று வழிகள் இல்லை என்றாகிவிட்டது. அரசியலிலும் வேறு தெரிவுகள் இல்லை. சர்வதேசப் பரபரப்பு இருந்ததே தவிர நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சிறிலங்கா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்கு இன்னும் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதிக்கு உணவு, மருந்துடன் கப்பலை அனுப்பிக் கொண்டு, அதே சமயத்தில் பீரங்கிக் குண்டுகளையும் அங்கே ஏவியது.


மிஞ்சிய புலிகளின் கதையும் கதியும் இங்கே தான் வரலாற்றில் தீவிரக் கவனத்தைப் பெறும்வகையில் அமைந்திருந்தது. பிரபாகரன், அவருடைய குடும்பம், பொட்டம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை, கேனல் பானு, கேனல் ஜெயம், கேனல் ரமேஷ், பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் இங்கேதான் இருந்தனர். இப்போது பிரபாகரன் தான் அதிகம் நம்பிய துப்பாக்கியால் எதையும் செய்ய முடியாது என்பதை முழுதாக உணர்ந்திருந்தார். ஆனால் எதற்கு மாற்றீடாக எதையும் செய்ய முடியாது என்றும் அவருக்குத் தெரிந்தது. எல்லாவற்றுக்கும் காலம் கடந்த நிலை என்ற யதார்த்தம் முன்னின்றது.


இறுதி மூச்சை எப்படித் தக்கவைத்துக் கொள்வது என்று பிரபாகரனும் அந்த மூச்சை எப்படிப் பறிப்பது என்று அரசாங்கமும் இறுதிநிலையில் இருந்தன. மெல்ல மெல்லப் படைத்தரப்பு முன்னேறியது. மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாத அரசாங்கம் போரை ஈவிரக்கமில்லாமல் நடத்தியது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள், கண்டனங்களையெல்லாம் சிறிலங்கா அரசாங்கம் தூக்கித்தூர வீசிவிட்டது. ஏற்கனவே நவநீதம் பிள்ளையின் அறிக்கைகளும் இவ்வாறு தூக்கியெறியப்பட்டிருந்தன. வெற்றியை முழுதாகப் பறிக்கும் வெறியில் சரத்பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சேவும் இருந்தனர்.


அரசாங்கத்தின் திட்டப்படி மே 20ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்தது.


பெரும் புகழோடும் தீராத கண்டனங்களோடும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த வினோதமான கலவையாகவும் இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிறிலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்புவதா விடுவதா என்ற தடுமாற்றத்தில் பல தரப்பினரும் இருந்தனர். அதற்கான காரணங்களும் உண்டு. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று முன்னரும் இந்திய அரசும், சிறிலங்கா அரசும் பல தடவைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்தச் செய்திகளுக்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடனேயிருந்தார். அடுத்துப் பிரபாகரனோ அவருடைய குடும்பமோ என்றைக்கும் மக்களுடன் வாழ்ந்ததும் இல்லை, வெளியரங்கில் நடமாடியதும் இல்லை. அவருடைய நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்துப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள், தளபதிகளுக்கே எதுவும் தெரியாது. எனவே அவருடைய பாதுகாப்பு அணியினரையும் பொட்டம்மான், சூசை ஆகியோரையும் தவிர வேறு எவருக்கும் எதுவும் தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. பிரபாகரனின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்தவர் இரட்ணம் மாஸ்டர் எனப்படுபவர். இவரும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு தெரிவித்திருந்தது.


மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு - சவக்களை என்று சொல்வார்களே - இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.


இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.


மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர்.


பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.

Thanks : Kalachchuvadu